Published:Updated:

கௌரவம் - சிறுகதை

கௌரவம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
கௌரவம் - சிறுகதை

நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம்

கௌரவம் - சிறுகதை

நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
கௌரவம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
கௌரவம் - சிறுகதை
கௌரவம் - சிறுகதை

``மோகன் இல்லாம எப்படிடா விளையாடுறது? பெரிய டீம் வேற.”

“அதுக்காக அவனை எப்படிக் கூப்புடுவ? ஒரு வாரம் நாயா சுத்தி, நேத்துத்தான் கண்டுபிடிச்சுத் தூக்கிட்டு வந்திருக்கானுக அவன் தங்கச்சிய. வர மாட்டான் மாப்ள!”

சக நண்பனின் தங்கை, காதல் கல்யாணம் செய்து ஊரைவிட்டு ஓடியது நேற்று வரை பெரிதாகப் பேசப்பட்டாலும், இன்று கபில் புல்லட்ஸ் அணியினருடன் கிரிக்கெட் மேட்ச் என்பதே முக்கியத்துவம் பெற்ற உணர்வாக இருந்தது எங்களுக்கு. ஜெயவிலாஸ் பாலத்துக்கு அந்தப் பக்கம் இருப்பவர்கள், கபில் புல்லட்ஸ் அணியினர். அடுத்த ஏரியா.

சற்று திகிலாக இருந்தாலும் உற்சாகம் மிதமிஞ்சி இருந்தது. `கபில் புல்லட்ஸ்’ அணியினருடன் இன்று மோதப்போகிறோம் என்ற நினைப்பே அலாதியாக இருந்தது. நான் ஓப்பனிங் இறங்கி ஓரளவு நன்றாக ஆடுபவன். ஆனாலும் கபில் புல்லட்ஸ் அணி என்றதும், ஒருவிதப் பதற்றம் தொற்றிக்கொண்டது. நாங்கள் அரை டிரவுசர் போட்டு, பந்து பொறுக்கிக்கொண்டிருந்த காலத்தில் இருந்து இன்று வரை அவர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் சோளக்கட்டையை வைத்து கிரிக்கெட் ஆடும் ஊரில் புத்தம் புதிய பேட், கீப்பிங் கிளவுஸ், ஆயில் பேட், இவற்றுக்கு எல்லாம் மேலாக வெள்ளை நிற பனியன் மற்றும் பேன்ட் என, கிட்டத்தட்ட டி.வி-யில் வருபவர்கள்போல் விளையாட வருவார்கள். வேலைக்குப் போயும் கிரிக்கெட் ஆடுவார்களா என்ற சந்தேகத்தைத் தீர்த்தவர்கள் அந்த அணியினர்.

ராஜேந்திரன் அண்ணன் வீட்டைக் கடக்கும்போது எல்லாம், திண்ணையில் ஒரு பெரிய கயிற்றின் முனையில் சாக்ஸுக்குள் பந்தைப் போட்டு, பேட்டை வைத்துத் தட்டிக்கொண்டே இருப்பார். மட்டையின் கீழ் இருக்கும் சிறிய ஓட்டையின் வழியே எண்ணெய் போன்ற ஒன்றை ஊற்றி ஊறவைத்து மீண்டும் தட்டுவார். அந்த ஆயில் பேட் என்பது, எங்களுக்கு எல்லாம் மிகப்பெரிய கனவு. அதில் இருந்து எழும் வாசம் அப்படிச் சுழற்றியடிக்கும்.

கபில் புல்லட்ஸ் அணியில் ஒவ்வொருவரும் ‘கிடுங்’ என இருப்பார்கள். அதிலும் மேற்சொன்ன ராஜேந்திரன் என்பவர், மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்போல் இருப்பார்; அவர்களைப் போலவே சுவிங்கம் மெல்லுவார். பெளலிங்கும் அப்படித்தான் எறிவார். அவர்கள் எல்லோரும் மைதானத்துக்கு வருவதே அப்படி ஒரு கண்கொள்ளும் காட்சியாக இருக்கும். ஒன்றாகப் பேசிவைத்ததுபோல தத்தமது வண்டிகளில் வருவார்கள். எல்லோர் கைகளிலும் அவரவருக்கான பிரத்யேக மட்டை,பேட்டிங் கிளவுஸ் இருக்கும்... ஒருவித புது வாசனையோடு. வழுக்கை விழுந்த ஒருவரை `மேனேஜர்' என அழைப்பார்கள். அவர் சிகரெட் பாக்கெட் வைத்திருப்பார்.

அவர்களை, எங்கள் ஏரியாவில் எந்த அணியும் ஜெயித்தது இல்லை. கேவலமான தோல்விகளைத் தழுவவிடுவார்கள். அவர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதைவிட, கெளரவமாகத் தோற்க வேண்டும் என்பதே எல்லா அணிகளின் லட்சியமாக இருந்தது.

எங்கள் அணி, இதற்கு நேர் எதிர். வீட்டுக்குத் தெரியாமல் விளையாடப்போவதால், கைலியோடுதான் கிளம்புவோம். பேன்ட்டை மடித்து சைக்கிள் கேரியரில் வைத்து அதன் மீது ஏதாவது புத்தகம் வைத்துக்கொள்வோம். ஒவ்வொருவனையும் கெஞ்சிக் கூத்தாடி அழைக்க வேண்டும். அதில் கொஞ்சம் சுமாராக விளையாடுபவன் மிகவும் அலட்டுவான்.
“மேலுக்குச் சுகமில்ல மாப்ள... நான் வரலை.”

“நல்லாத்தானடா இருக்க... உன் பெளலிங் இல்லைன்னா அடி வெளுத்துடுவானுங்க மாப்ள” - இந்த வார்த்தையை நம் வாயில் இருந்து பிடுங்கிய பிறகு, `ப்ச்... சரி, மொதல்லயே நான் போட்டு ஓச்சுவிட்டுர்றேன்' என்பான்.

இப்படி ஒவ்வொருவனையும் அவன் பிரதாபங்களைச் சொல்லி மேட்ச் நடக்கும் அன்றும் காலையிலேயே அவர்கள் வீட்டுக்குப் போய், `இவன்கூட சேர்ந்தா எங்க உருப்படப்போற!' என்ற அவன் வீட்டாரின் முணுமுணுப்பையும் கேட்டுக்கொண்டே, ஆளை நகர்த்திக்கொண்டு மைதானத்துக்குப் போவதுற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அங்கே போனால் பிட்ச்சில் வேறு எவராவது ஸ்டம்ப் ஊன்றியிருப்பார்கள். உள்ளூர் அதிகார மையங்களை உபயோகித்து, ஊர் மானம், அது, இது என கெத்தாக ஆரம்பித்து, பின்னர் காலில் விழுந்து எங்கள் ஸ்டம்ப்பை ஊன்றி, கபில் புல்லட் அணிக்காகக் காத்திருப்போம்.

தாமதமாகத்தான் வருவார்கள். `இவனுங்களுக்கு இதே வேலையாப்போச்சுடா’ என ஒவ்வொருத்தனாக அரற்ற ஆரம்பிக்கும்போது வண்டிச் சத்தம் கேட்கும். கிட்டத்தட்ட `அலிபாவாவும் 40 திருடர்களும்’போல மொத்தமாக வருவார்கள். வந்தும் வராமல் `டாஸ்’ என ஆரம்பித்துவிடுவார்கள்.

அதுவரை `எப்போது வருவார்களோ?’ என்று இருந்த மனம், `ஏன்டா வந்தானுங்க?’ என்பதுபோல் பயத்தில் உருளும்.

மோகன்... என்னோடு ஓப்பனிங் இறங்குவான். சொன்னால் நம்ப மாட்டீர்கள். பேட் என்று வெறும் கட்டையைக் கொடுத்தாலும் அடி பின்னிவிடுவான். அவனுக்கு `டிரான்ஸ்ஃபார்மர் மோகன்' என்ற பட்டப்பெயர் உண்டு. அவன் அடிக்கும் சிக்ஸர், மைதானத்துக்கு வெளியே இருக்கும் டிரான்ஸ்ஃபார்மரில் போய் விழும். அந்தக் கிராமத்தில் மோகனின் பேட்டிங்குக்கு ரசிகர்கள் உண்டு. அக்கம்பக்க ஊர்களிலும் அவனுடைய அதிரடி ஆட்டம் பிரசித்தம். நான் பூவோடு சேர்ந்த நாராக அவனோடு ஜோடி சேர்ந்து மணந்துகொண்டிருந்தேன்.

அவர்கள் வேறு டீமோடு விளையாடுவதைப் பார்க்கும்போது எல்லாம் மோகன் சொல்வான், “அந்த ராஜேந்திரன் பந்து எல்லாம் ஒண்ணுமே இல்லை மாப்ள. லைட்டா லெக் ஸைடு வெலகி கிண்டிவிட்டோம்னா பறந்துரும்.”

ஒரு மாதத்துக்கு முன்னர் பேசிவைத்த ஆட்டம். முதலில் பிகுசெய்து பிறகு ஒப்புக்கொண்டார்கள். அதுவும் பால் மேட்ச். ஆளுக்கு ஒரு புதுப் பந்து. ``ஃபோர் பீஸ் வாங்குங்கடா, டூ பீஸ் வாங்குனா வர மாட்டோம்’' என்று வேறு சத்தாய்த்தார்கள். ரத்தச் சிவப்பில் இருந்த அந்தப் பந்தை வாங்கியதில் இருந்து நுகர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தோம்.

இந்த ஒரு மாதத்தின் பெரும்பாலான மாலை நேரங்களில், மேட்ச் குறித்தே பேசிக்கொண்டிருந்தோம். யார் எப்படிப் போடுவார்கள், எப்படி அடிக்க வேண்டும், சிங்கிள்ஸின் முக்கியத்துவம் என வியூகங்கள்... வியூகங்கள்தான்.

“ஏன்டா நெசமாவாடா, கபில் புல்லட்ஸ்கூட வெளையாடப்போறீங்களா?”

“ஆமாண்ணே.”

“உங்களுக்கு ஏன்டா இந்த வெட்டிவேலை? கொலைக்காரப் பயலுகடா. அவங்க பந்தைக்கொண்டி எறிஞ்சாய்ங்கன்னா செத்துருவீங்க. யோசிச்சுக்கோங்க.”

ஆனாலும் நானும் மோகனும் ஓப்பனிங் இறங்கி முதல் ஏழு ஓவர்கள் (இது என்ன கணக்கு என எவனுக்கும் தெரியாது) நின்று ஆடிவிட்டால், அப்புறம் ஜெயித்துவிடலாம் என்று சக்கரவியூகம் அமைத்திருந்தோம். அப்போது எல்லாம் நாங்கள் முடிப்பது இப்படித்தான், `தோத்தாலும் கெளரவமாத் தோக்கணும்டா.’

இதற்கு இடையில்தான், போன வாரத்தில் ஒருநாள் மோகனின் தங்கை ஈஸ்வரி, யாருடனோ ஓடிவிட்டாள் எனச் செய்தி பரவி, புயலாக உருவெடுத்தது.

நாங்களும் தேடினோம். அவளுடன் படித்தவனோடு மணம்செய்துகொண்டதாகவும், சோலைமலை தியேட்டர் அருகில் பார்த்ததாகவும் ஊர்ப்பேச்சு.

“சோலமலை தியேட்டர்னா, அங்கனக்குள்ள தானப்பா ரெஜிஸ்ட்டர் ஆபீஸ் இருக்கு. அப்ப வெவரமாத்தான் பண்ணியிருக்கு அந்தப் புள்ள.”

மோகனின் அண்ணன் எங்களோடு அவ்வளவாகப் பேச மாட்டார். என்றாலும், எங்களோடு தேடிக்கொண்டிருக்கும்போது அவ்வப்போது அழுதார்.

“விடுண்ணே.”

“எப்புட்றா? ஒரே பொம்பளப்புள்ளடா, எங்க சாமிடா அந்தப் புள்ள!”

முதல் நாளில் இருந்த இப்படியான எல்லா சென்டிமென்ட்களும் விரக்திகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஐந்தாவது நாளில், `அந்தப் புள்ள சூப்பரா இருக்கும். நம்ம பயலுகள்ல எவனாச்சும் கரெக்ட் பண்ணிக் கட்டியிருந்தாக்கூட பரவாயில்லை’ என எல்லோரும் சொல்ல நினைத்து, சொல்லாமல் விடும் அளவில் வந்து நின்றோம்.

“ `பால் வாங்கிட்டீங்களா?’னு மேனேஜர் கேட்டு வரச் சொன்னார்” என்ற தூதுவனின் விசாரிப்பில் மோகன் தங்கை ஓடிப்போன மேட்டர் தகர்ந்து, ஆளாளுக்கு ஐந்து, பத்து எனப் பொறுக்கி, பந்தை வாங்கி அதைக் கையில் பிடித்தவுடன், மேட்ச் குறித்து மட்டுமே யோசிக்கத் தொடங்கிவிட்டோம். இதோ இன்னும் ஒரு மணி நேரத்தில் மைதானத்துக்குப் போனால், வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த ஆட்டம் ஆரம்பிக்கப்போகிறது.

நேற்று சனிக்கிழமை மதியம், தேனியில் இருந்தோ... அதன் பக்கத்து ஊரில் இருந்தோ தகவல் வந்ததாகப் படையோடு கிளம்பிப்போன மோகன் தங்கையை மீட்டுவந்துவிட்டான், `ஒரு வருஷம் செண்டு கல்யாணம் கட்டிக்குடுக்குறோம் அந்தப் பயலுக்கே' என்ற வாக்குறுதி கொடுத்து.

“பாவம்டா அவன். ஒரு வாரம் செத்துட்டான். போய்க் கூப்புட்டுப் பார்ப்போம்... வந்தான்னா அவனுக்கும் ரிலாக்ஸா இருக்கும். இருக்கிற கடுப்பை வெச்சு ரன் அடிச்சான்னா வெயிட்டைக் காட்டலாம்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செந்தில் சொன்னது சரி என்றே எங்களுக்கும் பட்டது. தயங்கித் தயங்கி அவன் வீட்டுக்குப் போனோம். சைக்கிள் பெல்லை விட்டு விட்டு அடித்ததும் வந்தான்.
நல்லவேளையாக அவனாகவே சிரித்தான்.

“மோஹா... இன்னிக்கு கபில் புல்லட்...” எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் தங்கை வீட்டைவிட்டு வெளியில் வந்து, எதிரே இருந்த அண்ணாச்சிக் கடைக்குப் போனாள். எங்களைப் பார்த்துச் சிரித்தாள். அழுததால் அவள் முகம் வீங்கி இருந்தது என்று எல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு அழகாக இருந்தாள். எப்போதும்போல மோகனின் கட்டம்போட்ட சட்டையைப் போட்டிருந்தாள்.

அவள் கடக்கும் வரை காத்திருந்த மோகன், எங்களைப் பார்த்து கம்மியக் குரலில் சொன்னான்... “என் தங்கச்சி செத்துருச்சு மாப்ள... வீட்ல எழவு விழுந்துருச்சு எப்படி வருவேன்?”

“வாயைக் கழுவுடா. அதான் கூட்டியாந்துட்டல்ல. சரி விடு... கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாப் போயிடும். சின்னப்புள்ள... விடு அப்புறம் பேசுவோம்..”

“ம்ம்...”

“வந்து சேரு... முதல்ல பெளலிங் எடுக்குறோம். எவனையாச்சும் சப்ஸ்ட்டிட்யூட் போட்டுவைக்கிறோம்” - சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

வழக்கத்துக்கு மாறாக கபில் புல்லட்ஸ் அணியினர் முதலிலேயே வந்திருந்தார்கள். ஸ்டம்ப் ஊன்றி, பிட்ச்சில் நீர்தெளித்துக் கூட்டி... எனக் கச்சிதமான நாளாகப்பட்டது.

நாங்கள் டாஸ் வென்றதும், ``ஷிட்'' என்றார் எதிர் அணி கேப்டன். பெளலிங் என்றதும் ``வாவ்!'’ என்றார்.

முதல் இரண்டு ஓவரில் அடி வெளுத்தார்கள். மணிகண்டன் சற்று டெக்னிக்கலாக ஸ்லோ பெளலிங் போட்டதில் சில முக்கிய விக்கெட்கள் சரிந்தன. நாங்கள் பயந்த அளவுக்கு இல்லாமல் 20 ஓவரில் 126 ரன்கள்தான் எடுத்தார்கள்.

நானும் பாண்டியும் ஓப்பனிங். பாண்டி இப்படி அதிரடியாக ஆடுவான் என்பது எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. வாய்ப்பு கிடைக்கும்போது தன்னை நிரூபித்தல் என்ற தியரியை அன்று பாண்டி நிகழ்த்திக்கொண்டிருந்தான். வழக்கம்போல் நான் சந்தில் தொட்டுவிட்டு ஒன்றுகள் எடுத்துக்கொடுத்தேன்.

பதினைந்தாவது ஓவர் வரை நாங்கள் நிச்சயமான வெற்றி என்ற நிலை இருந்தது. நான் ரன் அவுட் ஆனதும் பாண்டியும் போல்டு ஆகி வந்தான். ``கல்லுல பட்டுத் திரும்பிடிச்சு மாப்ள, இல்லைன்னா அடி வெளுத்திருப்பேன்” என்றான். சட்டெனச் சுருளும் நிலை.

அதன் பிறகு, தியேட்டரில் சைக்கிள் ஸ்டேண்டில் சைக்கிள் சரிவதுபோல் சரிந்தோம்.

திடீரென சிவக்குமார், ராஜேந்திரனின் ஒரு ஒவரில் இரண்டு நான்குகள் அடித்ததும், கடைசி ஓவரில் ஏழு ரன்கள் தேவை என்ற நிலைக்குப்போனது.

முதல் பந்தைத் தொட்டுவிட்டு ஓடச் சொன்னான் சிவா. ஓடினான் மணி. ஆனாலும் ரன் அவுட் செய்துவிட்டார்கள். சிவா பேட்டிங் பக்கம் போனது சற்று நம்பிக்கையாக இருந்தாலும், கடைசி விக்கெட் என்ற டென்ஷனோடு இருந்தோம்.

ஐந்து பந்துகள், ஏழு ஓட்டங்கள் தேவை.

கௌரவம் - சிறுகதை

``விட்றா, தோத்தாலும் கெளரவமாத்தானடா தோக்குறோம்.''

ராஜேந்திரன் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தான் பெளலிங் போட.

சிவா கண்ணை மூடிச் சுழற்றியதில் இரண்டு ரன்கள். கைதட்டல் மைதானத்தைப் பிளந்தது. அடுத்த பந்து நேராக கீப்பரை நோக்கிப் போய்விட்டது. மூன்று பந்துகள் ஐந்து ரன்கள் தேவை.

இப்போது மிக லாகவமாக மட்டையைச் சுழற்றினான் சிவா. அவன் கண்கள் மூடியிருந்ததை நாங்கள் கவனித்தோம்.

``ஃபைன் லெக்...'' என யாரோ கத்தினார்கள். அந்தத் திசையில் பிடிங்கிக்கொண்டு போனது இரண்டு ரன்கள்.

 “விட்றா இனி தோத்தாலும் கெளரவமாத்தானடா தோத்தோம். விட்டு ஆட்டிட்டோம்டா இவனுங்களை... அட்றா சிவா” எனக் கத்தினோம்.

ராஜேந்திரன் எங்களைத் திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டுத் தயாரானான். சுயிங்கம்மை எச்சிலோடு காறித் துப்பினான்.

இரண்டு பந்துகள் மூன்று ரன்கள்.

அரைக்குழியில் குத்தி எழுந்த பந்தை, அல்வாபோல் தூக்கி அடித்தான். அது மிட் விக்கெட் திசையில் இருந்த டிரான்ஸ்ஃபார்மரில் போய் விழுந்தது. ஆம்... சிக்ஸர்.

நாங்கள் வென்றுவிட்டோம் என்பதை ஒரு நொடிக்குப் பிறகே நம்பத் தொடங்கியது மனம்.

ஆட்டம் முடிந்தும் முடியாமல், சர்சர்ரென வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்கள் கபில் புல்லட்ஸ். தோல்வியை முதன்முதலாக நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல் புறமுதுகிட்டார்கள்.

“அடுத்த வாரம் விளையாடலாமா சார்?’’ என்ற எங்களின் நக்கல் பவ்யத்துக்குப் பதில் சொல்லாமல் போய்விட்டார்கள்.

எங்களின் மகிழ்ச்சி என்பது, அங்கேயே அதன் அடுத்த மூன்று மணி நேரம் இருந்து. ஆட்டம் குறித்தும் ஒவ்வொரு பந்து குறித்தும் வீர தீர பிரஸ்தாபங்கள் குறித்தும் பேசியதில் தெரிந்தது.

“நல்லவேளைடா நான் அந்தப் பந்தை ஸ்லோவா போட்டேன்” என்று மணிகண்டன் சொல்லி, தன் பெருமையைக் காட்டியதுபோல் எங்கள் பதினொரு பேருக்கும் ஒவ்வொரு விஷயம் இருந்தது பெருமைப்பட்டுக்கொள்ள.

சைக்கிளை உருட்டிக்கொண்டே பொட்டக்குளம் மைதானத்தைவிட்டு வெளியே வந்தபோது மசமசவென இருட்டியிருந்தது.

``என்னடா நேத்துதான் போட்டானுங்க, இன்னிக்குப் படத்தை மாத்திட்டாய்ங்க” - போஸ்டர்களைப் பார்த்துக்கொண்டே செந்தில் சொன்னதும், மணிகண்டன்தான் முதலில் பார்த்தான்.

``டேய்... அது பட போஸ்டர் இல்லைடா!”

பசை இன்னும் காயாமல் அப்போதுதான் ஒட்டப்பட்டிருந்தது போஸ்டர்.

`எங்கள் ஆருயிர் நண்பன் மோகனின் தங்கை ஈஸ்வரி, அகால மரணம் அடைந்தார்.’

தோற்றம் - மறைவுக்கு இடையில் ஈஸ்வரி சிரிக்கும் படம்.

``காலையில கடைக்குப் போகும்போதுகூட நல்லாத்தானடா இருந்தது அந்தப் புள்ள...”

மோகனின் வீட்டை அடைத்துப் பந்தல் போட்டிருந் தார்கள். கிழவிகள் மாரடித்துக்கொண்டிருந்தார்கள்.

மெள்ள நெருங்கினோம்.

கௌரவம் - சிறுகதை

மோகனின் அம்மா, “பாவி மக... வவுத்துவலினு சொல்லிக்கிட்டிருந்தா. வலி தாங்காம மருந்தைக் குடிச்சிட்டாளே...” எனச் சொல்லி அழுதுகொண்டிருந்தார்.

எங்களைப் பார்த்ததும் மோகன் அருகில் வந்தான். ஓரிரு நிமிடங்கள் அமைதியாக இருந்தோம்.

மோகன் கேட்டான்... “யாருடா ஜெயிச்சா... கெளரவமாத்தானே தோத்தீங்க?”

எந்தச் சூழலில் எதைக் கேட்கிறான் என்பதுபோல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றிருந்தோம்.

செந்தில் உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு, நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்துத் தெள்ளத் தெளிவாகச் சொன்னான்.

“நீதான்டா ஜெயிச்ச... உன் ஜாதி வெறிதான்டா ஜெயிச்சது!”