Published:Updated:

கதைகளின் கதை - பாவ மூட்டையின் எண்:188 - சு.வெங்கடேசன்

கதைகளின் கதை - பாவ மூட்டையின் எண்:188 - சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
கதைகளின் கதை - பாவ மூட்டையின் எண்:188 - சு.வெங்கடேசன்

ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

கதைகளின் கதை - பாவ மூட்டையின் எண்:188 - சு.வெங்கடேசன்

ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

Published:Updated:
கதைகளின் கதை - பாவ மூட்டையின் எண்:188 - சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
கதைகளின் கதை - பாவ மூட்டையின் எண்:188 - சு.வெங்கடேசன்
கதைகளின் கதை - பாவ மூட்டையின் எண்:188 - சு.வெங்கடேசன்

பாவ மூட்டைகளை இறக்க, காசிக்குப் பயணம் போனவர்களின் கதைகள் பல நூற்றாண்டுகளாகச் சொல்லப்பட்டு வருகின்றன. காசியிலும் ராமேஸ்வரத்திலும் நீராடுவதை, பாவம் போக்கும் புனித காரியமாக சைவ மதத்தில் நம்பிக்கைகொண்ட மக்கள் செய்துவருகின்றனர். தூர அளவைக் கணக்கிட்டுப்பார்த்தால்  ஆயிரக்கணக்கான  மைல் தொலைவைக்கொண்ட நகரங்கள் இவை. `இவ்வளவு நெடுந்தூரப் பயணம் எப்படிச் சாத்தியமானது, அதற்கான சாலை வசதிகள் இருந்தனவா,  போக்குவரத்து வாகனங்கள் எப்படி இருந்தன, பயண வழியின் அபாயங்கள் என்னென்ன, அவற்றை எப்படிப் பயணிகள் சமாளித்தனர்?’ என அடுத்தடுத்து கேள்விகள் எழுகின்றன.

உலகின் புராதன சாலை வழித்தடங்களைக் கொண்டது இந்தியா. இந்தியாவின் சாலைகளைப் பற்றிய பல குறிப்புகளை கிரேக்க வரலாற்றாசிரியர்கள் வழங்குகின்றனர். அர்த்தசாஸ்திரமும் சங்க இலக்கியமும் சாலைகளையும் பயணங்களையும் பற்றிய   பல அரிய தகவல்களைத் தருகின்றன.

சந்திரகுப்தனின் அரசவைக்கு வந்திருந்த மெகஸ்தனீஸ் இந்திய சாலை முறைகளைப் பற்றி கூறும்போது, `இந்தியர்கள் சாலை அமைப்பதில் மிகவும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர்’ என்றும், `சாலைகள் அமைத்த பிறகு, இரண்டு மைல்களுக்கு ஒரு கம்பம் நட்டு அதில் தூர விவரமும் கிளைச் சாலைகள் செல்லும் ஊரின் விவரமும் எழுதியிருந்தார்கள்’ என்றும் குறிப்பிடுகிறார். ராஜபாட்டைகளில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களைப் பற்றி சரியான கணக்கு வைக்கப்பட்டிருந்ததோடு, அங்கு வழிச்செல்வோர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார் மெகஸ்தனீஸ்.

அசோகனின் கல்வெட்டு ஒன்று, `வழிச்செல்வோரின் நலன் கருதி, அரசன் வழிகளில் எல்லாம் கிணறு தோண்டச் செய்ததோடு, மரங்களையும் நடச்செய்தான்’ எனக் குறிப்பிடுகிறது. அர்த்தசாஸ்திரத்தில் எந்த எந்தச் சாலைகள், எவ்வளவு அகலத்தில் அமைக்கப்படவேண்டும் என்ற குறிப்பு இடம்பெறுகிறது.

பரதன் ராமனைச் சந்திக்க சித்திரக்கூடமலைக்குச் சென்றபோது, அவனுடன் சாலையைச் செப்பனிட பல கூலியாட்கள் சென்றதாக ராமாயணம் கூறுகிறது. அரசன் செல்லும் பாதையில் இருக்கும் குண்டு குழிகள், அரசன் செல்லும் பொருட்டே சரிபடுத்தப்படுவது என்பது காலகாலமாக நடந்து
வரும் ஒரு செயல் என்பது இந்த இடத்தில் கூடுதல் தகவல்தான். மற்றபடி, பயணப் பாதையைச் சரிப்படுத்துவது, மிக முக்கியமான பணியாக இருந்துள்ளது என்பதைக் கவனம்கொள்க.

`ஜாதகக் கதை’யில், புத்தர் சாலையைச் செப்பனிடும் வேலையில் அவரே ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அதிகாலையில் எழுந்திருந்து கையில் அமுக்குக்கட்டையையும் கோடாரியையும் எடுத்துக்கொண்டு வெளியில் செல்வார். நகரத்தின் சாலைகளிலும் சாலைகள் கூடுமிடங்களிலும் கிடக்கும் கற்களை அப்புறப்படுத்துவார். குறுகலான சாலைகளில் வண்டிகள் செல்லும்போது, வண்டிகளின் அச்சுக்களுடன் உராயும் மரம், செடி, கொடிகளை வெட்டி எறிவார். கரைகள் கட்டுதல், குளங்கள் வெட்டுதல், சத்திரம் கட்டுதல் போன்ற வேலைகளிலும் புத்தரும் அவருடைய சகாக்களும் ஈடுபட்டதாக `ஜாதகக் கதைகள்’ கூறுகின்றன.

மெளரியர்கள் காலம் தொடங்கி, முகலாயர்கள் காலம் வரை அனுமதிச் சீட்டு பெற்றே மக்கள் யாத்திரை செய்துள்ளனர். அனுமதிச் சீட்டு தரும் அதிகாரி, தரப்படவேண்டிய தொகை, அதிகாரிகளின் கடமைகள் பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.

`காசியைச் சேர்ந்த அந்தணன் ஒருவன் கன்னியாகுமரிக்கு யாத்திரை வந்தான்’ என்ற குறிப்பு `மணிமேகலை’யில் இடம் பெற்றுள்ளது. தனிமனிதனின் நீண்ட ஒரு யாத்திரையைப் பற்றிய தொடக்ககாலப் பதிவு இது. இந்திய நிலப்பரப்பின் மேற் பகுதியில் தொடங்கி மையப் பகுதியை ஊடறுத்து, தென் கோடிக்கு வந்துசேரும் நெடிய பயணம் இது.

கதைகளின் கதை - பாவ மூட்டையின் எண்:188 - சு.வெங்கடேசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரலாற்றின் ஆரம்பகாலம் தொட்டு, அண்மைக்காலம் வரை நீடிக்கும் இந்தப் பயணம் பற்றிய துல்லியமான விவரங்கள் அடங்கிய குறிப்புகள் நமக்குக் கிடைத்துள்ளனவா எனப் பார்த்தால், நவீனக் காலத்தில் ரயில் போக்குவரத்து அறிமுகமான பிறகு, தமிழகத்தில் இருந்து காசிக்குப் போகும் பாதையை, பயணிகளுக்கு அறிமுகப்படுத்தி எழுதப்பட்ட பதிவுகள் நமக்குக் கிடைக்கின்றன. 100 ஆண்டுகளுக்கு முன்னர் ராமேஸ்வரம் – காசி யாத்திரையும், காசிக்குச் செல்லும் மார்க்கமும் அடங்கிய `யாத்திரவிளக்கன்’ என்ற நூலை பூ.ரா. அப்பாதுரை முதலியார் பிரசுரித்தார்.

அதில் காசிக்குச் செல்லும் மார்க்கத்தை கீழ்க்கண்டவாறு அவர் தொடங்குகிறார்... `சென்னைப்பட்டணம் பீச் ஜங் ஸ்டேஷனில் இருந்து, கூடூர் ஜங் ஸ்டேஷன் மார்க்கமாய், பெஜவாடா ஜங் ஸ்டேஷனுக்குப் போக வேண்டும். பின்னர் பெஜவாடா ஜங் ஸ்டேஷனில் இருந்து ராஜமகேந்திரம் ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். (குறிப்பு: ராஜமகேந்திரத்துக்கு அருகில் கோதாவரி நதியும் கோடிலிங்க தேவாலயமும் மார்க்கண்டேயர் ஆலயமும் 4 மைலில் தவளேசுரம் அணையும் இருக்கின்றன. ராஜமகேந்திரத்தில் இருந்து படகு மூலமாக 60 மைலில் உள்ள பத்ராசலத்துக்குப் போகலாம். வழியில் தங்கும் இடங்கள்: 1.தாள்ளப்புடி,    2. தும்பிக்குடம்,  3.பாபிகுண்டா. படகு சார்ஜ்: ரூபா: 2)  என வரிசைப்படுத்தி அடுத்தடுத்த ஜங்ஷன்கள் எவை எவை, அவற்றுக்கு அருகில் உள்ள கோயில்கள், நதிகள் அல்லது பார்க்க வேண்டிய இடங்கள், தங்குவதற்கு ஏற்ற இடங்கள்... எனப் பல விவரங்களை அவர் கொடுத்துள்ளார்.

`சரி, சிவஷேத்திரங்களுக்குச் செல்லும் யாத்திரையை சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து ஏன் தொடங்க வேண்டும்?’ எனக் கேள்வி எழுப்பினால், பயணக் குறிப்புக்காக எழுதப்பட்ட ஒரு நூல், சமூகநிலையைப் பற்றிய ஆவணமாகப் பரிமாணம் அடைவதை நாம் பார்க்கமுடியும். அதுமட்டும் அல்ல, எந்த ஷேத்திரங்களுக்குச் செல்வதாக இருந்தாலும் நிலைபெற்றுள்ள அதிகார ஷேத்திரத்தில் இருந்து தொடங்குவதே மரபாக இருந்துள்ளது.

ரயில் போக்குவரத்துத் தொடங்கிய பின்னர் உருவாக்கப்பட்ட பயணக் குறிப்புகள் இவை. அதற்கு முன் இந்தப் பயணங்கள் எப்படி நடந்திருக்கும் என்று ஆராய்ந்தால், நமக்கு ஓர் ஆச்சர்யமான பதிவு கிடைக்கிறது. தஞ்சாவூர் மன்னர் இரண்டாம் சரபோஜி, காசி-ராமேஸ் வரத்துக்கு மேற்கொண்ட பயண விவரம்.

நவீனப் போக்குவரத்து வாகன வசதிகள் இல்லாத காலத்தில், நடந்தே சென்ற பயணம் அது. பூ.ரா.அப்பாதுரை முதலியார் வெளியிட்ட `யாத்திரை விளக்கன்’ நூல் வெளியாவதற்க்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த பயணம்.

1820-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் தஞ்சாவூரில் இருந்து மன்னர் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்தப் பயணத்தில் பங்கெடுத்தவர்களின் எண்ணிக்கையே நம்மை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்குகிறது.

மன்னர், அவரது மனைவி, மன்னரின் உடல்நலத்தைப் பேண ஓர் ஆங்கில மருத்துவர், அவருக்கான உதவியாளர், ஓவியர் ஒருவர் உள்பட 3,000 பேர் பங்கெடுத்துள்ளனர். ஒரு நகரமே நகர்ந்து போவதைப்போலத்தான் அவர்கள் நகர்ந்துள்ளனர். அவர்களுக்கான உணவு வசதி, தங்கும் ஏற்பாடுகள், முகாம் ஏற்பாடுகள், பல்லக்குகள், பார வண்டிகள், குளிரில் இருந்து காத்துக்கொள்ள கம்பளிகள் முதலிய ஏற்பாட்டோடு இந்தப் பெரும் பயணம் நடந்துள்ளது.

காசிக்குப் போய் வருவதற்கான துல்லியமான கால அளவைத் திட்டமிட முடியாவிட்டாலும், நீண்டகாலப் பயணமாக இது இருக்கும் என்பதை அறிந்து, பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, தனது ஒரே மகனாகிய சிவாஜிக்கு பட்டாபிஷேகம் செய்து கும்பெனி நிர்வாகத்துக்குத் தெரிவித்து, ஒப்புதல் பெற்றுத்தான் பயணத்தைத் தொடங்கியுள்ளார் மன்னர். அது மட்டும் அல்ல, தான் திரும்பி வரும் வரை செய்ய வேண்டிய வேலைகளுக்கான அனைத்துவிதமான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார். அவற்றில் ஒன்று, உடன்வரும் பணியாளர்கள் சம்பந்தப்பட்டது.

பயணத்தில் தங்களுடன் வருகிறவர்களின் சம்பளத்தை அவர்களின் வீட்டில் சேர்ப்பிக்க வேண்டும் என்றும், அவர்கள் பயணம் முடித்துத் திரும்பும் வரை, அவர்களின் பேரிலோ அல்லது அவர்களின் வாரிசுகளின் பேரிலோ யாராவது புகார்கொடுத்தால், அதைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும், அவர்களின் வாரிசுகள் தங்களுக்குப் பிரச்னை உருவாக்குகிறார்கள் என யார் மீதாவது புகார் கொடுத்தால், விசாரித்து, வம்பு செய்கிற அந்த நபர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், தினந்தோறும் அவர்களின் நலனை விசாரித்து, அவர்களுக்குத் தக்க இனாம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

கதைகளின் கதை - பாவ மூட்டையின் எண்:188 - சு.வெங்கடேசன்

பயணத்துக்கு முன்னால் செல்லும் முதற்குழு, 10 முதல் 12 நாழிகை பயண இடைவெளியில் தங்குவதற்கான சத்திரங்களைத் தேர்வு செய்துள்ளது. அவர்கள் முன்னே சென்று, சத்திரங்களைப் பார்வையிட்டு, அது தங்குவதற்கு ஏற்ற சுகமான வசதிகள்கொண்ட சத்திரமா, அவை எவ்வளவு பெரியதாக இருக்கிறது, அதில் மன்னரின் பல்லக்கும் ராணியின் பல்லக்கும் இறங்க முடியுமா, அல்லது ஒரு பல்லக்கு மட்டும்தான் இறங்க முடியுமா, தண்ணீர் வசதி எப்படி இருக்கிறது, சாமான்கள் வைக்க போதுமான இடம் இருக்கிறதா, அருகில் கால்நடைகளுக்கான வைக்கோல், தீனி வகையறா போதுமான அளவு கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா போன்றவற்றை எல்லாம் அறிந்துவந்து முன்செல்லும் குழு தெரிவிக்கிறது. அதன் அடிப்படையில் தங்கும் முகாம்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.  

1820-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் தஞ்சாவூரில் இருந்து புறப்பட்ட பயணக் குழு, நவம்பர் 2-ம் தேதி நெல்லூர் மாவட்டத்தில் தலமஞ்சிதுகடி என்ற ஊரில் முதலில் முகாம் அமைத்துத் தங்குகிறது. அதைத் தொடர்ந்து ராசபுடி, பெஜவாடா-மங்களகிரி, மிர்குவா, மிட்டகூப, ஜகநாத், அம்ருத்பூர், கடக், ஸோரோ, தளேஸ்வரா, மூவர்பட்டா என, பல ஊர்களில் முகாமிட்டுத் தங்கி பயணத்தைத் தொடர்கிறது. ஒவ்வொரு முகாமிலும் தேவைக்கு ஏற்ப சில நாட்களோ சில வாரங்களோ தங்கியிருந்து ஓய்வெடுத்துக்கொண்டு பின்னர் பயணத்தைத் தொடர்ந்து, இறுதியாக 1821-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதியில் காசியை அடைந்துள்ளனர். பயண காலத்தைக் கணக்கிட்டால், சுமார் ஒன்பதரை மாதங்கள் பயணித்து, தஞ்சாவூரில் இருந்து காசியைச் சென்றடைந்துள்ளது பயணக் குழு.

திரும்புகையில் காசி, பிரயாகை, நாக்பூர், நிர்மல், ராமாபேட, ஷாபாத், நந்தியால், கடப்பை, திருப்பதி, காளஹஸ்தி, காஞ்சி, பண்ருட்டி, மாயூரம், தஞ்சாவூர் வழியாக சுமார் ஏழு மாதப் பயணத்தைத் தொடர்ந்து, 1822, மே 9-ம் தேதி பயணக் குழு ராமேஸ்வரத்தை அடைந் துள்ளது. மொத்தத்தில் காசிக்கு சென்று, திரும்ப ஏறத்தாழ இரண்டு வருடங்கள் ஆகின.

பயணத்தின்போது பலருக்கு உடல்நலம் இல்லாமல் போயுள்ளது. திடகாத்திரமான நபர்கள்கூட இறந்துபோனதாக குறிப்புகள் உள்ளன. மன்னரின் ஆரோக்கியத்தைப் பேண ஆங்கில மருத்துவர் டாக்டர் ஸட்டன் என்பவரை உடன் அழைத்துச் சென்றுள்ளனர். அவருக்கு சம்பளம் ரூ.700. அவருக்கு உதவியாளராகப் பணியாற்றிய இந்திய வைத்தியருக்கு சம்பளம் ரூ.20. எட்டுப் பெட்டிகளில் ஆங்கில மருந்துகளையும் நாட்டு மருந்துகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

டாக்டர் ஸட்டன் தஞ்சாவூர் தொடங்கி காசி வரை பயணித்து மருத்துவ உதவிகள் செய்துவந்துள்ளார். மன்னரின் உடல்நலக் குறைவு பற்றி குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால், மருத்துவம் பார்க்கச் சென்ற மருத்துவரின் உடல்நலம்தான் பிரச்னையாகி இருக்கிறது. என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. ஆனால், காசி முகாமில் இருந்து ஒற்றை வரியில் எழுதப்பட்டுள்ள குறிப்பு இவ்வாறு சொல்லகிறது...

`டாக்டர் ஸட்டன் 1821, ஜூலை 10-ம் தேதி காசியில் பரலோகம் அடைந்து, தகனம் செய்யப்பட்டார்.’

அதன் பிறகு அவருக்கான சம்பள பாக்கியை கம்பெனியிடம் வழங்குவதா அல்லது அவரது குடும்பத்தினருக்கு அனுப்புவதா என்பது விவாதிக்கப்பட்டுள்ளது. உதவிக்கு ரூ.20 சம்பளத்துக்கு நிச்சயிக்கப்பட்ட இந்திய மருத்துவரின் மரணம் எதுவும் பதிவுசெய்யப்படாததால் அவர் யாத்திரை முழுவதும் பங்கெடுத்து, பயணத்தை முடித்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.

கதைகளின் கதை - பாவ மூட்டையின் எண்:188 - சு.வெங்கடேசன்

பயணத்தில் எழுதப்பட்ட குறிப்புகளில் பல சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மன்னர் எழுதிய கடிதங்களில் அவரது மகன், அதாவது இளவரசன் குறித்த கவலை முக்கியமாக இடம்பெறுகிறது. `இளவரசர் சாரட்டில் உலாவச் செல்வது உண்டு, ஆனால், அவர் மாலைக்குள் அரண்மனைக்கு வருவது இல்லை. இரவு உணவுக்கு வராமல் கட்டமுது எடுத்துச் சென்று, இரவில் 11 மணிக்குத் திரும்புகிறார். இதைக் கேள்விப்பட்டு மனம் வருந்திய மன்னர், `இனிமேல் இங்ஙனம் செய்யக்கூடாது, சாரட்டில் செல்லக் கூடாது’ என்று உத்தரவு பிறப்பித்தார்’. ஒழுங்கான நேரத்துக்கு வீட்டுக்குச் சாப்பிட வராத பையன்களின் பல்சர் வண்டியைப் பிடுங்கிவைக்கும் இன்றைய அப்பாக்களைப் போலத்தான் மூவாயிரம் பேருடன் காசிக்குப் போன அன்றைய அப்பாவும் இருந்துள்ளார்.

அரசக் குடும்பத்து அம்மையார் சக்குவார்பாயி அம்மணி சாயேப் உடல்நலம் இல்லாமல் இருக்க, அவருக்கு மருத்துவம் செய்யவந்த மருத்துவருக்கு கையையும் முகத்தையும் காட்ட மறுத்துவிட்டார். இதைக் கடிதத்தின் மூலம் அறிந்த மன்னர் 16-11-1821 கயையில் இருந்து எழுதிய கடிதத்தில் `உடல்நலம் பெற வேண்டுமாயின் மருத்துவருக்கு கையையும் முகத்தையும் காட்டுவது அவசியம்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

ஆன்மிக நோக்கம்கொண்ட இந்தப் பயணம் சமூக வரலாற்று ஆவணமாக பல்வேறு விவரங்களைத் தனக்குள் சேகரித்து வைத்துள்ளது. பல நூறாயிரம் ரூபாய்கள் செலவுசெய்து நிகழ்த்தப்பட்ட பெரும் பயணத்தின் விவரங்கள் அனைத்தும் மராட்டிய மொழியில், மோடி எழுத்துக்களில் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டன.

தஞ்சை சரஸ்வதி மஹாலில் பாதுகாக்கப்பட்டிருந்த மோடி ஆவணங்களை, 1950-களில் மேஜர் எஸ்.என். கத்ரே ஆய்வுசெய்து, அவற்றின் பெரும் பகுதியை எழும்பூரில் உள்ள அரசு ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பிவைத்தார். பயனற்றது என அவர் கருதிய ஏடுகள் மட்டும் மூட்டையில் முடிச்சிடப்பட்டு தஞ்சை சரஸ்வதி மஹாலில் பாதுகாத்துவைக்கப்பட்டன.

ஷத்திரிய பூபாலர் ராஜ மகாராஜா இரண்டாம் சரபோஜி மன்னரின் காசி யாத்திரை சம்பந்தப்பட்ட ஏடுகள் `188’ என்ற எண் பொறிக்கப்பட்ட மூட்டைக்குள் இருந்தன. மோடி ஆவணங்களின் 60 கட்டுகளை தமிழுக்கு மொழிமாற்றம் செய்தபோது இந்த விவரங்கள் வெளிப்பட்டன.
கே.எம்.வேங்கடராமையா உள்ளிட்ட ஆய்வாளர்கள் இதை ஆய்வுசெய்துள்ளனர். அந்தக் காலம் பற்றிய பல்வேறு விவரங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான மோடி ஆவணங்கள் இன்னும் தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கின்றன.

இரண்டாம் சரபோஜி, காசிக்குச் சென்ற அந்தப் பெரும் பயணத்தின்போது எத்தனை மூட்டை முடிச்சுகள் கொண்டு செல்லப் பட்டன என்ற விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆனால், இந்தப் ்பயணமே `188’ என்று எண்ணிடப்பட்ட மூட்டையில்தான் முடிச்சிடப்பட்டிருந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism