Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

படம்: சி.சுரேஷ் பாபு

சொல்வனம்

படம்: சி.சுரேஷ் பாபு

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்
சொல்வனம்

கேட்பாரற்ற நதி... 

யாருக்கும் தெரியாமல்

நதியொன்றை அழைத்துவந்திருக்கிறேன்

என் அறைக்கு.

அது எனக்கு நீச்சல் பழக்கிவிடுகிறது

மீன்பிடிக்கக் கற்றுத்தருகிறது

படகோட்ட சொல்லிக்கொடுக்கிறது

அந்த நதி நீரில்தான்

இப்போது தினமும் குளிக்கிறேன்

என் துணிகளைத் துவைக்கிறேன்

எனக்கான தேநீர் தயாரிக்கிறேன்

அறையைவிட்டு வெளியே செல்லும்போது

ஆணியடித்து சுவரில் மாட்டிவிடுகிறேன்

அந்த நதியை.

மீண்டும் தன் இருப்பிடம் செல்ல

இறைஞ்சிய நதியை

நான் அனுமதிக்கவே இல்லை

நதியைக் காணோம் என்று

யாரும் தேடி வரவும் இல்லை

எனக்குத் தெரியும்

யாரும் தேடி வர மாட்டார்கள்.

 -  சௌவி 

ஒத்தையடி பாதையிலே...

சாராய நெடியடிக்க சாவு வீட்டில்

’ஒத்தையடி பாதையிலே...

ஊரு சனம் தூங்கையிலே...’ என

சாவு மேள இசைக்கு காற்றில் தலையசைத்து

இடுப்பை வளைத்துக் குறுக்கி நீட்டியாடும்

முனியனின் வழக்கமான ஆட்டம் பார்த்து,

துக்கம் விசாரித்துப்போகும்போது

ஊர்த் தலைவர் கொடுத்த பத்துரூபாயை

கக்கத்தில் துண்டை செருகி குனிந்து வாங்காமலும்,

’ஏலேய் முனியா காலையிலேயே

பட்டையைப் போட்டுட்டியாடா..?’ எனக் கேட்கும்

அவரின் குரலுக்குத் தலைசொறிந்து  

பழுப்பேறிய புகையிலைக் கறை பற்கள் தெரிய

சிரிப்பதுவுமின்றி

நீண்டு கிடத்தப்பட்டிருந்த முனியனின் உடல்,

குளிப்பாட்ட நிமிர்த்துகையில் ஒருபக்கமாய்ச்

சரிந்துவிழுகிற தலை,

உச்சஸ்தாயில் பறையதிர ஒலித்த

’ஒத்தையடி பாதையிலே...’வுக்குத்

தலையசைப்பதாகவே பட்டது!

 - ந.கன்னியக்குமார் 

பக்தி...

இங்கு செருப்பு பாதுகாக்கப்படும் என

எழுதிய சிலேட்டை

தலைக்கு மேல் மாட்டிவைத்து

மஞ்சள் சேலையில்

ஈரம் காயா தலையுடன்

அம்மனின் கருணைபோல்

அமர்ந்திருக்கும்

பெரிய பொட்டுக்காரியிடம்

செருப்பைக் கழற்றிவிட்டு  

நகர்கிறது வரிசை.

நம் கைபடாத செருப்புகளை

பூப்போல் தூக்கி

மர அடுக்குகளில் அடுக்கி

டோக்கன் கொடுத்தணுப்பும்

அவள் கைகளில்

ஆயிரமாயிரம் கால் தடங்கள்.

கழற்றிய செருப்பைத்

திரும்பப் பெறுகையிலும்

கை தீண்டிடாமல்

கவனமாய்க் கால் நுழைக்கும்

நம்மவர்களுக்கு

வசதியாக காலுக்கருகிலேயே

செருப்பு வைக்கும்

கனிந்த அவள் கைகளில்

நாணயம் ஒன்றைத் திணிப்போம்.

அதைக் கண்ணில் ஒற்றி

காணிக்கை என்பவளது

தொழில் பக்தியைத்தான்

நாம் காலில் அணிந்து

வீடு வருகிறோம்!

 - மு.மகுடீசுவரன் 

குரங்கு உண்டியல்...

அப்பாவின் கைப்பை

அம்மாவின் அஞ்சறைப்பெட்டி

அண்ணனின் சட்டைப்பை

அக்காவின் பென்சில் டப்பா

தாத்தாவின் வெற்றிலைப்பெட்டி

பாட்டியின் சுருக்குப்பை

சுற்றியது போதுமென

கடவுள் சிலைக்குப் பின்புறம்

இளைப்பாற இடம் தேடியது

குட்டி தேவதையின்

குரங்கு உண்டியல்!

 - மீ.மணிகண்டன்