Published:Updated:

விசை - ஸ்ரீதர்ரங்கராஜ்

விசை -  ஸ்ரீதர்ரங்கராஜ்
பிரீமியம் ஸ்டோரி
விசை - ஸ்ரீதர்ரங்கராஜ்

விசை - ஸ்ரீதர்ரங்கராஜ்

விசை - ஸ்ரீதர்ரங்கராஜ்

விசை - ஸ்ரீதர்ரங்கராஜ்

Published:Updated:
விசை -  ஸ்ரீதர்ரங்கராஜ்
பிரீமியம் ஸ்டோரி
விசை - ஸ்ரீதர்ரங்கராஜ்
விசை -  ஸ்ரீதர்ரங்கராஜ்

கோயிலுக்கு முன்பாக அந்தத் திடல் இருந்தது அல்லது திடலின் ஓர் ஓரத்தில் அந்தக் கோயில் கட்டப்பட்டிருந்தது என்றும் சொல்லலாம். கொடைக்காலங்களில் மட்டும் சாமியிறக்கவும், நேர்ச்சைப் பலிகளுக்காகவும், தீமிதி போன்ற விஷயங்களுக்காகவும் மக்களால் புழங்கப்படும் அது, வருடத்தின் மற்ற நாட்களில் எங்களுக்கான விளையாட்டுத் திடலாகும். சாயங்கால நேரத்தில் கோயில் முன் மண்டபத்தில் உட்கார்ந்து பெரியவர்கள் சிலர் அரட்டையடிப்பது உண்டு. அவர்களுக்கெல்லாம் அதுதான் சந்திப்புக்கான இடம். வாரச்சந்தை திங்கள்தோறும் கோயிலுக்குப் பக்கத்திலுள்ள முக்கியச் சாலையில்தான் நடக்கும். அது சமயம் பூசாரிக்குக் கொஞ்சம் வருமானம் உண்டு. கிராமத்தின் அடையாளங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நெடுஞ்சாலையின் காரணமாக மாறிக் கொண்டிருந்த ஊர்களில் ஒன்றான எங்கள் ஊரைச் சுற்றியிருந்த எல்லாக் கிராமங்களுக்கும் சேர்த்து, ஒரே சந்தை அது என்பதால், கொஞ்சம் கூட்டம் இருக்கும்.அப்போது சிலர் நெடுஞ்சாலையிலிருந்து கிளைக்கும் கோயில் சாலையிலும் திடலிலும் கடை வைப்பதுண்டு.

மாலையில் பள்ளி முடிந்து நண்பர்களோடு திடலில் நானும் தம்பியும் இறங்கினோம் என்றால், நேரம் போவதே தெரியாமல் விளையாடுவோம். செல்வராஜு வந்தானென்றால் பேட்டும் பந்தும் கொண்டுவருவான். வீசப்படும் பந்து கண்ணுக்குத் தெரியாமல் போகும் வரை விளையாடுவோம், இல்லையென்றால், அப்பா அழைத்துப்போக வரும் வரை. வீட்டுக்கு அழைத்துப்போக எப்போதும் அப்பாதான் வருவார். வந்தால், எங்களைக் கையில் பிடித்தபடி அவருடைய சகாக்கள் யாருடனாவது பேசிக்கொண்டிருப்பார். அதுவரையில் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த தம்பி, ‘போலாம்ப்பா’ என்று அனத்த ஆரம்பிப்பான். அப்பாவின் கை பலத்தில் அவர் அகன்ற பாதத்தில் கால் வைத்து, அவர் கை முன்னும் பின்னும் போகிற தூரம் வரை வட்டம் அடிப்பேன். அப்படி விளையாடும்போது தம்பி அவர் தோளிலிருந்து முன்பக்கமும் பின்பக்கமும் மாறிமாறிக் குதூகலமாக என்னைப் பார்ப்பான். இவ்வளவுக்கும் அப்பாவின் பேச்சு தடைபடாது. அவராக ‘ச்சரி வர்றேன்’ என்று சொல்லிக் கிளம்பும்போது, அவர் கையைப் பற்றியபடி ஓட்டமும் குதியுமாக வீடு வந்து சேர்வோம். அப்பா எப்போதும் தம்பியைத்தான் தூக்கிக்கொள்வார். ‘என்னியத் தூக்குப்பா’ என்றால், `நீ வளந்துட்டல்ல, தம்பிதான சின்னப்பய’ என்பார். அப்போதெல்லாம் தம்பி மேல் கோபமாக வரும்.

விசை -  ஸ்ரீதர்ரங்கராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்பாவுக்குக்  மழையில் நனைந்த பனைபோல கருத்துத் திரண்ட உருவம். அதற்குச் சற்றும் சம்பந்தமில்லாத உருவம் அம்மாவுடையது. அப்பாவின் தோளுயரம்கூட வர மாட்டாள்; அவரின் கனத்தில் பாதிக்கும் குறைவான உடம்பு; நிறமும் அப்பாவுக்கு நேரெதிரானது. பேசுகிறாளா என்பதே கேட்காத குரல்; அம்மா பேசுவதே அரிதாகத்தான் இருக்கும். யாரோடும் சகஜமாக அவள் பேசிப் பார்த்தது இல்லை.

அப்பாவின் பெரும்பாலான பொழுதுகள் புழக்கடையிலிருந்த முருங்கை மரத்தையொட்டிய ரூமில்தான் கழிந்தது. அங்கே சோடா சுற்றிக்கொண்டோ, எசன்ஸ் ஊற்றிக் கலந்துகொண்டோ, சர்க்கரையைக் காய்ச்சிக்கொண்டோ, கிரேடு அடுக்கிக் கணக்குப் பார்த்துக்கொண்டோ இருப்பார், இல்லாவிட்டால் மரத்தையொட்டி இடதுபுறமிருந்த துவைக்கிற கல்லின் அருகில் அமர்ந்தபடி புட்டிகளை சோப்புத் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவிக் கொண்டிருப்பார். இரண்டு இடத்திலும் இல்லையென்றால், லைனுக்குப் போய்விட்டார் என்று அர்த்தம். இந்த வேலைகள் அத்தனையும் அப்பா மட்டுமேதான் பார்ப்பார். உதவி செய்ய வந்தாலும் ஒப்புக்கொள்ள மாட்டார். சிரித்தபடி, ‘நீ சும்மா வேணா இப்படி ஒக்காந்துக்க’ என்பார்.

பாட்டி எப்போதும் திண்ணையில்தான். சாப்பாடு, தூக்கம் எல்லாம் ஒரே இடத்தில். அவளுக்கு மட்டும் சாப்பாடு அடுத்த தெருவில் உள்ள அத்தை வீட்டிலிருந்து வரும். ஏனென்று அம்மாவிடம் கேட்டால், பதில் சொல்ல மாட்டாள். அப்பா பள்ளிகூடத்தைப் பற்றியும் நான் படிப்பதைப் பற்றியும் விசாரிப்பார். பாட்டி எப்போதாவது எழுந்து புழக்கடைப் பக்கம் வந்தாளென்றால், அங்கேயும் ஒட்டுத்திண்ணையில்தான் அமர்ந்திருப்பாள். ஓயாமல் சளசளவென்று பேசிக்கொண்டிருப்பாள், யாரிடம் பேசுகிறாள் என்று ஆச்சர்யமாக இருக்கும். யாரோ எதிரிலிருப்பதுபோல பேசிக்கொண்டிருக்கும் அவள் பேச்சை யாரும் கேட்பதே இல்லையோ என்று தோன்றும். அப்பா இருந்தால் அவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பாரே தவிர, ஏன் என்ன என்று அவளைக் கேட்க மாட்டார். கொஞ்சநாள் கழித்து பாட்டி, அம்மாவையும் ஊரிலிருக்கும் தாத்தா பாட்டியையும்தான் திட்டுகிறாள் என்று புரிந்தது. ஆனால் அம்மா எதுவுமே பேசாமல் வேலை செய்துகொண்டிருப்பாள். இல்லையென்றால், தரையைப் பார்த்தபடி அமர்ந்திருப்பாள். அதுமாதிரியான சந்தர்ப்பங் களில் வீட்டில் இருக்க எனக்குப் பிடிக்காது. வீட்டுக்குள் விளையாட முயற்சி செய்தால் வசவு எங்களை நோக்கித் திரும்பும் என்பதால், திடலுக்கு ஓடிவிடுவோம்.

விசை -  ஸ்ரீதர்ரங்கராஜ்

வீட்டுக்குள் விளையாடுவது சிங்கி மாமா வந்தால் மட்டும்தான். மாதத்தில் இரண்டு, மூன்று நாட்கள் மாமா வருவார். அவர் வரும்போது பெரும்பாலும் அப்பா லைனுக்குப் போயிருப்பார் என்பதால், மாமாவுடன் விளையாடும் சந்தர்ப்பம் கிடைக்கும். எப்போதும் புழக்கடை வழியாகத்தான் உள்ளே வருவார். கிளைச்சாலையின் முக்கில் இருந்த கடையில் எடுத்த வாடகை சைக்கிளை முருங்கை மரத்தடியில் நிறுத்திவிட்டு, சிங்கி உள்ள சாக்குப்பையைக் கேரியரிலிருந்து இறக்கி சோடா ரூம் வாசலில் வைத்துவிட்டு, “அண்ணாச்சி வெளிய போயிருக்காரு போல, இன்னிக்குக் கஞ்சி மயினி கையாலன்னு எழுதியிருக்கு” என்றபடி ஒட்டுத்திண்ணையில் அமர்ந்துகொள்வார்.

அம்மாவிடமிருந்து எந்த பதிலும் வராதென்றாலும் மாமா இதைச் சொல்வது வழக்கம். எப்போதும் சொல்லும் இந்த வார்த்தைகளை நான் எதிர்பார்த்தது போலவே, அவர் அதைச் சொல்லும்போது எனக்கு சிரிப்புப் பொத்துக்கொண்டு வரும். பிறகு ஊரிலிருக்கும் தாத்தா, பாட்டியைப் பற்றிச் சொல்வார். அதற்கும் அம்மாவிடமிருந்து எந்தக் கேள்வியும் வராது. அவருக்குத் தனியாக அப்பாவைப்போலவே பெரிய தட்டில் சோறும் குழம்புமாக நிறைத்து கொடுக்கும்போது அம்மா என்னைத்தான் கூப்பிட்டுக் கொடுப்பாள். சாப்பிட்டபடி ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். அவர் வரும்போது மட்டும் பாட்டி எதுவும் பேசாமல் இருப்பது அதிசயமாக இருக்கும். ஆனால், மாமா சென்றதும் அம்மாவைத் திட்ட ஆரம்பித்துவிடுவாள். அப்பா இருந்தால் அப்படி இல்லை. மாமா சாக்கை இறக்கியவுடன், அப்பா அவருக்குப் பணம் கொடுப்பார். அதை வாங்கியவுடன் `வரட்டா?’ என்றபடி மாமா கிளம்பிவிடுவார்.

மாமாவுடன் விளையாட எப்போதும் எங்களுக்கு ஒரேயொரு விளையாட்டுதான் இருந்தது. என்றாலும் அலுக்காத விளையாட்டு. அதை விளையாட அவர் அவ்வளவு சுலபமாகச் சம்மதிக்க மாட்டார். ரொம்பக் கெஞ்சினால், மிதப்பாகச் சுற்றுமுற்றும் பார்த்துச் சரியென்று சொல்லிவிட்டு, தன் பையிலிருந்து பேனாவை எடுத்து மூடியைக் கழற்றித் தரையில் நிற்கவைப்பார். நாங்கள் புரிந்துகொண்டு சற்றுத் தள்ளி உட்கார்ந்து கொள்வோம். மூடி எங்களுக்கு நடுவில் இருக்கும். கையைக் கட்டியபடி சற்றுநேரம் மூச்சையடக்கி அந்த மூடியைப் பார்த்துக்கொண்டே இருப்பார். நாங்களும் பேசக் கூடாது. திடீரென்று அந்த மூடி கீழே விழுந்து சட்டென நகரும். ஒவ்வொரு முறையும் உச்சகட்டப் பரவசத்தில் கையைத் தட்டிக் கூச்சலிடுவேன். தம்பிக்குப் புரிந்ததோ இல்லையோ, அவனும் என்னோடு சேர்ந்துகொள்வான். மாமா லேசாகச் சிரித்துக் கொண்டே சிவந்து கலங்கிய கண்களோடு எங்களைப் பார்ப்பார். ஓடிப்போய் அம்மாவிடம் நடந்ததைச் சொன்னால், லேசாகப் புன்னகைத்து “ஆங், சரி... போய் வெளாடுங்க” என்பாள். அவ்வளவுதான், அதற்கு மேல் பேச மாட்டாள்.

மாமாவின் இந்த வித்தை யாராலும் செய்துகாட்ட முடியாதது. நண்பர்களிடத்தில் இதைச் சொல்லும்போது, அவர்களும் இதைப் பார்க்க விரும்புவது எனக்குப் பெருமையாக இருக்கும், குறிப்பாக செல்வராஜுவிடம். அவனிடம் பேட் இருப்பதால் எப்போதும் அவனைச் சுற்றி இருப்பவர்கள் மாமாவைப் பற்றிய இந்தக் கதைகளின்போது என்னைச் சுற்றி இருந்தனர். அவ்வப்போது மாமாவின் சாகசங்களாக நான் சொல்லும் கதைகளுக்குத் தனி மரியாதையும் பொறாமை கலந்த நட்புகளும் இருந்தன. நான் பொய் சொல்கிறேன் என்று செல்வராஜு சொல்லும்போது, அவருக்கு எப்படி அந்த சக்தி கிடைத்தது என்பது பற்றி மாமாவுடன் நடந்த உரையாடலைச் சொல்வேன்.

விசை -  ஸ்ரீதர்ரங்கராஜ்

“ஒருநா நைட்டு சுடுகாட்டுப் பக்கம் அவரு வரும்போது, ஒரு பொண்ணு நின்னுட்டுருந்துச்சு. அது மோகினிதான்னு அவருக்குத் தெரியும். அது அவரை அடிக்க அவரு பக்கத்துல வரும்போது டக்குனு அதோட முடியக் கத்தரிச்சு எடுத்துட்டாரு. `எம்முடியக் குடு, எம்முடியக் குடு’னு மோகினி பின்னாலயே வந்துருக்கு. இவரு ஒடனே தொடயக் கீறி முடிய உள்ளாற வெச்சுத் தச்சுக்கிட்டாரு. மோகினியால ஒண்ணும் பண்ண முடியல. அதுலருந்து தம் முடி தனக்கு வேணுமுன்னு இவுரு சொல்றதெல்லாம் அது கேக்குதாம். அதுதான் அவருக்கு அந்த மாதிரி சக்தியெல்லாம் குடுக்குது.’’

இந்தக் கதையை மாமா பலமுறை சொல்லியிருக்கிறார். என்றாலும்,  ஒவ்வொருமுறை கேட்கும்போதும் அதே பயம் வரும். அன்றைக்கு இரவில் தூங்கும்போது அம்மாவைக் கட்டிக்கொண்டு படுக்க முயற்சிப்பேன். ஆனால் அம்மா, ‘வளந்த பய... என்ன சின்னப்புள்ளயாட்டம்’ என்று விலக்கிவிடுவாள். அன்றைய இரவு சிறிய சத்தங்களுக்குக்கூடத் திடுக்கிடும் இரவானாலும், அடுத்த முறையும் அவரிடம் அதே கதையைக் கேட்க விரும்புவேன். `வளர்ந்து பெரியவனானதும் மோகினியைப் பார்த்துப் பயப்படக் கூடாது’ என்று நினைத்துக்கொள்வேன். ஆனால், மோகினியின் முடியை எப்படிக் கத்தரிப்பது, தொடையை எப்படிக் கீறித் தைப்பது என்பதுதான் தெரியாமல் இருந்தது.

ஒருமுறை கோயில் திடலில் விளையாடிக் கொண்டிருக்கையில் மாமா வந்தபோது இதைக்கேட்டேன்.  ‘`அது நீ பெரியவனானதும் தெரியும்’’ என்றார்.

கொஞ்ச நேரத்தில் எங்களை அழைத்துப்போக அம்மா வருவது தெரிந்தது. அம்மா கையில் ஒரு துணிப்பை. அதற்குள் என்ன இருந்ததென்று தெரியவில்லை. அவள் மாமாவைப் பார்த்ததும் அவரோடு பேசியதும் எனக்கு அதிசயமாக இருந்தது. அம்மா ``வீட்டுக்குப் போகலாம்’’ என்று அழைத்ததும், ``விளையாடிவிட்டு அப்பாவோடு வருகிறோம்’’ என்றதற்கு அம்மா சம்மதிக்கவில்லை. `‘மழை வரப்போவுது’’ என்றாள். ஆனால், அன்று மழை வரவில்லை.

பள்ளியில் அரைப் பரீட்சை விடுமுறை ஆரம்பித்தபோது வழக்கம்போல கொடையும் ஆரம்பித்திருந்தது. இந்தச் சமயங்களில் சந்தையிலும் மற்ற கடைகளிலும் சோடாக்கலர் அதிகம் போகுமென்று அப்பா சொன்னார். நானும் தம்பியும் அப்பாவுக்கு உதவி செய்வதில் இறங்கியிருந்தோம். கொடையன்று, பேட்டும் பந்தும் வாங்கித் தருவதாகப் பேச்சு. பேட் இல்லாததால்தான், ஒப்புக்குச் சப்பாணிபோல விளையாட வேண்டியிருக்கிறது. இனி அந்தக் கவலையில்லை என்பதால், உற்சாகத்தோடு ஒப்புக்கொண்டிருந்தேன். காலிப்புட்டிகளில் தண்ணீர் மற்றும் கலர் நிரப்புவது என் வேலை. அப்பா அதை மும்மூன்றாக எடுத்து மெஷினில் வைத்துச் சுற்றுவார். அவர் சுற்றும்போது நான் எண்ண வேண்டும். கோலி சோடாவுக்கு முப்பத்தி ஐந்து சுற்று, கலருக்கு இருபத்தைந்து. எண்ணும்போது பத்துக்கு மேல் எண்ணத் தெரியாத தம்பியும் கூட சேர்ந்து எண்ணுவான்.

மாமா சரியாக இரண்டு நாட்கள் கழித்து, சிங்கி, எசென்ஸ் எல்லாம் கொண்டு வந்திருந்தபோதும், அப்பா அவரிடம் எதுவும் வேண்டாமென்று சொல்லி விட்டார். எசென்ஸ்கூட வாங்கவில்லை. மூலையில் அடுக்கப்பட்டிருந்த பொருட் களைக் காண்பித்து, “தெரிஞ்ச சிநேகிதரு ஆரம்பிச்சிருக்காரு, இங்கனயே வாங்கிக்கிடுவேன் இனிமே. என்னத்துக்கு அம்புட்டுத் தூரம் சைக்கிளை மெறிச்சுக் கொண்டாரணும். உமக்கும் நடை மிச்சம். போனமொறக்கே கணக்கை நேர் பண்ணியாச்சு. இனி சரக்கு வாணாம்” என்றார்.

விசை -  ஸ்ரீதர்ரங்கராஜ்

மாமா, “அது உள்ளதுதான, சிநேகிதம்னா ஆதரிக்கணுமில்ல...” என்றபடி சோடா ரூம் வாசலிலேயே சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தார்.

எனக்கு அந்த மூட்டைகள் எப்போது, எப்படி இங்கே வந்தன, நான் எப்படி இவ்வளவு நேரம் அதைக் கவனிக்காமல் இருந்தேன் என்று ஆச்சர்யமாக இருந்தது. அப்பா மாமாவின் பக்கம் திரும்பாமல் மெஷினைச் சுழற்ற ஆரம்பித்தார்.

``அப்போ நாங்கெளம்புறேன் என்னா... வர்ரேன்” என்றபடி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வெளியேறும்போது முருங்கை மரத்துக்கருகில் பாத்திரம் விளக்கிக்கொண்டிருந்த அம்மாவைப் பார்த்தார். அம்மா எதுவும் பேசாமல் தரையில் தேங்கி வெயிலில் மஞ்சளும் சிவப்புமாக மினுமினுத்து நகர்ந்து கொண்டிருந்த நீரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு அப்பா மேல் கோபம் வந்தது.

சோடாரூமிலிருந்து வெளியேறி மாமா போன திசையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பாட்டி ஒட்டுத் திண்ணையில் இருந்தபடி அம்மாவை நோக்கி வசவை வீசிக்கொண்டிருந்தாள். அம்மா கொஞ்ச நேரம் தரையிலிருந்த தண்ணீரை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, கையிலிருந்த பாத்திரத்தைத் தடேரெனக் கீழே போட்டு விட்டு விறுவிறுவென சமையலறைக்குள் நுழைந்தாள்.

சத்தத்திற்கு அப்பா வெளியே வந்து, “கொன்னு போட்ருவேன்... நாயே...” என்று கத்தியபடி சமையலறை நோக்கி வேகமாக இரண்டு எட்டு வைத்தார்.

பாட்டி, “கால ஒடச்சுப்போடு. நாயைக் குளுப்பாட்டி நடுவூட்ல வெச்ச பாரு, ஒன்னியச் சொல்லணும். அது பீயத் திங்கத்தான போவும்” என்று கத்தினாள். அப்பா பாட்டியை நோக்கிக் கையை நீட்டி, எதுவும் சொல்லாமல் பல்லைக் கடித்து முறைத்தபடி சிறிது நேரம் நின்றுவிட்டு வேகமாக மீண்டும் உள்ளே நுழைந்து கொண்டார்.

பாட்டி விடாமல் “என்னைச் சொல்லு, அவளைக் கேக்கத் துப்பில்ல ஒனக்கு” என்று கத்திக்கொண்டிருக்க, அப்பா மெஷினின் கைப்பிடியில் கையை வைத்தபடி விளக்குப் பிறையைப் பார்த்துக் கொண்டிருந்தார். மெஷினைச் சுற்றவில்லை. என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அப்பா யாரையும் திட்ட மாட்டார். அதிலும் அம்மாவை அவர் எதுவுமே சொன்னதில்லை. சிறுநீர் முட்டிக்கொண்டு வருவதுபோல இருந்தது. எத்தனை சுற்றில் நிறுத்தியிருந்தோம் என்பதை மறந்துவிட்டேன் என்பது தெரிந்தது. தம்பியைத் தேடியபோது அவன் இல்லை. திடலை நோக்கி ஓடினேன்.

கொடையன்று அப்பாவோடு கோயிலுக்கு வந்தபோது சப்பரம் இறங்கியிருந்தது. வண்ண விளக்குகளால் அம்மன் உருவம் அமைக்கப்பட்டு, ட்யூப்லைட் வெளிச்சத்தில் திடல் பகல்போலவும், குழாய் சத்தம், குழுமியுள்ளவர்களின் பேச்சுச் சத்தம்... என இடமே வேறு மாதிரியிருந்தது. திடலில் ஒரு பக்கம் முழுக்க ஆற்றுமணல் பரப்பப்பட்டு, ஆங்காங்கே பலிகளின் ரத்தத்தில் சொதசொதவென ஊறியிருந்தது. இரண்டு தலையற்ற சேவல்கள் எங்களை நோக்கி ஓடி வந்தன. சாமியைக் கும்பிட்டு முடித்ததும் அப்பா சகாக்களோடு பேச ஆரம்பித்தார்.

விசை -  ஸ்ரீதர்ரங்கராஜ்

எனக்கு அப்பா வாங்கித் தரவேண்டியதை மறந்துவிடுவாரோ, இல்லாவிட்டால் கடைகளில் பேட்டும் பந்தும் இல்லாமல் போய்விடுமோ என்று கவலையாக இருந்ததால் அப்பாவின் கையை இழுத்துக்கொண்டே இருந்தேன். அவ்வப்போது என்னைப்பார்த்து தலையசைத்துவிட்டு, பேச்சைத் தொடர்ந்தார். ஏற்கெனவே பேட்டும் பந்தும் வாங்கப் போவதை எல்லோரிடமும் சொல்லியிருந்தேன். இதனால் செல்வராஜ் சொல்வதையெல்லாம் இனி கேட்க வேண்டியது இல்லை. அவன் விரும்பினால் எங்களோடு வரட்டும், இல்லையென்றால் தனியாக ஒரு டீம் அமைக்கலாம் என்பது வரை யோசித்திருந்தோம். பேட்டும் பந்தும் இல்லையென்றால் எல்லோரும் என்னைக் கேலி செய்வார்கள் என்று நினைத்துக் கலக்கமாக இருந்தது.

சிறிது நேரம் கழித்து அப்பாவோடு கடைகளைச் சுற்றிச்சுற்றி வந்து பார்த்தும் நினைத்ததுபோலவே பேட்டும் பந்தும் கிடைக்கவில்லை. அப்பா அதற்குப் பதிலாக ப்ளாஸ்டிக்கில் உள்ள பேட்டும் பந்தும் வாங்கித்தருவதாக அல்லது வேறு ஏதாவது வாங்கிக்கொள்ளச் சொல்லியும் கண்ணீர் முட்ட மறுத்துவிட்டேன். அழுதுகொண்டே அது எவ்வளவு முக்கியமென்று அவருக்கு விளக்கினேன். அப்பா மறுநாள் எப்படியும் டவுனுக்குப் போய் அதை வாங்கி வந்துவிடுவதாகச் சொன்னார். 

வீடு திரும்பும்போது அப்பாவைத் தூக்கிக்கொள்ளச் சொன்னேன். வழக்கம் போலவே, ‘நீ வளந்துட்டல்ல, பெரிய பயலாய்ட்டல்ல’ என்றார். ஆனால், வீட்டுமுக்கை நெருங்கியவுடன் தம்பியைக் கைமாற்றிக் கொண்டு என்னையும் தூக்கினார். உயரத்திலிருந்து தெருவைப் பார்ப்பதும் தெருவின் இரண்டு பக்கமும் போடப்பட்டிருந்த ட்யூப்லைட் வெளிச்சத்தில் அப்பா முகத்தை அவ்வளவு அருகில் மேலிருந்து பார்ப்பதும் வித்தியாசமாக இருந்ததால் எனக்கு சிரிப்பு பொங்கிக்கொண்டு வந்தது. அப்பாவும் சிரித்துக்கொண்டே வந்தார். நிமிட நேரம்தான், முக்குத் திரும்பியவுடன் வீட்டு வாசலில் திட்டுத்திட்டாக நிறையபேர் நின்றிருந்தனர். அத்தை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்க, பாட்டி வாசலில் நின்றபடி அழுதுகொண்டிருந்தாள். அப்பா நின்று, என்னைக் கீழே இறக்கிவிட்டார்.

(திருச்செந்தாழைக்கு...)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism