மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்துக்கு அப்பால்... - தொகுப்பு : கா.பாலமுருகன்

எழுத்துக்கு அப்பால்... - தொகுப்பு : கா.பாலமுருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துக்கு அப்பால்... - தொகுப்பு : கா.பாலமுருகன்

இங்கேயும்... இப்போதும்...

எழுத்துக்கு அப்பால்... - தொகுப்பு : கா.பாலமுருகன்

அ.வெண்ணிலா

‘`கற்பிப்பவரும் கற்றுக்கொள்பவரும் ஒரே நேரத்தில் பயனடையும் இடம் பள்ளி. மாணவர்கள் தங்களின் கற்றலை மேம்படுத்திக்கொள்ளும் அதே நேரத்தில், அங்கு ஆசிரியரும் புதிய பார்வைகளைப் பெற முடியும். இந்த சுவாரஸ்யமே இன்னும் என்னை ஆசிரியப் பணியில் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. எழுதுவதும் கற்பிப்பதும் படைப்பின் இரு பக்கங்களாக எனக்குள் மிளிர்கின்றன.’’

வந்தவாசியில் வசிக்கும் அ.வெண்ணிலா, அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர். ஆறு கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள், ஏழு தொகுப்பு நூல்கள் என்று தீவிரமாக இலக்கியப் பணியையும் செய்பவர். எழுத்துலகின் 54 முன்னோடிப் பெண் எழுத்தாளர்களின் வரலாற்றைத் தொகுத்துள்ளார்.

எழுத்துக்கு அப்பால்... - தொகுப்பு : கா.பாலமுருகன்

பெரு.முருகன்

“காதல் திருமணம் செய்தபோது கைவசம் என்னிடம் தொழில் எதுவும் இல்லை. அதனால், குடும்பத் தொழிலையே கையில் எடுத்தேன். ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீவிர ஆர்வம் இருந்தது. பயிற்சிக்காக சிறிய குறிப்பு நூல்களை மொழிபெயர்த்த அனுபவம், நூல் மொழிபெயர்ப்பில் கொண்டுசேர்த்தது; சிறுகதை எழுதவும் தூண்டியது. தொழில், எழுத்து இரண்டையுமே நிர்பந்தம் காரணமாகவே தேர்வுசெய்தேன். அந்த நிர்பந்தமே, இப்போது வாழ்க்கையைப் பார்த்து பயமற்று இருக்க உதவுகிறது.’’

சென்னை, திருவல்லிக்கேணி ஜாம்பஜார் மார்க்கெட்டில் மீன் கடை வைத்திருக்கும் பெரு.முருகன், முதுகலைப் பட்டதாரி, சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழில் குறிப்பிடத்தக்க ஆறு நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

எழுத்துக்கு அப்பால்... - தொகுப்பு : கா.பாலமுருகன்

கண்மணி குணசேகரன்

``போக்குவரத்துக் கழகப் பேருந்து மெக்கானிக்காக வேலை  செய்துகொண்டிருக்கிறேன். எனது படைப்புக்கான புது உத்திகளைத் தேர்வுசெய்வதுபோல், எனது பணிமனைப் பணியிலும் புதிதுபுதிதான முயற்சிகளில், பேருந்தின் குறைகளைக் கண்டறிந்து பழுதுநீக்கும் வேலையைச் செய்துகொண்டே இருக்கிறேன்.’’

விருத்தாச்சலம் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் கண்மணி குணசேகரன், கவிதை, சிறுகதை, நாவல் எனத் தீவிரமாக இயங்கும் காத்திரமான படைப்பாளி. இவர் தொகுத்த ‘நடுநாட்டுச் சொல்லகராதி’ எனும் நூல், தமிழ் வளர்ச்சித் துறையின் விருது பெற்றது (2007).

‘அஞ்சலை’ நாவல், கேரள மாநிலம் கள்ளிகோட்டை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.

எழுத்துக்கு அப்பால்... - தொகுப்பு : கா.பாலமுருகன்

தேனி சீருடையான்

“ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தேன். மேற்கொண்டு படிக்க வசதி இல்லாமல், சுயதொழில் செய்வது என முடிவெடுத்தேன். ஆரம்பத்தில் கோணியை விரித்து, அதில் மாம்பழங்களைக் குவித்துவைத்து வியாபாரம் செய்தேன். உழைப்பினாலும் நேர்மையினாலும் இன்று பெரிய பழக்கடை வைத்து, மூன்று பேருக்கு வேலை தந்துள்ளேன். இந்தச் சூழலில்தான் எழுதிக்கொன்டிருக்கிறேன்.’’

மூன்று நாவல்களும் ஐந்து சிறுகதைத் தொகுப்புகளும் ஒரு கட்டுரைத் தொகுப்பும் எழுதியுள்ளார். இளம் வயதில் பார்வைக்குறைபாடு நோய்க்கு ஆளாகி, கண் பார்வையை இழந்தார். பார்வையற்றோர் பள்ளியில் படித்தார். ஓர் அறுவைசிகிச்சையின் மூலம் மீண்டும் பார்வை பெற்றார். இந்தக் காலகட்டத்தின் மனவோட்டங்களைச் சித்தரிக்கும் இவரது ‘நிறங்களின் உலகம்’ நாவல் மிக முக்கியமானது.