
ஒரு நிலத்தின் கதையைச் சொல்ல, ‘திலீபன்’ எனப் பெயரிட்டிருக்கிறேன். ஒரு நிலத்தைப் பற்றிச் சொல்வதற்கு அந்த நிலத்தில் இருந்து ஏதிலிகளாகத் துரத்தப்பட்ட மனிதனின் கதையைச் சொல்லவேண்டியது முக்கியம். வரலாறு நெடுகவும் துயருற்ற மனிதர்களின் வாழ்வைச் சொல்லுதல் நிகழ்ந்தபடியேதான் இருக்கிறது. எனினும், வதைபடுதலின் எந்தத் தடயங்களும் அதன் அசலான முகங்களோடு பதிவுசெய்யப்படவில்லை. யுத்தம் ஒவ்வொரு தனிமனிதனின் பார்வையிலும் பிரத்யேகமான விளைவுகளையும் மாற்றங்களையும் நிகழ்த்தியிருப்பதோடு, பாதிக்கப்பட்டவனின் அளவில் ஒவ்வொரு துயரும் வெவ்வேறானதே. 7,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஒரே நிலமாக இருந்ததாகச் சொல்லப்படுவதும், இப்போதும் நமக்கும் அவர்களுக்கும் உடல்ரீதியாக ஒரே மாதிரியான டி.என்.ஏ-தான் இருப்பதாகச் சொல்லப்படுவதுமான எம் நிலத்தின் மக்கள், ஏதிலிகளாகத் தஞ்சமேறாத தேசம் இன்று இல்லை. ஓர் இனத்தின் அடையாளத்தை ஒட்டுமொத்தமாக மீட்டெடுக்கவும் அழிக்கவும் கலையால் மட்டுமே சாத்தியம். ஒரு கலைஞன் தன் சமகாலத்தில் எதன் குரலாக நின்று பேசப்போகிறான் என்ற அடிப்படைக் கேள்வியில் இருக்கிறது இந்த மீட்டெடுத்தல்.
மூன்று தலைமுறை ஈழத் தமிழரைக் காவுவாங்கிய சிங்கள - பெளத்த பேரினவாதம், இன்று ஈழத்தில் மிஞ்சியிருக்கும் எம் மக்களிடம் நிகழ்த்திக்கொண்டிருப்பது நேரடியான அடையாள அழிப்பு. ராவணனைத் தங்களது அடையாளமாக சிங்களவர் இன்று கையில் எடுத்திருப்பது எல்லாம் அதன் நீட்சிதான். எனக்கும் இந்த அரசியல் மாற்றங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என, தமிழ்நாட்டில் இருக்கும் எவரும் எளிதில் கடந்துசென்றுவிட முடியாது. ஈழப் போராட்ட வரலாற்றின் மகத்தான அடையாளம், தியாக தீபம் திலீபன். தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான அடையாளமான அந்தப் பெயரைத்தான் என் அடுத்த நாவலுக்கான தலைப்பாகக் கொண்டுள்ளேன். இந்த நாவல் ஈழத்தின் துயர்மிக்கக் காலகட்டம் ஒன்றைப் பேசப்போகிறது. ஆனால், இது திலீபனைக் குறித்த நாவல் அல்ல. திலீபன் என்பது என் அளவில் ஒரு தனிமனிதனின் பெயர் அல்ல, ஓர் இனத்தின் மாபெரும் அடையாளம்.