Published:Updated:

ஆசை முகம் மறந்து போகுமோ - சிறுகதை

ஆசை முகம் மறந்து போகுமோ - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
ஆசை முகம் மறந்து போகுமோ - சிறுகதை

ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

ஆசை முகம் மறந்து போகுமோ - சிறுகதை

ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

Published:Updated:
ஆசை முகம் மறந்து போகுமோ - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
ஆசை முகம் மறந்து போகுமோ - சிறுகதை
ஆசை முகம் மறந்து போகுமோ - சிறுகதை

ரங்கொத்திப் பறவைகள் மரங்களில் ‘டொக்... டொக்...' எனக் கொத்தும் சத்தம், அந்தக் காட்டின் அடர்த்தியான மௌனத்தைக் கலைத்துக்கொண்டிருந்தது. எங்கோ காட்டாறு ஓடும் சத்தம், பின்னணி இசைபோல் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. காற்றில் பெயர் தெரியாத ஏதேதோ பூக்களின் வாசம்.

அந்தப் பெரிய குமிழ் தேக்கு மரத்துக்கு மேலே, வெள்ளிச்சரம் போல் மழை சடசடவெனப் பெய்துகொண்டிருக்க, அவளும் அவனும் மரத்தில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தனர். அவள் தனது முகத்தில் வழிந்த மழைநீரை, தனது மெல்லிய விரல்களால் வழித்தபடி, மேல் கண்களை உயர்த்தி அவனைப் பார்த்தாள். அப்போது மரத்தில் இருந்து நான்கைந்து மஞ்சள் நிறப் பூக்கள், அவளுடைய வெள்ளை நிற சுடிதாரில் விழுந்து ஒரு டிசைன்போல் ஒட்டிக்கொண்டன.

“மழை பிடிக்குமா உனக்கு?” என்றான் அவன்.

“ஏன் கேக்கிற?”

“அழகான பொண்ணுங்கன்னா `எனக்கு மழையில நனையுறது பிடிக்கும். மழை பெய்றப்ப பாட்டு கேட்கப் பிடிக்கும். மயில் மாதிரி ஆடப் பிடிக்கும். அது... இது...'னு சொல்றதுதானே ஃபேஷன்.''

அப்போது அவள் தனது சுடிதாரில் ஒட்டிக்கொண்டிருந்த மஞ்சள் பூவை `ஃபூ...' என ஊதிவிட்டு, “எனக்கு மழையைவிட நீ பேசறது ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று கூற...

மைக்கில் “கட்” என்றேன் நான்.

நான் கட் சொன்னவுடன், குமிழ் மரத்துக்கு மேலே பெய்துகொண்டிருந்த செயற்கை மழை நின்றது. லைட்மேன்கள் லைட்டை அணைத்தார்கள்.

`உஷ்...' என அலுத்துக்கொண்ட கேமராமேன் வினோத், “ஜோ... என்ன ஆச்சுடா? அந்தப் பொண்ணு அருமையா நடிச்சுட்டிருக்கு. ரெண்டாவது டேக்கே எனக்கு ஓ.கே. இப்ப எதுக்கு நீ ரீடேக் போய்ட்டே இருக்க?” என்றான்.

வினோத், எனது படத்தின் கேமராமேன் மட்டும் அல்ல; கடந்த பத்தாண்டு கால ரூம்மேட்.

“நல்லா பண்றாடா. ஆனா, அவ அந்தப் பூவ ஊதுற விதம் சரியில்லை.”

“நல்லா, அழகாதான்டா ஊதுறா.”

“இல்லைடா, சைதன்யா இப்படி ஊத மாட்டா” என்றேன் நான்.

சட்டென அமைதியான வினோத் என் அருகில் வந்து, “ஜோ... உன்னோட சொந்த காதல் கதையைத்தான் நீ முதல் சினிமாவா எடுக்குற ஓ.கே... ஆனா, சைதன்யாவோட அதே எக்ஸ்பிரஷன்ஸ தர்ப்பனாவும் காட்டணும்னு எதிர்பார்க்கிறது நியாயம் இல்லைடா” என்றான்.

“தெரியும்டா. இருந்தாலும் எதுக்கு கஷ்டப்பட்டு ஆறு மாசம் தேடி, சைதன்யா சாயல்ல இருக்கிற தர்ப்பனாவைக் கண்டுபிடிச்சேன்? அந்த மேல் உதட்டு மச்சம், சிரிக்கிறப்ப தெரியும் உடைஞ்ச பல், கூர்மையான மூக்கு... எல்லாம் அப்படியே சைதன்யாடா. அவளோட எக்ஸ்பிரஷன்ஸ மட்டும் கொண்டுவந்துட்டா சரியாகிடும்” என்ற நான், தர்ப்பனாவை நோக்கி நடந்தேன். சுற்றி இருந்த அடர்த்தியான மரங்களை சூரியன் ஊடுருவ முயற்சித்துத் தோற்றுக்கொண்டிருந்தது.

ஆடைக்கு மேல் துண்டைப் போத்திக் கொண்டிருந்த தர்ப்பனா, “சார்... மழையில நனைஞ்சு நனைஞ்சு குளிருது. எத்தனை டேக் சார்..!” என்று அழகாகச் சிணுங்கினாள்.

“தர்ப்பனா... நீ நல்லா பண்ற. ஆனா, அந்தப் பூவ ஊதுறப்ப, முழு வாயையும் குவிச்சு ஊதுற. அந்த மாதிரி ஊதக் கூடாது. உதட்டை லேசா கீழ சரிச்சு, மெதுவா ஊதணும்.”

“அப்படி ஊதினா, பூ விழ மாட்டேங்குது சார்.”

“ட்ரை பண்ணு... விழும். காபி சாப்பிடுறியா, குளிருக்கு நல்லாருக்கும்.”

“வேண்டாம் சார், டேக் போலாம்.”

அந்த டேக்கில் தர்ப்பனா ஒரு தவறும் செய்யவில்லை. “ஷாட் ஓ.கே” என்ற நான் தர்ப்பனாவை நோக்கி வேகமாகச் சென்று, “ஃபென்ட்டாஸ்ட்டிக்!” என்றேன்.

“தேங்க் காட்!” என்ற தர்ப்பனா, டவலை வாங்கி தலையைத் துவட்டிக்கொண்டாள். அப்போது நான்கைந்து நீர்த்துளிகள் என் முகத்தில் சிதற, நான் தர்ப்பனாவை உற்றுப்பார்த்தேன். தர்ப்பனா நகர்ந்து, தோதகத்தி மரத்துக்குக் கீழே போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்.

இந்த மலைப்பிரதேசத்தில் முப்பது நாட்கள் ஷெட்யூல். தினமும் இரண்டு கால்ஷீட். மொத்தப் படமும் இங்குதான்.

நான் மீண்டும் தர்ப்பனாவைப் பார்த்தேன். தர்ப்பனா, சென்னையில் இருந்து அவளுடன் துணைக்கு வந்திருக்கும் தனது தோழி தீப்தியுடன் பேசிக்கொண்டிருந்தாள். பேசும்போது தர்ப்பனா தனது காதோர முடிகளால் காதை மூடி, பிறகு முடியை மீண்டும் காதுக்குப் பின்னால் தள்ளிவிட்டுக்கொண்டாள். இது சைதன்யாவின் மேனரிஸம். கடந்த ஒரு வாரமாக, நான் அதை தர்ப்பனாவுக்குச் சொல்லித்தந்து, இப்போது ஷாட் இல்லாதபோதும் அதையே செய்கிறாள். தர்ப்பனா மெள்ள மெள்ள எனது சைதன்யாவாக மாறிக்கொண்டிருந்தாள். அவள் அப்படி மாற... மாற... எனக்கு எப்போதும் தர்ப்பனாவைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்போல தோன்றியது.

ரவு. அந்த ஏரிக்கரைக்கு எதிரில் இருந்த கெஸ்ட் ஹவுஸ் பால்கனியில் உட்கார்ந்து இருந்தேன். ஏரிக்குப் பின்னால் மலை முகடுகள் தெரிய, ஏரியை பனி ஒரு போர்வைபோல் போத்திக்கொண்டிருந்தது. ஏரிக்கரையில் இருந்த யூக்கலிப்டஸ் மரங்களில் இருந்து தைல வாசனை மூக்கைத் துளைத்தது. ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டு, லேப்டாப்பில் கேமரா மெமரிகார்டைச் செருகி, அன்றைய படப்பிடிப்புக் காட்சியைப் பார்த்தேன். மஞ்சள் நிற பூவை `ஃபூ...' என ஊதிவிட்டு “எனக்கு மழையைவிட, நீ பேசறது ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று தர்ப்பனா கூற, அருகில் இருந்த கிளாஸில் ஊற்றியிருந்த பிராந்தியை எடுத்து மடக்கென குடித்தேன்.

அப்போது ஸ்வெட்டர், மங்கி கேப் அணிந்துகொண்டு பால்கனிக்கு வந்த வினோத், “ஷ்... என்னா குளிரு! அதுக்குள்ள ஆரம்பிச்சுட்டியா?” என்று இன்னொரு கிளாஸில் பிராந்தியை ஊற்றினான்.
கம்ப்யூட்டரில் அந்தக் காட்சியை மீண்டும் ஓடவிட்ட நான், “இதைப் பாருடா... இப்படித்தான் சைதன்யா கீழ்க்கண்ணுல பார்த்துக்கிட்டே, கீழ் உதட்டுல ஊதுவா. ஐ ஸீ சைதன்யா இன் தர்ப்பனா!” என்றேன்.
சில விநாடிகள் என்னை உற்றுப்பார்த்த வினோத், “எனக்கு பயமா இருக்குடா.

13 வருஷப் போராட்டத்துக்குப் பிறகு கிடைச்சிருக்கிற படம். ஏதாச்சும் சொதப்பிடாத!”

“என்ன சொதப்புறேன்?”

“நீ தர்ப்பனாவைப் பார்க்கிறப்ப, உன் கண்ணுக்குள்ள யாரோ லைட்டைப் போட்ட மாதிரி ஒரு தனி வெளிச்சம் தெரியுது. வேண்டாம் மாப்ள...”

``ச்சீ... பைத்தியம். தர்ப்பனா 21 வயசுப் பொண்ணு. எனக்கு 35 வயசு ஆகுது.”

“ஆனா, உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே!”

“முட்டாள்... நோபடி கேன் ரீப்ளேஸ் சைதன்யா. அவளோட நினைவுகள், என்னோட ஒவ்வொரு செல்லுலயும் இருக்கு வினோத். இன்னைக்குக் காலையிலகூட ஒரு கனவு கண்டேன், நானும் சைதன்யாவும் பழநியில் எங்க மகளுக்கு மொட்டை போடுற மாதிரி.”

“டேய், சைதன்யாவுக்குக் கல்யாணமாகி எட்டு வருஷம் ஆகுதுடா. நீ இன்னும் உன் கனவுல உங்க பிள்ளைக்கு மொட்டை போட்டுக் கிட்டிருக்க.”

“வினோத், ஒரு காதல் முறியுறப்ப காதலர்கள்தான் பிரியுறாங்க; காதல் அப்படியேதான் இருக்கும்.”

“நீ இன்னும் அவளை நினைச்சுட்டிருக்க. அவளுக்கு உன் நினைப்பு இருக்குமா?”

“இருக்கும்... இருக்கு. கோயம்புத்தூர்ல என் ஃப்ரெண்ட் பிரசாத் ஒருதடவை அவளைப் பார்த்திருக்கான். அப்ப அரை மணி நேரம் ஏதேதோ பேசிட்டிருந்துட்டு, கிளம்புறப்ப என்னைப் பத்தி விசாரிச்சிருக்கா. அப்ப `ஒரு செகண்ட் அவ கண்ணு கலங்குச்சு'னு பிரசாத் சொன்னான். இதைக் கேட்டப்ப எனக்கு மனுஷ்ய புத்திரனோட கவிதை ஒண்ணு ஞாபகம் வந்தது.”

“என்ன கவிதை?”

எங்கிருந்தோ
யாரோ ஒருவரிடமிருந்து

என்ற நான், ஒரு மடக்கு பிராந்தியை விழுங்கிவிட்டு

யாரோ ஒருவரைப் பற்றி அறிவதுபோல
என்னைப் பற்றி
ஏதோ ஒன்றை நீ அறிய நேர்கையில்,
கண்ணீரின் ஒரு துளி பளபளப்பை
முகச் சிவப்பின் ஒரு துளி தீச்சுடரை
யாரும் அறியாமல் மறைத்துக்கொள்ள
அப்போது உனக்கு
ஒரே ஒரு விநாடி தனிமை கிட்டுமா?


என்று சொல்லி முடித்தபோது, பனிப்புகை பால்கனியில் மெள்ள நுழைந்து எங்களைத் தழுவிக்கொண்டது. முந்திரிப்பருப்பை எடுத்து வாயில் போட்டுக்கொண்ட வினோத்,
“ஜோ... என்னைப் பொறுத்தவரைக்கும், காதல்ங்கிறது ஒரு குறிப்பிட்ட வயசுல வர்ற சலனம். அவ்வளவுதான். உன்னை மாதிரி டைரக்டர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள்தான் அதை ஊதிப் பெருசாக்கி, மறுபடியும் மறுபடியும் ரொமான்டிஸைஸ் பண்ணி... சாதாரணமான காதலை காவியமா மாத்த ட்ரை பண்றீங்க.”

“வினோத்... நீ இன்னும் லவ் பண்ணலை. முதல்ல லவ் பண்ணு” என்றேன்.

“அய்யா சாமி... ஆள விடு!” என்று வினோத் என் கால்களைத் தொட்டுக் கும்பிட, நான் சத்தமாகச் சிரித்தேன்.

அந்த ஆரஞ்சு மரத்தடியில் உதிர்ந்து இருந்த வெள்ளைப் பூக்கள், முற்றிலும் தரையை மூடியிருந்தன. பூக்களின் மேல் ஆங்காங்கே சிறிய ஆரஞ்சுப் பழங்கள். பூக்களின்மேல் படுத்து இருந்த ஹீரோ மதனின் நெஞ்சில் சாய்ந்திருந்தாள் தர்ப்பனா.

நான் “சவுண்ட்... ஆக்‌ஷன்!” என்றவுடன் தர்ப்பனா, “ஏய்... நீ என்னை ட்ரூவா லவ் பண்றியா?” என்றாள் மதனிடம்.

“அதுல என்ன சந்தேகம்?”

“அப்பன்னா உன் நெஞ்சுல என் பேரைப் பச்சை குத்திக்கிறியா?”

“பச்சை குத்திக்கிறதா? அய்யய்யோ... பயங்கரமா வலிக்கும்டி!”

“வித்யாவோட லவ்வர்லாம் பச்சை குத்தியிருக்கான். அவ தினமும் சொல்லிச் சொல்லிப் பீத்திக்குறா. அட்லீஸ்ட் எனக்காக இதுகூட செய்ய மாட்டியா?” என்று தர்ப்பனா குழந்தைபோல் அழகாகக் கேட்டாள்.

அப்போது கேமரா அவளை ஜூம்செய்து முகத்தை க்ளோஸ்அப்பில் காண்பிக்க, மானிட்டரில் பார்த்துக்கொண்டிருந்த நான் அசந்துபோனேன். அப்படியே சைதன்யா போலவே குழந்தைத்தனமாகப் பேசுகிறாள்.
தர்ப்பனா, “அப்பன்னா இன்னொண்ணு சிம்பிளா சொல்றேன். ஒரு ஊசியை நெருப்புல காட்டி, அந்த ஊசி நுனியால நெஞ்சுல கிழிச்சு என் பேரை எழுதிக்கிறியா?''

“ஆ...” என்று அலறிய மதன், “ஊசியால நெஞ்சுல கிழிச்சுக்கிறதா? ஏன்டி இப்படி வயலன்ட்டாவே யோசிக்கிற? ஏதாச்சும் சாஃப்ட்டா சொல்லேன்!”

“சாஃப்ட்டான்னா... ம்!” என்று கண்களை அழகாக மூடி யோசித்த தர்ப்பனா, “ம்... இது சாஃப்ட்டா இருக்கும். பிளேடால உன் கையைக் கிழிச்சு, ரத்தத்தால என் பேரை எழுதிக்கிறியா?'' என்று கேட்க, மதன், “கடவுளே... என்னைக் காப்பாத்து!” என்று அலறியபடி ஓட, தர்ப்பனா சிரித்துக்கொண்டே சிறிய ஆரஞ்சுப்பழத்தை, அவன் மேல் விட்டெறிந்தாள். அப்போது தர்ப்பனா அச்சுஅசலாக சைதன்யா போலவே, காதோர முடிகளைப் பின்னால் தள்ளிக்கொண்டு சிரிக்க, அந்தத் துல்லிய விநாடியில் எனக்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது. நான் கட் சொல்ல மறந்து, மானிட்டரில் தர்ப்பனாவையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“டேய்... கட் சொல்றா!” என்று வினோத் சொல்ல, சட்டெனச் சமாளித்துக்கொண்டு மைக்கில் “கட்...” என்றேன்.

“என்ன ஆச்சுடா?” என்றான் வினோத்.

“அவ சிரிக்கிறப்ப அப்படியே சைதன்யா மாதிரியே இருக்குடா” என்று கூற, வினோத்தின் முகத்தில் கவலை ரேகைகள் படிவதை என்னால் பார்க்க முடிந்தது.

நாட்கள் நகர, ஒவ்வொரு நாளும் எப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்தேன். மீசையில் நரைத்து இருந்த நான்கைந்து நரைமுடிகளில் மை தடவிக்கொள்ள ஆரம்பித்தேன். அன்று என்ன ஆடை உடுத்துவது என நீண்ட நேரம் யோசித்தேன். ஷாட் பிரேக்கில் ஹீரோ மதன், தர்ப்பனாவுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததால் கோபம் வந்தது. படப்பிடிப்பு முடிந்த பிறகும், லொக்கேஷனில் தர்ப்பனாவுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். தினம் தினம் பேசினேன்.

“நீ ‘The woman next door’-ங்கிற பிரெஞ்சுப் படம் பார்த்திருக்கியா தர்ப்பனா? பியூட்டிஃபுல் லவ் ஸ்டோரி. அதுல `Neither with you... Nor without you'னு அற்புதமான ஒரு டயலாக் வரும். தமிழ்ல `உன்னோடும் இருக்க முடியாது; நீ இல்லாமலும் இருக்க முடியாது’. ”

“ஏன் அவங்க ஒண்ணா இருக்க முடியாது?”

“ஏன்னா, காதலர்கள் ரெண்டு பேரும் கல்யாணமானவங்க.”

“மை காட்!” என்று புரைக்கேறிச் சிரித்தது தர்ப்பனா அல்ல... என் சைதன்யா.

கெஸ்ட்ஹவுஸை ஒட்டி ஏராளமான ஊதா நிற ரேடியோ பூக்கள் மலர்ந்திருந்த மலைப்பாதையில் நடந்தபடி, “நீ யாரையாச்சும் காதலிச்சிருக்கியா தர்ப்பனா?” என்றேன்.

“ம்... பத்தாங்கிளாஸ் படிக்கிறப்ப ஒரு பையனுக்கு லவ் லெட்டர் கொடுத்தேன். அவன் சரியான பழம். அப்படியே அவங்க அக்காகிட்ட போய்ச் சொல்லிட்டான். அவ என்னைப் பார்த்து, `வயசுப்பையனை நிம்மதியா ஸ்கூலுக்கு அனுப்ப முடியல. இனிமே நீ என் தம்பியை ஃபாலோ பண்ணின, போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்’னு மிரட்டுனா...” என்று சொல்லிவிட்டு, கண்களில் நீர் வரச் சிரித்தது தர்ப்பனா அல்ல... என் சைதன்யா.

ருபது நாட்கள் படப்பிடிப்பு முடிந்தபோது எனக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது, நான் தர்ப்பனாவைக் காதலிக்கிறேன் என்று.

அறைக்கு வெளியே, பெரும் காற்றுடன் பலத்த மழை பெய்துகொண்டிருந்தது. நான்காவது ரவுண்டில் இருந்த நான் கிளாஸில் பிராந்தியை ஊற்றியபடி, “வினோத்... ஐ லவ் தர்ப்பனா” என்றேன் தடாலடியாக.

வினோத்தின் முகத்தில் நான் எதிர்பார்த்த அதிர்ச்சி இல்லை.

“உனக்கு ஓவரா ஏறிடுச்சு. இந்த ரவுண்டை முடிச்சுட்டுப் படுத்துக்க” என்றான் வினோத்.

“விளையாடாத வினோத், நான் சீரியஸா பேசிக்கிட்டிருக்கேன்.”

“அதெல்லாம் சரிவராது ஜோ. உனக்கும் அவளுக்கும் பதினாலு வயசு வித்தியாசம்.”

“இருக்கட்டும். ‘கலாக்ஷேத்ரா’ ருக்மணி தேவி தன்னைவிட 26 வயசு அதிகமான அருண்டேலைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கலையா? இந்தி நடிகர் திலீப்குமார், தன்னைவிட 23 வயசு குறைவான சாய்ரா பானுவைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கலையா?”

“சரிடா... தர்ப்பனா உன்னை லவ் பண்ணணுமே. அதுவும் இல்லாம உனக்கு வந்திருக்கிறது நிஜமான காதல் இல்லை. சைதன்யா கேரக்டர்ல தர்ப்பனா வர்றதால, அப்படி ஒரு ஃபீலிங். ஷூட்டிங் முடிஞ்சா எல்லாம் சரியாப்போயிடும்.”

“போவாது வினோத். பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி சைதன்யாவைக் காதலிச்சப்ப எப்படி இருந்துச்சோ, அப்படி இருக்குது வினோத். தர்ப்பனாவைப் பார்த்தாலே அப்படியே காத்துல மிதக்குற மாதிரி இருக்குடா. அவ என்னைப் பார்த்து சிரிக்கிறப்பலாம், எனக்குள்ள ஒரு மின்னல் போயி வெளியே வருதுடா” என்று நான் சொல்ல, வினோத் பதில் ஒன்றும் சொல்லவில்லை. “என்னடா... ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிற” என்றேன்.

“நல்லா முத்திடுச்சு.”

“யெஸ்... இப்ப அவகிட்ட நான் என் காதலைச் சொல்லப்போறேன்” என்றபடி எழுந்த என் நடை, லேசாகத் தள்ளாடியது.

“டேய்... இவ்ளோ போதையில போய் ரூம் கதவைத் தட்டினா, தர்ப்பனா என்னடா நினைப்பா?”

“இன்னைக்குச் சொல்லியே ஆகணும். இல்லைன்னா மண்டை வெடிச்சு செத்துடுவேன். சொல்றேன்... அவ ஏத்துக்கிட்டா ஓ.கே... இல்லைன்னா வேண்டாம்” என்றபடி வாசலை நோக்கி நடந்தேன்.
“எதுவா இருந்தாலும் இப்ப வேணாம்டா. காலையில பேசிக்கலாம்.”

“நோ...” என்று நான் கதவைத் திறக்க, மழைச்சாரல் சடசடவென என் மேல் அடித்தது. ஏரிக்கரையில் யூக்கலிப்டஸ் மரங்கள் காற்றில் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தன. மழைச்சாரலில் நனைந்தபடி நான் தர்ப்பனாவின் அறையை நோக்கி நடந்தேன்.

“டேய்... வேணாம்டா. எல்லா ரூம்லயும் நம்ம யூனிட் ஆளுங்கதான் இருக்காங்க. யாராச்சும் பார்த்துட்டா வம்பு” என்று வினோத் என் தோளைப் பிடிக்க, நான் அவன் கையைத் தட்டிவிட்டு, தர்ப்பனாவின் அறைக் கதவைத் தட்டினேன். வெளியே காற்றின் விசில் சத்தமும் மழைச் சத்தமும் இணைந்து விநோதமான ஒரு சத்தம் கேட்டது. உள்ளே லைட் எரிந்தது.

“யாரு..?” என்று தர்ப்பனாவின் குரல் கேட்க... “நான்தான்... ஜோ!” என்றேன் சத்தமாக. சில விநாடிகள் தயக்கத்துக்குப் பிறகு கதவு மெதுவாகத் திறந்தது. தர்ப்பனாதான் கதவைத் திறந்தாள். பின்னால் தர்ப்பனாவின் தோழி தீப்தி நின்றுகொண்டிருந்தாள்.

“என்ன சார்... இந்த நேரத்துல?” என்ற தர்ப்பனாவின் கண்களில் மிரட்சி.

“பயப்படாத... எந்தத் தப்பான நோக்கத்துலயும் நான் இங்கே வரலை. உன்கிட்ட கொஞ்சம் பேசணும். அவ்வளவுதான். நான் ரூமுக்குள்ளகூட வரலை... நீ வெளியே வா. அஞ்சே நிமிஷத்துல பேசிட்டுப் போயிடுறேன்” என்றவுடன் மூக்கைத் தடவியபடி தர்ப்பனா, “சார்... நீங்க டிரிங்க் பண்ணியிருக்கீங்க. காலையில பேசிக்கலாமே!” என்றாள்.

“ஆமாம்டா... காலையில பேசிக்கலாம்” என்று வினோத் கூற, “நீ முதல்ல வாய மூடுறா!” என்று

ஆசை முகம் மறந்து போகுமோ - சிறுகதை

கத்தினேன்.

“சார்... ப்ளீஸ். கத்தாதீங்க. யாராச்சும் முழிச்சுக்கப்போறாங்க” என்றாள் தர்ப்பனா பதற்றத்துடன்.

“அப்பன்னா நீ வெளியே வா... அஞ்சே நிமிஷம். ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்” என்று கூற, தர்ப்பனா தயக்கத்துடன் வெளியே வந்தாள். அந்த நீண்ட வராண்டாவின் மூலையில், மழைச்சாரல் மெதுவாகத்தான் விழுந்துகொண்டிருந்தன. நான் சில விநாடிகள் ஒன்றும் சொல்லாமல், எதிரே ஏரியில் விழுந்துகொண்டிருந்த மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். “சொல்லுங்க சார்...” என்ற தர்ப்பனாவின் முகத்தைப் பார்த்தேன்.

“தர்ப்பனா... நீ நடிச்சுட்டிருக்கிறது யார் கதை தெரியுமா?” என்றேன்.

“உங்களோட கதை.”

“என்னோட கதைதான். ஆனா, நிஜமாவே என் வாழ்க்கையில நடந்த கதை.

நீ நடிச்சுட்டிருக்கிற ஒவ்வொரு சீனும் ஒவ்வொரு வசனமும் நிஜம். கற்பனை கலக்காத நிஜம்” என்ற என்னை, தர்ப்பனா வியப்புடன் பார்த்தாள்.

“இந்த மலையும் மழையும்தான் வேற. ஆனா, கதை அதேதான். அப்ப நாங்க ஊட்டியில இருந்தோம். காலேஜ் படிச்சிட்டிருந்தப்ப, சைதன்யா எங்க பக்கத்து வீட்டுக்குக் குடிவந்தாள். ரெண்டு பேரும் லவ் பண்ணோம். நான் படிச்சு முடிச்சவுடனே, சினிமாவுல சேர்றதுக்காக சென்னை வந்துட்டேன். மொத்தம் எட்டு வருஷம் அசிஸ்டன்ட் டைரக்டர். அப்புறம், தனியா படம் பண்ண சான்ஸ் தேடி அலைஞ்சேன். எனக்காக சைதன்யா ரொம்ப நாள் காத்துட்டிருந்தாள். அதுக்குள்ள என்னால ஜெயிக்க முடியலை. அவங்க வீட்டுல நல்ல வசதி. `சினிமாவை விட்டுட்டு ஏதாச்சும் பிசினஸ் பண்ணுங்க. நாங்க பணம் தர்றோம். கல்யாணமும் பண்ணி வைக்கிறோம்'னாங்க. நான் சம்மதிக்கலை. அப்புறம்...” என்ற நான், கலங்கிய கண்களுடன் “அவளுக்கு கல்யாணமாகிடுச்சு” என்றேன்.

“ஸாரி சார்...” என்ற தர்ப்பனாவின் கண்களில் ஒரு பரிதாப உணர்ச்சி.

“அதுக்குப் பிறகு, என் வாழ்க்கையில எந்த பொண்ணும் கிடையாது. ஆனா இப்ப...” என்ற நான் அவளை உற்று நோக்க... அவள் கண்களில் கேள்வி.

“நீ அவ சாயல்லதான் இருக்க. ஷூட்டிங்ல அவ பேசின மாதிரியே பேசுற. அவள மாதிரியே சிரிக்கிற. உன்னைப் பார்க்கிற ஒவ்வொரு செகண்டும், மனசுக்குள்ள யாரோ தீ வெச்ச மாதிரி இருக்கு. நீதான் அந்தத் தீயை அணைக்கணும். ஐ லவ் யூ... அண்ட் ஐ வான்ட் டு மேரி யூ” என்று கூற, தர்ப்பனாவின் முகத்தில் அதிர்ச்சி.

“என்ன சொல்ற... உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” என்றவுடன் தடுமாறிய தர்ப்பனா, “சார்... என்னைவிட உங்களுக்கு வயசு அதிகம்!” என்று இழுத்தாள்.

“அதெல்லாம் இருக்கட்டும். உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா... இல்லையா?”

“சார்... உங்களைப் பிடிக்கும். பிடிக்கும்னா எனக்கு விராட் கோஹ்லியைப் பிடிக்கும். சந்தோஷ் நாராயணன் மியூஸிக் பிடிக்கும். அந்த மாதிரிதான். தட் இஸ் நாட் லவ்!”

“தர்ப்பனா... அவசரப்படாம மெதுவா யோசிச்சு சொல்லு.”

“சார்... இதுல யோசிக்க ஒண்ணும் இல்லை. நான் கம்ப்ளீட்டா வேற ஒரு ஜெனரேஷன். என்னோட எதிர்காலம், உங்க எதிர்காலத்தைவிட அதிகம். அதுக்கு நீங்க சரிப்பட மாட்டீங்க. அதுவும் இல்லாம உங்க மேல எனக்கு காதலும் வரலை.”

நல்ல போதையில் இருந்த நான் சுற்றுப்புறம் மறந்து, “ஏன்..?” என்றேன் சத்தமாக. அப்போது ஓர் அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்க... திரும்பிப் பார்த்தேன். என் உதவி இயக்குநர்கள் நின்றிருந்தனர். அடுத்தடுத்து அறைக்கதவுகள் திறக்கும் சத்தம் கேட்டது. நான் அதை பொருட்படுத்தாமல், “ஏன்..?” என்று மீண்டும் கத்தினேன்.

“ஏன்னா... ஜஸ்ட் ஐ டோன்ட் லவ் யூ!”

“அதான் ஏன்..?” என்று நான் சத்தமாகக் கேட்க, தர்ப்பனா பதில் ஒன்றும் சொல்லாமல் அழ ஆரம்பித்துவிட்டாள்.

என் அருகில் வந்த வினோத், “டேய்... எல்லாரும் எந்திரிச்சுட்டாங்கடா...” என்று கூறிய பிறகுதான் கவனித்தேன். படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் வெளியே வந்திருந்தனர். சட்டென அங்கே தீவிரமான ஓர் அமைதி நிலவ... மழைச்சத்தம் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.

என்னை நோக்கி வந்த புரொடக்‌ஷன் மேனேஜர், “என்ன சார் இது... நடுராத்திரில பொண்ணுகிட்ட தகராறு. புரொடியூஸருக்கு விஷயம் தெரிஞ்சுது... மொத்தப் படத்தையும் நிறுத்திடுவாரு” என்றார்.
“நிறுத்தட்டும்...” என்று நான் கத்தினேன்.

“டேய்... என்னடா! நிறுத்துறதுக்கா இத்தனை வருஷம் கஷ்டப்பட்டோம்? வாடா...” என்று என்னைப் பிடித்து வலுக்கட்டாயமாக அறைக்கு இழுத்துச் சென்றான் வினோத்.

றுநாள் ஏரிக்கரையில் படப்பிடிப்பு. லொக்கேஷனில் இறுக்கமான ஓர் அமைதி நிலவியது. இன்னும் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. யூனிட் வேனில் இருந்து வந்த ஜெனரேட்டர் சத்தம், அந்த இடத்தின் அமைதியைக் குலைத்துக்கொண்டிருந்தது. ஜிம்மி ஜிப்பை ஆர்ம் போட்டு, அசெம்பிள் செய்துகொண்டிருந்தனர். மரத்தடியில் மேக்கப் செய்துகொண்டிருந்த தர்ப்பனாவின் முகம் இயந்திரம்போல் இருந்தது. அந்த இடத்தில் நிற்கவே எனக்கு கஷ்டமாக இருந்தது.

ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். வானம் திடீரென மூடிக்கொண்டு, எந்நேரமும் மழை பெய்யலாம் என பயமுறுத்திக்கொண்டிருந்தது. ஏரிக்கரை மேட்டில் பனிப்புகை மெள்ள தவழ்ந்து கொண்டிருந்தது. நான் புகையை இழுத்து விட்டபோது, சிவப்பு நிற கார் ஒன்று ஏரிக்கரை மேட்டில் வந்து நின்றது. காரின் கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண் இறங்க, அடர்த்தியான பனிப்புகைக்கு நடுவே அந்தப் பெண்ணின் உருவம் சரியாகத் தெரியவில்லை. சில விநாடிகளில் பனிப்புகை மெள்ள விலக... அங்கே நின்றுகொண்டிருந்தது சைதன்யா... என் சைதன்யா. ஒரே விநாடியில் என் மனதில் ஒரு பெரிய காற்றடித்து, அலையடித்து, மழையடித்து ஓய்ந்தது. இவள் எங்கே இங்கே?

பதற்றத்துடன் நான் ஏரிக்கரை சரிவில் ஏறினேன். சைதன்யா நான் வரும் திசையைக் கவனிக்காமல், யூனிட்டாரையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது மழை தூற ஆரம்பிக்க, யூனிட்டார் அருகில் இருந்த ஷெட்டை நோக்கி ஓடினர். நான் மேட்டில் ஏறி, அவள் பின்னால் நெருங்கி... அவளை அழைக்க முயற்சித்தபோது தொண்டை அடைத்தது. சமாளித்துக்கொண்டு “சைதன்யா...” என்று அழைக்க, சட்டெனத் திரும்பினாள்.

என்னைப் பார்த்தவுடன் சைதன்யாவின் கண்களில் முதலில் ஆச்சர்யம். பிறகு, அந்த ஆச்சர்யம் பளபளப்பாக மாறி, அடுத்த விநாடியே அந்தப் பளபளப்பு கண்ணீராக மாறி விழியோரம் வழிய, “ஜோ...” என்ற சைதன்யாவின் குரல் தழுதழுத்தது. இப்போது தூறல் சற்றே வேகமாக விழ, இருவரும் ஒரு வார்த்தைகூட பேசத் தோன்றாமல் பார்த்துக்கொண்டே நின்றோம். ஆனால், உள்ளுக்குள் ஓராயிரம் வார்த்தைகள் பெரிய எழுத்தில் பேசிக்கொண்டிருந்தன.

சைதன்யாவின் முகத்தில் காலம் இன்னும் ஏராளமான அழகை மிச்சம் வைத்திருந்தது. உடல் லேசாக சதை போட்டிருந்தது. அவள் அணிந்திருந்த நீலநிற சுடிதாரின் துப்பட்டா காற்றில் படபடவென பறக்க... “நல்லா இருக்கியா ஜோ?” என்ற சைதன்யா, சட்டெனத் திரும்பி கண்களைத் துடைத்துக்கொண்டாள். எனக்கும் கண் கலங்க... சமாளித்துக்கொண்டு, “இங்கே எப்படி?” என்றேன்.

“மதுரையில என் ஃப்ரெண்டோட தங்கச்சி கல்யாணத்துக்கு வந்திருந்தேன். ஒரு நியூஸ்பேப்பர்ல, இங்கே உன்னோட படம் ஷூட்டிங் நடந்துட்டிருக்கிறதைப் பத்தி போட்டிருந்தாங்க. உன் போட்டோ, பேட்டி எல்லாம் பார்த்தேன். அதுக்குப் பிறகு ஒரு நிமிஷம்கூட கல்யாண வீட்டுல உட்கார முடியலை. நல்லவேளையா, நான் மட்டும்தான் தனியா கார்ல மதுரைக்கு வந்திருந்தேன். கிளம்பி வந்துட்டேன்” என்றாள்.    

காரில் டிரைவர் இல்லாததைக் கவனித்து, “கார் எல்லாம் ஓட்டக் கத்துக்கிட்டியா?” என்றேன். “ம்...” என்ற சைதன்யாவின் முகத்தில் விழுந்த மழைத்துளிகளை அவள் துடைக்கவில்லை.
“தேங்க்ஸ்... இன்னும் என்னை நினைவுல வெச்சிருந்து, இவ்ளோ தூரம் என்னைப் பார்க்க வந்ததுக்கு” என்றவுடன் சைதன்யாவின் முகம் மாறியது.

“கல்யாணம் ஆனா, எல்லாம் மறந்துபோயிடுமா ஜோ? இங்கே ஒவ்வொரு பொண்ணுக்கும் ரெண்டு வாழ்க்கை இருக்கு ஜோ. ஒண்ணு... வெளியே சொஸைட்டிக்காக. இன்னொரு வாழ்க்கை உள்ளே இருக்கும். அந்த வாழ்க்கையை அவங்க கடைசி வரைக்கும், உள்ளுக்குள்ளேயே வாழ்ந்துட்டு செத்துப்போயிடணும்.”

“அந்த உள் வாழ்க்கையில இன்னும் நான் இருக்கேனா சைதன்யா?”

“நீதான் இருக்க... நீ மட்டும்தான் இருக்க ஜோ” என்றவளின் குரலிலும் கண்களிலும், காதலில் தோற்றுப்போன அத்தனை பெண்களின் துயரத்தையும் பார்க்க முடிந்தது.

நான் பேச்சை மாற்ற விரும்பி, “உனக்கு எத்தனை பசங்க?” என்றவுடன் சட்டென அவள் முகத்தில் ஒரு மலர்ச்சி. முன்னாள் காதலனை வேதனையுடன் சந்திக்கும்போதுகூட, காதலிகளிடம் அவர்களின் குழந்தைகளைப் பற்றி பேச ஆரம்பித்தால் முகம் மலர்ந்துவிடுகிறது.

“ரெண்டு பொண்ணுங்க. பெரியவ இப்ப செகண்ட் ஸ்டாண்டர்டு. அடுத்தவ யு.கே.ஜி.”

“அப்பா, அம்மா எல்லாம்...”

“அவங்க யு.எஸ்-ல அண்ணன்கூட இருக்காங்க” என்றபோது மழை பெரிதாக வலுக்க ஆரம்பித்தது.

“மழை பெருசாவுது... உள்ளே போய் உட்கார்ந்துக்கலாம்” என்ற சைதன்யா, காரின் பின் கதவைத் திறக்க... வேகமாக உள்ளே ஏறினோம். அதற்குள் லேசாக நனைந்திருந்தோம். கார் ஸீட்டில் இருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்ட சைதன்யா, அந்தத் துண்டை என்னிடம் நீட்டியபோது, ஏனோ தெரியவில்லை... சந்தோஷமாக இருந்தது. வெளியே ஏரிக்கு எதிர்ச்சரிவில், தேயிலைத் தோட்டங்கள் மழையில் நனைந்துகொண்டிருந்தன.

கார்கண்ணாடியில் மழைநீர், ஒரு மாடர்ன் ஆர்ட்போல் வித்தியாசமான டிசைனில் வழிந்து கொண்டிருந்தது. சில விநாடிகள் சைதன்யாவை உற்றுப்பார்த்த நான், “என்னை எப்பயாச்சும் நினைச்சுப்பியா சைதன்யா?” என்றேன்.

“ம்ஹ்ம்...” என்று கசப்பாகச் சிரித்த சைதன்யா, “நீ ஒரு ஜிமிக்கி வாங்கித் தந்த தெரியுமா? அதைத்தான் இன்னையவரைக்கும் போட்டுக்கிட்டிருக்கேன்” என்றபோதுதான் அவள் காதுகளைக் கவனித்தேன். நான் முதலில் பணிபுரிந்த டைரக்டருடைய இரண்டாவது படத்தின் கதை என்னுடையது. அதற்காக அவர் 25,000 ரூபாய் தந்தார். அந்தப் பணத்தில் வாங்கித் தந்த சிவப்புக் கல் ஜிமிக்கியை, இப்போது சைதன்யாவின் காதுகளில் பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

“இதை இன்னும் பத்திரமா வெச்சிருக்கியா?”

“ம்... ரிப்பேர் பண்ணி ரிப்பேர் பண்ணிப் போட்டுக்குவேன். அது காதுல உரசுறப்ப எல்லாம் உன் கூடவே இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். அப்புறம் வயலெட் கலர்ல ஒரு சுடிதார் வாங்கித் தந்த தெரியுமா? அதை இன்னும் பத்திரமா வெச்சிருக்கேன். இப்ப கொஞ்சம் டைட்டாகிடுச்சு. ஆனாலும் நம்ம காதலைச் சொல்லிக்கிட்ட மார்ச் 5-ம் தேதி, அந்தச் சுடிதாரைத்தான் போட்டுக்குவேன். அன்னைக்கு வீட்டுக் கதவு, ஜன்னல் எல்லாத்தையும் சாத்திட்டு, `ஜோ... ஐ லவ் யூ’னு பைத்தியம் மாதிரி கத்துவேன்” என்றவள் என் கண்களைப் பார்த்து, “ஆமாம்... நான் உனக்கு ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன்ல... அதைப் பத்திரமா வெச்சிருக்கியா?” என்றாள் அவளுக்கே உரிய குழந்தைத்தனத்துடன்.

நான் ஒன்றும் சொல்லாமல் என் கையில் கட்டியிருந்த அந்த டைமெக்ஸ் வாட்ச்சைக் காட்டினேன்.

“குட் பாய்... நீ மட்டும் `இல்லை'னு சொல்லியிருந்தா, உடனே காரைக் கிளப்பிட்டுப் போயிருப்பேன்” என்ற சைதன்யா, கொஞ்சம் கொஞ்சமாக தனக்குத் திருமணமானதை எல்லாம் மறந்து, நாங்கள் காதலித்துக்கொண்டிருந்த காலத்தில் பேசுவதுபோலவே பேச ஆரம்பித்திருந்தாள். எப்படி இந்தப் பெண்களால், அந்தந்த நிமிடங்களில் மட்டும் அப்படி அப்படியே வாழ முடிகிறது?

“கல்யாண மண்டபத்துல நியூஸ்பேப்பரைப் பார்த்ததும், சாப்பிடாமக்கூட வந்துட்டேன். பசிக்குது ஜோ. சினிமாக்காரங்க நல்லா சாப்பாடு போடுவீங்களே... சாப்பிட ஏதாச்சும் கிடைக்குமா?” என்றாள்.
“இப்ப சாப்பாடு ரெடியாகி இருக்காது.”

“நான் பிஸ்கட் வெச்சிருக்கேன்” என்ற சைதன்யா, தன் ஹேண்ட்பேகில் இருந்து Good day பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தாள். நல்ல பசிபோல. ஒரு வார்த்தைகூட பேசாமல், ஒவ்வொரு பிஸ்கட்டாக எடுத்து அவள் சாப்பிட்டுக்கொண்டே இருக்க... நான் புன்னகையுடன் அவளைப் பார்த்தேன்.

“ஏன் சிரிக்கிற?”

“இல்லை... இத்தனை கிலோமீட்டர் காரைப் போட்டுக்கிட்டு, Good day பிஸ்கட் சாப்பிடத்தானே வந்திருக்க... சாப்பிடு!”

“கிண்டல் பண்ணாத நாயே... பசிக்குதுடா!” என்று அவள் வெகு இயல்பாக, `நாயே' `டா' என்றெல்லாம் அழைக்க... எனக்கு சிலிர்த்துப்போனது. பல ஆண்டுகளுக்கு முந்தைய அந்தக் காதல் காலத்துக்குள் மீண்டும் சென்றுவிட்டதுபோல் இருந்தது. பிஸ்கட்டைச் சாப்பிட்டு முடித்துவிட்டு, “ம்... அப்புறம்... டிசம்பர் மாசம், சென்னையில வெள்ளம்னு நியூஸ் பார்த்தப்ப, உனக்கு எதுவும் ஆகக் கூடாதுன்னு உன் பேர்ல அர்ச்சனை பண்ணினேன்” என்றாள்.

“வெறும் அர்ச்சனைதானா? ஏதாச்சும் தீமிதி, மொட்டைன்னு வேண்டிக்கிட்டா இன்னும் நல்லா இருந்திருக்கும்.”

“ம்... வவ்வவ்வே...” என்று சிறுபெண் போல் பழிப்பு காட்டிய சைதன்யாவைப் பார்த்தேன். காதலிகளுக்கு எத்தனை வயதானாலும், தங்கள் காதலனுடன் இருக்கும்போது மீண்டும் பதினெட்டு வயது பெண்ணாகிவிடுகிறார்கள்.

“ஏய்... நானே பேசிக்கிட்டிருக்கேன். நீ என்னை எப்பவாச்சும் நினைச்சுப்பியா?”

“ம்... ‘உயிரே’ பாட்டு கேட்கிறப்ப எல்லாம் உன்னை நினைச்சுக்குவேன்.”

“ஆமாம்... அந்தப் படம்தானே நம்ப ரெண்டு பேரும் ஃபர்ஸ்ட் சேர்ந்து பார்த்தது. 1998-ல. ‘பூங்காற்றிலே... உன் சுவாசத்தை...' பாட்டை டி.வி-யில எப்ப போட்டாலும் ஓடி வந்து பார்ப்பேன். அப்ப நீ மனிஷா கொய்ராலா மேல பைத்தியமா இருப்பீல்ல?”

“இப்பவும் ‘உயிரே’ மனிஷா கொய்ராலான்னா பைத்தியம்தான்” என்றேன் புன்னகைத்தபடி.

“அவங்களுக்கு கேன்சர்னு படிச்சப்ப, உன்னதான் நினைச்சுக்கிட்டேன்” என்றபோது சைதன்யாவின் காதில் ஆடிய ஜிமிக்கிகளை உற்றுப்பார்த்தேன்.

“ஏய்... நீ ஜிமிக்கியைப் பார்க்கிறதைப் பார்த்தா, திருப்பி வாங்கிக்குவ போலருக்கு.”

“இல்லை... அந்த ஜிமிக்கியை நான் ஊதி, ஊதி ஆட வெச்சுப் பார்ப்பேன்ல. அதை நினைச்சுக்கிட்டேன்” என்றவுடன் சைதன்யாவின் கண்களில் ஒரு மின்னல். அவள் ஒன்றும் பேசாமல், சற்று நெருங்கி அமர்ந்து தன் காதைக் காண்பித்தாள். நான் வாயில் காற்றைக் குவித்து ஜிமிக்கியை ஊதினேன். அந்தச் சிவப்புக்கல் ஜிமிக்கி அழகாக ஆட... எங்களை யாரோ  2016-ம் ஆண்டில் இருந்து அப்படியே தூக்கி, 1998-ம் ஆண்டு டிசம்பர் மாத பனிக்காலையில் போட்டதுபோல் இருந்தது.

நான் மீண்டும் அவள் ஜிமிக்கியை ஊதியபோது, என் கையில் ஒரு சொட்டு கண்ணீர்த்துளி விழுந்தது. நிமிர்ந்து பார்த்தேன். அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. அவள் கன்னத்தில் என் சுண்டுவிரலை வைத்து, கண்ணீரை என் விரல் நுனியில் ஏந்திக்கொண்டேன். பிறகு, அவளின் உதட்டருகில் என் சுண்டுவிரலைக் கொண்டு சென்று விரலைச் சுண்ட... கண்ணீர்த் துளி அவள் உதட்டில் தெறிக்க... சைதன்யாவின் முகத்தில் மெல்லிய சோகப் புன்னகை.

“லவ் ஸ்டோரின்னு பேட்டியில சொல்லியிருந்த. நம்ம கதையா?” என்றாள்.

“ம்... எய்ட்டி பெர்சன்ட் நம்ம கதை.”

“அப்ப பாதி சம்பளம் எனக்குத் தந்தாகணும். இன்னைக்கு நம்ம பார்த்ததும் படத்துல வருமா?”

“வராது. க்ளைமாக்ஸ்ல நம்ம கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி முடிச்சிருக்கேன்.”

“கடைசி வரைக்கும் எந்த லவ்வர்ஸையும் எந்தப் படத்துலயும் பிரிக்காத ஜோ...” என்ற சைதன்யா, சட்டென ஜன்னல் பக்கம் திரும்பி கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

வெளியே மழை நிற்க ஆரம்பிக்க... சைதன்யா, “நான் கிளம்புறேன் ஜோ. நைட்டுக்குள்ள நான் ஊர்ல இருக்கணும்” என்றாள். மனம் சட்டென பாரமாக, “ம்... இப்ப கிளம்பினாத்தான் சரியா இருக்கும்” என்றேன்.

“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ ஜோ. ஆனா, என்னைவிட அழகான பொண்ணக் கட்டிக்கிட்ட... தொலைச்சுடுவேன். கொஞ்சம் சுமாரான பொண்ணாப் பார்த்துக் கட்டிக்கோ” என்றவள் கார் கதவைத் திறந்து இறங்கினாள். முன் கதவைத் திறந்து டிரைவர் இருக்கையில் அமர்ந்தாள். சாலையில் நின்றுகொண்டிருந்த என் கையைப் பிடித்து அழுத்திய சைதன்யா, “டேக் கேர்... பை!” என்றாள்.
நான், “பை... பத்திரமா போ” என்று கூற, கார் மெள்ள நகர்ந்தது.

சிவப்பு நிறப் பூக்கள் அடர்த்தியாகப் பூத்திருந்த அந்த குல்மொஹர் மரத்து வளைவில் திரும்புவதற்கு முன்னர், சைதன்யா ஒருமுறை திரும்பி என்னைப் பார்க்க... அந்த ஒரு காட்சியை மட்டும், அப்படியே வாழ்நாள் முழுவதும் கண்களிலேயே வைத்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

இப்போது மானிட்டரில் நான் தர்ப்பனாவைப் பார்த்தபோது, தர்ப்பனா அந்நியமாகத் தெரிந்தாள். படப்பிடிப்பு முடிந்தவுடன் அவளிடம் `ஸாரி' கேட்க வேண்டும்!