Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

படம்: சி.சுரேஷ்பாபு

சொல்வனம்

கடவுச்சொற்களின் காலம் 

கடவுச்சொற்களின் காலமிது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கணவனுக்கு ஒரு கடவுச்சொல்.

மனைவிக்கு ஒரு கடவுச்சொல்.

கதவைத் திறந்திட ஒரு கடவுச்சொல்

மூடிவிட ஒரு கடவுச்சொல்.

’அண்டாகா கசம்... அபூகா ஹுக்கும்’

கடவுச்சொல்லை அப்போதே

கண்டுபிடித்தவர்கள்

ஒரு சொல் மாறினால்

உனது வழிகள் மறக்கடிக்கப்படலாம்

உனது தலை துண்டிக்கப்படலாம்.

திரும்பிச் செல்ல நாடற்ற

வனாந்திரியாகலாம் நீ.

தான் மறந்துபோன ஒரு

கடவுச்சொல்லை எங்கு தேடவேண்டுமென

தெரியாது துழாவுகிறாள் ஒருத்தி.

தொலைந்துபோன கடவுச்சொற்களால்

நிரம்பித் தளும்புகிறது இந்நகரம்.

கடவுச்சொற்களுக்குப் போலிகள் இல்லை

கள்ளச்சொற்களை அவை

புறந்தள்ளிவிடுகின்றன.

யூகிக்க முடியாத கடவுச்சொற்களுக்காக

மனதின் மூலைகளைத் தூசித் தட்டுகிறோம்.

ஒரு நாளின் தொடக்கமும் முடிவும்

கடவுச்சொற்களால் தீர்மானிக்கப்படுகின்றன.

கடவுச்சொற்களுள் கட்டுண்டுக்கிடக்கிறது வாழ்க்கை.

 - நர்மதா குப்புசாமி

குள்ளக்குள்ள வாத்து

குவாகுவா வாத்து...

சா... பூ... திரி...

கைநீட்டச் சொல்கிறது குழந்தை

பொம்மையிடம்.

**

கதையைக் கவனமாகக் கேட்ட

குழந்தை

அதைவிடக் கவனமாய்ச்

சொல்லிக்கொண்டிருக்கிறது

பொம்மையிடம்.

**

பான் ஒன் ஸ்டெப்

ஹார்ஸ் எல் ஸ்டெப்

பிஷப் க்ராஸ் ஸ்டெப்

எலிபேன்ட் ஸ்ரெய்ட் அண்ட் சைட் ஸ்டெப்

குயின் ஸ்ரெய்ட் சைட் அண்ட் கிராஸ் ஸ்டெப்

கிங் ஒன்லி ஒன் ஸ்டெப்...

செஸ்போர்டை விரித்து ஸ்டெப்ஸ்டெப்பாய்க்

கற்றுத்தருகிறது குழந்தை

பொம்மைக்கு.

**

’குள்ளக்குள்ள வாத்து

குவாகுவா வாத்து...’

எளிமையான பாடல்தானே

இதைச் சொல்ல மாட்டாயா

கோபிக்கிறது குழந்தை

பொம்மையிடம்.

**

டாம் அண்ட் ஜெர்ரி

பார்த்துக்கொண்டிருந்த குழந்தை

நீரருந்தச் சென்றது

இடைப்பட்ட நேரத்தில்

’என்ன நடந்தது?’ எனக் கேட்கிறது

பொம்மையிடம்.

**

எங்கு சென்றாலும்

பொம்மையைத் தன்னுடனே

அழைத்துச் செல்லும் குழந்தை

காரிலேவிட்டுச் செல்கிறது

மருத்துவமனைக்கு.

 - துரை.நந்தகுமார் 

ஒரு கிராமத்தின் சித்திரம்

பறவைகள் அமர்ந்த மரங்கள்

நாரைகள் அலையும் நதி

ஏர் பூட்டி உழும் சம்சாரி

கூட்டமாய் ஆடுகள்

கூடவே கீதாரி

கனைத்தபடி புரவிகள்

கை அரிவாளுடன் காவல்தெய்வம்

உருமா கட்டிய மனிதர்கள்

உலக்கை பிடித்த மனுஷிகள்

திண்ணை வைத்த வீடு

திருகை அருகே கிழவி

வாசலில் நாய்

மதில் மேல் பூனை

கூரை மீது சேவல்

குஞ்சுகளோடு  கோழி

தவளைக்கல் சிறுமிகள்

தாயமாடும் குமரிகள்

பச்சைக்குதிரை சிறுவர்கள்

மாடு பிடிக்கும் மைனர்கள்...

அழியாதிருக்கட்டும்

மாநகரச் சுவர்களிலாவது.

 - ஸ்ரீதர்பாரதி 

பொன் அந்தி நிறப் பழம்

சீமைக்கொன்றை நிழல் தரும்

அகன்ற வீதியில் காதலியுடன்

நடக்கிறான் இளவல்

மஞ்சள் பூக்களின் மீது பாதம் படாமல்

தடுமாறி நடக்கிறாள் அவள்

எலுமிச்சை சாறு வேண்டுமென

சிணுங்கிக்கேட்டுக் குடிக்கிறாள்

சீராக அடுக்கப்பட்ட பழக்கடையின் முன்

அவளை நிறுத்துகிறான் இளவல்

மாதுளைக்கு ஒரு விலை

மாம்பழத்துக்கு ஒரு விலை

ஆப்பிளுக்கு ஒரு விலை

ஏனென்று அவளுக்கு விளங்கவே இல்லை

எல்லாவற்றுக்கும் பேரம் பேச

இளவலுக்கு உத்தரவிடுகிறாள்

எதுவும் பேசாமல்

ஒரு மாசற்ற சீமை ஆரஞ்சுப்பழத்தை

மட்டும் கையிலேந்தி

பொன் அந்தி நிறத்தில் சிரிக்கிறாள்.

 - சச்சின்