Published:Updated:

“வீடுகளை அலங்கரிப்பவை புத்தகங்களே!” - உலகப் புத்தக தினம் சிறப்புப் பகிர்வு!

“வீடுகளை அலங்கரிப்பவை புத்தகங்களே!” - உலகப் புத்தக தினம் சிறப்புப் பகிர்வு!
“வீடுகளை அலங்கரிப்பவை புத்தகங்களே!” - உலகப் புத்தக தினம் சிறப்புப் பகிர்வு!

இன்று உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை

“வீட்டை அலங்கரிக்க புத்தகங்களைவிட, அழகான பொருள்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்பார், ஹென்றி வார்ட் பீச்சர் எனும் அறிஞர். ஆம், உண்மைதான். புத்தகங்கள் வீட்டை மட்டும் அலங்கரிப்பதில்லை; மனிதனின் அறிவு வளர்ச்சியையும் அலங்கரிப்பவை. அந்தப் புத்தகங்களைக் கொண்டாடும் தினம் இன்று...

‘உலகப் புத்தக தினம்’ என்ற ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு முதன்முதலில் பரிந்துரைத்தது. புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாள் உலகப் புத்தக தினம் என்று மட்டுமல்லாது,‘புத்தக உரிமை தினமாகவும்’ கொண்டாடப்படுகிறது. 

ஷேக்ஸ்பியர், ஜான் மில்டன்! 

சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலகச் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து உலகப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் அனைவரும் இந்தப் புத்தக தினத்தன்று நிறைய புத்தகங்களை விரும்பி வாங்குவதோடு, இந்த நாளில் பிறந்த மற்றும் இறந்த மாமனிதர்களுக்கு மரியாதையும் செய்கின்றனர். குறிப்பாக, ஆங்கிலேய நாவலாசிரியர் ஷேக்ஸ்பியர் இந்த நாளில்தான் இறந்துபோனார். வாசிப்பின்மீது அவர் கொண்டிருந்த தீராக்காதல், அவரை உலகமறியும் அளவுக்கு உயர்த்தியது. அவர், பல காவியங்களை எழுதினார். அதேபோல், பார்வை திறனற்ற ஜான் மில்டன் உலகம் காலத்தால் அழியாத நூல்களைப் படைத்தார்.

புரட்சியாளர் பகத்சிங்கோ, தான் சாகும்வரை படித்துக்கொண்டிருந்தார். “சாகப்போகிறோம் என்றாகிவிட்டது... இந்த நேரத்தில் புத்தகம் எதற்கு” என்று அவரிடம் கேட்டதற்கு, “சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையாவது கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்”என்று புன்னகைத்தவாறே பதிலளித்தார் பகத்சிங். 

‘மூலதன’த்தைக் கொடுத்த கார்ல் மார்க்ஸ்!

தான் தேடிய புத்தகம் பல மைல் தொலைவில் இருப்பதை அறிந்து, அங்குசென்று அதை வாங்கிப் படித்தவர் மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அதேபோல கார்ல் மார்க்ஸ், புத்தக அறைகளுக்குள்ளேயே மூழ்கிக் கிடந்ததால்தான், அவரால் உலகுக்கு ‘மூலதன’த்தைக் கொடுக்க முடிந்தது. நம் நாட்டின் எளிமையான ஜனாதிபதி என்று பெயர்பெற்ற ஏ.பி.ஜே.அப்துல் கலாமும் மிகப்பெரும் புத்தக வாசிப்பாளராகவே மறையும்வரை இருந்தார். இப்படிப் பலரும் புத்தகங்களுக்குள் ஆழ்ந்திருந்ததால்தான், அவர்கள் அனைவரும் உலகம் வியக்குமளவுக்கு அறிஞர்கள் ஆக முடிந்தது. 

சுவர்களிலும், எலும்புகளிலும், துணிகளிலும், களிமண்களிலும், ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்டு வந்த எழுத்துகள் இன்று, அறிவியல் முன்னேற்றத்தால் புத்தகங்கள் மூலமாகவும், கணினி மூலமாகவும் வளர்ந்திருக்கிறது. ‘மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே’ என்று சொல்லப்படும் இந்த உலகில், இன்றைய புத்தகங்களின் தாக்கம் எப்படியிருக்கிறது என்று பிரபலங்கள் சிலரிடம் பேசினோம். 

“மரியாதையே தனிதான்!” 

“முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் வந்தபிறகு வாசிப்பு என்பது, நுனிப்புல்லை மேய்வது போன்றுதான் இருக்கிறது. அதாவது, துணுக்கு வாசிப்பதைப்போன்று இருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல நூல் என்பது வழித்துணைவன் மாதிரி ஆகும். ஒருவர் எந்தப் பெரிய அலுவலகத்துக்குச் செல்வதாக இருந்தாலும், அவருடைய கையில் ஒரு புத்தகத்தை எடுத்துச் சென்றால், அவருக்குக் கிடைக்கும் மரியாதையே தனிதான். ஒரு புத்தகமானது, எப்படிப்பட்ட மன இறுக்கத்தில் இருக்கும் மனிதனையும் வெளியில் கொண்டுவந்துவிடக் கூடியது. நான், அதை நிறைய தருணங்களில் உணர்ந்து இருக்கிறேன்” என்று சொல்லும் எழுத்தாளர் கண்மணி குணசேகரன், “நல்ல நாவல், கதை, கவிதை உள்ளிட்டவற்றை வீடுகளில் அவசியம் வாங்கிவைக்க வேண்டும்” என்கிறார். 

மேலும் அவர், “பொதுவாக எங்கள் நடுநாட்டுப் பகுதிகள் என்று சொல்லப்படும் இடங்களில் எல்லாம் விவசாயம்தான் பிரதானத் தொழில். இவர்களுக்கு, விவசாயத்தைத் தவிர வேறெதுவும் தெரியாது. இப்போதுகூட இந்த நடுநாட்டு மக்கள் விவசாயத்தை விட்டு வெளியே வராததால், இவர்களுக்கு வாசிப்பு என்பது மந்தமாகவே இருக்கிறது. முதன்முதலில் இவர்களுக்கு நூலக வாசிப்பு என்பது தெருக்கூத்து, வசனம், பாடல்கள் அடங்கிய ‘புருதி’ எனும் ஒரு குறிப்பேடுதான். அந்தப் ‘புருதி’க் குறிப்பேடுதான் இவர்களுடைய ஒவ்வொரு வீட்டிலும் ஜாதகம் இருப்பதைப்போன்று இருக்கும். அதிலிருந்துதான் புத்தகம் வந்தாலும்கூட, அதன்மூலம்தான் பிற்காலத்தில் பலதரப்பட்டவர்களின் வாசிப்பும் இருக்கிறது” என்றார். 

உலகப் புத்தக தினம் கொண்டாட்டம்!

தொடர்ந்து அவர், “அனைத்து வீடுகளிலும் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பு வாசலில் கண்ணாடி வைத்திருப்பர். அதை வைத்தால் கண் திருஷ்டி போகும் என்பார்கள். ஆனால், அதை எல்லாம் வைப்பதைவிட அழகான புத்தக அலமாரி ஒன்றுவைத்தால், அந்தக் குடும்பத்துக்குள் இருக்கும் அனைத்துக் கெட்ட விஷயங்களுமே போய்விடும். குடும்பத்துக்குள் புத்தகங்கள் குவியும்போது, அந்த வீட்டின் அழகே மாறிவிடும். புத்தக வாசிப்பு ஒருபுறம் என்றால்... மறுபுறம், புத்தகம் எழுதுபவர்களும் மக்களுடைய எண்ண, கால ஓட்டத்துக்குத் தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொண்டு எழுத வேண்டும்” என்றார் மிகத் தெளிவாக. 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத் துணைத் தலைவரும் (பபாசி), வனிதா பதிப்பக உரிமையாளருமான பெ.மயிலவேலன், "1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் நாள் உலகப் புத்தகத் தினத்துக்கான முதல் தீர்மானம் யுனெஸ்கோ அமைப்பால் நிறைவேற்றப்பட்டது. இதற்கடுத்தே முதன்முதலாக உலகப் புத்தகத் தினம் கொண்டாடப்பட்டது. இந்தப் புத்தக தினத்தின்போது, ரஷ்யாவில் புத்தகம் ஒன்றுடன் ஒரு ரோஜா மலரையும் கொடுத்து அந்த நாளைக் கொண்டாடியிருக்கின்றனர். இப்படி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் புத்தக தினம், இன்று உலக நாடுகளில் எல்லாம் பரவியிருக்கிறது. நம் தமிழகத்தைப் பொறுத்தவரை புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்காக வருடந்தோறும் சுமார் 1,200 இடங்களில் புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இன்று (23-ம் தேதி) காலை கன்னிமரா நூலகத்தில் உலகப் புத்தக தினம் கொண்டாடப்பட்டது.

10 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும், பொது மைய நூலகத் துறையும் இணைந்து நடத்திய இந்தப் புத்தக தின நிகழ்ச்சியில் பதிப்பாளர்கள் சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்களை விற்பனை செய்தனர். அதிலும் குறிப்பாக, காலை 9 மணி முதல் 10 மணிக்குள் ரூ.15 ஆயிரத்துக்குப் புத்தகங்கள் விற்பனையாகின. இதுதவிர, இன்றைய மக்களிடம் இன்னும் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பெரும்பாலான பதிப்பகத்தார் 10 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி தந்து புத்தகங்களை விற்கின்றனர். குறிப்பாக, இன்றைய தலைமுறையினரிடம் கல்விப் புத்தகங்களைத் தவிர, மற்ற புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைவாக இருக்கிறது. அதை ஊக்குவிக்கும் விதமாகவே இன்று வாசிப்பதற்கான ஒரு விழிப்புஉணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. 

குழந்தைகளிடம்  மன இறுக்கம்!

குழந்தைகளின் மனநிலையை வைத்துத்தான் புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது. குழந்தைகளிடம் காணப்படும் மன இறுக்கத்துக்குக் காரணம், புத்தகம் வாசிப்பு இல்லாததுதான். 90 சதவிகிதக் குழந்தைகள் கல்விப் புத்தகங்களைத் தவிர, மற்ற புத்தகங்களைப் படிப்பதில்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும். அதாவது, கல்விப் புத்தகங்களைத் தவிர, வேறு புத்தகங்களைப் படிக்கும்போது அவர்களுடைய மனம் மகிழ்ச்சியடைகிறது. ஒரு நல்ல தெளிவான சிந்தனை கிடைக்கிறது. ஆனால், இவற்றை கணினியில் முழுவதுமாகப் படிக்க முடியாது. அதேநேரத்தில் அதிலிருந்து முழுத் தகவலையும் அறிந்துகொள்ள முடியாது. மிகவும் குறைவான தகவல்களை மட்டுமே அறிந்துகொள்ள முடியும். அதிலும் குறிப்பாக, கணினியில் இடம்பெறக்கூடிய தகவல்களில் 60 சதவிகித தகவல்கள்  உண்மையாக இருப்பதில்லை. கணினியில், தவறான தகவல்களை ஒருவர் பதிவுசெய்யும்போது... அதுவே மற்றவருக்கும் சென்றடைகிறது. இதனால், தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால், புத்தகங்களில் அப்படி இருக்காது.  குழந்தைகளிடம் இதுபோன்ற புத்தகங்களைக் கொடுத்து படிக்கவைத்தால், அடுத்த தலைமுறை சிறந்த தலைமுறையாக உருவாகும். ஆகவே, புத்தக வாசிப்பு என்பது எல்லோருக்கும் இன்றியமையானது” என்றார் மகிழ்ச்சியுடன்.

"ஒரு நூலகம் திறக்கப்பட்டால், ஒரு சிறைச்சாலை மூடப்படும்" என்றார் பேரறிஞர் அண்ணா. அந்தவகையில், மற்ற நாள்களில் புத்தகங்கள் வாசிப்பை மறந்தாலும்கூட, உலக புத்தக தினத்தன்று மட்டுமாவது, சிறந்த புத்தகங்களை வாங்கி, நண்பர்களுக்கும், குழந்தைகளுக்கும் பரிசளிப்பதோடு, நாமும் நல்ல பல புத்தகங்களை வாசிப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம். 

அடுத்த கட்டுரைக்கு