Published:Updated:

நூல் நுனியில் மிதக்கும் வாழ்வு - கவிதை

நூல் நுனியில் மிதக்கும் வாழ்வு - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
நூல் நுனியில் மிதக்கும் வாழ்வு - கவிதை

தர்மராஜ் பெரியசாமி, ஓவியம்: அனில் கே.எஸ்.

நூல் நுனியில் மிதக்கும் வாழ்வு - கவிதை

தர்மராஜ் பெரியசாமி, ஓவியம்: அனில் கே.எஸ்.

Published:Updated:
நூல் நுனியில் மிதக்கும் வாழ்வு - கவிதை
பிரீமியம் ஸ்டோரி
நூல் நுனியில் மிதக்கும் வாழ்வு - கவிதை
நூல் நுனியில் மிதக்கும் வாழ்வு - கவிதை

வாழ்வின் ரணங்களைச் செமிக்கத் திணறி 

புளித்த ஏப்பங்களாக ஊதித்தள்ளும் மனம்

ரொம்பவும்தான் துயரப்படுகிறது

கல்லடிபட்ட ஒரு நாய்க்குட்டிபோல.

காலம் பரிவோடு பரிமாறிய பதத்தில்

பொரித்தெடுத்த சுவைமிகு கணங்களை

லபக் லபக்கென்று விழுங்கியது

பெரும் தவறென இப்போது உறைக்கிறது.

மேலிருந்து கீழாக கீழிருந்து மேலாக

சுருக் சுருக்கென்று உள்ளிருந்து குத்தும்

காலத்தின் ஊசிகளைப்

படக்கென ஒடிக்க வேண்டும் போலிருக்கிறது.

பிடி சீரகத்தை அடக்கி உமிழ் இறக்கச் சொன்னாள்

வெகுளி மனைவி

இஞ்சி இடித்துச் சாறு தந்தாள் அன்பு அம்மா

கண்களைக் கட்டிக்கொண்டு அப்பா அடியாழம் வரை

நீந்தச் சொன்னது எலுமிச்சை சோடாவில்.

இறுகிவிட்ட பூட்டுக்கள் ஒவ்வொன்றாகச் சிதறி

அந்தரத்தில் லேசாகி மிதக்கிறேன் நொடியில்.

தொடர்ந்து எவ்வளவு லேசாக எனக் கேட்டால்

மகள் அவள் பலூனில் ஒரே மூச்சில் 'உஃப்’ என ஊதி

நூல் நுனியில் என்னைப் பறக்கவிடுமளவுக்கு

லேசாக.