Published:Updated:

தொலைவில் நகரும் இந்திரலோகம் - மகுடேசுவரன்

தொலைவில் நகரும் இந்திரலோகம் - மகுடேசுவரன்
பிரீமியம் ஸ்டோரி
News
தொலைவில் நகரும் இந்திரலோகம் - மகுடேசுவரன்

தொலைவில் நகரும் இந்திரலோகம் - மகுடேசுவரன்

தொலைவில் நகரும் இந்திரலோகம் - மகுடேசுவரன்

30 ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோல் மாசும் ஒலியும் பெருகியிருக்கவில்லை. இரவின் ஒலிகள்தாம் நமக்குத் தூக்கத்தைக் கொண்டுவரும். செடிகளில் திரியும் சிறுவெட்டுக்கிளிகள் நல்ல ஒலியை எழுப்பும். இன்றுதான் செடிகளே இல்லையே. இரவொலிகளோடு தவறாமல் நாம் கேட்ட இன்னோர் ஒலியும் உண்டு. அதுதான் புகைவண்டிச் சத்தம்.

புகைவண்டிப் பாதைக்குத் தொடர்பில்லாத தொலைவில் நம் ஊர் இருந்தாலும் அந்தச் சத்தம் இருளைக் கிழித்துக்கொண்டு, உறங்கும் மக்களின் செவிகளை எப்படியோ தொட்டுவிடும். சிறுவயதில் எனக்கும் எங்கோ தடதடத்துச் செல்லும் புகைவண்டியின் நீண்ட கூவொலி கேட்டிருக்கிறது. நான் போர்வைக்குள் முடங்கிக்கொள்வேன்.  இவ்வளவு நெடிய கூவொலியை எழுப்பியபடி ‘பொதுக் பொதுக் பொதுக் பொதுக்’ என்று செல்லும் அந்த வண்டியை எப்படியாவது நேரில் பார்த்துவிடவேண்டும் என ஆவல் பொங்கிற்று.

பிறிதொரு நாள் எங்கள் வீட்டுக்கு உறவுக்காரர்கள் வந்திருந்தார்கள். அவர்களின் பிள்ளைகளும் நானும் ரயிலை நேரில் காண்பது என்று முடிவெடுத்து, வீட்டில் எங்கள் ஆசையைச் சொன்னோம். குழுவில் 15 வயதுடைய பெரிய பையனிடம் தலைமைப் பொறுப்பைக் கொடுத்து தூரத்திலேயே நின்று பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று அனுப்பினார்கள். இருப்புப் பாதைக்கு வீட்டிலிருந்து 10 மைல் தொலைவிருக்கும்.

மண் தடம்பிடித்து நடந்தோம். ஏறுவெய்யிலில் கால்கள் கடுத்தன. இரண்டொரு மேடு பள்ளங்களை ஏறிக் கடந்ததும் தொலைவில் அணைக்கட்டு மேடுபோல் சீரான உயரத்தில் ஒரு மண்மேடு தென்பட்டது. ‘அதான் ரயில் ரோடு’ என்று குழுத்தலைவர் அறிவித்தார். எனக்கு அதன் மேட்டுயரத்தைப் பார்ப்பதற்கே நடுங்கியது. மண்மேட்டை அடைந்து ஏறினோம்.

கருங்கல் தூவியமைத்த நீள மெத்தையில் மேற்புறம் வெள்ளி மின்ன, கன்னங்கரேலென இரும்புப் பாளங்கள் இரட்டையாகக் கிடந்தன. அந்தப் பாதை எங்கோ அடிவானத்தில் தோன்றி வெகுதூரத்தில் வளைந்து திரும்பியது. ஒருவன் தண்டவாளத்தில் காதைவைத்துக் கேட்டான். அவன் கண்கள் மின்னின. ‘ரயிலு வந்திட்டுருக்குது…’ என்றான்.

அவன் சொன்னதே நடந்தது. தொலைவில் கருஞ்சிவப்பாய் ஒன்று தண்டவாளத்தின் மீது தென்பட்டது. எனக்கு நடுமண்டை தொடங்கி உள்ளங்கால் வரை ஓர் உன்மத்தச் சிலிர்ப்பு ஏற்பட்டது. சல்லிக்கல் நிரவலுக்குக் கீழே இருந்த ஒற்றையடித் தடத்தில் ஒருவர் பின் ஒருவராக நின்றுகொண்டு ‘கனகாவின் ஊருக்குச் செல்கிற கரகாட்ட ராமராஜனைப் பின்தொடரும் கவுண்டமணிக் கூட்டமாய்’ பக்கவாட்டில் தலையை நீட்டிப் பார்த்தோம்.

தொலைவில் உள்ளங்கை அளவுக்குத் தெரிந்த வண்டி இப்போது பாதித் தொலைவு கடந்துவிட்டது. கூப்பிடு தொலைவில் தூரக்கோபுரம்போல் தெரிந்தது. அதன் கூவொலியும் தடதடப்பும் மெல்ல எங்கள் செவியை எட்டுவதுபோல் இருந்தது. எனக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது. சரிவில் இறங்கி ஒரு மரத்தின் பின்னால் நின்றுகொண்டேன்.

என் பயத்தைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தவர்களும் சற்றே முகமடங்கி சரிவில் இரண்டடி தள்ளியிறங்கி நின்றுகொண்டார்கள். அருகில் வந்துவிட்டது. வந்துவிட்டது. வந்தேவிட்டதையா… ஓங்காரச் சத்தத்தோடு நினைத்துப்பார்க்க முடியாத வேகத்தில் எங்கள் அருகில் வந்துவிட, அடேங்கப்பா... எம்மாம் பெரிது. எல்லாரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்ற வேகத்தில் மண் சரிவில் இறங்கித் தலைதெறிக்க ஓடினோம். நான் எல்லாரையும்விட நூறடி கூடுதலாய் ஓடிய பின்தான் நின்றேன். திரும்பிப் பார்க்கையில் செங்கல் மாலைபோன்ற சரக்கு வண்டி, கடகடகடவென்று போய்க்கொண்டிருந்தது.

அந்த நீளத்தையும், நெருங்கி மிரட்டிய அதன் பகாசுர உருவத்தையும் மறக்கவே முடியாது. ஒருவழியாக ரயிலைப் பார்த்துவிட்டேன். அதுதான் நான் முதலில் பார்த்த ரயில். காண்பதற்கரிய வியன்பொருளைக் கண்டதும் தோன்றும் எல்லா உணர்ச்சிகளும் தோன்றின.

கவிஞர் கந்தர்வன் தம் கவிதையொன்றில் ‘தொலைவில் நகரும் இந்திரலோகம்’ என்று சொல்லியிருப்பார். இரவில் வெளிச்சக்கட்டங்கள் தெரிய, தொலைவில் செல்லும் இருப்பூர்தியைக் கண்டு வர்ணித்தது அது. வாழ்வில் முதன்முதலாய் இருப்பூர்தியைக் கண்டதுகூட நம் எல்லார்க்குமே சிலிர்ப்பான நிகழ்வாக இருக்கக்கூடும். இனிமேல் ரயிலை `இருப்பூர்தி’ என்றுதான் சொல்வேன். தொடக்கத்தில் `புகைவண்டி’, `புகைரதம்’, `தொடர்வண்டி’ என்றெல்லாம் தமிழாக்கிப் பார்த்தனர். நீராவி இழுபொறி நீங்கியதும் அவ்வண்டியின் புகைவு குறைந்தது. தொடர்வண்டி என்று அழைத்தபோது சாலைப் பேருந்துகள்கூட தொடர்வண்டிகளாய்த் தோன்றின. அதனால் இரும்பு, ஊர்தி என்னும் இரண்டு பெயர்ச் சொற்களின் தொகையாக ‘இருப்பூர்தி’ என்பது பொருத்தம். இரும்பின் மீது ஊர்ந்து செல்வது. இரும்பால் ஆகியது.

‘டைட்டானிக்’ திரைப்படத்தில் அந்தக் கப்பலைப் பற்றி விளக்குகையில் ஒரு வசனம் வரும்... ‘இவ்வுலகில் மனிதரால் செய்யப்பட்ட நகரும் பொருள்களுள் இதுவே மிகப்பெரிது’ என்று. ‘மனிதரால் செய்யப்பட்ட நகரும் பொருள்களுள் இருப்பூர்தியே மிக நீளமானது’ என்று சொல்லலாம். மனித குலத்தின் நவீன வரலாறும் தொழிற்புரட்சியும் இருப்பூர்தி கண்டுபிடிப்பால்தான் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தின. இருப்பூர்தி பயன்பாட்டுக்கு வந்த பிறகுதான் போக்குவரத்தின் இலக்கணம் மாறிற்று. பெரும்பொருள்களை இடம்பெயர்ப்பது எளிதாயிற்று. தொடக்கத்தில் ராணுவ நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்ட இருப்பூர்தித் தடங்கள், அத்தேவையை நிறைவேற்றியவுடன் நிலங்களை இணைக்கும் சேவையைத் தொடர்ந்தன. நூறாண்டு கடந்தும் சிதைவுறாத வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று என்று ஒவ்வொரு ஊரின் இருப்பூர்தி நிலையத்தையும் சொல்லலாம்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றி ஆண்டதில் நமக்குக் கிட்டிய நன்மைகளில் சிறந்தது என்று ஒரு பட்டியல் உண்டு. ஆங்கிலம் என்பார் பெரும்பான்மையோர். சிதறிக்கிடந்த நூற்றுக்கணக்கான சிற்றரசுகளை இணைத்து ஒரே குடையின்கீழ் கொணர்ந்தது என்பார் சிலர்.

தொலைவில் நகரும் இந்திரலோகம் - மகுடேசுவரன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முறைமையான அரசு, நீதி நீர்வாகத்தைப் புகுத்தியது என்பாரும் உளர். என்னைக் கேட்டால், மேடுபள்ளங்கள், மலைமுடிகள், ஆற்றுவெள்ளங்கள், வறண்ட பாலைகள் என்று பாராமல் தேசத்திற்கே நாடி நரம்புகளைப்போல இருப்பூர்தித் தடங்களை அமைத்ததுதான் என்பேன்.

சாலைகள் அமைப்பதைப்போன்ற எளிய பணியன்று இருப்புப்பாதை அமைப்பது. பூமியின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இருப்புப்பாதையை மேடு பள்ளமாய் அமைத்துச் செல்ல முடியாது. குறிப்பிட்ட அளவுதான் சரிவாகவோ மேடாகவோ அமைக்கலாம். நிலப்பரப்பு அத்தகைய சமப்பரப்பாகவா இருக்கிறது? அதற்கேற்ப நிலம்தாழ்ந்த இடங்களில் மேற்சொன்னதுபோல் அணைக்கட்டுக் கரையைப்போல் மேடாக்கி அமைக்கவேண்டும். மேடான இடங்களில் நிலத்தை அகழ்ந்து பாதையிட வேண்டும். இருப்பூர்தி சென்றுகொண்டிருக்கையில் இருமருங்கும் கிணற்றுச் சுவர்கள்போல் பக்கவாட்டில் தோன்றுகின்ற பாறைகள் அத்தகையவை.

ஐரோப்பியர்கள் கைப்பற்றியபோது இந்நாடு, எங்கெங்கும் சதுப்பு நிலம்போல் சேறும் சகதியுமாய் மழையூறிக்கிடந்ததாம். அப்படியென்றால் கிலோமீட்டருக்கு ஒரு பாலமேனும் அமைக்கும்படி நீர்க்குறுக்கீடுகள் இருக்கும். தரைவழிச் சாலையை அமைப்பது எளிது. ஏற்கெனவே போக்குவரத்து நிகழ்ந்துகொண்டிருந்த பழைய தடங்களை அகலப்படுத்திக் கப்பியூற்றிச் செப்பனிட்டு அமைத்தால் போதும். ஒரு விமான நிலையத்தையோ துறைமுகத்தையோ அமைப்பதுகூட ஓரிடத்தில் நின்று நிகழ்த்தும் பெருங்கட்டுமானச் செயல்தான். ஆனால், இருப்பூர்தித் தடத்துக்குப் புதிதாய் நிலத்தைக் கீறிச் செல்லவேண்டும். மனிதக் காலடியே பட்டிராத நிலப்பரப்புகள் வழியே கட்டிச் செல்ல வேண்டும். இவற்றை எல்லாம் சவாலாக எடுத்துக்கொண்டு நாட்டின் குறுக்கு நெடுக்காக இருப்பூர்தித் தடங்கள் அமைத்த ஆங்கிலேயரின் முனைப்பைப் பாராட்ட வேண்டும். இன்றைக்கும் மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு அமைக்கப்பட்ட இருப்பூர்தித் தடத்தைப் பார்க்கையில் இதை உணரலாம்.

எந்தவொரு பழைய இருப்பூர்தி நிலையமொன்றின் இரும்புத் தூண்மீதும் ஏதேனும் ஒரு ‘ஸ்டீல்’ என்னும் நிறுவனப்பெயரோ இங்கிலாந்தின் ஊர்ப்பெயரோ இருக்கும். எங்கள் ஊர் நிலையத்தின் தூண் மீது சாய்ந்தபோது மெலிதாய் உறுத்த, உற்றுப் பார்த்தேன். ‘பர்மிங்காம்’ என்று எழுதியிருந்தது.

இடப்பெயர்ச்சிக்கான வாய்ப்புதான் முன்னேற்றத்தைத் தீர்மானிக்கிறது. இருவேறு நகரங்களுக்கிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்துவதற்கு முற்காலத்தில் எந்த வழியுமே இல்லாது இருந்தது. வணிகத்தடங்களே பெருவழிகளாகப் பார்க்கப்பட்டன. அவற்றில் இடையிடையே அன்ன சத்திரங்கள் கட்டப் பட்டிருந்தன. நெடுந்தொலைவில் உள்ள வெளியூருக்குக் கிளம்பிச் செல்லும் ஒருவரை மரணத்தால் பிரிவதைப்போல் கட்டியழுதுதான் வழியனுப்புவார்கள். ஏனென்றால் தம் இருப்பிடத்தைவிட்டு வெளியேறுபவர் மீண்டும் திரும்பி வருவதற்கு எந்த உறுதியும் இல்லை. சாலை வழிகள் எல்லாம் சுதந்திர இந்தியாவில்கூட அண்மைக் காலம் வரை ஒரே சீராக இருக்கவில்லை. ஆனால், இருப்புப் பாதை அமைக்கப்பட்டவுடன்தான் இரண்டு பெரு நகரங்களுக்கிடையே கயிறு போட்டுக் கட்டப்பட்டதைப்போன்ற நெருக்கம் ஏற்பட்டது. அச்சமில்லாத போக்குவரத்துக்கு உறுதி தோன்றியது.

காந்திக்கு வெள்ளையரின் இனவெறியை விளக்கியது தென்னாப் பிரிக்காவின் இருப்பூர்திப் பயணம் என்றால், அவருக்கு இந்தியாவைப் புரியவைத்ததும் அதே இருப்பூர்திப் பயணமே. தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தி, நாடெங்கும் புகைவண்டியின் மூன்றாம் வகுப்பில் சுற்றுப்பயணம் செய்த பின்னர்தான் இந்நாட்டு மக்களின் உண்மைத் துயர்களை உணர்ந்தார். தாம் விடுதலை வேள்வியில் ஈடுபட்டுச் செய்ய வேண்டியன குறித்துத் தீர்மானமான முடிவுக்கு வந்தார்.

ஒரு மாநகரம் எப்படி இயங்குகிறது என்று பார்த்தால், அது நாளொன்றுக்கு நூறாயிரக்கணக்கான மக்களைத் தனக்குள் வரவழைக்கிறது. அதே அளவிலான மக்களைத் தன்னிலிருந்து வெளியனுப்புகிறது. மும்பையில் மட்டும் நாளொன்றுக்கு நூற்று நாற்பதுக்கும் மேற்பட்ட இருப்பூர்திகள் தேசத்தின் எல்லாத் திக்குகளை நோக்கியும் கிளம்பிச் செல்கின்றனவாம். ஒரே ஓர் இருப்பூர்தியில் ஆயிரக் கணக்கான மக்கள் இடம்பெயர்கின்றனர்.

இன்றைக்கு வளர்ந்த மாநிலங்களில் உள்ளூர் அளவில் போக்குவரத்துக்கு மகிழுந்துகளையோ ஈருருளிகளையோ பயன்படுத்துகிறோம். குழுவாகச் சேர்ந்தால் ஒரு வண்டியைப் பிடித்து எந்த ஊருக்கு வேண்டுமானாலும் செல்லலாம். விமானத்திலோ சொகுசு வண்டிகளிலோ எங்கும் சென்று திரும்ப முடியும். ஆனால், பீகாரிலும் ஜார்க்கண்டிலும் வசிக்கிற ஏழை இளைஞன் வேலைவாய்ப்பைத் தேடி தமிழ்நாட்டின் ஒரு நகரத்துக்கு வர விரும்பினால் அவனுக்கு இருப்பூர்தியைத் தவிர வேறு புஷ்பக விமானம் எதுவும் வரப்போவது இல்லை. இங்கே வந்து மாதத்துக்கு ஐயாயிரம் ஆறாயிரம் என்று பொருளீட்டித் தன் தேவைகள் போக மிச்சம் பிடித்ததை எடுத்துக்கொண்டு மீண்டும் ஊருக்குத் திரும்ப வேறு போக்குவரத்து வாய்ப்பு இருக்கிறதா? இருப்பூர்தி நிலையங்களின் நடைமேடைகளில் கொத்து கொத்தாகத் துவண்டு படுத்துறங்கும் வடநாட்டவர்களைக் காண்கையில் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

அன்று நாடு எங்கும் இருப்புப் பாதை அமைத்து போக்குவரத்தை ஏற்படுத்துவதுகூட எளிதாக இருந்திருக்கும். இன்று அந்தப் பாதையில் கூடுதலாய் ஒரு வண்டியை வரவைக்க என்னென்ன பாடுபட வேண்டியிருக்கிறது. நடுவண் அரசின் ஒவ்வொரு ‘வரவு செலவுத் திட்டத்திலும்’ நம்மூருக்கு ஒரு வண்டி கூடுதலாய் வந்து போகாதா என்னும் எதிர்பார்ப்பு நிறைவேறியதா? எங்கள் ஊருக்கு இந்த வண்டிக்கு நிறுத்தம் கொடு என்றே போராட வேண்டியிருக்கிறதே.

தொலைவில் நகரும் இந்திரலோகம் - மகுடேசுவரன்

நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்ன செய்தி அடிவயிற்றைக் கலக்கியது. விமான நிலையம் உள்ளது என்பதற்காக ஈரோட்டுக்கும் கோவைக்குமிடையில், கோவைக்கும் பாலக்காட்டுக்கும் இடையில் என்றும் அதிக போக்குவரத்து இருக்குமாம். நால்வழிச் சாலை அமைப்பதற்கு முன்பிருந்த தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்துகளின் எண்ணிக்கை கொஞ்சநஞ்சம் அல்ல. உயிரிழந்தவர்கள் ஏராளம். இந்நகரங்களுக்கிடையே உள்ளூர் இருப்பூர்திப் போக்குவரத்துச் சேவை,  சென்னையைப்போல் இருந்திருக்குமானால் எத்தனை உயிர்கள் பிழைத்திருக்கும் தெரியுமா? தொழில்வளம் எத்துணை மடங்கு மிகுந்திருக்கும் தெரியுமா? ஆனால், அதற்கு யாரும் ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை.

எல்லா நாடுகளிலும் மீவிரைவு புல்லட் வண்டிகள் பறந்து கொண்டிருக்கின்றன. நம் நாட்டுக்கு அது எப்போது வரும்? ஐரோப்பிய நகரங்களில் சுரங்க இருப்பூர்திகள் பொதுப்போக்குவரத்தின் உயிர்நாடி. எங்கள் ஊரில் நூறு மீட்டருக்கும் குறைவிலான தரையடிப் பாலமொன்றைக் கட்டுகிறார்கள், கட்டுகிறார்கள், கட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

நான் வளர்ந்த பின், என் பயணங்களின் பெரும்பகுதி இருப்பூர்தியிலேயே கழிந்தன. வண்டியைக் கண்டு அஞ்சி ஓடிய நிலத்தை இன்று வரை அடையாளம் மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன். நான் செல்லும் இருப்பூர்தி எப்போது அவ்விடத்தை நெருங்கினாலும் சாளரத்தில் இருந்து எட்டியோ கதவு அருகில் வந்து நின்றோ பார்ப்பேன். எந்தச் சிறுவனும் காணப்படாத அந்நிலத்தில் காலந்தோறும் வறட்சிதான் கூடிக்கொண்டே போகிறது. பனங்கருக்குகள் செத்துப்போகும் அளவுக்கு வறட்சி. பனை காயும் வறட்சியை வரலாற்றின் பஞ்ச காலத்தில்கூட யாரும் குறிப்பிடவில்லை. முன்பெல்லாம் தண்டவாளங்களுக்கு இடையே இணைப்பு நேரும் இடத்தில் சிற்றிடைவெளி இருக்கும். வெப்பத்தில் பொருள்கள் விரிவடையும் என்பதற்காகத்தான் அந்த இணைப்புத் தண்டவாளங்களுக்கு இடையே இடைவெளி விடுவதாய்க் கூறுவார்கள். அதைத் தாண்டும் போதுதான் ‘சடக் சடக்’ ஒலி எழும். இன்று தண்டவாளங்களை ஒரே இணைப்பாய் ஒட்டிவிட்டார்கள். இருப்பூர்திகள் ‘சிவ்’ என்ற ஒலியுடன் சீராகச் செல்கின்றன. இதுதான் அன்றுக்கு இன்றைய மாற்றம்.

இருப்பூர்தியில் பயணமாகிறவர்கள் இரண்டே வகையினர்தாம். எப்போதும் இருப்பூர்தியில் செல்பவர்கள். எப்போதாவது இருப்பூர்தியில் செல்பவர்கள். எப்போதும் செல்பவர்கள் வகையில் என் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சூரத், அகமதாபாத் என்று சுற்றிக்கொண்டே இருப்பார்கள். பல்வேறு இடங்களுக்குச் சென்று விற்பனை வாய்ப்புகள் பெற்றுத் திரும்புவது அவர்கள் வேலை. இந்த நகர்ச்சியில்லாமல் தூக்கம்கூட வருவது இல்லை என்கிறார்கள். உடம்பு, வண்டித் தாலாட்டுக்குப் பழகிவிட்டது. தம்மால் ஓர் இடத்தில் அமர்ந்து பணியாற்றுவதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க இயலவில்லை என்கிறார்கள். நீள் நிலம் அளந்து களிப்பதற்கு ஈடாக வேறு எதையும் கருத முடியாதுதான்.

எப்போதாவது செல்கிறவர்கள் பெரும்பாலும் உறவாடியோ, பணி நேர்ந்தோ செல்கின்றவர்கள். அவர்கள் கருமமே கண்ணாயிருப்பவர்கள். பயணத்தை மகிழ்ந்து அனுபவிப்பார்கள். பகல் வண்டி என்றால் ஊசிமணிபாசி முதற்கொண்டு அவித்த வேர்க்கடலை வரை சிலவற்றை வாங்குவார்கள்.

இருப்பூர்திப் பயணத்தில் மெய்சிலிர்ப்பான தருணங்கள் சில உண்டு. நம் வண்டிக்குக் கீழே பேராறு ஒன்று பெருக்கெடுத்து ஓடுவதைப் போன்ற பரவயமான தருணம் வேறு இல்லை. சிற்றாறுகள்கூட முழுவெள்ளப் பெருக்கில் இருகரை தழுவி ஓடும். அந்த வெள்ளத்தை அருகிருந்து பார்ப்பதற்கே அச்சமாக இருக்கும். அப்போது நம் வண்டி பாலக்கால்களின் ஊன்றிய வலுவால் சடசடத்துக் கடப்பதை உணர்ந்து நெகிழலாம். கோவாவுக்கு அருகில் ஜுவாரி என்றோர் ஆற்றில் கரையுடைக்கும் வெள்ளம் பெருக, அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருப்பூர்தி கடக்கிறது. கோதாவரி ஆற்றின் குறுக்கே இரண்டு கிலோமீட்டர்களுக்குக் குறையாத பாலம் இருக்கிறது. ஆற்றைக் கடப்பது என்று சொல்ல இயலாது. கடல் மீது செல்வதாகத்தான் கருத வேண்டும். அவ்வாறே குகைக்குள் செல்வதுகூட அருமைதான். திடீரென்று உலகத் தொடர்புகள் அறுந்து கால எந்திரத்தில் செல்கிறோமா என்று எண்ணத் தோன்றும்.

இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிடுகிற இன்னொரு தருணமும் உண்டு. வளைவில் ஆரமிட்டுத் திரும்புகிறபோது வண்டியின் முழுநீளத்தையும் நாம் காண வாய்க்கும் தருணம். அதிலும் கடைசிப் பெட்டியில் நாம் இருக்க வேண்டும். நம்மை இழுத்துச் செல்லும் இழுபொறி நாம் சென்று
கொண்டிருக்கும் திசைக்கு வேறு திசையில் போகும். ஆனால், நமக்கும் அதற்குமான வேகத்தில் குறையிருக்காது. தர்மபுரியில் இருந்து ஓசூர் வரையிலான சேலம் பெங்களூரு தடத்தில் இந்த அற்புதத்தை அடையலாம். மேற்குத் தொடர்ச்சி மலைமடியை ஒட்டிச் செல்லும் இருப்புப் பாதையின் வழிநிலக்காட்சிகள் ‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்..?’ என்று உரக்கப் பாடச்சொல்வன. தூத்சாகர் அருவியின் பூஞ்சாரலில் நனைந்தபடி கடக்கும் பயணத்தை வாழ்வில் ஒருமுறையேனும் மேற்கொள்ள வேண்டும். பாலைவனத்தில் இப்படி ஒரு பெருநதியா என்னும்படி சம்பல் நதியைக் கடக்கும் வண்டியில் டெல்லிக்குப் போக வேண்டும்.

தொலைவில் நகரும் இந்திரலோகம் - மகுடேசுவரன்

தமிழ்நாட்டிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்க இருப்புப்பாதைத் தடம் ஒன்று இன்னும் சேவைப்பாட்டில் இருக்கிறது. நம்மில் எத்தனை பேர் அந்தத் தடத்தில் சென்று மகிழ்ந்திருக்கிறோம்? மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை மலைக்குச் செல்லும் இருப்பூர்தியைத்தான் சொல்கிறேன்.

நாள்தோறும் காலையில் மேட்டுப்பாளையத்தில் கிளம்பும் ‘மலைரயில்’ சிறு சிறு குன்றுகுன்றாய் முக்கி முனகி ஏறி, வாய்பிளந்து கிடக்கும் பெரும்பள்ளத்தாக்குகளை அந்தரத்துக் கயிற்றில் நடக்கும் சிறுமியைப்போல் கடந்து செல்லும். ஒரு மலையில் இருந்து இன்னொரு மலை மடிப்புக்கு இலை தாவும் புழுவைப்போல் பற்றி நகரும். அதன் பயணச் சிலிர்ப்பை ஒருமுறையேனும் பட்டறியுங்கள்.

வழி நெடுக ஆளே இல்லாத நிலையங்கள் அடுத்தடுத்து வரும். அங்கே யாரும் ஏற மாட்டார்கள்; இறங்கவும் மாட்டார்கள். ஆனால், நிலைய ஊழியர்கள் சிலர் இந்த வண்டிக்குத் தொட்டித் தண்ணீர் பிடித்து வைத்துக் காத்திருப்பார்கள். நிலைய நடைமேடையிலும் தண்டவாளங்களுக்கு இடையேயும் யானைச்சாணங்கள் குவியலாய்க் கிடக்கும். அடுத்தடுத்த சுரங்கப் பாதைகளில் வண்டி நுழைய, உள்ளிருக்கும் குழந்தைகள் உல்லாசக் கூச்சலிடுவார்கள். குன்னூரில் சென்று இளைப்பாறும்போது இன்னொரு இழுபொறி வந்து அந்த வண்டியை உதகைக்கு இழுத்துச் செல்லும்.

‘உதகை மலை ரயிலுக்கு’ இப்போதுகூட இருப்பூர்திகளின் முன்பதிவு இணையத்தளத்திற்குச் சென்று பதிவுசெய்யலாம். இரண்டாம் வகுப்புப் பயணக் கட்டணம் வெறும் முப்பதே ரூபாய்தான். போக வர அறுபது ரூபாய்தான். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எடுத்துச் செல்லும் வண்டியை அல்லது மகிழுந்தை மேட்டுப்பாளையம் இருப்பூர்தி நிலையத்திலேயே கட்டணத்துக்கு நிறுத்திச் செல்லலாம்.

நான் அவ்வாறு முன்பதிவுசெய்து வீட்டில் அனைவரையும் அழைத்துச் சென்றேன். நான் சென்றபோது எனக்கு முன் பெட்டியில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் துணைப் பிரதமர்களில் ஒருவர் தம் குடும்பத்தோடு வந்து அமர்ந்திருந்தார். நிலையங்களில் வண்டி நீர்நிரப்ப நிற்கையில் பள்ளத்தின் முனைக்குச் சென்று படங்களாக எடுத்துத் தள்ளினார். அப்போதுதான் நினைத்துக்கொண்டேன். நாம் அருகிலுள்ள அருமையைக்கூட உணராதிருக்கிறோம். எங்கிருந்தோ வருபவர்க்கு நம் சிறப்புகள் தெரிந்திருக்கின்றன!