Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

படம்: ஆ.முத்துக்குமார்

சொல்வனம்

படம்: ஆ.முத்துக்குமார்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்
சொல்வனம்

இருந்தது அப்பா போல 

குளிருக்கு ஆடாமல்

இருந்த அப்பாவின்

பல்செட்டில்

கடைசிப் புன்னகை இருந்தது.

கொல்லையில்

அப்பா வளர்த்த முருங்கையில்

அவர்போல கம்பளிப்பூச்சி மீசை இருந்தது.

அப்பாவின் வயிறுபோல

அரை உழக்குச் சோற்றைக்

குறைத்துவடித்து

அம்மா கழுவிய சட்டி இருந்தது.

ஆடும் சாய்நாற்காலியில்

அமர்ந்து செய்தித்தாளைப்

புரட்டிய காற்றில்

அப்பாவின் மூச்சு இருந்தது.

பணம் எடுத்த

அப்பாவின் சட்டை

இருந்த ஆணியில்

அவரின் படம் இருந்தது.

 - பண்ணாரி சங்கர்

 ****

துணை

இறந்த தாத்தாவின் கைத்தடியை

துணைக்கு

திண்ணையின் மூலையில்

சாய்த்து வைத்துவிட்டு

உறங்க ஆரம்பிக்கிறாள்

பாட்டி.

 - பிரபு 

 ****

ராணிச் சிட்டு

கொல்லைப் புறத்தில்

பறவையொன்றைப் பிடித்தேன்.

அது சிறு கிரீடம்வைத்த ராணிச் சிட்டு.

`மனசு சரியில்லை

என்னோடிரு' என்றேன்.

`சரி' என்றது.

உள்ளங்கையில் உட்கார்ந்துகொண்டது

பேசப்பேச ராஜாசிட்டு பற்றியே பேசியது.

`தேடும்’ எனக் கவலைப்பட்டது

`நல்லா தேடட்டும்’ எனக் கோபப்பட்டது.

பாப்பாச் சிட்டை நேசிப்பதாகச் சொன்னது.

`அதற்கு பசிக்கும்’ என வருந்தியது.

தன்னை யாரும் மதிப்பதில்லை

என்று கவலைகொண்டது.

தனக்கும் மனசு சரியில்லை

என்று படுத்துக்கொண்டது.

எனக்கு உள்ளங்கை கனத்தது

மனசு வலித்தது.

அதை வருடிக்கொடுக்கிறேன்.

சிறிது நேரத்தில்

வாரிச்சுருட்டி எழுந்தது.

`அரண்மனையே ஸ்தம்பித்திருக்கும்’

எனப் பதறியது.

`உன் மனசுக்கு என்ன?' என

என் பக்கம் திரும்பியது.

`ஒன்றுமில்லை... நானும்

உன்னைப்போலத்தான்

உன் அரண்மனைக்கே போய்விடு' எனப் பிடி தளர்த்தினேன்.

விருட்டெனப் பறந்தது.

நானும் அம்மாவிடம்

சொல்லிக்கொண்டு

என் அரண்மனைக்கு

புறப்பட்டேன்.

- உமா செந்தில்