
மைக் மோகன் தேவதாஸ் ஆனார்
‘பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு...’ மற்றும்
‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்...’ என
நாதகலாஜோதி இளையராஜாவின் சுக ராகங்களைச்
சுழலவிட்டு இரவுகளைப் பகல்களாகவும்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பகல்களை இரவுகளாகவும் மாற்றி
ஊர் இளவட்டங்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டு
செல்லமாக ‘மைக் மோகன்’ என்றழைக்கப்பட்ட
அன்பு ரேடியோஸ் அழகுபாண்டி
‘பொன்னான மனசே... பூவான மனசே...’ மற்றும்
‘நானொரு ராசியில்லா ராஜா...’ என
அஷ்டாவதானி டி.ராஜேந்தரின்
சோக ராகங்களைச் சுழலவிட்டு
‘தேவதாஸ்’ எனப் பெயர் மாற்றம் பெற்றுவிட்டார்...
பரோட்டா கடைக்காரர் புதல்வி அன்னலெட்சுமி
பலசரக்குக் கடை பன்னீரோடு
`காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறந்த’ தினம் தொட்டு.
- ஸ்ரீதர்பாரதி
சேகரிப்பு
நண்பர்களின் கிண்டல்கள் பற்றி
கிஞ்சித்தும் கவலைப்படாமல்
எதையாவது சேகரித்துக்கொண்டே இருப்பது
சேகரின் பால்ய பழக்கம்
விதவிதமான இறகுகளை, இலைகளை,
மலர்களை, முட்களை,
கிளிஞ்சல்களை, வளையல் துண்டுகளைச்
சேகரிக்கும் சேகர்
பின்னாளில் விதவிதமான
அழைப்பிதழ்களைச் சேகரிக்க ஆரம்பித்தான்.
திருமணமாகி வெகுநாட்களுக்குப் பிறகு
தனியே வெறுங்கையோடு எதிரில்வந்த சேகர்
இப்போது விதவிதமான ஞாபகங்களைச்
சேகரிப்பவன்போல் தோன்றினான்.
- சேயோன் யாழ்வேந்தன்
தேநீர்
பயணக் களைப்பில்
புதிதான ஊரில் குடித்த தேநீர்
ஒரு நாளைக் கடந்தபின்னும்
ஞாபகத்தில் ஒட்டியபடி ஞாபகப்படுத்துகிறது
அந்தத் தேநீர்க் கடையை
தேநீர் தயாரித்த கைகளை
அக்கடை இருக்கும் சாலையை
அச்சாலையில் வீசிக்கொண்டிருந்த
மாலை நேரக் குளிர்காற்றை
தேநீர் அருமை என்றபோது
உதடுகளில் மலர்ந்த புன்னகையை
சாலையில் கடந்துபோன காட்சிகளை
அந்தக் கண்ணாடி டம்ளரை
அதுவரை வலித்த தலைவலியை
கடந்துபோன பேருந்திலிருந்து
கைகாட்டிப்போன குழந்தையை
காசு கேட்டுக் கை நீட்டிய முதியவரை
சாலையின் மறுபுறம் நீண்டிருந்த கடலை
அக்கடலில் ஆடிக்கொண்டிருந்த
ஆளற்ற ஒற்றைப் படகை
கடலைத் தொட்டுக்கொண்டிருந்த
நிறமற்ற தொடுவானத்தை
அப்போது மெதுவாய்த் தூறிய மழையை.
ஒரு நல்ல தேநீர் உறையவைத்துவிடுகிறது
காலத்தை.
- சௌவி