
திரவச் சொற்கள்
கிடா விருந்துக்கு அழைக்க
வீடு வந்திருந்த மாமன்
அதிசயமாகத் தெரிந்தார்
பழைய பகையை முன்னிறுத்தி
பேசாமல் ஆண்டுக்கணக்கில் ஊமையானவர்
`செல்லாண்டியம்மனுக்கு
ரொம்ப நாள் வேண்டுதல் மாப்ள’ என்றார்
சமாதான நிமித்தமாக
ஒரு சொம்பு தண்ணீரை
கடக்கெனக் குடித்தவர்
நரை மீசையைக் கீழ் வழித்தபடி
`சின்னக் கிடாக் குட்டிதான்
ஆறு கிலோ தேறும்
அளவான அழைப்புதான்’ என்றார்
சர்க்கரை குறைவாக டீ கேட்டுக் குடித்தார்
பிள்ளைகள் படிப்பை அக்கறையாக விசாரித்தார்
கிளம்புகையில்
`மொய் வாங்கல மாப்ள’
விளையாட்டாய்க் கண்ணடித்தவர்
அவசியம் குடும்பத்தோட வரணுமென்று கை கூப்பி
வாசலுக்குச் சென்று திரும்பியவர்
நா தழுதழுக்க விடைபெறும்போது
கை பற்றி நின்றவரின் காய்ந்த கண்கள்
உதிர்த்த நீர்த்துளிகள் அத்தனையும்
அவர் வேண்டுதலின் திரவச் சொற்கள்.
- மு.மகுடீசுவரன்
நசுங்கும் நினைவுகள்
தடுக்க முயன்றும்
முடியாது
ஏறி இறங்கிவிட்டது
வாகனத்தின் சக்கரம்
அந்த ஓணான் மீது.
அன்று அலுவலகத்தில்
கோப்புகளின்
பக்கங்களைப் புரட்டும்போதெல்லாம்
அதே ஓணான்
நசுங்கிக்கொண்டே இருக்கிறது.
- நாகராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சண்டை
அன்றொரு நாள் அவள்
ஜான்சி ராணியாக வாளேந்தினாள்
சென்ற முறை வீரபாண்டிய கட்டபொம்மன்
இன்றைய நாளில் வாஞ்சிநாதன்
ஒன்றை இன்னொன்று துரத்த
இரவெல்லாம்
சிறுமி அதிசியாவின் கனவில்
ஒன்றிணைகிறார்கள் அவளின் நாயகர்கள்
யாரோடோ சண்டையிடுகிறார்கள்
யாரென்பதை அறிவதற்குள்
விடிந்துவிடுகிற பகலில்
ஒரே ஓர் உருவம் மட்டும்
மங்கலாகத் தெரிகிறது
அது தன் அப்பா என்பதை அறிந்து
இன்னும் சற்றுநேரம்
தூங்கத் தொடங்குகிறாள்.
- க.அம்சப்ரியா
நட்சத்திர சரம் சுமப்பவள்
பள்ளி நுழைவாயில் முன்
மரமல்லி மர நிழலில்
கொண்டுபோன கொய்யாப் பழக் கூடையை
பக்கத்தில் இறக்கிவைத்து
நீள்செவ்வகச் சாக்கு ஒன்றை
எதிரில் விரித்துப்போட்டு
பிள்ளைகள் வாங்கும் விலையில்
கூறுகட்டிவைத்து
இடைவேளை மணியடிக்கக் காத்திருக்கும்
இடைப்பட்ட வேளையில்
நட்சத்திரங்களென உதிரும்
மரமல்லிப் பூக்களை ஊசி நூல் கொண்டு
கோக்கத் தொடங்கும் அவள்
வீடு திரும்புகிறாள் மாலையில்
காத்திருக்கும் பேத்திக்கென
விற்று முடிந்த வெற்றுக்கூடைக்குள்
நட்சத்திர சரமொன்றைச் சுமந்தபடி.
- பாப்பனப்பட்டு வ.முருகன்