Published:Updated:

ஆராதனாவும் அலங்கார விளக்கும்!

ஆராதனாவும் அலங்கார விளக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
ஆராதனாவும் அலங்கார விளக்கும்!

சிறுகதை: பட்டுக்கோட்டை பிரபாகர், ஓவியம்: ஷ்யாம்

ஆராதனாவும் அலங்கார விளக்கும்!

சிறுகதை: பட்டுக்கோட்டை பிரபாகர், ஓவியம்: ஷ்யாம்

Published:Updated:
ஆராதனாவும் அலங்கார விளக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
ஆராதனாவும் அலங்கார விளக்கும்!
ஆராதனாவும் அலங்கார விளக்கும்!

மொட்டை மாடியில் கண்களை மூடிப் பிராணாயாமம் செய்துகொண்டிருந்த தாத்தாவை, கதவு தாண்டி எட்டிப் பார்த்தாள் ஆராதனா. படிக்கட்டுகளுக்குக் கீழே நின்றபடி, ''போ! போய்ப் பேசுடி!'' என்றாள் அம்மா விந்தியா ரகசியக் குரலில். தாத்தா மூச்சுப் பயிற்சி செய்வதை அபிநயம் செய்து காட்டினாள் ஆராதனா.

குளிப்பதற்காக தோளில் துண்டுடன் நடந்த அப்பா கேசவன், இருவரையும் பார்த்து, ''என்னடி பண்றீங்க ரெண்டு பேரும்?'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆராதனாவும் அலங்கார விளக்கும்!

''உங்கப்பாகிட்ட பர்மிஷன் வாங்கச் சொன்னேன்...''

''அப்பா ஒப்புக்க மாட்டார் விந்தியா. அப்பறமா சொல்லிக்கலாம்.''

''வீட்டுல எனக்கென்ன மரியாதை இருக்குன்னு சொல்லிக் காட்டுவாருங்க!''

''சரி... வா, நானே சொல்றேன்.''

கண்ணைத் திறந்த விஸ்வநாதன் அவர்களைப் பார்த்து, ''என்ன?'' என்றார்.

''அப்பா, ஆராதனாவுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கோம் இல்லையா...''

''ஆமாம். அதுக்கென்ன?''

''ஜாதகப் பொருத்தம் பார்த்தோம். நாலு பேரை விசாரிச்சோம். இ மெயில்ல போட்டோஸ் எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கிட்டோம். நாம மாப்பிள்ளை வீட்டுக்குப் போய்ட்டு வந்தோம். அவங்க நம்ம வீட்டுக்கு வந்துட்டுப் போனாங்க. ரெண்டு பக்கமும் திருப்தியா இருக்கறதால லக்னப் பத்திரிகை எழுதிக்கிறதுக்கு வர்ற வெள்ளிக்கிழமை நல்ல நாள்னு முடிவு பண்ணி அடுத்த கட்டத்துக்குப் போய்ட்டோம். ஆனா...''

''ஆனா என்ன?''

''மாப்பிள்ளை போன் பண்ணாருப்பா. எல்லாருக்கும் முன்னாடி உங்க பொண்ணுகூட எதுவும் பேச முடியலை, நீங்க அனுமதிச்சா ரெண்டு பேரும் ஒரு காபி ஷாப்புல ஜஸ்ட் அரை மணி நேரம் சந்திச்சிப் பேசலாமான்னு கேட்டார்...''

முகம் மாறிய விஸ்வநாதன், ''என்ன இது புதுப் பழக்கம்? அன்னிக்குதான் குடும்பத்தோட வந்து எல்லாரும் பேசிட்டிருந்தாங்களே! இவன் என்ன தனியாப் பேசறது? இதெல்லாம் நம்ம குடும்பத்துல நடக்கறதில்லை. உன் பாட்டியும், நானும் கல்யாணத்தப்பதான் பாத்துக்கிட்டோம். ஏன்... உன் பொண்டாட்டியை பொண்ணு பாக்கப் போனப்போ இந்த மாதிரி தனியாப் பாத்துப் பேசணும்னு நீ கேட்டியா என்ன? எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்?''

கேசவன் பதிலுக்குத் தவித்து ஆராதனாவை பார்க்க, அவள் தொண்டையைச் சரிசெய்துகொண்டு தயங்கி, ''தாத்தா, உங்க காலமும், அப்பா காலமும் வேற! குடும்பப் பின்னணியை மட்டும் விசாரிச்சிட்டு முடிவு செஞ்சிங்க. இன்னிக்கு எங்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு. ஐடியாலஜிஸ் இருக்கு. லட்சியங்கள், கனவுகள் இருக்கு. அதெல்லாம் பொருத்தமா இருக்கான்னு ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிப் பார்த்தாத்தானே தெரியும்!'' என்றாள்.

''அரை மணி நேரம் பேசினா... அவனைப் பத்தி உனக்கும், உன்னைப் பத்தி அவனுக்கும் என்ன புரிஞ்சிடும்? உன்னை இம்ப்ரெஸ் பண்றதுக்காக அவனும், அவனை இம்ப்ரெஸ் பண்றதுக்காக நீயும் செயற்கையா பேசலாமில்லையா?''

''இல்ல தாத்தா! இயல்பா பேச முடியும். ஓரளவு புரிஞ்சிக்க முடியும்.''

ஆராதனாவை இமைக்காமல் பார்த்த விஸ்வநாதன் பெருமூச்சு விட்டபடி எழுந்து கொண்டு, ''நீங்க பேசித் தீர்மானிச்சிட்டு ஒரு மரியாதைக்கு எங்கிட்டச் சொல்றீங்க. நான் வேணாம்னு சொன்னா கேக்கவா போறீங்க? சரி... நடத்துங்க!'' என்று தனது துண்டை உதறித் தோளில் போட்டபடி நடந்தார்.

ஆராதனாவின் ஸ்கூட்டி சத்தம் கேட்டதுமே சென்று கதவைத் திறந்தாள் விந்தியா. கேசவன் லேப்டாப்பையும், விஸ்வநாதன் தொலைக்காட்சி யையும் அணைத்தார்கள். உள்ளே வந்து தாத்தா அருகில் அமர்ந்து கொண்டாள் ஆராதனா. தயங்கினாள். தன் விரல்களைப் பார்த்துக் கொண்டாள்.

''சொல்லும்மா. மனசு விட்டுப் பேசிட்டீங்களா? என்ன பேசினீங்க?''

''அவர் ஏற்கெனவே வந்து வெய்ட் பண்ணிட்டிருந்தார். ரெண்டு பேரும் ஹலோ சொல்லிக்கிட்டோம். ஹோட்டல்ல கார்னர் டேபிளுக்குப் போய் எதிர் எதிர்ல உக்காந்தோம். மெனு கார்ட் பாத்து லைட்டா ஆர்டர் செஞ்சோம். அப்பறம் ரெண்டு பேருக்குமே என்ன பேசறதுன்னு தெரியலை. ஒரு மாதிரி டென்ஷனா இருந்திச்சி எனக்கு. அவரே பேசட்டும்னு நான் அமைதியா இருந்தேன்...'' என்றாள் ஆராதனா.

...

''இந்த மாதிரி எவ்வளவு நேரம் அமைதியா இருக்கலாம் ஆராதனா?'' என்றான் விஷால்.

ஸ்கூட்டியின் சாவியை நோண்டியபடி ஆராதனா, ''நீங்கதானே தனியா சந்திச்சுப் பேசணும்னு சொன்னீங்க. அப்ப நீங்கதானே பேசணும்?'' என்றாள்.

கூலிங் கிளாசைக் கழற்றி சட்டைப் பையில் அதன் ஒரு காது வெளியில் தொங்கும்படி செருகிக் கொண்ட விஷால், ''இப்ப நான் பார்க்கறது அப்பா ஆரம்பிச்ச பிசினஸை! பல எலெக்ட்ரிகல் கம்பெனிகளுக்கு தேவையான உதிரி பாகங்களை சப்ளை பண்றோம். பேங்க் லோன் போட்டு மெஷின்ஸ் வாங்கி... பிராண்ட் நேம் போட்டு சொந்தமா தயாரிக்க பிளான்ஸ் இருக்கு. என்னோட கனவுகளுக்கு நீ சப்போர்ட்டா இருப்பியா ஆராதனா?''

''என்ன கேள்வி இது? நிச்சயமா!'' என்றாள் ஸ்வீட் சாப்பிட்டபடி.

''உனக்கு பிசினஸ்ல ஆர்வம் உண்டா?'' என்றான் கட்லெட் கடித்தபடி.

''ஷ்யூர். அதனாலதான் எம்.பி.ஏ. செஞ்சேன். நிறைய வேலை ஆஃபர்ஸ் வந்திச்சு. எனக்கு இஷ்டமில்லை. இப்ப ஆன் லைன்ல கிராஃபிக் டிஸைனிங் பண்றேன். இதை விரிவா, பெரிசா செய்யணும்னு எனக்கு ஆசை!''

''ஐ... ஸீ! என்னை மாதிரியே பிசினஸ்ல ஆர்வம் இருக்கிற ஒரு பொண்ணு எனக்கு மனைவியா வந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன். ஐ’ம் லக்கி. அப்புறம்... அம்மாவுக்கு ஆர்த்தரிட்டிஸ்! அப்பாவுக்கு ஷ§கர்! ரெண்டு பேருக்கும் கம்ப்ளீட் ரெஸ்ட் தேவைப்படுது! முந்தி மாதிரி அம்மாவால எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுப் பார்க்க முடியலை. ஆராதனா வந்ததும் அவ கைல பீரோ சாவியைக் கொடுத்துட்டு அக்கடான்னு உக்காந்துடுவேன்னு சொல்றாங்க...''

''பிசினஸ்ல எனக்கு சப்போர்ட்டா இருப்பியான்னு கேட்டீங்க. எந்த மாதிரி?''

''சப்போர்ட்னா மாரல் சப்போர்ட்! அடிக்கடி வெளியூர் போவேன். வீட்டுக்கு லேட்டா வரலாம். அதெல்லாம் புரிஞ்சிக்கணுமில்ல?''

''அப்ப நானும் உங்களோட நம்ம ஆபீஸுக்கு வர வேண்டியதில்லையா?''

''ஆசையா இருந்தா எப்பவாச்சும் வா! ரெகுலரா வரணும்னு இல்ல. ரெண்டு பேரும் ஆபீஸுக்கு வந்துட்டா அப்பா, அம்மா தனியா இருப்பாங்களே...''

''நான் இப்ப பண்ணிட்டிருக்கிற இந்த ஆன்லைன் பிசினஸ்?''

''இதுல என்ன வருமானம் கிடைக்குது உனக்கு?''

''இப்போதைக்கு மாசம் பத்தாயிரம் கிடைக்குது. ஆனா கான்சென்ட்ரேட் பண்ணா... ஏன் சிரிக்கிறீங்க?''

''என் பிசினஸ்ல இப்ப நான் மாசம் லட்ச ரூபா சம்பாதிக்கிறேன். அதை அஞ்சு லட்சம் ஆக்கத்தான் பிளான்ஸ்! நீ எதுக்கு சிரமப்படணும்? ஜாலியா, ஃப்ரியா இருக்கலாம் ஆராதனா. ஏதோ டைம் பாஸ்க்காகத்தானே இதை நீ செஞ்சிட்டிருந்தே! உன்னை ராணி மாதிரி வெச்சுக்குவேன், கவலைப்படாதே!''

''டைம் ஆச்சு. புறப்படலாமா?''

''இன்னும் என் பிஸினெஸ் பத்தி நிறைய பேச நினைச்சேன் ஆராதனா...''

''டைம் ஆச்சுங்க. வீட்ல எதிர்பார்ப்பாங்க...''

''ஓகே. அப்ப புறப்படலாம்! நைஸ் டாக்கிங் டு யூ!''

டிஷ்யூ காகிதம் எடுத்து உதட்டில் ஒற்றிக் கொண்டான் விஷால்.

ஆராதனா சொல்லி முடித்ததும் விந்தியா முகமெல்லாம் சிரிப்பாக பூரித்துப் போய் சொன்னாள், ''நீ அதிர்ஷ்டக்காரிடி! அன்பான மாமனார், மாமியார், சொந்த வீடு, கார், இப்பவே மாசம் லட்ச ரூபா சம்பாரிக்கிற புருஷன். அஞ்சு லட்சம் சம்பாரிக்கப் போறதாவா சொன்னார்? உன்னை தங்கத்துலயும், வைரத்துலயும் குளிப்பாட்டுவாருடி!''

தலை குனிந்திருந்த ஆராதனா நிமிர... அவள் கண்களில் கண்ணீர்த் துளிகள்!

''ஏய்! ஏண்டி அழறே? என்னாச்சுடி?''

''வேணாம்மா? எனக்கு இந்த இடம் வேணாம்மா! ப்ளீஸ்...'' என்ற அவளை அதிர்ச்சியுடன் பார்த்தாள் அம்மா.

''பைத்தியமாடி நீ? இதைவிட பிரமாதமான இடம் உனக்கு அமையுமா? படிச்ச பையன்! சின்னக் குடும்பம்! சொந்த பிசினஸ்! இன்னும் என்ன வேணும் உனக்கு?''

''எனக்குன்னு ஒரு சுயகௌரவம் இருக்கும்மா! ஒரு தன்மானம் இருக்கும்மா. சுயமான திறமை, சிந்தனை, கனவு இதெல்லாம் இருக்கும்மா! அதைப் பத்தி எல்லாம் அவரு கவலைப்படவே இல்லம்மா! தன்னோட பிசினஸ், தன்னோட லட்சியம்னு மட்டும் பேசறாரும்மா! என் பிசினஸ் இன்ட்ரஸ்ட் அவருக்கு கேலியா படுதும்மா. பத்தாயிரம் என் திறமையால சம்பாரிக்கிறது அவருக்கு இளக்காரமா படுதும்மா. அவர் செஞ்சா பிசினஸ்! நான் செஞ்சா அது டைம் பாஸா? அவரோட மெஷின்ல தேவைக்கு ஏத்த மாதிரி தயார் பண்ற ஒரு பொருளாதான்மா என்னைப் பார்க்கறார். அவர் வீட்டுக்கு நான் சப்போர்ட்டா இருக்கணும்.

அவருக்கு நான் சப்போர்ட்டா இருக்கணும்! எனக்குன்னு ஒரு அடையாளமும் இருக்கக் கூடாது! எல்லாத்தையும் துடைச்சுக் கழுவிட்டு ஒரு புது கம்ப்யூட்டர் மாதிரி அங்க போகணும். அவங்க இஷ்டத்துக்கு ப்ரோக்ராம் பண்ணிக்குவாங்க. அவருக்குத் தேவை ஒரு ஹோம் மேக்கர்! அதுக்கு நான் எம்.பி.ஏ. படிச்சிருக்கவே வேண்டியதில்லை. வீடு, கார், தங்கம், வைரம் இதுல இல்லம்மா சந்தோஷம்! நம்ம சுயத்தை இழக்காம வாழ்றதுலதான் இருக்கு!''

''என்னடி என்னென்னமோ பேசறே... படிச்ச திமிரா? அவனவன் பொண்டாட்டி வேலைக்குப் போய் சம்பாரிச்சிட்டு வரணும்னு எதிர்பார்க்கறப்ப உன்னை ராணி மாதிரி வெச்சுக்கிறேன்னு அவரு சொல்றாரு! கசக்குதா?''

''ஐயோ! அம்மா! உனக்கு எப்படிப் புரிய வைக்கிறதுன்னு எனக்குத் தெரியலை. ராணியா வாழ ஆசைப்படற ஏராளமான பொண்ணுங்க இருக்காங்க. அவங்க யாராச்சும் ராணியாகட்டும்! எனக்கு ராணியா வாழ ஆசை இல்லம்மா! போர்ல கலந்துக்கற சிப்பாய் வேலை போதும் எனக்கு!''

''அவர் பேசுனதுல என்ன தப்புன்றே?''

''எதுவுமே தப்பில்ல... தப்பான ஆள்கிட்ட பேசிட்டார்! அவரோட எதிர்பார்ப்புக்கு நான் பொருத்தம் இல்லம்மா! என்னை கொஞ்சமாச்சும் மதிக்க வேணாமா? நீ ஏதோ பண்றியே... அதைப் பத்தி டீட்டெய்லா சொல்லுன்னு ஆர்வம் காட்டியிருக்கலாம். 'என் ஆபீஸ்ல உனக்கு ஒரு ரூம் ஒதுக்கறேன். அங்க வந்து நீ விரும்புறதைச் செய்! உன் கிரியேட்டிவிட்டியும், படிப்பும் வேஸ்ட் ஆகக் கூடாது. நான் உனக்கு சப்போர்ட்டா இருக்கேன்; நீ எனக்கு சப்போர்ட்டா இரு. உன் பிசினஸ், என் பிசினஸ்னு பிரிச்சுப் பார்க்க வேண்டியதில்லை. இனிமே ரெண்டுமே நம்ம பிசினஸ்! வீட்லயும் பொறுப்பெடுத்துக்கோ, எல்லாத்துக்கும் பிளான் பண்ணி டைம் ஒதுக்கலாம்’ - இப்படி அவர் பேசியிருந்தா... என்னை... என் உணர்வுகளை மதிக்கிறதா அர்த்தம்! அப்படிப் பேசலையே... அவங்க வீட்டு ஹால்ல அலங்காரத்துக்கு வாங்கி மாட்ற சாண்டிலியரா நான்?''

கேசவன் கைகளைப் பிசைந்தான்.

''தப்பு! நீயும் ஆசைப்பட்டியேன்னு ரெண்டு பேரையும் சந்திச்சிப் பேச அனுமதிச்சது தப்பு! கல்யாணம் ஆனப்பறம் இதெல்லாம் அட்ஜஸ்ட் ஆயிருக்கும். இப்ப ரொம்ப ஆராய்ச்சி பண்றே. இதெல்லாம் வேணாம்னு அப்பா சொன்னதைக் கேட்டிருக்கணும். வெள்ளிக் கிழமை லக்னப் பத்திரிகை எழுதறதா முடிவு பண்ணியாச்சி. நெருங்குன சொந்தத்துக்கெல்லாம் சொல்லியாச்சி. இப்ப வந்து நீ கட்சி பேசிட்டிருக்கே. எல்லாம் சரியாயிடும். நீ எதையும் யோசிக்காம பேசாம இரு! எங்களுக்குத் தெரியாதது உனக்குத் தெரிஞ்சிடுச்சா?'' என்று அதட்டியவன், தன் அப்பாவிடம் திரும்பினான்.

''சொல்லுங்கப்பா, அவ பாட்டுக்கு என்னென்னவோ உளர்றா பாருங்க! சுயம்ங்கிறா! அடையாளம்ங்கிறா! ஏதாச்சும் அர்த்தத்தோட பேசறாளா பாருங்க! எடுத்துச் சொல்லுங்கப்பா...'' என்றான்.

அமைதியாக இருந்த விஸ்வநாதன், ''கேசவா, அந்தப் பையனோட அப்பாகிட்ட முதல்ல பேசிடறேன்...'' என்றவர் போனில் டயல் செய்து, ''வணக்கம் சார்! ஆராதனாவோட தாத்தா பேசறேன். நம்ம பேசிக்கிட்டபடி இந்தக் கல்யாணத்தை நிச்சயம் பண்றதில எங்களுக்கு இஷ்டமில்லை சார். இதைப் பத்தி ரொம்ப டீட்டெய்லா பேசவும் விரும்பலை. நீங்க வேற இடம் பார்த்துக்கங்க. நாங்களும் வேற இடம் பாத்துக்கறோம். வைக்கிறேன்!'' என்று வைத்தார்.

''என்ன மாமா இது? என்னாச்சு உங்களுக்கு? அவ ஏதோ புரியாத்தனமா பேசறான்னா நீங்களும்...'' பதறினாள் விந்தியா.

''இரும்மா! அவளா புரியாம பேசறா? நீங்க ரெண்டு பேரும்தான் புரியாமப் பேசறீங்க. அவ ரொம்பத் தெளிவா இருக்கா! நல்லவேளை... மனசுவிட்டுப் பேசிட்டு வரட்டும்னு நானும் அனுமதிச்சேன்... இல்லன்னா அவ வாழ்க்கையே நாசமாயிருக்கும். ஜாதகப் பொருத்தம் எல்லாம் அப்பறம்டா கேசவா! மனசு பொருந்தணும்! இங்க அது பொருந்தலையே. ரெண்டு பேருக்கும் வேற வேற எதிர்பார்ப்புகள் இருக்கு! அது இப்பவே தெரிஞ்சது நல்லதுதானே? எங்க காலத்துல இப்படி எதுவும் வாய்ப்பு இல்லை. அம்பது வருஷம் சேர்ந்து வாழ்ந்த தம்பதிங்க கோடிக் கணக்குல இருக்காங்க. அதுல எத்தனை பேர் நிஜமா சந்தோஷமா வாழ்ந்தாங்கன்னு யாருக்குடா தெரியும்?'' என்றவர் ஆராதனாவை அணைத்துக் கொண்டு ஆறுதலாக அவள் தலையைத் தடவி, ''இந்தியால இப்ப பசங்களைவிட பொண்ணுங்கதான் அதிகமா இருக்காங்க. எப்படியும் உன் மனசுக்குப் பிடிச்ச பையன் அமைவான்ம்மா. தைரியமா இரு. அடுத்த சம்பந்தம் பார்க்கிறப்ப ஒரு தடவை இல்ல... ரெண்டு தடவை வேணும்னாலும் பையனை தனியா சந்திச்சு மனசு விட்டுப் பேசிடு. தப்பே இல்லை!'' என்ற தாத்தாவை நம்பிக்கையுடனும், நன்றியுடனும் பார்த்தாள் ஆராதனா.

சிரிப்பு மன்றம்

நெல்லை கண்ணன்:

ஆராதனாவும் அலங்கார விளக்கும்!

ஒரு முறை விழுப்புரத்தில் வழக்காடு மன்றம் நடந்தது. அதில் வாதிட்ட ராமலிங்கம் 'அசோக வனத்தில் இருந்த மரங்களை எல்லாம் அனுமன் பிடுங்கி எறிந்தான்’னு ரொம்ப ஆவேசமாப் பேசிக்கிட்டு இருந்தார். உடனே நான் சொன்னேன்.... 'அவர் 'பக்த ராமதாஸ்’ இல்லையா.... மரங்களைப் பிடுங்கத்தானே செய்வார்!’னு. கூட்டத்துக்கு அரசியல் வாசத்தோடு சிரிப்பு....!

தொகுப்பு: த.கதிரவன்

ஆராதனாவும் அலங்கார விளக்கும்!

''டாக்டர், எனக்கு கல்யாணம் ஆனா குறட்டை பழக்கம் போய்விடும்னு எப்படி சொல்றிங்க???'',

''அப்புறம் எங்க நிம்மதியா தூங்கறது?''

- பகவான்ஜி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism