Published:Updated:

10 செகண்ட் கதைகள்

10 செகண்ட் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
10 செகண்ட் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
10 செகண்ட் கதைகள்

தேய்பிறை

தலை கவிழ்ந்தபடி டாஸ்மாக் முன்னர் விழுந்துகிடக்கும் தமிழனை ஓரமாகப் படுக்கவைத்த பிறகு, அவசரமாக வேலைக்குக் கிளம்பினான் பீகார் இளைஞன்!

- டி.என்.ராஜேஷ்

லைக்ஸ்

``நீங்க `பிடிக்கலை'னு சொன்ன புடைவைக்கு எத்தனை லைக்ஸ் கிடைச்சிருக்குனு பாருங்க'' என்று ஃபேஸ்புக் பக்கத்தை கணவனிடம் காண்பித்தாள் மனைவி திவ்யா!

- வெ.சென்னப்பன்

பிரார்த்தனை

``நான் நல்லபடியா குணமடைஞ்சா... பொங்கல் வெச்சு, கிடா பலிகொடுக்கிறேன்'' என வேண்டிக்கொண்டான் விபத்தில் உயிர் பிழைத்த திவாகர்!

- கோ.பகவான்

துரத்தி விளையாடு

``நான் உன்னைத் துரத்துவேனாம்... நீ ஓடிக்கிட்டே `யாராச்சும் என்னைக் காப்பாத்துங்களேன்...'னு கத்துவியாம்'' என்றான் சிறுவன் சிறுமியிடம்!

- கோ.பகவான்

வீர விளையாட்டு

``ஜல்லிக்கட்டை இனி யார் வேண்டுமானாலும் விளையாடலாம். அதற்குத் தடையே இல்லை''

- ஆச்சர்யமாகச் சொன்னார் அந்த கம்பெனி டைரக்டர். ``அடுத்து நாம் தயாரிக்கப்போகும் வீடியோ கேம், ஜல்லிக்கட்டு!''

- க.மோ.செல்வா

10 செகண்ட் கதைகள்

ஒப்பந்தம்

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற வீராங்கனைக்கு, அரசு 5 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது. வீராங்கனையின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க, பிரபல நடிகை 25 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமானார்!

- வினோத்குமார்

வேகாத சோறு

``ஞாயித்துக்கிழமை ஒரு நாளாச்சும் நிம்மதியா வீட்டுச் சாப்பாடு திங்க முடியுதா... சோறு, வெந்தும் வேகமா இருக்கு” - மனைவியைத் திட்டிவிட்டு, ஹோட்டலில் ஃப்ரைடு ரைஸ் வாங்கிச் சாப்பிட்டான் சிவா!

- ரூபிணி

சந்தேகம்

``உனக்கு எப்போ பாட்டி பல் முளைக்கும்?'' எனக் கேட்டான் பேரன்!

- கோ.பகவான்

வாட்ஸ்அப் பிரியாணி

`இன்னைக்கு எங்க வீட்ல பிரியாணி'  - பக்கத்து வீட்டு லேகாவுக்கு வாட்ஸ்அப்பில் போட்டோ அனுப்பினாள் வனிதா!

- அபிதாசன்

10 செகண்ட் கதைகள்

ஹீரோடா..!

‘இந்தப் படத்தில் எந்த விலங்கும் துன்புறுத்தப்படவில்லை’ என டைட்டில் கார்டு போட்டதும், 50 ஸ்டன்ட் நடிகர்களைப் பறந்து பறந்து அடித்தபடி அறிமுகமானார் ஹீரோ!

- கல்லிடை வெங்கட்

10 செகண்ட் கதைகள்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்து விடக்கூடிய ‘நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ரூ. 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!