Published:Updated:

மொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா...! கதை சொல்லிகளின் கதை பாகம் 20

மொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா...! கதை சொல்லிகளின் கதை பாகம் 20
News
மொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா...! கதை சொல்லிகளின் கதை பாகம் 20

உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்

பாகம்-2- ஆ.மாதவய்யா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பாகம்-5- மௌனி

பாகம்-6 - கு.பா.ரா

                                                                                                       பாகம்-12- ந. சிதம்பர சுப்ரமணியன்

பாகம் - 13 - எஸ்.வி.வி

பாகம்- 15.1  கல்கி

பாகம்-15.2 கல்கி

பாகம்- 16- ராஜாஜி

பாகம்-17 -அநுத்தமா

``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” என்பது எழுத்தாளர் லா.ச.ராமாமிருதத்தின் புகழ்பெற்ற கூற்று. ஒரு பேச்சுக்காக இதை அவர் சொல்லவில்லை. உண்மையிலேயே அதற்கான அவருடைய தவத்தின், முயற்சியின் விளைவுதான் அவருடைய எழுத்துகள்.

இளவயதில் அவருடைய `அபிதா’ நாவலை முதன்முதலாக வாசித்து அப்படியே அவருடைய மொழியில் சொக்கிக் கிடந்த தலைமுறை எங்களுடையது.

``அவள் முன் செல்கிறாள். நான் பின் செல்கிறேன். அவள் நடையில் இடுப்பின் கடையலில் என் மனம் பறிபோகிறது. குடத்தின் நசுங்கலிலிருந்து ஜலம் மத்தாப்பூக் கொட்டிக்கொண்டே போகிறது. அவள் நடக்கையில் ஜலம் தெளித்த இடம் பூமிக்குக் குளிர்ச்சி. ஆனால், அவள் நடை என் நெஞ்சுக்குத் தீ ஜுவாலை காட்டும் உருக்கள். நானா... நீயா... நானா?”

அபிதாவின் பின்னால் அலைந்த அந்தக் கிழவரைப்போல நாங்களும் அவள் பின் அலைந்திருக்கிறோம். நெடுங்கதையான `அபிதா’வை வாசித்த பிறகுதான் அவருடைய சிறுகதைகளை வாசிக்க எனக்கு வாய்த்தது. அவருடைய கதைகளுக்குக் கதைச் சுருக்கம் சொல்வது அபத்தம். அவருடைய கதைகளை வேறு மொழிகளில் பெயர்ப்பது அசாத்தியம். ஏனெனில், மொழியும் உணர்வும்தான் அவருடைய எழுத்தின் உயிர்.

``கதை எழுதுவது பெரிய விஷயமல்ல. அந்த அழகிய சிற்பத்தை இழைத்து இழைத்து தட்டித் தட்டி கண் மூடாமல் நகாசு வேலை செய்து சிற்பத்தின் கண் திறந்து உக்ரஹத்தை வரவழைக்க வேண்டும்" என்று அவரே சொன்னதுபோல ஒவ்வொரு கதையையும் அவர் வடித்திருப்பார்.

அவருடைய மகன் சப்தரிஷி அவரைப் பற்றிக் கூறுவது இதை மேலும் உறுதிசெய்கிறது. ``அப்பாவைப் பொறுத்தவரையில் அவர் அயராத உழைப்பாளி. தான் தேடும் நயம் கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் எழுதியதையே பலமுறை எழுத, அவர் தயங்கியதே இல்லை; அலுத்துக்கொள்வதுமில்லை. லா.ச.ரா-வின் சிறுகதைகள் நினைவின் அடிவாரத்தில் வருடக்கணக்கில் ஊறிக்கிடப்பவை. எந்தச் சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த ஸ்ருதி கலையாமல் மீண்டும் தொட்டுக்கொள்ள தன் நினைவைப் பழக்கிக்கொண்டிருக்கிறார். இவர் கதை எழுத உட்காருவதில்லை. கதை இவர் மனதில் உட்கார ஆரம்பிக்கும்போது, இவரும் எழுத ஆரம்பிப்பார். கதை தன்னை நடத்திக்கொள்ளும்போது அதன் உருவத்தை எழுத்தாக்குகிறார்.

பெண் குழந்தை தானாக தன் பருவம் அடைந்து கன்னியாவதைப்போல அப்பாவின் கதை எவருடைய வற்புறுத்தலுமின்றி தன் பக்குவம் அடைந்து கன்னிமை அடைகிறது. இவரும் தன் கதையின் வேளைக்கு, தருணத்துக்குக் காத்திருந்தார். வற்புறுத்தப்படாத செழுமையில் இவர் கதைகள் இருப்பதால்தான் அது சிரஞ்சீவத்துவம் பெற்று விளங்குகிறது.

எழுத்தில் தான் பேசுவதாக அப்பா நினைத்ததே இல்லை. தன் மூலமாக, தன் எழுத்தின் மூலமாக தன் மூதாதையர்கள் பேசுவதாகவே நம்பினார். இவருடைய எழுத்துக்கு கேமரா கண்கள் உண்டு. அதிஅற்புதமான கவிதைகளை உருவாக்கக்கூடிய திறன் பெற்றவை அவரது எழுத்துகள். காட்சித்தன்மையுடன்கூடிய அவரது விவரிப்புமொழி, வாசகனின் மனத்திரையில் சித்திரங்களை உருவாக்கிவிடக்கூடிய ஆற்றல் பெற்றது.

கவிதையும் உரைநடையும் அவரது கைவண்ணத்தில் கதைக் கவிதையாக, கவிதைக் கதையாக மாறிவிடுவது லா.ச.ரா எனும் மந்திரவாதியின் உச்சபட்ச வித்தை. அப்பாவின் உரைநடை, உயிர் நடை. அப்பாவின் எழுத்துகள் பற்றி அவர் பாஷையிலேயே கூற வேண்டுமானால், `மனதில் தோன்றியவற்றைத் தோன்றியபடி தோன்றிய கதியிலேயே' நமக்கு மாற்றிவிடும் சக்தி படைத்தவர்.”

தமிழ்ச் சிறுகதையின் எல்லைகளை விரித்துச் சென்ற மனவெளிப் பயணி லா.ச.ரா. புதுமைப்பித்தனைப்போல சமூக யதார்த்தங்களைத் தன் படைப்புகளில் அடித்து விளாசியவரல்ல லா.ச.ரா. ``புதுமைப்பித்தனுடைய சிறுகதைகளை  முதன்முதலாகப் படித்தபோது அவரது எள்ளல், பாத்திரங்கள், களம் இவற்றிலெல்லாம் பிறந்த மண்ணின் நினைவுகள் இருந்தன. இதனால் மிக எளிதாக புதுமைப்பித்தன், மனதில் இடம்பெற்றார். ஆனால், லா.ச.ரா-வின் உலகம் வேறுவிதமானது. லா.ச.ரா-விடம் புதுமைப்பித்தனின் குத்தல், கேலி மிகக் குறைவு. புதுமைப்பித்தனின்  கதைகளில் இடம்பெறும் சோகம் விமர்சனத்துடன்கூடிய துயரம். லா.ச.ரா-வின் சோகம் தீவிரமானது. பார்வை அகவுலகம் சார்ந்தது. பெரும்பாலும் குடும்பம்தான் அவரது கதைகளின் களன். புறக்கடை, கோயில், கடைத்தெரு எல்லாம் பிற யதார்த்தவாதிகளைப்போல் அவரது படைப்புகளில் இடம்பெறுகின்றன. ஆனால், அவை ஒருவிதமான சோக முலாம் பூசி நிற்கின்றன” என்று வண்ணநிலவன் லா.ச.ரா-வின் எழுத்து பற்றிக் குறிப்பிடுவார்.

`அபூர்வ ராகம்' என்னும் அவருடைய கதை இப்படித் தொடங்குகிறது.

``வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வரஜதிகள் புதுவிதமாய்க் கூடி ஓர் அபூர்வ ராகம் ஜனிப்பதுபோல் அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாது முளைத்தாள்.

இல்லாத சூரத்தனமெல்லாம் பண்ணி கோட்டையைப் பிடித்து ராஜகுமாரியை பரிசிலாய் மணந்த ராஜகுமாரனைப்போல் நான் அவளை அடைந்துவிடவில்லை. நாங்கள் சர்வசாதாரணமாய் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அவர்கள் மூன்று நாள் முன்னதாகவே வந்து நடத்திவைத்த முகூர்த்தத்தில் மணந்துகொண்டவர்கள்தாம். ஆகையால், இறுதி செய்யாத செயலையோ, நம்பாத விஷயங்களையோ தேடி அலையவேண்டாம். 

நான் - முதலில் என்னைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன்.

வாழ்க்கையில் என் லட்சியம் என்னவென்றால், ஒன்றும் செய்யாமல் இருப்பதுதான்.

எனக்கு கால்நடையாய் ஊர்களைச் சுற்றவேண்டுமென்று ஆசை. மூட்டை இல்லாமல் முடிச்சு இல்லாமல் கண்ட இடத்தில் அகப்பட்டதைத் தின்று கையலம்பிவிட்டு வாசல் திண்ணையிலோ மரத்தடியிலோ படுத்துறங்கிவிட்டு... மேகங்களைக் குன்றுகள் தடுத்து குடம் குடமாய் மழை கொட்டும் மலைநாட்டின் கமுகுச் சோலைகளையும் மாடுகளைப்போல் மந்தை மந்தையாய் யானைகள் மேய்வதையும் பார்க்க வேண்டும். அசைவற்ற மனதில் அமைதி நிறைந்ததாய் பார்த்தவர்கள் சொல்லிக்கொள்ளும் கன்னியாகுமரியின் கடற்கரையில் ஓங்கி நிற்கும் மணற்குன்றுகளில் ஒன்றின்மேல் உட்கார்ந்துகொண்டு சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க வேண்டும் என்று ஓர் ஆசை.

நான் மொத்தத்தில் வேண்டுவது `ஒன்றும் வேண்டாம்' என்பதே. இதனால் எனக்கு உலகத்தில் எனக்கு வெறுப்பு அல்லது ஞானப்பைத்தியம் பிடித்துவிட்டது என்று இல்லை. எனக்கு வாழ்க்கையில்தான் பற்று. அதைவிட்டால் வேறு நம்பிக்கையில்லை. கண் கண்டதில் நம்பிக்கையில்லை.  அதைத் தள்ளிவிட்டு காணாததைத் தேடி எப்படிப் போவேன்? ஆனால், என் இஷ்டப்படி இந்த உலகத்தை அனுபவிப்பதில்தான் எனக்கு ஆசை. இந்த மிருகத்தனம் என்னுடைனே பிறந்துவிட்டதென்று நினைக்கிறேன்.

அம்மாவுக்கு எவ்வளவு மறு உலகத்தில் நம்பிக்கையோ அத்தனைக்கு அத்தனை என் மனம் இங்குதான் ஊன்றி நின்றது. எதற்கு சொல்லவந்தேன் என்றால், எப்படியோ அம்மா இருக்கும் வரை அவளுக்கு அடங்கி சமர்த்துப் பிள்ளையாய் இருந்துவிட்டு, அவள் கடன் கழிந்ததும் உதறித் தோளில் போட்டுக்கொண்டு ஊரைவிட்டுக் கிளம்பிவிடக் காத்திருந்தேன்.

ஆயினும் அம்மா என்னை சும்மாவிடும் வழியாயில்லை. ஜாதகங்களைப் போட்டுப் புரட்டிக்கொண்டிருந்தாள். ஆகையால், பெண் பார்க்கப் போனோம்.

நீலம் உடுத்தி, இரை தின்ற பாம்புபோல் கனத்துப் பின்னல் முழங்காலுக்கும் கீழ் தொங்க, நிமிர்ந்த தலை குனியாது சமைலறையினின்று வெளிப்பட்டு வந்து நமஸ்கரித்து மையிட்ட கண்களை ஒருமுறை மலர விழித்து புன்னகைப் புரிந்து நின்றாள். அவ்வளவுதான்.

அவள்தான் நான் கண்ட அபூர்வ ராகம்.

சில விஷயங்கள் நடந்துவிடுகின்றன. கால காரணங்களற்று. அவை நேர்ந்ததற்கு நேர்ந்ததுதான் சாட்சி. அந்த மாதிரி முன்னும்பின்னுமற்றது எங்கள் சந்திப்பும் வாழ்வும். நாங்கள் இன்னமாதிரி இருந்தோம் என்று சித்திரிக்க மேற்கொண்ட முயற்சி, கேவலம் ஒரு புருஷன்-பெண்ஜாதியின் அந்தரங்க வாழ்க்கையை அம்பலமாக்கும் விரஸமாய் முடியுமா அல்லது எங்கள் இளமையின் புதுமையில் வாழ்க்கையையே ஒரு மஹா சங்கீதமாயும் அதில் அவளை ஓர் அபூர்வ ராகமாயும் பாவித்து அதன் சஞ்சாரத்தை உருவாக்கும் வசனக் கவிதையாக அமையுமா அறியேன்.

வாஸ்தவத்தில் இந்த வரலாற்றில் என் பாத்திரம் எவ்வளவு முக்கியமானது என்று எனக்கு இன்னமும் நிச்சயமாகவில்லை. நான் இப்போது இருக்கிற மாதிரி அப்போது இல்லை. முன்னைவிட எனக்கு இப்போது `நாகரிகம்' முற்றிவிட்டது. என் உடலில் ஓடிய என் அப்பனின் மிருகரத்தம் சுண்டிவிட்டது. நானும் என் தாயின் இஷ்டப்படி எல்லோரும்போல ஆகிவிட்டேன். பாழடைந்த கோயில் மூலவர் மேல் எலியும் பெருச்சாளியும் ஓடுவதுபோல் என் மேல் பேரன் பேத்திமார் ஏறி விழுந்து விளையாடுகின்றனர். கடன், வியாதி, கவலை, குடும்பம், எல்லாம் பெருத்துவிட்டன. இத்தனைக்கும் இடையில் நான் அவளைப் பற்றி நினைப்பதுமில்லை.

`அபூர்வ ராகம்’ எனக் கதைசொல்லி வர்ணிக்கும் அவருடைய மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, அவளுக்கு சரியானால் திருப்பதியில் அவளுக்கு மொட்டைபோடுவதாக அம்மா வேண்டிக்கொள்கிறாள் - அபூர்வ ராகத்துக்குத் தெரியாமலே. அவள் உடம்பு சரியானதும் அம்மா சொல்கிறாள், ``நாளை காலை மொட்டையடிக்கப் போக வேண்டும்.'' அந்த இரவில், கணவன்-மனைவிக்கிடையிலான உரையாடல்:

``இயல்பு என்று சொல்வதன் அர்த்தம் என்ன? பட்சிகளுக்குப் பறப்பதுதான் இயல்பு. றெக்கையை ஒடித்துவிட்டு இயல்பு மாறாதவை பட்சிச் பட்சிதான் என்றால் என்ன சரி? ராகத்துக்கும் பட்சிக்கும் என்ன வித்தியாசம்? இரண்டுக்கும் மேல் சஞ்சாரம்தானே!''

``இப்போ என்னவென்கிறாய்?''

``ஒன்றுமில்லை, ராகத்தின் முடிவும் எடுப்பாய்த்தானிருத்தல் வேண்டும்'' கொண்டையைப் போட்டுக்கொண்டு எழுந்தாள்.

``எங்கே?''

``கீழே போகணும். இதோ வருகிறேன்.''

ஆனால், அவள் திரும்ப வரவே இல்லை. தன் ஆளுமையின் பாகமாய் இருந்த கூந்தலை மாமியாரின் வேண்டுதல் காரணமாக இழக்காமல் வாழ்வை முடித்துக்கொண்டதாக நாம் யூகிக்கலாம்.

இப்படிச் சுருக்கமாக அந்தக் கதையைச் சொன்னதே தப்புத்தான். முழுமையாக வாசிக்க வேண்டும். அந்த வாசிப்பின் தருணத்தில்தான் லா.ச.ரா பிடிபடுவார். எடுத்துச் சொல்லும்போது அல்ல.

1989-ம் ஆண்டு தனது `சிந்தா நதி' கட்டுரைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார் லா.ச.ரா. தனது 92-வது வயதில், தனது பிறந்த நாளான 30.10.2007 அன்று காலமானார்.

அவருடைய எழுத்துகள் புரியாதவை என்கிற விமர்சனம் பற்றிக் கூறும்போது...

``நான் ஜனரஞ்சகமான எழுத்தாளன் அல்ல. புரியாத எழுத்தாளர் என்ற பெயரை சம்பாதித்துக்கொண்டு அப்படியே அதனாலேயே பிரபலமாகிவிட்டவன். ஏதாவது புரியும்படி எழுதினால், எனக்கு இப்போது ஆபத்துதான். தரம் குறைந்துவிட்டது என்று, என்னை வேறு ஒரு பிரிவில் சேர்த்துவிடுவார்கள். இரண்டு, மூன்று பேர் சொல்லிவிட்டார்கள். எனக்கு மாற்றே கிடையாதாம். முன்னாடியும் கிடையாதாம்; பின்னாடியும் கிடையாதாம். என்னோடு நான் முடிந்தது. இப்படி இருப்பதில் எனக்கு ஒன்றும் அவ்வளவாக உடன்பாடு இல்லை. ஆனால், நான் என்ன செய்ய முடியும்? ராமாமிருதம், ராமாமிருதமாகத்தான் இருக்க முடியும்.

`நான் எப்போதுமே எனக்காகத்தான் எழுதுகிறேன்' என்று சொல்லி வந்திருக்கிறேன். இதுதான் நிஜமும்கூட. `எனக்காகத்தான் எழுதுகிறேன் என்றால், ஏன் பத்திரிகையில் பிரசுரிப்பானேன். நீயே வைத்துக்கொள்ளவேண்டியதுதானே' என்று ஒரு கட்சி பேசினால், அதை ஒரு கட்சியாகவே நான் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

என்னுடைய எழுத்தில் சங்கீதத்தின் ஈடுபாடு இருக்கிறது. சங்கீதம், ஓவியம், எழுத்து போன்ற எல்லா கலைகளும் எதை நோக்கி நகர்கின்றன? மௌனத்தை நோக்கித்தான். மௌனம்தான் எனக்கு எப்போதுமே முக்கியமானதாக இருந்திருக்கிறது. பேசிக்கொண்டே இருக்கும்போது இடையில் திடிரென பேச்சு நின்றுவிடும். அற்புதமான கணங்கள் அவை. மனது நிறைந்துபோவதுபோல் இருக்கும். அதே சமயம், என்ன நேரப்போகிறதோ என்ற பயமும் இருக்கும். ஆனால், அநேக நேரங்களில், மௌனத்தை நோக்கிப் போகிறேன் எனச் சொல்லிவிட்டு, எழுத்தாளன் நிறைய பேசுகிறான். நான் நிறைய பேசுகிறேன்.

``உங்கள் எழுத்து புரியவில்லையே” என்று என்னிடமே வந்து சொல்கிறார்கள். புரியவேண்டும் என்பது அவசியமா என்ன? இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்குப் புரிந்துவிட்டுப்போகிறது. எழுத்தாளனுக்கே அவன் எழுதுபவை எல்லாம் புரிகிறது என்று நீங்கள் கண்டீர்களா? புரியாமல்தான் இருந்துவிட்டுப்போகட்டுமே. அதனால் இப்போது என்ன கெட்டுப்போய்விட்டது?” என்று கவலைப்படாமல் பேசுகிறார். (பிரபல இதழுக்காக எடுத்த நேர்காணலில்...)

சமூகப் பிரச்னைகளை அவருடைய கதைகளில் அவர் அதிகம் பேசியதில்லை. ஆனால், சமகாலத்தை அறியாதவர் அல்லர் அவர். விருதுகள் பற்றிய ஒரு கேள்விக்கு அவர் சொன்ன பதில் அதற்குச் சான்று.

``விருதுகள் என்று கணக்கிட்டால் பத்து, பன்னிரண்டு வாங்கியிருக்கிறேன். சாகித்ய அகாதமி, கலைமாமணி… இப்படியே போய்கொண்டே இருக்கும். சங்கராச்சாரியார், பெரியவர் ஒரு விருது கொடுத்திருக்கிறார். நான் கொஞ்சம் அதை பெரியதாகத்தான் நினைக்கிறேன். அவருக்கும் இலக்கியத்துக்கும் எவ்வளவு சம்பந்தம் என எனக்குத் தெரியாது. ஆனால், என்னுடைய எழுத்தில் ஆன்மிகத்தின் சாயல் இருப்பதால், அவர் கொடுத்திருக்கிறார். அப்பறம் ஞானபீட விருதுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறேன். நான் பிராமணன், அந்தத் தொந்தரவு வேறு இருக்கிறது. எனவே இங்கே தி.மு.க ஆட்சியில், எனக்கு எந்த விருதும் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஜெயலலிதா இருந்ததால் கலைமாமணி கிடைத்தது. அது கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன? நான் அதையெல்லாம் போட்டுக்கொள்வதே கிடையாது. டாக்டர் பட்டம் வேறு, யாரோ ஒருவர் கொடுத்திருக்கிறார். இதற்கும்மேல் மற்றவர்களால் எனக்கு என்னதான் தந்துவிட முடியும்?”

எல்லோரையும் பற்றிக் கருத்துச் சொல்லும் பெரியவர் க.நா.சு., லா.ச.ரா பற்றிக் கூறியுள்ளது: ``அவருடைய வாழ்க்கைத் தத்துவம் அவருக்கே சிறப்பாக உரியதாகும். வாழ்க்கைத் தத்துவம் என்று சொல்கிறபோது ஏதோ பெரிய துறவு மனப்பான்மை குடும்பச் சூழ்நிலையைவிட்டு ஓடிவிடுவது என்றெல்லாம் அர்த்தமில்லை. லா.ச.ரா., கவிதை நிரம்பிய கண்ணோட்டத்துடன் சாதாரணமான குடும்பச் சூழ்நிலைகளைக் கணிக்கிறார். ஓரளவுக்கு கோணல் பார்வையும் பார்க்கிறார் என்று சொல்லலாம். இந்தக் கோணலில்தான் அவரது தனித்துவம் அடங்கியிருக்கிறது. லா.ச.ரா-வின் சிறுகதைகள் எல்லாமே சாவைப் பற்றியவைதான் என்று சொல்வது மிகையாகாது. சாவின் நிழலிலேதான் எந்த மனிதனுடைய வாழ்வும், காதலும், ஊடலும், கோபதாபங்களும், நடைமுறைக் காரியங்களும் நிகழ்கின்றன.”

அது உண்மைதான். பெரும்பலான கதைகளில் சாவு பின்னின்று நகர்கிறது; நகர்த்துகிறதுதான். என்ன கோணல் பார்வை பார்த்தாலும் லா.ச.ரா உள்ளடக்கத்தில் ஒரு பழைமைவாதிதான். சொல்வதில் ஒரு பாய்ச்சலான புதுமையைக்கொண்டிருக்கிறார். இளம் எழுத்தாளர்களுக்கு அவருடைய எழுத்து பிரமிப்பூட்டும் பாடம்தான். வாசகனுக்கு அவர் எப்படிச் சொல்கிறார் என்பதைவிட, என்ன சொல்கிறார் என்பதும் முக்கியம் அல்லவா?

`ஜனனி' போன்ற அவருடைய பல கதைகளைப் பகுத்தறிவைக் கழற்றி வைத்துவிட்டுத்தான் வாசித்து அனுபவிக்க முடியும். அறிவியல் பார்வையை அவரிடம் தேட முடியாது. இல்லாமல் காஞ்சிப்பெரியவர் `சுதாரஸ சதுரஹ விருதை' அவருக்கு அளித்திருப்பாரா? சொந்த வாழ்க்கையிலேயே அமானுஷ்யமான, அறிவுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் நடந்திருப்பதாக நம்புகிறவர் அவர் என்பது அவரது நேர்காணலில் வெளிப்படுவதைப் பார்க்கிறோம். அவருடைய நோக்கம் சமூகத்துக்கு எதையும் சொல்வது அல்ல. நான் ஒரு சௌந்தர்ய உபாசகன் என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டவர். எனக்காகத்தான் நான் எழுதுகிறேன் என்றும் சொன்னவர். ``பொம்மனாட்டிகள் ஈரப் புடவையைக் கட்டிக்கொண்டு படியில் ஏறிக்கொண்டிருக்கும் காட்சி, அப்படியே என் மனதில் இருக்கிறது. என்னுடைய கதைகளிலும் இந்தக் காட்சி அடிக்கடி வரும். தி.ஜ.ர., `ஏண்டா, இது அடிக்கடி வருகிறதே' என்பார். அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. சில காட்சிகள் அப்படி நம் மனதில் பதிந்துவிடுகின்றன. நான் கெட்டுப்போகவில்லையே தவிர, கெட்ட எண்ணங்கள் எனக்கு இல்லாமல் இல்லை. `செக்ஸ்’ இல்லாமல் எதுதான் உண்டு? பெரிய பக்தியின் மூர்க்கமே செக்ஸ்தான். காமத்தால் உடலில் ஏற்படும் அவஸ்தைகள் எல்லாவற்றையும் நான் எழுத்தில் வடித்திருக்கிறேன். ஆனால், சமுதாயத்துக்கு விரோதமாக நான் என்றும் எழுதியது கிடையாது. சந்தோஷமாக, ஒற்றுமையாக இருப்பது பற்றிதான் நான் எழுதுகிறேன். அதுதான் எனக்கு தோன்றவும் செய்கிறது.”

மேற்படி வாசகங்களுக்காக அவரைக் கடுமையாக விமர்சித்தவர்கள் உண்டு. அந்த விமர்சனங்களின் கோபத்தைக் கழித்துவிட்டுப் பார்த்தால் அதில் நியாயம் இருந்ததாகவே கருதுகிறேன்.

அவர் எழுதிய சிறுகதைகளில் அளவில் சிறிய கதை (4 பக்கம்) என `கறைபட்ட இலை' கதையைச் சொல்லலாம். வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் கணவனுக்காக கஞ்சி கொண்டுபோகும் பறைக்குலப் பெண் ஒருத்தி வழியில் வாய்க்காலில் குளுகுளுவென ஓடும் தண்ணீரைக் கண்டதும் சோற்று மூட்டையைக் கரையில் இறக்கி வைத்துவிட்டு ஆடை களைந்து தண்ணீரில் இறங்குகிறாள்.

``அவள் மயிர் அவிழ்ந்து, தோகை விரிந்து, பிறகு கனத்து அமிழ்ந்தது. கைகளை விரித்து, கால்களைச் சேர்த்து, சிலுவைபோல மிதந்தாள். வெயிலின் வெப்பம் கண்கள் கூசி இமைக்கத் தவித்தன. வாய் சிரித்தது. உடல் கரும் பளிங்கென ஒளி வீசிற்று.”

அப்போது எதிர்பாராமல் எதிர்க்கரைக்கு வரும் ஓர் இளம் கவிஞன் இந்தக் காட்சியைப் பார்க்கிறான். அவன் அவளிடம் லயித்தான். இடையில் செருகிய எழுத்தாணி அவனேயறியாது அவன் கையில் ஏறியது. ஓலை? இல்லை. ஆனால் அதோ முள்களிடையில் ஓர் ஆலிலை… சட்டென அதையெடுத்து அங்கேயே மண்டியிட்டுத் தொடை மீது வைத்து எழுத ஆரம்பித்தான்.

அவரவர் லயிப்பில் அவரவர். அவனுக்கு அவன் எழுத்தில்... அவளுக்கு அவள் குளிப்பில். அவள் அவனைப் பார்க்கவில்லை. ஆனால், பசியோடு காத்திருந்த புருஷன் வந்து இருவரையும் பார்க்கிறான். தேவடியாத்தனம் நடப்பதாகக் கற்பித்து, முதலில் கவிஞனைக் குத்திக் கொலை செய்கிறான்.

ஆலிலை, கவியின் கரத்தினின்றும் நழுவியது. அது ஜலத்தில் விழும்  முன்னர், அவனது ரத்தத்தில் ஒரு துளியைத் தாங்கிக்கொண்டது. வாய்க்காலில் குளித்துக்கொண்டிருக்கும் ஸ்திரி தன்னை நோக்கி மிதந்து வந்த அந்த இலையைக் கையிலடுத்துப் பார்த்தாள். அவளுக்கு வியப்பாயிருந்தது. ஏதோ நாலு கிறுக்கு. அது நடுவே ஒரு துளிச்சிவப்பு. அடுத்து அந்த எழுத்தாணி அவள் மார்பிலே அழுந்துகிறது. அவளுக்கு வீறிட நேரமில்லை. ஆணியின் வேகம் அவ்வேகம். அது சென்ற பாதையும் அவ்வளவு சொகுசு-காலன் அவளைத் தழுவலில் அவ்வளவு ஆசை.

இரண்டு கொலைகள் நடந்துவிட்டன. ஆனால் லா.ச.ரா கதையை இப்படி முடிக்கிறார்.

``அப்புறம் என்னென்னவோ நடந்தது-வாய்க்காலில் குளியாடும் சவத்தைப் பற்றியும், கரையில் கிடந்த சவத்தைப் பற்றியும் சோற்று மூட்டையின் மேல் விழுந்திருந்த எழுத்தாணியைப் பற்றியும் -

அதெல்லாம் பற்றி நமக்கென்ன?

இது இலையின் கதை.

அதுவும் இனி கொஞ்சம்தான்.

வெயிலில் காய்ந்து, காற்றில் அலைந்து, எங்கெங்கோ சென்று அது கடைசியில் அடுப்புக்குச் செத்தை பெருக்கும் ஒருத்தியின் துடைப்பத்தில் சிக்குண்டது.

``எந்தக் கட்டையிலே போவானோ புகையிலை மென்னு துப்பிட்டிருக்கா நில்லாட்டி, இலை தைக்கலாம். இருந்தாலும் பரவாயில்லை. பெரிய இலை. காஞ்ச இலை. நல்லா எரியும்.”

அவள் நினைத்ததும் சரிதான்.

நன்றாகத்தான் எரிந்தது - என்று அந்தக் கதை முடியும்.

லா.ச.ரா-வின் அடையாளமான ஒரு கதை இது என்பேன். அதெல்லாம் பற்றி நமக்கென்ன? இது இலையின் கதை என சமூக வாழ்க்கையை எளிதாகக் கடந்து போக முடிகிற அவருடைய மனநிலையைக் காட்டும் கதை.

``என் எண்ணங்களை நானே நூற்று, என் மேல் பின்னிக்கொண்டு, அவை இன்னதென்றுகூடப் புரியாது, அவற்றில் சிக்குண்டு, தவித்து இரையாகிக்கொண்டிருக்கிறேன்” என்று தன் எழுத்தைப் பற்றி அவரே பிரகடனம் செய்கிறார்.

ஆனாலும் அவர் பிறவிக் கலைஞன் என்று சொல்லுமளவுக்கு மொழியை தன் மனம் நினைத்தபடியெல்லாம் வார்க்கும் வல்லமை பெற்ற ஒரு மகா கலைஞர் என்பதால், அவரையும் மீறி சமூகப் பிரச்னைகளை அவர் கதைகள் தொட்டுப் பேசியதும் உண்டு.

அப்படி, அவருடைய கதைகளில் மிக முக்கியமான கதை என `தரிசனம்' கதையைச் சொல்லலாம்.

`எனக்கு வயது பன்னிரண்டிலேயே கன்னியாகுமரி மேல் காணாமலே காதல் கொண்டுவிட்டேன். நான் குமரன். அவள் குமரி. முதன்முதலில் காதல் வரும் வயதில் வரும்போதே மரங்களைச் சாய்க்கும் புயல் போன்ற காதல்' என்று கதை தொடங்குகிறது.

சூர்ய உதயம், அஸ்தமனம் இரண்டுமே குமரியில் காணலாமாமே! அவள் மூக்குத்தியே மணிக்கூண்டாமே!

கன்னியாகுமரி. பேரிலேயே, பேருக்குள்ளேயே ஏதேதோ நீரோட்டங்கள் விளையாடுகின்றன. நெஞ்சை மீட்டுகின்றன.

அவள் குமரி... நான் குமரன்!

இப்படியே கன்னியாகுமரிக் கடற்கரையில் நிற்கும் குமரி அம்மன் மீது இவர் கொள்ளும் காதலைப் பற்றி கதை பேசிக்கொண்டே போகிறது. கதை சொல்பவர் இப்போது இருப்பது சென்னையில்.

எதிர்வீட்டிலிருந்து வீணையில் மோகனம் கிளம்பி நெஞ்சில் கொக்கி மாட்டியிருக்கிறது.

எதிர்வீட்டில் ஒரு பெண். வயது 32. இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம். இங்கு நாங்கள் குடி வந்ததிலிருந்து நான் இன்னும் அவளை முகம் பார்த்ததில்லை. ஜன்னல் பக்கம் நிழல், மாடியில் துணி உலர்த்தவோ, கூந்தலை ஆற்றவோ, மாலை வேளையில் காற்று வாங்கவோ – ஊஹூம்.

அவளை அவள் பயிலும் வீணையின் இசையாய்த்தான் அறிவேன். தன் ஆவியின் கொந்தளிப்பை வீணையில் ஆஹூருதியாய்ச் சொரிகிறாள். அவள் தாபத்தின் தகிப்புக்கு வீணை வெறும் வடிகாலாய் இல்லை. இன்று இவள் வாசிப்பைக் கேட்கையில் வீணை இவள் தலை விதி. ``என் வேளை வரும்போது என் சிதையில் என் வீணையை என் தலைவிதியை என்னோடு எரித்துவிடுங்கள். என் வேளையே! எப்போது வருவாய்?” என்கிற மாதிரி.

தன் கை பிடிக்க உகந்த புருஷனுக்குக் காத்திருந்து காத்திருந்து அவன் வராமல் கடைசியில் கல்யாணம் என்று ஆனால் போதும் என்கிற நிலைமைக்கு வந்தாகிவிட்டது கன்யா -

- இனி குமரி இல்லை...

நாட்டில் பெண்களுக்குக் குறைவில்லை. பிள்ளைகளுக்கும் குறைவில்லை. ஆனால், தாலிமுடி ஏன் விழுவதில்லை?

கடைசியில் கன்னியாகுமரிக்குப் போக வாய்க்கிறது. அவள் முன் நின்று வியக்கிறார்.

சிற்பியின் செதுக்கல் முடிந்து முழுமை கண்டதும் அவனையே காலால் உதைத்துத் தள்ளிக் கொக்கரிக்கும் சௌந்தர்யம். கிணறு வெட்ட பூதம் கல்லைச் செதுக்கி கன்னியாகுமரி. கல்மேல் உளி பிடித்து கையை நடத்தியவளே நீதானோ? சகிக்க முடியாத சௌந்தர்யம் என்றால் அது இதுதான்.

…..

உமையைப் பிரிந்த சிவம் அங்கு இமயமலைச் சிகரத்தில் தவமிருக்கிறான். இங்கு தென்கோடியில் அவனை அடைய இவள் தவம் கிடக்கிறாள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். யார் முன்னால் தணிவது என்று இருவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

காத்திருப்பது என்றல் என்ன?

கப்பல்களைக் கவிழ்த்த கதைகளைத் தன்னுள் அடக்கிய அந்த மூக்குத்தி உண்மையில் கல்யாணமாகாமல் காத்திருக்கும் கன்னிகளின் ஏக்கம் ஒன்றுதிரண்ட கண்ணீர்ச்சொட்டு.

இந்தக் கடைசி வரியில் கதை சமூகத்தளத்துக்குள் பாய்கிறது. சக்திமிக்க பாய்ச்சல். வாசக மனதில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் பாய்ச்சல். இப்படிப் பாய்ச்சல்களை நிகழ்த்த வேண்டும் என அவர் நினைத்துச் செய்யவில்லை. அவருக்கு அது நோக்கமே அல்ல.

கருத்து முதல்வாதிகளான, லா.ச.ரா போன்ற கலைஞர்களிடமிருந்தும்கூட, அவர்கள் அசலான கலைஞர்களாக இருக்கும்பட்சத்தில், சமூக வாழ்வின் வெக்கையும் தவிப்பும் தகிப்பும் அவர்களின் படைப்பில் அவர்களை அறியாமலே வந்து விழும் என்பதன் சாட்சியமாக இந்தக் கதை விளங்குகிறது.