
படம்: ஸ்டில் ராபர்ட்; ஓவியம்: ரவி
நன்றியும் மன்னிப்பும் கேட்கவேண்டிய நேரத்தில், கேட்கத் தோன்றும்போது உடனே கேட்டுவிட வேண்டும். அந்த நேரத்தில் அதைத் தவறவிட்டுவிட்டால் மிகப்பெரிய குறையாகவும் குற்ற உணர்வாகவும் நின்றுவிடும்.
அப்போது `காதல் வைரஸ்' படம் முடிந்து, தனியாகப் படம் இயக்கும் வாய்ப்பை மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தேன். சின்னச் சண்டைக்குப் பிறகு பாலு மகேந்திரா சாருடன் சமரசம் ஆகியிருந்த காலம். அவர்தான் ஜி.ஜே நிறுவனத்தில் கதை சொல்ல எனக்குப் பரிந்துரைக் கடிதம் கொடுத்தார்.
அவர்களும் என்னிடம் கதை கேட்டார்கள். ஆனால், சில காரணங்களால் அந்த புராஜெக்ட் நடக்கவில்லை. அடுத்த சில மாதங்களில் ஜி.ஜே சினிமாஸ் தயாரிப்பில் `ஜூலி கணபதி’ படத்தை சார் இயக்கினார். அதில் நான் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன்.
ஒரு முதன்மை உதவி இயக்குநர் படம் இயக்கச் சென்றால், அந்த இயக்குநர் தனக்கு ஒரு புது உதவியாளரைத் தயார்செய்வதில் சிரமம் இருக்கும். அதனால் எந்த இயக்குநரும் அவரது உதவியாளர்கள் படம் இயக்குவதை விரும்ப மாட்டார்கள் என்ற கருத்து சினிமா உலகில் உண்டு. பட வாய்ப்பு தரும் 90 சதவிகிதத் தயாரிப்பாளர்கள், உதவி இயக்குநர் வேலை செய்த இயக்குநரிடம் அவரைப் பற்றி கேட்பார்கள். ஒருவேளை பாலு மகேந்திரா சார் என்னைப் பற்றி தவறாகச் சொன்னால் எனக்கு பட வாய்ப்பு கிடைக்காதே என எனக்குத் தோன்றியது.
அப்போது சினிமா உலகைச் சாராத என் நண்பன் ஒருவனிடம் இதைச் சொல்லிவிட்டு, ஒரு திட்டம் பற்றி சொன்னேன். அதன்படி என் நண்பன், அவன் நண்பன் ஒருவனிடம் பாலு மகேந்திரா சாருக்கு போன் செய்யச் சொன்னான். அவனும் சாருக்கு போன் செய்து `சார்... நான் வெற்றியோட ஃப்ரெண்ட். என் ஃப்ரெண்ட் ஒருத்தனுக்குப் படம் தயாரிக்கணும்னு ஆசை. வெற்றி டைரக்ஷன்ல படம் எடுக்கலாம்னு நினைக்கிறான். அது சம்பந்தமா உங்ககிட்ட பேசணும்' என்றான். சாருக்கு போன் வந்தபோது நான் அவருடன்தான் இருந்தேன். மதியம் 2 மணிக்கு மேல ஆபீஸுக்கு வரச் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். அலுவலகத்தில் இருந்த எல்லோரையும் 2 மணிக்கு முன்னரே அவசர அவசரமாகப் போகச் சொன்னார். நானும் ஒன்றுமே தெரியாததுபோல் கிளம்புவிட்டேன்.

மதியம் 2 மணிக்கு என் நண்பனும் அவன் நண்பனும் சாரைச் சந்தித்துப் பேசினார்கள். பின்னர் நேராக இருவரும் என் அறைக்கு வந்தார்கள். வந்தவன் என்னைப் பார்த்து, `ரொம்பக் கேவலமானவன்டா நீ. உன்னை அவர் எந்த அளவுக்கு மதிக்கிறார் தெரியுமா?' என வருத்தத்துடன் பேசினான். சார் அவனிடம், `தம்பி... நீ என்னோட வேற எந்த அசிஸ்டன்டை வெச்சு படம் எடுக்கிறேன்னு சொல்லியிருந்தாலும் சில குறைகள் சொல்லியிருப்பேன். ஆனா, தமிழ்நாட்டின் சிறந்த உதவி இயக்குநரைக் கண்டுபிடிச்சு வாய்ப்பு தரப்போறீங்க. இதுக்கான கெளரவம் நீ சினிமாவுல இருக்கிறவரை இருக்கும்' என அவர்களிடம் சொல்லியிருக்கிறார். `உனக்கு ஐ.எஸ்.ஓ முத்திரை குத்தி அங்கீகரிச்சிருக்காரு.
நீ அவரைக் கேவலப்படுத்திட்ட' என்றான் என் நண்பன். அடுத்த நாள் ஆபீஸ் செல்வதற்கு முன்னர் கீழே நின்று புகைப்பிடித்துக்கொண்டிருந்தேன். நேராக அவரிடம் சென்று `ஸாரி சார். நான் தப்பு பண்ணிட்டேன்' என மன்னிப்புக் கேட்க தோன்றியது. உள்ளே நுழைந்ததும் சார் என்னை அழைத்து உட்காரச் சொன்னார். நான் பேசுவதற்கு முன்னர் அவரே `என்ன வெட்டி... படம் பண்ணப்போறியா?' என்றார். `ஆமா சார்' என்றேன். `உன்னோட புரொடியூஸர் வந்து பேசிட்டுப் போனார்' என அவர் சொன்னதும், `யார் சார்?' என்றேன். `உன் ஃப்ரெண்ட்தான்டா' என்றார். அந்த இடத்தில் நான் என்ன பேச வந்தேனோ அதைப் பேசாமல் நான் சொன்னப் பொய்யை டிஃபண்ட் செய்ய ஆரம்பித்தேன்.
அவர்கள் வந்தது எனக்குத் தெரியாததுபோல் நான் ரியாக்ட் செய்தேன். என்னை சிறிது நேரம் உற்றுப் பார்த்தவர், `எனக்கு எல்லாம் தெரியும்டா' என்றார். அதற்கு என்ன அர்த்தம் என்பது இதுவரை எனக்குப் புரியவில்லை. `ஒரு படம் தயாரிக்கிறவங்க அந்த டைரக்டரைப் பற்றி தெரிஞ்சுக்க, விசாரிக்கிற உரிமை இருக்கு. அதுல நீ தலையிடக் கூடாது.

படம் கொடுத்தாங்கன்னா பண்ணு' என்றார். நான் அவரிடம் `நீங்க என்ன சார் சொன்னீங்க?' என்றேன். `அது உனக்கு அவசியம் இல்லை' என்றார். சார் என்னைப் பற்றி நல்ல விதமாகத்தான் சொல்வார் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அதைத் தெரிந்துகொண்ட விதம் எனக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. நான் படம் இயக்கும் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்த காலங்களில் அந்தச் சம்பவம் என் நினைவில் இருந்து முற்றிலுமாக மறைந்துவிட்டது. நான் சோர்ந்துபோகும்போது எல்லாம் அலுவலகம் சென்று சாரைப் பார்ப்பேன். அவரைப் பார்த்துவிட்டு வந்தாலே கான்ஃபிடன்ஸ் கூடும். அவரும் என்ன நடக்கிறது என அக்கறையோடு விசாரிப்பார்.
`பொல்லாதவன்’ ரிலீஸுக்குப் பிறகு என் நண்பன் என்னிடம் `பரவாயில்லை. உங்க டைரக்டர் சொன்னதுபோல ஒரு சக்சஸ்ஃபுல்லான படத்தை எடுத்துட்ட' என்றான். அப்போது எனக்கு அந்தச் சம்பவம் மீண்டும் நினைவுக்கு வந்தது. அடுத்த முறை சாரைச் சந்தித்தபோது அவரிடம் சொல்லி மன்னிப்புக் கேட்கத் தோன்றியது. `உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும் சார்' என ஆரம்பித்ததும், `இருடா... அந்தப் படத்தைப் பார்த்தியா?' எனக் கேட்டவர், பேச்சை மாற்றி சினிமா பக்கம் இழுத்துச் சென்றுவிட்டார் சார் மறைவுக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் அவர் தலையில் அடிபட்டு, மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கச் சென்றிருந்தபோது, `வாடா வெட்டி... தலையில இடிச்சிக்கிட்டேன்டா.
நல்லா வீங்கிடுச்சு. வலிக்குதுடா' என்றார். `சரி சார்... சரி சார்...' எனக் கேட்டுக்கொண்டிருந்தபோதே அவரிடம் அந்தச் சம்பவத்தைச் சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டும் எனத் தோன்றியது. அவருக்கு அது கஷ்டமாக இருக்கும் என்றாலும் சொல்லிவிட வேண்டும் என நினைத்தேன். ஆனால், டாக்டர் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் எனச் சொல்லி என்னை வெளியே அனுப்பிவிட்டார். ஒருநாள் பெங்களூரு சென்றிருந்தேன். அன்று காலை 6:30 மணிக்கு சாரின் உதவியாளர் ராஜா அழைத்து, `வெற்றி... உடனே வாங்க. சாரை விஜயா ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம். டாக்டருங்க என்னவெல்லாமோ சொல்றாங்க' என்றார்.
நான் சென்னைக்கு வரும் வழியிலே `சார் மறைந்துவிட்டார்' என்ற தகவலைச் சொன்னார்கள். எனக்கும் சாரும் இடையேயான உறவில் நான் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன். ஆனால், அவரை ஏமாற்றியது எனக்கு கஷ்டமாக இருந்தது. அதற்காக முழு மனதுடன் அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், கடைசி வரை அவரிடம் கேட்க முடியவில்லை. அந்த மன்னிப்புக் கேட்காத நிலையில் இருந்து எப்படி விடுபடுவதென்றே எனக்குத் தெரியவில்லை. என் குடும்பத்துக்கு நான் நேரமே ஒதுக்குவது இல்லை.
என் மனைவிக்குப் பல மனஉளைச்சல்கள் கொடுத்திருக்கிறேன். என் சுயநலத்துக்காக அவரைக் காயப்படுத்தி யிருக்கிறேன். ஆனால், இது பற்றி அவரிடம் நேரில் பேசியதே இல்லை. நேரில் சந்திக்கப் பயப்படும் இதுபோன்ற பல விஷயங்களை ஒரு பொது இடத்தில் சொல்வதை, நேரில் சந்திக்கும் தைரியத்தை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பாகப் பார்க்கிறேன். இது தவிர, என் உதவி இயக்குநர் ஒருவரிடம் ஒரு மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கிறது. அவருக்கு ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறேன்.
ஓர் இயக்குநருக்கு படம் கிடைக்கும்போது, அவருக்கு மிகப்பெரிய அதிகாரம் கொடுக்கப்படுகிறது. பணம் போடும் முதலாளி, நடிகர்கள், மற்ற கலைஞர்கள் அனைவரும் அந்த இயக்குநரின் எண்ணத்தையும் முடிவையும் சார்ந்தே இருக்கிறார்கள். ஒவ்வொரு படம் முடியும்போதும் அவ்வளவு பெரிய அதிகாரம் சரியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என யோசிக்கிறேன். சில முடிவுகள் சரியாகவும் பல முடிவுகள் ஈகோ மற்றும் சுயநலம் காரணமாகத் தவறாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு படத்தில் இருந்து அடுத்த படத்துக்குப் போகும்போது, தவறான முடிவுகள் குறைந்திருந்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. இல்லையென்றால், அதை என் தோல்வியாகப் பார்க்கிறேன். அதைச் சரிசெய்ய முயற்சி செய்கிறேன். முடிந்தவரை சுற்றி இருப்பவர்களைக் காயப்படுத்தாமல் இருக்கவே விரும்புகிறேன். என் டெம்ப்பர்மென்ட் அதற்கு எப்போதும் சவாலாகவே இருக்கிறது. ஒருநாள் என் அதிகாரத்தை 100 சதவிகிதம் சரியான விதத்தில் பயன்படுத்துவேன் என்ற நம்பிக்கையுடனே என் முயற்சிகள் இருக்கின்றன.

விகடனில் இருந்து ஒரு தொடர் எழுதலாம் எனக் கேட்டபோது, முதலில் மறுத்துவிட்டேன். இப்படி ஒரு தொடரை எழுதி முடிக்க முடியும் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. ஆனால், இந்த `மைல்ஸ் டு கோ' ஒரு நல்ல பயணமாக அமைந்தது. எனக்கு இந்த நம்பிக்கையைத் தந்த விகடன் டீமுக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் சொன்னதை எழுத்தில் கொண்டுவந்த ம.கா.செந்தில்குமார், கார்க்கிபவா இருவருக்கும் நன்றிகள். இந்தத் தொடருக்கு புகைப்படங்களைக் கொடுத்த ஸ்டில் ராபர்ட்டுக்கும், வாசித்து, கருத்துக்கள் சொன்ன வாசகர்களுக்கும் நன்றி.
நான் இதில் குறிப்பிட்ட பல சம்பவங்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதற்கான உதாரணம் மட்டுமே; பின்பற்றுவதற்கானது அல்ல. அந்தத் தெளிவோடுதான் நான் சொல்லியிருக்கிறேன். படிப்பவர்களும் அதைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். இன்னும் நிறையப் பேச வேண்டும் என்ற ஆசை உண்டு. இது ஒரு பயணம். இன்னொரு பயணத்தில் மீண்டும் சந்திப்போம். ஆமாம்... மைல்ஸ் டு கோ!
- நிறைந்தது.
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan