Published:Updated:

தடயம் - சிறுகதை

தடயம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
தடயம் - சிறுகதை

தமயந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

தடயம் - சிறுகதை

தமயந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு

Published:Updated:
தடயம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
தடயம் - சிறுகதை
தடயம் - சிறுகதை

தவைத் திறக்கும் ஓசை கேட்டதும், வசந்தியின் உயிருக்குள் சிறிய அதிர்வு ஏற்பட்டது. ரயில் வருவதற்கு முன்னர் தண்டவாளம் லேசாக அதிர்வதுபோல, கண்களை ஒருமுறை இறுக மூடித் திறந்தாள். தேவசகாயம், கதவைத் திறந்து நின்றுகொண்டிருந்தான். அதே சுருள் முடிதான். ஆனால், லேசாக நரைத்திருந்தது. `மனதின் அதிர்வுகள் கண்களில் நீராக மொழிபெயர்க்கப்படுமா என்ன? அவன், தன்னையே உலுப்பிக்கொள்கிறான்.

``உள்ளே வா தேவா... உட்காரு.''

அவன் கதவைக் கொண்டியிட்டு நேராக நடந்து அவள் அருகே வந்து, கைகளைப் பிடித்துக்கொள்கிறான். வசந்தியின் கண்களில் நீர் வழிந்தபடி இருக்கிறது. கண்களை இறுக மூடிக்கொள்கிறாள் வசந்தி. அவன், அவள் முன்நெற்றியைக் கோதிவிடுகிறான்.

``வசா...''

வேறு எவரும் அவளை அப்படி அழைத்ததே இல்லை. இவளுக்காக குன்னிமுத்துக்களைப் பொறுக்கி, சின்னச் சின்ன தீப்பெட்டிகளுக்குள் வைத்து அவன் தந்த ஒரு நேரம், அவன் கூப்பிட்ட முதல்முறையை நினைத்துக் கொண்டாள். அவன், அவள் முகத்தை பக்கத்தில் இருக்கும் துண்டால் துடைத்தான்.

முன்னால் இருக்கும் நாற்காலியில் அவன் உட்கார்ந்து, அவளைக் கண் கொட்டாமல் முழுக்கப் பார்க்கிறான். முடி கொட்டி, பாதி வழுக்கையாக இருக்கிறது. கைகள் குச்சிக்காட்டு நெருஞ்சிமுள்ளாக, ஓர் எலும்பின் நீட்சியாக உடைகளின் மேல் இருக்கின்றன.

``என்ன தேவா பாக்கிற?''

``ஒண்ணும் இல்லை. முப்பத்தஞ்சு வருஷம். நம்ப முடியலை வசா!''

அவள், பெரும் அமைதிக்குள் புதைந்து கிடந்தாள். கண்களில் ஈரம் இல்லை. விட்டத்தை முனைப்போடு வெறித்தாள்.

``நான் நினைக்கலை தேவா, உன்னைப் பார்ப்பேன்னு...'' என்றவள் தலையைத் திருப்பி, ``சாகுறதுக்குள்ள...'' என்றாள். கண்களில் ஓர் ஒளி பிறந்து, அவனை அப்படியே சுருட்டிக்கொள்ளும் பெரும் அலைபோல் படர்ந்தது.

``இப்ப ஒரு படம் வந்துச்சாமே, ரஜினி படம். அதுலகூட இருபத்தஞ்சு வருஷம் கழிச்சு ரஜினியும் அந்தப் பொண்ணும் பாப்பாங்களாமே!''

``ம்...''

``நீ பாத்தியாடா?''

``ஆமா வசா... உன் ஞாபகம் வந்துச்சு.''

``மாயநதி பாட்டுதானே? நீ அந்தப் பாட்டைக் கேட்டிருப்பியானு தோணுச்சு.''

``நீ படம் பாத்தியா?''

அவள் ஜன்னல் வழியே விழும் இளம்வெயிலைப் பார்த்தாள்.

``டி.வி-யில பாத்தேன். இங்கே என்னைப் பாத்துக்க, சுஜாதானு ஒரு பொண்ணு இருக்கா. அவ பாடிக்கூடக் காமிப்பா. அப்ப எல்லாம் அவ கண்ணு மின்னும். எனக்கு அது ரொம்பப் பிடிக்கும். காதலிக்கிறானு நினைக்கிறேன்.''

அவன் அறையைச் சுற்றிமுற்றிப் பார்க்க, அவள் ``சுஜாதாவை சாயந்திரமா வரச் சொல்லிட்டேன். உன்னை ரொமான்ஸ் செய்யுறப்ப, அவ எதுக்கு?'' - அவள் பெரிதாகச் சிரிக்க ஆரம்பிக்கிறாள். மூத்திரப்பை வேகமாக அசைய, அவன் அதிர்ந்து பதறி அவசரமாக அதைப் பிடிக்க முனைய, அவள் சிரிப்பு தேய்கிறது.

``அதெல்லாம் தொடாத தேவா. டேக் யுவர் ஹேண்ட் ஃப்ரம் தட்.''

அவன் மெள்ள அப்படியே நின்று பார்க்கிறான். மூத்திரப்பை, கட்டிலில் உள்ள ஒரு சின்ன ஆணி போன்ற ஊக்கில் மாட்டப்பட்டிருக்கிறது. பாதி நிறைந்த பை. அவன் அதையே நீண்ட நேரமாக வெறிக்கிறான்.

``உக்காரு மயிலு!''

அவன் ஒரு நிமிடம் அதிர்ந்து திரும்புகிறான். கடிகாரம், ஓர் ஆங்கில இசையோடு 11 மணி அடித்தது.

``என்னை நீ மயிலுனு கூப்பிடுறது, இன்னும் ஞாபகத்துல இருக்கு வசா.''

``என்னதான் மறந்துட்டல்ல!''

அவன் லேசாகப் புன்னகைக்கிறான். உதடு ஒரு கோடுபோல் சுழிகிறது. அவள் கையால் மேஜை மீது இருந்த ஃப்ளாஸ்க்கைக் காட்டி, `டீ இருக்கு' எனச் சொல்ல, அவன் எழுந்து இரண்டு கோப்பைகளை எடுத்து ஊற்ற, அவள் ``எனக்கு ஹாஃப் கப் போதும்'' என்றாள்.

``நீ இப்ப டீ எல்லாம் குடிக்கலாமா?''

``எப்பமாச்சும் கொஞ்சம்.''

``ஒரு காலத்துல டீ குடிச்சே வாழ்ந்தேல்ல!''

அப்போது எல்லாம் அவளுக்குத் தேநீர் குடிக்காமல் இருக்கவே முடியாது. இஞ்சியை நசுக்கிப் போட்டு, அது கொதிக்கும்போது சீனி சேர்த்து இறக்க வேண்டும். அம்மாகூட `கடைசியில சீனி போடு வசந்தா' என்பாள். சீனி போட்டுக் கொதிக்கவிட்டால், வசந்தாவுக்குத் தேநீர் தனி ருசியில் இருப்பதுபோல தோன்றும். இவள் தேநீர் குடிக்கும் அழகை எதிர்வீட்டில் இருந்து பார்த்தபடியே இருப்பான் தேவசகாயம்.

``குடிக்கியாடா... ஏன் மொச்சுமொச்சுனு பாக்குற?''

``மொச்சக்கொட்டைக் கண்ணு, மொசக்கட்டான் மனசுல ஊறின மாதிரி இருக்கு.''

``அடச்சீ! மோசமான உதாரணம். பெரீய்ய கவிஞரு!''

``மூதேவி... மூதேவி...''

அவள் பகபகவெனச் சிரிக்கிறாள்.

``மூதேவினு திட்டுனா சிரிக்கிற, மானங்கெட்டவளே!''

வசந்தி, அவனை உற்றுப்பார்க்கிறாள்.

``என்னை நீ `மூதேவி'னு சொல்லுவ இல்லியா..?''

அவன் கண்களில் நீர் துளிர்க்கிறது. அவள், அவனையே உற்றுப்பார்க்கிறாள். அவன் பதற்றத்தோடு கையில் இருக்கும் கடிகாரத்தை மேலும் கீழுமாக ஏற்றி இறக்குகிறான்.

``ஞாபகம் வெச்சிருக்கியா இன்னும்..?''

``பின்ன..?''

``இந்த டீ நல்லா இருக்கா?'' என்கிறாள் ஒரு மிடக்கு அருந்தி.

அவன் சட்டென நிமிர்ந்து... ``இப்படி நான் உன்னைச் சந்திப்பேன்னு நினைச்சதுல்ல.  அப்படியே ஆடிப்போற கை-காலுக்கு அண்டக் குடுக்குற ஆளாட்டம் இருக்கு இந்த டீ.''

அவள் சிரிக்கிறாள்.

``என்னை ஏன்டா நீ கல்யாணம் செஞ்சுக்கலை?''

``ஏன்னா, நீயும் நானும் சண்டையே போட்டுக்கிட்டது இல்லையே... அதான்!''

``கல்யாணம் பண்ணிக்கணும்னா சண்ட போடணும் இல்லையா. யம்மாடியோவ்! நான் வாங்கினேன் பாரு அடி... சண்டைக்காகக் காரணம் தேடுவான் அந்த ஆளு!''

``எப்படி நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சே?''

``ஆத்தி! முப்பத்தஞ்சு வருஷம் கழிச்சு இப்பக் கேட்டே பாரு. அப்டியே நெகிழ்ந்துபோயிட்டேன் போ.''

அவன், அவள் பக்கத்தில் கீழ் இறங்கி உட்கார்ந்து, ``சொல்லு...''

``உங்க வீட்ல, எங்க வீட்ல ஒத்துக்கலை. உனக்கு எதிர்த்து வர மனசு இல்லை. `காத்திரு'னும் சொல்லலை.''

``அப்ப, கல்யாணம் பண்ணிக்காமல்ல இருந்திருக்கணும். ஏன் பண்ணிக்கிட்டே?''

``உன்ன ஏமாத்திக்கிட்டு... அதையும் சேர்த்துடு!''

``உன்னை அக்யூஸ் செய்யலைடீ!''

``தெரியும். ஒரு அக்யூஸ்டே எப்படி அக்யூஸ் செய்ய முடியும் சொல்லு?''

``ந்தா... பொல்லாக் கோபம் வரும் மூ...'' நாக்கைக் கடித்துக்கொள்கிறான்.

அவள் கைகளை நீட்டி அவன் தலைமுடியினுள் விரல்களை அளாவுகிறாள். கை பலமற்று ஒரு புதருக்குள் படரும் உதிர்ந்த சிறகுபோல் இருக்கிறது.

``மூதேவி...'' - அழுத்தமாகச் சொல்லி அவன் உச்சியில் முத்தமிடுகிறாள். மூத்திரப்பை ஆடுகிறது.

``அதைக் கழட்டி, தனியா அந்த நூல்ல கட்ட முடியுமாடா? கொஞ்ச நேரம் எந்திரிச்சு உட்கார்றேன்... முடியுமா?''

``முடியாதுடி... செய்யுன்னு சொல்லு... அதென்ன முடியுமா... அது இதுன்னு... டேஷ்...''

``கெட்டவார்த்த பேசாத... இப்ப எனக்கும் நிறையத் தெரியும். திரும்பத் திட்டிப்புடுவேன்.''

அவன் முகம் மாறுகிறது. சட்டென பையை அவிழ்க்க ஆரம்பிக்கிறான்.

``அசிங்கமாப் பேசுவான்டா அந்த ஆளு. எல்லார்கூடவும் ஒருத்தியால எப்படிப் படுக்க முடியும் சொல்லு?''

``அட விடுடி... பாக்க அமைதியா இருந்தான். என் காதலியை நல்லா வெச்சுப்பான்னு நினைச்சேன்.''

``ப்ச்... எட்டு வருஷ நரகம். யாரும் ஆதரவு இல்ல.''

``விடுங்கிறேன்.''

``அது சரி... நீ நல்லா இருக்கியாடா?''

அவள் கண்கள் பளபளக்கின்றன. அதீதமான ஆர்வம் ஒலிக்கிறது அவள் குரலில்.

``நல்ல பொண்ணு.''

``உன்னை நல்லா பாத்துக்கிறாங்களா?''

அவன் `ஆமா' என்று அவள் கண்களைப் பார்க்க முடியாமல் தலையசைக்கிறான்.

``என்கிட்ட இருந்து தப்பிச்சுட்டடா!''

அவன் சலனம் இல்லாமல் இருக்க, தேநீர் கோப்பைகளின் மீது ஓர் ஈ உட்காருகிறது.

``இப்படி ஒரு பேச்சை நாம பேச, அந்த ஆண்டவன் வெச்சுட்டார்ல.''

``புரியலை!''

``உன் புருஷன் நலமா... உன் பொண்டாட்டி எப்படின்னு நீயும் நானும்...''

``அதுக்கென்ன செய்ய... எல்லாத்தையும் மறக்கத்தான் செய்யணும்.''

``மறந்துட்டியா?''

அந்த அறை முழுக்க, ஆழ்ந்த மெளனம் தன் சிறகை விரித்துப் படபடத்து ஒரு விசைகொண்டு ஆக்கிரமித்ததுபோல் இருந்தது.

``இதுக்கு நான் என்ன சொல்லணும்?''

அவள் நிமிர்ந்து பார்த்து, ``இதைச் சொல்றதுக்கு என்ன இருக்கு? ஆமா, இல்லைன்னா இல்லை.''

``எப்படி ஆமா சொல்ல முடியும்?''

``அப்ப இல்லைன்னு சொல்லு.''

``இல்லைன்னுதான் என் மனைவிக்குச் சொல்லணும்.''

``அவங்களுக்குத் தெரியுமா?''

ஊருக்குப் போனப்ப வசவப்பபுரம் தேவிகா சொல்லியிருக்கா.''

``என்னன்னு?''

``நீயும் நானும் ஏழாப்புல இருந்து லவ் செஞ்சோம்னு.''

அவள் பலமாகச் சிரிக்கிறாள்.

``ஏழாப்புல இருந்தாடா..?''

அவன் பதில் சொல்லாமல், ``எப்ப இந்த கத்தீட்டரை எடுக்கணுமாம்?''

``ஒரு வாரத்துல.''

``அப்புறம் நார்மல் ஆகிடுவல்ல?''

தடயம் - சிறுகதை

``பேச்ச மாத்துற, டகால்டி!''

``இப்ப அதைப் பத்தி பேசி என்ன...''

``பேசினாத்தான் என்ன?

``மோசமான ஆளுடி நீ. மாறல... பிடிவாதம்...''

``அதை மட்டும் பிடிச்சிருந்தா, உன்னைக் கட்டிருப்பேன்.''

``டாக்டர்கிட்ட எப்பப் போணும்?''

``உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்டா.''

``அதை விடுடி...''

``சொல்லாம செத்துப்போயிட்டேன்னா!''

அவன் தோள்கள் ஆரம்பித்து, உடலே ஒரு நிமிடம் ஆடி ஓய்ந்தது.

``போ மாட்டே!''

``எனக்கு அப்ப எல்லாம் பிசார் டெல்யூஷன்ஸ்னு டாக்டர் சொன்னாங்க தேவா. நீ நிக்கிற மாதிரியே இருக்கும். ஆனா, நீ இருக்க மாட்ட.''

``ம்...''

``நான் என்ன பாடமா நடத்துறேன்? டீச்சர் மாதிரி `ம்... ம்...'னு சொல்ற. உன் மனைவிகிட்ட சொல்லிட்டுத்தானே வந்தே?''

`உன் மனைவி' எனச் சொல்லும்போது, அவள் தோள்களைக் குலுக்கிக்கொண்டதைப் பார்க்கிறான்.

``சொல்லிட்டு வந்தேன். ஆனா, உன்னைப் பார்க்கிறதா சொல்லலை.''

``ஏன்டா?''

``தெரியலை... அவளுக்குப் பிடிக்காம இருக்கலாம்னு தோணுச்சு.''

``நானா இருந்தா, யார்டா அவ நம்மளவிட அதிக அன்பு செலுத்தின பாவினு பாக்க, உன்கூடவே வந்திருப்பேன்.''

``த்தூ... மூதேவி... பேச்சைப் பாரு!''

அவள் சிரிக்கிறாள்.

``கல்யாணம் ஆனா பாவம்டா. யாரும் அவங்க அவங்களா இருக்கிறது இல்லை, இருக்க முடியுறதும் இல்லை. யாரு  யாரை டாமினேட் செய்யலாம்னுதான் நினைக்கிறாங்க. லேடீஸ் மட்டும் இல்லை, எத்தனை ஆம்பிளைங்க கஷ்டப்படுறாங்க தெரியுமா?''

``எனக்கு அப்படி அழுத்தம் இல்லை வசா.''

``நான் உன்னைச் சொல்லலையே! பொதுவா கல்யாணம்கிற சிஸ்டம் தோத்துடுச்சு. சும்மா மீற முடியாம, அன்பா இல்லாம, அன்பைக் காட்டாம, செக்ஸை மட்டும் நம்பிக்கிட்டு பாதி ரிலேஷன்ஷிப் இருக்கு. கள்ளக்காதல், உல்லாசம்னு பேப்பர்ல நியூஸ் வருதே... என்னத்துக்குப் போறாங்கன்னு யார் புரிஞ்சுக்கிறா?''

``பார்ரா... பேசுறத!''

``என்னைக் கொஞ்சம் மேல தூக்கி வையேன்!''

அவன், அவளை நெஞ்சோடு அணைத்து மேலே தூக்கி வைக்கிறான். வெள்ளை நிறச் சட்டை, ரோஜா இதழ்களில் மிதக்கும் வாசனையைக் கொண்டிருந்தது.

அவள் அவனையே இமை கொட்டாமல் பார்க்கிறாள்.

``என்னடா?''

``ஒண்ணா கூட இருந்தாத்தான் கல்யாணம் ஆனவங்களா? தாலி கட்டி, ஒருநாள் மண்டபம், சோறு, விருந்து எல்லாம் இருந்தாத்தான் கல்யாணம் என்ன... ஒன்னெஸ்... அது இந்தச் சடங்குல இருக்கா?''

``பெரிய லாயர் நீ...''

``இல்லைடா... சீரியஸாக் கேக்குறேன் சொல்லு. அம்பேத்கருக்குப் பிறகு இந்தச் சமூகத்தை யார் மறுகட்டமைப்பு செஞ்சா சொல்லு? இந்தச் சமூகத்தோட உறவுச் சிக்கல்களை எப்படி அணுகுறாங்க?''

``உன்னையும் என்னையும் பார்த்தாக்கூட தப்பாத்தான் பேசுவாங்க.''

``ஆமா... கள்ளக்காதலர்கள்.''

இருவரும் சிரிக்கச் சிரிக்க, அவர்கள் கண்கள் உற்றுப்பார்க்கின்றன; கைகள் கோத்துக் கொள்கின்றன.

``எதுக்கு சொல்ல வந்தேன்னா... யோசிச்சுப்பார்த்தா, நான் உன்னை எப்பமோ கல்யாணம் கட்டிருக்கேன்... மனசுல. அதான் அது இத்தனை வருஷம் கழிச்சும் நிக்குது. நிசமா நடந்தது எல்லாம் ரெண்டாம் கல்யாணம்தான்.''

``கனவுல... அடுத்த ஜென்மத்துல...'''

``இல்லை. என்னோட டெலூஷன்ஸ்ல. உனக்குத் தெரியுமா... நான் செத்தா உன்கிட்ட சொல்லச் சொல்லி சுஜாதாகிட்ட சொல்லிருக்கேன். ஃபோர்த் ஸ்டேஜ் கேன்சர். ரொம்ப நாள் தாங்காது.''
``அதை விடு... சும்மா பினாத்தாத!''

``உன்கிட்ட யார் சொன்னா?''

``பெரிய சி.பி.ஐ.''

``நீ வர்றேன்னு போன் பண்ணப்ப, செத்துட்டேன்டா!''

அவன் அவள் தலையைக் கோத, அவள் கண்களில் நீர் துளிர்க்கப் பார்க்கிறாள்.

``அன்பால சாகடிக்கப்போறியா?''

அவன் தலையை மேலும் கீழும் அசைத்து அவள் உள்ளங்கையில் முத்தமிடுகிறான்.

``பரிதாப முத்தங்களை இயேசு நிராகரிப்பார்.''

``துரோக முத்தங்களை யூதாஸ் மாதிரி நீ கொடுத்துப் போனாயடி, இயேசு அல்லாத எனக்கு.''

இருவரும் இறுக்கிக்கொள்கின்றனர். அவள் உடலின் வலிமையின்மையை உணர்ந்தாற்போல் கண் கலங்குகிறான் அவன்.

`` `அடிக்கடி வா'னு சொல்ல முடியலைடா. ஆனா, நீ வரணும்னு தோணுது.''

``வரணும்னுதான் தோணுது. ஆனா, வர முடியாது வசா.''

தடயம் - சிறுகதை

``கான்ஃப்ளிக்ட். இதான் வாழ்க்கைல்ல?''

அவள், அவனை பக்கத்தில் உட்காரச் சொல்லி கை நீட்டுகிறாள்.

``நான் செத்தா வா... முழுக்க என்கூடயே இரு... அழாக அனுப்பிவை.''

``வாயை மூடுடி மூ...''

``தேவி...''

அவன், அவளை இறுக அணைத்து உதடுகளைத் தேடுகிறான். அவன் மூச்சுக்காற்றின் வெப்பம், அவள் நாசியில் வந்து சுழல்கிறது.

அவள் அவனை மெலிந்த கரங்களால் தள்ளி, ``உன் பசங்க என்ன படிக்கிறாங்க?'' என்று கேட்கிறாள்.

அவன் வெடி வெடித்தாற்போல் சிரிக்கிறான். அவள் கன்னத்தில் தட்டி, ``புத்திசாலிடி நீ!'' என்கிறான்.

``இல்லைடா, நான் மக்கு. இல்லைன்னா உன்னைக் கட்டிருப்பேன்.''

``நான் அடிக்கடி வர்றேன் உன்னைப் பார்க்க.''

``வேணாம்... நீ யார்கிட்டயும் பொய் சொல்லக் கூடாது. அப்படி சொல்றப்ப நீ தவிப்ப. உன்னைக் கஷ்டப்படுத்திடக் கூடாது என் காதல்.''

அவன் மீண்டும் அவளை இறுக அணைக்கிறான். அவள் கண்களின் பக்கம் வந்து உதடுகளைக் குவிக்க, அவள் மெள்ள கண்ணீர் வடிய புன்னகைக்கிறாள்.

``நீ கோட்டை கட்டாத... உனக்குக் கொடுக்கப்பட்ட அந்த முதல் முத்தம் முதல் முத்தமாவே இருக்கட்டும்... புரியுதா?''

நீண்ட மெளனத்துக்குப் பிறகு அவன் அவளைவிட்டு விலகி நிற்க, அவன் அவளைப் படுக்கவைக்கிறான்.

மூத்திரப்பையை, கட்டிலில் மாட்டியபடியே ``தைரியமா இரு... உனக்கு ஒண்ணும் இல்லை. நான் எப்பவும் உன்கூடத்தான் இருப்பேன். சரியா?'' என்றான்.

அவன் செல்போன் அடிக்கிறது. எடுப்பவன் மெல்லிய குரலில்... ``வேலையில இருக்கேன்மா. இப்ப கிளம்பிடுவேன்.''

அவன் எழுந்து நின்று வசந்தியைப் பார்த்து வெற்றாகச் சிரித்து, ``வரட்டா?'' என்றான்.