Published:Updated:

கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரம்

கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரம்
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரம்

சிறுகதை:எஸ்.ராமகிருஷ்ணன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரம்

``சார், சொல்லச் சொல்லக் கேட்காம வெளியே அருணகிரி உங்க காரைக் கழுவிக்கிட்டு இருக்காரு. என்ன செய்றதுனு தெரியலை’’ என்றான் உதவி இயக்குநர் ஸ்ரீ.

மகேந்திர குமாருக்கு ஆத்திரமாக வந்தது.

``அந்த ஆள் என்ன எழவுக்கு இங்கே வந்து உசுரை எடுக்கிறான். அவனை யாரு கார் கழுவச் சொன்னது?’’ எனக் கத்தினான்.

``ஆளு செம போதை. சட்டைகூடப் போடலை. வெறும் பனியனோட வந்திருக்கார்’’ என்றான் சேகர்.

``இருக்கிற இம்சை போதாதுனு இது வேறயா?’’ - சலிப்புடன் அறைக் கதவைத் திறந்து படி இறங்கி கிழே வரத் தொடங்கினான் மகேந்திர குமார்.

அவன் தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து ஆறு வெற்றிப் படங்களைத் தந்த உச்ச இயக்குநர். கீழே அவனது காரைத் துடைத்துக்கொண்டிருந்தவர், புகழ்பெற்ற பல படங்களை எடுத்த பிரபல தயாரிப்பாளர் அருணகிரி.

வாசலில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, கிழிந்த துணியை பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில் நனைத்து, காரைத் துடைத்துக்கொண்டிருந்தார் அருணகிரி.

குமார் அருகில் வந்து நின்று கோபத்துடன் சொன்னான்... ``அண்ணே, நீங்க எதுக்கு இதெல்லாம் செஞ்சிக்கிட்டு? முதல்ல துணியைக் கீழே போடுங்க...’’

அவன் முறைத்தபடியே நிற்பதைக் கண்டுகொள்ளாமல் அருணகிரி சொன்னார்... ``ரெண்டு கோடி ரூபா போட்டு வாங்கின கார் குமாரு. ரோட்ல வரும்போது சகதி அடிச்சிருக்கு. பணம் என்ன சும்மாவா வருது? நாம என்ன காரு வெச்சிருக்கோம் கிறதை வெச்சுத்தானே நம்ம பொழப்பு எப்படி இருக்குனு தெரியும். நான் இண்டஸ்ட்ரிக்கு வந்த புதுசுல அம்பாசிடர் வெச்சிருந்தேன். அப்புறம் பத்மினி, மாருதி- 800னு ரெண்டு காரு. கடைசியா டாடா சுமோ. எல்லாம் போச்சு. அதை விடு கழுதை. நான் சம்பாதிச்சு வாங்கினதை நானே அழிச்சுட்டேன். இப்போ நடராஜா நடனு, கால் தேய நடந்துக்கிட்டு இருக்கேன். கால் ரெண்டும்தான் நிரந்தரம்.’’

``கார் துடைக்க ஆள் இருக்காங்க. நீங்க பக்கெட்டைக் கீழே வைங்க’’ என்றான் குமார்.

``ஏன் குமாரு, நான் செய்யக் கூடாதா... என்னடா, பெரிய புரடியூஸர் காரைத் துடைச்சுக்கிட்டு இருக்கானேனு பார்க்கிறியா? இது நானா ஆசைப்பட்டுச் செய்றது. கஷ்டத்துல மாட்டிக்கிட்டு முழிக்கிறப்போ, கடன் கேட்டு ஒருத்தன்கிட்ட போனேன். அவன் நம்ம கம்பெனி படத்துல நடிச்சிருக்கான். சைடு ரோல் பண்ணுவான். அப்புறம் பெரிய ஆள் ஆகிட்டான். அவன் என்ன செய்யச் சொன்னான் தெரியுமா? ஷூ போட்டுவிடச் சொன்னான். அவன் காலை நக்கித்தான் காசு வாங்கிட்டு வந்தேன். அவமானத்துக்குப் பயந்தா, என்னைக்கோ செத்திருப்பேன். ஆனா, அப்படி சாக மாட்டேன். இன்னொரு படம் எடுப்பேன். `பென்ஹர்’ மாதிரி என்னைக்கும் ஜனங்க அதைப் பத்தி பேசிட்டிருப்பாங்க பாரு... என்ன லைன் தெரியுமா?’’

``அண்ணே ரூமுக்கு வாங்க... அதெல்லாம் பிறகு பேசிக்கலாம்.’’

``நீ வேலையா இருப்பே. நான் தொந்தரவு குடுக்க விரும்பலை. நம்ம பாஸ்கரை வெச்சு படம் பண்றப்போ, அவரு என்னையும் டிஸ்கஷன் ரூம்ல உட்காரவெச்சுடுவாரு. ஒவ்வொரு சீன் சொல்லி முடிச்சதும் `எப்படி இருக்குண்ணே?'னு அபிப்பிராயம் கேப்பாரு. நான் மனசுல பட்டதைச் சொல்வேன். `உங்களுக்கு நல்ல ஸ்டோரி நாலெட்ஜ் இருக்கு'னு பாராட்டுவாரு. அப்போ எல்லாம் புரடியூஸர்னா, ஒரு மரியாதை இருந்தது. ஆனா, அந்தத் திருட்டுப்பய மார்த்தாண்டனை வெச்சு படம் பண்ணேன்ல, அவன் என்கிட்ட ஒரு கதை சொன்னான். ஆனா, எடுத்தது வேற படம். அது ஒரு ஷோகூட ஓடலை. ஊத்தி மூடிக்கிச்சு. அந்தப் பய ஆபீஸ் ரூமுக்குள்ளே என்னை விடவே மாட்டான். நான் எடிட்டிங்ல ஒரு பாட்டைப் பார்த்துட்டேன்னு என்னா கத்து கத்தினான். இப்போ என்ன ஆனான்? ஈரோட்டுல கோழிப்பண்ணை வெச்சிக்கிட்டு இருக்கான். இதான் சினிமா.

நீ உன் வேலையைப் பாரு கண்ணு. நான் இருக்கேன்.''

சவரம் செய்யப்படாமல் நரைத்துப்போன தாடி உள்ள முகம். ஆள் மெலிந்து ஒடுங்கிப் போயிருந்தார். `ஒருகாலத்தில் கழுத்தில் பட்டையான தங்க செயின், கையில் பவழ மோதிரம். ட்ரிபிள் ஃபைவ் சிகரெட் சகிதமாகப் பார்த்த மனிதரா இவர்?' என்ற யோசனையுடன் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவர் அழுக்குத்தண்ணியைக் கொண்டுபோய் தொட்டிச்செடிகளுக்கு ஊற்றிக்கொண்டிருந்தார். அவருக்கு ஏதாவது வேலைகொடுத்து வெளியே அனுப்பிவைக்காவிட்டால், வேண்டாத வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்துவிடுவார். அதை நினைத்து குமாருக்குக் குழப்பமாக இருந்தது.

மேனேஜர் சீனிவாசனை அழைத்தான்.

``சீனி... நீங்க காஞ்சிபுரம் கோயிலுக்குப் போய் `பெர்மிஷன் விஷயம் என்னாச்சு?'னு கேட்டுட்டு வந்திருங்க. கூட அண்ணனும் வருவார்.

ஈ.ஓ-கிட்ட இவர் பேசினா முடிஞ்சிடும். முதல்ல காஸ்ட்யூம்ல சொல்லி அவருக்கு ஒரு நல்ல சட்டை-வேஷ்டி கொடுங்க.''

அருணகிரி, ஈரக்கையை வேஷ்டியில் துடைத்தபடியே சொன்னார், ``கோயில்ல பெர்மிஷன் வாங்குறது எல்லாம் சப்பை மேட்டர் குமாரு. நானே நாலு படம் அங்கே ஷூட் பண்ணியிருக்கேன். நம்ம பைய ஒருத்தன் அங்கே இருப்பான். பேரு துரைக்கண்ணுனு நினைக்கேன். கூடபோய், முடிச்சுட்டு வந்திடுறேன். என்னைக்கு ஷூட்டிங்... எத்தனை நாள் பெர்மிஷன் வாங்கணும்?''

``பதினெட்டு நைட் மட்டும்'' என்றான் மகேந்திர குமார்.

``நான் பார்த்துக்கிடுறேன். நீ உன் வேலையைப் பாரு'' என அவர் காஸ்ட்யூம் வைத்துள்ள அறையை நோக்கி நடந்தார். அவர்கள் கிளம்பி காரில் போகும் வரை, கீழேயே நின்றிருந்தான் குமார்.
அருணகிரி இப்படி திடீரென வந்து ஏதாவது ஒரு பிரச்னையை உருவாக்கிவிடுவார். ஏதாவது செய்துதான் அவரைச் சமாளிக்க வேண்டும். அவரைக் கோபித்துக்கொள்ள முடியாது, அவருக்கு, குமார் நிறையக் கடமைப்பட்டிருந்தான். அது லேசில் தீர்ந்துவிடும் விஷயம் அல்ல.

சினிமா எடுத்துத் தோற்றுப்போன பிறகு, அருணகிரி நாள் முழுவதும் குடித்துக்கொண்டே இருந்தார். சினிமாவில் ஏதாவது செய்துகொண்டே இருக்க ஆசைப்பட்டார். ஆனால், அவரை யாராலும் சகித்துப்போக முடியவில்லை. அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் குடியில் சரணடைந்திருந்தார்.

அவர் உருவாக்கிய இயக்குநர்கள், நடிகர்கள், கேமராமேன், மேனேஜர், துணை நடிகர்கள்... என ஒருவர் பாக்கி இல்லாமல் சண்டை போட்டுவிட்டார். யாரையும் ஒருமையில்தான் பேசுவார். சில நேரம் ஆத்திரத்தில் அடித்தும் விடுவார். இதனால் நான்கைந்து முறை அவர் மீது போலீஸ் கேஸ் ஆகியிருக்கிறது. ஒருமுறை மகேந்திர குமார்தான் அவரை வெளியே கொண்டுவந்தான். போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நல்ல அடி அடித்திருந்தார்கள். கால்களை, தரையில் ஊன்ற முடியவில்லை. வலியோடு இழுத்து இழுத்து நடந்து வந்து காரில் ஏறும்போது சொன்னார், `ஜெயில் வெச்சு நல்ல சப்ஜெக்ட் ஒண்ணு மனசுல தோணுச்சு. ஹாலிவுட் படம் மாதிரி பெரிய செட் போட்டு எடுத்தா, சூப்பரா ஓடும். `தி கிரேட் எஸ்கேப்' பார்த்திருக்கேல்ல?'

அதைக் கேட்டதும் மகேந்திர குமாருக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. இவ்வளவு அடிவாங்கியும் சினிமாவைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்க முடியுமா என்ன?

அருணகிரியின் மனைவி, பிள்ளைகள் அதே ஊரில்தான் இருந்தார்கள். சினிமாவில் அவர் தோல்வியடைந்து வீடும் சொத்துக்களும் பறிபோனதும், அவர்கள் சண்டையிட்டு வெளியேறிவிட்டார்கள். அவரும் குடும்பத்தைத் தேடிப்போகவில்லை. அவரது அலுவலகத்தில் எடுபிடியாக வேலைசெய்த ஒருவரின் அறையில் தங்கிக்கொண்டிருந்தார். அங்கு உள்ள டி.வி-யில் சில நேரம் அருணகிரி தயாரித்த திரைப்படம் ஓடுவதைக் காணும்போது, அவரை அறியாமல் கண்ணீர் வந்துவிடும்.

அந்தப் படத்தை எப்படி எடுத்தோம், என்ன நடந்தது என்பதைப் பற்றி பேசியே ஆகவேண்டும் என்ற வெறி ஏற்படும். இதனால் சம்பந்தம் இல்லாத ஆளிடம்கூடப் பேசத் தொடங்கிவிடுவார். அத்துடன் அன்றைக்கு ஒருநாள் முழுவதும் அவரால் நிம்மதியாக இருக்க முடியாது. எப்படியாவது எவரையாவது நச்சரித்து காசு வாங்கிக் குடித்துவிட்டு, தேவை இல்லாத சண்டை இழுத்துவிடுவார். அந்தச் சண்டைதான் அவரை ஆறுதல்படுத்தியது.

கடந்தகால நினைவுகள் அவரைத் துன்புறுத்தின. இதனாலேயே அவர் பழைய ஆட்களை வழியில் பார்த்தால்கூட ஒளிந்து கொண்டுவிடுவார்.

அவர் மகேந்திர குமாரை வைத்து படம் எடுக்கவில்லை. ஆனால், அவர் தயாரித்த ஒரு படத்தில் குமார் உதவி இயக்குநராகப் பணியாற்றினான். அந்தப் படப்பிடிப்பு நாட்களில் அவரோடு மிக நெருக்கமாகப் பழகினான். இருவரும் ஒன்றாகக் குடிப்பார்கள்; சாப்பிடுவார்கள். புதுப்படங்களின் ப்ரீவ்யூவுக்கு மறக்காமல் உடன் அழைத்துப்போவார். புத்தூர் சாமியாரை ரகசியமாகச் சந்திக்கப் போகும்போது கூட அவனை உடன் அழைத்துப்போயிருக்கிறார்.

தீபாவளிக்கு அவனுக்குப் புத்தாடைகள் வாங்கித் தருவதோடு, ஒரு கவரில் பத்தாயிரம் ரூபாய் போட்டுத் தருவதை வழக்கமாக வைத்திருந்தார். மஞ்சள்காமாலை வந்து ஊரில் படுத்துக்கிடந்தபோது, அவனது கிராமத்தைத் தேடிப்போய் இரண்டு கூடைப் பழங்களைத் தந்ததோடு ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்து `இவனைவெச்சு நான் படம் பண்ணப்போறேன்' என அப்பாவிடம் சொல்லி சந்தோஷப்படுத்தினார்.

இன்னொரு முறை அவரது அலுவலகத்தில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடக்கப்போகிறது எனக் கேள்விப்பட்டு, நான்கு சூட்கேஸ் நிறையப் பணத்தை அடைத்து மேன்ஷனில் இருந்த அவனது அறையில் கொண்டுவந்து வைத்துப் போனார். பிரச்னை தீர்ந்த பிறகு ஒருநாள் அந்தப் பணத்தைத் திரும்ப எடுத்துப்போக வந்தவர் வியப்போடு சொன்னார், `நீ ரொம்ப நல்லவன் குமாரு. வேற ஆளா இருந்தா, இந்நேரம் பணத்தோட ஓடிப்போயிருப்பான். அவனை நான் என்ன செய்ய முடியும்... அவ்வளவும் பிளாக் மணி.'

குமார் அதைக் கேட்டுச் சிரித்தான். அருணகிரி அவனது தோளில் தட்டியபடியே சொன்னார், ``நாம படம் பண்ணுவோம். நீ கதை ரெடி பண்ணு. எத்தனை கோடி செலவு ஆனாலும் நான் செய்றேன். நீ என் பிள்ளை மாதிரிடா!'’

அவர் சொன்னது உண்மை, மகனைப் போலதான் அவனை நடத்தினார். அருணகிரி தயாரித்த ஐந்து படங்கள் பெரும் வெற்றி பெற்றன. ஆனால், அடுத்தடுத்து மூன்று பெரிய படங்கள் தோற்றுப்போய் கடனாளியாகி வீட்டையும் அலுவலகத்தையும் விற்கும் நிலை ஏற்பட்டது. கோர்ட் கேஸ் பிரச்னை என ஆள் நொடித்துப்போனார்.

அப்போது ஒருநாள், மகேந்திர குமார் அவரை ஏவி.எம் செட்டில் வைத்துப் பார்த்தான். படத்தின் நாயகன் தர்மாவைப் பார்ப்பதற்காக வந்துள்ளதாகச் சொன்னார்.

அழைத்துக்கொண்டுபோய், காபி வாங்கி கொடுத்தான். அதைக் குடித்தபடியே சொன்னார், ``சினிமா ஒரு சூதுடா குமாரு. பணம் போகும்... வரும். ஆனா, ஆட்டத்தைவிட்டுப் போயிரக் கூடாது. நான் ஆடிக்கிட்டேதான் இருப்பேன். இப்போ புதுப்பசங்களைவெச்சு ஒரு படம் பண்ணப்போறேன். கே.வி.என்-தான் டைரக்டர். எனக்காகப் பண்ணித்தர்றேன்னு சொல்லியிருக்கார். இதுல ஒரு கெஸ்ட்ரோல் இருக்கு. நம்ம தர்மா நடிச்சா நல்லா இருக்கும்னு கேட்க வந்தேன். தர்மா இப்போ பெரிய ஸ்டார்ல. அதான் மீட் பண்ண முடியலை.''

படப்பிடிப்பின் நடுவில் தர்மாவிடம் போய், ``அருணகிரி சார், உங்களைப் பார்க்க வெயிட் பண்றார். அவரு பெரிய புரடியூஸர்’' என்றான் குமார்.

``அந்த ஆளைப் பற்றி நல்லா தெரியும். துரத்தி அனுப்பு’' என்றபடியே தர்மா சிகரெட் புகைக்க ஆரம்பித்தான்.

குமார் அதை எப்படிச் சொல்வது எனப் புரியாமல், அருணகிரியிடம் `` `அடுத்த வாரம் பார்க்கிறேன்'னு சொல்லியிருக்கார்’' என்றான்.

``உனக்கு ஒரு விஷயம் தெரியுமா குமாரு? தர்மாவுக்குக் கல்யாணம் பண்ணிவெச்சதே நான்தான். நம்ம ஆபீஸ்லதான் கல்யாணம் நடந்துச்சு. பத்து நாளுக்குப் பிறகுதான் ஊர் அறிய கோயில்ல கல்யாணம். சொன்னா சிரிப்பே, என் ரூம்லதான் அவன் ஃபர்ஸ்ட் நைட். இதை எல்லாம் வெளியே சொல்ல முடியுமா?'’ எனச் சிரித்தார் அருணகிரி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரம்

குமாருக்கு அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவர் கிளம்பும்போது சொன்னார், ``குமாரு... என் படம் ஜெயிச்சுட்டா, அடுத்து உன் படம்தான். நீயும் எத்தனை படத்துக்குத்தான் இப்படி ரைட்டிங் பேடைத் தூக்கிட்டு ஓடிக்கிட்டிருப்பே? நீ சினிமாவுக்கு வந்து எத்தனை வருஷமாச்சு?'’

``ஒன்பது'' என்றான் குமார்.

``நாம படம் பண்றோம். நல்ல வில்லேஜ் சப்ஜெக்ட் பண்ணு. அதான் வந்து நாள் ஆகுது'' என்றபடியே வெளியே நடந்துபோக ஆரம்பித்தார். அப்போதுதான் கவனித்தான் அருணகிரி காலில் செருப்பு இல்லாததை.

`இப்படி ஒரு மனிதர் கனவிலே மிதந்துகொண்டிருக்கிறாரே, தனது சொத்து, வீடு, கார் எல்லாமும் பறிபோனாலும் சினிமா பித்து தெளியாதுதானா?' - குமாருக்கு அவரைப் பற்றி நினைக்கும்போது வருத்தமாக இருந்தது.

அதன் பின் ஆறு மாதங்களுக்குப் பிறகு, முதல் படம் பண்ணுவதற்காக ராம்பாபு கம்பெனியில் கமிட் ஆகி ஆபீஸ் போட்டிருந்தான் குமார்.

ஒருநாள் இரவில் அருணகிரி வந்திருந்தார். அவருடன் இருபது வயதுப் பையன் ஒருத்தனும் உடன் வந்திருந்தான். உதவியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த குமார், அறைக்கதவை யாரோ பலமாக எத்தி உள்ளே நுழைவதைக் கண்டு திகைத்துப்போய் திரும்பிப் பார்த்தான்.

பாதி வேஷ்டி அவிழ்ந்த நிலையில் அருணகிரி நின்றிருந்தார்.

``நீ அவ்வளவு பெரிய ஆள் ஆகிட்டியா குமாரு? படம் கமிட் ஆகி ஆபீஸ் போட்டா, என்கிட்ட சொல்ல மாட்டியாடா?''

``இல்லைண்ணே, பூஜைக்குச் சொல்லிக்கிடலாம்னு இருந்தேன்.''

``மயிரு பூஜை. நீ என் புள்ளைடா.

நீ என்னை ஒதுக்கிவைக்கிறது வலிக்குதுடா. வேணும்னா என்னை நாலு தடவை செருப்பாலே அடிச்சிக்கோ. ஆனா, என்னை அவாய்ட் பண்ணாதேடா.''

``அப்படி நினைக்கலைண்ணே.''

``அதெல்லாம் பொய். நீயும் என்னை `குடிக்கார நாய்'னுதானே நினைச்சிருக்கே? நான் உன்கிட்ட அப்படியா பழகினேன்? சொல்றா.''

``தப்புதான்ணே மன்னிச்சுடுங்க'' எனத் தழுதழுத்தக் குரலில் சொன்னான்.

உடனே, அவனைக் கட்டி அணைத்தபடியே அருணகிரி சொன்னார், ``எனக்கு உன் மனசு தெரியும்டா குமாரு. நான்தான் ஆத்திரத்துல கோபப்பட்டுப் பேசிட்டேன். ஸாரிடா!''

குமார் நெகிழ்ந்துபோனவனாக அவரை தன் நாற்காலியில் இழுத்துக்கொண்டுபோய் உட்காரவைத்தான். சுழல் நாற்காலியில் சுற்றியபடியே அங்கு இருந்த உதவியாளர்களைப் பார்த்துச் சிரித்தார். பின்பக்க சுவரில் மாட்டப்பட்டிருந்த சாய்பாபா படத்தை வணங்கிக்கொண்டார். பிறகு, மேஜையில் தாளம் போட்டபடியே ``பசிக்குதுடா. புகாரியில இருந்து பிரியாணி வாங்கிட்டு வரச் சொல்லு'' என்றார்.

அவருடன் வந்திருந்த பையன், கூச்சத்துடன் ஓரமாக நின்றுகொண்டிருந்தான். அவனைக் காட்டி, ``இது மகேஷ். பெரம்பூர்ல இருக்கான். அப்பா ஐ.சி.எஃப்ல வேலைபார்க்கிறார். நல்லா ஆக்ட் பண்ணுவான். இவனை ஹீரோவா வெச்சு ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன். அதான் எப்பவும் என்கூடவே இருக்கான். இவன் பைக்லதான் வந்தேன்'' என்றார்.

அந்தப் பையன், குமாரைக் கையெடுத்து வணங்கினான். குமார் தனது பர்ஸில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து பிரியாணி வாங்க ஆளை அனுப்பினான். அன்றைக்கு விடியும் வரை அருணகிரி அவனது அறையில் இருந்தார். அவனது படத்தின் கதையைக் கேட்டார். திருத்தங்கள் சொன்னார். பாடல்கள் எப்படி வரவேண்டும் என ஆலோசனை சொன்னார். நடிகர்-நடிகைகள் பற்றி கதைகதையாகச் சொன்னார். உதவியாளர்கள் அனைவரும் உறங்கியிருந்தார்கள். குமாரும் அவரும் மட்டும் பாதி இருளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். திடீரெனப் பேச்சற்றுபோய், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே இருந்தார்கள். அந்த நிமிடத்தில் குமாருக்கு அவர் மீது பேரன்பு ஏற்பட்டது.

புலரியின் வெளிச்சம் படரும்போது அவர் கிளம்பினார். அந்தப் பையன் பைக்கில் பின்னால் ஏறி உட்கார்ந்தபடியே சொன்னார், ``நீ ஜெயிச்சா. நான் ஜெயிச்ச மாதிரி குமாரு. நீ ஜெயிப்பே!''

அந்தப் படம் தொடங்கப்படவே இல்லை. பூஜை போட்டு பேப்பரில் விளம்பரம் கொடுத்ததோடு நின்றுபோனது. அந்தக் கதையை அவன் பயன்படுத்தக் கூடாது என தயாரிப்பாளர் எழுதி வாங்கிக் கொண்டார். மகேந்திர குமார் உடைந்துபோனான். யாரையும் பார்க்கப் பிடிக்கவில்லை. கோடம்பாக்கம் சாலை வெறுப்பூட்டியது. நாக்கில் படிந்த கசப்பு மாறவே இல்லை. தோல்வியின் உக்கிரம் விஷம்போல அவனை முடக்கியது. பகல் முழுவதும் குடித்துக்கொண்டே இருந்தான். ஆறு மாதங்கள் யாரையும் பார்க்கவே இல்லை. குடி, புலம்பல், அழுகை, கோபம், வெறுப்பு எனக் கழிந்தது.

ஒருநாள் வடபழநியில் உள்ள ஒயின்ஷாப்பில் குடித்துக்கொண்டிருந்தபோது அவன் முதுகில் யாரோ கை வைப்பதுபோல் இருந்தது.

கையில் பிளாஸ்டிக் டம்ளருடன் அருணகிரி நின்றிருந்தார். அவனைப் பார்த்து முறைத்தபடியே கேட்டார், ``என்னடா குமாரு. இப்படி ஆகிட்டே!''

``ஒண்ணுமில்லைண்ணே.''

``எனக்கு எல்லாம் தெரியும். அந்த நாயி படம் பண்ணாமப்போனா வேற ஆள் இல்லையா? அதுக்காகவா இப்படி தாடி வளர்த்துக்கிட்டு, கண்ணு டொக்கு விழுந்துபோய் கிடப்பே? உன்னை இப்படிப் பார்க்க மனசு கேட்கலைடா தம்பி'' என்றார்.

``நான் நல்லாதாண்ணே இருக்கேன். புதுக்கதை பண்ணிட்டிருக்கேன்'' என்றான் குமார்.

``பொய் சொல்லாதடா. உன் முகரையைப் பார்த்தா தெரியுதே. இந்த ராம்பாபுவை நம்பியா நீ சினிமாவுக்கு வந்தே. அவன் கிடக்குறான் விடு. புது புரடியூஸர்கிட்ட நான் கூட்டிக்கிட்டுப் போறன். அண்ணனுக்கு டைம் சரியில்லை, கை ஒடிஞ்சுபோய் கிடக்கேன். இல்லை... நானே உன்னை கமிட் பண்ணி உடனே படத்தை ஆரம்பிச்சிருவேன்.''

அதைக் கேட்டு குமார் அழுதான். அவர் கட்டியணைத்துக்கொண்டு ஆறுதல் சொன்னார்.

``குமாரு. நான் தோத்துப்போயிருக்கலாம். ஆனா, நான் நம்பின ஒருத்தன்கூடத் தோக்கலை, எல்லா பயலுகளும் சினிமாவுல பெரிய இடத்துல இருக்காங்க. நீயும் அப்படி இருப்பே. இது சத்தியம்டா.''
இருவரும் சேர்ந்து குடித்தார்கள். சொன்னதுபோலவே ஆறு மாத காலத்துக்கு அருணகிரி அவனை நான்கைந்து கம்பெனிகளுக்கு அழைத்துப்போனார். ஒருவரும் கதை கேட்கக்கூட விரும்பவில்லை. முடிவில் ஒருநாள் அவனிடம் சொன்னார், ``என் மேல இருக்கிற கோபத்துல உனக்கு ஒரு பயலும் படம் குடுக்க மாட்டேங்குறான். நீ தனியா ட்ரை பண்ணு. எப்படியாவது படம் கமிட் ஆகிடும். நீ படம் பண்ணணும் அதான் அண்ணன் ஆசை.''

முடிவில் அப்படித்தான் நடந்தது. கொல்லிமலைக்குப் போய் நான்கு மாதம் தனியே சுற்றியலைந்து, புதுக்கதையை எழுதி முடித்து விட்டு வந்தான். ஜெயிக்க வேண்டும்... ஜெயிக்க வேண்டும் என்ற இரண்டே வார்த்தைகள் மட்டுமே அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. புது கம்பெனி ஒன்று, அவனது படத்தைத் தொடங்கியது.

மனதுக்குள் எடுத்து முடித்த படத்தை, அறுபதே நாட்களில் கச்சிதமாக எடுத்து முடித்திருந்தான். படம் ரிலீஸ் ஆவதற்கு ஒரு வாரம் முன்னர் தயாரிப்பாளருக்கும் அவனுக்கும் பிரச்னையானது. அது சம்பளப்பாக்கி கேட்க போனபோது தொடங்கியது. தயாரிப்பாளர் ஷான், அவனை செருப்பை எடுத்து அடிக்கப் பாய்ந்தார். குமாரும் கெட்டவார்த்தைகளில் திட்டினான். அந்த வெள்ளிக்கிழமை அவனது படம் வெளியாகாது என்ற நிலை ஏற்பட்டது.

வியாழக்கிழமை மாலை, அருணகிரி தற்செயலாக அவனைத் தேடிவந்திருந்தார். அவர் கோபம் உச்சத்தில் இருந்தது.

``நீ என்கூட வா'' என அவனை அழைத்துக் கொண்டு, ஷானைப் பார்க்கப்போனார். அவரது கோபத்தைக் கண்டபோது ஷானை அடித்துக் கொன்றுவிடுவாரோ எனப் பயமாக இருந்தது. ஆனால், அலுவலகத்துக்குப் போனதும் எதிர்பாராதவிதமாக ஷானின் காலில் நெடும்சாண்கிடையாக விழுந்து, ``இவன் படத்தை ரிலீஸ் பண்ணீருங்க. இல்லை...  செத்துப்போயிருவான்'' என, தழுதழுத்தக் குரலில் சொன்னார். அதை குமார் எதிர்பார்க்கவே இல்லை.

ஷான் திகைத்துப்போனவராக அருணகிரியை எழுப்பிவிட்டார். தயாரிப்பாளருடன் தனியே பேச இருப்பதாகச் சொல்லி, குமாரை வெளியே அனுப்பிவைத்தார் அருணகிரி. இரவு 2 மணிக்கு வெளியே வந்து, ``காலையில உன் படம் ரிலீஸ். வாடா போவோம்'' என்றார். அப்படியே நடந்தது.

உள்ளே என்ன பேசினார், படம் எப்படி வெளியானது என எதுவும் குமாருக்குத் தெரியாது. படத்தின் வெற்றியைக் கொண்டாடுவதற்காக அவர்கள் பாண்டிச்சேரிக்குப் போயிருந்தார்கள்.

கடற்கரையை ஒட்டிய விடுதியில் அறை எடுத்துக்கொண்டார்கள். கடற்கரை மணலில் உட்கார்ந்தபடியே டின்பியர் குடித்தார்கள். நிலா வெளிச்சம் மணலில் ஊர்ந்துகொண்டிருந்தது. அப்போது குமார் கேட்டான், ``நீங்க ஏன்ணே அந்த ஆள் கால்ல விழுந்தீங்க? அதை என்னால தாங்கிக்கிட முடியலை.''

``அதெல்லாம் நடிப்புடா குமாரு. எத்தனை படம் எடுத்திருக்கேன். எவ்வளவு பேர் நடிக்கிறதை பார்த்திருக்கேன். அதான் நானும் நடிச்சேன். நான் நல்லா நடிச்சேங்கிறதாலதான் உன் படம் ரிலீஸ் ஆகியிருச்சு.''

``நிஜமாவா..?'' எனக் கேட்டான் குமார்.

``உன் படத்துக்குக் கிடைச்ச முத அவார்டு என் நடிப்புக்குதான்'' எனச் சொல்லி, பலமாகச் சிரித்தார். மகேந்திர குமாரும் வெடித்துச் சிரித்தான். அவனது அடுத்த படத்தின்போது அவரைக் கூடவே வைத்துக்கொண்டான். அவருக்காக அலுவலகத்தில் ஓர் அறை ஒதுக்கிக் கொடுத்தான். தயாரிப்பில் அதிகம் உதவியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டான். அருணகிரியும் ஓடியோடி அவனுக்காக உதவிகள் செய்தார். படத்துக்காகப் பெற்ற முன்பணத்தில் ஒரு வீடு வாங்க வேண்டும் என அவனை வற்புறுத்தி, அவரே வீடு தேடி அலைந்து, ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்று படுக்கைகொண்ட வீட்டை வாங்கி, பத்திரப்பதிவும் செய்தார். அவனை திருப்பதி அழைத்துப்போய், சாமி கும்பிடவைத்தார். அவன் என்ன உடை அணிய வேண்டும், எந்த ஹோட்டலுக்குச் சாப்பிடப் போக வேண்டும் என்பது வரை தீர்மானித்தார்.

அவனது இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. அதற்கான முன்தயாரிப்பு பணிகளில் முழ்கியிருந்தான். ஒருநாள் அலுவலகத்தினுள் பலத்தக் கூச்சல் சத்தம் கேட்டது. யாரோ யாரையோ அடித்துக்கொண்டிருந்தார்கள். என்ன சண்டை என வெளியே வந்து பார்த்தபோது. அருணகிரி, கேஷியரை அடித்துக்கொண்டிருந்தார். அந்த ஆளும் அவரது சட்டையைப் பிடித்துக் கிழித்திருந்தான். அலுவலக ஆட்கள் சுற்றிலும் கூடியிருந்தார்கள். அருணகிரி கெட்டவார்த்தைகளில் கத்திக்கொண்டிருந்தார். குமார் அருகில் வந்தவுடன் அவர் எதுவும் நடக்காதவர்போல சுவரை நோக்கித் திரும்பிக்கொண்டார்.

கேஷியர் மட்டும் அழும் குரலில் சொன்னார், ``சார், இந்த ஆள் உங்க செக்புக்கை யூஸ் பண்ணி ஃப்ராடு பண்ணியிருக்கான். அதைக் கண்டுபிடிச்சு கேட்டா, அடிக்க வர்றான்.''

அருணகிரியிடம்தான் அவனது பேங்க் செக்புக், பீரோ சாவி உள்ளிட்ட அத்தனையும் இருந்தன. அவசரத் தேவைக்காக, பல செக்குகளில் அவன் கையெழுத்துப் போட்டும் வைத்திருந்தான். கேஷியர், பேங்க் பாஸ்புக்கைக் காட்டி பணம் எடுத்ததைப் பற்றி விளக்கிச் சொல்லிக்கொண்டிருந்தான்.

அதைக் கேட்டபடியே குமார், அருணகிரியின் கையைப் பிடித்து இழுத்துக் கேட்டான், ``அவர் சொல்றது எல்லாம் நிஜமா?''

அருணகிரி ஆத்திரத்துடன் சொன்னார்,  ``அது என் சம்பளம், எடுத்துக்கிட்டேன். உன் ஆபீஸ்ல ஓசியில என்ன மசித்துக்கு வேலைசெய்யணும்?''

குமாருக்கு ஆத்திரம் கொப்பளித்தது.

``நீங்க ஒண்ணும் இங்கே வேலைக்கு இல்லை. உங்களுக்கு பணம் வேணும்னா, என்கிட்ட கேட்கவேண்டியதுதானே!''

``ஏன், நீ பிச்சை போட்டு நாங்க வாங்கணுமா?''

``உங்களை நம்பினதுக்கு இதான் மரியாதையா?'' எனக் கேட்டான்.

``நான் ஒண்ணும் உன் பணத்தை ஏமாத்தலை. கைச்செலவுக்குக் கொஞ்சம் எடுத்துக்கிட்டேன். அவ்வளவுதான்.''

``அதைச் சொல்லிட்டு செஞ்சிருக்கலாம்ல?''

`` திருட்டுப்பயலைக் கேள்விகேட்கிற மாதிரி என்கொயரி பண்ணாதே குமாரு. உன் பிச்சைக் காசை ஒரு வாரத்துல மூஞ்சில வீசி எறிஞ்சுடுறேன் போதுமா!''

``ஒரு மயிரும் வேணாம். நீங்க கிளம்புங்க.''

உடனே அவர் தன் பாக்கெட்டில் வைத்திருந்த பீரோ சாவி, பேனா, சிட்டை எல்லாவற்றையும் தூக்கி எறிந்தார். பிறகு, வேஷ்டியை அவிழ்த்து உதறிக் காட்டினார்.

``நல்லா பார்த்துக்கோ. நான் ஒண்ணும் எடுத்துட்டுப் போகல.''

கேஷியர், அருணகிரி செலவு செய்த கணக்கு விவரங்களை ஒரு வெள்ளை பேப்பரில் எழுதித் தந்திருந்ததை குமார் பார்த்துக்கொண்டே இருந்தான். மூன்றரை லட்சம் ரூபாய் எடுத்திருக்கிறார். அது ஒன்றும் பெரிய பணம் இல்லை. ஆனால், ஏன் இப்படி நடந்துகொண்டார், அவருக்கு என்ன செலவு, இவ்வளவு நம்பிக்கையாக இருந்தவர் ஏன் மனம் மாறிப்போனார்? அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர் துரத்தப்பட்ட சில நாட்களில் இதுபோல பல்வேறு விஷயங்களில் அருணகிரி தவறாக நடந்துள்ளதைப் பற்றி, ஆளுக்கு ஆள் புகார் சொல்லத் தொடங்கினார்கள்.

பணம் மற்றும் பொருட்கள் போனதைவிடவும் அருணகிரி போனது அவனுக்கு வலிக்கவே செய்தது. அதன் பிறகு அவர் குமாரின் கண்களில் படவே இல்லை. ஆனால், அவர் குடித்துவிட்டு பொதுநிகழ்ச்சிகளில் மோசமாக நடந்துகொள்வதைப் பற்றி பலர் சொல்லக் கேள்விப்படும்போது வருத்தமாகவே இருந்தது.

மூன்று தொடர் வெற்றிகளுக்குப் பிறகு நான்காவது படத்தை அவன் இயக்குவதற்கு தயாரானபோது ஒருநாள் ஆட்டோவில் வந்து இறங்கி, அவனது அலுவலக வாசலில் அருணகிரி நின்றிருந்தார்.
 
பிச்சைக்காரத் தோற்றம். கையில் ஓர் ஆரஞ்சு நிற ஃபைல். காவலாளி அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. குமாரின் கார் வரும்போது அவர் வாசற்கதவை ஒட்டி நின்றபடியே சல்யூட் அடித்தார். அவரை அந்தக் கோலத்தில் பார்த்தபோது வலித்தது. ஆனாலும் அவரைக் கண்டுகொள்ளாமல் அலுவலகத்துக்குள் நடந்து சென்றான். அவர் ஆதங்கத்துடன் வெறித்துப் பார்த்தபடி நின்றுகொண்டே இருந்தார்.

இரவு அலுவலகத்தில் இருந்து கிளம்பும்போதும் அவர் வாசல் ஓரம் நிற்பது தெரிந்தது. மறுநாள் உதவியாளரிடம் சொல்லி அவர் வந்தால் வெளியே நிற்க அனுமதிக்கக் கூடாது எனக் கறாராகச் சொல்லியிருந்தான். அடுத்த நாள் அவனது வீட்டுக்கு வெளியே அருணகிரி நடந்துகொண்டிருந்தார். அவன் கார் கிளம்பும்போது சல்யூட் அடித்தார். எதற்காக தன்னை இப்படி இம்சிக்கிறார் என எரிச்சல் அடைந்து, ஒருநாள் அலுவலகத்தில் அவரை உள்ளே அழைத்தான்.

மிக பவ்வியமாக கையைக் கட்டிக்கொண்டு நின்றார்.

``உட்காருண்ணே.''

``இல்லை சார். நிக்குறேன்.''

`` `குமார்'னே கூப்பிடலாம்.''

``அந்த யோக்கியதை எனக்கு இல்லை சார். நான் களவாணிப்பய.''

``ஏன்ணே இப்படிப் பேசுறீங்க? முதல்ல உட்காருங்க.''

தயங்கித் தயங்கி உட்கார்ந்தார். பெல்லை அழுத்தியபடி, ``டீ குடிக்கிறீங்களா?'' எனக் கேட்டான். அவர் தலையாட்டினார். அழகான பச்சை நிறக் கோப்பையில் தேநீர் வந்தது. அதை அவர் அவசரமாக எடுத்து குடித்தபடி, ``உன்கிட்ட பத்து நிமிஷம் பெர்சனலா பேசணும்'' என்றார்.

``சினிமா சம்பந்தமா பேசறதா இருந்தா எனக்கு இஷ்டம் இல்லண்ணே'' என அழுத்தமான குரலில் சொன்னான்.

``உன் கோவம் புரியுது. எனக்கு சினிமா மட்டும்தானே குமாரு தெரியும். அதை விட்டுட்டு ராக்கெட் விடுறதைப் பற்றியா பேச முடியும்? நான் ஒரு ஸ்கிரிப்ட் பண்ணியிருக்கேன்.

நீ அதைப் படிக்கணும்'' என, தன் கையில் இருந்த ஆரஞ்சு நிற ஃபைலை நீட்டினார். அவன் வாங்கவே இல்லை.

அவர் ஆதங்கத்துடன் சொன்னார், ``இந்த சப்ஜெக்ட்டை இதுவரைக்கும் யாரும் ட்ரை பண்ணினது இல்லை. கட்டாயம் ஜெயிக்கும். நானே டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன். இந்தப் படம் ஓடுச்சுன்னா, விட்டதைப் பிடிச்சிருவேன்.''

``போதும்ணே. எத்தனை வருஷமா நீங்களும் இப்படி அலைஞ்சுக்கிட்டே இருப்பீங்க... அலுத்துப்போகலையா? உங்களால இனிமே ஒண்ணும் பண்ண முடியாது இண்டஸ்ட்ரி மாறிப்போயிருச்சு.''

``அது எனக்கும் தெரியும் குமாரு. அதுக்காக சினிமாவை விட்டுட முடியுமா? பல்லுபோனதும் கறி திங்குற ஆசை போயிருதா? பொய்ப் பல் கட்டிக்கிடலை. ராஜ்கபூர் எல்லாம் அறுபது வயசுக்குப் பிறகுதான் `ராம்தேரி கங்காமெய்லி' எடுத்தாரு. அது பெரிய ஹிட்டுதானே?''

குமாருக்கு, கோபம் தலைக்கு ஏறியது.

``உங்களைத் திருத்த முடியாது. எனக்கு இந்த ஸ்கிரிப்டைப் படிக்கவே இஷ்டம் இல்லை.''

``பரவாயில்லை குமாரு. நீ பிறக்கிறதுக்கு முன்னாடி நான் சினிமாவுக்கு வந்துட்டேன். எனக்குத் தெரிஞ்சதை நான் பார்த்துக்கிடுறேன்.''

``உங்க இஷ்டம்'' என்றான் குமார்.

அவர் தேநீரைக் குடித்து முடித்துவிட்டுச் சொன்னார், ``டீ சூப்பரா இருக்கு. வொய்ஃப் பொண்ணு எல்லாரும் நல்லா இருக்காங்களா? பொண்ணை யு.கே.ஜி சேர்த்துட்டியா?'' எனக் கேட்டார்.

குமார் பதில் சொல்லாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, அவரிடம் சொன்னான், ``பத்து லட்ச ரூபா தரச் சொல்றேன். பேங்க்ல போட்டுட்டு, இருக்கிற காலத்தை நிம்மதியா வாழ்ந்துட்டுப்போங்கண்ணே.''

அதைக் கேட்டதும் அவரது முகம் மாறியது. குரலை உயர்த்தி, ``அதுக்கு நாண்டுக்கிட்டு செத்துப்போயிருவேன். இன்கம்டாக்ஸ்காரங்க ஒருதடவை தீபாவளி அன்னைக்கு வீட்டுக்கு ரெய்டு வந்துட்டாங்க. நான் பெட்டுக்கு அடியில் லட்சம் லட்சமா பணத்தை ஒளிச்சு வெச்சுருந்தேன். எங்கே மாட்டிக்கிட்டா உள்ளே போகவேண்டியது வந்துருமோனு ஜன்னல் கதவைத் திறந்து பணத்தை வெளியே அள்ளிப் போட்டேன். பின்னாடி சாக்கடை. அதுல அவ்வளவு பணமும் விழுந்துருச்சு. பணம்தானே போனாப் போகட்டும், மானம் முக்கியம்னு நினைச்சேன். இப்போ வெறும்பயலா ஆகிட்டா உன்கிட்ட கையேந்தி நிப்பேன்னு நினைச்சுக்கிட்டியா?''

``உங்க நல்லதுக்குத்தானே சொல்றேன்'' என்றான் குமார்.

``எனக்கு நிஜமா நல்லது பண்றதா இருந்தா என்னை வெச்சு அடுத்த படம்  பண்ணபோறேன்னு பிரஸைக் கூப்பிட்டுச் சொல்லு. பணம் தானா வந்து கொட்டும். நான் படம் எடுத்துருவேன்.''
அவர் சொல்வது உண்மை. ஆனால், அதைச் செய்ய குமாருக்கு விருப்பம் இல்லை.

அவர் சிரித்தபடியே சொன்னார், ``நீ இல்லை, எவனா இருந்தாலும் செய்ய மாட்டான். அதான் சினிமா. படத்துல எங்க ட்விஸ்ட் வரும்னு ஆடியன்ஸுக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம். ஆனா, சினிமா எடுக்கிறவனுக்கு எப்போ, எப்படி, யாரால ட்விஸ்ட் வரும்னு நல்லாவே தெரியும். சினிமாவுல கடைசியிலதான் க்ளைமாக்ஸ். சினிமா எடுக்கிறவனுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு க்ளைமாக்ஸ். நீயும் அனுபவப்பட்டவன் தானே. அன்னைக்கும் சொன்னேன்... இன்னைக்கும் சொல்றேன், நான் நம்பின ஆட்கள் தோத்துப்போனதே இல்லை. நான்தான் தோத்துப்போனவன்.''

குமார் உதட்டைக் கடித்தபடியே அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தான். பிறகு, அவரிடம் ``புகாரியில பிரியாணி வாங்கிட்டு வரச் சொல்லவா?'' எனக் கேட்டான்.

அவர் புன்சிரிப்புடன் சொன்னார்.

``அதெல்லாம் விட்டாச்சு. காலையில ஒரு டம்ளர் மோரு, மதியம் ஒரு சப்பாத்தி, நைட் ஒரு குவாட்டர், ரெண்டு இட்லி. அவ்வளவுதான்.

நீதான் தொப்பை போட்டுட்டே. உடம்பைப் பார்த்துக்கோ. பொண்டாட்டி-புள்ளைங்களோடு நேரத்தைச் செலவுபண்ணு. அது ரொம்ப முக்கியம். நீ இன்னும் பெரிய உயரத்தைத் தொடணும். அதான் எனக்கு சந்தோஷம்.''

என்ன பேசுவது எனத் தெரியாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவர் தனது ஆரஞ்சு நிற ஃபைலை எடுத்துக்கொண்டு வெளியே நடக்க முயன்றபோது, ``என் படத்துல நடிக்கிறீங்களா?'' என்றான்.

அவர் சிரித்தபடியே, ``வாழ்க்கையில ரொம்ப நடிச்சிட்டேன் குமாரு. எனக்கே என்னைப் பார்க்க சகிக்கலை. போதும்'' என்றார்.

குமார் அந்தப் பதிலைக் கேட்டு அதிர்ந்துபோனான். அதன் பிறகு அவனது அலுவலகம் பக்கம் வரவே இல்லை.

று மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் விநியோகஸ்தர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் ஒரு தகவலைச் சொன்னார்.

``புதுப்பையன் ஒருத்தன் நல்லா ஸ்கிரிப்ட் பண்ணியிருக்கான். நம்ம புரடியூஸர் அருணகிரிதான் பையனைக் கூட்டிக்கிட்டு வந்தார். அந்தப் பையனுக்காக அவர் நாயா அலையுறார். அந்தக் கதையை நானே படம் பண்ணலாம்னு முடிவுபண்ணியிருக்கேன்.''

அருணகிரி மாறவில்லை. அப்படியே இருக்கிறார். யாரோ மோகன் என்கிற புதுப்பையனை அழைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார் என்பது சந்தோஷமாக இருந்தது.

கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரம்

ரவு ஒன்பது மணிக்கு காஞ்சிபுரத்தில் இருந்து போன் வந்தது. மேனேஜர் சீனு பேசினார்.

``சார், அருணகிரி டெம்பிள் பெர்மிஷன் வாங்கி தர்றேன்னு அஞ்சாயிரம் வாங்கிட்டுப் போனவரு. ஆளே வரலை. நானும் டாஸ்மாக் எல்லாம் தேடிப் பார்த்துட்டேன். குடிச்சுட்டு எங்கேயோ மட்டையாகிட்டாருனு நினைக்கேன். இப்போ என்ன செய்றது?''

``நீங்க வந்திருங்க. பார்த்துக்கிடலாம்'' என்றான் குமார்.

இனி இரண்டு மாதங்களுக்கு அருணகிரி அவனைத் தேடி வர மாட்டார். குற்றவுணர்வு தணிந்த பிறகுதான் வருவார். இரவு எல்லாம் அவரைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான்.

அருணகிரி போன்றவர்களுக்கு சினிமாதான் வாழ்க்கை. சினிமாவுக்கு வெளியே எதுவும் இல்லை. `இப்படியும் மனிதர் இருப்பாரா?!' என வியப்பாக இருந்தது. அதே நேரம் `இப்படி இருக்கிறாரே!' என மிக வருத்தமாகவும் இருந்தது!