
இறந்துபோவதைப் பற்றி
யோசிக்காத ஒருவரேனும் இருந்தால்
உயிர்வாழ்வதைப் பற்றிப் பேசலாம்.
அவ்வளவு துயரம் உயிரோடிருப்பது
என்பதைச் சொல்ல ஆசைப்படும் எவனும்
இறக்கும் வரை அதை மூச்சுவிடுவதில்லை.
இறந்துபோவதன் உச்சநிலையை
சொல்வதற்கு இறந்துபோனவனே
தேவைப்படுகிறான்
இறந்துபோனவனைப் புகழ்வதில்
இறந்துபோன இதிகாசத்தை உயிர்ப்பிப்பதில்
இறந்துபோன தத்துவங்களை கொடியேற்றுவதில்
இறந்துபோன பழக்கவழக்கங்களைப் பேணுவதில்
இறந்த மூங்கில் துளைகள் இசைக்கும் காற்றென
இறப்பை ஞாபகப்படுத்திக்கொள்கிறார்கள் யாரும்.
உயிரோடிருப்பதற்கான ஆகமங்கள்
எவரிடமும் இல்லை.
தவிர,
உண்மையிலேயே
யாரும் உயிரோடு இல்லை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குமரகுருபரன் (1974-2016). ‘இன்னொருவனின் கனவு’ என்ற கட்டுரைத் தொகுப்பும், ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’, ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முதல் கவிதைத் தொகுதிக்கு ராஜமார்த்தாண்டன் விருது கிடைத்தது. அதை அவர் மறுத்துவிட்டார். இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு கனடா ‘இயல்’ விருது வழங்கப்பட்டது. விருது அறிவிக்கப்பட்ட மூன்றாம் நாளில் (19.06.2016) தனது 42-வது வயதில் கவிஞர் குமரகுருபரன் மரணமடைந்தார்.