Published:Updated:

சம்ரிஷ்தாவின் நாய்க்குட்டி

சம்ரிஷ்தாவின் நாய்க்குட்டி
பிரீமியம் ஸ்டோரி
சம்ரிஷ்தாவின் நாய்க்குட்டி

சிறுகதை: காலபைரவன், ஓவியங்கள்: செந்தில்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

சம்ரிஷ்தாவின் நாய்க்குட்டி

சிறுகதை: காலபைரவன், ஓவியங்கள்: செந்தில்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

Published:Updated:
சம்ரிஷ்தாவின் நாய்க்குட்டி
பிரீமியம் ஸ்டோரி
சம்ரிஷ்தாவின் நாய்க்குட்டி
சம்ரிஷ்தாவின் நாய்க்குட்டி

``தொடர்ந்தாப்ல ஸ்கூல வெச்சு ஏன்தான் உயிர வாங்குறாங்களோ'' என்று அலுத்துக்கொண்டாள் சம்ரிஷ்தா. படுக்கை அறையில் இருந்து அவளை எழுப்பி, கூடத்துக்கு அழைத்துவருவது பெரும்பாடாக இருந்தது அப்பாவுக்கு.

``பின்ன எப்படி ஸ்கூல் வைக்கிறதாம்?'' என்று அவளிடம் கேட்டார்.

``திங்கள்-செவ்வாய் ஸ்கூல், புதன் லீவு; வியாழன்-வெள்ளி ஸ்கூல், சனிக்கிழமை லீவு'' என்று கூறினாள். குரலில் அவ்வளவு சந்தோஷம்.

``அப்ப, ஞாயித்துக்கிழமை ஸ்கூல் வைக்கலாமா?'' என்று கேட்டார்.

``லூஸாப்பா நீ? ஞாயித்துக்கிழமை வார விடுமுறைனுகூடவா தெரியாது உனக்கு?'' - அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்.

``சரி... சரி. பேசினது போதும். குளிச்சுட்டுக் கிளம்பு'' என்று அவர் அதட்டினார்.

பள்ளிக்குச் செல்லும் வழியில் செட்டியார் கடையில் நிறுத்தி, தின்பதற்கு ஏதாவது வாங்கிக்கொள்ள வேண்டும் அவளுக்கு. தின்பண்டத்தைத் தாண்டி செட்டியார் பேரன் வளர்க்கும் நாயையும் பூனையையும் பார்க்க வேண்டும்; அவற்றை வருடிவிடவேண்டும். செட்டியார் வீட்டு அம்மா, அவற்றை வாரி எடுத்து சம்ரிஷ்தாவின் கைகளில் திணிப்பாள். அவள் முகத்தில் சந்தோஷம் கொப்பளித்துக்கொண்டு வரும். பற்கள் முழுவதும் தெரியச் சிரிப்பாள். அந்தச் சந்தோஷம் வடிவதற்குள்ளாக அவளை பள்ளிக்கூடத்துக்குள் அனுப்பிவிட வேண்டும்.

``இன்னும் ஒரு வாரத்துக்குள்ள எனக்கு நாய்க்குட்டி வந்தாகணும். அப்பதான் நான் ஸ்கூலுக்குப் போவேன்'' என்று ஒருநாள் திடமாகச் சொன்னாள்.

அவருக்கு ஆத்திரம் வந்தது. ``பள்ளிக்கூடம் போலன்னா பரவாயில்லை. பன்னி வாங்கித் தர்றேன் போய் மேய்'' என்று கோபத்துடன் கத்தினார்.

``வெள்ளப் பன்னியா வாங்கி விடு'' என்று சொல்லிக்கொண்டே தெருவுக்கு ஓடினாள். நின்றால் அடி விழும் என அவளுக்குத் தெரியும்.

``இவளை என்னதான் பண்றதோ!'' என்று அம்மா அலுத்துக்கொண்டாள்.

``எல்லாம், நீ கொடுக்கிற எடம்'' என்று அவள் மேல் எரிந்து விழுந்தார்.

ந்த வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை, பக்கத்து நகரத்துக்கு அவளை அழைத்துச் சென்றார். நண்பர்களிடம் முன்னரே விசாரித்து வைத்திருந்தார். அவர்கள் திருக்கோவிலூர், வேட்டவலம் மற்றும் தல்லாகுளம் ஆகிய ஊர்களில் உள்ள கடைகளின் முகவரிகளை அளித்திருந்தனர். தல்லாகுளம் அருகே இருக்கும் கடையைத் தேர்வுசெய்திருந்தார். கடை விஸ்தாரமாக இருந்தது. பறவை  இனங்கள், வீட்டு விலங்குகள், மீன் வகைகள் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பார்ப்பதை எல்லாம் வாங்கச் சொல்லி அவள் மனம் அடம்பிடித்தது.

``என்ன வேணும்... சட்டுனு சொல்லு'' என்றார்.

``ஒரு நாய்க்குட்டி, ஒரு பூனை போதும்'' என்றாள். குரலில் குதூகலம் தென்பட்டது.

``நாய் வேணாம், பூனை மட்டும் வாங்கிக்க'' என்றார்.

``ஏன் நாய்க்குட்டி வேணாம்?'' என்று எதிர்த்துக் கேட்டாள்.

``வேணாம்னா விட்டுட்டு, சொல்றதைச் செய்'' என்று அதட்டினார். அவள் அடம்பிடிக்கத் தொடங்கினாள். என்ன சொன்னாலும் அவள் அடங்கப்போவது இல்லை என்று ஒருகட்டத்தில் அவருக்குத் தோன்றியது.

``சரி, ஒழிஞ்சி போ!'' என்று அலுத்துக்கொண்டார்.

சந்தோஷத்துடன் நாய்க்குட்டிகளை மெதுவாக நோட்டம்விடத் தொடங்கினாள். அனைத்தும் அவளுக்குப் பிடித்திருந்தன. `அனைத்தையும் வாங்கிக்கொடுத்தால் எப்படி இருக்கும்?' என மனதுக்குள் நினைத்துப்பார்த்தாள். அவரை நிமிர்ந்து பார்த்து, `இந்த மூஞ்சா வாங்கித் தரும்?' என்று முணுமுணுத்துக்கொண்டு ஒவ்வொரு நாய்க்குட்டியாக ஆராயத் தொடங்கினாள். வெளிர் சாம்பல்நிற நாய்க்குட்டி அவளுக்குப் பிடித்துப்போனது. உற்சாகத்தோடு அதை வாரி எடுத்தாள். புசுபுசுவென இருந்தது.

``இதை எடுத்துக்கிறேன்'' என்றாள்.

கடை உரிமையாளரிடம் ``எவ்ளோ?'' என்று கேட்டார்.

``ஆயிரத்து ஐந்நூறு சார்'' என்று பதில் வந்தது.

``புலிக்கா வெல சொல்ற... நாய்க்குட்டிதான வாங்குறோம்?'' என்று இவர் திருப்பிக் கேட்டார். அவளுக்கு சிரிப்பு வந்தது.

வீட்டுக்கு நாய்க்குட்டி வந்ததில் இருந்து அவள் உலகம் முற்றிலும் மாறிப்போனது. தெருவுக்குச் சென்று விளையாடுவது குறைந்தது. அவளைத் தேடிவரும் தோழிகளிடம் நாய்க்குட்டியைக் காண்பித்து சந்தோஷப் பட்டாள்.

``செண்பகத்துகிட்ட போய் சொல்லுங்கடி... ஒரு ஏரோபிளேன் வெச்சுக்கினு என்னமா அச்சம் காட்னா!'' என்று அவர்களிடம் கூறினாள். அனைவரும் தலையாட்டினர்.

தான் சாப்பிடப்போகும் நேரத்தில் நாய்க்குட்டியையும் அழைத்து உணவு அளித்தாள். இரவு படுக்கச் செல்லும்போது தன் பக்கத்தில் ஒரு போர்வையை மடித்து அதன் மேல் படுக்கவைத்துக் கொண்டாள்.
``அத சுதந்திரமாக இருக்க விடுடி'' என்றாள் அம்மா.

``நீ பாட்னு உன் வேலையைப் பாறேன்மா!'' என்று வார்த்தைகளை நீட்டி முழக்கினாள்.

``அதுகிட்ட இருந்து உனி உன் மேல ஏறிக்கப்போவுது பார்த்துக்கினே இரு'' என்றாள் அக்கா.

``அத நான் பாத்துக்கிறேன். மொதல்ல உன் தலையில அப்பிக்கினு இருக்கிற பேனை எடுடி'' என்று தன் அக்காவின் வாயை அடைத்தாள்.

சம்ரிஷ்தாவின் பேச்சு, அம்மாவுக்கு சிரிப்பை வரவழைத்தது. சிரித்தால் பெரியவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் என்பதால், அடக்கிக் கொண்டாள்.

நாட்கள் வேகமாக நகர்ந்து சென்றன. நாயுடனான பிணைப்பு வலுப்பட்டது. கடைக்கு அழைத்துச் செல்வது; பாட்டி வீட்டுக்குச் செல்லுகையில் துணைக்கு அழைத்துச்செல்வது என நாயின்றி அவள் இல்லை என்றானது.

``தம்பி இல்லாத குறையைப் போக்குதுடி'' என்று சிவகலைப் பாட்டி அடிக்கடி சொல்லும்.

``அது பொட்ட நாயி கெழவி!'' என்று வெடித்துச் சிரித்தாள்.

அன்று இரவும் அப்பாவிடம் கேட்டாள், ``நாய் மட்டும் வேணாம்னு ஏன்பா சொன்ன?''

``இப்ப ரொம்ப முக்கியமான கேள்வி இது. போத்திக்கினு ஒழுங்காத் தூங்கு'' என்று அதட்டினார். அவள் விடுவதாக இல்லை. தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தாள்.

``தொணதொணனு பேசுறத நிறுத்து முதல்ல. அப்புறம் நான் சொல்றேன்'' என்று கூறியவுடன் அவர் மனதில் பழைய நினைவுகள் மேலெழும்பத் தொடங்கின.

டி மாதம் தொடங்கியிருந்தது. முதல் ஆடி வெள்ளிக்கிழமை அன்று. ஊர் கூடி ஆத்திலியம்மனுக்குப் பொங்கல் வைத்து, படையலிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். மந்தைவெளி நாடக மேடையில் நாடகத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கியிருந்தன. செல்வி பொங்கல் கூடையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும்போது மணி எட்டை நெருங்கியிருந்தது. தெருத் திண்ணையில் படுத்திருந்த நாய், பசியால் குரைத்துக்கொண்டிருந்தது. பொங்கல் கூடையை பூஜை அறையில் இறக்கி வைத்துவிட்டு, கூடத்துக்கு வந்தாள். சமையலறையில் இருந்து கருவாட்டுக் குழம்பின் மணம் வீடு முழுக்கப் பரவியது. நாய், கூடத்துக்கு வந்து அவளைப் பார்த்துக் குரைத்துக்கொண்டே இருந்தது. இவள் அதட்டினாள்.

``சத்தம் போடாம திண்ணையில போய்ப் படு. படைச்சதும் சோறு வைக்கிறேன்.''

அவள் அதட்டலுக்குக் கட்டுப்பட்டு திண்ணையில் சென்று படுத்துக்கொண்டது.

பூஜை அறையில் தரையைத் துடைத்து எண்ணெயை வட்டமாகத் தடவி அதன் மீது சாதம், கருவாட்டுக் குழம்பு, கீரை ஆகியவற்றைப் போட்டுப் படைத்து முடிக்கும்போது மணி ஒன்பதைக் கடந்திருந்தது. நாடகம் தொடங்க இருப்பதற்கான அறிவிப்பு தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. திண்ணையில் படுத்திருந்த நாய், பசியினால் குரைத்துக்கொண்டிருந்தது.

``இன்று நடைபெற இருக்கும் நாடகத்தின் பெயர் சொல்லப்போறேன். சைலேன்ஸ்... சைலேன்ஸ்!'' என்று கட்டியக்காரன் பேசுவது துல்லியமாகக் கேட்டது. அவள் ஒரு கிண்ணத்தில் சாதத்தை எடுத்துக்கொண்டு தெருத் திண்ணைக்கு வந்தாள். ``இன்றைக்கு நடக்க இருக்கும் நாடகத்தின் பெயர் சொல்றேன் கேட்டுக்குங்க, சீதா கல்யாணம் அல்லது ராமர் பட்டாபிஷேகம்'' கட்டியக்காரனின் குரல் தெளிவாகக் கேட்டது. கட்டியக்காரன் பாப்பனப்பட்டு முருகனாக இருக்கலாம் என, குரலைவைத்து அடையாளப்படுத்திப் பார்த்தாள்.

நாய் கத்திக்கொண்டே இருந்தது. அவள் திண்ணையை நெருங்கும்போது மின்சாரம் தடைபட்டது. சட்டென எங்கும் இருள் சூழ்ந்தது. ஒன்றும் தெரியவில்லை. அவள் சிந்தனை முழுக்க நாடகத்தின் மீதே இருந்தது. நாயைச் சாப்பிட அழைத்தாள். இருளில் தட்டு இருக்கும் இடம் தெரியாமல் அது அலைமோதி பின்னர் கண்டடைந்தது. செல்வி, சாதத்தை உருட்டி தட்டுக்குக் கொண்டுசெல்வதற்குள் அது உணவை எக்கிக் கவ்வியது. பசி அவசரத்தில் அவள் இரண்டு விரல்களை நன்றாகக் கடித்துவிட்டது. தட்டைப் போட்டுவிட்டு அவள் வலியால் துடித்து அழுதாள்.

அலறி அடித்துக்கொண்டு தெருவுக்கு ஓடிவந்தாள். ``அம்மா... நாய் கடிச்சுடுச்சுமா'' என்று

சம்ரிஷ்தாவின் நாய்க்குட்டி

அழுதுகொண்டே சொன்னாள். தடைபட்டிருந்த மின்சாரம் வந்தது. கடிபட்ட இடத்தில் இருந்து ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. சிந்தியிருந்த உணவுகளை நாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. வீட்டைப் பூட்டிக்கொண்டு நாடக மேடைக்கு அருகில் சென்று, தன் கணவரைத் தேடினாள் அம்மா. அவர் நாடகத்தில் லயித்திருந்தார். சதாசிவம்தான் அவர்களைப் பார்த்துவிட்டு அவரிடம் சொன்னார். அவர் எழுந்துவந்து அழுதுகொண்டிருந்த மகளைப் பார்த்தார். கடிவாயை கைவிளக்கின் வெளிச்சத்தில் கூர்ந்துபார்த்தார். பல் ஆழப் பதிந்திருப்பது நன்றாகத் தெரிந்தது. அவர்களைச் சுற்றி சிறு கூட்டம் கூடியது. விஷயம் கேள்விப்பட்டு லட்சாதிபதி மாமா எழுந்து வந்தார். விளக்கு வெளிச்சத்தில் கடிவாயைப் பார்த்துவிட்டு ``நீ உட்கார்ந்து நாடகம் பாருமா. தோ போய் மருந்து பறிச்சுட்டு வர்றேன்'' என்று சொல்லிவிட்டு, கை விளக்கை எடுத்துக்கொண்டு குளத்துமேட்டுப் பக்கம் சென்றார். விஷக்கடிகளுக்கு பச்சிலை மருந்து கொடுப்பதில் கைதேர்ந்தவர்.

சிறிது நேரத்துக்குள் திரும்பிவந்தார். கொண்டுவந்திருந்த பச்சிலைகளை உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, சிறு உருண்டையைப்போல பிடித்து அவள் வாயில் போட்டார். அவளுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. தண்ணீர் கேட்டாள். அருகில் இருந்த அகிலாண்டம் ஆயா எடுத்துக் கொடுத்தாள்.

``இப்ப எப்படிம்மா இருக்கு?'' என்று அவர் கேட்டார்.

``வாய் எல்லாம் ஒரே கசப்பா இருக்கு மாமா'' என்றாள்.

``தூங்காம நாடகம் பாரு. கொஞ்ச நேரத்துல சரியாகிடும்'' என்று சொல்லிவிட்டு, தன் இடத்துக்குச் சென்று நாடகம் பார்க்கத் தொடங்கினார்.

நான்கு நாட்கள் கழிந்த நிலையில் செல்விக்குக் கடுமையான காய்ச்சல் அடிக்கத் தொடங்கியது. ஒரு ரூபா டாக்டர் வந்து ஊசி போட்டுவிட்டுச் சென்றார். காய்ச்சல் குறைந்தபாடில்லை. காய்ச்சல் கூடிக்கொண்டே இருந்தது. பினற்றத் தொடங்கினாள். சாயங்காலவாக்கில் நொடிப்பு ஏற்பட்டு கை-கால்கள் இழுத்துக்கொள்ளத் தொடங்கின. அம்மா தேம்பித் தேம்பி அழுதாள். வயக்காட்டில் இருந்த சட்டாம்பிள்ளைக்குச் செய்தி போனது. அவர் சீக்கிரமே வீடு திரும்பினார். நேராக அங்கே சென்றார். செல்வியை உன்னிப்பாகப் பார்த்தார். அவள் கண்களை விரித்து ஊடுருவிப் பார்த்தார். ``கொஞ்சம் விபூதி கொடுமா'' என்றார். அம்மா எடுத்துவந்து கொடுத்தாள். அதை மந்திரித்து செல்வியின் நெற்றியில் பூசினார். ``பாடம் அடிச்சா சரியாயிடும்மா. நாளைக்கு காலையில கோயிலுக்குக் கூப்பிட்டு வாங்க'' என்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

மறுநாள் காலையிலேயே செல்வியைக் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். சட்டாம்பிள்ளை, கையில் வேப்பிலை யோடு நின்றுகொண்டிருந்தார். செல்வியின் தலையில் ஒரு குடம் தண்ணீரை எடுத்து ஊற்றினார். விபூதியை எடுத்து மந்திரித்து நெற்றியில் பூசினார். பம்பை, உடுக்கையை வாசிக்கச் சொன்னார். பம்பைச் சத்தம் அந்த இடத்தையே சூனியமாக மாற்றியது. சட்டாம்பிள்ளை, அருள் வந்தவர்போல ஆடத் தொடங்கினார்; பற்களை நறநறவெனக் கடித்துக்கொண்டார். கையில் வைத்திருந்த வேப்பிலையை அவள் உச்சந்தலையில் வைத்தபோது அவள் உடம்பு துள்ளிக்குதித்தது. தொடர்ந்து மந்திரித்துக்கொண்டே இருந்தார். பம்பையும் உடுக்கையும் ஓய்ந்தபோது அவர் தளர்ந்து கீழே சரிந்தார். குடிக்க ஒருவர் தண்ணீர் கொடுத்தார். ஆசுவாசப்படுத்திக்கொண்டு ``பாப்பா, கீழக்காட்டு பக்கம் எப்பாவது போயிருக்காமா?'' என்று கேட்டார்.

``ஆமாங்க சாமி. வெறவு பொறுக்கப் போயிருந்தது'' என்று பதற்றத்துடன் அம்மா கூறினாள். அவர் கண்களை மூடி யோசித்தார். ``மூணு நாளைக்கு கோயில்லயே தங்கி பாடம் அடிச்சா செரியாயிடும்மா'' என்றார்.

ஐந்தாம் நாள் மதியம் மந்திரித்துக் கொண்டிருக்கும்போதே செல்வி நாய்போல கத்தத் தொடங்கினாள். அவளுடைய நாக்கு வெளித்தள்ளி உமிழ்நீர் சொட்டிக்கொண்டிருந்தது. அவர் விடாமல் வேப்பிலையால் பாடம் அடித்துக்கொண்டே இருந்தார்.

ரங்கநாதன் ஆசிரியர் செல்வியின் அப்பாவை அழைத்து ``ஏங்க, கோரிமோட்டுக்குக் கூட்டுப்போய்ப் பாருங்க'' என்றார். இவருக்கும் அது சரி எனப் பட்டது. அம்மாவுக்குத் துளியும் அதில் இஷ்டம் இல்லாமல் இருந்தது. கடைசியில் அன்று மாலை செல்வியை அழைத்துக்கொண்டு கோரிமேட்டுக்குக் கிளம்பினர். டயர் வண்டியில் ஏறும்போது உடம்பை முறுக்கி நாயைப்போல கத்தினாள். திரண்டிருந்தவர்கள் வயிற்றில் பீதியை ஏற்படுத்தியது.

சிகிச்சை பலனின்றி ஆடிப் பதினெட்டு அன்று செல்வியின் பிரேதம் ஒரு ஆம்புலன்ஸில் வீடு வந்து சேர்ந்தது.

ன்னை அறியாமல் அழுதுகொண்டிருக்கும் தந்தையைச் சீண்டி அழைத்தாள் சம்ரிஷ்தா. அவளின் தொடுகை பழைய நினைவுகளில் இருந்து அவரை மீட்டெடுத்தது. கண்களில் இருந்து வழிந்த நீர் கன்னத்தில் உருண்டு தரையைத் தொட்டது. படபடப்பாக இருந்தது அவருக்கு. முகத்தைத் துடைத்துக்கொண்டு புரண்டு படுத்தார்.

செல்வி அத்தையின் கதையைக் கேட்டதும் அவள் மனம் கனத்துப்போனது. மனம் முழுக்க பயம் கவ்வியது. முதன்முதலாக நாய்க்குட்டியின் குரைப்பொலி அவளைத் தூங்கவிடாமல் செய்தது. வெகுநேரத்துக்கு உறக்கம் வராமல் புரண்டு படுத்தாள். கூடத்தில் மாட்டப்பட்டிருந்த செல்வி அத்தையின் புகைப் படத்தைப் பார்க்கும்போது எல்லாம், அத்தையின் நினைவுகள் பெருகி மனதை அடைத்துக்கொள்ள தொடங்கின. அந்தச் சிந்தனை தோன்றினால் சம்ரிஷ்தாவுக்கு உடம்பில் நடுக்கம் பரவத்தொடங்கும். என்ன செய்தும் அவளால் அத்தை பற்றிய சிந்தனையில் இருந்து மீளவே முடியவில்லை. நாய்க்குட்டியிடம் இருந்து மெள்ள விலகத் தொடங்கினாள்.

ஒருநாள் காலை தன் வீட்டு படிக்கட்டின் கீழ் நாய்க்குட்டி இருப்பதற்கான இடத்தை ஏற்பாடு செய்தாள். அவள் நடவடிக்கைகளை அனைவரும் கூர்ந்து பார்த்தனர். அப்பா மட்டும் கேட்டார்.
``ஏன் என்ன ஆச்சு... நாய்க்குட்டியை இங்க கொண்டாந்து விடுற?''

அலட்டிக்கொள்ளாமல், ``சும்மாதான்பா'' என்று கூறினாள்.

நாய்க்குட்டி இருக்கும் இடத்திலேயே ஒரு பிளாஸ்டிக் தட்டை வைத்து பாலை ஊற்றினாள். தான் சாப்பிட்ட மீதங்களை எடுத்துச் சென்று அதற்கு வைத்தாள். தனக்கும் அதற்குமான உறவை மெள்ள விலக்கியபடி இருந்தாள். ஆனாலும் அது அவள் எதிரில் வந்து வாலை ஆட்டிக்கொண்டிருந்தது. அவளைப் பின்தொடரவும் செய்தது. ஆனால், அதன் செயல்கள் சம்ரிஷ்தாவுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தின.

ஒருநாள் அதிகாலை. அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். வழக்கம்போல அவள் தலைமாட்டில் நின்று அது குரைத்துக்கொண்டே இருந்தது. அதன் சத்தம் தூக்கத்தைக் கலைத்தது. தூங்கும்போது யார் எழுப்பினாலும் எரிந்துவிழுவாள். கோபத்தோடு எழுந்தவள். நாய்க்குட்டியை வாரி எடுத்து விட்டெறிந்தாள். அது கூடத்தில் போய் விழுந்தது. வலி தாங்காமல் நெடுநேரம் கத்திக்கொண்டிருந்தது. அம்மாவைப் பார்த்துக் கத்தினாள்.

``யாராவது அந்தச் சனியனைத் தூக்கினு போய் எங்கேயாவது விட்டுட்டு வாங்க.''

``அது பாட்டுக்கினு ஒரு ஓரமா இருக்கட்டுமா'' என்று அம்மா கூறினாள்.

சம்ரிஷ்தா அவளை நிமிர்ந்து பார்த்தாள். அலட்சியப் படுத்திவிட்டு தோட்டத்துக்குச் சென்றாள்.

அவள் விலகிச் சென்றாலும் அது அவளை விடாமல் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. அவள் சாப்பிட உட்கார்ந்தவுடன் அது படிக்கூண்டில் இருந்து வெளியே வந்து குரைக்கத் தொடங்கும். பின்னர் படுக்கை அறைக்குச் சென்று குரைக்கும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் அதை வெளித்தள்ளி கதவை ஓங்கிச் சாத்துவாள். கதவின் ஓரமாக நின்று இரவு முழுக்க அது சன்னமாகக் குரைத்துக்கொண்டிருக்கும். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பாள். மற்றவர்கள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருப்பார்கள்.

அம்மாவை மெதுவாகச் சீண்டி ``தூக்கம் வரலமா. அது கத்துறது எரிச்சலா இருக்கு. அதை எடுத்துட்டுப் போயி தெருவுல விட்டுட்டு வாமா'' என்றாள்.

``இந்த நேரத்துலயா? மணி பதினொண்ணு ஆகுது. போத்திக்கினு படு. காலையில கொண்டுபோய் விடலாம்'' என்று அம்மா கூறினாள்.

மூன்று நாட்கள் பொறுத்திருந்து பார்த்தாள். யாரும் நாய்க் குட்டியைக் கொண்டுவிடுவதாகத் தெரியவில்லை. தன் வீட்டுக்கு பாத்திரம் துலக்க வரும் ஆயாவிடம் சொல்லிப் பார்த்தாள். அவள் ``அப்படி செய்யறது பாவம்மா!'' என்று மறுத்தாள்.

``அதுலாம் ஒண்ணும் இல்லை'' என்று பாட்டியை எதிர்த்து பேசினாள்.

``ஆமா... நீ பெரிய பாட்டி! பாவம் புண்ணியம் எல்லாம் உனக்கு அத்துபடி'' என்று சிரித்துக்கொண்டே அவள் பாத்திரம் துலக்கத் தொடங்கினாள்.

வார விடுமுறை நாட்களில் சீக்கிரமே எழுந்து தெருவுக்கு வந்துவிடும் சம்ரிஷ்தா, பள்ளி நாட்களில் எட்டு, எட்டே கால் வரைக்கும் தூங்கிக்கொண்டிருப்பாள். அதுதான் அவள் வழக்கம். தன்னுடைய தூக்கத்தை நாய்குட்டியின் குரைப்பொலி குலைத்துப்போடுவதாக உணர்ந்தாள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய வேளை வந்துவிட்டது என்று உணர்ந்தாள். தீவிரமாக யோசித்தபடி, ``ஒரு கட்டைப்பை கொண்டு வாயேன்'' என்றாள் அக்காவிடம்.

``ஏன்?''

``கொண்டு வா சொல்றேன்'' - அக்கா கொண்டுவந்து கொடுத்தாள்.

``ஏய் அதைப் புடிச்சு இந்தப் பையில போடேன்'' என்றாள். `உஸ்..!' என்று விரலை உதடுக்கு மேலாக வைத்து அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினாள். அது அகப்படாமல் போக்கு காட்டி ஓடியது. துரத்தி அதைப் பிடித்துவந்து பைக்குள் போட்டாள். நாயக்குட்டி பைக்குள் வந்ததும் பையை நன்றாகச் சுருட்டிக்கொண்டாள்.

``என்கூட வாயேன்'' என்று அவளை அழைத்துக்கொண்டு மணியம் தெருவில் இறங்கி நடந்து ஓடைக்குச் செல்லும் பாதையில் நுழைந்தாள். சம்ரிஷ்தா எங்கே செல்கிறாள் என்பது புரியாமல் அக்கா நடந்து கொண்டிருந்தாள். முருகன் கோயில் பாறை மீது ஏறி, வாசியம்மன் கோயில் பாதையை அடைந்தாள். இலுப்பைமரங்கள் அடர்ந்து காணப்பட்டன. சிதிலமான குதிரை சிலைகள், அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தின. இலுப்பை மரங்களைத் தாண்டிச் சென்று வளமோட்டுப் பாறைக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையைத் தொட்டாள். சரளைக் கற்களாக விரவிக்கிடந்த பாதையில் ஓர் இடத்தில் கள்ளிச்செடிகள் நிறைந்து புதர்போல இருந்தது. அதன் பின்னால் சென்று பையைத் திறந்து அதை வெளியே துரத்தினாள். அது திகைப்புடன் எங்கும் செல்லாமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தது. அவள் காலால் எந்தித் தள்ளினாள். இறுதியில் அது புதருக்குள்ளாக ஓடி மறைந்தது. இருவரும் வீட்டுக்குத் திரும்பும்போது நன்கு இருட்டியிருந்தது.

சம்ரிஷ்தாவுக்கு மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அவளுக்குச் சாப்பிடத் தோன்றவில்லை. பால் மட்டும் அருந்திவிட்டு படுக்கைக்குச் சென்றாள்.


``நா என்ன பாவம் செய்தேன்... என்னை ஏன் இப்படி பண்ணே?'' என்று நாய்க்குட்டி சம்ரிஷ்தாவைப் பார்த்துக் கேட்டதும் அவளுக்குத் தூக்கிவாரிப்போட்டது. ஆச்சர்யமாக இருந்தது.

``உன்னால எப்படி பேச முடியுது?!'' என்று நாய்க்குட்டியைப் பார்த்து திகைப்புடன் கேட்டாள்.

அது மெல்லிய புன்னகையுடன் ``பச்செலை பறிச்சு சாப்பிடேன்'' என்றது.

நாய்க்குட்டி புன்னகைக்கிறது; பேசுகிறது. தன்னை ஒருமுறை கிள்ளிப்பார்த்துக் கொண்டாள்.

``பச்செலையா?'' என்று திருப்பிக் கேட்டாள். அது தலையை ஆட்டியது.

``நம்ம ஊர்ல பச்செலை இருக்கா?''

அதற்கும் தலையாட்டியது நாய்க்குட்டி.

சாமியார் தாத்தா தன் தொடையில் தட்டிக்காண்பித்து ``இங்கதான்டி பச்செலை இருக்கு'' என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறாள். `கேரளாவில்தான் பச்சிலை இருக்கிறது' என்று அவர் சொல்லியிருக்கிறார்.

``என்ன யோசனை?'' - நாய்க்குட்டி கேட்டது.

``ஒண்ணுமில்லை? அந்தப் பச்செலையை நானும் சாப்பிடலாமா?''

``கூடாது.''

``ஏன்?''

``நீ சாப்பிட்டா, நாய்க்குட்டியா ஆகிடுவ'' என்று சொல்லிச் சிரித்தது.

அவளுக்குக் குழப்பமாகவும் வியப்பாகவும் இருந்தது.

``சாமியார் தாத்தாவுக்கு மந்திர வித்தை எல்லாம் தெரியும். அதே மாதிரி நீயும் எல்லாம் செய்வியா?''

``ஆமாம்... முடியும்'' என்றது.

``போகோ சேனல் வர வையேன் பார்க்கலாம்'' என அவள் சொல்லி முடிக்கும் முன்னரே கூடத்தில் இருந்த டி.வி பெட்டியில் போகோ சேனல் தெரிந்தது.

சம்ரிஷ்தாவுக்குத் தலை சுற்றியது.

``சரி... சரி... டோராவின் பயணங்கள் காட்டேன் பார்க்கலாம்'' என்றாள்.

போகோ மாறி டோராவின் பயணங்கள் ஓடியது. இவ்வளவு மாயாஜாலங்கள் நிகழ்த்தும் நாயக்குட்டியைப் பார்க்க அவளுக்குப் பயமாகவும் இருந்தது. அதைத் தூக்கிச் சென்று வளமோட்டுப் பாறைப் பக்கமாக வீசிவிட்டு வந்ததற்கு, அது தன்னைப் பழிதீர்த்துக்கொள்ளப் போகிறதோ என்ற பயம் மனதில் புரளத் தொடங்கியது.

``எனக்கு ஹோம்வொர்க் எல்லாம் சொல்லித் தர்றீயா?'' என்று கேட்டாள்.

``சொல்லித் தர்றது என்ன... செஞ்சே தர்றேன்.''

``உனக்கு மேத்ஸ் வருமா?''

``பாத்துக்கலாம்.''

`` `சுட்டுப்போட்டாலும் உனக்கு மேத்ஸ் வராது'னு அடிக்கடி சுடர் டீச்சர் சொல்வாங்க.''

``இனி அப்படிச் சொல்ல மாட்டாங்க.''

``இங்கிலீஷ் சார் எப்ப வந்தாலும் ஃபொனடிக்ஸ் ஃபொனடிக்ஸ்னு டார்ச்சர் பண்றார்.''

``பயப்படாத பாத்துக்கலாம்.''

`` `புக் இஸ் ஆன் த டேபிள்'னு அவர் சொல்றப்ப எச்சில் தெறிச்சு வந்து மூஞ்சியில அடிக்குது தெரியுமா?''

அவள் கூறியதைக் கேட்டு நாய்க்குட்டி விழுந்து விழுந்து சிரித்தது.

``அப்புறம் விதை முளைத்தல் புராஜெக்ட் ரெடி பண்ணித் தர்றீயா?''

அது சரி எனத் தலையாட்டியது.

அவளுடைய வீட்டுப்பாடங்களை நேர்த்தியாக முடித்துத் தந்தது. கணக்குகளைத் தெளிவாகப் போட்டது. விதை முளைத்தல் சார்ட்டை அமர்க்களப்படுத்தியிருந்தது.

சம்ரிஷ்தாவுக்கு ஆச்சர்யமாகவும் பயமாகவும் இருந்தது. நாய்க்குட்டி தன்னைப் பழிதீர்த்துக்கொண்டுவிடுமோ என்று மீண்டும் அச்சப்பட்டாள்.

``ஒரு படம் வரையணும்'' என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

``என்ன படம்?''

``நாய்க்குட்டி படம்'' என்றாள்.

``எதுக்கு?''

``டிராயிங் சார் வரஞ்சாரச் சொன்னார்.''

 ``அவர் வரஞ்சுக் காட்டியதைக் காட்டு பார்ப்போம்.''

``அவரு இதல்லாம் வரைய மாட்டாரு.''

``பின்ன?''

``பென்சில், அண்டா, தட்டு மாதிரி படங்கள்தான் வரைவார்.''

அதைக் கேட்டதும் நாய்க்குட்டிக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டு ``என்ன பண்ணணும் இப்ப?'' என்றது.

``நீ வந்து டிராயிங் நோட்ல படுத்துக்க. நான் அப்படியே அவுட்லைன் வரஞ்சுட்டு, உன்னை எழுப்பிடுறேன்.''

அது ஓவியத் தாளின் மீது வந்து படுத்துக்கொண்டது. அவள் நாய்க்குட்டியைச் சுற்றி மெல்லியக் கோடுகளை வரைய ஆரம்பித்தாள். நாய் நெளிந்தது. கோடுகளும் நெளிந்தன.

``அசையாம இரு. என்னால சரியா வரைய முடியல'' என்றாள்.

``வேணும்னா ஒண்ணு செய்யலாம்.''

``என்ன?''

``நான் நாய்க்குட்டி படமாவே மாறிடுறேன்.''

``நீ வரைஞ்சு முடிச்சுட்டுச் சொல்லு, நான் எழுந்துக்கிறேன்.''

``சூப்பர்!'' என்றாள்.

அந்த ஓவியத்தாளில் நாய் படுத்த அடுத்த நொடியில் ஓர் ஓவியமாக மாறிப்போனது. அதை அவள் தடவிப் பார்த்தாள். அவள் ஆச்சர்யத்தோடு கண்களை விரித்துப் பார்த்தாள். மயிர்க்கால்கள் சிலிர்த்துக்கொண்டன. பென்சிலை எடுத்து வரையத் தொடங்கினாள். நாய்க்குட்டியின் முகத்தைத் துல்லியமாக வரைய முடியவில்லை. கோடுகளை நிதானமாக வரைந்தாள். எழுந்து நின்று பார்த்தாள். அது நாய்க்குட்டியின் முகம்போல தெரியவில்லை. ரப்பர் அழிப்பானை எடுத்து முதலில் முகத்தை அழித்தாள். தாளின் மீது ஓவியமாகப் படுத்திருந்த நாய்க்குட்டியின் உருவமும் அழிந்து திரிதிரியாக, தாளின் மீது படர்ந்தது. அவளுக்கு மேலும் ஆச்சர்யமாக இருந்தது. ரப்பரை எடுத்து ஓவியத்தின் பின்பக்கம் அழித்துப் பார்த்தாள். அழிந்தது ஒன்றும் புரியாமல் நாய்க்குட்டியின் ஓவியத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். முகமும் பின்பக்கமும் சிதைந்த நிலையில் அது இருந்தது. என்னதான் நடக்கிறது எனப் பார்க்கலாம் என மனதுக்குள் நினைத்துக்கொண்டே மொத்த உருவத்தையும் அழித்தாள். துகள்கள் வரைபடத் தாளில் படபடத்துக்கொண்டிருந்தன. அவற்றை ஊதித் தள்ளினாள். கையால் வரைபடத்தாளைச் சரிசெய்தாள். நாய்க்குட்டியின் உருவம் அழிந்து தாள் வெறுமையாகக் கிடந்தது. `என்ன மாயாஜாலமோ!' என தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டாள். மீண்டும் நாய்க்குட்டியை தாளில் வந்து படுத்து ஓவியமாக மாறும்படி வேண்டி அழைத்தாள். நாய்க்குட்டி வருவதாகத் தெரியவில்லை. திரும்பவும் அழைத்தாள். சிறு சலனத்தைக்கூட அவளால் உணர முடியவில்லை. வெகுநேரம் அழைத்துப் பார்த்தாள். ஏமாற்றமே மிஞ்சியது. தான் அந்த ஓவியத்தை அழித்திருக்கக் கூடாதோ என்று யோசித்தவளுக்கு அழுகை திமிறிக்கொண்டு வந்தது. ஒருகட்டத்தில் உடைந்து அழுதாள். ``சத்தியமா வேணும்னு செய்யல..!'' என்று திரும்பத் திருப்பச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

ம்ரிஷ்தாவை அவளுடைய அம்மா சீண்டி எழுப்பினாள்.

``ஏம்மா பெனாத்திக்கினே இருக்கிற நேரா படு!'' என்று கூறினாள்.

``கண்ட கண்ட விளையாட்டை விளையாடாதேனு சொன்னா கேக்கிறயா? `சத்தியமா நா வேணும்னு செய்யல'னு நடுராத்திரியில பெனாத்திக்கினே இருந்தா, நாங்க எல்லாம் எப்படிமா தூங்கிறது?'' என்று கேட்டாள். போர்வையை இழுத்து மூடிக்கொண்டு இரவு விளக்கின் வெளிச்சத்தை அவள் அமைதியாக உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள்.

சண்முகம் மணியக்காரர் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்து ஒரு நாய்க்குட்டி பசியால் ஈனஸ்வரத்தில் கத்திக்கொண்டிருந்தது. அவள் அந்தச் சத்தத்தை உன்னிப்பாகக் கவனித்தாள். தன்னுடைய நாய்க்குட்டியின் சத்தமாகவே அவளுக்குப்பட்டது!