Published:Updated:

கு.அழகிரிசாமி - தமிழ்ச் சிறுகதைத் தரத்தை இந்திய அளவுக்கு உயர்த்தியவர்... கதை சொல்லிகளின் கதை! பாகம் 18

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கு.அழகிரிசாமி - தமிழ்ச் சிறுகதைத் தரத்தை இந்திய அளவுக்கு உயர்த்தியவர்... கதை சொல்லிகளின் கதை! பாகம் 18
கு.அழகிரிசாமி - தமிழ்ச் சிறுகதைத் தரத்தை இந்திய அளவுக்கு உயர்த்தியவர்... கதை சொல்லிகளின் கதை! பாகம் 18

கு.அழகிரிசாமி - தமிழ்ச் சிறுகதைத் தரத்தை இந்திய அளவுக்கு உயர்த்தியவர்... கதை சொல்லிகளின் கதை! பாகம் 18

முந்தைய பாகங்கள்:

பாகம்-2- ஆ.மாதவய்யா

பாகம்-5- மௌனி

பாகம்-6 - கு.பா.ரா

                                                                                                       பாகம்-12- ந. சிதம்பர சுப்ரமணியன்

பாகம் - 13 - எஸ்.வி.வி

பாகம்- 15.1  கல்கி

பாகம்-15.2 கல்கி

பாகம்-16 - ராஜாஜி

பாகம்-17- அநுத்தமா

ஒரு கதை மனதை மட்டுமல்ல, தொடர்ச்சியாக உடலையும் பாதிக்கும் என்பதை நான் முதன் முதலாக உணர்ந்தது அமரர் கு.அழகிரிசாமியின் ‘திரிபுரம்’ கதையை வாசித்தபோதுதான். அக்கதையை வாசித்த நாளில் அது ஏற்படுத்திய அதிர்வுகளைத் தாள முடியாமல் மூன்று நாள் காய்ச்சல் கண்டு படுத்துவிட்டேன். இது சற்று அதீதமாகத் தெரியலாம் என்றாலும் இது உண்மை. எங்கள் கரிசல் மண்ணின் முன்னணி படைப்பாளியான கு.அழகிரிசாமியும், `நைனா’ என நாங்கள் அன்புடன் அழைக்கும் கி.ராஜநாராயணனும் ஒரே ஊர்க்காரர்கள். இடைசெவல் கிராமம் தமிழ் இலக்கியத்துக்கு வழங்கிய இரு பெரும் ஆளுமைகள் அவர்கள்.

“என் கலை சிருஷ்டிகளுக்கு ஒரு `ராஜநாராயணன்’ இல்லாமல் முடியவே முடியாது. சுவரில்லாமல் சித்திரம் எழுதுவதா? ராஜநாராயணன் என்றால் ஒரு குறிப்பிட்ட அடையாளங்களும், குணாதிசயங்களும் உள்ள உன்னோடு அடங்கி விடவில்லை. நான் நினைக்கும் அந்த ராஜநாராயணனில் இவன் ஒரு பாகமேயாகும். இந்த ராஜநாராயணனுடைய கூட்டுறவில் இவனைச் சுற்றிச் சுற்றி, இரவு பகலாகப் படர்ந்த சிந்தனைகள், கனவுகள் ஆகிய பொருள்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, எங்கும் கேட்கவும், எங்கும் பார்க்கவும், எங்கும் தீண்டவும் முடியும் ஒருவனையே நான் குறிப்பிடுகிறேன். அவனை உனக்கு அடையாளம் கூடத்தெரியாது. ஆனால், என்னோடு அவன் அந்த பிரம்மாண்டமான ரூபத்திலேயே பழகுகிறான்; நேசிக்கிறான்; ஆடிப்பாடிக் களிப்பிக்கிறான். மனித ஜீவன்களின் நெருங்கிய கூட்டுறவில் இந்த அதீதத்தன்மை இயற்கையாகிவிடுகிறது இல்லையா? உண்மை அப்படி இல்லை என்றால், இன்றுவரை உலகத்தில் ஒரு காவியமோ, கலையோ பிறந்திருக்குமா?” - இது 1945-ல் கு.அழகிரிசாமி கி.ரா.வுக்கு எழுதிய கடிதவரிகள் இவை.

இன்னொரு கடிதத்தில் ``உன் கடிதம் காணாததால் நான் இந்தக் கடிதம் எழுதுவதாக நீ நினைக்கலாம். இல்லை. நீ இதற்குள் பத்துக்கடிதங்கள் எழுதியிருந்தாலும் இந்தக் கடிதம் எழுதாமல் தீராது. ஏதோ ஒரு அன்பின் சக்தி உள்ளே இருந்து தூண்டுகிறது” என்று எழுதிச்செகிறார்.

பொறாமை கொள்ளச்செய்யும் அப்படி ஒரு காவியத்தன்மை கொண்ட அன்பும், நட்பும் இருவருக்கும் இடையில் நிலவியது.

கு.அழகிரிசாமி திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கும் கயத்தாறுக்கும் இடையில் உள்ள இடைசெவல் என்னும் சிற்றூரில், 1923-ல் குருசாமி - தாயம்மாள் ஆகியோருக்கு முதல் மகனாகப் பிறந்தார். பரம்பரையாக வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் அழகிரிசாமியின் குடும்பத்தார். ஆனால், வெளியே பேசும்போது தமிழில்தான் பேசுவார் அழகிரிசாமி.

வசதியின்மை காரணமாக அவரை நான்காவது வரைகூட படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை. ஆனால், விடாமுயற்சியுடன் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து முடித்தார். அந்தச் சிற்றூரில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.

1970-ல் காலமான அவர் இப்பூமியில் வாழ்ந்தது 47 ஆண்டுகள்தாம். அக்குறுகிய வாழ்வுக்காலத்தில் என்றும் அழியாத அழுத்தமான தடங்களை விட்டுச்சென்றுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், பத்திரிகைப்பணி, பதிப்புப்பணி, கடிதங்கள், இலக்கியப்பேச்சு என கலாசாரத்தின் ஒவ்வொரு அசைவிலும் தன்னை இணைத்துக்கொண்டு ஒரு முழுமையான இலக்கியவாதியாக வாழ்ந்திருக்கிறார் கு.அழகிரிசாமி.

பிற படைப்புகளும் முக்கியமானவை என்றாலும் நாங்கள் அவரைச் சரணடைந்தது அவரது சிறுகதைகளில்தான்.

கு.அழகிரிசாமியின் எழுத்துக்களை என் 25 ஆண்டுகளாகப் பரிச்சயம் கொண்டவன். 14 வருஷங்களுக்கு முன்னால், அவரை நேரிடையாகக் கண்டு நட்பும் பெற்றிருக்கிறேன். இது அவ்வளவு முக்கியமில்லை. இன்னும் நான் உயிர்தரித்து உலவுகின்ற எஞ்சிய நாட்கள் முழுவதும், இந்த 14 வருஷங்களாக இருந்த நேரிடைப்பழக்கம் என்கின்ற அவ்வளவு முக்கியமற்ற விஷயம் நீங்கலாக, எப்பொழுதும் போல அவருடன் நான் பரிச்சயம் செய்து கொண்டிருப்பேன். இதுதான் ரொம்பவும் முக்கியம். இதற்கான காரியத்தை அவர் செய்து விட்டுப் போயிருக்கிறார்.

கு.அழகிரிசாமி என்கிற ஐந்தடி ஏழு அங்குலம் உயரமுள்ள, சிறிதே தலை வழுக்கையான, ஒரு கை ஊனமான, சதா நேரமும் சிரிக்கின்ற முகமுள்ள அந்த மனிதன் என்கிற ஸ்தூலமான பொய்மைதான் இப்போது இல்லை.

மற்றபடி, அழகிரிசாமி என்கிற மனிதனின் முகம் தெரியாமல், அவரது `திரிவேணி’யையும்,  `சிரிக்கவில்லை’யையும், `அழகம்மா’வையும், `வெறும் நாயை’யும், `ராசா வந்துட்டாரு’வையும் நான் படித்து, பரவசமுற்று, பாராட்டி,நினைத்து நெகிழ்ந்திருக்கிறேன். அந்த அழகிரிசாமி இப்போதும் இருக்கிறார் என்றே நான் நம்புகிறேன். இதுதான் ரொம்பவும் முக்கியமான அர்த்தமுள்ள விஷயம்” என்று ஜெயகாந்தன் `ஞானரதம்’ இதழில் அழகிரிசாமியின் மறைவையொட்டி 1970-ல் எழுதியிருந்தார். 

இந்தக் கதைகளில் வருகிறவர்கள் எல்லாரும் சாதாரண மனிதர்களும் ஸ்திரீகளும் குழந்தைகளும்தான். ஆயினும் அவர்களைக் கதை ஆசிரியர் ஏதோ, ஜால வித்தையினால் அபூர்வமான கதபாத்திரங்களாகத் திகழும்படி செய்திருக்கிறார். அவர்கள் நம்மை விட்டுப் போகாமல் சுற்றித் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்படியும் செய்துவிட்டிருக்கிறார்.

குழந்தை சாரங்கராஜன் நம் கண்ணினும் இனிய கண்மணியாகிவிடுகிறான். அவனை அழைத்து வந்து ஏதேனும் ஒரு புத்தகத்தில் `அன்பளிப்பு‘ என்று எழுதிக் கொடுக்க நம் உள்ளம் துடிதுடிக்கிறது.

மங்கம்மாள் அரை அடி முன்னால் நகர்ந்து வந்து நின்று ``எங்க வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்கிறான். வேணும்னா வந்து பாரு” என்று சொல்லும் காட்சி மனதிலிருந்து அகலுவதில்லை. அவனைத் தொடர்ந்து சென்று அந்த ராஜாவை நாமும் பார்க்க வேண்டுமென்று ஆசை உண்டாகிறது.

கல்யாண கிருஷ்ணனைத் தொடர்ந்து அந்தமான் தீவு வரைக்கும் போக நாமும் தயாராகிறோம்; செல்கிறோம். ஆனால் அங்கேயிருந்தும் அவன் டிமிக்கி கொடுத்துவிட்டானே! ஒரு வேளை காஞ்சிபுரம் கருட சேவைக்குப் போனால் அவனைக் கண்டுபிடிக்கலாமோ?

ஸ்ரீ கு.அழகிரிசாமிக்குக் கதை புனையும் கலை அற்புதமாக வந்திருக்கிறது. சாதாரண புருஷர்களும், ஸ்திரீகளும், குழந்தைகளும் அவருக்குக் கை கொடுத்து உதவி இருக்கிறார்கள். ``கதை ஆசிரியர் எதற்காக கதை எழுதுகிறார்? கடவுள் எதற்காக இந்த உலகத்தைப் படைக்கிறாரோ, அதே காரணத்துக்காகத்தான். இந்த உலகத்தில் எத்தனையோ குறைபாடுகள் இருக்கின்றன. இலக்கிய விமர்சகரை இந்த உலகத்தைப் பற்றி விமர்சனம் எழுதச் சொன்னால் இதில் உள்ள குற்றம் குறைகளை எடுத்துக் கொண்டு வெளுத்து வாங்கிவிடுவார்!

ஆனாலும், இவ்வளவு குறைபாடுகளை உடைய உலகத்தை சிருஷ்டி செய்வதில் கடவுள் ஆனந்தம் அடைகிறார். இல்லாவிடில் இவ்வளவு சிரமமான சிருஷ்டித் தொழிலில் பிடிவாதமாக ஈடுபட்டிருக்கமாட்டார் அல்லவா? அது போலவே கதை ஆசிரியர்களும் கதை புனைவதில் ஏற்படும் ஆனந்தம் காரணமாகவே கதை எழுதுகிறார்கள. தாங்கள் எழுதும் கதைகளை யாராவது படித்தாலும் படிக்காவிட்டாலும், பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும், அதனால் ஊதியம் ஏதேனும் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், கதை ஆசிரியர்கள் கதை எழுதிக் கொண்டுதானிருப்பார்கள்” என்பது அமரர் கல்கி, கு.அழகிரிசாமியின் கதைகள் பற்றி எழுதிய குறிப்பு.

புதுமைப்பித்தனைத் தனது குருவாக வரித்துக்கொண்ட கு.அழகிரிசாமியின் ஒவ்வொரு சிறுகதையும் ஒரு ’மாஸ்டர் பீஸ்’. இது நல்ல கதை அது அற்புதமான கதை என்றெல்லாம் பிரித்துச் சொல்ல முடியாதபடி ஒவ்வொரு கதையிலும் அவருடைய எழுத்தின் ஒளியை நாம் தரிசிக்கிறோம்.

அவருடைய `சுய ரூபம்’ கதை பற்றி  பிரபஞ்சன் எழுதிய குறிப்பு:

“தமிழ்ச் சிறுகதைத் தரத்தை இந்திய அளவுக்கு உயர்த்திய அமரர் கு.அழகிரிசாமியின் இந்தக் கதையைச் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் வாசித்தேன். மீண்டும் சென்ற வாரம் திரும்பவும் வாசிக்க நேர்ந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலில் அதை வாசிக்கையில், எனக்கேற்பட்ட அதே இலக்கிய அனுபவம் இப்போதும் ஏற்பட்டது.

பசி மட்டும்தானா இக்கதையின் கரு. மேலும் பல பரிமாணங்களை உள்ளடக்கியது. இக்கதை இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான உரிமைப்போராட்டமே அது. இன்னும் ஆழமாகப் பார்ப்போமேயாகில், இக்கதையில் முரண் சக்திகள் இல்லை. வில்லன்கள் இல்லை. உண்மையில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் வித்தியாசமும் பெரிதாக இல்லை.’’

இப்போது அந்தச் `சுயரூபம்’ கதையைப் பார்க்கலாம்:

``வேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களாகப் பருவ மழை சரிவரப் பெய்யாமலும், வேலை வெட்டிகள் கிடைக்காமலும் போய், அகவிலைகளும் தாறுமாறாக ஏறிக்கொண்டுவிடவே, அந்தக் கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் ‘உண்டு’ என்று சொல்லுவதற்கு அந்தப் பழம்பெருமை ஒன்றுதான் மிஞ்சியிருந்தது.

பழம்பெருமை படைத்த இந்த வேப்பங்குளத்தில் பிறந்த எத்தனையோ பேரில், தற்சமயம் ஐம்பதாம் வயதைத் தாண்டிய வீ.க.மாடசாமித் தேவரும் ஒருவர். அப்படிச் சொல்லிக் கொள்ளுவதைவிட, வீரப்பத் தேவர் பேரன் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளுவதில்தான் அவருக்குப் பிரியம் அதிகம். தாத்தா வீரப்ப தேவரின் அரிய சாதனைகளையும், ஒரு கடுஞ்சொல்லுக்கு ஒன்பது தலைகளைச் சீவி எறியும் மகா தீரத்தையும், உடன்பிறந்த தங்கை ஏதோ ஒரு சமயம் அவரை லட்சியம் செய்யாமல் இருந்ததற்காக அவளுடைய மூத்த மகன் கல்யாணத்தின்போது யார் யாரோ தாங்கியும் கட்டாயப்படுத்தியும், அழுதும் இன்னும் என்ன என்ன விதமாகவோ கும்பிட்டுக் கூத்தாடியும் கை நனைக்காமலே (சாப்பிடாமலே) வந்துவிட்ட வைராக்கியத்தையும் மாடசாமித் தேவர் தம் வாழ்நாளில் சந்தித்த ஒவ்வோர் இரண்டு கால் பிறவியிடத்திலும் சொல்லிப் பெருமைப்பட்டிருக்கிறார்.

அப்பேர்ப்பட்ட வீரப்பத் தேவரின் பேரர், காலனும் அஞ்சும் கந்தசாமித் தேவரின் ஏகபுத்திரர். வீ.க. மாடசாமித் தேவரை அன்று அதிகாலையில் அவருக்குக் கடன் கொடுத்த முத்தையாத்தேவர் கிணற்றடியில் பிற ஜாதியார் முன்னிலையில் அவமானமாகப் பேசிவிட்டார். ``மதியத்துக்குள் காசு வந்து சேரும் போரும்’’ என்று வீராப்புப் பேசிவிட்டு, முருகேசம் பிள்ளையின் பலகாரக்கடைக்குப் பசியுடன் போய்ச் சேர்ந்தார்.

முருகேசம் பிள்ளையவர்கள், மாடசாமித் தேவரவர்கள் வந்ததைக் கவனிக்கவில்லை என்று சொல்ல முடியாது; கவனிக்க விரும்பவில்லை என்பதுதான் சரி. பஸ்ஸுக்கு வந்த பிரயாணிகளுக்குப் பலகாரங்களைக் கொடுத்துக் காசாக்குவதிலேயே பிள்ளை கண்ணும் கருத்துமாக இருந்தார். தேவரோ, தாம் வந்ததைத் தெரிவிப்பதற்காக இடையிடையே ஏதேதோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். அது, ’புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளை’ப் போலவும், தாடகையின் மார்பில் பாய்ந்த ராமபாணம் போலவும் இந்தப் பக்கமாகப் புகுந்து அந்தப் பக்கமாகப் பறந்துவிட்டது.

சாயங்காலம் வரையிலும் அந்தக்கடையில் கிடையாகக் கிடந்து முருகேசம்பிள்ளையிடம் நட்புணர்வை வளர்த்து கடனுக்கு நாலு இட்டிலிகளைப் பெற்று விட தேவர் என்னென்ன பிரயத்தனம் செய்தாலும், முருகேசம் பிள்ளை பிடி கொடுக்கவில்லை. பசியில் காதடைத்து வந்தது தேவருக்கு. முருகேசம்பிள்ளை பேசிய பேச்சுக்கெல்லாம் ஆமாஞ்சாமி போட்டும் மசியவில்லை.

மத்தியானம் ஆயிற்று. வயிற்றுச் சோற்றுக்கு முருகேசம் பிள்ளை வீட்டில் எடுபிடி வேலை செய்து உயிரைப் பேணிக்கொண்டிருக்கும் ஒரு சிறுவன் வீட்டிலிருந்து அவருக்கு மத்தியானச் சாப்பாடு கொண்டுவந்தான். காரணம் இல்லாமலே, நித்திய வழக்கப்படி அவன்மீது ஒரு வசை புராணம் பாடி முடித்தார் பிள்ளை. பிள்ளையவர்களைச் ‘சண்டாளன்’ என்று மனதுக்குள் திட்டிக்கொண்டு,  அதே சமயத்தில் அவருடைய கட்சியிலேயே சேர்ந்துகொண்டு, அந்தச் சிறுவனை மாடசாமித் தேவரும் கடிந்துகொண்டார். இது பிள்ளையவர்களுக்குப் பிடிக்கவில்லை.

``தேவரே, இவன் என்ன, அனாதைப் பயல்னு பார்த்தீரா? நான்தான் திட்டுறேன்னா, நீரும் எதுக்குப் பின் பாட்டுப்பாடுறீரு?” என்று ஒரு போடு போட்டார்.

தேவருக்கு முகத்தில் அறைந்தாற்போல் இருந்தது. பல்லைப் பல்லைக் காட்டிக்கொண்டு, ``நான் அப்படி என்ன சொன்னேன்…? அவனுக்குப் புத்திதானே சொன்னேன்?” என்று பரிதாபகரமாகச் சொன்னார்.

பையன், தேவரைச் சிம்மப் பார்வை ஒன்று பார்த்துவிட்டுப் போனான்.

காலையிலிருந்து முருகேசம் பிள்ளையோடு வளர்த்த நட்பு இப்படி ஒரு நிமிஷத்தில் தகர்ந்து தரைமட்டமாகி விட்டதே என்று தேவருக்கு ஏமாற்றம். பழையபடியும் அவரோடு சிநேகிதமாகிவிடுவதற்குத் தக்க தருணத்தை எதிர்பார்த்தவராய் அந்த இடத்தில் இருந்தபடியே இருந்துகொண்டிருந்தார்.

இரவு ஏழு மணிக்கு மேல் ஆகிவிட்டது.

முருகேசம் பிள்ளை தம் தளவாடங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, வெறும் கடையை இழுத்துப் பூட்டிவிட்டு, நிலா வெளிச்சத்தில் விலக்குப் பாதை வழியாக மேற்கே நோக்கி நடக்கத் தொடங்கினார். நடுவழியில் பிள்ளையவர்களைப் பார்த்து,

``அண்ணாச்சி, ஒரு காரியமில்லே…” என்று ஆரம்பித்தார்.

``என்ன சமாச்சாரம்?” என்று கேட்டார் முருகேசம் பிள்ளை.

``இல்லே, மிஞ்சிப்போன அந்த இட்டிலியை எடுத்துக்குடுங்களேன், நாளைக்கு காலையிலே காசைக் கொண்டாந்து குடுத்திடுறேன்?”

``இதுக்குத்தான் நீர் இவ்வளவு நேரமும் வலைவீசினீரா? சரிதான், சரிதான்! ஐயா, நம்பகிட்டே கடன்கிடன் என்கிற பேச்சே கிடையாது” என்று சொல்லி, சற்று வேகமாக நடந்தார்.

``நீங்க கடன் குடுக்காமலா இருக்கிறீக?”

``குடுப்பேன் ஐயா, குடுப்பேன்; குடுக்கிறவுகளுக்குக் குடுப்பேன்; உமக்குக் குடுத்துப்போட்டு நான் எங்கே போய்க் காசை வசூல் பண்றது?”

``என்ன அப்படிச் சொல்லிப்போட்டீக, அண்ணாச்சி? இந்த வீரப்பத் தேவர் பேரன் அப்படிப்பட்டவன் இல்லே.”

``ஆமாமா! உமக்குக் கடன் குடுத்திட்டு, அப்புறம் வசூல் பண்ண வீரப்பத் தேவருகிட்டப் போக வேண்டியதுதான்.”

``என் பாட்டன் பூட்டன் காலத்திலே கூட இப்படி எங்க குடும்பத்திலே யாரும் கெஞ்சினது கிடையாது. எங்க பாட்டனாரு, ஒரு கோவத்திலே சொந்தத் தங்கச்சி வீட்டிலே கூடச் சாப்பிடமாட்டேன்னு வந்தவரு…”

“ஐயா நீர் பொழைச்ச பொழைப்பும், ஒம்ம பாட்டன் பொழைச்ச பொழைப்பும் எனக்குத் தெரியும். சும்மா ஆளைப் போட்டு பிடுங்காதீங்க.”

பாட்டன்மாரைப் பற்றி அலட்சியமாகப் பேசிய அந்த வார்த்தைகளுக்காகவே தேவரின் எரிமலை வெடிப்பதற்குக் காத்திருந்தது போலும்! ``என்னடா சொன்னே?” என்று இடிமுழக்கம்போல் குரலெழுப்பிக்கொண்டு முருகேசம் பிள்ளை மீது புலிப் பாய்ச்சலாகப் பாய்ந்தார்  மாடசாமித் தேவர். இந்தத் தாக்குதலால் பிள்ளையின் தலையில் இருந்த தளவாடங்கள் கீழே விழுந்து சிதறின. உடனே இருவரும் கைகலந்துவிட்டார்கள். திட்டிய திட்டுகளும், பேசிய பேச்சுகளும்… அது வேறு பாஷை. பலம் கொண்ட மட்டும் ஒருவரையொருவர் ஓங்கிக் குத்தினார்கள். ஒருவரைக் கொல்லாவிட்டால் மற்றொருவர் உயிரோடு மீள முடியாது என்பதும் உறுதியாகிவிட்டது. அந்தப் பேயறைகளும், பேய்க் கூப்பாடுகளும் கேட்பாரற்ற ஓசைகளாகக் காற்றில் கலந்துகொண்டிருந்தன. சண்டையை விலக்குவதற்குச் சுற்றுமுற்றும் ஒரு ‘சுடு குஞ்சும்’ கிடையாது. கை ஓயக் குத்தினார்கள். கையைவிட்டால் அப்புறம் பல்தான் ஆயுதம். பல்லையும் பகவான் கொடுத்திருக்கிறாரே!…. அடியோடு கடியும் சேர்ந்தது. உடம்பெல்லாம் ரத்தக் கோரைகள்….

நடுக்காட்டில் சில நிமிஷ நேரம் இந்தப் பயங்கரப் போர் நடந்தது. முடிவில் மாடசாமித் தேவரே சோர்ந்து விழுந்தார். வயிற்றுப் பசியை வைத்துக்கொண்டு அவர்தான் எப்படித் தாக்குப் பிடிப்பார்? வீசி எறிந்த கோணிப் பை மாதிரி பாதையோரத்தில் சுருண்டு விழுந்தார் தேவர். முருகேசம் பிள்ளை வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டே தம் தளவாடங்களைக் கம்பீரமாகப் பொறுக்கி ஒன்று சேர்த்துக் கொண்டிருந்தார். தேவர் கிடந்த இடத்தில் மூச்சுப்பேச்சே  இல்லை. மௌனம்தான் நிலவியது.

முருகேசம் பிள்ளை புறப்படவிருந்த சமயத்தில், மாடசாமித் தேவர் சுய உணர்வு இல்லாத நிலையில். ``அண்ணாச்சி, இன்னுங் கூட ஒங்க மனசு எரங்கலையா? வயத்துப் பசியிலே புத்தியைப் பறி கொடுத்திட்டேன், அண்ணாச்சி” என்று மன்னிப்பையும் இட்டிலியையும் ஏக காலத்தில் கேட்டார்.

முருகேசம் பிள்ளையின் மனமா இரங்கும்? அதற்குப் பதிலாகப் பன்மடங்கு கோபமே வந்தது. ``இந்தா, திண்ணுத் தொலை. இப்படி மானங்கெட்ட தீனி திண்ணு உடம்பை வளக்கலேன்னா என்னவாம்?” என்று சொல்லிக்கொண்டே கூடையின் வாய்க்கட்டை அவிழ்த்து இட்டிலியை எடுத்துக் கொடுக்கப்போனார்.

``இந்தப் பயகிட்ட நான் பிச்சை வாங்கித் திங்கவா?” என்று வீறாப்புடன் சொல்லிக்கொண்டு தமது முழுப் பலத்தையும் பிரயோகித்துப் பிள்ளைமீது மறுமுறையும் மறுமுறையும் பாய்ந்தார், தேவர். பாய்ந்த வேகத்திலேயே அடி வயிற்றில் ஒரு பலமான குத்து வாங்கிக்கொண்டு கீழே விழுந்தார். உடம்பில் மூலைக்கு மூலை பரல் கற்கள் குத்தின. திரும்ப எழுந்து சண்டை போடுவதற்குத் தேவரிடம் சக்தி இல்லை.

அப்போது முருகேசம் பிள்ளை, ``உம்மை விருதாவாக் கொலைப் பண்ணிட்டுத் தூக்குமேடையில் ஏறுவானேன்னு பாக்கிறேன். இல்லேன்னா, நடக்கிற கதை வேறே” என்று கடைசி உறுமலாக உறுமிவிட்டுப் போய்விட்டார்.

அடிபட்டுக் கிடந்த மாடசாமித் தேவருக்கு, என்னென்னவோ பயங்களெல்லாம் வந்து உள்ளத்தில் புகுந்து கொண்டன. முருகேசம் பிள்ளை ஊருக்குள் போய் நடந்த சங்கதியைச் சொன்னால்...? வீரப்பத் தேவரின் பேரன் வழிப்பறியடித்துப் பசி தீர்க்க முயன்றதாகக் கதை கட்டினால்…? பிறகு, போலீஸ்காரர்கள் வந்து தம்மை ஊரார் முன்னிலையில் கைதியாகக் கூட்டிக்கொண்டு போனால்...?

அவர் தம்முடைய பயங்களை ஒருவழியாக உதறுவதற்கு வெகு நேரம் ஆயிற்று.

`இனி என்ன கஷ்ட வந்தாலும் வரட்டும். என்னதான் வந்துவிடும்? தலைக்கு மிஞ்சின ஆக்கினையா? கோவணத்துக்கு மிஞ்சின தரித்திரமா? இந்த அற்பப் பயல் யாசகமாகக் கொடுத்த இட்டிலியை வாங்கி நாய்த் தீனி தின்னாமல் இருந்தோமே, இந்தக் கடும்பசியிலும் – அது போதும்; மற்றக் கேவலம் எது வந்தாலும் வரட்டும்’ என்று தமக்குத்தாமே ஆறுதல் தேடிக்கொண்டு தள்ளாடித் தள்ளாடி வீட்டை நோக்கி நடந்து வந்தார் மாடசாமித் தேவர்.

- தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு