கட்டுரைகள்
கவிதைகள்
Published:Updated:

மிகக் கடைசியான மிருதுவான கதைகள் - ஜீவன் பென்னி

மிகக் கடைசியான மிருதுவான கதைகள் -  ஜீவன் பென்னி
பிரீமியம் ஸ்டோரி
News
மிகக் கடைசியான மிருதுவான கதைகள் - ஜீவன் பென்னி

ஓவியம் : மணிவண்ணன்

மிகக் கடைசியான மிருதுவான கதைகள் -  ஜீவன் பென்னி

1.
ஆசீர்வாதங்களால் நிரம்பியிருக்கின்ற இம்மாநகர சுரங்கப்பாதையில்
ஒரு ஞாபகத்தின் பிரார்த்தனை கையேந்துகிறது
மிக மிருதுவான கைகளவை
பழக்கூறுகளுடன் நசிந்துகொண்டிருக்கும் இப்பாலித்தீன் வாழ்வின்
மிகக்கடைசியான மிருதுவது.
மெல்லிய இசையொன்றில் நெருங்கிய உறவாகிக்கொள்ளுமது
தன் கதைகளில் திரும்பத்திரும்ப மென்மையாகி
சரிந்துடைகிறது,
கடைசிப் பாடல் முடிவடையும்போது
கடைசி இரயில் கடந்துவிட்டிருந்தது
சாலைகள் யாருமற்றிருந்தன,
மேலும்
இருளப்பிக் கிடக்கும் இவ்வுலகம் சில பூக்களைப்போல்
மணத்தும் கிடக்கின்றன.
எப்பொழுதும்போல்
இவ்விரவை மேலும் அர்த்தமாக்குவது
அதன் இருள்தான்.
                                                 
2.
பழைய ஆடைகளைத் துவைத்துத் தேய்த்து விற்பவன்
அந்நகரின் பழைமையான உடல்களையே விற்கிறான்
அவற்றின் மெலிந்த ஆன்மாக்களைத்தான்
கைவிடப்பட்ட எல்லா உதிரிகளுக்குமானதாக
ஒன்றன் மீது ஒன்றாக அழகாக அடுக்கிவைத்திருக்கிறான்.
நகரம் பழையனவற்றை வெளியேற்றுகிறது
அவனோ
பழையனவற்றிலிருக்கும் நகரின் புதிய கனவுகளை
எல்லோருக்குமானதாக்குகிறான்.

3.
எப்பொழுதும்போல் வளைந்து செல்லும் இப்பாதையில்
முதன்முறையாகப் பறந்து வரும் தட்டாம்பூச்சி
தன் மிகச் சிறிய இதயத்தை
பாதைக்கேற்றவாறு தானே திருப்பிக்கொள்கிறது. 

மிகக் கடைசியான மிருதுவான கதைகள் -  ஜீவன் பென்னி

4.
நாற்கர சாலையிலிருந்து வாடிக்கையாளர்களுக்கென
உணவுவிடுதி நோக்கி கைகளையசைத்தே
பெரும் பகலை இரவு நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கும்
சீருடையணிந்த பணியாளன்
அந்நாளின் கடைசி வெய்யிலை தனக்கான பருக்கைகளாக்குகிறான்
சின்ன ஓய்வு நேரத்தில் பூக்களாக்கிக்கொள்ளுமவன்
யாருமற்ற சாலையில் உட்கார்ந்திருக்கும் ஓவியமாகிறான்
விற்பதற்கென நிறைய்யவிருக்கும் உலகம் தன் கண்களை
இறுக மூடிக்கொள்ளும்போது
அவனது கைகளில் சேர்ந்திருக்கும் சிறிய இரக்கங்களுடன்
மிதிவண்டியில் மிக மெதுவாக அசைந்து செல்கிறது
அவனது வாழ்வு,
பெரும் மழை பெய்து நிரம்புகிறது நகரம்.

5.

ஒரு நாளையே விற்றுத் திரும்பும் பஞ்சுமிட்டாய்க்காரன்
அதன் அந்தியை
நகரின் சாலை முழுவதும் பாடலாக்கி
வீடு திரும்புகிறான்,
குழந்தைகள் இறங்கிச் சென்ற காரின் பின் கண்ணாடி வழியே
சாலையை வெறித்துக்கொண்டிருந்த குட்டி மிருகப்பொம்மைகள்
அவர்கள் திரும்பியதும்
ஒவ்வொரு பாடலாக பாடிக்காண்பிக்கின்றன
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வோர் இனிப்பு.