Published:Updated:

தமிழ் நாவல்வெளி - எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழ் நாவல்வெளி - எஸ்.ராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழ் நாவல்வெளி - எஸ்.ராமகிருஷ்ணன்

ஒரு நூற்றாண்டின் சுவடுகள்ஓவியம் : ஹாசிப்கான்

தமிழ் நாவல்வெளி - எஸ்.ராமகிருஷ்ணன்

ஒரு நூற்றாண்டின் சுவடுகள்ஓவியம் : ஹாசிப்கான்

Published:Updated:
தமிழ் நாவல்வெளி - எஸ்.ராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழ் நாவல்வெளி - எஸ்.ராமகிருஷ்ணன்
தமிழ் நாவல்வெளி - எஸ்.ராமகிருஷ்ணன்

சிறுகதை, கவிதை, நாவல், குறுநாவல் என நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட இலக்கிய வடிவங்களின் வரையறை இன்று முழுவதும் மாறியிருக்கிறது. நாவல் என்ற ஒரே சொல்லால் அழைக்கப்பட்டபோதும் 19-ம் நூற்றாண் டின் நாவலும், 21-ம் நூற்றாண்டின் நாவலும் ஒன்று இல்லை. வடிவம் மற்றும் உள்ளடக்கரீதியில் அடைந்துள்ள மாற்றமும் வளர்ச்சியும் பிரமிக்கத்தக்கவை.

நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் `தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் 50 மில்லியன் பிரதிகள் விற்றிருக்கின்றன. சமீபத்தில், ஜப்பானிய நாவலாசிரியரான ஹருகி முரகாமியின் ‘1Q84’ என்ற நாவல் 23 மில்லியன் பிரதிகள் விற்பனையாகி இருக்கின்றன.

ஒரு நாவல் உலக அளவில் புகழ்பெற்றுவிட்டால், அந்த எழுத்தாளர் அடையும் குறைந்தபட்ச தொகை 10 கோடி ரூபாய். திரைப்பட உரிமை, பிறமொழி உரிமை என்று எளிதாக அவர் 100 கோடி வரை சம்பாதித்துவிட முடியும். இதுபோலவே நாவலை எழுதுவதற்கு முன்பாகவே அதை யார் வெளியிடுவது எனப் பதிப்பகங்கள் ஏலம்விடுகின்றன, எவர் அதிகப் பணத்துக்கு ஏலம் எடுக்கிறார்களோ, அவர்களுக்கே நாவலை வெளியிடும் உரிமை தரப்படுகிறது.

நாவல் எழுதுவதற்கான நிதி உதவி செய்யும் அமைப்புகள் இருக்கின்றன. நாவல் வெளியீட்டை ஒட்டி உலகம் முழுவதும் எழுத்தாளர்கள் பயணம் செய்கிறார்கள். வாசகர்களைச் சந்தித்து, கையெழுத்துப் போடுகிறார்கள். உம்பர்தோ ஈகோவின் புதிய நாவல் வெளியாவது பற்றி நாளிதழின் முதல் பக்கத்தில் செய்தி வெளியாகிறது. முரகாமியின் புதிய நாவல் வெளியாவதை ஒட்டி, ஜப்பானியத் தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. அந்த அளவுக்கு நாவல்கள் உலகின் பிரதான இலக்கிய வடிவமாகக் கொண்டாடப்படுகின்றன.

ஆனால், தமிழ்நாட்டில் இதற்கு நேர் எதிரான சூழலே இருக்கிறது. இங்கே அதிகம் விற்பனையான நாவல் என்றால், அது 5,000  பிரதிகள் விற்றிருக்கும். நான் அறிந்து தனது புதிய நாவலுக்காக முன்பணம் பெற்ற ஒரு தமிழ் எழுத்தாளர்கூட கிடையாது. `தமிழகத்தில் குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் புத்தகம் படிக்கிறார்கள்’ என்கிறார்கள். ஆனால், 1,000 பிரதிகள்தான் நாவல் விற்பனை யாகிறது என்பது துரதிர்ஷ்டமே. சமீபத்தில், மலையாளத்தில் வெளியான கே.ஆர்.மீராவின் ‘அரச்சார்’ என்ற நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. அரவிந்த் அடிகா, தனது நாவலை எழுத முன்பணமாக 50 லட்சம் ரூபாய் பெற்றிருக்கிறார்.

அகில் சர்மா என்ற அமெரிக்காவில் வாழும் இந்திய எழுத்தாளர் தனது `ஃபேமிலி லைஃப்’ நாவலுக்காக ‘டப்ளின் இம்பாக்’ விருது பெற்றிருக்கிறார். ஓர் இந்தியர் இந்த விருது பெறுவது இதுவே முதல்முறை. இதுவரை இரண்டே நாவல்களை எழுதியிருக்கிறார். விருதுத் தொகையாக  ஒரு லட்சம் யூரோ. அந்த நாவலோடு ஒப்பிட்டால் அதைவிட சிறந்த 100 நாவல்கள் தமிழில் உள்ளன. ஆனால், அவை எதுவும் உலகின் கவனத்துக்குள்ளாகவில்லை என்பதே ஆதங்கம்.

புதிய தமிழ்த் திரைப்படம் ஒன்றுக்கு, குறைந்தபட்சம் 1,000 விமர்சனங்கள் வெளியாகின்றன. ஆனால், தமிழில் பல முக்கிய நாவல்கள் ஒரு விமர்சனம்கூட எழுதப்படாமல் மௌனமாகப் புறக்கணிக்கப்படுகின்றன.

பொழுதுபோக்கு நாவல்கள், இலக்கியத் தரமிக்க நாவல்கள் என இரண்டுவிதமாக நாவலை முந்தைய காலங்களில் பிரித்திருந்தார்கள். இன்று இந்த இரண்டுக்குள் நிறைய உள்ளடுக்குகள் உருவாகியுள்ளன. பொழுதுபோக்கு நாவலுக்குள் தீவிரத்தன்மை கொண்ட படைப்புகளும் இலக்கிய நாவல்களுக்குள் சுவாரஸ்யமான பொழுதுபோக்குத்தன்மைகொண்ட எழுத்துவகையும் உருவாகியிருப்பது நம் காலத்தின் முக்கிய அம்சம்.

தமிழ் நாவல்வெளி - எஸ்.ராமகிருஷ்ணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உதாரணத்துக்கு அறிவியல்புனைவு நாவல்களைச் சொல்லலாம். அவை வெறும் பொழுதுபோக்கு நாவல்கள் இல்லை. அதேநேரம் பெரும் இலக்கியப் படைப்பாக அவை கருதப்படுவதும் இல்லை.

ஒவ்வொரு 10 வருடத்திலும் உலக இலக்கியத்தின் கவனம் ஏதாவது ஒரு தேசத்தின் மீது குவிகிறது. அப்படித்தான் லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் புகழ்பெற்றன; ஆப்பிரிக்க நாவல்கள் கொண்டாடப்பட்டன; அந்த வரிசையில் இன்று உலகின் கவனம் ஆசியாவின் மீது குவிந்துள்ளது.

 அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் சீன நாவல்களே உலக இலக்கியப் பரப்பில் அதிகம் பேசப்படுகின்றன. நோபல் பரிசைவிடவும் முக்கியமாகக் கருதப்படும் ‘டப்ளின் இம்பாக்’ விருது அகில் சர்மாவுக்குக் கிடைத்துள்ளது அதன் அறிகுறியே.

அசோகமித்திரன், சுந்தர ராமசாமி,ஜெயகாந்தன், ஜி.நாகராஜன்,தி.ஜானகிராமன், பெருமாள் முருகன் போன்றோர் எழுதிய  30 நாவல்களுக்கு மேல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டி ருக்கின்றன. ஆனால், அவை சர்வதேச அளவில் போதிய கவனம் பெறவே இல்லை. அந்த நாவல்கள் குறித்து எங்கும் கருத்தரங்கோ விமர்சனக் கூட்டங்களோ நடந்ததாகத் தெரியவில்லை. அதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருப்பதாக நினைக்கிறேன். ஒன்று, அமெரிக்க கல்விப்புலங்கள் இந்த நாவல்களைக் கண்டுகொள்ளவில்லை. மற்றொன்று, இந்திய நாவல்களை முதன்மை
படுத்தும் விமர்சகர்கள்கூட, ஆங்கிலத்தில் வெளியான இந்திய நாவல்களைத்தான் கவனப்படுத்துகிறார்கள். பிராந்திய மொழிகளில் எழுதப்பட்ட நாவல்களைக் கண்டுகொள்வதே இல்லை.

சுந்தர ராமசாமியின் `ஜேஜே சில குறிப்புகள்’ நாவல் வெளியான சமயத்தில், அது ஏற்படுத்திய வாதப்பிரதிவாதங்களும் ஓயாத  பேச்சும் எனக்கு நினைவில் இருக்கின்றன. இணையமோ, இவ்வளவு இடைநிலை இதழ்களோ அன்று கிடையாது. சிறுபத்திரிக்கை மட்டுமே நாவல் விமர்சனத்தை வெளியிட்ட காலம் அது.  அதுபோன்ற சூழலில் நாவல் குறித்துத் தமிழக அளவில் பெரிய கொந்தளிப்பு உருவானது. நாவலைக் கொண்டாடுபவர்கள் ஒருபுறம், காரசாரமாக விவாதிப்பவர்கள் மறுபுறம் என இரண்டு பிரிவுகளும் தீவிரமாகச் செயல்பட்ட இலக்கிய சூழல் அன்று இருந்தது. ஆனால், நவீன ஊடகங்களின் வளர்ச்சியும் மயக்கமும் இலக்கியச் சூழலையும் பாதித்துள்ளன என்பதற்கு அடையாளமாக, நாவல்கள் குறித்த கவனமின்மையைச் சொல்லலாம்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை  எழுதிய `பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற முதல் தமிழ் நாவலை சமீபத்தில் மறுவாசிப்பு செய்தேன். நாவல் முழுவதும் வெறும் நகைச்சுவைத் துணுக்குகள்; பழமையான வைதீகக் கருத்துகள்.

நாவலில் இப்படி ஒரு விவரிப்பு வருகிறது... `எல்லோருக்கும் மரியாதை தர வேண்டும் என்று என் தாயார் குறிப்பிட்டதால், நான் என் வீட்டுக்கு வரும் வண்ணானுக்கும் தோட்டிக்கும்கூட மரியாதை குடுத்தேன்’  இதுதான் அந்தக் காலகட்டத்தின் மனநிலை.

மனைவியைப் பொதுநிகழ்ச்சிகளுக்கு அழைத்துப்போவது கலாசாரச் சீரழிவு என இந்த நாவலில் குறிப்பிடப்படுகிறது. பெண்ணடிமைத்தனம், சாதிய மேன்மை பேசுதல்... என நாவல் வழியாக நாம் அந்தக் காலகட்டத்தின் சமூகநிலையை அறிந்துகொள்ள முடிகிறது.

`நவீன இலக்கியங்களும் நம்பகமான பதிப்புகளும்’ என்ற ஆய்வுக் கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் பெருமாள் முருகன் இந்த நாவல் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களைத் தருகிறார்...

` `பிரதாப முதலியார் சரித்திரம்’ நாவல், அநேகமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை அச்சிடப்பட்டிருக்கக்கூடும். 1879-ம் ஆண்டில் முதல் பதிப்பு வெளியாயிற்று. அப்பதிப்பு இப்போது பார்ப்பதற்கு எங்கேயாவது இருக்கிறதா எனத் தெரியவில்லை. 1887-ம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் பதிப்பின் ஒரு பிரதி சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ளது. ‘The Life and Adventures in Tamil of Pradapa Mudalliar’ எனும் ஆங்கிலத் தலைப்பை முன்பக்கத்தில் கொண்ட இந்நூலில் ‘முதற்பதிப்பு’ என்று குறிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் முகம்மது ஸமதானி பிரஸ்ஸில் பதிப்பிக்கப்பட்ட இது இரண்டாம் பதிப்பு என்பதுதான் சரியானது. 1910-களில் `பிரதாப முதலியார் சரித்திரம்’ நாவலுக்குப் பாடத்திட்ட அந்தஸ்து கிடைத்திருக்கிறது. மெட்ரிக்குலேஷன் தமிழ்ப்பாட நூல்களில் இந்த நாவலின் சில பகுதிகள் சேர்க்கப்பட்டன. சென்னை  பல்கலைக்கழக இன்டர்மீடியட் வகுப்புக்குப் பாடநூலாகவும் இந்த நாவல் வைக்கப்பட்டிருந்தது. ஆகவே, இந்த நாவலுக்கு விற்பனை மதிப்புக் கூடியது. வேதநாயகம்பிள்ளை முதல் பதிப்புக்கு ஆங்கிலத்தில் எழுதிய முன்னுரை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதும் சக்தி காரியாலயம் பதிப்பில்தான்.’

தலைப்பு மற்றும் முன்னுரை இரண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டன என்ற செய்தி முக்கியமானது. ஆங்கில நாவல்களின் பாதிப்பில் இருந்து தமிழில் நாவல் உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரமாக இதைக்கொள்ளலாம். மேலும், தமிழ் நாவலுக்கு ஆங்கில முன்னுரை எழுதும் அளவுதான் அன்றைய இலக்கியச் சூழல் இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. (அந்த நாட்களில் தமிழில் முனைவர் பட்டம் பெறுவதற்குக்கூட ஆங்கிலத்தில்தான் ஆய்வேட்டைச் சமர்ப்பிக்கவேண்டிய சூழல் இருந்தது என்பதை நினைவுகொள்ள வேண்டும்).

நாவல் என்பது ஓர் இலக்கியப் படைப்பாக அறியப்பட்டபோதும் அடிப்படையில் அது ஒரு பண்பாட்டு ஆவணம். பண்பாட்டு அடையாளங்களை மட்டுமின்றி பண்பாடு மறுக்கிற விஷயங்களையும் அது விவாதிக்கிறது; ஆவணப்படுத்துகிறது.

ஆகவே நாவலின் ஊடாகப் பல்வேறு வாழ்வியல்கூறுகளும் வரலாறும் இனம், மதம் மற்றும் மொழி அடையாளங்களும் நம்பிக்கைகளும் அரசியல் மற்றும் சமூக பொருளாதார மாற்றங்களும் மரபும் அதன் உருமாற்றங்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பதிவுசெய்யப்படுகின்றன.

உண்மையில் ஒரு நாவல் வாசகன், நாவலின் வழியே கதையை மட்டும் அறிந்து கொள்வது இல்லை. மாறாக, காலமாற்றத்தை அறிந்துகொள்கிறான். அந்தக் காலமாற்றம் என்பது சில வாரங்கள், சில மாதங்களாகவும் இருக்கக்கூடும்; சில வருடங்கள் மற்றும் சில தலைமுறைகளாகவும் இருக்கக்கூடும். எனில்  காலத்தின் ஊடாக மனித வாழ்க்கை கொள்ளும் மாற்றங்களும் அதற்கான அக-புறக் காரணிகளுமே நாவலை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காலமே நாவலின் கச்சாப்பொருள்.

தமிழ் நாவல்வெளி - எஸ்.ராமகிருஷ்ணன்

காலத்தை சம்பவங்களாலும் நிகழ்வுகளாலும் பொருட்களின் மீது படிந்துள்ள அடையாளத்தின் வழியாகவும் நாம் அறிகிறோம். நினைவுகளாக்கி அவற்றைச் சேகரித்துக்கொள்கிறோம். கடந்தகாலம் பற்றிய ஏக்கமோ கோபமோ இல்லாத மனிதரே இல்லை. எதிர்காலம் குறித்த கவலையைவிட கடந்தகாலம் குறித்த கவலையே மனிதனை இயங்கவைக்கிறது.

நாவல் என்பது கடந்தகாலத்தின் தாழ்வாரம். அங்கே முடிவில்லாமல் மனிதர்கள் உலவிக்கொண்டே இருக்கிறார்கள். எந்த நிகழ்வும் முடிவு பெறுவதே இல்லை... சாவு உள்பட.

நினைவை மீள்உருவாக்கம் செய்யும்போது கற்பனை கலந்துவிடுவதைத் தடுக்க முடியாது போலும். ஒருவேளை கற்பனையால்தான் நினைவை நேர்த்தியாக மீள்வடிவம் செய்யமுடியுமோ என்னவோ. பெரும்பாலும் மனிதர்கள் தங்களது கற்பனையின் துணையோடு நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அது நிஜத்தைவிட அதிகமாகவோ குறைவாகவோ அமைந்துவிடுவது சந்தர்ப்பத்தையும் சூழ்நிலையையும் தேவையையும் பொறுத்ததாக மாறிவிடுகிறது.

நாவல் என்ற வடிவத்தின் மீது இன்று வரை தொடரும் ஈர்ப்புக்கான முக்கியக் காரணம், அது நினைவுகளை விசித்திரமான முறையில் புத்துருவாக்கம் செய்கிறது என்பதே.

ஒரு நாவலில் இடம்பெற்ற சம்பவங்கள் யாவும் எழுத்தாளனின் நினைவுகள் இல்லை. சில நேரம் தன் நினைவில் இருந்து சிலவற்றை மறுஉருவாக்கம் செய்திருக்கக்கூடும். ஆனால், அவன் பிறரது நினைவுகளைச் சேகரித்தோ, கற்பனையால் உருவாக்கியோ, பகிர்ந்து தரத் தொடங்குகிறான். தகவல்களால் நிரம்பிப்போன வரலாற்றை, நினைவுகளைக்கொண்டு நெய்யத் தொடங்குகிறான். கதையைத் தனது சிறகுகளாக உருவாக்கிக்கொள்கிறான். கதையைக் கட்டுவதற்காக கதாபாத்திரங்களை உருவாக்குகிறான். கதாபாத்திரம் என்பதுதான் கற்பனையின் உச்சம். அது நிஜமனிதனைப்போலவே உருவமும் உடலும் நினைவுகளும் கொண்டதாக நடமாடத் தொடங்கும்போது, வாசகன் அதை உண்மை என நம்ப ஆரம்பிக்கிறான்.

பூமியில் பிறக்காத மனிதர்களை `ஏலியன்ஸ்’ எனச் சொல்கிறோம். உண்மையில் இலக்கியக் கதாபாத்திரங்களே பூமியில் பிறக்காத மனிதர்கள். அவர்கள் கதைவழியாகப் பிறந்தவர்கள். அவர்களுக்கு அழிவே இல்லை.

`The writer is the Adam’s rib of character’ என்று நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர் நாடின் கோடிமர் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். அதன் பொருள், `ஆதாமின் விலா எலும்பில் இருந்து ஏவாளை உருவாக்கியதுபோலத்தான் படைத்த ஒன்றில் இருந்தே தனது கதாபாத்திரங்ளை உருவாக்குகிறேன்’ என்கிறார்.

ஒரு நாவலில் கதாபாத்திரங்களை முழுமையாக உருவாக்குவதே நாவலாசிரியனின் பிரதான சவால். சிறிய கதாபாத்திரங்கள்கூட முழுமையாக இடம்பெற்றிருப்பதே செவ்வியல் நாவல்களில் தனித்துவம். அதற்காகத்தான் டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் மெல்விலும் இன்றும் பேசப்படுகிறார்கள்.

`Novel Characters A Genealogy’ என்ற ஒரு புத்தகத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்தேன். அது நாவல்களில் இடம்பெற்ற புகழ்பெற்ற கதாபாத்திரங்களைப் பற்றியதாகும். கற்பனையில் பிறந்த கதாபாத்திரங்கள், பூமியில் பிறந்து வாழ்ந்த மனிதர்களைப்போலவே நடந்துகொள்வதும் இந்த மனிதர்களுக்கு சாத்தியம் இல்லாத செயல்களில் ஈடுபடுவதும் சுகதுக்கங்களை அனுபவிப்பதும் நம் வாழ்வைப் புரிந்துகொள்வதற்கும் மேம்படுத்திக்கொள்வதற்கும் வழிகாட்டுவதாக உள்ளது. அதுவே நாவலில் வாசகன் அடையும் உன்னதம்.

ஒரு நாவலாசிரியனின் பணி என்பது பொம்மலாட்டக் கலைஞன், எல்லா பொம்மைகளுக்கும் குரல் கொடுப்பதைப்போன்ற விந்தை. பொம்மைகளின் கயிறுகள் அவன் கையில்தான் இருக்கின்றன. அதன் இயக்கத்தை அவனே தீர்மானிக்கிறான். ஆண் குரலாகவும் பெண் குரலாகவும் மிருகங்களின் குரலாகவும் அவன் குரல் மாறி ஒலிப்பதே கலை. மனிதர்களின் விதியைப்போலவே கதாபாத்திரங்களின் விதியும் புதிரானதே.

ஆப்பிரிக்கக் காட்டில் சிங்கம், புலி, யானை, எருது, ஓநாய், மான், நரி, முயல்...  என சகல உயிரினங்களும் ஒரே நீர்நிலையில்  வெவ்வேறு முனைகளில் நீர் அருந்தும் புகைப்படம் ஒன்றைக் கண்டிருக்கிறேன். அதனதன் தேவைக்கும் இயல்புக்கும் ஏற்ப நீர் அருந்தும் காட்சியது. ஒரு நாவலும் அது போன்றதே. வாசகனின் விருப்பமும் இயல்பும் தேடுதலுமே நாவலை முடிவு செய்கின்றன.

உலகின் முதல் நாவலை எழுதியவர் ஒரு பெண். ஜப்பானின் லேடி முராசகி எழுதிய `கெஞ்சிக்கதை’தான் முதல் நாவலாகக் கருதப்படுகிறது. அரசவைப் பெண்ணாக இருந்த முராசகி, இந்த நாவலின் முதல் 33 அத்தியாயங்களை எழுதினார் என்றும், மற்றவை அவரது மகள் டைனியால் எழுதப்பட்டது என்றும் கூறுகிறார்கள். `கெஞ்சிக்கதை’யை தமிழாக்கம் செய்திருப்பவர் கா.அப்பாத்துரை. இது சுருக்கப்பட்ட பதிப்பாகும். சாகசமும் காதலும் கலந்த நாவல் அது.

இந்தியாவின் முதல் நாவல் பங்கிம் சந்திரர் எழுதிய `துர்கேசநந்தினி’. ஆங்கிலம் படித்த வங்காளிகள்தான் நாவல் என்ற கலைவடிவத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தவர்கள். பெரும்பான்மை ஆரம்பகால நாவல்கள் தழுவல்களாக அமைந்தன. முதல் நாவல் ஜப்பானில் தொடங்கியபோதும் அதை வளர்த்து எடுத்து தனிவகைமையாகக் கொண்டாடியவர்கள் பிரெஞ்சுக்காரர்கள்.

விக்டர் ஹியூகோ, ஸ்டெந்தால், பிளாபெர்ட், ரூசோ ஆகியோர் எழுதிய நாவல்கள் பிரெஞ்சு இலக்கியத்தின் மகத்தான சாதனைகளாகக் கருதப்படுகின்றன. இதன் பாதிப்பில்தான் ரஷ்ய நாவல்கள் உருவாகின.

நாவல்,  ஐரோப்பிய இலக்கிய வடிவமாக வளர்ச்சிகண்டது. இதற்கு முக்கியக் காரணம், அச்சு இயந்திரங்களின் வருகையே.

19-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் படித்த, மத்தியதர வர்க்கம் உருவாகத் தொடங்கியது. குறிப்பாக பெண்கள் கல்வி பயிலத் தொடங்கினார்கள். ஆனால், படித்த பெண்களும்கூட பொதுவெளியில் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அவர்கள் வீடுகளில் இருந்தபடியே படிப்
பதற்கும், படித்ததை தேநீர் விருந்தில் பகிர்ந்துகொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்கள்.

இதற்காக பெண்கள் விரும்பிப் படிக்கும்விதமாக காதல் கதைகளும் வீரசாகசக் கதைகளுமே நாவல்களாக எழுதப்பட்டன. அவற்றைத் தொடர்கதைகளாக வெளியிட்டார்கள். நாவல் படிப்பது என்பது சமூக அடையாளமாகக் கருதப்பட்டது. இதற்காகவே தேநீர் விருந்துகள் நடைபெற்றன.இந்தியாவில் நாவல் அறிமுகமான சூழலும் இத்தகையதே. தொடர்கதைகளாகவே இந்தியாவின் புகழ்பெற்ற நாவல்களில் பல வெளியாகியுள்ளன. வார இதழ்களின் வளர்ச்சிக்கு, தொடர்கதைகள் முக்கியப் பங்கு வகித்தன.

வாழ்க்கை வரலாறுபோல எழுதப்படுவதே நாவல் என்ற எண்ணம் வேதநாயகம் பிள்ளை தொடங்கி, ஆரம்பகால தமிழ் நாவலாசிரியர்களுக்கு இருந்தது. ஆகவே, அவர்கள் கதாபாத்திரத்தின் பிறப்பு, வளர்ப்பு, திருமணம், வாழ்க்கை என விரிவாக நாவலை வளர்த்துக்கொண்டு போனார்கள். நாட்டுப்புறக் கதைகள் அல்லது புராணம் இந்த இரண்டுவிதமாக மட்டுமே அவர்கள் கதையை அறிந்திருந்த காரணத்தால், அதன் ஒன்றுகலந்த வடிவமாக நாவலைக் கருதினார்கள்.

தமிழ் நாவல்வெளி - எஸ்.ராமகிருஷ்ணன்

இங்கிலாந்தில் துப்பறியும் கதைகள் தொடராக வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றதன் விளைவாக, இந்தியாவிலும் துப்பறியும் நாவல்கள் அதிகம் வெளியாகத் தொடங்கின.

தமிழில் எழுதப்பட்ட முதல் துப்பறியும் நாவல், பண்டித ச.ம.நடேச சாஸ்திரியின் `தானவன் என்ற போலீஸ் நிபுணர் கண்டுபிடித்த அற்புதக் குற்றங்கள்’ என்கிறார்கள். 1894-ம் ஆண்டில் இந்த நாவல் வெளிவந்தது,  தமிழின் ஆரம்பகால துப்பறியும் நாவல்களில் பெரும் அளவு தழுவல் நாவல்களே. ஜே.ஆர். ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், டி.டி.சாமி முதலியோர் துப்பறியும் நாவல்களை எழுதினார்கள். ஜே.ஆர்.ரங்கராஜுவின் நாவல்களில் வரும் துப்பறியும் கோவிந்தனை தனது ஆதர்ச நாயகன் என்கிறார் கல்கி.

தனது `நாவலும் வாசிப்பும்’ நூலில் ஆ. இரா.வேங்கடாசலபதி, இந்த நாவல்களின் வருகையைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

`முதல் உலகப்போர் தொடங்கிய காலத்தை ஒட்டி தமிழில் ஏராளமான நாவல்களும் அவற்றை வெளியிடும் இதழ்களும் அதிகரித்தன. வடுவூர் துரைசாமியும் கோதைநாயகி அம்மாளும் தங்கள் நாவல்களை வெளியிடுவதற்காகவே முறையே `மனோரஞ்சனி’ மற்றும் `ஜகன்மோகினி’ எனும் இதழ்களை நிறுவினார்கள். ரெனால்ட்ஸின் மட்டமான நாவல்களைத் தழுவி வடுவூர் துரைசாமி ஐயங்கார் துப்பறியும் கதைகளை எழுதினார். இந்தக் காலகட்டத்தில் வாசிப்பு என்பது பரவலாக்கப்பட்டது’ எனக் குறிப்பிடுகிறார். துப்பறியும் நாவல்கள், ரொமான்டிக் நாவல்களால் ஏற்பட்ட ஒரே பலன் நாவல் வாசிப்பு என்பது ஜனநாயகப்படுத்தப் பட்டதே.

சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தை ஒட்டி, இந்தியா முழுவதும் நாவல்களில் காந்திய சிந்தனைகள் முதன்மைப்படுத்தப்பட்டன. வேங்கடரமணி எழுதிய ‘தேசபக்தன் கந்தன்’ என்ற நாவல் இந்திய விடுதலை, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு ஆகியவற்றை வலியுறுத்துவதால் `முதல் காந்திய நாவல்’ என்று அழைக்கப்படுகிறது. அதுபோலவே கல்கியின் `தியாகபூமி’, `அலையோசை’, ர.சு.நல்லபெருமாளின் `கல்லுக்குள் ஈரம்’  போன்ற நாவல்களும் குறிப்பிடத்தக்கவை.

கோயில் கலைகளாகக் கருதப்பட்ட நடனம், இசை சார்ந்தும், தேவதாசிகளின் வாழ்க்கை குறித்தும் நாவல்கள் வெளியாகின. கொத்தமங்கலம் சுப்புவின் `தில்லானா மோகனாம்பாள்’ இதில் குறிப்பிடத்தக்கது.

1936-ம் ஆண்டில் `தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்ற நாவலை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வெளியிட்டார். அதில் கடவுள் பெயரால் நடைபெறும் மோசடிகளை அம்பலப்படுத்தினார்.

அ.மாதவையா, வ.ரா., பி.எஸ்.ராமையா, நாரண துரைக்கண்ணன் போன்றவர்கள் நாவலின் வழியாக சமுதாயச் சீர்த்திருத்த நோக்கை முதன்மைப்படுத்தினார்கள். குறிப்பாக பெண்ணுரிமை, கலப்புத் திருமணம், சாதியக் கொடுமை உள்ளிட்ட சிந்தனைகளை முதன்மைப்படுத்தினார்கள்.
ஆரம்பகால தமிழ் நாவல்களின் மொழியும், கதை சொல்லும் முறையும் பெரிதும் பலவீனமாகவே காணப்படுகின்றன. இன்று வாசிக்கையில் அவை ஊதிப் பெருக்கப்பட்ட பிரதிகளாகவே தோன்றுகின்றன. பி.ஆர்.ராஜம் அய்யரின் `கமலாம்பாள் சரித்திரம்’(1896) அ.மாதவையாவின் `பத்மாவதி சரித்திரம்’ (1898) போன்றவற்றில் நாவலாசிரியர் கதையை நாடகம்போல சித்தரித்துக்காட்டுவதற்கே பெரிதும் முயற்சித்துள்ளார்.

`தமிழ் நாவல்கள் அகர வரிசை’ என்றவே.சீதாலட்சுமியின் புத்தகத்தில் பல பெயர் அறியாத நாவல்களும் நாவலாசிரியர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள். அந்தப் பட்டியலை வாசிப்பதே வேடிக்கையாக இருக்கிறது

 `ஈழ நாட்டில் அதன் முதலாவது தமிழ் நாவல் ‘ஊசோன் பாலந்தை கதை’, `பிரதாப முதலியார் சரித்திரம்’ வெளிவந்து 12 ஆண்டுகளின் பின் வெளிவந்தது. இதை திருகோணமலை இன்னாசித்தம்பி 1891-ம் ஆண்டில் எழுதினார். கலாநிதி க.கைலாசபதியின் இந்த முடிவுக்கு மாறாக, கலாநிதி நா.சுப்பிரமணியன்1885-ம் ஆண்டில் சித்தி லெப்பை மரக்காயரால் எழுதி வெளியிடப்பட்ட ‘அசன்பேயுடைய கதை’யை ஈழத்து முதலாவது தமிழ் நாவலாகக்கொள்வார்’ என தேவகாந்தன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

சுதந்திரக் காலகட்டம் வரை ஆங்கில நாவல்களின் தாக்கமே தமிழ் நாவலின் போக்கைத் தீர்மானித்தது. ஆனால்,  சுதந்திரத்துக்குப் பிறகு வங்காளம், மராத்தி, உருது, இந்தி மொழி நாவல்கள் தமிழுக்கு ஏராளமாக மொழியாக்கம் செய்யப்பட்டன. அதன் பாதிப்பே தமிழ் நாவலைத் தீர்மானம் செய்தது.

அதுபோல 1950-களுக்குப் பிறகு ரஷ்ய இலக்கியங்களை தமிழாக்கம் செய்யும் போக்கும் அதற்கான வாசக வட்டமும் உருவாகியது. டால்ஸ்டாயின் நாவல்கள் தமிழுக்கு அறிமுகமாகின. இதன் மறுபக்கமாக அமெரிக்க நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட பியர்ல் பதிப்பகம் வழியாக ஹெமிங்வே,  ஸ்டீபன் கிரேன், ஸ்டீன்பெக், இர்வின் ஸ்டோன் போன்றவர்களின் நாவல்கள் தமிழுக்கு அறிமுகமாகின. இவையும் தமிழில் புதிய நாவல் எழுதுவதற்கான உத்வேகத்தைத் தந்தன. க.நா.சு., சி.சு.செல்லப்பா, சிதம்பர சுப்ரமணியன், ஆர்.ஷண்முகசுந்தரம், நா.பார்த்தசாரதி ஆகியோரின் நாவல்கள் புதிய வகை நாவலுக்கான தொடக்கப்புள்ளிகளாக இருந்தன.

தொடர்கதைகளாக வந்த சரித்திர நாவல்களில் கல்கியின் `பொன்னியின் செல்வன்’ பெற்ற வெற்றி சரித்திர நாவல்களுக்கு தனி இடத்தை உருவாக்கியது. அகிலன், சாண்டில்யன், ஜெகசிற்பியன்,கோவி.மணிசேகரன் என வரிசையாக சரித்திர நாவலாசிரியர்கள் உருவானார்கள். இந்த வரிசையில் சேராத, ஆனால் முக்கியமான சரித்திர நாவலை எழுதியவர் அரு.ராமநாதன். அவரது `வீரபாண்டியன் மனைவி’ மிக முக்கியமான சரித்திர நாவல்.

பொழுதுபோக்கு நாவல், இலக்கிய நாவல் இரண்டுக்கும் வெளியே முற்போக்கு எழுத்து என இடதுசாரி சிந்தனையை மையமாகக் கொண்ட இலக்கியப்போக்கு உருவானது. அதில் தொ.மு.சி.ரகுநாதனின் `பஞ்சும் பசியும்’, பொன்னீலனின் `கரிசல்’,கி.ராஜநாராயணனின் `கோபல்ல கிராமம்’, சுந்தர ராமசாமியின் `ஒரு புளியமரத்தின் கதை’, ஜெயகாந்தனின் `சில நேரங்களில் சில மனிதர்கள்’, `சினிமாவுக்குப் போன சித்தாளு’, எம். வி. வெங்கட்ராமின் `வேள்வித் தீ’, ராஜம் கிருஷ்ணனின் `கரிப்பு மணிகள்’, `குறிஞ்சித்தேன்’, சு.சமுத்திரத்தின் `ஒரு கோட்டுக்கு வெளியே’, கு.சின்னப்ப பாரதியின் ‘தாகம்’, டி.செல்வராஜ் எழுதிய `மலரும் சருகும்’, தனுஷ்கோடி ராமசாமியின் `தோழர்’, சோலை சுந்தரபெருமாளின் `செந்நெல்’, கே.டேனியலின் `பஞ்சமர்’ போன்றவை முக்கியமான படைப்புகள்.

நவீன இலக்கியத்தின் வருகைக்குப் பிறகே தமிழ் நாவல்களின் முகம் உருமாறத் தொடங்கியது. பிழைப்பு தேடிப்போய் பர்மாவிலும் மலேசியாவிலும் வசித்த தமிழ்மக்களின் வாழ்க்கையை நாவலாகச் சொன்னதில் ப.சிங்காரத்தின் `புயலிலே ஒரு தோணி’ மற்றும் `கடலுக்கு அப்பால்’, மலேசிய எழுத்தாளர் சண்முகம் எழுதிய `சயாம் மரண ரயில்’, ஹெப்சிபா யேசுதாசன் எழுதிய `மா - னீ’, `புத்தம் வீடு’, ரங்கசாமியின் ‘லங்கா நதிக்கரையில்’ போன்றவை முக்கியமான நாவல்கள்.

தமிழின் பத்து மகத்தான நாவலாசிரியர்கள் என தி.ஜானகிராமன், அசோகமித்திரன், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, லா.ச.ரா., நீல.பத்மநாபன், பூமணி, சா.கந்தசாமி, வண்ணநிலவன் ஆகியோரைக் குறிப்பிடுவேன்.

இவர்களின் பங்களிப்புதான் தமிழ் நாவலுக்கு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியது. இவர்களின் எல்லா நாவல்களும் என்னளவில் முக்கியமானவை. இலக்கிய விமர்சகர்கள் எல்லோரது சிறந்த நாவல்கள் பட்டியலிலும் இவர்களின் நாவல்கள் இடம் பெற்றுள்ளன.

க.நா.சுப்பிரமணியம் எழுதிய `பித்தப்பூ’, ஜி.நாகராஜனின் `நாளை மற்றுமொரு நாளே’, சம்பத்தின் `இடைவெளி’, கரிச்சான் குஞ்சின் `பசித்த மானிடம்’, காஷ்யபனின் `அசடு’, நகுலனின் `நினைவுப் பாதை’, `நவீனன் டயரி’, இந்திரா பார்த்தசாரதியின் `தந்திர பூமி’, தஞ்சை ப்ரகாஷின் `கரமுண்டார்வீடு’, நாஞ்சில்நாடனின் `தலைகீழ் விகிதங்கள்’, `எட்டுத்திக்கும் மதயானை’, ஆதவன் எழுதிய `காகித மலர்கள்’, விட்டல் ராவ் எழுதிய `நதிமூலம்’, கிருத்திகாவின் `வாஸவேச்வரம்’, ஆ.மாதவனின் `கிருஷ்ணப் பருந்து’, பிரபஞ்சன் எழுதிய `வானம் வசப்படும்’, பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய `புலிநகக் கொன்றை’, சிவகாமியின் `பழையன கழிதலும்’, தோப்பில் முகமது மீரானின் `சாய்வு நாற்காலி’ போன்றவை தமிழின் குறிப்பிடத்தக்க நவீன நாவல்கள்.

80-களில் சுஜாதா பொழுதுபோக்கு நாவல்களில் புதிய உச்சங்களைத் தொட்டார். துப்பறியும் நாவல்களுக்கு மறுஉயிர்ப்பு கொடுத்தவர் அவரே. இதுபோலவே பாலகுமாரன், ஆண், பெண் உறவு குறித்த நுண்மையான சித்தரிப்பை தனது நாவல்களில் எழுதி தனக்கான பெரும் வாசகப் பரப்பைக் கொண்டிருந்தார்.

செவ்வியல் நாவல்கள் எப்போதும் வரலாற்றையும் தத்துவத்தையும் துணையாகக்கொண்டு வாழ்வை விசாரணை செய்யக்கூடியவை. டால்ஸ்டாயின் `போரும் வாழ்வும்’, தஸ்தாயெவ்ஸ்கியின் `கரமசோவ் சகோதரர்கள்’ போன்ற நாவல்கள் இதற்கு உதாரணம். ஆனால், நவீன நாவல்கள் இந்த இரண்டினையும் துண்டித்துவிட்டு சமகால வாழ்க்கையை, தனிமனிதனுக்கு ஏற்படும் இருத்தலியல் பிரச்னைகளை முதன்மைப்படுத்தின. ஆகவே, அது உடனடித்தன்மை கொண்டதாக வாசகனால் உணரப்பட்டது.

நவீனத்துவத்தின் வருகையால் நாவல்களில் ஆசிரியரின் நேரடியான விவரிப்பு குரல் மறைந்துபோனது, குறியீட்டுத் தளத்தில் நாவலைக் கட்டமைக்கும் முறை உருவானது. நாவலின் மொழியும் நுண்மையானது. உரையாடல்கள் குறைந்துபோயின. ஆயிரம் பக்க நாவல்களுக்கு மாறாக, நூறு, இருநூறு பக்கங்களில் வாழ்வின் தரிசனத்தை வெளிப்படுத்தியது நவீன நாவல்.

தமிழ் நாவல்வெளி - எஸ்.ராமகிருஷ்ணன்

பொழுதுபோக்கு நாவல்கள் பேச்சுமொழியைப் பயன்படுத்தியதற்கு மாறாக, நாவலுக்கான இலக்கிய மொழி ஒன்றை நவீன நாவல்கள் உருவாக்கிக்கொண்டன. குறிப்பாக, வட்டார வழக்கை கதைமொழியாகக்கொண்டது அதன் தனிச்சிறப்பு. உளவியல்ரீதியாக மனித உறவுகளை ஆராய்ந்தவிதம், நவீன தமிழ் நாவலின் சாதனை ஆகும்.

90-களில் முதன்மையான நாவலாசிரியர்களாகத் தொடங்கி இன்று வரை தொடர்ந்து நாவல்கள் எழுதிவருபவர்களில் முக்கியமானவர்களாக ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, பெருமாள் முருகன், கோணங்கி ஆகிய ஐவரைச் சொல்வேன். இதில் ஜெயமோகன். தனது `ரப்பர்’ நாவல் தொடங்கி `விஷ்ணுபுரம்’, `பின்தொடரும் நிழலின் குரல்’, `ஏழாம் உலகம்’, `காடு’,`வெள்ளை யானை’, `கொற்றவை’, தற்போதைய `வெண்முரசு’ வரிசை வரை  தமிழ் நாவல் உலகின் முக்கிய ஆளுமையாக உருவாகியிருக்கிறார்.

சாருநிவேதிதாவின் நாவல்கள் கலகப்பிரதிகளாக அடையாளம்கொண்டவை. சம்பிரதாயமான தமிழ் நாவல் பேசத் தயங்கிய பாலுறவு குறித்தும் ஒழுக்கவிதிகளால் கட்டுப்படுத்திவைக்கப்பட்ட உடல் இன்பம், அது சார்ந்த வன்முறை, போலி மதிப்பீடுகள், உலகமயமாக்கலில் ஆண் பெண் உறவில் ஏற்படும் சிக்கல்களையும் அவரது நாவல்கள் பேசுகின்றன.

பெருமாள் முருகனின்  நாவல்கள் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் அவல வாழ்வைப் பேசுபவை. `கூள மாதாரி’, `நிழல் முற்றம்’, `மாதொருபாகன்’, `கங்கணம்’, `பூக்குழி’ என அவர் தனது நாவல்களின் வழியே, தமிழ் நாவலுக்குப் புதிய அடை
யாளத்தை உருவாக்கினார் என்பதே உண்மை.

கோணங்கி படிமமொழியைக் கைக்கொண்டு மிகைபுனைவின் சாத்தியங்களைத் தனது படைப்பில் உருவாக்கிவருகிறார். இறுக்கமான மொழியும், கவித்துவமான பிம்பங்களும் முடிவற்ற வாக்கியங்களும் கொண்ட இந்த நாவல்கள், வாசிப்பில் சிரமத்தை உருவாக்கியபோதும் தனி வகை எழுத்தாக தன்னை முன்னிறுத்திக்கொண்டன.

`உப பாண்டவம்’ தொடங்கி `நெடுங்குருதி’, `உறுபசி’, `யாமம்’, `துயில்’, `சஞ்சாரம்’, `நிமித்தம்’, `இடக்கை’ வரையான எனது நாவல்கள் பரந்த வாசிப்புக்கும் கவனத்துக்கும் உள்ளாகின என்பதை மட்டும் இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன்.

அமைப்பியல்வாதத்தின் அறிமுகமும் அதைத் தொடர்ந்து உருவான பின்நவீனத்துவ சிந்தனைகளும் நாவல் எழுத்தில் புதிய வகைமையை உருவாக்கின. அதில் பிரேம் ரமேஷ், தமிழவன், எம்.ஜி.சுரேஷ்,
பா.வெங்கடேசன் ஆகிய நால்வரும் முக்கியமான நாவலாசிரியர்கள்.

2000-க்குப் பிறகான தமிழ் நாவல்களில் தலித் இலக்கியம் சார்ந்த நாவல்கள் காத்திரமாக உருவாகின. இதுபோலவே பாலியல் பிறழ்வுகள் மற்றும் காமம் சார்ந்த உளச்சிக்கல்களை நாவல்கள் பேசத் தொடங்கின. மீனவ சமுதாயம் சார்ந்த வாழ்வியல் நெருக்கடிகள்,  இஸ்லாமியர்களின் வாழ்க்கை, புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களின் துயர வாழ்வு, ஈழப்போரின் அவலங்கள், பெருநகர வாழ்வின் நெருக்கடிகள் போன்றவை நாவலின் முக்கியக் கருப்பொருளாக அமைந்தன. கதை சொல்வதில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டிருந்த தமிழ் நாவல் மீண்டும் கதை சொல்வதற்குத் திரும்பியது. 

80-களின் இறுதி வரை தமிழ் நாவலில்  புனைவின் சாத்தியங்கள் முழுமையாக அறியப்படவே இல்லை. 2000-ம் ஆண்டுக்குப் பிறகே புனைவின் புதிய வெளிச்சம், தமிழ் நாவலில் அடையாளம் காணத் தொடங்கி யது. ஒரு மையக் கதாபாத்திரத்துக்குப் பதிலாக மூன்று அல்லது நான்கு கதாபாத்திரங்கள் வழியே நாவல் உருக்கொண்டது.பன்முகத்தன்மையும் பல்குரலும் கொண்ட நாவல் எழுத்து உருவானது. கதைமொழியிலும் சொல்முறையிலும் மாற்றங்கள் உருவாகின. மேஜிக்கல் ரியலிசம், இனவரைவியல், மைக்ரோ நாவல், ஆட்டோ ஃபிக்‌ஷன், சயின்ஸ் ஃபிக்‌ஷன் மறைக்கப்பட்ட வரலாற்றை எழுதுவது, பின்காலனிய எழுத்து எனப் பல்வேறுவகைப்பட்ட எழுத்துமுறைகள் தமிழ் நாவலில் கைக்கொள்ளப்பட்டன.

ஷோபாசக்தியின் `ம்’, `கொரில்லா’, சயந்தனின் `ஆறாவடு’, `ஆதிரை’, நோயல் நடேசனின் `வண்ணாத்திகுளம்’, விமல் குழந்தைவேல் எழுதிய ‘வெள்ளாவி’, தேவகாந்தனின் `கனவுச்சிறை’,ஆர்.எம்.நௌஸாத்தின் ‘கொல்வதெழுதுதல்’ சேனனின் `லண்டன்காரர்’, குணா கவியழகனின் ‘நஞ்சுண்டகாடு’, மலேசியா பாலமுருகனின் `நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்’, இமையம் எழுதிய `கோவேறு கழுதைகள்’, `செடல்’, யுவன் சந்திரசேகர் எழுதிய `குள்ளச்சித்தன் சரித்திரம்’,  சோ.தர்மனின் `தூர்வை’, `கூகை’. சல்மாவின் `இரண்டாம் ஜாமங்களின் கதை’, யூமா வாசுகி எழுதிய `ரத்த உறவு’, ஜோ.டி.குரூஸின் `கொற்கை’, `ஆழிசூழ் உலகு’, பாமாவின் `கருக்கு’, உமா மகேஸ்வரியின் `அஞ்சாங்கல் காலம்’, தமிழவனின் `வார்ஸாவில் ஒரு கடவுள்’, அழகிய நாயகி அம்மாள் எழுதிய `கவலை’, ச.பாலமுருகன் எழுதிய `சோளகர் தொட்டி’, கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’, பிரான்சிஸ் கிருபாவின் `கன்னி’, சுகுமாரனின் `வெலிங்டன்’, கீரனூர் ஜாகிர்ராஜாவின் `மீன்காரத்தெரு’, `ஜின்னாவின் தொப்பி’, ஜீ.முருகனின் `மரம்’,  எம்.கோபாலகிருஷ்ணின் `மணல் கடிகை’, தேனி சீருடையானின் `நிறங்களின் உலகம்’, வேல ராமமூர்த்தியின் `குற்றப் பரம்பரை’, இரா.முருகனின் `அரசூர் வம்சம்’, சுப்ரபாரதிமணியனின் `மாலு’, தமிழ்மகனின் `வெட்டுப்புலி’, க.சுதாகர் எழுதிய `6174’,எஸ்.செந்தில்குமார் எழுதிய `காலகண்டம்’, `மருக்கை’, சு.தமிழ்ச்செல்வியின் `அளம்’ மற்றும் `கீதாரி’, ஸர்மிளா ஸெய்யித்தின் `உம்மத்’, லக்ஷ்மி சரவணக்குமாரின் `கானகன்’, விநாயக முருகனின் `வலம்’, அபிலாஷின் `கால்கள்’, கரன் கார்க்கியின் `கறுப்பர் நகரம்’, இரா.முருக வேளின் `மிளிர் கல்’, குமாரசெல்வாவின் `குன்னிமுத்து’, ஏக்நாத்தின் `ஆங்காரம்’, தமிழ்நதியின் `பார்த்தீனியம்’, நக்கீரனின் `காடோடி’, சரவணன் சந்திரனின் `ஐந்து முதலைகளின் கதை’, கிறிஸ்தோபர் ஆன்டனியின் `துறைவன்’ ஆகியவை  2000-க்கு பின் வந்த முக்கியமான நாவல்கள்.

`நாவலின் எதிர்காலத்தை யாராலும் தீர்மானிக்க முடியாது. அதன் வளர்ச்சி இயற்கையைப்போலவே யூகிக்க முடியாத புதிர்த்தன்மைகொண்டது’ என்கிறார் விமர்சகர் ஹெரால்ட் ப்ளும். அது உண்மை. ஆனால், எதிர்காலத் தமிழ்நாவல்கள் எதில் கவனம்கொள்ள வேண்டும் என்பதற்கு சில விஷயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்

அரசியல் நாவல்கள் தமிழில் அரிதாகவே எழுதப்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்புகள், நகர்மயமாதல்,  பழங்குடி மக்கள் வாழ்க்கை,  ஆதினங்கள்-சைவ மடங்கள் பற்றி நான் அறிந்தவரை நாவல் எதுவும் இல்லை. சமணம், பௌத்தம் பற்றிய நாவல் எதுவும் எழுதப்படவில்லை. தொலைக்காட்சி, இணையத்தின் பாதிப்பு எப்படி தனிமனிதனைப் பாதிக்கிறது என நாவல் கவனம்கொள்ளவில்லை. பதின்வயதின் நெருக்கடிகளை விவரிக்கும் நாவல் நம்மிடம் இல்லை. பிஜி தீவுக்குக் கூலியாகப் போன தமிழர்களைப் பற்றி பாரதியின் கவிதையிருக்கிறது, ஆனால் நாவல் எழுதப்படவில்லை. எந்தத் தமிழ் எழுத்தாளரின் வாழ்வும் இதுவரை நாவலாக எழுதப்படவில்லை. இப்படி எழுதப்படாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன.  `Life resembles a novel more often than novels resemble life’ என்கிறார் பிரெஞ்சு எழுத்தாளர் ஜார்ஜ் சேந்த். தமிழ்ச் சூழலுக்கும் இது பொருந்தக்கூடியதே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism