
குளிரூட்டப்பட்ட தொடர்வண்டி பெட்டியில்
குறுக்கும் நெடுக்குமாக அலையும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குழந்தையை துரத்திச் சென்று
பிடித்து வருகிறாள் குட்டிப் பெண்
எஜமானியின் விலையுயர்ந்த
திருத்தப்பட்ட பழைய உடைக்குள்
அவள் தன் சிறிய உருவத்தை
ஒட்டி வைத்துள்ளாள்
தூண்டிலில் சிக்கிய மீனென
அவளது விழிகள் துடித்துக்கொண்டிருந்தன
அந்நீண்ட பயணம் முழுவதும்
அவளுடலின் மறைவிடங்களில்
பதுங்கியிருக்கும் சூட்டுக் காயங்கள்
அடிபட்ட பாம்பென சுருண்டிருந்தன
காலந்தோறும் பின்தொடரும்
நல்லதங்காளின் கதையிலிருந்து
தாய் இவளைத் தப்ப விட்டிருக்கலாம்
குடித்து அழியும் தகப்பனால்
பொன் முட்டையிடும் வாத்தென
கடனுக்காக கழுத்தறுக்கப்பட்டிருக்கலாம்
மரச்சீனிக் கிழங்கு
வாசமடிக்கும் வீடுகளுக்குள்
நாள் குறிக்கப்படாத
மரண தண்டனைக் கைதியாய்
அடைபட்டுக்கிடக்கும்
சிறுமியின் உடல்கள்
சித்ரவதைகளுக்குப் பின்
சிலவேளை ரணகளமாய்
பிணவறையில் கண்டெடுக்கப்படலாம்
தமிழகத்து அடிமாடுகளுடன்
சற்று கூடுதல் விலைக்கு விற்கப்படும்
சிறுமிகளைக் குறித்து
தேசியவாதிகள் யாரும்
சாலை மறிக்க முன்வருவதில்லை