
பொம்மைகள் கொன்றெறியப்பட்ட வெளியில்
அழுகைப் பெருக்குப் படிந்த விழிகளுடன்
காணாமல்போகச் செய்யப்பட்ட தந்தைக்காய்
காத்திருக்கும் ஏதுமறியாச் சிறுமியே
உன் பிஞ்சுக் கைகளில் சொருகினர்
துருவேறிய துப்பாக்கியை
ஏனெனில், நம்முடைய கைகளில் துப்பாக்கிகளிருப்பதுதான்
அவர்களின் தேவை
பிள்ளைகளைத் தேடும்
எண்ணற்ற அன்னையரின் முடிவற்ற ஓலத்தின் நடுவே
சிறையிலே முதுமையடையுமொரு மகனுக்காய்
வீழ்ந்து புரளும் தாயே
உன் ஒடிந்த தேகத்தில்
உடுத்தினர் தற்கொலை குண்டு அங்கியை
ஏனெனில், நம்மை சிறைச்சாலைகளில் அடைப்பதுதான்
அவர்களின் தேவை
ஆட்களற்று ராணுவம் விதைக்கப்பட்டிருக்கும்
ஆக்கிரமிக்கப்பட்ட பூர்வீக நிலத்தை விடுவிக்க
அகதி முகாமொன்றில் தவமிருக்கும்
மெலிந்துருகிய குழந்தையே
உன் தலையில் அணிவித்தனர் புலித் தொப்பியை
ஏனெனில், நம்மை அகதி முகாம்களில் தடுப்பதுதான்
அவர்களின் தேவை
உடைந்த வாசல்கள் நிறைந்திருக்கும்
விடியாத் தேசத்தில்
மூடா விழிகளுடனிருக்கும்
முதிர்ந்த கிழவனே
உன் வெறுமையான சட்டைப்பையில் திணித்தனர்
மக்கிப்போன குண்டுகளை
ஏனெனில், நம்மை இன்னொரு போருக்குள் தள்ளுவதுதான்
அவர்களின் தேவை
ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்காய்
களம் புகுந்த போராளியே
நிராயுதத்தைத் தழுவி நீ கைவிட்ட பீரங்கியை
எடுத்துவருகின்றனர்
இன்னொரு முள்ளிவாய்க்காலுக்காய்
ஏனெனில், நமது போராட்டத்தைப் போராக்குவதுதான்
அவர்களின் தேவை.