Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

சொல்வனம்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்
சொல்வனம்

யானை வரைதல்...

யானை வரைதல் எளிது
கறுப்பு நிற பென்சில் ஒன்றே போதுமானது
ஏ-4 தாளில் எடுப்பாய்த் தெரியும்
ஆசீர்வதிக்கும் தும்பிக்கையில் தொடங்கி
பாகன் அமரும் முதுகு வழியாக இறங்கி
கீழ் நோக்கிய அம்பாக வாலில் முடிக்கலாம்
வயிற்றுக்கு இருபுறங்களிலும்
நடப்பதுபோல்
நான்கு தூண்கள் வரைந்தால்
சாந்தமான யானை தயார்
காதுமடல் போக
விலைமதிப்பற்ற தந்தமும் வரையலாம்
யானைக்குப் பின்னே சாணம் இருப்பின்
பின்னாட்களில்
மரமொன்று தளைத்திடும் வாய்ப்புண்டு
எல்லாம் போக
பசும்பச்சையில் வனாந்திரம் வரைந்திடுதல்
சாலச் சுகம்
இல்லையேல் நீரருந்தக் காகிதம் தங்காமல்
வீடு புகும் அபாயம் உண்டு.

-மு.மகுடீசுவரன்

குயில்பாட்டு ஓ...

மாகறுப்பு நிறம்
செக்கச்சிவப்பேறிய கண்கள்
சீப்பெடுத்து நீவிக்கொள்ளும் மீசை
நம் ஊர் கருப்பசாமிக்கு
பேன்ட் ஷர்ட் போட்ட மாதிரியான ஆள்
அநியாயத்துக்கு ஸ்வர்ணலதா பக்தர்.
காற்றில் கரையும் ஸ்வர்ண கானத்தை
ஒரு சொட்டும் சிந்தாமல் சுவைப்பார்
சிரிப்பார் அழுவார்
அவரை அம்மா என்றே சொல்வார்.
தன் அம்மா இறந்த பிந்தைய இரவுகளைத்
தலைகோதி பாட்டுரைத்துத் தேற்றி
உறங்கவைத்தவர் ஸ்வர்ணம் என்பார்.
பிழைக்கவந்த பெருநகரத்து
தேநீர் கடையில் நிற்கிறேன்.
பண்பலையில் ஸ்வர்ணலதா
`குயில்பாட்டு ஓ...' எனக் கூவுகிறார்
சட்டெனக் காதுகளில் விசும்பல் சத்தம் கேட்கிறது
சுற்றும் முற்றும் பார்க்கிறேன்
தூரத்தில் மங்கலான கானல் காட்சி
நம் கருப்பசாமி ஒரு திண்டில் அமர்ந்து
முசுமுசுவென அழுதுகொண்டிருக்கிறார்.

- எம்.ஸ்டாலின் சரவணன்

காதல் காட்சி...

மெதுவாக எழுந்துகொள்வான் அண்ணன்
திடீரெனப் பேச்சுக்கொடுப்பாள் அம்மா
பதியாத பதில் கொடுத்துக்கொண்டே
தொலைக்காட்சியை செய்திக்கு
மாற்றியிருப்பார் அப்பா
எல்லாம் பழையபடி ஆகும்போது
திரைப்படத்தின் காதல் காட்சி
முடிந்திருக்கும்.

- இந்து

சொல்வனம்

ராத்திரிகளுக்கு என ஒரு வானம் உண்டு...

குடும்பத்தோடு புதிதாய்க் குடியேறிய வீட்டில்
இன்றைய இரவைக் கழிக்கின்றோம்.
இந்தப் படுக்கையறை கூரைச் சுவர் முழுவதும்
விண்மீன்களையும் நிலாக்களையும்
இரவில் ஒளிரும்படி ஒட்டிவைத்திருக்கிறார்கள்
இதற்கு முன் குடியிருந்தவர்கள்.
நேற்று வரை அவர்களின் வானமாய் இருந்தது
இன்று எங்களின் வானமாய் இருக்கிறது.
அவர்கள் வானத்தை மறந்து
எங்கேயோ வாழ்ந்துகொண்டிருக்கலாம்
என் குழந்தைகள் இரண்டும் படுத்தபடி எண்ணி முடித்து
பங்கிட்டுக்கொண்டார்கள் நிலாவையும் நட்சத்திரங்களையும்
இன்று இந்த வானத்தின் கீழ்
எங்கள் இரவை நகர்த்திக்கொண்டிருக்கிறோம்
நாளைய இரவுகளைத் தலையில் சுமந்தபடி
வேறு வீடும் போகலாம்
அல்லது வீடு இல்லாமலும்போகலாம்
அப்போதும்
எங்கள் ராத்திரிகளுக்கு என ஒரு வானம் உண்டு.
இருப்பவர்களுக்கு ஒரு வானமும்
இல்லாதவர்களுக்குப் பல வானமுமாக
விடிகிறது எங்களின் பொழுது.

- நிலா கண்ணன்.