
‘செல்லாத பணம்’ என்ற நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். மூன்று நாட்கள் மட்டுமே நிகழக்கூடிய சம்பவங்கள்தான் கதை. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைதான் களம். ஓர் இளம்பெண்ணின் மரணம் பற்றிய கதை. ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்த பிறகு, அவளுக்கு குழந்தைதான் உலகமாக, வாழ்க்கையாக இருக்கிறது. இருபது ஆண்டுகள் தனக்காக வாழ்ந்த தாய் , தந்தையை விட்டுவிட்டு யாரோ ஓர் ஆணுடன் ஓர் இளம்பெண் எந்த தைரியத்தில் ஓடிப்போகிறாள்? காதலனுக்காக ஓடிப்போன பெண் ஏன் தீயிட்டுத் தன்னைக் கொளுத்திக்கொள்கிறாள் என்பதுதான் கதை. மரணம் நிகழும்போதெல்லாம் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறோம்; அடித்துப் புரள்கிறோம். இவைதான் நாம் மரணம் சார்ந்து செய்கிற செயல்களாக இருக்கின்றன. நம் கண் முன்னே நிகழும் ஒவ்வொரு மரணமும் நமக்கு ஏதோ ஒன்றைக் கற்றுத் தருவதற்
காகவே நிகழ்வதுபோல இருக்கிறது. மரணங்கள் சொல்லித் தருவதை, ஒருபோதும் நாம் கற்பதே இல்லை. கற்றிருந்தால் மனித உலகம், மனித வாழ்க்கை முற்றிலும் வேறு மாதிரி இருந்திருக்கும்.
ஆயிரம் கோடி, பத்தாயிரம், லட்சம் கோடி ரூபாய் பணம் வைத்திருப்பவர்களும் செத்துத்தான் போவார்கள். பணம் அவர்களைச் சாகாமல் தடுக்கவில்லை. வாழ்நாளெல்லாம் எதற்காக அலைந்தார்களோ, பணம் என்பது காகிதம்தானே, அந்தப் பொருள் அவர்களைக் காப்பாற்றவில்லை. ஆனாலும் மனித உலகம் என்பது, மனித வாழ்க்கை என்பது பணத்தைத் தேடிய உலகமாக, பணத்தைத் தேடிய வாழ்க்கையாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் பணம் செல்லாமல் வெறும் காகிதமாகிவிடுகிறது. காகிதத்தை மனிதர்களால் சாப்பிட முடியாது. பணத்தால் மட்டுமே ஓர் ஆள் வாழ்ந்துவிட முடியாது என்பதை ஓர் இளம்பெண்ணின் மரணத்தின் மூலம் நிரூபிக்க முடியுமா என்று சொல்ல ‘செல்லாத பணம்’ நாவல் முயல்கிறது.
தற்கொலை செய்துகொள்கிற மனிதர்களை, பொதுவாகக் கோழைகள் என்று சொல்லப் பழகியிருக்கிறோம். அது உண்மை அல்ல. தற்கொலை செய்துகொள்ள முடியாமல் தவிக்கிறவர்கள்தான் நிஜமான கோழைகள். உயிர் வாழ்வதற்காக மனிதர்கள் செய்கிற சமரசங்கள், விட்டுக் கொடுத்தல்கள், பின்வாங்கல்கள், இழிதனங்கள், காட்டிக்கொடுத்தல்கள், நயவஞ்சகங்கள், கயமைத்தனங்கள், மோசடிகள், பித்தலாட்டங்கள் என்று இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. உயிரோடு இருப்பதற்காக இவ்வளவு காரியங்களையும் ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டியிருக்கிறது. இவ்வளவு இழிவான காரியங்களைச் செய்த பிறகும் நிம்மதியாக வாழவும் சாகவும் முடியவில்லையே ஏன்? சொரணையுள்ள மனம் இவற்றையெல்லாம் செய்யாது என்பதை வாழ்வனுபவமாகச் சொல்ல முயல்கிறது ‘செல்லாத பணம்’ நாவல். வீர வசனங்களின் மூலமாக அல்ல, தத்துவக் கோட்பாடுகளின் வழியாக அல்ல. கண்ணீரின் வழியாக, மனசாட்சியின் வழியாக, தீயில் கருகிய உடல் வீச்சத்தின் வழியாக.
வாழ்க்கை மட்டுமே பேசப்படவேண்டிய, கொண்டாடப்படவேண்டிய ஒன்றா என்ன? மரணம்தான் அதிகம் பேசப்படவேண்டியது, கொண்டாடப்படவேண்டியது. இறக்கிவைக்க முடியாத பாரங்களிலிருந்து, செத்தால்தான் ஆறும் என்ற காயங்களில்இருந்து, விடுதலை அளிப்பது மரணம் மட்டுமே. ஆடுகள், மாடுகள் இணைந்து வாழ்கின்றன. ஆனால், ஓர் ஆணாலும் ஒரு பெண்ணாலும் இங்கே இணைந்து கசப்பின்றி, அடிதடி இன்றி, பழிவாங்குதல் இன்றி வாழ முடிவது இல்லையே ஏன் என்ற கேள்வியை எழுப்பத்தான் `செல்லாத பணம்’ நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். மனிதகுலம் தன் அறிவால், விஞ்ஞானத்தால் எவ்வளவோ தூரம் முன்னேறி வந்திருக்கிறது. ஆனாலும், அன்பாக இருப்பதை மட்டும் கற்றுக்கொள்ளவில்லையே ஏன்? நம் கல்வி, அறிவு எந்தவிதத்தில் தோற்றுப்போகின்றன?
அவமானமும் புறக்கணிப்பும்தான் மனிதர்களைச் சாகடிக்கின்றன.
நிலையாமையை அதிகம் பேசிய மரபு நம்முடையது. ‘யானே பொய், என் மெய்யும் பொய், என் அன்பும் பொய்’ என்று பேசுவதுதான் நம் இலக்கியம். மரணத்தைப் பற்றி பேசும் ‘செல்லாத பணம்’ நாவல். மற்றவர்களுடைய மரணத்தைப்பற்றி அல்ல, என்னுடைய மரணத்தைப் பற்றி, என்னுடைய திரும்புதலற்ற பயணத்தைப் பற்றி, ஓர் இளம்பெண்ணின் மரணத்தின் வழியே பேசும். காரணம்... என்னுடைய சோற்றை நான்தான் தின்ன வேண்டும். என்னுடைய சாவை நான்தான் சாகவேண்டும்!