Published:Updated:

ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை

ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை

ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை

ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை

ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை

Published:Updated:
ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை

 சுகுணா திவாகர்

ரலாற்றைப் புனைவாக மாற்றுவதும் புனைவின்வழி ஒரு வரலாற்றைக் கட்டமைப்பதும் படைப்புக்கான சவால்தான். அதிலும் நிறுவப்பட்ட வரலாறாக அல்லாமல், வெறுமனே யூகங்களாகவும் மர்மங்களாகவும் சந்தேகமாகவும் உள்ள நம்பிக்கைகளை வரலாற்றின் இடைவெளியில் கண்டுபிடித்து, அதை வரலாற்றின் கண்ணியாக மாற்ற முயல்வது படைப்பின் கூடுதலான சவால். இதை வெற்றிகரமாகச் சாதித்துக்காட்டியிருக்கிறது ட்டி.டி.ராமகிருஷ்ணனின் ‘ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா’. 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக நம்பப்படுபவர் கேரளாவைச் சேர்ந்த மிளகு வியாபாரி ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா. கப்பல் பயணங்களின்மூலம் தன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் இட்டிக்கோரா உலகின் பல பகுதிகளில் உள்ள பெண்களோடு காதல் கொண்டு குடும்பங்களை நிறுவுவது ஒருபுறம், பல தேசங்களின் அதிகார மையங்களோடு நெருக்கத்தை உருவாக்கிக்கொள்வது இன்னொருபுறம் என இருந்தாலும் அவரது வினோதமான அடையாளங்கள்தான் முக்கியமானவை. அலெக்ஸாண்ட்ரியாவில் தனித்துவமான கணிதப்பள்ளியை நிறுவிய ஹைபேஷ்யா ஓர் அழகிய கணித அறிஞர். வெறுமனே கணிதச் சூத்திரங்களை உருவாக்குவது, கணிதப் புதிர்களை உருவாக்குவது என்பதோடு, கத்தோலிக்க மத நம்பிக்கைகளுக்கு விரோதமாக அறிவின்வழி வாழ்க்கையை அணுகுவது, போலியான ஒழுக்க மதிப்பீடுகளுக்கு எதிராக உடலைக் கொண்டாடும் வாழ்க்கையை முன்வைக்கிறாள். தொடர்ச்சியான அவளது மதவிரோதப் பிரசாரங்களால் கொல்லப்படுகிறாள். அவளது சீடர்களால் ரகசியமாக நடத்தப்படும் ஹைபேஷ்யக் கணிதப் பள்ளியொன்றில் படிக்கும் இட்டிக்கோரா, அந்த அறிவைக் கேரளத்துக்கும் கொண்டுவருகிறார். ரகசியமாக ஹைபேஷ்யன் கணிதப்பள்ளியையும் நடத்துகிறார். 18 மனைவிகளுடனும் 79 பிள்ளைகளுடனும் வாழ்ந்த இட்டிக்கோராவின் தலைமுறை ‘பதினெட்டாம் கூட்டாளிகள்’ என்னும் பெயரில் உலகமெங்கும் விரிகிறது. ரகசியமாகத் தங்கள் கூட்டுறவையும் நம்பிக்கைகளையும் தொடரும் பதினெட்டாம் கூட்டாளிகள் இட்டிக்கோராவையே கடவுளாக வரித்துக்கொள்கிறார்கள். வயதுக்கு வந்த பெண்ணை கிறிஸ்துமஸுக்கு முதல்நாள் இரவு பாதாள அறையில் அடைத்து ‘கோராவுக்குக் கொடுத்தல்’ என்னும் சடங்கையும் நடத்துகிறார்கள். வர்த்தகம், கொண்டாட்டம் ஆகியவற்றையே வாழ்வின் பிரதானமாக முன்வைக்கும் இந்த பதினெட்டாம் கூட்டாளிகள் பெரும் செல்வந்தர்களாகவும் அதிகார மட்டங்களில் இடம்பெறுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். பதினெட்டாம் கூட்டாளிகளின் மர்மச்சடங்குகளை அறிவதற்கு முயலும் எவரையும் கொலைசெய்யவும் தயங்காதவர்கள். இந்த இட்டிக்கோராவின் வழித்தோன்றல்களில் ஒருவனான சேவியர் ஃபெர்னாண்டோ இட்டிக்கோரா, அமெரிக்காவைச் சேர்ந்த, ஈராக்கில் யுத்தப்பணியில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரன்.

ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா - ஒரு பார்வை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிகார மையங்களில் உள்ளவர்களோடும் மேல்தட்ட வர்க்கத்தினரோடும் ரகசியப் பாலுறவு வர்த்தகத்தில் ஈடுபட ‘தி ஸ்கூல்’ என்னும் பெயரில் இயங்கும் கேரளத்துப் பெண்கள் ரேகா, பிந்து, ரஸ்மி. சேவியர் இட்டிக்கோராவுக்கும் ரேகாவுக்கும் இடையிலான இணைய உரையாடலின்வழி இட்டிக்கோராவின் வரலாறும் ஹைபேஷ்யாவின் வரலாறும் விவரிக்கப்படுகிறது. கேரளத்தில் வசிக்கும் பதினெட்டாம் கூட்டாளிகள் பற்றி அறிவதற்காக முயலும்போது ஏற்படும் சிக்கல்கள் இறுதியில் இந்தியாவில் கால்பதிப்பதற்காக கொச்சி விமான நிலையத்தில் இறங்கும் சேவியர் இட்டிக்கோராவின் கொலையோடு முடிகிறது. ஒரு மர்ம நாவலுக்கான சுவாரஸ்யத்தோடு எழுதப்பட்ட இந்த நாவல், ஏராளமான தத்துவ அடுக்குகளையும் வரலாற்றுச் சிக்கல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. மேற்கத்திய கணித வரலாறு என்பது எப்படி மையப்படுத்தப்பட்ட அதிகார வரலாறாக மாறியது, நம்பூதிரிகளாலும் நாயர்களாலும் எழுதப்பட்ட கேரள வரலாறு எஞ்சிய பகுதி மக்களை எப்படிப் புறக்கணித்தது என்பது குறித்த சிந்தனை உசுப்பல்கள் நாவலில் இடம்பெறுகின்றன. வரலாற்றில் கொண்டாடப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கையைப்போலவே விடுபட்ட, மறைக்கப்பட்ட மனிதர்களின் மற்றும் பங்களிப்புகளின் எண்ணிக்கையும் அதிகம் என்பதை நினைவுபடுத்துகிறது. காலந்தோறும் பெண்கள் அதிகாரத்துக்கும் வர்த்தகத்துக்குமான சந்தைப்பொருளாகவே பயன்படுத்தப்பட்டார்கள் என்பதையும் அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. மத அதிகாரத்துக்கு எதிராக அறிவின்வழி சிந்தித்த இட்டிக்கோராவே கடவுளாக மாற்றப்பட்டதையும் பொருத்தமற்ற சடங்குகள் கடைப்பிடிக்கப்பட்டதும் வரலாறு காலந்தோறும் நமக்குக் கற்பிக்கும் படிப்பினைகள்தான்.

உண்மையிலேயே ஃபிரான்சிஸ் இட்டிக்கோரா என்பவர் வாழ்ந்தாரா, பதினெட்டாம் கூட்டாளிகள் என்பவர்கள் இப்போதும் இருக்கிறார்களா என்கிற கேள்வி இந்த நாவல் வெளியான பிறகு, அடிக்கடி தன்னை நோக்கி எழுப்பப்பட்டதை முன்னுரையில் பதிவுசெய்யும் ட்டி.டி.ராமகிருஷ்ணன், அதற்கான பதில் எதையும் சொல்லாமலே மர்மத்தின் அடர்த்தியைக் கூட்டுகிறார். ஆனால், மைக்கேல் ஏஞ்சலோ, லியார்னாடோ டாவின்சி முதலான புகழ்பெற்ற ஓவியர்கள் முதல் சதாம் உசேன் வரை இந்நாவலின் பாத்திரங்களாக மாற்றப்பட்டுள்ளது நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கான சுவாரஸ்யமான புனைவு விளையாட்டு. எப்படியிருந்தபோதும் நம் அறிதல் முறை மீதும் வரலாற்றெழுத்தியல் மீதும் முக்கியமான கேள்விகளை எழுப்பும், அழகியலும் இலக்கியத்தரமும் கொண்ட நாவல் என்பதில் சந்தேகமில்லை. ஒருபுறம் இலக்கியம் மற்றும் தத்துவம் குறித்த விவாதங்களை நடத்திக்கொண்டே பாலியல் வணிகம் மேற்கொள்ளும் ‘தி ஸ்கூல்’ பெண்களை எப்படிப் புரிந்துகொள்வது என்கிற குழப்பம் நீடிக்கிறது என்பது உண்மைதான். குறிஞ்சிவேலனின் தங்குதடையற்ற மொழிபெயர்ப்பும் எழுத்துப்பிழைகளே இல்லாத நூல் உருவாக்கமும் படைப்புக்குப் பலம் சேர்க்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism