Published:Updated:

தமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை

தமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை

படம் : நோயல் கார்க்கி

தமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை

படம் : நோயல் கார்க்கி

Published:Updated:
தமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை
தமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை

ட்டக்களத்தை விட்டகன்று, வெகுதூரம் விலகிவந்து, வெற்று மைதானத்தை வெறித்துப் பார்க்கும் ஆட்டக்காரனுக்கு மட்டுமே பழைய நினைவுகள் அலை மாதிரி மேலெழுந்து வந்து அவனை அலைக்கழிக்கும்.

நான் என் காலடியில் ஸ்பரிசத்திலிருக்கும் பந்தோடேயே, என் மைதானம் புதைத்து வைத்துள்ள நினைவுகளை மீட்டெடுக்கிறேன். காலமோ, வருடமோ, தேதியோ ஒருபோதும் ஒரு கலைஞனின் நினைவுகளில் தங்குவது இல்லை. எம்.டி.வாசுதேவன் நாயர் தன் ‘இறுதி யாத்திரை’ நாவலில்  “வியாபாரிக்கு வெறும் எண்கள் போதும், எழுத்து எதற்கு?” எனக் கேட்டு, என்னைப் புரட்டிப்போட்டிருக்கிறார்.

80-களின் பிற்பகுதிகள்தான்  தமிழ் இலக்கியம் உச்சத்துக்குச் சென்ற காலம் என்பது என் கணிப்பு. தமிழகத்தின் சகல திசைகளிலிருந்தும் எழுத்தாளர்களும், கவிஞர்களும், கலைஞர்களும் பெரும் உக்கிரத்தோடு இயங்கிய நாட்கள் அவை. என்னைப்போல கல்லூரியில் படித்து முடித்தும் வேலையற்றவர்களாக அலைந்தும் திரிந்தும் நாட்களை நகர்த்திய பலரையும் மனப்பிறழ் வாளர்களாக மாற்றாமல் காப்பாற்றியது, அப்போது சிறு பத்திரிகைகளில் வெளிவந்த காத்திரமான படைப்புகள் மாத்திரமே.

‘புது யுகம் பிறக்கிறது’ என்ற சிறு பத்திரிகையில் வந்த பாதசாரியின் ‘காசி’ இன்றளவும் என்னைப் பிறாண்டுகிறான். கோவை ஞானியின் ‘நிகழ்’, எஸ்.வி.ஆரின் ‘இனி இன்று’ எல்லாம் அப்போது தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்.

இவை எங்களுக்குள் ஏற்படுத்திய பேரலைகள் அடங்காதவை. அதை எங்கள் சக மனிதர்களுக்கு எப்படியாவது கடத்திவிட வேண்டுமென்ற எங்கள் யத்தனிப்பே, திருவண்ணாமலையில் நாங்கள் தொடங்கிய ‘கலை இலக்கிய இரவு’ என்ற சிறு முயற்சி.

எல்லாப் பெரும் நிகழ்வுகளும் வரலாறும் இப்படி ஏதோ ஒரு மூலையில் உருவான சிறு பொறி மட்டுமே. 

ஒரு திருமண மண்டபத்தில் ஐநூறுக்கும் குறைவானவர்களோடு ஆரம்பித்தது எங்கள் முதல் கலை இரவு. ஐந்தடிக்கும் குறைவான உயரமேயுடைய ஓர் ஆய்வு மாணவனாக கே.ஏ.குணசேகரன் என்ற பாடகனின் பாடல்கள், பலநூறு மனிதர்களை உள்ளிழுத்து வந்தது. கையில் ஓர் உடுக்கையோடு அவன் எழுப்பிய உணர்வுப் பெருக்கில் அம்மண்டபம் தளும்பியது.

கொண்டாட்டமும் இசையும் நிரம்பிய அந்த இரவில்தான், எங்கள் அடுத்த நிகழ்வுக்கான நிகழ்விடம் நான்கு பக்கமும் சுவர் எழுப்பப்பட்ட ஒரு மண்டபம் அல்ல என்றும், அது ஒரு திறந்தவெளி மைதானமாக பல ஆயிரம் மனிதர்களை சங்கமிக்கவைக்கும் அதன் நீளமும் அகலமும் அளவிட முடியாததாக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தோம்.

தமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்ற பதாகையின் கீழ் நாங்கள் ஒன்றிணைந்தோம்.

எங்களுக்கு முன் `டிசம்பர் 31’ என்ற தேதி கேட்பாரற்றுக்கிடந்தது. வெற்றுக் கொண்டாட்டங்களாலும், பீர்பாட்டில்களின் உரசும் சத்தங்களாலும், சைலன்சர் கழற்றிவிடப்பட்ட பைக்குகள் வெளியேற்றும் சத்தத்தாலும் நிறைந்திருந்த அந்த ஓர் இரவை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்ற எங்கள் ஒருமித்த சிந்தனை, இரு மாதங்களுக்கு முன்னரே வேர்பிடிக்கத் தொடங்கிவிட்டிருந்தது.

ஊரின் எல்லா மையங்களும் தொட்டுக்கொள்ளும் காந்தி சிலை மைதானம் எங்கள் ஆட்டக்களமாக்கப்பட்டது.

இயக்கம் ஒரு மகத்தான செயலை முன்னெடுக்கும்போதும் யாரோ சில தனி மனிதர்களின் அர்ப்பணிப்பும் செயலூக்கமும்தான் அதை முழுமையடையவைக்கிறது.

அப்படித்தான் என்னோடு தமுஎச–வுக்கு கிடைத்த இருவேறு ஆளுமைகளென எஸ். கருணாவையும் ஓவியர் பல்லவனையும் சொல்லலாம்.

ஓவியர்கள் சல்வடார் டாலி, பிக்காஸோவில் ஆரம்பித்து ஜான் ஐசக் அருமைராஜன், இசக்கி அண்ணாச்சி என்று விரிந்த அப்பட்டியலில் இருந்து ஆகச் சிறந்த ஓவியங்களையும் புகைப்படங்களையும் தேர்வுசெய்வோம். அப்படங்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு ஓவியர் பல்லவனிடம் ஒப்படைக்கப்படும்.

இவர் இதை அங்கீகரிக்கிறாரா... மறுதலிக்கிறாரா என யாராலும் அவதானிக்க முடியாததொரு மனநிலையில், அன்றிரவு ஒன்பது மணிக்கு எங்களை அவரின் கலைக் கூடத்துக்கு வரவழைப்பார்.

நானும் கருணாவும் வேலைக்காரச் சிறுவர்கள்போல அங்கு போய் நின்றிருப்போம்.

பத்து மணி வரை கலை, இலக்கியம், விவாதம் என நீளும். சட்டென்ற ஒரு விநாடியில் பல்லவன் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு, கறுப்பு மையிட்ட தூரிகையால் கண்ணாடியில் நாங்கள் காலையில் தந்திருந்த   ஓவியத்தையோ, புகைப்படத்தையோ வரைய ஆரம்பிப்பார்.

சில நிமிடங்கள்தான். ஒரு மரச்சட்டத்தில் பொருத்தப்பட்ட அக்கண்ணாடியின் முன் அளவெடுக்கப்பட்ட தூரத்தில் நின்று நானோ கருணாவோ டார்ச் லைட் வெளிச்சத்தை கண்ணாடியின் மீது பாய்ச்சுவோம்.

நாம் நம்ப முடியாததொரு அளவில் அப்படம் எங்கள் முன் நிறுத்தப்பட்ட 40 அடி நீளமும் 20 அடி அகலமுள்ள ஒரு துணி பேனரில் விரியும்.

பல்லவன் வெறிகொண்டு இயங்கும் தருணம் அது. கறுப்பு மை தடவிய தூரிகை இப்படியும் அப்படியுமாக அந்தப் பெரிய பேனரில் குதியாட்டம் போடும்.

தமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை

அப்போது எங்கள் யாரிடமிருந்தும் ஒரு சொல்லும் எழாது. ஓர் ஓவியன் கோரும் மௌனம் அது.

எதுவும் பேசாமல் பின்னிரவுகளில் பிரிந்து செல்வோம். வசிப்பிடங்கள் கேவலமாக எங்களை எதிர்கொண்ட நாட்களும் அதுவே.

இப்படியான தொடக்கத்தில்தான் திருவண்ணாமலையில் வைக்கப்பட்ட ஒவ்வொரு பிரமாண்டமான பேனரும் உருவானது. அது மக்களை ஈர்த்தது; போக்குவரத்தை நிறுத்தியது; காவல்துறையைத்  தூண்டிலிட்டது; அரசைக் கவனிக்கவைத்தது.

இதில் எங்களுக்கு  எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல நாங்கள் தோழர்களோடு ஒவ்வொரு கடையாக ஏறி, நிதி வசூலிப்போம். 10 ரூபாய் தருபவன் மனிதன்; 100 ரூபாய் தருபவன் வள்ளல்; 1,000 ரூபாய் தருபவன் கடவுள்; அதற்கும் மேலே தருபவன் கடவுளுக்கும் மேலே... என மனிதர்களை மனம் பிரிக்கக் கற்றுக்கொடுத்தது.

மாலை ஆறு மணிக்கும் ஆறரைக்குமான இடைவெளியில் கரிசல்குயில் கிருஷ்ணசாமியோ, சுகந்தனோ, தங்கள் காந்தக் குரலால் பாடத் தொடங்குவார்கள். அது மனிதர்களைத் தூண்டில் போட்டு இழுத்துவரும். காந்தி சிலை மூலையில் நிகழ்ந்த எங்கள் இரண்டாவது கலை இரவு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் நிரம்பித் தளும்பியது.

மேடையில் நிகழும் நிகழ்வுகளின் அடர்த்தியில் ஒரு துளியும் கேளிக்கை நுழைந்துவிடாமல் அடைகாப்போம்.

அசோகமித்திரன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி... என தமிழின் இன்றைய முக்கிய ஆளுமைகளில் பலரும் எங்கள் கலை இரவுகளின் பங்கேற்பாளர்களும் பார்வையாளர்களும்.

பாரதி கிருஷ்ணகுமாருக்கும் கரிசல் கிருஷ்ணசாமிக்கும் இதைப் பல ஆயிரம் மனிதர்களுக்கு கொண்டுபோனதில் எப்போதுமான பெருமிதங்கள் உண்டு. மாவட்டத்தின் உள்ளடுக்குகளில் உறைந்து கிடந்த கிராமங்களிலிருந்து நம் மரபான பல கலைகளை மீட்டெடுத்தோம்.

அதுவரை மரண வீடுகளில் மேளமடித்துக் கொண்டிருந்த பாப்பம்பாடி ஜமாவை கம்பீரமானதொரு கௌரவத்தோடு கலை இரவு மேடையில் ஏற்றினோம்.

பொரசப்பட்டு தண்டா போன்ற மாவட்டத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பழங்குடி மக்களின் ஆட்டக்கலைகளான `பிரியாட்டம்’, `மணியாட்டம்’, `லம்பாடியாட்டம்’... என நகரப் பார்வையாளர்கள் நம் மண்ணின் பாரம்பரியக் கலைகள் குறித்து பிரமிப்படைந்தனர்.

எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கூட்டத்தில் பரவசப்பட்டு, திருவண்ணாமலையை தமிழ்நாட்டின் இலக்கிய நகரமென, டப்ளின் நகரைப்போல அறிவிக்க வேண்டுமெனச் சொன்னார். அத்தனை மௌனத்தோடும் கொண்டாட்டத்தோடும் எங்கள் பார்வையாளர்கள் எதிரில் நடக்கும் நிகழ்வுகளை உள்வாங்கிக்கொள்வார்கள்.

தமிழ்நாட்டின் எல்லா திசைகளிலிருந்தும்  நண்பர்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே புறப்பட்டு வருவார்கள்.  ஒவ்வொருவரும் ஒரு வேலையை அவர்களாகவே பகிர்ந்துகொள்வார்கள்.
திருப்பரங்குன்றத்திலிருந்து சு. வெங்கடேசனும், தேனியிலிருந்து பாஸ்கர் சக்தியும், ஓசூரிலிருந்து போப்பும் திருவண்ணாமலையிலிருந்து கலையின் வீரிய விதைகளைத் தங்கள் ஊருக்குக் கொண்டுபோனார்கள். கற்பாறைகளின் மேல் அல்ல; பதப்படுத்தப்பட்ட மனித மனங்களில் அந்தத் தாய் விதைகள் விதைக்கப்பட்டன. மனித மனதின் ஈரம் காற்றில் அவ்விதைகளைத் தமிழகமெங்கும்  தூவிவிட்டது. அவை செடியாய், பூவாய், காயாய், பழங்களாய், காய்த்துத் தொங்கின காலமே தமிழகத்தின் கலை இலக்கியக் காலம்.

ஐந்தாயிரம் ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கி ஒன்றரை லட்ச ரூபாய் வரை ஒவ்வொரு கலை இரவுக்கும் எங்களுக்கு செலவானது. அதில் பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் நண்பர்களுக்குள் கசப்பு மேலேழுந்து வரும். என்றாலும் அது தற்காலிகம்தான்.

கலை இலக்கிய இரவை ஊர் மக்கள் நகரின் மத்தியில் தங்களுக்காக நடக்கும் பொது இலக்கியத் திருவிழாவாகவே இப்போதும் கருதுகிறார்கள். அரசியல் வேறுபாடுகள், சமூகப் பார்வைகள் இவை சில பேரை கோபம்கொள்ள வைத்ததும், எங்களுக்கு உதவினவர்களை தடுத்ததும் நிகழ்ந்தது.

படைப்பூக்கம் உள்ள மனிதர்களுக்குத் திரும்ப நிகழ்தல் எப்போதுமே சலிப்பூட்டக் கூடியவைதான். அச்சலிப்புகள் எங்கள் மேல் பரவுதற்குள் நாங்கள் எங்கள் வடிவங்களை மாற்றிக்கொள்ளத் தீர்மானித்தோம். கோணங்கியும் போப்புவும் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வட்ட வடிவக் கூட்டத்தில் உட்கார்ந்திருந்த பதினெட்டு பேர்களில் இருவர். அக்கூட்டத்தில்தான் இந்திய அளவிலான இலக்கிய ஆளுமைகளை  டேனிஷ் மிஷன் பள்ளி மைதானத்திற்கு வரவழைத்து, நாற்காலிகள் போடாமல், மைக் வைக்காமல், அவர்களை மனம்  திறந்து உரையாடவைப்பதென்றும், அக் கூடுகைகளுக்கு ‘முற்றம்’ எனப் பெயர் சூட்டுவதென்றும் முடிவெடுத்தோம்.

தமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை

ஒரு காவி லுங்கியை மட்டும் கட்டிக் கொண்டு, புகைத்து முடித்த பலநூறு சிகரெட் துண்டுகளின் மிச்சங்களோடு கருணா எழுதி முடித்த பல நூறு தட்டிபோர்டுகள், நகரையே வேறு ஒரு கலாபூர்வமான உலகத்திற்கு அழைத்துப்போனதும் அந்நாட்களில்தான். சுகுமாரன், சமயவேல், கலாப்ரியா, கல்யாண்ஜியின் கவிதைகளும் புதுமைப்பித்தனில் தொடங்கி கந்தர்வன் வரையிலான  ஆகச்சிறந்த  உரைநடைகளும் அத்தட்டி போர்டுகளில் உயிர்பெறும். இதுவரை தமிழ்நாட்டின் வேறெந்த நகரத்திலேயும் அப்படி நிகழ்ந்ததாக எனக்கு நினைவு இ்ல்லை. தொடக்கமும் முடிவும் அது மட்டும்தான்.

கலை இரவுகளையொட்டி, பல்வேறு நவீன ஓவிய புகைப்படப் புத்தகக் கண்காட்சிகள் விரிந்து, நகரத்தையே தங்களுக்குக்குள் இழுத்துக்கொண்ட காலமும் அது மட்டுமே.

பல ஆயிரம் அடிகள் நீண்டு விரிந்த டேனிஷ் பள்ளியின் மைதானத்துக்கிடையே உருவாக்கப்பட்ட அச்சிறு மேடையே எங்கள் `முற்ற’ மேடை.

சச்சிதானந்தனில் ஆரம்பித்து பால் சக்காரியா, ஜெயகாந்தன், பாலசந்திரன் சுள்ளிக்காடு, பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், அம்பை என கூடிக்கொண்டே போன அந்தப் படைப்பாளிகள் பட்டியல் இப்பொழுது நினைத்தாலும் பிரமிப்படைய வைப்பது. எந்தப் பாசாங்குகளுமற்று, மனம் திறந்து உரையாடிய அந்த உரைகள் இப்போதும் நிலைத்துநிற்பவை.

பல ஆண்டுகள் மௌனம் காத்த பின்னொரு மழை ராத்திரியில், வெறும் அறுபது பார்வையாளர்களோடு சுந்தர ராமசாமி பகிர்ந்துகொண்ட உரை, அவராலேயே அதற்கும் பிறகும் முயற்சிக்க முடியாதது.அம்மேடையில் என்னென்னவோ நிகழ்ந்தது.

ஜெயகாந்தன் சொன்னார்...  “என் பத்தாண்டுகளில் இவ்வளவு நிதசர்னமாக நான் பேசியது இல்லை. இம்மேடையும் இதன் அலங்காரமற்ற எளிமையுமே என்னுள் இருந்து எல்லாவற்றையும் பிடுங்கி எடுத்தது.”

அக்காலங்கள் தமிழிலக்கிய உலகில் ஏற்படுத்திய அதிர்வுகள் அதைக் கடந்து சென்ற ஒவ்வொருவரின் மனதிலும் இன்னமும் தேங்கியிருக்கும். `முற்ற’ நிகழ்வுகள் வெறும் கூட்டங்கள் அல்ல. காற்றின் திசைகளில் கவிதைகள் கலந்த ஈரம் மிக்க நாட்கள்.

இந்நாட்களில் இதற்குச் சற்றும் குறைவின்றி, கலை இலக்கியப் பெருமன்றமும், இன்னும் சில இலக்கிய அமைப்புகளும் நகரின் ஏதோ ஓர் இடத்தில் தங்கள் படைப்பூக்கமிக்க நாட்களைப் பதித்துக் கொண்டே இருந்தார்கள்.

பங்கெடுக்கவோ, பார்வையிடவோ, தமிழ்நாட்டின் பல ஊர்களிலிருந்தும் வந்த படைப்பாளிகளும் கலைஞர்களும், நிகழ்வு முடிந்து நாலைந்து நாட்களுக்கு எங்களுடனேயே தங்கியிருந்து, நிலம், திப்பக்காடு, நிறை கிணறு, நடைபாதையென இலக்கியம் பேசிப்பேசித் தீர்த்த காலங்கள் அவை.
ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் கோணங்கியும் முக்கோண வடிவில் உட்கார்ந்து ஓர் இரவெல்லாம் சண்டை போட்டதும், அவர்களுக்கு மணிக்கொருதரம் நான் டீ ஊற்றித் தந்ததும், அதிகாலை பிரியும்போது ஆளுக்கொரு திசையில் பஸ் ஏறிப் போனதும் அப்படியே நினைவில் தங்கிய ஒன்று.

இந்நிகழ்வுகள் முடிந்து பங்கேற்பாளர்களுக்கு பயணச் செலவுகளுக்கு கொடுக்கக் காசு இல்லாமல் லாரிகளில் ஏற்றி அனுப்பி யிருக்கிறோம். பஸ் ஸ்டாண்டில் பல மணி நேரம் நிற்கவைத்துவிட்டு, கடன்கேட்டு அலைந்திருக்கிறோம். ஜே.கே-வை சென்னை பேருந்தில் ஏற்றி, உட்கார இடம் கிடைக்காமல் நின்றுகொண்டே போக நிர்பந்தித்திருக் கிறோம். `இவையெல்லாம் இலக்கிய ஆர்வத்தின் பொருட்டே’ என்ற மேன்மையான புரிதலில் அப்பெரும் படைப்பாளிகளின் மனம் அவற்றை ஒரு புன்னகையோடு ஏற்றுக்கொண்டிருந்திருக்கிறது.

நீண்ட இப்பயணத்தில் காளிதாஸ், கவிஞர் பீனிக்ஸ், சாமிநாதன், கே.வி.ஷைலஜா, கே.வி.ஜெய, ரேணுகோபால், பாலாஜி, சந்துரு, குழந்தைவேல், வேடநத்தம் ராஜேந்திரன், அன்பரசன், சோமு... என நினைவில் நின்றும் அகன்றும் பல பெயர்களின் உழைப்பு உள்புதைந்துகிடக்கிறது.

தமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை

இந்நகரம், ஒரு பேரழகியின் வசீகரத்தோடு நின்று எல்லா திசைகளிலிருந்தும் படைப்பாளிகள், கலைஞர்களை கைநீட்டி அழைத்துக்கொண்டேயிருக்கிறாள். இதழ் குடிக்க அனுமதிக்கிறாள். எலும்புகள் நொறுங்க அவள் அணைப்பிலிருந்து இன்றளவும் எங்கள் எவராலும் விடுபட முடியவில்லை என்பதே உண்மை.

அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போதும் எப்போதாவது `முற்ற’த்தில் ஓர் இளம் படைப்பாளியின் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. என் வீட்டு மாடியில் ‘நிலம்’ என்ற பெயரில் ஓர் இலக்கியக் கூடுகை தொடர்கிறது. ‘டென்ட் கொட்டாய்’ என்று பெயரிட்டு உலகத் திரைப்படங்களை எங்கள் குழந்தைகள் வம்சியும் மானசியும் அவர்களின் நண்பர்களான ஷபி, கிருஷ்ணமூர்த்தி, லோகேஷ் ஆகியோரோடு இணைந்து வீட்டு மொட்டை மாடியின் திரைக்குக் கொண்டுவருகிறார்கள்.

நானும் என் நண்பர் எஸ்.கே.பி. கருணாவும் இணைந்து ‘டயலாக்’ என்ற பெயரை மகாத்மா காந்தியிடமிருந்தே பெற்றோம். `எல்லாவற்றையும் பேசித் தீர்த்துவிடலாம்’ என சொற்களின் மீதான ஆழமான நம்பிக்கையில் மிக ஆழமாக ஊனப்பட்ட வீரிய விதை அது.

சேகர் தத்தாத்ரியின் புலிகள் குறித்த ஆவணப்படத்தையும், `புலிகள் யாருக்காக?’ என்ற சமீபத்தில் மறைந்த ஆண்ட்டோவின் படத்தையும் ஒரே இடத்தில் திரையிட்டு சொற்களின் வீரியத்தை நிரூபிக்க முயன்ற நிகழ்ச்சிகளும் எங்களிடம் உண்டு.

ஓர் உறை மௌனம் என்னை ஆக்கிரமித்தபோது எப்படியாவது அதிலிருந்து மீள வேண்டும் என்ற உந்துதலில் நானும் என் நண்பன் ஜே.பி-யும் சேர்ந்து `குவா வாடீஸ்’ என்ற கட்டடங்கள் புறந்தள்ளப்பட்ட பல்சமய உரையாடல் மையத்தின் மரங்களும் செடிகளும் பூக்களும் கூடிக் குதூகலிக்கும் வளாகத்தில், என் ‘கதை கேட்க வாங்க’ என்ற நிகழ்வை ஆரம்பித்தோம். ஐம்பது பேரில் ஆரம்பித்து அதுவும் ஐநாறு பார்வையாளர் களைத் தாண்டிவிட்டது. அது கதைகளை, வாசிப்பை, எழுத்தை உயிர்ப்பிக்கிறது. என் சக மனித ஸ்பரிசத்தை தினம் தினம் வேண்டுகிறது. மனித சந்தோஷத்தையும் துக்கத்தையும் துரோகத்தையும் பேரன்பையும் அது எப்போதும் நதியில் அள்ளப்பட்ட ஒரு கை நீரால் ஈரப்படுத்துகிறது. மானுடத்திற்கு கலை இலக்கியம் இதைவிட வேறெதைத் தந்துவிட முடியும்?

பல ஆரம்பங்கள் திருவண்ணாமலையில் இருந்தே தொடங்கப்பட்டன...

*ஜெயமோகனின் ‘திசைகளின் நடுவே’ என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு, பல்லாயிரம் மனிதர்கள் மத்தியில் `கலை இரவு’ மேடையில் வெளியிடப்பட்டது.

*அசோகமித்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்ததற்கான முதல் பாராட்டு விழாவை `கலை இரவு’ மேடையில் நாங்கள் முன்னெடுத்தபோது, அந்தப் பிரமாண்ட மேடையில் போடப்பட்ட ஒற்றை நாற்காலியில் உட்கார்ந்தவர் தன் எதிரே குழுமியிருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்துப் பயந்து, ஒரு துணைக்காக என்னை அருகில் அமரச் சொல்லி, ‘‘இலக்கிய நிகழ்ச்சிக்கு இத்தனை பேரா?’’ என அவர் கண்கள் வியந்து விரிந்த விநாடியை இடைவெளி எதுவுமின்றித் தரிசித்திருக்கிறேன்.

*`ஆட்டோவுக்கு எதற்கு அநாவசியச் செலவு?’ எனக் கருதி எடிட்டர் பி.லெனின் தன் `நாக்-அவுட்’ படப்பெட்டியை தன் உதவியாளர் ஒருவரின் தலையிலும், தானும் மாறி மாறி சுமந்துகொண்டு சாரோன் போர்டிங் பள்ளியை அடைந்ததும், அந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்தபோது, விருதை என் கழுத்தில் மாட்டிவிட்டதும் எப்போது நினைத்தாலும் பெருமிதமான ஒன்று. அந்தப் படப்பெட்டியை மூன்று கிலோ மீட்டர் சுமந்துவந்த உதவியாளர்தான் பின்னாளில் தன் படத்துக்காக தேசிய விருது பெற்றார், அவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.

*`உலகமயமாக்கலின் விபரீதங்களில் முதன்மையானது, தண்ணீருக்காக நடக்கப்போகும் மூன்றாம் உலகப் போராக இருக்கக்கூடும்’ என ஈரோடு டாக்டர் ஜீவானந்தம் திருவண்ணாமலை ‘தமுஎச’ கருத்தரங்கில்தான் ஒரு தீர்க்கதரிசி மாதிரி முன்னறிவித்தார்.

*பிரபல திரைக்கலைஞர் மம்முட்டி பார்வையாளராக முன்வரிசையில் உட்கார்ந்திருந்தபோது பாதியில் எழுந்த திடீர் சலசலப்பில் தன் உரையை நிறுத்தி, ‘`இது பார்க்க வரும் கூட்டம் இல்லை; கேட்க வரும் கூட்டம் என்ற நம்பிக்கையிலேயே இவ்வளவு தூரம் வந்துள்ளோம். அதைப் பொய்யாக்கிவிடாதீர்கள்’’ என தன் உரையை எஸ்.ராமகிருஷ்ணன் பாதியில் நிறுத்தித் தொடர்ந்ததும் இங்குதான் நிகழ்ந்தது.

*கோணங்கிக்கு எப்படியாவது எங்கள் `கலை இரவு’ மேடையிலேயே ஒரு கல்யாணத்தை செய்துவைத்துவிட வேண்டும் என்ற எங்கள் ரகசியத் திட்டம், கடைசி வரை நிறைவேறாமல் `கல்குதிரை’யில் ஏறி கல்வராயன் மலையேறிவிட்டது.

*முருகபூபதியின் எல்லா நாடகங்களின் நிகழ்விடமாகத் தொடர்ந்து திருவண்ணாமலையே இருந்திருக்கிறது. அதை நடத்த நிதி கேட்டு, தாலுக்கா ஆபீஸ் வாசலின் இருபுறமும் பிச்சைக்காரர்கள் போல நின்றிருந்திருக்கிறோம்.

*‘வனத்தாதி’ என்ற நவீன நாடகம் பார்க்க வேண்டுமானால், திப்பகாட்டின் சாலையைக் கடந்து, மூன்று கிலோமீட்டர் காட்டின் உட்பகுதிக்கு நடந்து செல்ல வேண்டும். ஐநூறுக்கும் அதிகமான பார்வையாளர்களோடு கிடாவெட்டு கொண்டாட்டத்துக்கிடையே அது நிகழ்ந்தது.

*புரிசை கண்ணப்பத் தம்பிரானின் தெருக்கூத்து நடந்து முடிந்து, இளைப்பாறிய ஒரு `கலை இரவு’ மேடையில்தான் ஷைலஜா, ரோஜாப்பூக்களும் வாழ்த்து அட்டைகளும் நிரம்பியிருந்த ஒரு பூப்போட்ட ஜோல்னா பையை எனக்குப் பரிசளித்து தன் காதலைச் சொன்னாள். என் தனித்த வாழ்வில் ஷைலஜாவும் சக பயணியாக இணைந்தது இப்படித்தான்.

*எஸ்.ராமகிருஷ்ணன், மருது, கோபிகிருஷ்ணன், ச.தமிழ்செல்வன் என எல்லோரும் நிரம்பியிருந்த ஒரு கருத்தரங்கில்தான், நாங்கள் எங்கள் அன்பு மகன் சிபியை ஒரு விபத்தில் இழந்தோம்.

*இப்போது நினைக்கையில் என் மொத்த வாழ்விலும் கலை இலக்கிய நிகழ்வுகளே நிரம்பியிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism