Published:Updated:

கதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்

கதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
கதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்

ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

கதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்

ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

Published:Updated:
கதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
கதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்
கதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்

‘போக்கிரித்தனம் பண்ணாதே’ என்று சிறுவயதில் பெற்றோரிடம் திட்டு வாங்காமல் வளர்ந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? சரி, நாம்தான் நமது குழந்தைகளை, `போக்கிரிப் பயலோட சேராதே’ என்று எச்சரிக்காமல் வளர்க்கிறோமா? `உங்க பையன் போக்கிரிகளோடயும் காலிப்பசங்களோடயும் சேர்ந்து சுத்துறான் சார், கண்டிச்சு வளருங்க!’ என்று பக்கத்து வீட்டுக்காரருக்கு இலவச ஆலோசனை கூறுவதைத் தவிர்த்திருக்கிறோமா? காதலி காதருகே வந்து, `போடா போக்கிரிப் பயலே’ எனச் செல்லமாகத் திட்டிப்போனதைச் சொல்லிப் பெருமைப்படும் நண்பனைக் கண்டு பொறாமைகொள்ளாமல் இருந்திருக்கிறோமா?... இப்படி வரிசையாகக் கேள்விகள் எழுப்பினால் வருகின்ற பதில், `இல்லை’ என்பது மட்டும்தான்.

`திருவிழாவில் போக்கிரித்தனம் செய்தவர்களைக் காவல்துறை விரட்டிப் பிடித்தது’ என்பது நாம் அதிகமுறை செய்தித்தாளில் பார்க்கும் தலைப்புகளில் ஒன்று. ரஜினியின் `போக்கிரி ராஜா’-வில் தொடங்கி விஜயின் `போக்கிரி’ வரை சினிமாப் படங்களின் பெயர்களில் நிலைகொண்டுள்ளனர் போக்கிரிகள்.

`போக்கிரி’ என்ற சொல் நமது வாழ்க்கை முழுவதும் பரவிக்கிடக்கிறது. இந்தச் சொல்லை ஒருமுறைகூட உச்சரிக்காத நபர்கள் அநேகமாக யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோரும், தலைமுறை தலைமுறையாகச் சொல்லிப் பழக்கப்பட்ட இந்தச் சொல்லுக்கு என்ன அர்த்தம்... யார் இந்தப் போக்கிரி... போக்கிரித்தனம் என்றால் என்ன... எனக் கேள்விகள் எழுப்பினால் கிடைக்கிற பதிலைத் தாங்கிக்கொள்ள மனவலிமை வேண்டும்.

`போக்கிரி’ என்பது, குறிப்பிட்ட ஒரு தொழிலைச்செய்த மக்கள் கூட்டத்தின் பெயர். அவர்கள் எண்ணிக்கையில் எவ்வளவு  இருந்தனர் என்பது தெரியவில்லை. ஆனால், எண்ணற்றோர் இருந்தனர். 19-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக அழிக்க முடிவெடுத்தது கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவம்.

கண்ணில்படுகிற போக்கிரிகள் எல்லோரையும் எந்த நேரத்திலும், சுட்டுக் கொல்லும் அனுமதியைத் தனது ராணுவ வீரர்களுக்கு வழங்கியது அன்றைய கும்பெனி ராணுவம். ராணுவத்தினரின் துப்பாக்கிகள், போக்கிரிகளை நோக்கிச் சுடத் தொடங்கின. அடர்ந்த காட்டுப் பகுதியின் தனித்த சாலைகளில் போக்கிரிகளின் கடைசி காலடி மிஞ்சி இருக்கும் வரை தோட்டாக்கள் சீறிப் பாய்ந்துகொண்டே இருந்தன. சரிந்து விழும் போக்கிரியின் அலறல், இந்திய நிலப்பரப்பெங்கும் கவனிப்பாரற்று காற்றில் கரைந்தது.

இவ்வளவு பெரிய அழித்தொழிப்பை அவர்களின் மீது நிகழ்த்தக் காரணம் என்ன... அப்படி அவர்கள் என்னதான் தவறு செய்தார்கள்? இந்தக் கேள்விக்கு பிரிட்டிஷார் சொன்ன பதிலை முதலில் தெரிந்துகொள்வோம்.

போக்கிரிகள், நாடோடிகளாகத் திரிந்த கொலைகாரக் கூட்டம். மிக ரகசியமாக தங்களின் வாழ்வை அமைத்துக்கொண்டவர்கள். சாலைகளில் போகும் பயணிகளைக் கொல்வதை மட்டுமே தொழிலாகக் கொண்டவர்கள். சாதாரண கைக்குட்டையைவைத்தே மரணத்தொழிலைச் செய்பவர்கள்.
கைக்குட்டை, அல்லது கைத்துணிதான் இவர்களது கொலைக்கருவி. துணியின் ஒரு முனையில் ஈயக்குண்டு வைக்கப்பட்டு முடிச்சிடப்பட்டிருக்கும். மற்றொரு முனையை விரல் இடுக்கில் பிடித்தபடி மொத்தத் துணியும் உள்ளங்கைக்குள் மறைந்திருக்கும். ஒருவனைக் கொலைசெய்யத் தீர்மானித்து விட்டால்,   கண்ணிமைக்கும் நேரத்தில் கைத்துணியை அவர்களின் கழுத்துக்கு வீசுவார்கள். அது ஒரு சுற்று சுற்றி, ஈயக்குண்டிருக்கும் பகுதி இவர்களின் இன்னொரு கைக்கு வரும். ஒரு இழுவையில் பின்புற மூளைக்குச் செல்லும் கழுத்து நரம்பும், முன்புற தொண்டைக்குழியும் நெறிபட்டு, தாக்குதலுக்கு உள்ளானவன் கணப்பொழுதில் சரிந்து விழுவான்.

வெட்டரிவாள், கத்தி, ஈட்டி போன்ற ஆயுதங்களோடும், கொலைக்கருவிகளோடும் ஒருவன் உலவினால், மற்றவர்கள் எளிதில் அவனைக் கண்டறியலாம். ஆனால், சின்னஞ்சிறு கைத்துணியை உள்ளங்கையில் சுருட்டி வைத்திருக்கும் ஒருவனை அடையாளம் காண்பது எளிதல்ல. எனவே, சாலையில் செல்லும் பயணி யார்... போக்கிரி யார் என்ற வேறுபாட்டையே அறிய முடியவில்லை. எனவே, போக்கிரி எனச் சந்தேகப்படுகிற எல்லோரையும் அழிப்பதுதான் ஒரே வழி. போக்கிரிகள் பிறவிக் குற்றவாளிகள். குற்றம் அவர்களது ரத்தத்தில் கலந்துள்ளது. அது பரம்பரை பரம்பரையாக வருவது. அவர்களைத் திருத்த முடியாது; அழிப்பது ஒன்றுதான் தீர்வு என முடிவெடுத்த பிரிட்டிஷார் 1830-ம் ஆண்டு `போக்கிரி ஒழிப்பு சட்டத்தை’ கொண்டுவந்தார்கள். இந்தச் சட்டம், போக்கிரி எனச் சந்தேகப்படும் யாரையும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் சுட்டுக் கொல்லும் அதிகாரத்தை கும்பெனி ராணுவத்துக்கு வழங்கியது.

கதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய நிலப்பரப்பெங்கும் வெறிபிடித்த வேட்டைநாயென கடித்துக்குதறிக் கொண்டிருந்த காலனிய ராணுவத்துக்கு இந்தச் சட்டம் பெரும் வாய்ப்பை வழங்கியது. போர்க்களமற்ற சமவெளிப் பகுதியில்கூட மனிதர்களை கண்மூடித்தனமாக சுட்டுப் பொசுக்கும் உரிமையை அவர்கள் பெற்றனர். போக்கிரி ஒழிப்பில் புகழ் பெற்ற கும்பெனி அதிகாரி வில்லியம் ஸ்லீமேன், ஆறு ஆண்டுகளில் 3,266 போக்கிரிகள் கொல்லப்பட்டதைப் பற்றி பெருமையோடு பதிவுசெய்துள்ளான்.

ஒரு நிமிடம் இந்த எண்ணிக்கையை மீண்டும் நினைத்துப் பாருங்கள். ஒரே ஓர் அதிகாரி கொடுத்துள்ள விவரம் இது. இது போன்று எத்தனை அதிகாரிகள்... எத்தனை ஆண்டுகள்... எத்தனைஆயிரம் துப்பாக்கிகள் தோட்டாக்களைக் கக்கின? எத்தனை போக்கிரிகள் இந்த நிலமெங்கும் சுட்டுத்தள்ளப்பட்டு மண்ணில் சாய்ந்தனர்?

எண்ணி கணக்கு வைத்துக்கொள்ளவேண்டிய தேவை எவனுக்கும் இல்லை. இந்தியாவில் இருந்து பணி முடிந்து இங்கிலாந்துக்கு திரும்பியவர்கள், `நான் இந்தியாவில் இத்தனைப் புலிகளை வேட்டையாடினேன். இத்தனை யானைகளை வேட்டையாடினேன்’ என்று பெருமை கொள்ளும் பட்டியலில் போக்கிரிகளையும் சேர்த்துக்கொண்டார்கள். மனித வேட்டைக்கான லாபத்தை சட்டப்படி பெற்ற அவர்கள் எத்தனையோ குலங்களை, பழங்குடி மக்கள் கூட்டத்தை, நாடோடி இனங்களை வரைமுறையின்றி வேட்டையாடி அழித்தனர்.

கிழக்கிந்திய கும்பெனியின் தொடக்க காலத்தில் அவர்களின் கணக்கெடுப்புக்கும், வரிவிதிப்புக்கும், சட்ட ஒழுங்குக்கும் உட்படாதவர்களாக நாடோடி மக்கள் இருந்தனர். ஓரிடத்தில் தங்கி நிலையாக வாழ்பவர்களைத் தங்களது கட்டுக்குள் கொண்டுவருவதும், தங்களது ஆளுகையை ஏற்கச்செய்வதும், அவர்களிடம் அதிகாரத்தைப் பேணுவதும் காலனியவாதிகளுக்கு எளிதான நடவடிக்கை. ஆனால், நிலைகொண்ட சமூகமாக அல்லாத நாடோடிச் சமூகங்களை அவ்வளவு எளிதாக இவ்வரையறைக்குள் கொண்டுவர முடியாது, எனவே, தங்களின் நிர்வாக வரைபடத்துக்குள் எளிதில் கொண்டுவர முடியாத மக்கள் கூட்டத்தை அப்புறப்படுத்துவதைத்தான் நிரந்தரத் தீர்வாக அவர்கள் கருதினர்.

நகர்ந்துகொண்டே இருக்கும் தங்களின் ராணுவத்துக்கு இடையூறாக இருப்பவர்களை அழித்தொழிப்பதும், பரந்த சமவெளிப் பகுதியில் தங்களின் அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதும் பிரிட்டிஷாரின் முக்கியத் தேவைகளாக இருந்தன. இந்த அதிகாரத் தேவைக்காகத்தான் போக்கிரிகளை `பிறவிக் கொலைகாரர்கள்’ என முத்திரை குத்தினர், `கொலையை பரம்பரைத்தொழிலாகச் செய்யும் ரகசிய சமூகம்’ என அடையாளப்படுத்தினர். தனிப்பட்ட மனிதன் செய்யும் குற்றத்தை முன்வைத்து அவனது ஒட்டுமொத்த சமூகத்தையும் இனத்தையும் கூட்டத்தையும் ஒழித்துக் கட்ட, பல்வேறு வடிவங்களில் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டனர்.

கற்பிதம் செய்யப்பட்ட கதைகள், அதன் அடிப்படையில் உருவாக்கப்படும் ஈவிரக்கமற்ற சட்டங்கள், அது வழங்கும் எல்லையில்லா அதிகாரத்தால் ஆண்டுக்கணக்கில் தோட்டாக்களைக் கக்கிக்கொண்டே இருந்த துப்பாக்கிகள்... என தொடர் நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டனர்.

எண்ணற்ற ஆண்டுகள் ஒரு சிறு கைத்துணிக்கு எதிராக பிரிட்டிஷாரின் துப்பாக்கிகள் சுடுவதை நிறுத்தவே இல்லை.

யாரெல்லாம் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகத் தங்களது மண்ணை, மக்களை, பண்பாட்டை, நீர்வளத்தை, கானகத்தை காத்துக்கொள்ள போரிட்டார்களோ, அவர் களெல்லாம் கொடூரமானவர்கள், கொலைகாரர்கள், பேராசை பிடித்தவர்கள், காட்டுமிராண்டிகள், நாகரிகமற்றவர்கள், அபாயகரமான வகுப்பினர் என்றுதான் ஆக்கிரமிப்பாளர்களால் வர்ணிக்கப்பட்டார்கள். இந்த அர்த்தத்தைத் தாங்கிய எண்ணற்ற சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி சமூகத்தின் ஆழ்மனதில் பதியவைத்தார்கள். அச்சொற்களுக்குப் பின்னால் பயங்கரமான சமூகச் சித்திரங்களைத் தொடர்ந்து உருவாக்கினார்கள். இந்த மதிப்பீடுகளை இந்திய செல்வந்தர்களும், புதிய பணக்காரர்களும், பிரிட்டிஷ் நிர்வாகத்துக்கு ஆதரவாக மாறிக்கொண்டிருந்த சமூகப் பிரிவினரும் இறுகப் பற்றிக்கொண்டனர். அப்படித்தான் அது இந்திய சமூகத்தின் பொதுப்புத்தியில் நிலைகொண்டது.

`போக்கிரி’, `பொறுக்கி’, `கேப்மாரி’, `மொள்ளமாரி’... என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் வசைச் சொற்களுக்குப் பின்னால் நூற்றாண்டுகளாக மனித ரத்தம் உறைந்துகிடக்கிறது.

நல்ல சொல் என்று சொற்களை வகைப்படுத்தும்போதே, கெட்ட சொல்லையும் நாம் பட்டியலிட்டுக் கொள்கிறோம். அந்தச் சொல் யாரால், எதற்காக கெட்ட சொல்லாக்கப்பட்டது? இந்திய மண்ணில் புரையோடிக்கிடக்கும் சாதியம், பெரும் மக்கள் கூட்டத்தின் அனைத்து அடையாளங்களையும் இழிவானதாக வகைப்படுத்தியது. காலனியம் தனது அதிகார நிலைநிறுத்தலின் பகுதியாக புதிய வசைச் சொற்களை உருவாக்கியது. நவீன இந்தியா இரண்டையும் ஒரு சேர சுமந்துகொண்டிருக்கிறது.

கதைகளின் கதை - போக்கிரி - சு.வெங்கடேசன்

ஒரு சொல், நல்ல சொல்லாக அடையாளப்பட எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு வசைச் சொல் உருவாக ஒரே ஒரு காரணம்தான் இருக்கமுடியும். அது, சக மனிதனை கீழ்மைப்படுத்தி அவனது சுயமரியாதையைப் பொதுவெளியில் சுவைத்துப்பார்க்கும் அதிகார
வெறி மட்டுமே. மொழியால் வடிவமைக்கப்பட்ட விஷக்கொடுக்குதான் வசைச் சொல்லாக வடிவம்கொள்கிறது.

நல்ல சொல்லைப் பயன்படுத்த ஒருமுறை கூட யோசிக்கத் தேவை இல்லை. ஆனால், ஒரு வசைச் சொல்லைப் பயன்படுத்தும் முன்னர் பலமுறை யோசியுங்கள். அது  தனிநபரையும், குழுக்களையும், மொத்த சமூகத்தையும் கேவலப்படுத்த உருவாக்கப்பட்ட சொல் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அடிமைத்தனத்தின் மிக மோசமான விளைவு, அடிமைப்படுத்தியவன் போன பிறகும் அவன் விட்டுச்சென்ற மிச்சத்தை நமது மூளையில் சுமந்து திரிவதுதான்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்த மண்ணில் இருந்து கொண்டுபோகப்பட்ட வைரக்கற்கள் எத்தனை.... சிம்மாசனங்கள் எத்தனை? கணக்குப் போட்டு, தொடர்ந்து உரிமைகோருபவர்கள் அழிக்கப்பட்ட மனிதக் கூட்டங்கள் பற்றிப் பேசுவதே இல்லை. கோகினூர் வைரமும், மகாராஜாக்களின் உறைவாளும்தான் நமது பெருமையா? சொரணையற்ற மனிதக் கூட்டத்தை உருவாக்குவதில் ஆக்கிரமிப்பாளர்கள் அடைந்த வெற்றி, நமது மெளனத்தாலும் கோரிக்கையாலும் பிரகாசித்துக்கொண்டிருக்கிறது.

இப்பொழுது, `போக்கிரி’ என்ற சொல் ஒரு மீள் நினைவு. அழிக்கப்பட்ட சகோதரனைப் பற்றி ரத்தத்துக்குள் இருந்து கொப்பளித்து மேலெழும் ஆதி நினைவு. இப்படி நாம் எல்லோரும் சேர்ந்து மீட்டெடுக்கவேண்டிய எத்தனையோ சொற்கள் இருக்கின்றன. அவை வேறெங்கும் இல்லை; நம் கையருகேதான் இருக்கின்றன.

நண்பர்களே, நீங்கள் நடந்து போகும் சாலையில் யாராவது, யாரையாவது பார்த்து `போக்கிரி’ என்று திட்டிக்கொண்டிருப்பதை காதில் கேட்டால், ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பாருங்கள். அந்த நபரையோ, அந்த தெருவையோ அல்ல; அந்தச் சொல்லுக்குப் பின்னால் இருக்கும் வரலாற்றை. அதில் இருக்கும் மயிர்கூச்செரியும் உண்மை, உங்களை கைகூப்பி வணங்கச் சொல்லும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism