Published:Updated:

கதைகளின் கதை - புகையிலை விடு தூது - சு.வெங்கடேசன்

கதைகளின் கதை - புகையிலை விடு தூது - சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
கதைகளின் கதை - புகையிலை விடு தூது - சு.வெங்கடேசன்

ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

கதைகளின் கதை - புகையிலை விடு தூது - சு.வெங்கடேசன்

ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

Published:Updated:
கதைகளின் கதை - புகையிலை விடு தூது - சு.வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
கதைகளின் கதை - புகையிலை விடு தூது - சு.வெங்கடேசன்
கதைகளின் கதை - புகையிலை விடு தூது - சு.வெங்கடேசன்

னந்த விகடனில் இயக்குநர் வெற்றிமாறன் எழுதிய `மைல்ஸ் டு கோ’ தொடரில் புகைபிடிப்பதைக் கைவிட்ட அனுபவத்தைப் பற்றியதொரு கட்டுரை இடம்பெற்றிருந்தது. அந்தத் தொடரில் அது வித்தியாசமான,  முக்கியமானதொரு கட்டுரையும்கூட. ஒரு நாளைக்கு 170 சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த ஒருவர், அதனை விட்டொழிக்க எடுத்த முயற்சிகள் பற்றியதொரு ஒப்புதல் வாக்குமூலம், கருகும் உண்மைகளால் எழுதப்பட்டுள்ளது.

புகையிலைப் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று தொடர்ந்து பலரும் பேசியும் எழுதியும் வருவதைப் பார்க்கிறோம். ஆனால், இந்த விழிப்புஉணர்வு உருவாகாத காலத்தில், புகையிலையைப் பற்றி ஓர் இலக்கியம் தமிழில் படைக்கப்பட்டுள்ளது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பாக இராமநாதபுரம் சமஸ்தான வித்வானாகிய சர்க்கரைப் புலவரின் மகன் சீனிச்சர்க்கரைப் புலவர் `புகையிலை விடு தூது’ என்று ஒரு தூது இலக்கியத்தை எழுதியுள்ளார்.

மிகவும் சுவாரஸ்யமான தூது இது. தலைவியைப் பிரிந்து வாடும் தலைவன், அவளுக்கு அனுப்பும் தூதினையும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி அவனுக்கு அனுப்பும் தூதினையும்தான் அதுநாள் வரை தூது இலக்கியமாகப் புலவர்கள் பாடினர். ஆனால், முதன்முறையாக மிகவும் மாறுபட்டதொரு தூது இலக்கியம் தமிழில் படைக்கப்பட்டது. பழநி மலையில் குடிகொண்டுள்ள சுப்பிரமணியக் கடவுளின் மீது, ஒரு தலைவி புகையிலையைத் தூது அனுப்புவதாக இவ்விலக்கியம் படைக்கப்பட்டுள்ளது.

59 கண்ணிகளைக் கொண்ட இந்தத் தூது இலக்கியத்தில் 53 கண்ணிகள் புகையிலையைச் சிறப்பிக்கவே எழுதப்பட்டுள்ளன. சுப்பிரமணியன் மீதான காதலைவிட, புகையிலையின் மீதான காதலே உச்சத்தில் நிற்கிறது. இதுவும் ஒருவகையில் சீனிச்சர்க்கரைப் புலவரின் ஒப்புதல் வாக்குமூலம் என்றே கருதவேண்டியி ருக்கிறது. புகையிலை மீது கொண்ட காதலால் உருகும் உண்மைகளைக் கொண்டு எழுதிய கவிதைகள்.

இதில் முக்கியமானது புகையிலையின் வரலாற்றுக் கதை. சீனிச்சர்க்கரைப் புலவர் சொல்லும் புகையிலையின் கதையை அறிந்துகொள்ளும் முன்னர், புகையிலை கண்டறியப்பட்டு இந்தியாவுக்கு வந்த கதையைக் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்வோம்.

1492-ம் ஆண்டு புகையிலை கண்டுபிடிக்கப் பட்டது. அதே ஆண்டுதான் அமெரிக்காவும் கண்டுபிடிக்கப்பட்டது. மனிதகுலத்தை அடிமைப் படுத்தத் துடிக்கும் இரு பெரும் சக்திகளின் கண்டுபிடிப்பில் இருக்கும் தற்செயல், நம்மை வியப்பில் ஆழ்த்தும். அதுமட்டுமல்ல, இரண்டின் மீதான போதையும் இன்னும் விட்டபாடு இல்லை.

கியூபா எனும் தீவைப் பரிசோதித்துவர அனுப்பப்பட்ட கொலம்பஸ் `வாசனையுள்ள தழைகளைத் தங்கள் மேல் அணிந்து, தீப்பற்றியெரியும் கொள்ளிக்கட்டைகளை வாயில் கவ்வியபடி உலவும் மனிதர்களை அங்கே கண்டேன்’ என்று எழுதியதில் இருந்து தொடங்குகிறது புகையிலையின் வரலாறு. பின்னர் ஸ்பெயின் நாட்டு அரசரால் அனுப்பப்பட்ட ஃபிரான்சிஸ்கோ ஃபெர்னாண்டஸ் என்னும் பெயர் கொண்ட ஸ்பானியர், இந்த அற்புதத்தை கியூபாவில் இருந்து ஸ்பெயினுக்குக் கொண்டுவந்தார்.

பிரெஞ்சு ஜனாதிபதி ஜீன் நிக்காட் என்பவர், 1560-ம் ஆண்டு இந்தப் புகையிலைச் செடியை ஸ்பெயின் நாட்டிலிருந்து ஃபிரான்ஸுக்குக் கொண்டுசேர்த்தார் (புகையிலையின் பொதுப் பெயராகிய `நிக்கோட்டின்’ என்பது நிக்காட் என்னும் இவரது  பெயரில் இருந்தே  வந்திருக்கவேண்டும் என்ற கருத்து உண்டு.)

1565-ம் ஆண்டில் வால்டர் ராலே என்பவர், இங்கிலாந்துக்குப் புகையிலையை அறிமுகப்படுத்தி, பெரும் வணிகப் பொருளாக மாற்றி வெற்றிகண்டார். இவரைப் பற்றிய கதையொன்று உள்ளது. இங்கிலாந்துக்கு புகையிலை அறிமுகமாகத் தொடங்கிய அந்த ஆரம்ப காலத்தில், தனது அழகு நிரம்பிய மாளிகையில் ஒரு மாலை நேரத்தில் இவர், புகையிலையை மிகவும் ரசித்து பிடித்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது தொண்டை வறண்டு, தாகமெடுத்துள்ளது. தனது வேலைக்காரனை, குடிக்க பீர் கொண்டுவரும்படி சத்தம் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த பணியாளர் கையில் பீர் நிரம்பிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அறைக்குள் வந்திருக்கிறார். வந்தவுடன் கண்ணில்பட்ட காட்சி அவருக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தனது முதலாளியின் வாயிலும் மூக்கிலும் இருந்து புகை அடர்ந்து மேலெழும்பி இருக்கிறது. அய்யோ தனது முதலாளி மீது நெருப்பு பற்றியெறிகிறதே என்று பதறிப்போன அவர், தான் கொண்டுவந்த பாத்திரத்தில் இருந்த பீரை அப்படியே முதலாளியின் தலையில்  கவிழ்த்தாராம்.

கதையின் தொடர்ச்சி எழுதப்படவில்லை, ஆனால், புரிந்துகொள்வது கடினம் அல்ல. முதலாளி மீது பற்றியெறிந்தது நெருப்பல்ல என்பதை அவருக்குப் புரியவைத் திருப்பார்கள். சிறிது கால இடைவெளியில், மீண்டும் அவர் மீது அந்த நெருப்பு பற்றி எரிந்திருக்கும். எரிவது நெருப்பு அல்ல என்ற விழிப்புஉணர்வை அவரைச் சுற்றியிருந்தவர்களும் சமூகமும் அப்போது அடைந்திருக்கும். இந்தக் கதையே விழிப்புஉணர்வுக்காக உருவாக்கப்பட்டதாகக்கூட இருக்கலாம். அறியாமையில் இருந்து மக்களை மீட்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறதல்லவா! அவர்கள் அதனைச் செவ்வனவே செய்திருப்பார்கள்.

இவ்வாறாக, புகையிலையின் காரப்புகை இங்கிலாந்தைச் சூழத் தொடங்கிய சிறிது காலத்தில், அரசர் முதலாம் ஜேம்ஸின் உத்தரவின் பேரில் தாமஸ் ரோ என்பவர் 1615-ம் ஆண்டு, இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த மொகலாயச் சக்கரவர்த்தி, ஜஹாங்கீரை அவரது அரசவையில் வந்து சந்தித்தார். அப்போது அவர் புகையிலையையும் அயர்லாந்தின் உருளைக்கிழங்கையும் கொண்டுவந்தார். தாமஸ் ரோ கொண்டுவந்த ருசி மிகுந்த அந்தப் பொருட்களை இந்திய மக்கள் சுவைத்து மகிழ்ந்தனர். வெகுசில காலத்திலேயே உருளைக்கிழங்கு நம் மண்ணிலும், புகையிலைச் சுருட்டு நம் வாயிலும் ஆழப் புதைத்து நட்டுவைக்கப்பட்டன.

புகையிலைக் கண்டறியப்பட்டு இந்தியாவுக்கு வந்த வரலாறு இப்படி இருக்க, சீனிச்சர்க்கரைப் புலவரோ புகையிலைக்கான புதியதொரு கதையை தனது தூது இலக்கியத்தில் சித்தரிக்கிறார்.

முன்பொரு காலத்தில் சிவன், திருமால், பிரம்மா மூவருக்குள்ளும் ஒரு வழக்கு உண்டாயிற்று. அதனைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு தேவர்களின் இந்திரசபைக்குச் சென்று தங்களது வழக்கை எடுத்து வைத்துள்ளனர். அவற்றைக் கேட்ட தேவர்கள், “உங்களது வழக்கைப் பிறகு கவனிப்போம்” என்று சொல்லி அந்த மூவர்களிடத்திலும் வில்வம், திருத்துழாய், புகையிலை என்னும் மூன்றையும் கொடுத்து, அவற்றை மறுநாள் கொண்டுவரச்சொல்லி அனுப்பியுள்ளனர்.

கதைகளின் கதை - புகையிலை விடு தூது - சு.வெங்கடேசன்

அவர்கள் மூவரும் சரி என்று சொல்லி தங்கள் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர். சிவபெருமானிடம் கொடுத்தனுப்பிய வில்வத்தை அவரின் காலடியில் ஓடிக்கொண்டிருந்த கங்கையின் அலை கொண்டுபோயிற்று. திருமாலிடம் கொடுத்தனுப்பிய திருத்துழாயை, அவர் துயில்கொண்டிருந்த பாற்கடலின் அலை கொண்டுபோயிற்று. பிரம்மதேவரோ தாம் பெற்றுவந்த புகையிலையை வேறெங்கும் வைக்காமல், தம் நாவிலுள்ள கலைமகளிடத்தில் கொடுத்துவைத்துள்ளார்.

மறுநாள் மூவரும் விண்ணவரின் சபைக்கு வந்தபோது, தேவர்கள், “நாங்கள் உங்களிடம் கொடுத்தனுப்பிய பொருளைக் கொடுங்கள்” என்று கேட்க, சிவபெருமானும் திருமாலும் திருதிருவென விழித்தபடி, ``எங்களிடம் கொடுத்த பொருட்கள் போயின” என்று கூறியுள்ளனர். அதனைக் கண்ட பிரம்மதேவர் மகிழ்ச்சியுற்று, கலைமகளிடத்தில் இருந்த புகையிலையை வாங்கி, “இதோ என்னிடத்தில் கொடுத்தனுப்பிய பொருள்” என்று சொல்லி, சபையின் முன் வைத்து, “மற்றவர்களிடம் கொடுத்தனுப்பிய பொருள் போயின, என்னுடையது போகையிலை” என்று கூறினாராம். அவர் கூற்றில் புகையிலை என்பது மருவி, `போகையிலை’ என்னும் பெயர் தோன்றியது என்கிறார் சீனிச்சர்க்கரைப் புலவர். ஆகாயம் புகையிலையின் சுருட்டுப் புகைபோல் இருப்பதால், இறைவன் ஆகாயமே திருமேனியாக ஆனாரென்பது இவர் தரும் கூடுதல் விளக்கமாகும்.

இந்தத் தூது இலக்கியத்தில் ஒவ்வொரு தெய்வத்தையும் சிலேடையாக, புகையிலையுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள பகுதி மிக முக்கியமானது. குறிப்பாக யானைத்தோலால் ஆகிய உரியை மேலே போர்த்தி, திருக்கரத்தில் நெருப்பை ஏந்தி, நெற்றியில் வெண்ணீற்றை அணிந்த சிவபெருமானை, அதேபோல தோலால் ஆகிய போர்வையை சுருட்டிப் போர்த்தி, நெருப்பை ஏந்தி, வெண்சாம்பலை முனையில் அணிந்துகொள்ளும் புகையிலையும் ஒன்றென சிலேடை சொல்கிறார். இதேபோல திருமாலையும் பிரம்மதேவனையும் புகையிலையுடன் ஒப்பிட்டு, சிலேடைக் கவிதையை அள்ளித் தெளிக்கிறார்.

சாராயத்தை, `புகையிலைக்குத் தம்பி’ என்று வர்ணிக்கும் இவர். `மோகப் பயிராய் முளைத்த புகையிலை’ என உவமை அளிக்கிறார். இந்தக் கவி விளையாட்டின் உச்சம் `தமிழ்போல் தனது நாவில்  விளையாடும் புகையிலை’ என அவர் முடிவுக்கு வந்ததுதான்.

இந்தத் தூது இலக்கியத்தை மிக முக்கியமானதாக நான் கருதுவதற்குக் காரணம், அது வரை தூது இலக்கியத்தில் பாடப்படாத புதியதொரு பொருளைத் தூது அனுப்பியதால் அல்ல; மாறாக, அது வரையில் சொல்லப்பட்ட கடவுள்கள் பற்றிய சித்தரிப்பில் இது ஒரு தலைகீழ் மாற்றத்தைக் கொண்டுள்ளது என்பதுதான்.

மதங்கள் உருவாக்கிய கடவுள்களும், மக்கள் உருவாக்கிய தெய்வங்களும்  அடிப்படையில் வெவ்வேறானவை. மதங்கள் உருவாக்கிய கடவுள்கள் வேதங்களில் இருந்து பிரணவமானவை என்று சொல்லப்படும் கற்பிதக் கருத்துருக்கள். மக்கள் உருவாக்கிய தெய்வங்களோ கொலைகளில் இருந்து உதித்தவை, மரணங்களில் இருந்து பிறந்தவை. படையெடுப்பில் இறந்தவர்கள், காவலுக்குப் போன இடத்தில் இறந்தவர்கள், எதிரிகளிடமிருந்து தங்களின் இனத்தை, கூட்டத்தை, ஊரைக் காக்க உயிர்த் தியாகம் செய்தவர்கள், பலாத்காரத்தின்போது இறந்துபோன பெண்கள், தந்தை இறந்து சுடுகாட்டுத் தீயில் வெந்துகொண்டிருந்தபோது, துக்கம் தாளாமல் தானும் தீயில் விழுந்து செத்துப்போன சீலைக்காரிகள்தான் மக்கள் உருவாக்கிய தெய்வங்கள்.

மக்கள் உருவாக்கிய தெய்வங்கள் அனைத்தும் ஏற்கெனவே மனிதனாக இருந்து மரணித்தவர்கள். எனவே, அவர்களை வழிபடும்போது அவர்கள் விரும்பிய உணவு வகைகளைப் படையலிட்டு வணங்கும் முறை சங்க காலத்தில் இருந்து தொடர்ந்து வருவதாகும். இறந்துபோன முன்னோரை நடுகல்லாக நட்டு, அவன் விரும்பி உண்ட மதுவையும் உணவுப் பொருளையும் படையலிட்டு வணங்கும் முறை இன்றும் தொடர்கிறது. ஆனால், மதங்கள் உருவாக்கிய கடவுளுக்கு அப்படி அல்ல, சாஸ்திர, சம்பிரதாயங்கள் சொல்லியுள்ளபடி பூஜை, புனஸ்கார, நைவேத்தியங்கள்தான்.

சீனிச்சர்க்கரைப் புலவர் இயற்றிய தூது இலக்கியத்தில் ஒரு தலைகீழ் மாற்றத்தை நாம் பார்க்க முடியும். உழைக்கும் மக்களின் வழிபாட்டு மரபில் அவர்கள் விரும்பி உண்ட மதுவையும் சுருட்டையும் கறியையும் படையலிட்டு வணங்கும் பழக்கத்தை, வேதக் கடவுள்களின் புராணப் படிமங்களுக்குள் கொண்டுபோய் செருகியுள்ளார். சுப்பனும் மாடனும் கருப்பணசாமியும் பாண்டிமுனியும் விரும்பிக் குடித்துக்கொண்டிருந்த சுருட்டையும் புகையிலையையும் இப்போது சிவனும் பிரம்மாவும் திருமாலும் குடிக்கத் தொடங்கினர். பிராமணீய வழிபாட்டு மரபுக்குள், உழைக்கும் மக்களின் வழிபாட்டு விழுமியங்கள் உள்நுழைந்துள்ளன.

இந்திய சமய வரலாற்றில், வழிபாட்டு மரபில் மேல்நிலையாக்கத்திற்குத்தான் கீழோர் தெய்வங்கள் ஆட்பட்டுள்ளன. ஆனால், கீழோரின் வழிபாட்டு முறைக்கு மேலோர் தெய்வங்களை உட்படுத்தும் முறை ஒன்றை சீனிச்சர்க்கரைப் புலவரின் தூது இலக்கியத்தில் பார்க்கும்போது, ஆச்சர்யப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்தக் கதைக்குள் இருப்பது முற்றிலுமானதொரு புதுமை; மரபு மீறல்; ஒருவகை துணிவு.

இவ்விஷயத்தில் இன்னோர் ஆச்சர்யம், இந்த இலக்கியத்தைப் பதிப்பித்தவர் பற்றியது. இந்தத் தூது இலக்கியத்தைக் கண்டறிந்து, பதிப்பித்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா. 1939-ம் ஆண்டு அதனைப் பதிப்பித்து, மிகச் சிறப்பான முகவுரை ஒன்றையும் எழுதியுள்ளார். உ.வே.சா- வின் தனிப்பட்ட வாழ்வை அறிந்த எல்லோருக்கும் தெரியும், அவர் ஆச்சார அனுஷ்டானங்களில் சிறு பிசகும் இல்லாமல் வாழ்வை நடத்தியவர். அவர் கண்ணில் இப்படி ஓர் இலக்கியம் தட்டுப்பட்டபோது, இது தெய்வ நிந்தனை என்று பதிப்பிக்காமல் போயிருந்தால், இந்த இலக்கியமே தமிழுக்கு இல்லாமல் போயிருக்கும். புகை தேவையா, இல்லையா, இது புனிதமா, தீட்டா என்று பார்க்காமல், `தமிழுக்கு இது புதியது’ என்ற முடிவுக்கு வந்து பதிப்பித்திருக்கிறார்.

இன்றைய காலச்சூழலில், இப்படி ஓர் இலக்கியத்தை ஒருவர் படைத்துவிடமுடியுமா என்பது கேள்விக்குறிதான். 140 ஆண்டு காலச் சுழற்சியில் நாம் முன்னோக்கித்தான் நகர்ந்திருக்கிறோமா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. வாயில் கொள்ளிக்கட்டையுடன் கொலம்பஸ் பார்த்த மனிதனில் தொடங்கி பிரம்மன் புகையிலையை கலைமகளிடம் கொடுத்தது வரையிலான காட்சிகளை ஒரு சித்திரக்கதையாக வரைந்துவிட முடியுமா என்ன? சமஸ்தானத்துப் புலவர்கள் இன்றைய ஜனநாயக காலத்தைவிட சுதந்திரமான சூழலிலா வாழ்ந்தார்கள்?

கேள்விகள் அடுக்கடுக்காய் மேலெழுகின்றன.ஆனால், கேள்விகளுக்கு அப்பாற்பட்ட முடிவுகளும் உருத்திரளத்தான் செய்கின்றன. பாட்டுடைத் தலைவனை, இறைவனைப் பற்றி தூது இலக்கியம் படைக்கும்போது, இறைவனைவிட,  புகையிலையின் மீது அபரிமிதமான காதல் கொண்ட சீனிச்
சர்க்கரைப் புலவரையும், அதைவிட தமிழின் மீது பெருங்காதல் கொண்ட உ.வே.சா -வையும் நாம் காண்கிறோம். இவ்விருவரின் காதலுக்கும் புகையிலையே சாட்சி. அதுசரி, காதலுக்கும் புகையிலைக்கும் அப்படி என்னதான் சம்பந்தமோ?