Published:Updated:

இன்னும் முன்னேற இடமுண்டு - சிறுகதை

இன்னும் முன்னேற இடமுண்டு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
இன்னும் முன்னேற இடமுண்டு - சிறுகதை

அ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

இன்னும் முன்னேற இடமுண்டு - சிறுகதை

அ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

Published:Updated:
இன்னும் முன்னேற இடமுண்டு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
இன்னும் முன்னேற இடமுண்டு - சிறுகதை
இன்னும் முன்னேற இடமுண்டு - சிறுகதை

ரு பழைய மஞ்சள் கடித உறையின் பின்னால் எழுதியிருந்த எண்ணை அவள் படித்தாள். அந்த எண் அவளுடைய வாழ்க்கையை மாற்றப்போகிறது என்பது அவளுக்குத் தெரியாது. அவள் அப்பாவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியை அவள் இதற்கு முன்னர் கண்டதே இல்லை. துபாயில் உள்ள மிகப்பெரிய செல்வந்தர் ஒருவரின் மகன், அவளுடன் பேச வேண்டுமாம். மணமுடிக்க விரும்புகிறான்.

அந்தச் சின்னக் கிராமத்தில் தொலைபேசி வசதி எல்லாம் கிடையாது. போரில் பல சனங்கள் வெளியேறிவிட்டார்கள். அப்பா அவளை ஒரு கடைக்கு அழைத்துச் சென்று, முதலிலேயே காசை எண்ணிக் கொடுத்துவிட்டு, அந்த எண்ணை அழைத்துப் பேசினார். அவர் குரல் கொஞ்சம் நடுங்கியது. பின்னர் அவள் பேசினாள். அவளுக்கு நூறு ஆங்கில வார்த்தைகள் தெரியும். அவனுக்கு
நூறு வார்த்தைகள் தமிழ் தெரியும். எப்படியோ அவர்கள் பேசினார்கள்.

திரும்பி வீட்டுக்குச் செல்லும்போது அவள் கேட்டாள், ``அவருடைய பெயர் என்ன?’'

அவள் அப்பா ``அரவிந்தன்'’ என்று சொன்னார்.

வாய்க்குள் இரண்டு முறை சொல்லிப்பார்த்தாள். பிடிக்கிறதா என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை.

இரண்டு வாரங்களில் அவர்கள் திருமணம் நடந்தது. அத்தனை பெரிய செல்வந்தரின் மகன் அந்தச் சின்னக் கிராமத்தில் வந்து மணமுடித்தது ஒரே பேச்சாக இருந்தது. இங்கிலாந்தில் அவன் படித்துக்கொண்டிருந்தபோதுதான் சுவாதியின் படத்தை எங்கேயோ கண்டான். அப்போதே தீர்மானித்துவிட்டான் இவள்தான் தன் மனைவி என்று.

சுவாதியின் முகத்தில் ஒரு கவர்ச்சி இருந்தது. சிரிப்பை அடக்கிவைத்திருப்பது போன்ற முகம். கன்ன எலும்புகள் துல்லியமாகத் தொடங்கி திடீரென முடிந்துவிடும். மனதில் உள்ளதை அப்படியே காட்டும் கண்கள். உலகத்தில் அவளுடைய சொத்து அவளுடைய இரண்டு அண்ணன்களும், இரண்டு தம்பிகளும்தான். இரண்டு நாட்கள் அவர்களைக் கட்டிப்பிடித்து அழுது தீர்த்தாள். அடுத்த நாள் கணவனுடன் துபாய்க்குப் பறந்தாள்.

சுவாதிக்கு, கணவரில் வீசிய வெளிநாட்டு மணம் பிடித்தது. சுவாதியின் நீண்ட விரல்கள் அவனை ஈர்த்தன. பொய்ப் பேச அவளுக்கு வராது. வெகுளி. தன் கணவரோ, மாமாவோ அதிஉயர்ந்த செல்வ நிலையில் உள்ளவர்கள் என்பது தெரியாது. `ஆயிரம் ரூபாய்க்கும் லட்சம் ரூபாய்க்கும் எத்தனை சைபர்கள் வித்தியாசம்?' எனக் கேட்டால் பதில் தெரியாமல் விழிப்பாள். இவர்கள் செல்வத்தைக் கண்டு மிரளாத ஒரே பெண். அரவிந்தனுக்கு அவளை நிரம்பப் பிடித்துக்கொண்டது.

துபாயில் இறங்கிய முதல் நாளை சுவாதியால் மறக்க முடியாது. விமான நிலையம் ஒரே இரைச்சலாக இருந்தது. அவர்கள் பேசிய ஆங்கிலம் அவளுக்குப் புரியவே இல்லை.
அரவிந்தன் சொன்னான் ``அது ஆங்கிலம் இல்லை. அரபுமொழி’' என்று.

அவள் ``அப்படியா!'’ என்றாள். அவர்களுடைய வீடு இன்னும் ஆச்சர்யப்படுத்தியது. பளிங்குத் தரை தகதகவென மின்னியது. அவளுடைய உருவம் அவளுக்குக் கீழே தலைகீழாகத் தெரிந்தது. தனக்கு மேலே தானே நிற்பது கூச்சமாகப்பட்டது. எந்தப் பக்கம் திரும்பினாலும் நீண்ட யன்னல்கள். இரண்டு மூன்று தரம் தன் வீட்டில் தானே தொலைந்துபோனாள். கழிவறைகள் தானாகவே தண்ணீர் ஊற்றிக் கழுவிக்கொண்டன. வீட்டுக்குள் நுழைந்ததும் விளக்குகள் தானாகவே எரிந்தன; வெளியேறியதும் அணைந்தன.

``பார்லருக்குப் போவமா?’'

`‘அது எங்கே இருக்கு... இந்தியாவிலா?'’ என்றாள்.

அவனுக்குச் சிரிப்பு வந்தது. அதைக் காட்டாமல் அவளுடைய ஆள்காட்டி விரலை எடுத்து வாய்க்குள் வைத்துக் கடித்தான். காதலை அவன் வெளிப்படுத்துவது அப்படித்தான். `வாயைத் திறவுங்கோ, விரல் நோகுது’ என வருங்காலத்தில் அவள் பலமுறை கதறுவாள்.

``இதை எப்போ பழகினீர்கள்?'’

``இப்போதான். உன் விரல்களைப் பார்த்தால் கடித்துத் தின்னத் தோன்றுகிறது.’'

அவனுடைய உதடுகள் விநோதமாகக் குவிந்து, ஒரு தமிழ் வார்த்தையை உண்டாக்கும். இன்னொரு முறை குவிந்து இன்னொரு வார்த்தை வெளியே வரும். அந்த அழகைப் பார்த்தபடியே இருப்பாள். அவன் என்ன சொன்னான் என்பது மறந்துவிடும்.

சுவாதி, திறமையாக சமையல் செய்வாள். மணமுடித்த ஒரு மாதத்துக்குள்ளாகவே கணவனுக்கு என்னென்ன பிடிக்கும் என்பதைத் தானாகவே கண்டுபிடித்து சமைத்துவைப்பாள். கணவன் ருசித்துச் சாப்பிடுவதைப் பார்த்து ரசிப்பாள். அப்பாவுக்கு என்ன பிடிக்கும், அண்ணன்களுக்கு என்ன பிடிக்கும், தம்பிகளுக்கு என்ன பிடிக்கும் என யோசித்து யோசித்து சமைப்பாள். கணவர் ஒரு வார்த்தை பாராட்டினால் ஒரு வாரத்துக்குப் போதும்.

ஒருநாள் கணவருடைய கம்பெனிக்குப் போனவள் அப்படியே அசந்துபோனாள். கணவர் தலைமையில் பல வெள்ளைக்காரர்கள் வேலைசெய்தார்கள். எல்லோரும் தங்கள் பெயர் எழுதிய அட்டைகளை கழுத்தில் மாட்டியிருந்ததைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. வரவேற்பறை பெண் எப்படி தன்னைச் சுருக்கி அந்த உடைக்குள் நுழைத்துக்கொண்டாள் என்பது, அவளை ஆச்சர்யப்படவைத்தது. முகப்பில், ஆங்கிலத்தில் இப்படி ஒரு வாசகம் எழுதியிருந்தது. அதை எழுத்துக்கூட்டிப் படித்தாள். ‘இயலாத ஒன்றை உடனே செய்வோம். அற்புதங்கள் ஒருநாள் எடுக்கும்.’ அவளுக்குச் சிரிப்பு வந்தது. இவர் அற்புதம் எல்லாம் செய்வாரா?

முதல் தரமான ஒப்பனையில் காட்சியளித்த பெண்களை அறிமுகப்படுத்தியதும் அவர்கள் எழுந்து நின்று கை குலுக்கினார்கள். இவள் கிராமத்தில் ஒருவருடனும் கை குலுக்கியதே கிடையாது. ஒரு வெள்ளைக்காரப் பெண் வேகமாக ஏதோ ஆங்கிலத்தில் சொன்னாள். புரியவில்லை. ஆனால் கணவர் சிரித்தார். இவளும் சிரித்துவைத்தாள். ஏதோ மாதிரி இருந்தது. அப்படி கணவரைச் சிரிக்கவைக்க தனக்கும் வருமா எனச் சிந்தித்தபோது, கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.

விருந்துகள்தான் அவளுடைய ஒரே பிரச்னை. ஒருமுறை விருந்துக்குத் தயாரானபோது அவள் வீட்டில் இருந்து கொண்டுவந்த சின்னச் சின்ன நகைகளைப் படுக்கையில் பரப்பிவைத்து எதைப் போடுவது என்ற ஆலோசனையில் இறங்கினாள். கிராமத்துச் சந்தைகளில் ஒன்றிரண்டு காய்கறிகளைப் பரப்பிவிட்டுக் காத்திருக்கும் கிழவியைப்போல அந்தக் காட்சி இருந்தது.

அரவிந்தன் ``உம்முடைய பிறந்தநாளுக்கு வாங்கித் தந்த நெக்லெஸை அணியும்'’ என்றான்.

அதைத் தரித்த பின்னர், வேறு ஒரு நகையை சுவாதி எடுத்தாள். ``நோ... நோ..! விலை உயர்ந்த நகையுடன் இந்த நகைகளை அணியக் கூடாது. அதன் மதிப்பு போய்விடும்’' என்றான்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

``அப்படி என்ன மதிப்பு?’'

``இதன் விலை நாலு லட்சம் டிராம்.'’

``அப்படியென்றால்..?’'

``ஒரு லட்சம் அமெரிக்க டொலர்கள்.’'

``அப்படியென்றால்..?’'

``16 மில்லியன் இலங்கை ரூபா.'’

``அப்படியென்றால்..?’'

``அப்படித்தான்.’'

``அப்பா வாங்கித் தந்த ஒரேயொரு நகையை அணிய முடியாதா?’' - பரிதாபமாகக் கேட்டாள்.

``ஏன் முடியாது? ஆனால், இன்றைய விருந்துக்கு வேண்டாமே.’'

பகல் முடியவில்லை. இரவு தொடங்கவில்லை. மாடியில் நின்று ரோட்டையே பார்த்தாள். தூரத்தில் கணவருடைய கார் வரும்போதே அவளுக்குத் தெரிந்துவிடும். சமையலறையில் உணவு மேசையைத் தயாராக்கினாள். அவன் வீட்டு உடைக்கு மாறிவிட்டு மேசைக்கு வரும்போது உணவு தயாராக இருக்கவேண்டும். அன்று அவன் சாப்பிட உட்காரவில்லை.

``நான் அம்மா வீட்டில் சாப்பிட்டுவிட்டேன்'’ என்றான்.

``அப்படியா? எனக்கு தொலைபேசியில் சொல்லியிருக்கலாமே'’ என்றாள்.

``ஓ, மறந்துவிட்டேன், மன்னிக்கவும்.’'

அவளுக்கு அழுகை கண்களை உடைத்தது. முகத்தைத் திருப்பினாள். ``நீர் சாப்பிடும்'’ என்று சாதாரணமாகச் சொன்னான். அந்த நேரத்துக்காக அவள் காலையில் இருந்து காத்திருந்தாள்.
அரவிந்தன், காலையில் சாப்பிடுவது இல்லை; மத்தியானம் வெளியே சாப்பிடுவார். இரவு அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதற்காகக் காத்திருப்பாள். அவருக்குப் பிடித்த ஏதாவது ஒரு பதார்த்தத்தைச் சிறப்பாகச் சமைத்திருப்பாள். இந்தத் தருணம் அவளுக்கு மிக முக்கியம். ஏதாவது வணிக விருந்து அல்லது கூட்டம் அவருக்கு இருக்கும். வெளியே உணவருந்திவிடுவார். அவளுக்கு ஏமாற்றமாக இருக்கும். கணவர் இல்லாமல் தனியாக உட்கார்ந்து சாப்பிடுவதை அவள் வெறுத்தாள். பிச்சைக்காரர்களைப் பார்த்திருக்கிறாள். அவர்கள்கூட கூட்டமாகத்தான் சாப்பிடுவார்கள். தனிமையில் சாப்பிடும் ஒவ்வொரு முறையும் `தனக்கு யாரும் இல்லை’ என்ற உணர்வு அவளுக்குள் எழும்.

ன்று மதியம் பிளாஸ்டிக் தாளில் சுற்றி பாதுகாப்பாகக் கொண்டுவந்த குடும்பப் புகைப்படங்களை வெளியே எடுத்துப் பார்த்தாள். அவளுடைய அண்ணன்மார் ஒருபக்கமும் தம்பிமார் இருவரும் மறுபக்கமும் நின்றார்கள். நடுவில் அவள். சரியாக அந்த நேரம் அவள் அப்பா தொலைபேசியில் அழைத்தார்.

``எப்படியம்மா இருக்கிறாய்?’' என்று ஒரு வார்த்தை கேட்டார். அவளுக்கு அழுகை வந்துவிட்டது. கண்ணீர் கொட்டியது. முழங்கையால் துடைத்தபடி பேச முயன்றாள். வார்த்தை வரவே இல்லை.
``இன்றைக்கு உன் அண்ணனுடைய நினைவுநாள். ஞாபகம் இருக்கா?’'
 
யாரோ நெஞ்சில் ஓங்கி அறைந்ததுபோல இருந்தது அவளுக்கு. அவள் சிறுமியாக இருந்தபோது அது நடந்தது. இது பத்தாவது வருடம்.

``மறந்துவிட்டேன் அப்பா.'’

``பரவாயில்லை அம்மா. உன் அண்ணன்களும் தம்பிகளும் உபவாசம் இருந்து இப்போதுதான் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம்.'’

``மன்னியுங்கள் அப்பா. எப்படி என்னால் மறக்க முடிந்தது?’'

`‘உனக்கு வேலை பளுவாக இருந்திருக்கும்.'’

``இல்லை அப்பா. எனக்கு வேலையே இல்லை. அதுதான் பிரச்னை. சகல வசதிகளும் இருக்கு. சமையல்காரி, காவலாள், சாரதி, தோட்டக்காரன் எனப் பலரும் ஏவலைச் செய்யக் காத்திருக்கின்றனர். எனக்கு மன்னிப்பே இல்லை.'’

``இதுல என்ன இருக்கு. உலகத்து ஜீவராசிகளில் மனிதன் ஒருவனுக்குத்தான் `இறப்பு' என ஒன்று இருப்பது தெரியும். மிருகங்களும் பறவைகளும் ஏன் புழுக்கள்கூட எத்தனை குதூகலமாக இருக்கின்றன. அவற்றுக்கு மரணம் என்பது தெரியாது. மனிதனுக்குள் அந்த நினைப்பு எப்போதும் இருந்து தொந்தரவு செய்கிறது.’'

இன்னும் முன்னேற இடமுண்டு - சிறுகதை

``அப்பா... எங்கள் அண்ணன் பேரில் ஒரு வீதி இல்லை, வாசகச்சாலை இல்லை, பூங்கா இல்லை. எங்கள் மனங்களில்தானே அவன் வாழ்கிறான். அப்படியும் நான் மறந்துவிட்டேன்.’'
அவள் பள்ளிக்கூடத்தில் படித்தபோது ஒருமுறைகூட முதல் பத்துக்குள் வந்தது கிடையாது. வருட முடிவில் கிடைக்கும் தேர்ச்சிப் பத்திரத்தில் ‘இன்னும் முன்னேற இடமுண்டு’ என எழுதியிருக்கும். ஒவ்வொரு வருடமும் அதேதான்.

ஒருநாள் அப்பா கேட்டார், ‘`இவர்கள் இப்படி வருடாவருடம் எழுதுகிறார்களே. நீ இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்துப் படிக்கலாமே!’'

அவள் சொன்னாள், ‘`பிரயோசனம் இல்லை அப்பா. நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கும் என் சிநேகிதியின் தேர்ச்சி அட்டையில் ‘இனி முன்னேற இடமில்லை’ அப்படித்தானே எழுத வேண்டும். ஆனா, அப்படி எழுதவே இல்லை.’'

என்னதான் உயர்ந்த நிலையில் ஒருவர் இருந்தாலும், வாழ்க்கையின் ஒரு மூலையில் ஏதோ ஒரு போதாமை இருக்கத்தான் செய்யும்.

ப்பரிகையில் நின்று வீதியைப் பார்த்தாள். அவளுக்கு மனம் தவிப்பாக இருந்தது. ஆற்றாதத் துயரமாக வளர்ந்தது. கணவன் சில வேளை சாப்பிட்டுவிட்டுத்தான் வருவார். வழக்கம்போல அவள் தனியாகச் சாப்பிடவேண்டி நேரிடும். அங்கே அவள் வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உண்பது ஒரு கொண்டாட்டமாகவே இருக்கும். இன்றைக்கும் அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்களாம். அவள்தான் இல்லை.

கணவர் வந்ததும் அவளுடைய அப்பா காலையில் கூப்பிட்டதைச் சொன்னாள்.

``அப்படியா!'’

``என் அண்ணனின் இறந்தநாளை நான் மறந்துவிட்டேன். அப்பாதான் ஞாபகப்படுத்தினார். குற்ற உணர்வாக இருக்கிறது.’'

``ஏன் குற்ற உணர்வு?’'

‘`உபவாசம் இருக்கவில்லையே.'’

``எல்லாமே ஞாபகத்தில் வைத்திருக்க முடியுமா?’'

`‘இது என் அண்ணன் அல்லவா... எப்படி மறந்தேன்?’'

`‘உலகத்திலே ஒரு நாளைக்கு 1,50,000 பேர் இறக்கிறார்கள். எல்லோரையும் நினைவுவைக்க முடியுமா?'’

``அண்ணன் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார். ஒருவன் பூட்ஸ் காலால் அவர் முகத்தில் மிதிக்க, இன்னொருவன் துப்பாக்கியால் சுட்டான்.’'

``இரண்டும் ஒன்றுதான்'' எனச் சொல்லிவிட்டு, ரிமோட்டைக் கையில் எடுத்தார். அவளால் நம்ப முடியவில்லை. கணவருக்கு எத்தனை பெரிய வார்த்தைகள் தெரியும். அறிவாளி. ‘இரண்டும் ஒன்றுதான்’ என்று சொல்கிறாரே.

மூன்று நாட்கள் அவளால் தூங்கவே முடியவில்லை. ஒரு கை வெளியே தொங்க கணவன் படுக்கையில் படுத்திருந்தான். மெதுவாக எழும்பி மாடியில் போய் நின்றாள். துபாய் நகரம் அவளுடைய காலடியில் கிடந்தது. அவளைச் சுற்றிலும் ஒன்றுடனொன்று போட்டியிடுவதுபோல உயரமான கட்டடங்கள். ஒரு சில கார்கள் தூரத்தில் ஊர்ந்தன. எறும்பு ஒன்று அவசரமாக ஓடியது. நடு இரவுகூட அதற்கு ஏதோ வேலை. எதற்காக அப்படி உழைக்கிறது? ஒருவேளை தனிமையை மறக்க இருக்கலாம். மனதின் எடை இரண்டு மடங்காகிக் கனத்தது. ஆகாயத்தை நிறைத்தன நட்சத்திரங்கள்.

சுவாதி நட்சத்திரம் செம்மஞ்சள் நிறத்தில் வானத்தின் வலது பக்கத்தில் விட்டுவிட்டு ஒளிர்ந்தது. அவள் அப்பா சொல்வார், `சுவாதி, நாலாவது பிரகாசமான நட்சத்திரம்’ என்று. `ஏனப்பா முதலாவது நட்சத்திரத்தின் பெயரை எனக்குச் சூட்டவில்லை?’ என அழுவாள். `இல்லை அம்மா. நீ நாலாவதாகப் பிறந்தவள். எங்கள் தவக்குழந்தை, அதுதான்’ என்று சமாளிப்பார்.

அன்று கணவர் வீட்டுக்கு வந்தபோது சுவாதி சூட்கேஸை நிறைத்துவிட்டு அதன் மேல் உட்கார்ந்திருந்தாள்.

``என்ன?'’ என்றார் கணவர்.

``நான் இப்பவே வீட்டுக்குப் போகவேண்டும்.’'
 
அவள் அப்படி ஒருமுறைகூடப் பேசியது இல்லை.

``அதற்கென்ன, நாளைக்கே டிக்கெட் ஏஜென்ட்டிடம் பேசுகிறேன்.’'

``இப்பவே...'’ - அவள் கத்தியதில் குரல் இரண்டாகப் பிளந்தது. வேறு ஒரு குரல் பேசியது.

``இப்ப இயலாதே’' என்றான் பரிதாபகரமாக. அலுவலக வரவேற்பறையில் `இயலாதென்றால் உடனே முடிப்போம்’ என்று எழுதியிருந்தது அவள் ஞாபகத்துக்கு வந்தது.

அப்பாவிடம் யோசனை கேட்டபோது ‘`அவள் பாவம், சகோதரங்களோடு வளர்ந்தவள். தனிமையாக இருக்கும். கொண்டுபோய் விடு. ஒரு மாதத்தில் சரியாகும். திரும்பவும் அழைக்கலாம்’' என்றார்.

அரவிந்தன் அவளைக் கூட்டிச்சென்று கிராமத்தில் விட்டுவிட்டுத் திரும்பினான். தொலைபேசியில் பேசினார்கள். மிகவும் அன்பாகத்தான் இருந்தாள்.

``இரவு வெகுநேரம் வெளியே அலைய வேண்டாம். உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்'’ என்று சொன்னாள்.

ஒரு வருடம் ஓடிவிட்டது. திரும்பி வர மறுத்துவிட்டாள். வேறு வழி இல்லாமல்தான் மணவிலக்குக்காக வழக்குரைஞரிடம் செல்லவேண்டி நேர்ந்தது.

சுவாதியின் தகப்பனுக்கும் இது புரியாதபுதிர்தான். எவ்வளவோ மகளிடம் சொல்லிப்பார்த்தார். அவள் மறுத்துவிட்டாள். அரவிந்தனோ அவளுடன் பேசிக் களைத்துவிட்டான்.

இறுதி முயற்சியாக அரவிந்தனின் அப்பா கிராமத்துக்குப் போய் சுவாதியைச் சந்தித்தார்.

‘`ஏன் அம்மா, உனக்கு என்ன குறை? என்னிடம் சொல்லலாம். நான் தீர்த்துவைக்கிறேன்.’'

``மாமா, நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் வந்தனீங்கள்? அவரில் ஒரு பிழையும் இல்லை. அவர் நல்லவர். எனக்கு வாழப் பிடிக்கவில்லை. தயவுசெய்து எங்களைப் பிரித்துவிடுங்கள்.’'

``சரி அம்மா. உன் விருப்பம். நாங்கள் சமாதானமாகப் பிரிவோம். இதற்கு எல்லாம் வழக்குரைஞர் தேவை இல்லை. என்னிடம் போதிய பணம் இருக்கிறது. உனக்கு எவ்வளவு வேண்டுமோ, கேள்.’'

``இது என்ன மாமா... எனக்கு எதற்கு பணம்? நான் அப்பாவுடன்தானே இருக்கிறேன்.’'

``அது தெரியும் அம்மா. மணவிலக்கு பெறும்போது கொடுக்க வேண்டும். கணவனுக்கு ஒரு கடமை உண்டு. அதுதான் சட்டமும். நீ விரும்பிய தொகையைச் சொல்.'’

‘`அவர் பாவம். இரவு-பகலாகக் கஷ்டப்பட்டு உழைக்கிறார்; வெளியே அலைகிறார். நேரத்துக்குச் சாப்பிடுவதும் இல்லை. இந்தக் காசை சம்பாதிக்க அவர் என்ன பாடுபட்டாரோ! பத்தாயிரம் ரூபா போதும்.''’

அவர் திகைத்துப்போய் நின்றார். இந்தப் பெண்ணுக்கு என்ன நேர்ந்தது? புதிர் இன்னும் கூடியது. ஒரு கோடி ரூபாய்க்குக் காசோலை எழுதி சுவாதியிடம் நீட்டினார். அவள் காசோலையை வாங்கினாள். நீளத்துக்கு சைபர் சைபர் ஆக இருந்தது. அவள் முகத்தில் ஒருவித மாற்றமும் இல்லை. பத்திரத்தில் கையெழுத்திட்டாள்.’

அரவிந்தனுக்கு அவள் பிரிந்து சென்ற காரணம் புரியவே இல்லை. ஆறு மாதங்கள் கடந்து சுவாதியிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அரவிந்தன் அவசரமாக அதைப் பிரித்தான். வளைந்த வளைந்த எழுத்துக்கள். தமிழாகத்தான் இருக்கவேண்டும். மேசையில் கன்னத்தை வைத்துப் படுத்தபடி பேனையைச் செங்குத்தாகப் பிடித்து அதை எழுதியிருப்பாள். கடைசியில் காணப்பட்ட மூன்று எழுத்துக்கள் அவளுடைய கையெழுத்தாக இருக்கும். அதை விரலால் தொட்டுப்பார்த்தான். `வாயைத் திறவுங்கோ. விரல் நோகுது’ என்று அவள் கத்தியது நேற்று நடந்ததுபோல இருந்தது.

அப்பாவிடம் கடிதத்தை நீட்டியபோது அவர் என்ன என்பதுபோல முகத்தை ஆட்டினார். பின்னர் விஷயத்தைப் புரிந்துகொண்டு கடிதத்தை வாங்கி உரத்து வாசிக்கத் தொடங்கினார்.

இன்னும் முன்னேற இடமுண்டு - சிறுகதை

`என்றும் மறக்க முடியாத என் முன்னாள் கணவருக்கு, நமஸ்காரம். நான் விலகியபோது என் நகைகளுடன், நீங்கள் வாங்கிப் பரிசளித்த நெக்லெஸையும் அனுப்பியிருந்தீர்கள். என் அப்பா செய்துத்தந்த புல்லாக்கை மட்டும் அனுப்பவில்லை. அதன் பெறுமதி 60 ரூபாய். இப்படிச் செய்வீர்கள் என நான் நினைக்கவே இல்லை. இந்தக் கடிதம் கண்டதும் அதை அனுப்பிவைக்கவும்.

உங்கள் முன்னாள் மனைவி சுவாதி.'

`புல்லாக்கா... அது என்ன?’ என்றான் அரவிந்தன்!