Published:Updated:

உரையாடல்களில் விடுபட்ட மனது!

உரையாடல்களில் விடுபட்ட மனது!
பிரீமியம் ஸ்டோரி
News
உரையாடல்களில் விடுபட்ட மனது!

கவிதைகள்: யுகபாரதி, ஓவியம்: செந்தில்

உரையாடல்களில் விடுபட்ட மனது!

எங்கு பார்த்தாலும்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாங்கிவிடுவேன் மாம்பழங்களை

என்ன விலை கொடுத்தும்.

சிறியது பெரியது குறித்தெல்லாம்

சிந்திப்பதில்லை

உரமிட்டதா புகைபோட்டதா எனவும்

யூகிப்பதில்லை

கையில் பறித்ததா

உலுக்கி எடுத்ததா

எச்சரிக்கை கொள்வதில்லை

எதை முன்வைத்தும்

இமாம்பசந்தா பங்கனப்பள்ளியா

அல்போன்ஸவா ஜவ்வாதா

பெயர்களைத் தெரிந்துகொள்ளவும்

பிரியப்படுவதில்லை

என் வரையில், ஒரு மாம்பழம்

மாம்பழத்துக்குரிய அடையாளங்களைக்

கொண்டிருந்தாலே போதுமானது

சாப்பிடுகையில் இனிப்பாவதும்

சப்பி எறிந்த பின் மரமாவதும்

அதனதன் இயல்பென்று

அறிந்த எவரையும்

வழுக்கி விழவைப்பதில்லை

மாம்பழத் தோல். மேலும்

உங்களுக்குத் தெரியுமா

ஒரு மாம்பழத்தின் சக்தி

முருகனையே உருவாக்குமென்று! 

2

இரண்டு ரூபாய் ஏற்றிவிட்டாராம்

இஸ்திரி போடுபவர்

எப்பவும்போல அளவையில்

குளறுபடி செய்தார்களாம்

அமுதம் அங்காடியில்

கேன் வாட்டரிலும்

கிருமிகள் இருப்பதாக

யாரோ சொன்னார்களாம்

முகமே சரியில்லையாம்

ஸ்கூல் வேன் ஓட்டுபவருக்கு

சிலிண்டர் தீர்ந்துவிடுகிறதாம் சீக்கிரமே.

மேலும் மீதமாகும் நூறு யூனிட்

மின்சாரக் கட்டணத்தில்

பழசான கம்மலுக்கு

பாலீஷ் போடணுமாம்

எளிய புகார்களோடும்

எளிய தேவைகளோடும் அவளிருக்க

ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும்

இன்குலாப் கவிதைகளை

எழுதிக்கொண்டிருக்கிறேன் நான். 

3

சாராய வாடையில்லாத

துக்க வீட்டில் தெரிந்துகொள்ளலாம்

சரிந்துகிடப்பவன்

சம்பாதித்த யோக்கிதையை

முறை செய்வதிலோ

முன்நிற்பதிலோ

போட்டி நிகழாத கல்யாண வீடு

கல்யாண வீடே இல்லை

வரச்சொல்லித் தந்தியடிப்பதும்

வந்துவிட்டால் கோழியடிப்பதும்

இல்லாமலேயே போய்விட்டன

இன்றைய நாளில்

கை நிறையத் தீனிப் பையும்

கடவாயில் வெற்றிலையும் கொணர்ந்த

முனுசாமி மாமாக்கள்

அடைக்க முடியாமல் தவிக்கிறார்கள்

விவசாயக் கடன்களை

நாகரிகமழித்த நம்முடைய

நம்பிக்கைகளில் பட்டுத் தெறிக்கிறது

பாவத்தின் எச்சில்

சொல்ல ஏதுமில்லை.

ஏனோ ஓடிக்கொண்டே இருக்கிறது

ஒவ்வொரு நதியும்

உப்பாவதற்கு.

4

மனசுக்குப் பிடித்த உன்னோடு

மணிக்கணக்கில் பேசலாம்

மழை வெயில் தொடங்கி

மாதவிடாய் தொல்லை வரை

ஆறுகாலப் பூஜைகளும்

பேறுகாலப் பிரச்னைகளும்

நானறிந்தது நீ சொல்லியே

நேற்று வாசித்த கவிதை

நிறைவேறாத அபிலாஷை

உதவிக்கு வராதவர்கள்

உபத்திரவம் செய்பவர்கள் என

சொல்லவும் கேட்கவும்

அநேகமிருக்கும் நம்முடைய

உரையாடல்களில், விடுபடுவதில்லை

எந்த விவாதங்களும்

மனசுக்குப் பிடித்த நாம்

பேசிக்கொள்கிறோம்

மனசைப் பேசுவதில்லை எனும்

தீர்மானத்துடன். 

5

போகவே வழியில்லாத

புண்ணிய கேந்திரங்களுக்குப்

புறப்படுகிறீர்கள்

எத்தனை நாள் விரதமென்றாலும்

ஏற்றுக்கொள்ள சம்மதிக்கிறீர்கள்

செலவு பிரச்னையில்லை

சேர்ந்தோ தனித்தோ

மாலையிட்டு உருகுகிறீர்கள்

பஜன்களில் கரைகிறார்கள்

ஆன்மிகக் குருக்களின் குறுந்தகடுகளை

அலமாரியில் நிரப்புகிறீர்கள்

படித்தும் புரியாத பதிகங்களை

மனப்பாடம் செய்கிறீர்கள்

மந்திரித்த தாயத்துகளிலும்

மெய்மறந்த தியானங்களிலும்

உங்களை நீங்களே உருவேற்றுகிறீர்கள்

தொட்டுத் தொடரும் துயரிலிருந்து

விட்டு விடுதலையாக விரும்புகிறீர்கள்

ஒருவகையில்

ஆனந்தத்தைத் தேடித்தான்

அலைகிறீர்கள் நீங்களும்

அணைக்கப்படாத கைபேசியை

சுமந்துகொண்டு.