Published:Updated:

கிருஷ்ணன் நம்பி... ஏழை எளியவர்களைப் பற்றி அக்கறையுடன் எழுதியவர்! கதைசொல்லிகளின் கதை பாகம்-19

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கிருஷ்ணன் நம்பி... ஏழை எளியவர்களைப் பற்றி அக்கறையுடன் எழுதியவர்! கதைசொல்லிகளின் கதை பாகம்-19
கிருஷ்ணன் நம்பி... ஏழை எளியவர்களைப் பற்றி அக்கறையுடன் எழுதியவர்! கதைசொல்லிகளின் கதை பாகம்-19

எனது லௌகீக வெற்றிகளில் எப்போதுமே எனக்கு நம்பிக்கை இருந்த்தில்லை. பிழைக்கத் தெரியாத பயலாக இந்த உலகத்தில் வந்து அவதரித்திருப்பவனாகவே என்னைப்பற்றி நான் நினைத்துக்கொள்ளுவேன்

முந்தைய பாகங்கள்:

பாகம்-2- ஆ.மாதவய்யா

பாகம்-5- மௌனி

பாகம்-6 - கு.பா.ரா

பாகம் - 13 - எஸ்.வி.வி

பாகம்- 15.1  கல்கி

பாகம்-15.2 கல்கி

 பாகம்- 16 - ராஜாஜி

   பாகம் -17- அநுத்தமா

         பாகம்-18.1- கு.அழகிரிசாமி

        பாகம்-18.2- கு.அழகிரிசாமி

44 ஆண்டுகள் மட்டுமே இந்தப் பூமியில் வாழ்ந்து, 25 சிறுகதைகள் மட்டுமே எழுதிய கிருஷ்ணன் நம்பி, தமிழின் மிக நுட்பமான படைப்பாளி. 1932-ம் ஆண்டு பிறந்து 1976-ம் ஆண்டு அவர் காலமானார்.

கிருஷ்ணன் நம்பியின் இலக்கியப் பிரவேசம், 1948-49-ம் ஆண்டில் வை.கோ விந்தனின் `சக்தி' பத்திரிகையில் வெளிவந்த `நாட்டுப்பாடல்கள்’ பற்றிய அவரது கட்டுரையின் மூலம் ஆரம்பமாயிற்று. 16 வயதில் அவர் பத்தாம் வகுப்பு படித்துவந்தார் என்பது வியப்பான செய்தி.கம்யூனிஸ்ட்டுகளான தொ.மு.சி.ரகுநாதன், வ.விஜயபாஸ்கரன் ஆகியோர் நடத்திய இலக்கிய இதழ்களான  `சாந்தி', `சரஸ்வதி'யில் அவரது ஆரம்பகாலப் படைப்புகள் வெளியாகின. அவரது கதைகளைக் கேட்டு வாங்கி தோழர் ப.ஜீவானந்தம் `தாமரை’ இதழில் பிரசுரித்துள்ளார். தொடர்ந்து `கலைமகள்', `சதங்கை', `ஆனந்த விகடன்', `கணையாழி', `தீபம்' போன்ற பல இதழ்களிலும் எழுதினார். கண்ணன், குழந்தைகள் இதழில் குழந்தைகளுக்கான பாடல்கள் நிறைய எழுதியுள்ளார். அழ.வள்ளியப்பாவின் முன்னுரையுடன் அந்தப் பாடல்கள் `யானை என்ன யானை?' என்கிற தொகுப்பாக அப்போதே (அவர் இருக்கும்போதே) வெளிவந்துள்ளது.

1951 ஆகஸ்ட் மாத சுதந்திர தின `சரஸ்வதி’ இதழில் வெளியான `சுதந்திர தினம்' கதைதான், நான் சிறுவயதில் முதன்முதலாக வாசித்த கிருஷ்ணன் நம்பியின் கதை. முதல் கதையிலேயே மனதைக் கவ்விவிட்டார் கிருஷ்ணன் நம்பி. `சுதந்திரம் பெற்று நான்கே ஆண்டுகள் ஆகியிருந்த 1951-ம் ஆண்டில் இப்படி ஒரு கதையை மனுஷன் எழுதிவிட்டாரே!' என்கிற வியப்பும் மனநெருக்கமும் அவர் மீது அப்போதே ஏற்பட்டுவிட்டது.

``ஒரு கொடி செஞ்சு கொடு அண்ணாச்சி.''

``என்ன கொடி கேட்கிறே?” என்று அலுப்புடன் முகத்தைத் திருப்பிக் கேட்கிறான் பாண்டியன்.
ஓடிப்போய் தன் மூன்றாம் வகுப்புப் பாடப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு வருகிறான் கருப்பையா. ஒரு பக்கத்தை தன் அண்ணனிடம் காட்டுகிறான். `தேசக்கொடி' என்று தலைப்பு. வர்ணம் ஏதும் இல்லாமலே காகிதத்தின் வெண்மையிலும், அச்சு மையின் கருமையிலும் `மூவர்ணக்கொடி’யின் படம் அந்தப் பக்கத்தில் இருக்கிறது.

``இந்தக் கொடி செஞ்சு கொடு அண்ணாச்சி. நாளைக்கு இஸ்கூலுக்குக் கொண்டுக்கிட்டுப் போகணும். நாளைக்கு எல்லோரும் கொண்டுக்கிட்டுப் போகணும்” என்று சொல்கிறான் கருப்பையா. அவன் முகத்தில் களிப்பும் ஆர்வமும்  மின்னுகின்றன.
தாய்-தகப்பன் இல்லாத பாண்டியனும் கருப்பையாவும் அண்ணன்-தம்பிகள். தாயும் தந்தையுமாகக் கருப்பையாவுக்குப் பாண்டியனே இருக்கிறான். சமைக்க மட்டும் உறவுக்கார ஆத்தாள் ஒருத்தி வந்துகூட இருக்கிறாள். ராத்திரி தம்பி தூங்கிய பிறகு கண் விழித்திருந்து தம்பிக்காக மூவர்ணக்கொடி செய்கிறான் பாண்டியன்.

கருப்பையா காலையில் கண் விழிக்கும்போது, அருகில் சுவரில் சாய்ந்து ஓய்வுகொண்டிருக்கும் அந்த அழகிய மூவர்ணக்கொடியைப் பார்க்கிறான். அவன் மனசு துள்ளிக் கிளுகிளுக்கிறது. விருட்டென படுக்கையைவிட்டு எழுந்திருக்கிறான் கருப்பையா. கிணற்றில் நீர் மொண்டுகொண்டிருக்கும் ஆத்தாளிடம் பெருமையாகக் கொடியைக் காட்டி, ``அண்ணாச்சி செஞ்சி கொடுத்தாரு!” என்கிறான்.

``எதுக்குடா இது?”

``எதுக்கா? என்ன ஆத்தா நீ! இஸ்கூலுக்கு இன்னிக்கு மத்தியானம் கொடி கொண்டுகிட்டுப் போகணும் ” என்கிறான் அவன்.

``எதுக்குக் கொண்டுகிட்டுப் போகணும்?”

``சொதந்திர தினமில்லா... அதுக்கு” என்று சொல்லிவிட்டுக் கொல்லைப் பக்கத்தைப் பார்த்து நடக்கிறான் அவன். ஆத்தாளுக்கு ஒன்றும் புரியவில்லை.

``சொதந்திர தினமாமே... அது என்ன தெனமோ?” என்று முணுமுணுக்கிறாள் அவள்.

கொடியை வலக்கையில் சற்று தோள் மீது சாய்த்தபடி பிடித்துக்கொண்டு கம்பீரமாக, பட்டாளத்துச் சிப்பாய்போல் நடக்கிறான். அவனுக்கு உற்சாகமாக இருக்கிறது.

அந்தக்  கிராமத்துப் பள்ளிக்கூடத்துக்கு மாவட்டக் கலெக்டர் கொடி ஏற்ற அன்று மாலை வருகிறார். `மாணவர்கள் எல்லோரும் நன்றாக `டிரெஸ்’ பண்ணிக்கொண்டு வர வேண்டும். பள்ளிக்கூடத்தில் வரிசையாக அணிவகுத்து நிற்க வேண்டும்' என்று ஹெட்மாஸ்டர் பல உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். அதையெல்லாம்விட முக்கியமாக எல்லோருக்கும் `டீ பார்ட்டி’ உண்டு என்று சொல்லியிருந்தார். அது பிள்ளைகளுக்கு மனக்கிளர்ச்சியை உண்டுபண்ணிக்கொண்டிருந்தது.

``பள்ளிக்கூடத்துச் சுவரெல்லாம் புதிதாக வெள்ளையடித்திருக்கிறார்கள். அசிங்கம் பிடித்த ஒரு கிழட்டுப் பிச்சைக்காரனுக்குப் புத்தாடை உடுத்திவிட்டதுபோல காட்சியளிக்கிறது. அந்தப் பழைய கிராமப் பள்ளிக்கூடம்.”

பள்ளிக்கூடத்தின் பின்பக்கம் ஒரு கீற்றுக்கொட்டகையில் ஜிலேபிகளும் வடைகளும் தயாராகிக்கொண்டிருக்கின்றன. புது வடையின் மணத்தை, பிள்ளைகள் உள்ளே இழுத்து ரசிக்கிறார்கள். அங்கே ஒரு கூட்டமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. சமையல்காரர் அவர்களைப் ``போங்க போங்க'' என விரட்டுவதும், அவர்கள் போவதுபோலப் போய்விட்டு மீண்டும் மீண்டும் வந்து எட்டிப்பார்ப்பதுமாக இருக்கிறார்கள்.

கலெக்டர் இன்னும் வந்தபாடில்லை. பிள்ளைகளுக்கு, பசி வந்துவிட்டது. `கலெக்டர் வருவதற்குள் டீ பார்ட்டியை முடித்துவிடலாம்' என நீண்ட வரிசையில் பிள்ளைகளை அமரவைத்து, இலையைப் போடுகிறார்கள். ஆளுக்கு ஒரு ஜிலேபி, இரண்டு இரண்டு பூவன் பழம், அப்புறம் இரண்டு வடைகள், மிக்ஸர் வருகிறது. எல்லா குழந்தைகளும் நாக்கைத் தீட்டிக்கொண்டு சாப்பிட ஆரம்பிக்கிறார்கள்.
ஆசிரியர்கள் குறுக்கும்நெடுக்குமாக நடந்து மேற்பார்வையிடுகிறார்கள். ஹெட்மாஸ்டர் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார். ''சீக்கிரம் ஆகட்டும்” என்று உரக்கச் சொல்கிறார். 

``மடமடன்னு சாப்பிடணும்” என்று பையன்களை லேசாக முடுக்குகிறார் மூன்றாம் வகுப்பு ஆசிரியர்.

`சட் சட்' என விரலைச் சொடுக்கிக்கொண்டு போகிறார் ஐந்தாம் வகுப்பு வாத்தியார். குழந்தைகள் நிமிர்ந்து ஆசிரியர்களின் முகங்களைப் பார்க்கிறார்கள். ஒன்றும் ஓடவில்லை அவர்களுக்கு.

ஜிலேபியைச் சாப்பிட்டுவிட்டு வாழைப்பழத்தைச் சாப்பிடத் தொடங்குகிறான் கருப்பையா. முத்தையா, பழத்தை விழுங்கிவிட்டு பழத்தோலின் சுவையான பிரதேசத்தை பல்லால் பிடுங்கிக்கொண்டிருக்கிறான்.

``சீக்கிரம்... சீக்கிரம்” என்று வேகமாக ஓடி ஓடி நடக்கிறார் மூன்றாம் வகுப்பு வாத்தியார். சமையல்காரர் பெரிய பாத்திரத்திலிருந்து  மற்றொரு பெரிய பாத்திரத்துக்கு  அருவியாக காபி ஆற்றுகிறார்.

வாசலில் ஹார்ன் சத்தம் கேட்கிறது. ``ஓ..! கலெக்டர் வந்துட்டார். சீக்கிரம் ஆகட்டும்” என்று கத்திவிட்டுக் கிடுகிடுவென வாசலுக்கு ஓடுகிறார் ஹெட்மாஸ்டர்.

``வேகமாகச் சாப்பிடுங்க” என்று சேவகன் அருணாசலம் கூச்சலிடுகிறான். வடையைக் கையில் எடுக்கிறான் கருப்பையா. அவனுக்கு வடை பிடிக்கும். ஆனால், கை உதறலெடுக்கிறது. `கையிலிருந்து வடையை அருணாசலம் பிடுங்கிக்கொண்டு போய்விடுவானோ!' எனத் தோன்றுகிறது அவனுக்கு. பறந்து அள்ளித் திணிக்கிறான் அவன். `ஹக்’ என, தொண்டையில் விக்கல் குறுக்கிடுகிறது. தண்ணீர் வேண்டும் என்று அருணாசலத்தைப் பார்த்துக் கையைக் காட்டுகிறான். ''தண்ணி இப்போ கொண்டுவர முடியாது. கலெக்டர் வந்தாச்சு. எந்திரிங்கோ'' என்கிறான்.

இரண்டாம் வகுப்பு வாத்தியார் வெளியே இருந்து உள்ளே வருகிறார். ``எல்லோரும் எந்திரிங்க. போரும் போரும்” என்று விரட்டுகிறார்.
கருப்பையா பாதி வடையையும் மிக்ஸரையும் அப்படியே போட்டுவிட்டு விக்கிக்கொண்டே எழுகிறான். பின்புறம் திரும்பி அவன் தன் கொடியைக் கையில் எடுக்கையில் வேறொரு சிறுவன் ஊடே பாய்ந்து ஓடுகிறான். அவன் கால்கள் கருப்பையாவின் கொடியில் தட்டி மறைகின்றன.

``கொடி கிழிஞ்சுபோச்சுடா!” என்று தொண்டை அடைக்கக் கூறுகிறான் கருப்பையா. அம்புபோல் பாய்ந்துவரும் இரண்டாம் வகுப்பு வாத்தியார், இதைப் பார்க்கிறார். பயல் கொடியைக் கிழித்துக்கொண்டு நிற்கிறானே! ``ஏண்டா முட்டாக்கழுதே, ஒழுங்கா வெச்சிக்கிறதுக்கென்ன? மூளை கீளை இருக்காலே ஒனக்கு?” என்று உணர்ச்சி வசப்பட்டவராய் அந்தக் கொடி இருந்த கழியைப் பிடுங்கி கருப்பையாவின் துடையில் பளீரென விளாசிவிட்டுக் கழியைக் கீழே வீசிவிட்டு ஓடுகிறார். ஓ..! அவசரம்... அவசரம்.
இதற்குப் பிறகும் கதை நீள்கிறது. கலெக்டர் கொடி ஏற்றி முடிக்கவும் மழை வந்துவிடுகிறது. கலெக்டர் காரில் ஏறி அந்தப் பக்கம் போகவும் ``எல்லோரும் ஓடுங்கடே!'' என்று விரட்டிவிடுகிறார்கள்.

இந்தக் குழந்தைகள் டிபன் சாப்பிடும் இந்தக் காட்சி முதல் வாசிப்பிலேயே, என் மனதை உலுக்கி, இதைத் தாண்டி மேலே வாசிக்க முடியாமல் கண்கள் திரையிட, கை-கால்கள் சோர்வுற்றதுபோல, நான் துக்கித்து நின்றது இன்னும் அப்படியே நினைவிருக்கிறது. ஐன்ஸ்டீனின் `போர்க்கப்பல் பொட்டெம்கின்' திரைப்படத்தின் உலகப் புகழ்பெற்ற ஒடெஸ்ஸா படிக்கட்டு துப்பாக்கி சூடு காட்சியைப்போல என்றென்றும் மனதைவிட்டு அழியாச் சித்திரமாக இந்தக் காட்சி நிலைத்துவிட்டது.
இந்தக் கதையை கிருஷ்ணன் நம்பி முடித்தவிதம் ஒரு கவிதைதான்.

`குழந்தைகள் தெப்பமாய் நனைந்தபடி ஓடுகிறார்கள். அவர்களின் காகிதக் கொடிகள் நனைந்து குளிக்கின்றன. முத்தையாவின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு `சர்க் சர்க்’ என நீர் தெறிக்க ஓட்டமாய் ஓடுகிறான் கருப்பையா.

சுதந்திர தினத்தன்று அந்தத் தினத்தின் பொருளே போன்று, `இதோ இதுதான் அது’ எனச் சுட்டிக்காட்ட முடிவதைப் போன்று, ஒரு சுவையான கரும்பின் அடிக்கரும்புபோல் ஏதோ ஒன்றைப் பெற முடியும்  என எதிர்பார்த்திருந்தான் கருப்பையா. அன்று அதுவரை கிட்டாத அந்த ஏதோ ஒன்று, அந்த மழையில் நனைந்துகொண்டு ஓடுகையில் கிட்டிவிட்டதுபோல் உணர்கிறான் அந்தச் சிறுவன்.

மழை நிற்கவில்லை. அன்னை பாரததேவியின் ஆனந்த பாஷ்பமே போன்று மழை அந்தக் குழந்தைகள் மீது சொரிகிறது. அவளுடைய அன்புமயமான, மோகனப்புன்னகையே உருக்கொண்டு மலர்வது போன்று கீழ்வானில் வர்ணக் களஞ்சியமாக ஒரு வானவில் அப்போது தோன்றுகிறது.'

இந்திய சுதந்திரத்தின் அர்த்தம், அர்த்தமின்மை, ஏழைகளுக்கு அது என்ன கொடுத்து, எதைப் பறித்தது என்பதுபோல ஏதேதோ உணர்வுகளையும் கேள்விகளையும் சத்தமில்லாமல் நம் மனதில் எழுப்புகின்ற நுட்பமான கதை இது. 

இதைப்போலவே குழந்தைகளை, பள்ளி புரிந்துகொள்ளாது நடத்தும் கேட்டே வலியுடன் பேசும் இன்னொரு கதை `கணக்கு வாத்தியார்.' அந்தக் காலத்திலேயே ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாக இவரது கதை வெளிவந்துள்ளது.

தனது கதைகளைப் பற்றி அவரே கூறுவது...

``அநேகமாய் என்னையே கதாநாயகனாக்கி, என் சொந்த ஆசைகளை, கனவுகளை, அசட்டுத்தனங்களை, வக்கிரங்களை, தோல்விகளை ஆதாரமாகக் கொண்டுதான் நான் கதைகள் எழுதுகிறேன். வாசகனை ஏமாற்ற அவசியமானால் ஒரு மீசை அல்லது ஒரு முண்டாசுக்கட்டு அல்லது என் கண்ணையும் மூக்கையும்  கழற்றிப்போட்டுவிட்டு சங்கரனின் கண்ணையும் நாராயணனின் மூக்கையும் இரவல் வாங்கிக்கொண்டு ஏறக்குறைய என்னையே சங்கர நாராயணன் என்கிற புதிய ஆசாமியாக வாசகனுக்கு அறிமுகம் செய்துவைக்கிறேன்.
என்னை மையமாகவைத்து எழுதும் கதைகளே எனக்குப் பிடிக்கின்றன. அப்படி எழுதும் கதைகளே (என்னைப் பொறுத்தவரை) வெற்றிகரமாக அமைவதாகவும் எனக்குப் படுகிறது” 

கிருஷ்ணன் நம்பியின் நெருங்கிய சகாவாக 1952-ம் ஆண்டு முதல் அவரது இறுதிக்காலம் வரை இணைந்து பயணித்த எழுத்தாளர் சுந்தரராமசாமி, சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ள `இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசையில் கிருஷ்ணன் நம்பியைப் பற்றி மிகச் சிறப்பான அறிமுகத்தை எழுதியுள்ளார்.

`தன்னைப் பாராட்டிக்கொள்வதைவிடவும் தன் மீதான விமர்சனத்தை விளம்பரப்படுத்திக்கொள்வதில் அவருக்கு தனி உற்சாகம் இருந்தது. இடைவெளி விடாமல் எழுதக்கூடிய பழக்கம் அவரிடம் இல்லை. நினைத்து நினைத்துத் தள்ளிப்போட்டு ஒருநாள் எழுதக்கூடியவர். ஆகவே, மிகக் குறைவாகத்தான் அவரால் எழுத முடிந்தது. நன்றாக எழுத வேண்டும் என்ற ஆசைதான் சதா அவரைத் தூண்டிக்கொண்டிருந்தது. எழுதிக் குவிக்க வேண்டும் என்ற எண்ணம், அவருக்கு எப்போதும் இல்லை. அத்துடன் நம்பி, வெகுஜனப் பத்திரிகைகளுக்கு தன் கதைகளைப் பொதுவாக அனுப்ப விரும்பவில்லை. வித்தியாசமான கதைகளையே எழுத வேண்டும்  என்ற விருப்பத்துடன் இருந்த  நம்பியின் கதைகள் பிரபல இதழ்களில் வெளிவருவதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருந்தது. அவர் தம் வாழ்நாளில் எழுத்துகள் மூலம் பெற்ற வருமானம் மிகக் குறைவாகவே இருந்திருக்கும்' என்பது சுந்தரராமசாமி வரையும் சித்திரம்.

இதுபற்றி `கதைக்கு ஒரு கரு' என்ற  கட்டுரையில் கிருஷ்ணன் நம்பியே கூறுவது சுந்தரராமசாமியின் கணிப்பை உறுதிப்படுத்துகின்றன.

“நானோ, என் தகப்பனார் சொல்வதுபோல ஒரு மகா சோம்பேறி. வருஷத்தில் முழுசாக ஐந்து அல்லது ஆறு கதைகள் எழுதி முடித்துவிட்டேன் என்றால், அதுவே எனக்கு ஒரு சிகர வெற்றி. இப்படியெல்லாம் இருந்தும் எனக்கென்னவோ கதை எழுதி பணம் பண்ணிவிடலாம் என்று ஒரு கனவு. முயன்று பாடுபட்டு முடியுமா, முடியாதா எனப் பார்த்துவிடுகிற ஊக்கமும் சுறுசுறுப்பும் அறவே என்னிடம் கிடையாது. சொல்லப்போனால் உழைப்பிலேயே நம்பிக்கை அற்றவனாக நான் இருந்தேன். எப்படியாவது நிறைய எழுதி எப்படியாவது காசு சம்பாதிக்க வேண்டும் என்று குழந்தைத்தனமாக நான் எண்ணிக்கொண்டிருந்தேன். மேலும், எழுதிக் கிடைக்கும் காசுதான் இனிக்கும். பூ விற்ற காசுதான் மணக்கும் என்று எனக்கு மயக்கம். பத்திரிகைக்காரன் கொடுத்த காசைக் கொடுத்து டிபன் வாங்கிச் சாப்பிட்டால், அதில் அலாதியானதொரு திருப்தி. பத்திரிகைக்காரனிடம் சன்மானம் பெற்றே என் வாழ்க்கையின் பொருளாதார வெற்றியைச் சாத்தியமாக்கிவிடும் நப்பாசை. ஆனால், என் ஆசையின் தூய்மையோ, இறைவன் காலடியில் மலர்களாக சமர்ப்பிக்கத்தக்கது. அழகிய பிதற்றல்களால் லௌகீக வாழ்க்கையைப் பாழடித்துக்கொண்ட கற்பனைப் பேர்வழிகளில் நானும் ஒருவன். ஆனால், இதில் எனக்கு தன்னிரக்கம் எதுவும் கிடையாது. விளக்கில் வீழ்ந்து மடியும் விட்டில்பூச்சியின் துன்பத்துக்கு நமது நினைப்புதான் ஆதாரமே அன்றி விட்டிலில்லை. சுடரில் தன்னைக் கருக்கிக்கொள்ளுதல் விட்டிலைப் பொறுத்தவரையில் ஜீவாத்மா, பரமாத்மாக்களின் ஐக்கியமாகவும் இருக்கலாம் அல்லவா?” 

கிருஷ்ணன் நம்பி எழுதிய முதல்கதை `நீலக்கடல்'. ஆனால், அது பிரசுரமாகவில்லை. அதை எழுதியதும் கலைமகள் இதழுக்கு அனுப்பிவைத்தார். கிட்டிப்பிள்ளில் அடிபட்டுச் செத்துப்போன குருவியின் மரணத்தை முன்வைத்து மரணம் பற்றிய பல கேள்விகளை முன்வைத்த கதை அது. அந்தக் கதை பற்றி கிருஷ்ணன் நம்பியின் உடன்பிறந்த சகோதரரான கிருஷ்ணன் வெங்கடாசலம் கூறியிருப்பது சுவையான தகவல்.

``அந்தக் காலத்தில் தமிழில் 'கலைமகள்’ முக்கியமான ஒரு பத்திரிகை. ஒருசமயம் அவர்கள் பச்சை, சிவப்பு, நீலம் என பல நிறங்களைக் கூறி, அவற்றுக்குப் பொருந்தும்படியான கதைகளை வரவேற்று, அதில் தேர்வுபெற்ற கதைகளைப் பிரசுரம் செய்தனர். `நீலக்கடல்’ கதையை `நீலம்’ நிறத்தைக் குறிக்கும் வகையிலான கதையாக கலைமகளுக்கு அனுப்பியிருந்தார் நம்பி. ஆசிரியர் கி.வா.ஜெகன்நாதன், இந்தக் கதையைத் தேர்வுசெய்யவில்லை. அவருக்கு திருமணம், உபநயனம், காது குத்தல் போன்ற மங்கலகரமான நிகழ்வுகளைக்கொண்ட கதையாக இருந்தால் பிடித்திருந்திருக்கும். மரணத்தைப் பற்றிய கதையைப் பிரசுரிக்கலாமா? அது அமங்கலமல்லவா? எனவே, கிடப்பில் போட்டுவிட்டார். திருப்பியும் அனுப்பவில்லை. கலைமகளில் தாமோதரன் என்பவர், அப்போது உதவி ஆசிரியராக இருந்தார். அவருக்கு இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. கி.வா.ஜ-வின் மனதை மாற்றி பிரசுரம் செய்துவிடலாம் என்றெண்ணி, பல மாதங்கள் அந்தக் கதையை அவரே வைத்திருந்தார். ஆனால், அவரது முயற்சி வெற்றிபெறவில்லை. நம்பி எழுதிய கடிதத்துக்கேற்ப சில மாதங்கள் கழிந்து, அந்தக் கதை திரும்பி வந்து சேர்ந்தது.

தனது 18-வது வயதில் எழுத ஆரம்பித்து, இடையில் கிடப்பில் போட்டு, கதையை முழுமையாகப் பூர்த்திசெய்தபோது, நம்பியின் வயது 28. பிறகு இந்தக் கதை 1961-ம் ஆண்டில், 'சரஸ்வதி’ இதழில் வெளிவந்தது. நம்பியின் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதை இந்தக் கதை' என்று சுந்தரராமசாமி குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மைதான். ஏனெனில், அது கிருஷ்ணன் நம்பியின் கதை!

கிருஷ்ணன் நம்பியின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு கதை `மருமகள் வாக்கு' .

மறுநாள் தேர்தல். பூனைக்கும் கிளிக்கும் இருமுனைப் போட்டி. போட்டிபோடுபவர்கள், கிளி அபேட்சகர் வீரபாகுக்கோனாரும் பூனை அபேட்சகர் மாறியாடும் பெருமாள் பிள்ளையும். மீனாட்சி அம்மாள், அக்கிரகாரத்தில் வசித்து வந்தாள். அவளிடம் சொந்தமாக பசு இருந்தது. அவள் கணவன் இறந்துபோக, அவன் வேலை மகன் இராமலிங்கத்துக்குக் கிடைத்தது. அவன் சாது.

மருமகள்  பெயர் ருக்மணி. நல்ல உழைப்பாளி. பசுவை நன்கு கவனித்துக்கொள்வாள். மருமகளிடம் மாமியார் கண்டிப்புடன் நடந்துகொள்வார். அன்றைக்கு என்ன குழம்பு வைக்கவேண்டும், எவ்வளவு அரிசி சோறு பொங்கவேண்டும் என்பது உள்பட எல்லாமே மாமியாரிடம் கேட்டுதான் செய்ய வேண்டும். மாமியாரின் அதிகாரக் கோட்டைத் தாண்டிய ஒரு சந்தோஷமாக, ருக்மணிக்கும் பசுவுக்குமிடையிலான உறவு மட்டுமே இருந்தது. ருக்மணி, எப்போதும் பசுவுடன் பேசிக்கொண்டே இருப்பாள்.

வாக்குப்பதிவு அன்றைக்கு மாமியார்க்காரி 'பூனைக்குத்தான் போட வேண்டும்' என்று மருமகளிடம் சொல்கிறாள். ``சரிங்க மாமி'' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ``இன்னைக்கு ஓட்டு கிளிக்குத்தான்'' என்று ருக்மணியின் உள்ளம் ஆணித்தரமாகச் சொல்லிக்கொண்டது.

வாக்களிக்கச் செல்லும்போது அரசமரத்தில் ஒரு பச்சைக்கிளி தெரிந்தது. அதனுடன் மானசீகமாகப் பேசிக்கொண்டாள். கிளிக்குத்தான் ஓட்டு போடப்போவதாகவும், பூனைக்கு ஓட்டு போட தனக்கு விருப்பமில்லை என்றும் சொன்னாள்.

ருக்மணி ஓட்டுச்சாவடிக்குள் போகிறாள். அவளுக்கு முற்றிலும் அந்நியமான சூழலாக அது இருந்தது. ருக்குவின் நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. பொறுக்க முடியாதபடி மூத்திரம் முட்டிற்று. `ஸ்வாமி. என்ன அவஸ்தை இது!’ பற்கள் அழுந்தின. `ஐயோ, பால் கறக்க நேரமாகியிருக்குமே’ என்ற நினைவு வர, மடியில் பால் முட்டித் தெறிக்க மருகும் பசுவும், கட்டிலிருந்து தாவித் தவிக்கும் அதன் கன்றும் `ம்மாம்மா...’ என்று அவள் செவிகளில் அலறிப் புடைக்கலாயின. அவள் உடம்பு இப்படிப் பதறுவானேன்? மாரும் லேசாக வலிக்கிறது. ஆ, கிளி! கிளிக்கு எதிரே முத்திரை நெருங்கிவிட்டது. இப்போது ஒரு கை ருக்மிணியின் கையைப் பற்றவும், திடுக்கிட்டு, ``யாரது?'' என்று அவள் திரும்பிப் பார்த்தாள். யாரும் அங்கு இல்லை. ஆனால், அவள் கையை வேறொரு கை இறுகப் பற்றியிருந்தது என்னவோ நிஜம்தான். பெண் கைதான். வேறு யாருடைய கையும் அல்ல; மாமியார் மீனாட்சி அம்மாளின் கைதான். கிளிக்கு நேர் எதிராக இருந்த அவள் கையை, பூனைக்கு நேராக மாமியார் கை நகர்த்தவும், பளிச்சென அங்கு முத்திரை விழுந்துவிட்டது.

``ஆ! ருக்மணியின் வாக்கு பூனைக்கு! ஆம், பூனைக்கு!''

பரபரவெனச் சாவடியைவிட்டு வெளியேறினாள் அவள். அவளுக்காகப் பெண்கள் காத்திருந்தனர். இவள் வருவதைக் கண்டதும் அவர்கள் ஏனோ சிரித்தனர். பக்கத்தில் வந்ததும், ``ருக்கு, யாருக்குடி போட்டே?’’ என்று ஒருத்தி கேட்க, ``எங்க மாமியாருக்கு’’ என்ற வார்த்தைகள் அவள் அறியாது அவள் வாயிலிருந்தது வெளிப்படவும், கூடி நின்ற பெண்கள் பெரிதாகச் சிரித்தார்கள். ருக்மணி தலையைத் தொங்கப் போட்டபடி, அங்கு நிற்காமல் அவர்களைக் கடந்து விரைந்து நடந்தாள். முன்னைவிடவும் மார்பு வலித்தது. பொங்கி வந்த துக்கத்தையும் கண்ணீரையும் அடக்க அவள் ரொம்பவும் சிரமப்படவேண்டியிருந்தது.

இது வெறும் மாமியார்-மருமகள் கதை அல்ல. சமூக உளவியலைப் புரிந்துகொள்ள உதவும்விதமாக இன்னொரு தளத்தில் இயங்கும் கதை. தன்னுணர்வுக்கும் அதற்கு அப்பாற்பட்டு இயங்கும் மனதுக்குமிடையிலான போராட்டமாகவும் இதைப் புரிந்துகொள்ள முடியும்.

அவரது `தங்க ஒரு' என்கிற கதை, இன்றைக்கும் போற்றப்படும் ஒரு மேஜிக்கல் ரியலிசக் கதை. சென்னை மாநகரத்தில் குறைந்த வாடகைக்கு கிடைக்கும் ஒண்டுக்குடித்தனத்தில் வாழ்ந்து கால் நீட்டிப் படுக்க முடியாமல் உடம்பைக் குறுக்கிக் குறுக்கிப் படுத்துக் கடைசியில் லில்லிபுட் மனிதர்களாக ஆகிப்போன ஒரு போலீஸ் குடும்பம், ஒரு போலீஸ்கார பூட்ஸுக்குள் குடித்தனம் நடத்தும் சைஸில் சுருங்கிப்போகிறார்கள்.

வீடு தேடி அலையும் ஒரு மனிதன், இந்த பூட்ஸ் வீட்டு மனிதரைச் சந்தித்து உரையாடுவதே கதை. `இன்னொரு பூட்ஸ் காலியாகத்தான் இருக்கிறது. வாடகைக்கு எடுத்துக்கொள்கிறீர்களா?' என்று அவர் கேட்பதாக கதை முடியும். இப்படி விதவிதமான வடிவங்களிலும் சொல்முறைகளிலும் கதை சொன்னவர் கிருஷ்ணன் நம்பி.

பார்ப்பன சமூகத்தில் பிறந்த அவருக்கு பார்ப்பனர் அல்லாத சாதிகளில்தான் நண்பர்கள் அதிகம் என்று சுந்தரராமசாமி குறிப்பிடுகிறார். ``வெவ்வேறு ஜாதிகளையும் மதங்களையும் சேர்ந்த பிச்சைப் பண்டிதரும், தர்மராஜனும், அண்ணாமலையும், கம்யூனிஸ்ட்டுகளான எம்.எம்.அலி, மிக்கேல் ராஜு, விசாலம் (பிறகு நாவலாசிரியராக ஆனவர்) பாலமோகன் தம்பி ஆகியோரும் அவரது நண்பர்கள். திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நாராயண பிள்ளை என்பவர் அவருக்கு மிக நெருக்கமான நண்பர்.”

ஏழை எளிய மக்களைப் பற்றி அக்கறையுடன் எழுதியவர் நம்பி. முற்போக்கு இதழ்களான `சாந்தி', `சரஸ்வதி', `தாமரை'யில் தொடர்ந்து எழுதியவர்.

இந்த இடத்தில் கிருஷ்ணன் நம்பியின் எழுத்து பற்றி பட்டியல் மன்னர் க.நா.சு எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது. `அவர் கதைகளை நான் தமிழில் நல்ல கதைகள் என்று வெளியிடுகிற பட்டியலில் சேர்ப்பதில்லை என்று அவருக்கு வருத்தம்தான் என்பது எனக்குத் தெரியும். அவர் தன் சிறுகதைகளில் நல்ல தரத்தை எட்டியவர் என்பது எனக்குத் தெரியும். அந்தத் தரத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு தரத்தை அவரால் எட்ட முடியாமல்போனது, அவருடைய முற்போக்குச் சிந்தனை இருட்டினால்தான் என்றும் எனக்கு நினைப்பு.' முற்போக்குச் சிந்தனைகளை இருட்டெனக் கண்ட க.நா.சு-வின் பட்டியலில் கிருஷ்ணன் நம்பியின் கதைகள் இடம்பெறாமல்போனதில் வியப்பொன்றும் இல்லை.

``சமூக ஏற்றத்தாழ்வுகளில் அவருக்குக் கோபம் இருந்தது. குடும்பத்துக்கு உள்ளோ வெளியிலோ அநீதியான காரியங்கள் நடைபெறுகிறபோது அவர் மிகுந்த கோபம் அடைந்திருக்கிறார். ஆனால், தனிநபராக அவரால் கதை, கவிதை எழுதுவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாமல் போயிற்று” என்று சுந்தரராமசாமி குறிப்பிடுகிறார்.

கடைசியில் எலும்புப் புற்றுநோய் வந்து, ஒரு காலை எடுத்தும்கூட தப்ப முடியவில்லை. தன் மரணத்தை ஓராண்டுக்கு மேலாக எதிர்நோக்கிக் காத்திருந்து, அதை எதிர்கொள்ள தன் மனைவி மக்களையும் மனரீதியாகத் தயார்படுத்திப் பிறகு 1976 ஜூன் 16 அன்று காலமானார்.

``எனது லௌகீக வெற்றிகளில் எப்போதுமே எனக்கு நம்பிக்கை இல்லை.
பிழைக்கத் தெரியாத பயலாக இந்த உலகத்தில் வந்து அவதரித்திருப்பவனாகவே
என்னைப் பற்றி நான் நினைத்துக்கொள்வேன். தோல்விகளை எப்போதும் எதிர்நோக்கிக்
காத்திருப்பது என் சுபாவம். ஆனால், இந்தப் பிரபஞ்சமே கவிதை, சிறுகதை, நாவல்களால் ஆனது
எனத் தீர்மானம் செய்திருந்த என் மனதை, வியாபாரத்தில் ஒட்டவைக்க என்னால் முடியவில்லை.
ஆனால், பிரத்யட்ச வாழ்க்கையின் இரும்புக்கரங்கள் கொடுத்த சவுக்கடிகளைத் தாங்க முடியாமல் என் தந்தையின் கல்லாப்பெட்டியில் போய் நானும் விழுந்து சரண் புக வேண்டியதாயிற்று.”

- கிருஷ்ணன் நம்பி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு