Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

ஓவியங்கள்: ஸ்யாம்

சொல்வனம்

ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

அரபு தேசத்தில் வெறும் 50* C தான் 

ஒரு முழுக்கோழியைக் கம்பியில் செருகிப் புறம்காட்ட

நொடியில் அது தந்தூரியாகுமென

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேலிச்சித்திரம் எழுதிய புண்ணியவானைக் கண்டால்

நா தழுதழுக்க அவர் தம் கைகளைப் பற்றுவேன்.

கிரீஸை விட்டு இரண்டடி ஏறி சிக்ஸர் விளாசும்

அக்கால கங்குலி போல் ஃபார்மில் உக்கிரமாகியிருக்கிறார்

சூரியனார் இந்தப் பாலை நிலத்தில்.

தகிக்கும் நீர்மழை வழிய

பேருந்தினுள் வீற்றிருக்கும் என்னருகில் அமர்ந்தாள்  

அந்த நான்கடி பிலிப்பைன்ஸ் பதுமை என்றால் நம்பவேண்டும்.

குளிர்ச்சிலை போலிருந்தாலும் அவளுக்கும் வியர்க்கும்தானே  

ஆனால் அவள் முகத்தில் அவை அழகுத் துளிகளாயிருந்தன.

குச்சி போன்றதொரு வஸ்து

ஒரே சொடுக்கில் பாவையின் சிறு கரங்களில்

விசிறியான மாயம்தனைச் சொல்ல மறந்தால்

அது பிழையினும் பெரும்பிழை.

இப்படி அப்படி அசைந்து அதன் இயங்குவிசையில்

சொல்வனம்

உதித்த திடீர் தென்றலில் சொக்கும் மனதை

தாலாட்டில் கண்ணயரும் மழலையாக்கித் தவழவிடுகிறேன்.

அடுத்த சோடி மென்வருடல்களுக்கு அப்படியே

தலைகோதும் காதலியின் கைப்பக்குவம்.

நினைவின் சாளரங்களை ஒரே சொடுக்கில் திறந்துவிட்ட

மொழி தெரியா தேவதைக்கு

ஆத்மார்த்த புன்னகையை உரித்தாக்கப்

புரிந்ததோ என்னவோ அதே புன்னகையுடன் ஆமோதிக்கிறாள்.

இனி முகம் சிவந்து அனல் மழை பொழியும்

கதிரவனைக் கைகுலுக்கி அணைத்துக்கொள்வேன்

எஞ்சியிருக்கும் இந்நெடுங்கோடை முழுமைக்கும். 

 - தர்மராஜ் பெரியசாமி 

சொல்வனம்

சமக் குறியீடு

நெடுஞ்சாலையோர பெரும் உணவகம் முன்

நடந்துவரும் என்னை அழைக்கும் முன்

நீ சற்று யோசித்திருக்க வேண்டும்.

விசிலூதி என்னை உண்ண அழைத்தது

உன் தவறுதான்.

பணம் இல்லை என்பதை மறந்து பசி வந்தது

என் தவறுதான்

பசியோடு வருகிறவனை விசிலூதி அழைக்க

உன்னைப் பணித்திருப்பது அவன் தவறுதான்.

இதில் யார் தவறு பெரியதென்ற வாதம் தவிர்த்து,

நம் தவறுகளுக்கிடையே சமக் குறியிட்டு

என்னை வெளியேற அனுமதி அய்யனே.

 - சேயோன் யாழ்வேந்தன் 

சொல்வனம்

பலூன்

ஒரு பலூன் உடையும்பொழுது

வண்ணங்களின் வடிவமெடுத்தக் காற்று

மீண்டும் உருவமிழக்கிறது.

புவியீர்ப்பைக் கேலிசெய்து

புன்னகைத்த இழைகளின் மிச்சம்

பூமியின் காலில் விழுகிறது.

கட்டிய நூலுடனும்

கந்தலான உடலுடனும்

தாலியுடன் நிற்கும்

கைம்பெண்ணை நினைவுபடுத்துகிறது.

சிறைபட்ட காற்று சத்தம்போட்டுச் சிரித்து

சுதந்திரம் பெற்றதை உணர்த்துகிறது

உன்னோடு விளையாடிக்கொண்டிருந்த

என் சுவாசம் தனியே விசும்பிக்கொண்டிருக்கிறது.

 - இளந்தென்றல் திரவியம் 

தேவை

அப்பா சாப்பிட காரம் சேர்க்க வேண்டும்

தாத்தாவுக்கு சிறுதானிய தோசை தேவை

பாட்டி சூடு குறைந்த ரசம் தொட மாட்டாள்

மாமா சாப்பிட ஏதேனுமொரு கீரை வேண்டும்

தம்பி ஆர்கானிக் மட்டுமே தொடுவேன் என்பான்

எண்ணெய் மிதக்காமல் உள்ளிறங்காது எனக்கு

நிஷாக்குட்டி பருப்பு சாதம் மட்டுமே...

அம்மா சாப்பிட

இவையெல்லாம் பழையதாக வேண்டும்.

  - ந.சிவநேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism