Published:Updated:

'கூண்டுக்கிளி’ வசனகர்த்தா விந்தன்..! கதை சொல்லிகளின் கதை - பாகம் 21

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'கூண்டுக்கிளி’ வசனகர்த்தா விந்தன்..! கதை சொல்லிகளின் கதை - பாகம் 21
'கூண்டுக்கிளி’ வசனகர்த்தா விந்தன்..! கதை சொல்லிகளின் கதை - பாகம் 21

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ”நிலம் வாங்கி வீடு கட்டித் தருகிறோம்.விண்ணப்பம் மட்டும் கையெழுத்துப் போட்டுக்கொடுங்கள்” என்கிற முதலமைச்சர் அண்ணாவின் வேண்டுகோளை நிராகரித்தார்.

பாகம்-2- ஆ.மாதவய்யா

பாகம்-5- மௌனி

பாகம்-6 - கு.பா.ரா

                                                                                                       பாகம்-12- ந. சிதம்பர சுப்ரமணியன்

பாகம் - 13 - எஸ்.வி.வி

பாகம்- 15.1  கல்கி

பாகம்-15.2 கல்கி

பாகம்- 16- ராஜாஜி

பாகம்-17 -அநுத்தமா

பாகம்-20- ல.சா.ரா

' 'இருப்பவனைப் பற்றி எழுதி, அவன் பணத்துக்கு உண்மை இரையாவதைவிட, இல்லாதவனைப் பற்றி எழுதி அவன் அன்புக்கு உண்மை இரையாவதேமேல்' என்ற கொள்கையுடன் நாற்பது ஆண்டுகாலம் எழுதி எழுதியே பலரின் தூற்றுதலுக்கும், சிலரின் போற்றுதலுக்கும்

ஆளானவர் விந்தன்' என்று அவரது நண்பரான மு.பரமசிவம் குறிப்பிடுவதுதான் எழுத்தாளர் விந்தனின் வாழ்க்கைச் சாரம்.

'இன்று மனித வாழ்வில் முக்கியமாக இடம்பெற்றிருப்பவை மூன்று. முதலாவது, கடவுள். இரண்டாவது, மதம். மூன்றாவது, கலை. 'எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான்!' என்று சொல்லாமல் சொல்லி, மனிதனின் தன்னம்பிக்கையைக் கொன்றுகொண்டிருக்கிறார் கடவுள்.  'இந்த உலகத்தில் அனுபவிக்கும் துன்பத்தைப் பற்றிக் கவலைப்படாதே. மறு உலகத்தில் இன்பம் உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது' என்று சொல்லி, மனிதனை சாவை நோக்கி அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது மதம். கடைசியாக உள்ள கலையாவது மனிதனை வாழவைக்கிறதா என்றால், அதுவும் இல்லை. கடவுளையும் மதத்தையும் சிருஷ்டி செய்து, மனிதனின் ஆயுளைக் காலத்துக்கு முன்னால் கொள்ளையடிக்கும் பிக்பாக்கெட் முதலாளிகளின் கத்தரிக்கோலாக அது மாறிவிட்டது. ஆம், மாறத்தான் வேண்டும். மனிதன் மனிதனாக வாழத்தான் வேண்டும். இதற்கு வேண்டியதெல்லாம் என்ன?

'ஒரே வார்த்தையில் சொல்லப்போனால், நம் உழைப்புக்கு ஏற்ற மதிப்பு.' அந்த மதிப்பைப் பெறுவதற்காகத்தான் இன்று கடவுளுடன் நாம் போராடுகிறோம்; மதத்துடன் போராடுகிறோம். இந்தக் கடுமையான போராட்டத்தில் நாம் வீழ்ந்தாலும், நம் சந்ததியாவது வாழ வேண்டும். மேற்படி குறிக்கோளுடன் எழுதப்படுபவை எதுவாக இருந்தாலும் அதுவே 'மக்கள் இலக்கியம்' ' என்று விந்தன் தன்னுடைய 'சமுதாய விரோதி' என்னும் சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரையில் இலக்கியக் கொள்கையைப் பளிச்செனச் சொல்லிவிடுகிறார்.

அவர், கம்யூனிஸ்ட் கட்சியிலோ வேறு எந்தக் கட்சியிலோ உறுப்பினராக ஒருபோதும் இருந்ததில்லை. ஆனாலும் தன்னை ஓர் 'எழுத்தாளன்' என்று சொல்லிக்கொள்வதைவிட 'தொழிலாளி' என்று சொல்லிக்கொள்வதில்தான் பெருமைகொள்வார். ஒரு கம்யூனிஸ்ட்டைப் போலவே இந்தச் சமகால வாழ்வைப் பார்த்தார், விமர்சித்தார், எழுதினார். ஆகவே, 'சுத்த எழுத்தாளர்கள்' எனப்படும் பல ஆகிருதிகள், விந்தனை ஒரு பொருட்டாக மதித்ததில்லை. பட்டியல் மன்னர்கள், அவர் பெயரை எந்தப் பட்டியலிலும் சேர்த்ததில்லை; இன்றும் சேர்ப்பதில்லை. ஆனால், அவருடைய எழுத்துகளை கல்கி மிகவும் மதித்தார். அவருடைய பத்திரிகை ஆபீஸில் அச்சுக்கோக்கும் ஒரு தொழிலாளியாக வேலை பார்த்துவந்த விந்தனின் எழுத்துகளை தொடர்ந்து கேட்டு வாங்கிப் பிரசுரம் செய்தது மட்டுமின்றி, அவரை 'கல்கி'யின் ஆசிரியர் குழுவில் துணை ஆசிரியராகவும் உயர்த்தினார். 

விந்தன் கதைகளைப் பற்றி விந்தனின் 'முல்லைக்கொடியாள்' தொகுப்பின் முன்னுரையில் கல்கி எழுதுகிறார்...
'…ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் சிறிய கதைகளும் பெரிய கதைகளும் பெரும்பாலும் ஒரு சாதியரைப் பற்றியே வந்துகொண்டிருந்தன. எழுதுகிறவர்களும் படிக்கிறவர்களும் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருந்தபடியால், அந்தச் சாதியினரைப் பற்றியே கதைகள் எழுதப்பட்டன. அந்தக் கதைகளில் கையாளப்பட்ட தமிழ் நடை, பிராமணக் குடும்பங்களில் வழங்கும் தமிழாகவே இருந்தது. பிராமண எழுத்தாளர் கஷ்டப்பட்டு வேறு சாதியினரைப் பற்றி கதை எழுதும்போது அவர்கள் வர்ணிக்கும் நடை, உடை, பாவனைகள் அவ்வளவு சரியாக இருப்பதில்லை. இந்தச் சமயத்தில்தான் நவயுக புதுமலர்ச்சி எழுத்தாளர்கள் தோன்றினார்கள். ருஷ்யக் கதைகளையும் மற்ற மேல்நாட்டுக் கதைகளையும் படித்தார்கள். அந்தக் கதைகளைப்போல் இந்நாட்டு ஏழை எளியவர்களையும் உழைப்பாளி மக்களையும் பற்றிய கதைகள் எழுதத் தொடங்கினார்கள்.

விந்தன், உழைப்பாளி; மக்களிடையே பிறந்து வளர்ந்து உழைத்துப் பண்பட்டவர். ஏழை எளியவர்கள், தொழிலாளிகள், பாட்டாளிகளின் சுக-துக்கங்களை மனம் ஒன்றி அனுபவித்து உணரும் ஆற்றல் பெற்றவர். அந்த உணர்ச்சிகளை இலக்கியப் பண்பு வாய்ந்த சிறுகதைகளாக எழுதியிருக்கிறார். 'அவருடைய கதாபாத்திரங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கெல்லாம் நாம்தான் காரணமோ!' என எண்ணி எண்ணி, தூக்கம் இல்லாமல் தவிக்க நேரும்.

பிராமணரான கல்கியே இப்படித் திறந்த மனதுடன் எழுதியிருப்பது கவனிக்கத்தக்கது. கல்கியின் இந்த நெகிழ்வான, ஜனநாயக மன உணர்வுதான் விந்தனை வெளி உலகுக்குக் கொண்டுவந்தது என்றே சொல்லலாம். அன்றைய நாள்களில் விந்தனின் கதைகளில் வெளிப்பட்ட ஏழை - பணக்காரன் பேதம், வேறெவர் கதைகளிலும் இவ்வளவு அப்பட்டமாக வெளிப்பட்டதாகக் கூற முடியாது.

விந்தனின் 'ஒரே உரிமை' என்ற சிறுகதையைப் பார்க்கலாம்.

சாப்பிட்ட பிறகு இலையை எடுத்து வெளியே போட வருகிறார் வசதி படைத்தவர்.

என் கையில் இருக்கும் இலையைக் கண்டதும் சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த இரண்டு ஜீவன்கள் என்னை நோக்கி ஓடிவந்தன. அவற்றில் ஒன்று நாய். இன்னொன்று பெயருக்கு மனிதனாகப் பிறந்திருந்த சோலையப்பன்.
''சாமி, சாமி... அந்த இலையை இப்படிக் கொடுங்க. கீழே போட்டுடாதீங்க சாமி...'' என்று கெஞ்சினான்.

...மனிதர்களுக்கு  விசித்திரமான  ஒரு மனோபாவம். என்னைப் போன்ற அதாவது பணத்தைக்கொண்டு எந்தவிதத்திலும் சாப்பாட்டுக்கு வசதி செய்துகொள்ளக்கூடியவர்களைக் கண்டால் அவர்கள் வருந்தி வருந்தி விருந்துக்கு அழைக்கிறார்கள். மறுத்தால் அவர்களுக்குக் கோபம்கூட வந்துவிடுகிறது. ஆனால், இந்தச் சோலையப்பன்கள் (அதாவது பணத்தைக்கொண்டு சாப்பாட்டுக்கு வசதி செய்துகொள்ள முடியாதவர்கள்) வலுவில் வாசலுக்கு வந்து ஒரு கை சோறு கேட்டால்கூட எரிந்து விழுகிறார்கள். ''ஏன் இப்படி, கூலிக்கு வேலை கிடைக்காத காலங்களில் மட்டும்தான் நாய்க்குப் போட்டியாக நான் வந்து நிற்கவேண்டியிருக்கிறது'' என்று மனமுடைந்து சொன்ன சோலையப்பனின் பேச்சில் மனம் நெகிழ்ந்துபோகும் அந்தப் பணக்காரர், தன் செலவில் கிராமத்தில் ஒரு ரொட்டிக்கடை வைத்துக் கொடுத்து ''ரொட்டி வித்துப் பொழைச்சுக்கோ, இனிமே பிச்சை எடுக்காதே'' என்று அறிவுரை சொல்லிவிட்டு பட்டணம் போய்விடுகிறார்.
இரண்டே வாரங்களில் அவரை உடனே வரச்சொல்லி சோலையப்பன் கடிதம் போடுகிறார். இவரும் வந்து கடையைப் பார்க்கிறார். வாங்கி வைத்த ரொட்டியெல்லாம் விற்பனை ஆகாமல் அப்படியே கடையில் இருக்கின்றன.

''ஏன், வியாபாரம் நடக்கலியா?''

''இல்லாம என்னங்க? அதோ அந்த முதலியார் ரொட்டிக்கடை இருக்குதுங்களே, அங்கே தினம் தினம் எம்மா வியாபாரம் ஆவுது!''

'பின்னே என்ன... உன் கடையிலே மட்டும் ஏன் வியாபாரம் ஆகலை?''

''என்ன இருந்தாலும் நான் பறையன் பறையன்தானுங்களே! என் கடையிலே யாராச்சும் ரொட்டி வாங்கணும்னா அவங்களும் பறையர்களாகத்தானே இருக்கணும்! அவங்களுக்குத்தான் கூழுக்கே பஞ்சமாச்சுதுங்களே. அவங்க எங்க ரொட்டி, கிட்டி வாங்கப்போறாங்க? வந்தா ஒசந்த சாதிக்காரர்தான் வரணும். அவங்க எங்கிட்ட எங்கியாச்சும் வருவாங்களா? 'பறப்பயலுக்கு இங்கே என்னடா ரொட்டிக்கடை?'ன்னு என்னையும் அடியா அடிச்சுப்போட்டு, இந்தக் கடையையும் காலி பண்ணாம இருந்தாங்களே, அதைச் சொல்லுங்க.''

''என்னடா, திருப்பித் திருப்பி 'பறையன், பறையன்'கிறாயே?'' என்று நான் அலுத்துக்கொண்டேன்.

''நானாங்க சொல்றேன்... ஊர் சொல்லுது; உலகம் சொல்லுதுங்க. இந்த 15 நாளா என் கடையை யாரும் எட்டிப்பார்க்காம இருக்கிறதிலிருந்தே இது தெரியலீங்களா?''

''சரி, அப்படீன்னா நீ இப்ப என்னதான் சொல்றே?''

''இது உங்க கடை. இதுல போட்டிருக்கிற பணம் உங்க பணம். நீங்களே இந்தக் கடையை எடுத்துக்குங்கோன்னு சொல்றேன்!''

''இதென்னடா வேடிக்கையா இருக்கே. உனக்கு தினசரி வேலை கிடைக்கத்தான் வழி இல்லை. யாருடைய உதவியையாவது கொண்டு சொற்ப முதல்ல ஒரு ரொட்டிக்கடை, மிட்டாய்க்கடை இப்படி ஏதாவது ஒன்றை வெச்சுப் பொழைச்சுக்கக் கூடவா உனக்கு உரிமை இல்லை?''

''ஏதுங்க, யோசித்துப்பார்க்கப்போனா, எனக்கு இருப்பது ஒரே உரிமைதானுங்களே!''

''அது என்னடா, ஒரே உரிமை?''

''வேறே என்னங்க, தற்கொலை செய்துகொள்ளும் உரிமைதானுங்க அது!'' என்றான் அவன்.

அவன் கண்களில் நீர் சுரந்தது.

பாவம், அதற்குக்கூட அவனுக்கு உரிமையில்லை என்னும் விஷயம் அவனைப் போன்ற அப்பாவிகளுக்கு எப்படித் தெரியும்?

இந்தக் கதையில் மிக மிக முக்கியமான சமூகப் பிரச்னை ஒன்றை, ரத்தமும் சதையுமாக உயிர்ப்புடன் தூக்கிப்போடுகிறார் விந்தன். இன்றைக்கும் எந்த நகரத்திலும் கடைவீதியில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் கடைவைத்து எல்லோரும் வந்து வாங்கும் நிலை இல்லவே இல்லை.  40-களின் பிற்பகுதியிலேயே இந்தப் பிரச்னையை விவாதத்துக்குக் கொண்டுவந்த முன்னோடியாக விந்தன் திகழ்கிறார். தலித் இலக்கியமோ, தலித் இயக்கங்களோ முன்னுக்கு வந்திராத ஒருகாலத்தில் இந்தக் கதை எழுதப்பட்டது என்பது இன்னும் கூடுதல் முக்கியத்துவமான செய்தி.

பேராசிரியர் கா.சிவத்தம்பி, தன்னுடைய 'தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்' நூலில் விந்தனைப் பற்றிக் குறிப்பிடும்போது, '40-களில் தி.மு.க எழுத்தாளர்கள் யாரை கதை மாந்தர்களாக ஆக்கினார்களோ, அவர்களேதான் விந்தனின் கதை மாந்தர்களாகவும் வந்தார்கள். ஆனால், தி.மு.க எழுத்தாளர்கள் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் பார்ப்பணீயம் என்று ஒற்றைத் தீர்வை முன்வைத்தபோது விந்தன், 'பொருளுடமையே பிரச்னைகளின் அடிப்படை' என்ற சித்தாந்தத்தை நம்பியவர் என்பதால், வர்க்கபேதத்தை முன்னிலைப்படுத்தி அதற்குள் சாதியையும் கொண்டுவந்தார் எனக் குறிப்பிடுவார். 

விந்தன் செங்கல்பட்டு மாவட்டத்தில், நாவலூர் என்னும் சிற்றூரில் வேதாசலம் - ஜானகியம்மாள்  தம்பதிக்கு 1916 செப்டம்பர் 22-ம் நாள் பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் கோவிந்தன். விந்தனின் பெற்றோர், தம் மகனின் படிப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை. எனவே, கோவிந்தன் தமக்கு விவரம் தெரிந்தவுடன் கல்வியின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டு, இரவுப் பள்ளிகளில் படித்து அறிவை வளர்த்துக்கொண்டார். ஓவியம் வரைவதில் ஆர்வம் உடைய இவர், ஓவியப் பள்ளியில் சேர்ந்து தம் திறனை வளர்த்துக்கொண்டார்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த விந்தன், விவசாயம் நலிந்தபோது சென்னைக்கு பிழைப்புத் தேடி வந்த பல்லாயிரக்கணக்கான மக்களில் ஒருவர். அன்றைய சென்னையின் அடித்தளச் சமூகத்தில் அவரது வாழ்க்கை அமைந்தது. உழைப்பாளர் பகுதியான வடசென்னையின் புளியந்தோப்புப் பகுதியில் வசித்தார்.

1936-ம் ஆண்டில் ஜெமினி ஸ்டூடியோவில் விளம்பரப் பகுதியில் ஓவியராகி, பணியைத் தொடங்கினார். பிறகு, ராஜாபாதர் என்ற நண்பரின் உதவியால், டாக்டர் மாசிலாமணி என்பவர் நடத்திவந்த 'தமிழரசு' மாத இதழில் அச்சுக்கோக்கும் பணியில் சேர்ந்தார். அங்கு பணியாற்றியபோது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் போன்றோரின் தொடர்பும் நட்பும் கிடைத்தன. தமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்தை அச்சுக்கோக்கும் வாய்ப்பைப் பெற்ற விந்தன், அதன் மூலம் தம் அறிவை மேலும் வளர்த்துக்கொண்டார். பாரதிதாசனின் 'தமிழுக்கு அமுதென்று பேர்' கவிதையை விந்தனே அச்சுக்கோத்தார். பிறகு, 'தமிழரசு' இதழைவிட்டு விலகி 'ஆனந்த போதினி', 'சுதேசமித்திரன்', 'தாருல் இஸ்லாம்' போன்ற இதழ்களில் பணியாற்றி, அனுபவம்மிகுந்த அச்சுக்கோப்பாளராக  'ஆனந்த விகடன்' இதழில் சேர்ந்தார். பிறகு 'கல்கி' இதழிலும் பணியாற்றினார். 

1951-ம் ஆண்டில் 'கல்கி' இதழ் பணியைவிட்டு விலகிய விந்தன், திரைப்படத் துறையில் நுழைந்தார். புதுமைப்பித்தன் உள்ளிட்ட பல எழுத்தாளர்களைக் கவர்ந்து இழுத்த சினிமா, விந்தனையும் விட்டுவைக்கவில்லை.

ஏ.வி.எம் கதை இலாக்காவில் சேர்ந்தார். அங்கே எழுத்தாளனுக்குத் தரப்படும் சொற்ப ஊதியத்தைக் கண்டு வெறுத்து, உடனே வெளியேறினார். பிறகு, டி.ஆர்.ராமண்ணாவின் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த 'வாழப் பிறந்தவள்' படத்துக்கு வசனம் எழுதினார். தொடர்ந்து 'பார்த்திபன் கனவு', 'குழந்தைகள் கண்ட குடியரசு', 'சொல்லு தம்பி சொல்லு', 'மணமாலை' போன்ற படங்களுக்கு வசனமும், 'அன்பு', 'கூண்டுக்கிளி' ஆகிய படங்களுக்கு கதை-வசனமும், பல படங்களுக்குப் பாடல்களும் எழுதினார்.

'குலேபகாவலி' படத்தில் வரும் புகழ்பெற்ற பாடலான, 
'மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ...
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா..!'
என்ற பாடல்,
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த 'கூண்டுக்கிளி' படத்தில் வரும்
'சரியா... தப்பா
கொஞ்சும் கிளியான பெண்ணைக்
கூண்டுக்கிளி ஆக்கிவிட்டுக்
கெட்டிமேளம் கொட்டுவது 
சரியா... தப்பா?'

போன்ற பல பாடல்கள் அவருக்கு பெரும்புகழ் சேர்த்தன.

சினிமாவில் கொஞ்சம் காசு கிடைத்ததும் 1954-ம் ஆண்டில் 'மனிதன்' என்ற பெயரில் சொந்தப் பத்திரிகை ஆரம்பித்தார். அதில் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, தமிழ் ஒளி போன்ற இளம் இடதுசாரி எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதினார்கள். வையாபுரி பிள்ளை, மு.வரதராசனார், கு.ப.சேது அம்மாள், நாரண துரைக்கண்ணன், பி.எஸ்.ராமையா போன்றோரும் 'மனிதன்' இதழில் எழுதியுள்ளனர்.

பத்து மாதங்கள் மட்டுமே வாழ்ந்தான் அந்த 'மனிதன்'. புதுமைப்பித்தன் கவிதைகளைக் கடுமையாக விமர்சித்து 'தமிழ் ஒளி' எழுதிய கட்டுரை மனிதனில் வந்துள்ளது. 1969-ம் ஆண்டில் 'புத்தகப் பூங்கா' என்ற பெயரில் பதிப்பகம் ஒன்றை விந்தன் தொடங்கினார். ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'ஒரு பிடி சோறு' தொகுதியை தனது முன்னுரையுடன் வெளியிட்டு இலக்கிய உலகுக்கு ஜெயகாந்தனை அறிமுகப்படுத்தியவரே விந்தன்தான்.
விந்தன் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், குட்டி கதைகள், சிந்தனை நூல்கள், கட்டுரைகள் எனப் பல வடிவங்களிலும் தம் பங்களிப்பை அளித்துள்ளார். 'முல்லைக்கொடியாள்', 'ஒரே உரிமை', 'சமுதாய விரோதி', 'விந்தன் கதைகள்', 'இரண்டு ரூபாய்', 'ஏமாந்துதான் கொடுப்பார்களா?', 'நாளை நம்முடையது', 'இதோ ஒரு மக்கள் பிரதிநிதி', 'நவீன விக்ரமாதித்தன்' என்று, ஒன்பது தொகுதிகளாக இவருடைய சிறுகதைகள் வெளியாகியுள்ளன. எல்லா கதைகளையும் உள்ளடக்கிய பெரும்பதிப்பை காவ்யா பதிப்பகம் இப்போது வெளியிட்டுள்ளது.

'கண் திறக்குமா?', 'பாலும் பாவையும்', 'அன்பு அலறுகிறது', 'மனிதன் மாறவில்லை', 'காதலும் கல்யாணமும்', 'சுயம்வரம்' போன்ற நாவல்களைப் படைத்துள்ளார். இவருடைய 'தெருவிளக்கு' என்ற நாவல் (மனிதனில் தொடராக வந்தது) முற்றுப்பெறவில்லை.

விந்தன், எம்.கே.தியாகராஜ பாகவதர் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். நடிகர் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையை, 'சிறைக்காலச் சிந்தனைகள்' என்ற பெயரில் எழுதியுள்ளார். 'பாட்டினில் பாரதம்' என்ற கவிதை நூலையும், 'ஓ மனிதா', 'புதிய ஆத்திசூடி', 'பெரியார் அடிச்சுவட்டில்' போன்ற சிந்தனை நூல்களையும், 'வேலை நிறுத்தம் ஏன்?', 'விந்தன் கட்டுரைகள்' என்ற தலைப்புகளில் கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். 

புதுமைப்பித்தன் சாகும் நாள் வரை கல்கியை பரம வைரிபோலக் கருதி விமர்சித்தவர். ஆனால், ராஜாஜியின் எழுத்துகளை வெகுவாகச் சிலாகித்தவர். ஆனால், விந்தன் அதற்கு நேர்மாறாக, கல்கியை 'பேராசிரியர்' என்ற வார்த்தையால் சுட்டி, அவரைத் தன் குருநாதராக ஏற்றுக்கொண்டவர். ராஜாஜியின் 'பஜ கோவிந்தம்' நூலுக்குப் போட்டியாக 'பசி கோவிந்தம்' என்கிற புடைநூலை எழுதினார். அதிகாரத்தில் இருப்பவர்களைப் பகைத்துக்கொள்வது பற்றிக் கவலையேபடாமல், தன் கருத்துகளைத் துணிச்சலுடன் முன்வைக்கும் பண்பு அவரிடம் இருந்தது. 

'சமூக விரோதி' என்றொரு சிறுகதை. அதில் சொந்த தகப்பனாக இருந்தாலும் கள்ளச்சாராயம் காய்ச்சுகிறான் என்றபடியால், அவனை போலீஸ்வசம் ஒப்புவிக்கிறான் மகன். அது பற்றி கதையில் ஓரிடத்தில் வரும் உரையாடல்:

''அவர் எனக்கு விரோதியில்லை.''

''பின்னே, யாருக்கு தம்பி விரோதி?''

''சமூகத்துக்கு விரோதி.''

''சொந்த அப்பனைவிட, சமுதாயம் பெரிதா?''

''அப்பனைவிட, அரசாங்கத்தைவிடப் பெரிது!''

பெண்களின் நிலை குறித்துப் பல கதைகளில் வெடிப்புறப் பேசும் விந்தன் 'மாட்டுத்தொழுவம்' கதையில் சாட்டையடியாக தன் கருத்துகளை முன்வைக்கிறார். இந்தக் கதை, எனக்கு இப்சனின் 'பொம்மை வீடு' கதையையும், கு.அழகிரிசாமியின் 'தேவ ஜீவனம்' கதையையும் நினைவுபடுத்தியது.

''அதிகாரபூர்வமான சட்டதிட்டங்களால் மனித வர்க்கத்தை அடக்கி ஆண்டுவிட முடியும் என்று நம்புவது அறியாமை. மனிதன் நினைத்தால் அந்தச் சட்டதிட்டங்களை மீறிவிட முடியும். ஆனால், அதன் பிறகு ஆக்கினைகளை மீறுவதற்கு மனிதன் சக்தியற்றவன்… வாழ்க்கையில் அன்புக்கு இடமில்லையென்றால், இன்பத்துக்கு இடம் ஏது? அனைவரும் பொதுவாக அன்பில்தான் பிறக்கிறோம்... அன்பால் வளர்கிறோம். ஆனால், எல்லோருமே அன்பில் வாழ முடிகிறதா... இல்லை. அப்படி வாழ முடியாத தரித்திர தேவதைகளில் நானும் ஒருத்தி'' என்று ஆரம்பமாகும் இந்தக் கதையில் வரும் நாயகி, பிறந்த வீட்டில் செல்லமாக, சுதந்திரமாக வளர்ந்தவள். புகுந்த வீட்டில் அவளுக்கு எந்தச் சுதந்திரமும் இல்லை. கணவனின் அன்போ, மாமியின் அன்போ கிட்டவில்லை. அதிகாரத்துக்குக் கீழ்ப்படியும் பிறவியாக வாழ நேர்கிறது. இந்தக் கொடுமைக்குள்ளும் இரண்டு குழந்தைகள் பெற்று இப்போது மூன்றாவது முறையாக முழுகாமல் இருக்கிறாள். பிரசவத்துக்கு மட்டும் தவறாமல் அம்மா வீட்டுக்குப் போய்விட வேண்டும். இதே மாதிரி கூடவே வீட்டில் உள்ள பால் மாடும் இப்போது சினையாகி நிற்கிறது. 

''மாட்டுக்கும் பிரசவத்துக்குப் பிரசவம் கிராமத்துக்கு ஓட்டிவிடுவார்கள். நியாயம்தானே? பால் மறத்துப்போன அந்த மாட்டுக்கு யாராவது தண்டத்தீனி போட்டுக்கொண்டிருப்பார்களா? அதனுடைய நிலைதான் என்னுடைய நிலையும். வீட்டுக்காரியங்களையோ என்னால் இப்போது செய்ய முடிவதில்லை. பிறகு ஏன் எனக்கு வெட்டிச்சோறு?

நாளைக்கு மாட்டை கிராமத்துக்கு ஓட்டிவைக்கப்போகிறார்கள். பெற்றுப் பிழைத்தால் திரும்பி வரும். வந்தால் மீண்டும் பாலைக் கறந்து குடிப்பார்கள். வராமல் செத்தொழிந்தால் வேறு மாடு வாங்கிக்கொள்வார்கள். இதோ, அப்பாவுக்குக் கடிதம் எழுதி அவரும் என்னை அழைத்துக்கொண்டு போக வந்துவிட்டார். நானும் நாளைக்குப் போகிறேன். பெற்றுப்பிழைத்தால் திரும்பி வருவேன். வராமல் செத்தொழிந்தால் என்ன பிரமாதம்... அவர் வேறு கல்யாணம் செய்துகொண்டுவிடுவார்.

அவ்வளவுதான். இப்போது நீங்களே சொல்லுங்கள், நான் வாழ்வது, மனிதத்தொழுவமா... மாட்டுத்தொழுவமா?'' என்று கேள்வியுடன் கதை நிறைவுறும். நேரடியான, குழப்பமற்ற கருத்துகளை எளிய மொழியில் கலாபூர்வமாகச் சொல்லும் கலை, விந்தனுக்கு கைவந்தது.

இன்று, 'ஒரு பக்கக் கதைகள்' என வார இதழ்கள் வெளியிடுகின்றன. இதற்கும் விந்தனே முன்னோடி. எடுத்துக்காட்டாக ஒரு குட்டிக்கதை (நம்பிக்கை):

இரவு மணி 10. கடைசியாக வீட்டுக்கு வந்து சேர்ந்த வீட்டுக்காரர், தெருக்கதவைச் சாத்தித் தாளிட்டுவிட்டு உள்ளே சென்றார்.

''நன்றி செலுத்துகிறேன். கடவுளுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்!'' என்றது ஜன்னல். 

''ஏன்?'' என்று கேட்டது கதவு. 

''மீனை, தண்ணீரில் வாழவைத்ததுபோல, மனிதனை காற்றில் வாழவைத்தாரே அதற்காக!''

''இல்லாவிட்டால்?''

''உன்னைச் சாத்திவிட்டுச் சென்றதுபோல என்னையும் அல்லவா அவர் சாத்திவிட்டுச் சென்றிருப்பார்!''

இதைக் கேட்டதும் ''அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறாய்?'' என்று அலுப்பும் சலிப்புமாக ஆரம்பித்த கதவு, திடீரென தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு, ''உன்னிடம் நான் ஒரு ரகசியம் சொல்லட்டுமா?'' என்றது ஜன்னலிடம்.

''சொல்லு'' என்றது ஜன்னல்.
''இப்போதெல்லாம் மனிதன் தன்னைப்போன்ற மனிதனை நம்புவதில்லை. என்னைப் போன்ற கதவைத்தான் நம்புகிறான்'' என்றது கதவு.

சொல்லாலும் எழுத்தாலும் செயலாலும் உண்மையான மக்கள் எழுத்தாளராக இறுதிவரை வாழ்ந்தவர் விந்தன்.
காமராஜர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவர் விந்தன். இருப்பினும், தன் சொந்த வாழ்க்கைக்காக அவர்களிடம் உதவி கேட்டு போனதே இல்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ''நிலம் வாங்கி வீடு கட்டித் தருகிறோம். விண்ணப்பத்தில்  கையெழுத்து மட்டும் போட்டுக் கொடுங்கள்'' என்ற முதலமைச்சர் அண்ணாவின் வேண்டுகோளை நிராகரித்தார். 

தமிழக அரசின் இதழான 'தமிழரசின்' ஆசிரியர் பொறுப்பை ஏற்கச்சொல்லி கலைஞர் கருணாநிதி அழைத்தபோதும் மறுத்துவிட்டார். அரசைப் பாராட்டும் நிர்பந்தம் தனக்கு வந்துவிடலாம். தன் சுதந்திரம் போய்விடும் என்று அவர் கருதியிருக்கலாம்.

30-06-1975 அன்று அவர் காலமானார்.

'வாழ்ந்தாலும் 'லோ சர்க்கி'ளோடுதான் வாழ்வேன்; செத்தாலும் லோ சர்க்கிளோடுதான் சாவேன்!' என்று அவர் அடிக்கடி சொல்வாராம்.
அவ்வாறே அவர் வாழ்வும் மரணமும் அமைந்தன.
(அவரது மகன் ஜனார்தனன் அப்பாவின் எழுத்துகளின் மீது தமிழகத்தின் கவனத்தை ஈர்க்க, இடையுறாது முயன்றுவருகிறார்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு