Published:Updated:

ஃபுளோராவின் காதல் - சிறுகதை

ஃபுளோராவின் காதல் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
ஃபுளோராவின் காதல் - சிறுகதை

சிறுகதை: எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

ஃபுளோராவின் காதல் - சிறுகதை

சிறுகதை: எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

Published:Updated:
ஃபுளோராவின் காதல் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
ஃபுளோராவின் காதல் - சிறுகதை
ஃபுளோராவின் காதல் - சிறுகதை

விஜயா, தனது கழுத்தைப் பிடித்து நெரித்து, குளத்தில் தள்ளி விடுவதாகக் கண்ட கனவில் இருந்து பயந்து எழுந்தான் சரவணன். அவனது உடம்பு வியர்த்திருந்தது. படுக்கையைவிட்டு எழுந்தவன், தனது கைலியை இறுக்கிக் கட்டிக்கொண்டான். யாரோ அறைக்குள் இருந்து தன்னைக் கவனிப்பதுபோல அவனுக்குத் தோன்றியது. யார் எனத் தெரியவில்லை. சுற்றிலும் பார்த்துக்கொண்டான். இருட்டான அறை. கதவைத் திறந்துவைத்தாலும் பூட்டினாலும் வந்துவிடும் வெள்ளை நிறப் பூனையைத் தவிர வேறு யாரும் இல்லை. இரவில் மட்டும் வரும் பூனை பகலில் எங்கு இருக்கிறது, எந்த வீட்டில் இருந்து வருகிறது என அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவில் பூனை அவன் முகத்தின் மேல் விழுந்து தாவி ஓடியிருக்கிறது. அதன் கூர்மையான கால் நகங்கள் அவனது கன்னத்தைக் கீறியிருக்கின்றன. பூனைக்குப் பயந்து போர்வையை தலை வரை போத்தித் தூங்கவேண்டியதாக இருக்கிறது என்பதை நினைக்கும்போது அவனுக்கு வெட்கமாக இருந்தது.

சரசு அக்கா பூனையைக் கண்டால் கையில் கிடைக்கிற கட்டையை எடுத்து விரட்டிவிடுவாள். அவளுக்கும் பூனைக்கும் ஆகாது. ஜென்மப் பகையாளிகளைப்போல பூனையை எந்த இடத்தில் பார்த்தாலும் விரட்டுவாள். தேவதாஸுக்கு பூனை பிடித்திருக்கிறது என்ற காரணத்தால்தான் அவளுக்குப் பூனையைப் பிடிக்கவில்லை என்பது ஆச்சர்யமான விஷயமாக இருந்தது சரவணனுக்கு.

இத்தனைக்கும் தேவதாஸும் அவளும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். தேவதாஸ் நியூ சினிமாவுக்கு எதிரே தள்ளுவண்டியில் வாழைப்பழம் வைத்து விற்றுக் கொண்டிருந்தான். சரசு, தினமும் அவனைக் கடந்து காய்கறி விற்பதற்கு எனக் கூடையைத் தூக்கிக்கொண்டு செல்லவேண்டும். முருகன் கோயில் ரோட்டில் இருக்கிற பிளாட் பாரத்தில் அவள் கடை வைத்திருந்தாள். ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் தேவதாஸ் அவளைப் பார்க்க வந்து நிற்பான். சரசு தேவதாஸைக் காதலித்த கதையை அவனிடம் சொல்லியிருக்கிறாள். கூடவே அவன் இறந்துபோனதையும் அழுதுகொண்டு சொல்வாள்.

சரவணன் எழுந்து கதவைத் தள்ளிவிட்டு வாசலில் வந்து எட்டிப்பார்த்தான். கீழே வெளிச்சமாக இருந்தது. இந்த நேரத்தில் சரசுவின் வீட்டில் எதற்காக விளக்கு போட்டிருக்கிறார்கள் என எட்டிப் பார்த்தான். மாடி அறையில் இருந்த பூனை ஒன்று கீழ் வீட்டில் வெளிச்சம் தெரிந்ததும் விருட்டெனப் பாய்ந்து ஓடியது. அதன் நிறத்தைப் பார்த்தான். கறுப்பு நிறம். இதுநாள் வரை கறுப்பு நிறப் பூனையை அவன் பார்த்தது இல்லை. இப்போதுதான் பார்க்கிறான். இந்த வீட்டில் இரண்டு பூனைகள் அலைகின்றன. அவை எப்போது சரசுவின் கையால் அடிபடப்போகின்றன எனத் தெரியவில்லை.

சரசு வீட்டு வாசல் கதவு திறக்கப்படும் சத்தம் பெரிதாகக் கேட்டது. அவள் தன் தலையைப் பிடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்தாள். அவளுக்குப் பின்பாக அவளது மகள் ஃபுளோரா வந்தாள். சரசுவுக்கு நேற்றில் இருந்து பல்வலி. அவளுக்குப் பல்வலி வந்தால், யாருடனும் பேச மாட்டாள். பல்வலி இல்லாத காலத்தில், சதா யாருடனாவது எதற்காகவாவது சண்டை போட்டபடியிருப்பாள். காய்கறி விற்கும்போதும், கூடையைத் தூக்கிக் கொண்டு வீடுகளுக்குப் போகும்போதும், யாருடனாவது வெட்டிப்பேச்சு பேசுவது, இல்லை என்றால் சண்டை போட்டுக் கொண்டு நடந்துசெல்வதை சரவணன் பல தடவை பார்த்திருக்கிறான். அவளது வெற்றிலைக் காவியேறிய பற்களும் சிவந்த நாக்கும் பூனையைவிட அவனைப் பயமுறுத்தியிருக்கின்றன.

சரசு வெற்றிலை போடாத நேரங்களில் மூக்குப்பொடியை கடைவாய்ப் பல்லில் அதக்கிவைத்து ருசிகண்டுவிட்டாள். அதன் போதையில் நடக்கிறாள்; அதன் போதையில் பேசுகிறாள்; அதன் போதையில்தான் தூங்குகிறாள். மூக்குப்பொடியை அவளுக்குப் பழக்கிக்கொடுத்தது யார் எனத் தெரியவில்லை. கீழ் வரிசைப் பற்களில் கடைசி இரண்டு பற்களையும் பிடுங்கியாயிற்று. மூக்குப்பொடி வைத்து அந்தப் பற்கள் இற்றுப்போய் பாதி அழுகிக் கரைந்துபோயிருந்தன. போனமுறை பல்வலி வந்தபோது இரண்டு பற்களைப் பிடுங்க வேண்டும் என வக்கீல் தெரு பல் டாக்டர் சொன்னார். பற்களைப் பிடுங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து தன் மகள் ஃபுளோராவிடம் காட்டினாள். துருப்பிடித்த சிறிய தகடுத்துண்டுகள்போல் இருந்தன.

ஃபுளோரா, “காந்தி மியூஸியத்திலே இருக்க வேண்டியது. பத்திரமா வையி” என்று அவளைக் கேலிசெய்தாள். அவளுக்கும் அம்மாவுக்கும் விடிந்ததில் இருந்து பொழுது அடைகிற வரை சண்டை ஓயாது. ஃபுளோராவுக்கும் சின்ன வாய். கீச்சுக்குரல். எவ்வளவு பேசினாலும் அவளது சத்தம் வீட்டை விட்டு வெளியே போகாது. சரசு பேச ஆரம்பித்ததும் வாசலுக்கு முன்பாக ஆட்கள் கூடிவிடுவார்கள். குழாய் கட்டி திருவிழாவுக்குப் பாட்டு பாடுவது மாதிரி இருக்கும் சத்தம் என அவளது தெருக்காரர்கள் அம்மா மகள் சண்டையைக் கேலி பேசுவார்கள்.

சரசுவிடம் மூக்குப்பொடி போடக் கூடாது என பலமுறை டாக்டர் சொல்லியிருக்கிறார். ``இன்னொரு தடவை பல்வலினு வந்தா, நான் வைத்தியம் பார்க்க மாட்டேன். மூக்குப்பொடி போடுறதை நிறுத்து’’ எனத் திட்டினார். சரசு அதற்குப் பயப்படவில்லை. பல்வலி நின்றதும் திரும்பவும் மூக்குப்பொடியை அதக்க ஆரம்பித்துவிடுவாள். அவளுக்கு மூக்குப்பொடியும் மார்டன் ரெஸ்டாரன்ட் காபியும் பாண்டி கோயில் விபூதியும் எப்போதும் கையில் இருக்க வேண்டும்.

“எந்த நேரத்திலே அந்தப் பயபுள்ளே எனக்கு காபியை வாங்கி வாயிலே ஊத்தப் பழக்கிவிட்டானோ... அன்னையில் இருந்து இன்னைக்கும் வரைக்கும் இந்தக் காபிப் பழக்கம் என்னையை விட மாட்டேங்குது. வாங்கிக் கொடுத்தவன் செத்துப்போயிட்டான். நான் இன்னமும் உயிரோடு இருக்கேன்” எனப் புலம்புவாள். அவள் புலம்ப ஆரம்பித்தால், தேவதாஸைப் பற்றி புகார் சொல்லப்போகிறாள் என அர்த்தம்.

“எங்க அப்பன் வாங்கிக்கொடுத்தான். சரி, உனக்கு எங்க போச்சு அறிவு. வாயை மூடிக்கிட்டு இருக்கவேண்டியதுதானே. முதலில் எங்க அப்பாவோட மூஞ்சியைப் பார்த்தே. அப்புறம் அவன் வாங்கிக்கொடுத்த காபியை வாங்கிக்குடிச்சே... வெட்கமால்லே?” என்று ஃபுளோரா அவளைத் திட்டுவாள்.

“சரிதான்டி. அப்பனை விட்டுக்கொடுக்காத புள்ளேதான் நீ. அவனை மாதிரிதானே நீயும். அவன் என்னையை மயக்குனான். உன்னையை எவன் மயக்கப்போறானோ?”

“சும்மா... மயக்குவான். மயக்குறதுக்கு ஒருத்தனும் இன்னும் பொறக்கலை தெரியுமா? என்னை மயக்கிறது அம்முட்டு லேசுப்பட்ட காரியம்னு நெனைப்பா உனக்கு?” என ஃபுளோரா கீச்சுக்குரலில் கத்துவாள்.

“வருவான் வருவான். இனிமேலா உனக்கு பொறந்து வரப்போறான். இந்த மதுரையிலேதான் பிறந்து எங்கேயாவது சுத்திட்டிருப்பான்” - சரசு அவள் வாயைக் கிளறுவாள். எப்படியாவது ஃபுளோரா மனதுக்குள் ஒளிந்திருப்பவனை அவளது வாயால் சொல்லவைத்துவிடவேண்டும் எனத் தவுதாயப்பட்டாள். அவளால் முடியவில்லை. ஃபுளோரா யாரைக் காதலிக்கிறாள் எனத் தெரிந்துெகாள்ள சரசு செய்த காரியங்கள் அவளுக்கு வெட்கமாக இருந்தபோதிலும் அவளும் தன்னைப்போல பெண்தானே! தானும் தேவதாஸை இழந்து கஷ்டப்படுவதைப்போல அவள் தனது காதலை வெளியே சொல்லாமல் ஏன் துயரப்படவேண்டும் என நினைத்தாள்.

“எங்க அப்பனை மாதிரி அம்சமான மூஞ்சி ஏதாவது இருந்தா சொல்லு. கட்டிக்கிட்டு வீட்டைவிட்டுப் போறேன். உன் சங்காத்தமே வேணாம்.”

“உங்க அப்பனுக்கு என்னாடி தங்கத்துக்கு. குடிக்கணும் இல்லை சீட்டாடணும். அதுவும் இல்லைன்னா லாட்டரிசீட்டை வாங்கணும். மனுஷனுக்கு எதுவும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை ஒருநாளைக்கு இயேசு கோயிலுக்குப் போய் கண்ணுலே தண்ணி வடிய ஜெபம் செய்றது மட்டும்தான் அதுக்குப் பிடிச்சது. இந்த மதுரை மந்தையிலே ஒரு வீட்டைக் கட்டிப்போடணும்னு மகராசனுக்கு அம்புட்டு ஆசை. நடக்காமப்போச்சு. அந்த லாரிக்காரன் வந்து எல்லா ஆசையிலும் மண்ணள்ளி போட்டுட்டான்” எனச் சொல்லி அழுவதை சரவணன் பார்த்திருக்கிறான்.

ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வோர் ஆசை இருக்கிறது. தேவதாஸுக்குச் சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பதுபோல, சரசுவுக்குத் தனது மகள் ஃபுளோராவைப் படிக்கவைத்து டீச்சர் வேலைக்கு அனுப்பவேண்டும் என்பதும், ஆசையில் இருந்து கனவாக மாறி கனவில் இருந்து லட்சியமாக வளர்ந்து, பின் அதுவே அவர்களது வாழ்க்கையாகவும் மாறிவிட்டது. புதூரில் இருக்கிற தேவதாஸின் அண்ணன் ஞானவேல்தாஸ், ஃபுளோராவை டீச்சர் வேலைக்குப் படிக்கவைக்கிறேன் எனச் சொல்லி, கடைசிவரை சரசை நம்பவைத்தான். தேவதாஸ் இறந்த பிறகு வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை வந்து சரசுவிடம் இருக்கும் பணத்தை எல்லாம் வாங்கிக்கொண்டு சென்றுவிடுவான்.

ஃபுளோரா பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் அம்மாவும் பிள்ளையும் புதூரில் இருக்கிற ஞானவேல்தாஸ் வீட்டுக்குச் சென்றனர். ஞானவேல்தாஸ் சரசுவிடம் வாங்கிய பணத்தை அதுக்குக் கொடுத்தேன், இதுக்குக் கொடுத்தேன் எனக் கணக்குக் காட்டினான். மேற்கொண்டு இரண்டு லட்ச ரூபாயாவது வேண்டும் என்று சட்டம் பேசினான். இரண்டு லட்ச ரூபாய்க்கு சரசு எங்கு போவாள்? அழுத கண்ணீரோடு அம்மாவும் பிள்ளையும் பஸ் ஏறி வந்துவிட்டர்கள்.

ஃபுளோரா சிம்மக்கல்லில் இறங்கி வீட்டுக்கு வரும்போது, புதிதாக மூங்கில் கூடையும் தலைக்கு வட்டு முடிக்க குத்தாலத்துண்டும் வாங்கி, தானும் கூடை தூக்கி காய்கறி விற்க வருவதாக அம்மாவிடம் சொன்னாள்.

“நான் உசிரோட இருக்கிறவரைக்கும் நீ எதுக்குடி கூடை தூக்கணும். நான் இருக்கேன்டி” என்ற சரசு, தன் மகளை வீட்டில் வைத்து அழகு பார்த்தாள். சரசுவுக்கு பல்வலி மட்டும் இல்லை என்றால் இந்த மதுரையை விலைக்கு வாங்கிவிடுவாள். அவளுக்கு அவ்வளவு கிராக்கிகள் இருந்தார்கள். செட்டியார் வீட்டுப் பெண்கள் வாழைக்காய் வேண்டும் என்றாலும், ஒரு இனுக்கு கொத்துமல்லி வேண்டும் என்றாலும், கூப்பிடு சரசுவை என் வாடிக்கை வைத்திருந்தனர். அவள் வெயிலிலும் காற்றிலும் மழையிலும் சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் இந்தப் பல்வலியும், பல் டாக்டரும்தான் பிடுங்கிக்கொள்கிறார்கள். இதுவரை வக்கீல் தெரு பல் டாக்டருக்குக் கொடுத்த காசு பணத்தை எல்லாம் சேர்த்துவைத்திருந்தால் அவளும் தன் மகளை டீச்சர் வேலைக்குப் படிக்கவைத்திருப்பாள். ஃபுளோரா டீச்சர் வேலைக்குப் போய்விட்டால் போதும். அழகர்மலைக்கு நடந்தே போய் ஆடி பெளர்ணமிக்குப் பால்குடம் தூக்கி, தேர் பிடிப்பதாக வேண்டியிருந்தாள். இன்றைய நாள் வரை அழகரும் கண் திறந்து பார்க்கவில்லை; கர்த்தரும் கண் திறந்து பார்க்கவில்லை. சரசு பல்லைப் பிடுங்கியது மட்டும்தான் மிச்சம்.

மாடியில் இருந்து கீழே இறங்கி வருகிற சரவணனைப் பார்த்து, “டேய் இவனே... டேய் சரவணா... வாடா பல்வலி உயிர் போவுது. வண்டி எடுத்துட்டு வக்கீலு தெருவுக்குப் போவோம்” - சரசுவின் ஈனக் குரலைக் கேட்க சரவணனுக்குப் பாவமாக இருந்தது. ஃபுளோராவை விட்டால் சரசுவுக்கு யாரும் இல்லை. இந்த நடுராத்திரியில் அவளைத் துணைக்கு அழைத்துக்கொண்டு சரசு வக்கீல் தெருவுக்குப் போக மாட்டாள். விடிவது வரை அவளால் பல்வலியைத் தாங்கிக்கொண்டிருக்க முடியாது. இதுபோல நடுராத்தியில் இரண்டு மூன்று தடவை பல்வலி வந்தபோது சரவணன் அவளை வக்கீல் தெரு டாக்டரிடம் அழைத்துச் சென்றிருக்கிறான்.

“கத்தாதே... அவன் இங்கேதான் நிக்கான். எதுக்கு இந்த நேரத்திலே இப்படிக் கத்துறே” என ஃபுளோரா அம்மாவைக் கீச்சுக்குரலில் திட்டினாள்.

“உனக்கு என்னாடி தெரியும் என்னோட பல்வலி. பல்வலியும் தலைவலியும் உனக்கு வரவே மாட்டேங்குது. என்னைக்காவது ஒருநாள் உனக்கு பல்வலி வருதா... இல்லை தலைவலி வருதா. நீ வாங்கிவந்த வரம் அப்படி. நான் வாங்கிவந்த வரம் இம்புட்டுத்தான்” என்று முனங்கிக்கொண்டு பேசியவள், “நீயாவது நல்லாயிரு” என்று முனங்கினாள்.

சரசுவின் முகம் வீங்கிப்போய் இருந்தது. சரசுவுக்குப் பல்வலி வந்தால் ஒரு வாரத்துக்கும் மேலாகக் கூடை தூக்கிக்கொண்டு வேலைக்குப் போக மாட்டாள். வலி குறைய மூன்று நாட்களாவது ஆகும். கூடவே காய்ச்சல் வந்துவிடும். அவளால் சாப்பிட முடியாது. தூக்கம் வராது. குளிரோடு காய்ச்சல் வந்து படுத்தப்படுக்கையாகக் கிடப்பாள். அந்த நாட்களில் ஃபுளோராதான் வீட்டு வாசலில் கூடையை வைத்து காய்கறி விற்க உட்காருவாள். `சரசுவின் மகள்' என ஃபுளோராவைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.

“கருப்பட்டி நிறத்தில இருக்கிறவளுக்கு பிள்ளையைப் பாரு... வெல்லக்கட்டி மாதிரி” என ஆச்சர்யப்படுவார்கள், காய்கறி வாங்க வருகிற செட்டியார் வீட்டுப்பெண்கள்.

ஃபுளோராவால் அவளது அம்மாவைப் போல வியாபாரம் செய்ய முடியாது. இரண்டு தெரு வீட்டுக்காரா்கள் காய்கறி வாங்காமலேயே கூடையில் காய்கறியை மிச்சம் வைத்திருப்பாள். சரசுவைப் போல பிளாட்பாரத்தில் உட்கார்ந்து கடை போட மாட்டாள். சரசு மிஞ்சிய காய்கறிகளைப் பார்த்ததும் கண்டுபிடித்து விடுவாள். எந்தத் தெருவுக்கு யார் வீட்டுக்குப் போகவில்லை எனக் கூடையைப் பார்த்ததும் சொல்வாள்.

“ஆமா இதெல்லாம் கரெக்ட்டா சொல்லு. யாரு... யாரு எவ்வளவு கடன் பாக்கி தரணும்கிறதை மட்டும் மண்டைக்குள்ளே வெச்சுக்காதே. ஒவ்வொருத்தரும் போன வாரம் பாக்கி தரணும். நேத்து பாக்கி தரணும்னு காசைத் தர்றாங்க” என அவளைத் திட்டினாள்.

“கடன் காசைக் கேட்காதடி. வந்தா வரட்டும். இல்லைனா மீனாட்சியம்மா உண்டியலுக்கு நேரா, அவங்க மூலமா போய்ச் சேரட்டும்னு விடுடி” எனச் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டாள். “உங்க அப்பன் வீட்டுக் காசா. எங்க அப்பன் வீட்டுக் காசு” எனக் கோபமாகத் திட்டுவாள். அவளுக்கு அப்பாவைப்போல அம்மாவைப்போல எந்த ஆசையும் இல்லை. ஆசை இல்லாத பெண். ஆனால், என்றாவது வீட்டில் மூலையில் அமர்ந்து தேவதாஸின் படத்தை வைத்து அவனைப்போல அழுத கண்களோடு சரசுவுக்குப் பல்வலி வராமல் இருந்தால் போதும் என மனதுக்குள்ளாக வேண்டிக் கொள்வாள். அவள் தேவதாஸின் படத்தைக் கையில் வைத்து அழுவதைப் பார்த்ததும் சரசுவுக்குக் கோபம் வரும்.

“அப்பனை மாதிரியே அழுதுட்டு சாமி கும்பிடுது. என்னாடி உங்க அப்பன்கிட்டே முறைவைச்சே?” என்று கேட்பாள். ஃபுளோரா ஒன்றும் பேச மாட்டாள். ஆனால் சரவணனிடம் ஒரு தடவை, “அம்மாவுக்குப் பல்வலி இல்லைன்னா, எனக்கு எந்தக் கவலையும் இல்லை” எனச் சொல்லிவிட்டு விசும்பியிருக்கிறாள். அம்மாவுடன் சதாபொழுதும் சண்டை போடுகிற  ஃபுளோராவிடமா இவ்வளவு பாசம் இருக்கிறது என சரவணனுக்கு ஆச்சர்யம்.

சரவணனின் டூவீலரில் ஏறி சரசு அமர்ந்ததும், இதற்காகத்தான் காத்திருந்ததுபோல, ஃபுளோரா வீட்டுக்கதவை அடைத்தாள். டூவீலர் தெரு முக்கைத் தாண்டி மெயின் ரோட்டுக்குச் சென்றது. சரசு தனது வீட்டைத் திரும்பிப் பார்த்தாள். வீடு பூட்டி  இருக்கிறதா, வாசல் விளக்கு எரிகிறதா எனப் பார்த்தவள், தெருவில் யாரேனும் இளந்தாரிகள் நின்றிருக்கிறார்களா எனச் சுற்றிப்பார்த்தாள்.

சரசுவின் உடம்பு நெருப்பாகக் கொதித்தது. சரவணனின் முதுகில் அவளது உடம்பு சூடு விழுந்து பொசுக்கியது. அவளது உடம்பு குளிரால் நடுங்குவதை அவன் உணர்ந்தான். டாக்டர் ஓர் ஊசியும் ஒருவேளை மருந்தும் கொடுத்தால் போதும், சரசுவுக்கு எல்லாம் சரியாகிவிடும். வக்கீல் தெரு டாக்டர் எழுதித் தருகிற மருந்துச் சீட்டுக்கு மாத்திரை தேடி எங்கும் அலையவேண்டியது இல்லை. ஊசி போட்டு அவரே மாத்திரையும் தந்துவிடுவார். அதற்காகத்தான் அவரைத் தேடி சரசு போகிறாள்.

“ஏன்டா இவ்வளவு மெதுவா பாடை கட்டி ஊர்வலம் போறது மாதிரி போறே. நெஞ்சை நிமித்தி வேகமா வண்டியை ஓட்டுறா...” என்று சரசு அவனைத் திட்டினாள். சரவணனுக்கு அதற்கு மேல் வண்டியை வேகமாக ஓட்ட முடியாது. ஹெட்வெளிச்சம் குறைவாக இருந்தது.

“ஃபுளோரா யாரையாவது லவ் செய்றாளா சரவணா?” என்று சரசு அவனிடம் கேட்டாள். சரசு சிறிது நாட்களுக்கு முன்னர் இந்தக் கேள்வியை வேறு மாதிரி அவனிடம் கேட்டிருந்தாள்.
“நீ ஃபுளோராவைக் காதலிக்கிறயாடா?” என்று தன்னிடம் கேட்டதும் அவன் தொடைகள் நடுங்க அப்படியே பேய் அறைந்தவன்போல ஆடிப்போய்விட்டான்.

“அய்யோ... நான் அப்படி எல்லாம் செய்றவன் இல்லைக்கா. வேணும்னா ஃபுளோராகிட்டயே கேளு. வேலை இல்லாம ஊரைவிட்டு ஓடிவந்தவனுக்கு காய்கறி மார்க்கெட்ல வேலையும் வாங்கிக்கொடுத்து, தங்குறதுக்கு இடமும் கொடுத்து மூணு வேளைக்குச் சோறு போடுற வீட்டுக்கு, கெடுதல் நினைப்பேனா?”

“காதலிக்கிறது தப்பு இல்லைடா. பொண்ணு கரெக்ட்டா ஒருத்தனை செலெக்ட் செய்யணும். ஆம்பளையும் கரெக்ட்டா ஒருத்தியை செலெக்ட் செய்யணும்”

“நீ எப்படி செலெக்ட் செஞ்ச தேவதாஸை?”

“நான் நல்லாத்தான் அவனைப் பார்த்தேன். அவனும் நல்லாத்தான் என்னையை வெச்சுக்கிட்டான். படுபாவி லாரிக்காரன் வந்து இடிச்சுப்போடுவான்னு யாருக்குத் தொியும். இல்லைன்னா என்னை யாரு பிடிக்க முடியும். இந்த மதுரையிலே நான்தான்டா ராணி. அதுவும் ஒருவழிக்கு நல்லதாத்தான் போச்சு. இல்லைன்னா ஃபுளோரா புள்ளே கைக்கு வந்திருக்குமா?” என்று வாயில் ஊறியிருந்த எச்சிலைத் துப்பியபடி பேசினாள்.

ஃபுளோராவின் காதல் - சிறுகதை

தேவதாஸ் - சரசு திருமணம் முடிந்து சில மாதங்களே முடிந்திருந்தன. சரசுவை அழைத்துக் கொண்டு வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை சாயங்கால வேளையில் வண்டியூர் தெப்பக்குளத்துக்குச் சென்று வருவான் தேவதாஸ். நியூ சினிமாவில் இருந்து சைக்கிள் பயணம். அப்படி ஒருவாரம் ஞாயிற்றுக்கிழமை போய்விட்டுத் திரும்பும் ராத்திரி வேளையில் வடநாட்டில் இருந்து வந்த லாரிக்காரன் தெப்பக்குளத்தைத் திருப்பிக்கொண்டு வளைந்து வரும்போது, வெளிச்சம் குறைவாக இருந்ததால் வழி தப்பி வண்டியைக் குளத்துக்குள் இறக்கிவிட்டான். படுபாவி அவனோடு வந்த அவனது மனைவியும் பால்குடி மறக்காத பெண்குழந்தையும் குளத்தில் உருண்டார்கள். லாரியின் முன் சக்கரம் மோதி அந்த இடத்திலேயே தேவதாஸ் சைக்கிளோடு நசுங்கி இறந்துபோனான். குளத்தில் தூக்கியெறியப்பட்ட சரசுவுக்கு கால், கை, முகம் என எல்லாம் இடமும் அடி. அதோடுதான் தன் அருகில் கிடந்த பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டாள். குழந்தையின் அருகிலே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த லாரிக்காரனின் மனைவி சரசுவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டபடி இறந்துபோனாள். பாைஷ தெரியாதவள் என்ன சொல்லவேண்டும் என நினைத்தாளோ. ஆனால், அவள் இன்னதுதான் சொல்லியிருக்க வேண்டும் என சரசு, அவளது குழந்தையை இந்த நாள் தனது குழந்தையாக வளர்த்துவந்தாள்.

“இந்த விஷயம் எல்லாம் எனக்குத் தெரியும்.”

“நீதான் எல்லாம் சொன்னது. நீயே சொல்லிட்டு உனக்கு எப்படித் தெரியும்னு கேட்டா. ஃபுளோராவுக்கும் தெரியுமா?”

“ஆத்தே, வாயைத் திறந்து சொன்னே... உன்னை உசுரோடு புதைச்சுப்புடுவேன். அவளுக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சு வெச்சுட்டேன்... என் கவலை என்னை விட்டது. இல்லைன்னா அந்த இந்திக்காரி கையெடுத்துக் கும்பிட்டதுக்கு அர்த்தம் இல்லாமேபோயிரும். நீ அவளைக் கட்டிக்கிறியாடா சரவணா? ஏன்டா பேசாமே இருக்கே. இந்திக்காரினா உனக்குப் பிடிக்காதா? அவளைப் பெத்தவதான்டா இந்திக்காரி. வளத்து ஆளாக்கினது நானாக்கும். தேவதாஸைத்தான் ஃபுளோரா அப்பானு நெனைச்சிட்டிருக்கா. பதில் சொல்றா. எம் பொண்ணைக் கல்யாணம் கட்டிக்கிட மாட்டியாடா சரவணா?”

சரவணன் அமைதியாக இருந்தான். அவனுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. சரசுவுக்கு எப்படியாவது ஃபுளோராவுக்குத் திருமணம் செய்துவைத்துவிடவேண்டும் என்ற எண்ணம். ஏத்தக் கோயிலுக்குப் போகிற வழியில் மலைப்பட்டியில் அவளது தம்பிக்காரன் ஒருவன் இருக்கிறான். இரண்டுதடவை ஆள் விட்டுப் பேசிப் பார்த்த பின்னர்தான் அவள் மனசுக்குத் திருப்தியாக இருந்தது.

ஃபுளோராவிடம் எதுவும் சொல்லவில்லை. அவளுக்குத் தெரிந்தால் தையத்தக்க எனக் குதித்து, இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்து, அவளும் அழுது தன்னையும் அழசெய்துவிடுவாள் என அமைதியாக இருந்தாள் சரசு.

“ஏன்டா, உனக்கு ஏதாச்சும் தெரியுமாடா? ஃபுளோராப்புள்ள யாரையாச்சும் காதலிக்குதாடா?” எனக் கேட்டாள்.

சரவணன் திரும்பிப் பார்க்காமல் தனக்கு எதுவும் தெரியாது எனச் சொல்லிவிட்டான். ஃபுளோராவுக்குத் திருமணத்தில் ஆசை எதுவும் இல்லை. அவள் வேளாங்கண்ணிக்குப் போய் தொண்டு ஊழியம் செய்ய விரும்பினாள். ஒரு தடவை சரவணிடம் அதைப் பற்றியும் சொல்லியும் இருக்கிறாள்.

வக்கீல் தெருவுக்குள் நுழைந்தபோது, “சரசக்கா நீ மூக்குப்பொடி போடுறதை நிறுத்து. அதுக்கு அப்புறம் பல்வலி எதுவும் வராது” என்று சரவணன் சொன்னான். ஆனால், சரசு அவனை `போடா இவனே...’ என்பதுபோல பார்த்துவிட்டு பேசாமல் இருந்தாள். டாக்டர் வீட்டின் முன்பாக இருபுறமும் கார்கள் நின்றிருந்தன. அவற்றின் மேல் ‘கவர்’ போட்டு மூடியிருந்தார்கள். வெளிவாசல் கம்பி கதவு பூட்டுப் போடாமல் திறந்து கிடந்தது. அவர்கள் இருவரும் இரும்புக் கதவைத் திறந்துகொண்டு வீட்டுக்குச் சென்றனர்.

“வண்டியை நல்லா பூட்டுபோடு. `காணமப்போச்சு'னு அப்புறம் அலையாதே” என்று சரசு அவனைப் பார்த்துச் சொன்னாள். சரவணன் ெஹட்லாக் போட்டு பூட்டிவிட்டு வீட்டுக்குள் முதலில் சென்றான். டாக்டர் ஊரில் இருந்தால் இரண்டு காா்களும் வீட்டுக்கு வெளியே நிற்கும். வெளியூருக்குச் சென்றிருந்தால் கார் வாசலில் நிற்காது. சரசுவுக்கு கார் நிற்பதைப் பார்த்ததும் பாதி குறைந்ததுபோல் இருந்தது.

சரவணன் வாசற்கதவை ஒட்டி நின்றுகொண்டான். மணியடித்துவிட்டுக் காத்திருந்தான். பல் டாக்டர் பத்மராஜன் கோபக்காரர். நடுராத்திரியில் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினால், அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. கோபத்துடன் வந்து கதவைத் திறப்பார். வேண்டும் என்றே உட்காரச்சொல்லித் தாமதமாக வருவார். சரசுவுக்கு மட்டும் அல்ல தன்னிடம் வைத்தியம் பார்க்க வருகிற பலரிடமும் தேவை இல்லாமல் ராத்திரி நேரத்தில் வரக் கூடாது எனப் பயமுறுத்திவைத்திருந்தார்.

சரவணனுக்கு பல் டாக்டரைப் பார்க்கும்போது விஜயாவின் ஞாபகம்தான் வரும். விஜயாவும் பல் டாக்டருக்குப் படிக்கவேண்டும் என பள்ளிக்கூடம் படிக்கும்போதில் இருந்து ஆசையாக இருந்தாள். தினமும் காலையிலும் மாலையிலும் பல் துலக்க வேண்டும் என தனது தோழிகளுக்கு அறிவுரை சொல்வாள். சரவணன் தினமும் இரண்டு தடவை பல் துலக்குகிறேன் என்று அவளிடம் பேசி அறிமுகமானான். இரண்டு தடவை பல் துலக்குவதற்காகவே அவனுடன் பேசினாள் விஜயா. “ஒரு நாளைக்கு இரண்டுதடவை பல் துலக்கணும். இல்லைன்னா கழுத்தை நெரிச்சுக் கொன்னுருவேன் ராஸ்கல்” என அவனைப் பயமுறுத்துவாள் விஜயா.

விஜயாவுக்கு அம்மா இல்லை. அவளது அம்மா இறந்துபோனாள். அவளது அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொண்டு ஒரு மாதம் இருந்துவிட்டு, வெளிநாட்டு வேலைக்குப் போய்விட்டார். `போய்விட்டார்' எனச் சொல்வதைவிட அவளது புது மனைவி அனுப்பிவைத்துவிட்டாள். அவளது வீட்டில் சித்திதான் எல்லாம். சித்தி செய்து தருகிற சாப்பாட்டைத்தான் அவள் பள்ளிக்குக் கொண்டுவருவாள். அந்தச் சாப்பாடு ஒருநாள் காரமாக இருக்கும். மற்றொரு நாள் புளிப்பாக இருக்கும். இன்னொரு நாள் உப்பாக இருக்கும். ஒருநாள் ஒருதடவைகூட விஜயா தனக்கு சாப்பாடு பிடிக்கவில்லை எனத் தூர வீசியது கிடையாது. பொறுமையாக மென்று தின்று முழுங்குவாள்.

“பல் எதுக்கு இருக்கு. நல்லா கடிச்சு மென்னு திங்கணும். எதுக்கு இப்படி லபக்கு லபக்குனு வாயிலே அள்ளிப் போட்டுக்கிட்டுப் போறீங்களோ?” என தன் தோழிகளிடம் குறைப்பட்டுக்கொள்வாள். சில மாணவிகள் விஜயாவைப் பார்த்ததும் தூரத்தொலைவுக்கு ஓடிப்போய்விடுவார்கள். பள்ளியில் `பல் டாக்டரம்மா... பல் டாக்டரம்மா’ என்று அவளைக் கேலிசெய்தவர்களும் உண்டு.

பள்ளி மாணவிகளும் ஆசிரியா்களும் `விஜயா, பல் டாக்டருக்குத்தான் படிக்கப்போகிறாள்' என நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில், அவளது சித்தி படிக்கக் கூடாது என அவளை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டாள். வெளிநாட்டில் கார் டிரைவர் வேலைக்குப் போயிருந்த அவளது அப்பா அனுப்பிவைத்த பணத்தை முழுவதும் சித்தி தனது பெயரில் வங்கியில் சேமித்துவைத்துக்கொண்டாள். தினமும் அவளை அடித்து இம்சித்தாள். கடைசி வரை விஜயா பல் டாக்டருக்குப் படிக்காமல் வீட்டுக்குள்ளேயே இருந்தாள்.

பத்மராஜன் டாக்டரும் நல்லவர்தான். சாயங்கால நேரத்தில் வந்தால் அவருக்குக் கோபம் வராது. சரசுவிடமும் சரவணனிடமும் சந்தோஷமாகப் பேசுவார். டாக்டருக்கு வாழைப்பூ வடை என்றால் உயிர். தினமும் வாழைப்பூ கொண்டுவந்து வீட்டில் தரும்படி சொல்வார். சரசுவும் `சரி' எனச் சொல்லி பல்வலி வராமல் இருக்க ஏதாவது யோசனை கேட்பாள். டாக்டருக்கு சிரிப்பை அடக்க முடியாது. வயிறு குலுங்கக் குலுங்கச் சிரித்துக்கொண்டு “பல்லுன்னா வலிக்கத்தான் செய்யும். வயிறுனு இருந்தா பசிக்கத்தான் செய்யும்” என்று அவர்களை அனுப்பிவைத்துவிடுவார்.

பத்மராஜன் டாக்டர் இன்னமும் வரவில்லை. போனமுறை இதேபோல நடுராத்திரியில் வந்த கதவைத் தட்டியபோது உடனே கதவைத் திறந்து எட்டிப்பார்த்தார். இன்று ஏன் இவ்வளவு லேட்டாகிறது என்று சரவணன் எட்டி எட்டிப் பார்த்தான். வீட்டுக்குள் விளக்கு எரியவில்லை. இன்னொரு முறை கதவைத் தட்டி காலிங்பெல்லை அழுத்தினான். அவனுக்கு எரிச்சலாக இருந்தது. தூக்கச்சடவில் கண்களை மூடிக்கொண்டான்.

சரசு பல்வலியால் முன்பைவிட இப்போது கூடுதலாக முனங்குவது அவனது காதுக்குக் கேட்டது. பத்மராஜன் டாக்டரின் ஆஸ்பத்திரி, வீட்டுக்குப் பின்னால்தான் இருக்கிறது. சாய்வு நாற்காலி போட்டு வாயில் பச்சை நிறத்திலான மாஸ்க்கைக் கட்டிக்கொண்டு அவர் பற்களுக்கு வைத்தியம் செய்கிற அழகு தனியாக இருக்கும். மாஸ்க்கைக் கட்டிக் கொண்டதும் அவரது முகமே மாறிவிடும்.

விஜயா தன்னை பல் டாக்டருக்குப் படிக்கவைக்கவில்லை என்றதும் பச்சை நிறக் கைக்குட்டையைத் தனது முகத்தில் கட்டிக்கொண்டு சித்திக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி பக்கத்துத் தெரு, அடுத்த தெரு என தெருத்தெருவாக அலைந்து வீடு வீடாகப் போய் அங்கு இருக்கிறவா்களிடம், `எல்லாரும் காலையிலும் சாயங்காலமும் பல் துலக்கிருங்க. அப்போதான் உடம்புக்கு நல்லது' எனச் சொல்லியிருக்கிறாள். குழந்தையின் வாயைத் திறந்து காட்டச் சொல்லி பற்களைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறாள்.

அவளது உறவினர்கள் இதைப் பற்றி சித்தியிடம் வந்து புகார் சொல்லிவிட்டுச் சென்ற பிறகு, சித்தி அறைக் கதவை பூட்டுப்போட்டுப் பூட்டிவைத்துவிட்டாா்கள். பூட்டிய அறையில் பத்து நாட்களுக்கும் ேமலாகத் தனியாகக் கிடந்தவள், சுவரிலும் தரையிலும் `காலையிலும் மாலையிலும் பல் துலக்கி சுத்தமாக இருக்க வேண்டும். இப்படிக்கு பல் டாக்டா விஜயா' என எழுதி எழுதிவைத்தாள். அதன் பிறகு யாருக்கும் தெரியாமல் தனது அம்மாவின் சேலையை எடுத்துத் தூக்குப் போட்டு இறந்துபோனாள். கதவை உடைத்துக்கொண்டு அறைக்குள் போய் விஜயாவைத் தூக்கும்போதுதான், சரவணனும் அவனது நண்பர்களும் அவள் எழுதி வைத்திருந்ததைப் பார்த்தார்கள்.

டாக்டர் பத்மராஜன் வீட்டுக் கதவைத் திறக்கிற சத்தமும் அதைத் தொடர்ந்து விளக்கின் வெளிச்சமும் தெரிந்தது. “என்னா சரசு வந்துட்டியா. நீதான் வந்திருப்பேன்னு நினைச்சேன். கரெக்ட்டா வந்துட்டே” என்று டாக்டர் சிரித்துக்கொண்டு நின்றார். சரவணனுக்கு நிம்மதியாக இருந்தது.

டாக்டர் இரண்டு ஊசி போட்டார். “முன்னாடி மட்டும்தான் நாலு பல்லு இருக்கு. இரண்டு நாளைக்கு முன்னாடி ஆஸ்பத்திரிக்கு உன் மகள் வந்து, பல்லு கட்டுறதுக்கு எவ்வளவு செலவாகும்னு கேட்டுட்டுப் போனா. எல்லா பல்லையும் எடுத்துட்டு புது பல்லைக் கட்டிவிடுறேன். பல்வலி வராது” என்று டாக்டர் மாத்திரை தந்தார். டாக்டர் சொன்னதைக் கேட்டதும் சரசுவுக்குக் கண்கள் கலங்கின.

“இனிமேற்பட்டு மூக்குப்பொடி போடுறதை நிறுத்து சரசு” என்று டாக்டர் சொன்னதும் அவள் சரி என்பதுபோல மெதுவாக, `ம்... ம்...’ என முனங்கினாள். இப்போது அவளது கண்கள் முழுவதுமாகக் கலங்கி கண்ணீர் கசியத் தொடங்கியிருந்தன.

சரவணனின் டூவீலரில் ஏறி உட்காா்ந்ததும் அவள் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள். “யாரு பெத்த பிள்ளையோ என் மேலே இம்புட்டு உசுரா இருக்கு. அதுக்கு ஒரு கல்யாணத்தைக் கட்டிவெச்சுட்டா... நிம்மதியா கண்ணை மூடுவேன் சரவணா” அவனிடம் சொன்னாள். சரவணன் அவளிடம், “அழாதே அழாதே” என்று சொல்லியபடி வண்டியை ஓட்டிச் சென்றான்.

சரசுவின் வீட்டுக்கு முன்பாக டூவீலரை நிறுத்தும்போது அவனிடம், “டேய் இவனே... உன்னைக் கையெடுத்துக் கும்புடுறேன். லாரிக்காரன் விஷயத்தை மட்டும் எம் புள்ளகிட்டே சொல்லிறாதாடா. உனக்கு புண்ணியமாப்போகும். நீ கல்யாணம்கூட செஞ்சுக்க வேணாம் சாமி” என்று அவனது கையைப் பிடித்துக்கொண்டு சொன்னாள்.

சரவணன் அவளது அழுத கண்களைப் பார்த்தான். அவளிடம் பொய் சொல்ல மனது இல்லாதவனாக “அக்கா, ஃபுளோராவுக்கு எல்லாம் தொியும். இன்னைக்கு வரைக்கும் உன்னையைத்தான் அம்மாவா, தேவதாஸைத்தான் அப்பனா நெனைச்சிட்டு இருக்கா. நீ வேணா வீட்டுக்குள்ளே போய்ப் பாரு. தேவதாஸ் படத்தை மடியிலே வெச்சுட்டு உனக்குப் பல்வலி நல்லாகிடணும்னு சாமி கும்பிட்டுக்கிட்டு இருப்பா” எனச் சொன்னான். அதைக் கேட்டதும் சரசு கதவை வேகமாகத் தட்டினாள்.

ஃபுளோரா கதவைத் திறந்ததும் “வர்றதுக்குள்ளேயும் உனக்கு என்ன கொல்லையா போகுது. ஏன் இப்படி டம் டம்னு கதவைத் தட்டுறே. மெதுவாத் தட்டுனா என்னா...” என்று கோபமாகத் திட்டினாள். சரசு எதுவும் தெரியாதவள்போல, “அவங்க அப்பனை மாதிரியே மூக்கு மேலே கோபம் வருது... அவன் புள்ளைக்கும்” என்று சொல்லி அவளது கையைப் பார்த்தாள். ஃபுளோரா கையில் தேவதாஸும் சரசுவும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது!