Published:Updated:

வில்லாதி வில்லன்!

வில்லாதி வில்லன்!
பிரீமியம் ஸ்டோரி
வில்லாதி வில்லன்!

ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

வில்லாதி வில்லன்!

ஓவியம்: ஜி.ராமமூர்த்தி

Published:Updated:
வில்லாதி வில்லன்!
பிரீமியம் ஸ்டோரி
வில்லாதி வில்லன்!
வில்லாதி வில்லன்!

ந்தக் காட்டில் இருந்த விலங்குகளின் உணவுப் பொருட்கள் திடீர் திடீர் என திருடுபோயின.

‘‘என் கேரட்டுகளைக் காணவில்லை'' எனக் காலையிலேயே கதறியது முயல்.

கொஞ்ச நேரத்தில் அங்கும் இங்கும் பார்வையை அலையவிட்டவாறு, ‘‘என் தேன் ஜாடியைப் பார்த்தீங்களா?'' என வந்தது கரடி.

‘‘என்ன ஆட்சி நடத்துறே. மதியம்  சாப்பிட, கொஞ்சம் கறியை எடுத்துவெச்சிருந்தேன். பட்டப் பகலிலேயே எவனோ திருடிட்டுப் போய்ட்டான்" எனச் சிங்க ராஜாவின் குகை வாசலில் நின்று புலி உறுமியது.

நாளாக நாளாக திருட்டு அதிகரித்தது. இதற்கு ஒரு முடிவுகட்ட நினைத்த சிங்க ராஜா, ஆமையை நியமித்தது. சி.பி.ஐ ஆபீஸராக ஆமையைப் பதவி ஏற்கச்செய்தது.

உடனே கூட்டத்தில் இருந்த நரி, ‘‘இது நாலடி நடக்கறதுக்குள்ளே விடிஞ்சிரும். எப்படியும் பத்து வருஷத்துக்குள்ளே கண்டுபிடிச்சுரும்னு நம்புறேன்'' என்று கேலிசெய்தது.

வில்லாதி வில்லன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் கட்டமாக, யார் யார் வீட்டில் என்ன என்ன திருடு போயிருக்கின்றன என்று ஆமை விசாரணையை நடத்தியது. முயலிடம் பேசியபோது, ‘‘எனக்கு நரி மேலதான் சந்தேகமா இருக்கு'' என்றது முயல்.

‘‘கரெக்ட்! நீ விசாரிக்கப்போறேனு சொன்னதும், அந்த நரி முகத்தில் உண்டான கேலி, ‘முடிஞ்சா என்னைப் பிடிடா'னு சொல்ற மாதிரியே இருந்துச்சு'' என்றது கரடி.

‘‘நரியை வாட்ச் பண்ணினாலே போதும். காட்டு வில்லன் என்றாலே, காலம் காலமா நரிதானே'' என்றது மான்.

நரியின் வீட்டில் மட்டும் இதுவரை எதுவும் திருடுபோகாததும் ஆமைக்கு சந்தேகத்தை அதிகரித்தது. திருடுபோன வீடுகளில் ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தது ஆமை. மானின் வீட்டில் தனது பூதக்கண்ணாடியால் பார்த்தபோது, ஒரு முடி கிடைத்தது. எடுத்து, பத்திரப்படுத்திக்கொண்டது.

அதை எடுத்துச்சென்று ஆராய்ச்சியாளர் யானையிடம் கொடுத்து, ‘‘இது யாருடைய முடி என டெஸ்ட் பண்ணிச் சொல்லுங்க'' என்றது.

‘‘டெஸ்ட் பண்ணவே வேணாம். பார்த்ததுமே தெரியுது. இது நரியின் முடிதான்'' என்றது யானை.

ஆமைக்கு நரியின் மேல் இருந்த சந்தேகம் உறுதியாகிவிட்டது. ஆனால், இது மட்டும் போதாது. இன்னும் வலுவான ஆதாரம் வேண்டும். அதற்கு, நரியின் நடவடிக்கைகளைக் கவனித்து, கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும். ஆனால், அதன் வேகத்துக்கு நம்மால் பின்தொடர முடியாது. நம்பிக்கையான ஒருவரின் உதவி வேண்டும் என நினைத்தது. சிங்க ராஜாவிடம் விஷயத்தைச் சொன்னது.

‘‘நீ சொல்றது கரெக்ட். அந்த நரிப் பயல்  ஏகப்பட்ட லா பாயின்ட்டா பேசுவான். அவனை  வலுவாகவும் சாமர்த்தியமாகவும் மடக்கும் ஆள் வேணும். சிறுத்தையை உதவிக்கு அனுப்புறேன்'' என்றது சிங்க ராஜா.

அன்றிரவு, சிறுத்தையும் ஆமையும் நரியின் வீட்டுக்கு எதிரே, புதரில் மறைந்திருந்து கண்காணித்தன. நள்ளிரவில் நரியின் வீட்டுக் கதவு திறந்தது. போர்வையைப் போர்த்தியவாறு ஓர் உருவம் கிளம்பியது.

‘‘ஆமையாரே, நாம சரியான பாதையிலதான் போயிட்டிருக்கோம். இன்னிக்கு அவன் கையும் களவுமா சிக்கட்டும். துவைச்சு எடுத்துர்றேன்'' என்றபடி ஆமையைச் சுமந்துகொண்டு நரியைப் பின்தொடர்ந்தது சிறுத்தை.

‘‘ம்ஹூம்... அது கூடாது. சட்டப்படிதான் தண்டனை கொடுக்கணும்'' என்றது ஆமை.

‘‘ஒரு அடியாவது அடிச்சுட்டுதான் சிங்க ராஜாகிட்டே இழுத்துட்டுப்போவேன்'' என்றது சிறுத்தை.

‘‘அட... ஏன் இவ்வளவு கோபப்படுறே?'' எனக் கேட்டது ஆமை.

‘‘கோபப்படாம... நான் ஆசையா வாங்கிவெச்சிருந்த சென்ட் பாட்டிலைக் காணலையே'' என்றது சிறுத்தை.

‘‘அதான் பொங்குறியா? சரி சரி, பேசிக்கிட்டே நழுவவிட்டுடாதே, சீக்கிரம் போ'' என்றது ஆமை.

அடுத்த காட்டுக்குச் செல்லும் எல்லைக்குச் சென்ற நரி, அப்படியும் இப்படியுமாகப் பார்த்தது. பிறகு, ஒரு புதரில் மறைந்துகொண்டது. ஆமைக்கும் சிறுத்தைக்கும் குழப்பம். ‘நரி இங்கே எதற்கு வந்தது? என்ன செய்யப்போகிறது?' என்று யோசித்தன. 

அப்போது, பதுங்கிப் பதுங்கி வந்தது கரடி. சடாரென அதன் எதிரே சென்ற நரி, ‘‘என்ன கரடி அண்ணே, இந்த நேரத்துல பக்கத்துக் காட்டுக்கு எதுக்குப் போய்ட்டு வர்றீங்க?'' எனக் கேட்டது.

‘‘அதைப் பற்றி உனக்கு என்னடா? ஓங்கி அடிச்சா  செத்துப்போயிடுவே. ஓடிரு'' என்றது கரடி.

வில்லாதி வில்லன்!

‘‘நான் கண்டுபிடிச்சுட்டேன். நீதானே, நம்ம காட்டுப் பொருட்களைத் திருடி, அடுத்த காட்டில் விற்கிறே... இது தெரிஞ்சுடக் கூடாதுனு உன் தேன் ஜாடியையே காணலைனு வேற நாடகம் ஆடினே. ஆனா, அதை ஒரு மரத்துப் பொந்தில் பதுக்கிவெச்சு, நீ எடுத்துச் சாப்பிடுறதைப் பார்த்தேன். நீ அடுத்த காட்டுக்குள்ள போறதையும் பார்த்தேன். அதுதான், கையும்களவுமா பிடிச்ச பிறகு விஷயத்தை எல்லாருக்கும் சொல்லலாம்னு வந்தேன்'' என்றது நரி.

‘‘ஓ... கண்டுபிடிச்சுட்டியா? இன்னொரு விஷயமும் சொல்றேன். ஆமையைக் கண்டுபிடிக்க நியமிச்சதும், கூட்டத்தில் உனக்குப் பக்கத்தில் நின்னுட்டு இருந்த நான், உன் உடம்பில் இருந்து ஒரு முடியைப் பிடுங்கி, மான் வீட்டுல  போட்டேன். ஆனா, இதையெல்லாம் சொல்றதுக்கு நீ இங்கே இருந்து உயிரோட போக மாட்டே. என் வலிமை தெரியாம தனியா வந்து மாட்டிக்கிட்டே'' என்றவாறு கோபமாக முன்னேறியது கரடி.

‘‘நரி தனியா இல்லை தம்பி'' என்றபடி புதரில் இருந்து பாய்ந்தது சிறுத்தை.

அடுத்த நாள் காலை... ‘‘அடடா... இது பயங்கர ட்விஸ்ட்டா இருக்கே. இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்ச ஆமைக்குப் பாராட்டுகள்'' என்றது சிங்க ராஜா.

அங்கே, எல்லா விலங்குகளும் இருந்தன. கரடி, தலைகுனிந்து நின்றிருந்தது. ‘‘ராஜா, இந்தப் பாராட்டை நரிக்குச் சொல்லுங்க. நாம சிலரைப் பற்றி முன்கூட்டியே ஒரு தீர்மானத்துக்கு வந்துட்டு, அதைச் சுற்றியே போகிறோம். அது எவ்வளவு பெரிய தப்புனு நமக்கு உணர்த்தியதோடு, உண்மையான திருடனைக் கண்டுபிடிக்கவும் உதவி இருக்கும் நரிதான் இந்தப் பாராட்டுக்குத் தகுதியான ஆள்'' என்றது ஆமை.

அப்புறம் என்ன? விலங்குகளின் கரகோஷத்தில் காடே அதிர, புன்னகையோடு ஏற்றுக்கொண்டது நரி.

வில்லாதி வில்லன்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism