Published:Updated:

``நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க!'' - `எழுத்துச் சிங்கம்’ ஜெயகாந்தன் பிறந்ததினப் பகிர்வு!

``நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க!'' - `எழுத்துச் சிங்கம்’ ஜெயகாந்தன் பிறந்ததினப் பகிர்வு!
News
``நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க!'' - `எழுத்துச் சிங்கம்’ ஜெயகாந்தன் பிறந்ததினப் பகிர்வு!

மீறுதல் ஓர் உரிமை, ஓர் எழுச்சி. அதைச் செய்து பார்த்தவன்தான் உணர முடியும். வேடிக்கை பார்ப்பவனால் ஒருபோதும் மீறலைப் புரிந்துகொள்ள முடியாது"

``இன்பம் என்றால் என்னவென்றே பலருக்கும் தெரியாது. அது பொன்னால் கிடைப்பதல்ல, புகழால் கிடைப்பதல்ல... தன்னை அறிதலில் ஓர் இன்பம் இருக்கிறது பாருங்கள். அந்த இன்பமே உயர்வானது. தன்னை அறிந்தவன் தவறுகளை மறைத்துக்கொள்ள மாட்டான். சரி, தவறு என்பதெல்லாம் அவரவர் வாழும் சூழ்நிலையும் வளர்ந்தவிதமும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியவை. உங்கள் சரி, எனக்கு தவறு. மீறுதல் ஓர் உரிமை, ஓர் எழுச்சி. அதைச் செய்து பார்த்தவன்தான் உணர முடியும். வேடிக்கை பார்ப்பவனால் ஒருபோதும் மீறலைப் புரிந்துகொள்ள முடியாது" - ஜெயகாந்தன்.

ஜெயகாந்தன் சொல்லியதைப்போல அவரே ஒரு மீறல் கலைஞன். இலக்கியப் பரிச்சயம் உடையவர்களுக்கும் சரி, அல்லாதவர்களுக்கும் சரி `ஜெயகாந்தன்' என்ற பிம்பம் அவர்களின் நினைவின் சுவர்களிலிருந்து மறைந்திராத ஒன்று. ஆக்கத்தின் கூர்மை தாங்கிய முறுக்கு மீசை, தடித்த கண்ணாடிச் சட்டகத்தினுள் இருக்கும் ஒளி நிறைந்த கண்கள், சிங்கத்தின் பிடரி போன்ற கேசம், வயோதிகத்திலும் தளர்ந்திராத ஞானச்செருக்கு என வாழ்ந்த ஜெயகாந்தன், தமிழ் எழுத்துலகின் அடையாளம். அவரைப் பற்றி பலரும் பலவிதமான செய்திகளைக் கேள்விப்பட்டிருப்போம். உச்ச நடிகர் ஒருவரின் நடிப்பை அவர் இருந்த மேடையிலேயே விமர்சித்தவர்; தவறாகப் பாடல் எழுதிய ஒரு பாடலாசிரியரை  பாண்டிபஜாரில் ஓட ஓட அடித்தவர்; கீற்றுக்கொட்டகை ராஜாங்கம் என ஜெயகாந்தனைப் பற்றி பல விஷயங்கள் நம் செவிகளை நிறைத்திருக்கும். உண்மை, பொய் என்ற நிலையைத் தாண்டி, அவை அனைத்துமே நமக்கு ஆச்சர்யத்தைக் கொடுப்பவையாகத்தான் இருந்திருக்கும்.

அந்தப் புருவம் உயர்த்தும் ஆச்சர்யம்தான் ஜெயகாந்தன். தமிழ் எழுத்துலகில் வாழும்போதே அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளர், ஜெயகாந்தன் மட்டும்தான். அவர் எழுதுவதை நிறுத்தி 25 வருடங்களுக்குப் பிறகும் அவரது எழுத்துகள் வாசிக்கப்பட்டு அவருக்கான  புதிய வாசகர்கள் உருவாகிக்கொண்டே இருந்தார்கள். அவர் எழுதாமல் இருந்ததைப் பற்றி ஒரு பத்திரிகையாளர் அவரிடம் கேட்டபோது, ``நான் எழுதியதை எல்லாம் முதலில் படிங்க'' என்று சொல்லியிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

யாருக்கும் பயப்படாதவர். தடாலடி கருத்துகளுக்குச் சொந்தக்காரர், திமிர் பிடித்தவர் போன்றவை ஜெயகாந்தனைப் பற்றி பொதுவான அவதானிப்புகள். சமூக வலைதளங்கள் இல்லாத காலகட்டத்தில் பரபரப்புகள் நிறைந்தவராக இருந்துள்ளார் ஜெயகாந்தன். `எழுத்துச் சிங்கம்' என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் ஜெயகாந்தன் எழுதத் தொடங்கியது முதல் தற்போது வரை தொடர்ந்து பேசப்பட்டுவரும் எழுத்தாளர். தடாலடியான கருத்துகள், பிம்பங்களை விமர்சிப்பது, கலகக்காரன் இவை மட்டுமே ஜெயகாந்தன் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் அல்ல. போதிய படிப்பறிவற்ற சிறுவனாக அச்சகத்தில் வேலைபார்த்துக்கொண்டே  எழுதத் தொடங்கி, எழுத்துலகையே தன்னை நோக்கித் திருப்பியவர்.  

எளிய மனிதர்களின் கதைகளை அவர்கள் மொழியிலேயே பதிவுசெய்தவர். சென்னைத் தமிழை இலக்கியத்துக்குள் கொண்டுவந்த பெருமை, ஜெயகாந்தனையே சேரும். எவையெல்லாம் மூடப்பழக்கவழக்கங்களாக, கற்பிதங்களாக, தனிமனிதச் சுதந்திரத்தைத் தடுப்பவையாகக் கட்டமைக்கப்பட்டிருந்ததோ அவற்றின் மீதெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் சவுக்கடி கொடுத்தவர். பெண் விடுதலை குறித்து, கற்பு குறித்து இந்தச் சமூகம் கடைப்பிடித்து வந்த பிற்போக்குத்தனங்களை தனது `கங்கா'க்களின் மூலம் சாம்பலாக்கியவர் ஜெயகாந்தன்.

அவரது `அக்னிப்பிரவேசம்' கதை, எழுதப்பட்ட காலத்தில் பெரும் பரபரப்புக்குள்ளானது. அந்தக் கதையில், பிற்போக்குச் சமூகம் எதை காதுகளுக்குள் கிசுகிசுத்து, பாதிக்கப்பட்டவர்களைக் குற்றவுணர்வுக்குள்ளாக்கி சிலாகித்ததோ, அதை காக்கையின் எச்சம் எனத்  துடைந்தெறிந்து போகச் சொன்னார். பலரும் ஒழுக்கநெறி வகுப்பெடுக்க, அதை சட்டைசெய்யாத ஜே.கே `சில நேரங்களில் சில மனிதர்கள்' எழுதினார். எப்போதும் அவரது கதாபாத்திரங்கள் எல்லைகளுக்குள் சிக்கிக்கொண்டதே கிடையாது. அந்தந்தக் கதாபாத்திரங்கள் அவரவர்களுக்கான நியாயங்களைப் பேசும். ஜெயகாந்தன் கூறியதுபோலவே `வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்’ என்பது அவரது கதாபாத்திரங்களுக்கும் பொருந்தக்கூடியது. அதேசமயம் அவரது பல கதாபாத்திரங்கள் புத்தசாலித்தனமாகப் படைக்கப்பட்டிருக்கும். அந்தக் கதாபாத்திரம், சமூகத்தின் அவலங்களை  நக்கலான தொனியில் கேள்விகளை எழுப்பும்; அதிகாரவர்க்கத்தை விமர்சனம் செய்யும்.

அவரது நாவல்களில் உச்சமாகப் பல முன்னணி எழுத்தாளர்களாலும் முன்வைக்கப்படுவது `ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்'. அதன் மைய கதாபாத்திரமான ஹென்றியை, வியக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவரது பல சிறுகதைகள் வாழ்வின் அர்த்தத்தை அதன் கதாபாத்திரங்களின் வழியே நம்மிடையே கூறிக்கொண்டேயிருக்கும். `நான் இருக்கிறேன்' சிறுகதையில் வரும் வியாதிக்காரன், `பொம்மை' கதையில் வரும் சிவகாமி என்ற குழந்தை, `பூ உதிரும்' - பெரியசாமிப் பிள்ளை, குறைப்பிறவி செல்லி, `முன் நிலவும் பின் பனியும்' கதையில் வரும் தாத்தாவின் பாத்திரம் என அவரது பல கதாபாத்திரங்கள் நமக்கு வாழ்வின் யதார்த்தத்தை அறைந்து செல்லும்; வாழ்வின் சிக்கலான முடிச்சை அவிழ்த்துச் செல்லும்; வாழ்வின் கொடிய பேதைமைகளை உமிழச்சொல்லும்.

அவரது சினிமாவுக்குப் போன `சித்தாளு' நாவலில், தமிழ் சினிமாவின் பிம்பக் கட்டமைப்பு குறித்து எழுதியிருப்பார். `ஊருக்கு நூறு பேர்', `காற்று வெளியினிலே' நாவல்களில் கம்யூனிஸ்ட்களின் போராட்ட, தலைமறைவு வாழ்க்கையை எழுதியிருப்பார். ஒரு படைப்பு யாருக்கான படைப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெளிவான பார்வை அவருக்கு இருந்தது. 

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலருடன் முரண்பட்டிருக்கிறார். ஆனாலும் எல்லோருக்கும் பிடித்தமானவராக, ஆதர்சமாக இருந்திருக்கிறார். ஜெயகாந்தனைப் பற்றி கலைஞர் ஒருமுறை, `எங்களுக்குள் இருப்பது முரண்பாடு அல்ல; வேறுபாடு. முரண்பாடு என்பது, தண்ணீரும் எண்ணெய்யும் மாதிரி... சேராது. வேறுபாடு தண்ணீரும் பாலும்போல... சேர்ந்துவிடும்' எனக் கூறியுள்ளார். தமிழ் சினிமாவைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஜெயகாந்தன் இரண்டு திரைப்படங்கள் இயக்கினார். அவரது `உன்னைப்போல் ஒருவன்' திரைப்படத்துக்கு ஜனாதிபதி விருதும் கிடைத்திருக்கிறது. பொதுவாக சினிமா உலகத்தைப் பற்றி `உலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு' என்பார்.

எதைப் பற்றிப் பேசினாலும் சரி, எழுதினாலும் சரி, அதில் உறுதியான நிலைப்பாடு மற்றும் தெளிவான அணுகுமுறையைக்கொண்டவர் ஜெயகாந்தன். கும்பல் மற்றும் கூட்டம் பற்றி அவர் பேசிய உரை, புகழ்பெற்றது.  ``கும்பல் என்பது, கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது; கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும். ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும் சர்வாதிகாரத்தையும், நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும் சத்யாகிரகத்தாலும் சந்திக்கும்."

அவரிடம் ஒரு நேர்காணலில், ``தமிழில் எழுதி ஜீவிக்க முடியும்னு நீங்க நம்புனீங்களா?'' எனக் கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு ஜெயகாந்தன், ``தமிழ் ஜீவிக்கட்டும் என நம்பித்தான் நான் எழுதினேன்'' என்றார். ஜெயகாந்தன் எப்போதுமே தன்னை தன் படைப்பின் வழியே உயர்த்திப் பிடித்தவராகவே இருந்துள்ளார். இதனால்தான் `ஜே.கே' என்ற பெயர் பலருக்கும் தற்போதும் `புருவம் உயர்த்தி' வியந்து பார்க்கும் ஆச்சர்யமாகவே உள்ளது. 

`கண்டதைச் சொல்லுகிறேன்

உங்கள் கதையைச் சொல்லுகிறேன்

இதைக் காணவும் கண்டு நாணவும் 

உமக்குக் காரணம் உண்டென்றால்

அவமானம் எனக்குண்டோ...'

- ஜெயகாந்தன்.