Published:Updated:

எமக்குத் தொழில் கவிதை - கவிதை பற்றிய பார்வைகள் - மனுஷ்ய புத்திரன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எமக்குத் தொழில் கவிதை - கவிதை பற்றிய பார்வைகள் - மனுஷ்ய புத்திரன்
எமக்குத் தொழில் கவிதை - கவிதை பற்றிய பார்வைகள் - மனுஷ்ய புத்திரன்

சிற்பம்: ராஜ்குமார் ஸ்தபதி, ஓவியம்: செந்தில்

பிரீமியம் ஸ்டோரி
எமக்குத் தொழில் கவிதை - கவிதை பற்றிய பார்வைகள் - மனுஷ்ய புத்திரன்

கவிதையின் வரலாற்றைச் சொல்பவர்கள் மூன்று தளங்களில் இருக்கிறார்கள். கல்விப்புலம் சார்ந்த ஆய்வாளர்கள், கோட்பாடு வழிப்பட்ட விமர்சகர்கள், ரசனை மற்றும் அழகியல் சார்ந்த விமர்சகர்கள். கவிதையின் வரலாற்றை எழுதுவது பத்தொன்பதாம் நூற்றாண்டு வரைகூட குழப்பம் இல்லாமல் இருக்கிறது. ஆனால், புதுக்கவிதை பிறந்த பிறகு நவீனக் கவிதை வரலாற்றை எழுதுபவர்களுக்கு, பல்வேறு மனச்சாய்வுகளும் பாரபட்சங்களும் வந்துவிடுகின்றன. தமிழவன், நாகார்ஜுனன், எம்.டி.முத்துக்குமாரசாமி போன்றவர்கள் அமைப்பியல் மற்றும் பின்நவீனத்துவ நோக்கில் எழுதிய கவிதை விமர்சனங்கள் தமிழ்க் கவிதையைப் படிப்பதில் சில புதிய சாத்தியங்களை வழங்கின. பிரம்மராஜன் மேற்கொண்ட ஐரோப்பியக் கவிஞர்களின் மொழிபெயர்ப்புகளும் அவர்களது கவிதையியல் குறித்துத் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளும் நவீனக் கவிதை மொழியை வெகுவாகப் பாதித்தன. விக்கிரமாதித்யன் போன்றவர்கள் எழுதிய ரசனை சார்ந்த கவிதை அறிமுகங்கள் ஒருபுறம் என்றால், முனைவர் பட்ட ஆய்வுகளுக்காகச் செய்யப்பட்ட புதுக்கவிதை தொடர்பான வெற்று ஆராய்ச்சிகள், இன்னொரு புறமாக நவீனக் கவிதை பற்றிய பேச்சுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. தமிழில் கவிதைகள் எழுதப்பட்ட, எழுதப்படுகிற அளவு, கவிதைகள் பற்றிய பேச்சுகள் நிகழவில்லை. 

எது கவிதை?

இரண்டாயிரம் வருடக் கவிதை மரபின் தோள்களில் அமர்ந்திருக்கிற கவிஞன், கவிதை விமர்சகன், கவிதை வாசகன் மூவருமே பல்வேறு சவால்களைச் சந்திக்கிறார்கள். கவிதைகளின் இந்தப் பெருவெள்ளத்தில் நீந்தி ஒருவர் கரை சேர வேண்டும் என்றால், அவருக்குக் கடும் பிரயத்தனங்கள் தேவையாக இருக்கின்றன. பெரும்பாலான தமிழர்கள் ஏதோ ஒரு வகையில் கவிதையால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தப் பிணைப்பு மனமுருகிப் பாடும் தேவாரத்திலும் திருவாசகத்திலும் ஆண்டாளின் பாசுரங்களிலும் இருக்கிறது. ஒருபோதும் பின்பற்றப்படாத திருக்குறள் போன்ற நீதி நூல்களில் இருக்கிறது. நாட்டார் மரபின் ஏற்றப் பாடல்களில் இருக்கிறது. கம்பராமாயணச் சொற்பொழிவுகளில் இருக்கிறது. பட்டிமன்றங்களில் சொற்களின் பரல்கள் சிதறும் சிலப்பதிகாரத்தில் இருக்கிறது. பழமொழிகளில் இருக்கிறது. ஆயிரம் முறை கேட்டு ஆயிரம் முறை கண்ணீர்விட்டு அழும் சினிமாப் பாடல்களில் இருக்கிறது. திராவிட மரபு உருவாக்கிய மேடைப் பேச்சுகளின் அடுக்குமொழியில் இருக்கிறது. இடதுசாரிகள் எழுதும் புரட்சிப் பதாகைகளில் இருக்கிறது. நகைக்கடை விளம்பரப் பாடல்களில் இருக்கிறது. கானாப் பாடல்களில் இருக்கிறது. குழந்தைகள் பாடும் பாடல்களில் இருக்கிறது. சிசுக்களை அணைத்துப் பாடும் தாலாட்டிலும் பிணங்களின் தலைமாட்டில் அமர்ந்து பாடும் ஒப்பாரியிலும் அது இருக்கிறது. நமது ஜோதிட, மருத்துவ ரகசியக் குறிப்புகளில் இருக்கிறது. வெண்பாவிலும் ஹைக்கூவிலும் இருக்கிறது. கல்லூரி மாணவிகள் குறுஞ்சிரிப்புடன் படிக்கும் ஆர்ட் பேப்பரில் அச்சிடப்பட்ட வண்ணப்படங்களுடன் கூடிய தபு சங்கர் போன்றவர்கள் எழுதும் காதல் லாகிரிகளில் இருக்கிறது. இளைஞர்கள் எழுதும் காதல் கடிதங்களில் இருக்கிறது. ‘கரம் சிரம் புறம் நீட்டாதீர்’ என்று எழுதப்படும் வாசகங்களில் இருக்கிறது. ஃபேஸ்புக்கில் தினமும் எழுதப்படும் ஒரு லட்சம் கவிதைகளில் இருக்கிறது. தமிழனுக்குக் கவிதை எங்குதான் இல்லை? ஓர் ஆண் ஒரு பெண்ணைப் பார்த்து “நீ கவிதைபோல இருக்கிறாய்’’ என்றோ அல்லது ஒரு பெண் “தங்கள் வாழ்க்கை ஒரு கவிதை போன்றது” என்றோ சொல்லும்போது,  வாழ்வின் உயர்வு நவிற்சிமிக்க எதுவும் கவிதை என்ற படிமமாகத்தான் அவர்கள் மனதில் பதிகிறது. எல்லோரும் கவிஞனாக வாழும் ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்க சமூகத்தில் தனிப்பட்ட ஒரு கவிஞன் ‘என்னை ஏன் மற்றவர்கள் கொண்டாடவில்லை’ என்று புகார்செய்வது எனக்கு முறையாகப்படவில்லை. எட்டுக் கோடித் தமிழர்களும் பரஸ்பரம் கொண்டாடிக்கொள்ள வேண்டும் என்பதுதான் உண்மை.

தமிழ்க் கவிதையின் ஆதி நிலம்

தென்னிந்திய திராவிட மொழிகளின் முதன்மையான மொழியான தமிழின் கவிதை வரலாறுதான் தமிழின் வரலாறாகவும் இருக்கிறது. கி.பி முதல் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டின் மையப்பகுதி வரையிலான ‘சங்க காலம்’ என வரையறுக்கப்படும் காலத்தில், எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமான பெரும் இலக்கியத் தொகுதிகள் உள்ளன. இதில் தலைவன், தலைவிக்குப் பெயர்கள் இல்லை. ஊர், இடம் சூழல் பற்றிய நேரடித் தகவல்கள் இல்லை. கவிதையில் இடம் பெறும் உட்குறிப்புகளின் வழியாகவே இதை அறிய வேண்டியிருக்கிறது. நவீனக் கவிதையும் இப்படித்தான் பேசுகிறது. முகமற்ற, அடையாளமற்ற குரல்களின் வழியாகத்தான் நவீனக் கவிதை தன்னை உருவாக்கிக்கொள்கிறது எனும்போது, அதில் நவீனத்துவம் சார்ந்த பண்பு மட்டுமல்ல, ஒரு மரபு சார்ந்த பண்பும் இருக்கிறது.

பின்னர், சங்கம் மருவிய கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பல்லவ, பாண்டியப் பேரரசுகள் எழுச்சி பெற்ற கி.பி 560 முதல் 590 வரையிலான காலத்தில், சமண, பெளத்த மரபின் பெரும் எழுச்சி நிகழ்கிறது. சங்க காலமான வேளாண்மை சார்ந்த, நிலம் சார்ந்த இனக்குழு சமூகக் கவிதை மரபு, இறுக்கமான சமூக விதிமுறைகளைக் கோரும் வணிக சமூகக் கவிதை நோக்கி நகர்ந்தது. அறத்தையும் ஒழுக்கத்தையும் வாழ்வியலையும் போதிக்கும் இலக்கியங்கள் மேலெழுந்து வந்தன. ஐம்பெரும் காப்பியங்களான

எமக்குத் தொழில் கவிதை - கவிதை பற்றிய பார்வைகள் - மனுஷ்ய புத்திரன்

சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி ஆகியவையும் ஐஞ்சிறு காப்பியங்களான சூளாமணி, யசோதர காவியம், உதயண குமார காவியம், நீலகேசி, நாககுமார காவியம் மற்றும் பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் ஆகியன பெளத்த, சமண மரபுகள் கவிதைகளில் செலுத்திய தாக்கத்திற்குச் சிறந்த உதாரணங்கள். திருக்குறளுமே இவற்றின் செல்வாக்கிற்கு உட்பட்டதுதான் என்ற கருத்து இருக்கிறது. யுத்தமும் காதலும் இயற்கையும் பேசப்பட்ட தமிழ்க் கவிதை, அறம்சார் விவாதங்களுக்குள் நகர்ந்து சென்ற காலம் இது.

பக்தி இலக்கியங்கள்

கி.பி ஆறாம் நூற்றாண்டில் சமண, பெளத்த மரபுகளுக்கு எதிராக நிகழ்ந்த சைவ, வைணவ எழுச்சி, மதம்சார் பரப்புரைகளில் கவிதையின் பாத்திரத்தை ஆழமாக முன்னிறுத்தியது. ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாடல்கள் மிக வலிமையான பக்தி இலக்கிய மரபை நிறுவின. தமிழ்க் கவிதை அறம்சார் பேச்சுகளிலிருந்து முழுமையான சரணடைதலின் இன்னொரு யுகத்திற்குள் பிரவேசித்தது. சேக்கிழாரின் பெரிய புராணமும் கம்ப ராமாயணமும் பக்தி இலக்கிய மரபின் உச்சங்களைத் தொட்டன. தலைவன் – தலைவியைக்கொண்ட சங்கக் கவிதை மரபு, நாயகன் – நாயகி என்ற தெய்வீக மரபாக மாறுதலடைந்தது. இயற்கை சார்ந்த வெளிப்பாட்டு முறைகளின் மேல் தெய்வத்தின் குரல்கள் நுழையத் தொடங்கின.

கலகக்காரர்கள்

பக்தி மரபு உருவாக்கிய வைதீகக் கவிதை இயலுக்கு எதிராக  சித்தர் மரபின் கலகக் குரல் தமிழ்க் கவிதையில் வெடித்தது. ஆன்மிகச் சட்டகத்திற்கு உள்ளாகவே நின்று பக்திக் கலாச்சாரத்தின் போலித்தனங்களையும் சம்பிரதாயங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் சித்தர்கள் கடுமையாகத் தாக்கினார்கள். உடலுக்கு மேலாக மனதை ஆன்மாவை வைக்கும் வைதீக மரபை எதிர்த்து, உடலை மையப்படுத்திய எதிர்மரபை முன்வைத்தார்கள். திருமூலரின் காலம் ஆறாம் நூற்றாண்டு என்று ஒரு கருத்து இருக்கிறது. சித்தர்கள் இடைக்காலத்தைச் சேர்ந்தவர்களா, பிற்காலத்தைச் சேர்ந்தவர்களா என்ற குழப்பம் இன்றும் நீடித்திருக்கிறது.

ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிறகு, சோழர்களுடைய காலத்தில் தமிழ் மொழியிலும் தமிழ்க்கவிதையிலும் வடமொழியின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. வடமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தல், வடமொழிக் காப்பியங்களைத் தமிழில் படைத்தல் என இந்த இயக்கம் நிகழ்கிறது. 

காரிருள் சூழ்ந்த காலம்

சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தமிழ்க்கவிதையின் போக்குகள் சிதறுண்டவையாக இருக்கின்றன. கி.பி 13-ம் நூற்றாண்டிலிருந்து 18-ம் நூற்றாண்டு வரையிலான இக்காலகட்டத்தில் தமிழர்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு வாழ்க்கை மட்டுமல்ல, தமிழ்க் கவிதையும் காரிருளில் ஆழ்ந்தது. பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர், மராட்டிய, இஸ்லாமியப் படையெடுப்புகள் விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலம், அதன் விளைவாகத் தோன்றிய நாயக்கர்களின் ஆட்சி, பிரெஞ்சு, ஆங்கிலேய மேலாதிக்கங்கள் என இக்காலகட்டத்தில் தமிழ்ப் பண்பாடும் தமிழ்க் கவிதையும் முகமற்ற ஒன்றாக மாறின. சமஸ்கிருதத்தோடு தெலுங்கு, கன்னடச் சொற்கள் அரசியல் ஆதிக்கங்களாலும் படையெடுப்புகளாலும் தமிழ் மொழியை ஆட்கொண்டன.

பொதுவாக, சங்க காலத்திற்குப் பிறகு தத்துவம் அறம் சார்ந்த போதனைகளாகவோ, வழிபாடுகளாகவோ, தத்துவங்களுக்கு இடையிலான மோதலாகவோதான் ஒரு கருத்தியல் கருவியாகத் தமிழ்க்கவிதையின் பெரும் பகுதி செயல்பட்டு வந்திருக்கிறது.

13-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தொல்காப்பியத்திற்குப் பிறகான இலக்கண நூல்களில் மாபெரும் இலக்கண நூலான நன்னூல்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே’’

என்று மாற்றத்தின் நியதியை அறிவிக்கிறது. ஆனால், 13-ம் நூற்றாண்டிலிருந்து 17-ம் நூற்றாண்டு வரை தமிழ்க் கவிதையில், மொழியில் நிகழ்ந்த மாற்றங்களைப் பேசும் குறிப்பிடத்தக்க வேறு இலக்கண நூல்கள் இல்லை. ஏராளமான செய்யுள்களும் அவற்றின் சாரமற்ற கவித்துவ அலங்காரங்களுமே நமக்குக் கிடைக்கின்றன. நிகண்டுகள் உருவான காலம் இது. இதை தமிழ்க் கவிதையின் இருண்ட காலம் என்றே சொல்ல வேண்டும். அந்நியப் படையெடுப்பாளர்களால் மணிப்பிரவாளமாக மாறி தமிழ் சீரழிந்த காலமும் இதுதான். தனி நபர் புகழ் பாடும், தெய்வத்தின் புகழ் பாடும் புராணங்கள், சாதிப்பெருமை பாடும் புராணங்கள் எனக் கவிதை கெட்டித்தட்டிப்போன தருணத்தில், வேறு சில மாற்றங்களும் நடந்தன.

பேரிலக்கியங்களுக்குப் பதில் சிற்றிலக்கியங்கள் பெருகிய இக்காலத்தில், இலக்கண செவ்வியல் மொழி நடையிலிருந்து தமிழ்க் கவிதை மக்களின் பேச்சுத் தமிழை உள்வாங்க ஆரம்பித்தது. குறவஞ்சி, பள்ளு, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நான்மணிமாலை, படிக்காசு புலவரின் தொண்டை மண்டல சதகம், தாயுமானவரின் பாடல்கள், உமறுப்புலவரின் சீறாப்புராணம் எனத் தமிழ்க் கவிதையின் சொல்முறையும் உள்ளடக்கமும் மெள்ள மாற ஆரம்பித்தன. தனிப் பாடல்களில் தமிழ்க்கவிதையின் இறுக்கம் தளரத் துவங்கியது. அதேபோல, 17-ம் நூற்றாண்டில் இங்கு குடியேறிய கிறித்துவப் பாதிரியார்கள் தமிழ் மொழிக்கும் கவிதைக்கும் தங்கள் பங்களிப்புகளைச் செய்யத் தொடங்கினார்கள். அகராதிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்கள். வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணிதான் தமிழில் நீண்ட காலத்திற்குப் பின் தோன்றிய காப்பியமாகக் கருதப்படுகிறது. இவரே ‘பரமார்த்த குரு’ கதைகள் மூலம் தமிழில் நவீன உரைநடைக்கும் வித்திடுகிறார். தொடர்ந்து உரையாசிரியர்கள் பிறக்கிறார்கள்.

19-ம் நூற்றாண்டில் புலவர்களின் வறண்ட செய்யுள் நடை வாழ்விலிருந்து முற்றிலும் அந்நியப்பட்டதாக இருந்தது. சித்திரக் கவிதைகள், யமகம், சிலேடை எனப் பொழுது போய்க்கொண்டிருந்த காலத்தில், ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற ராமலிங்க வள்ளலாரின் குரல், கவிதையின் மானுட சாரத்தை மீண்டும் மீட்பதாக இருந்தது. கோபாலகிருஷ்ண பாரதியார், மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை முதலானோர் கவிதை முறையினை மனித வாழ்வின், சமூக வாழ்வின் உணர்ச்சிகரமான மனவெழுச்சியை நோக்கி நகர்த்தினார்கள்.

புதுயுகத்தின் பிறப்பு

கம்பனுக்குப் பிறகு தமிழ்க் கவிதை நிலம் ஒரு மகா கவிஞனுக்காக ஓராயிரம் ஆண்டு காலம் காத்திருந்தது. ‘புவியனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்து தமிழ் மொழியைப் புகழிலேற்றும் கவியரசன் தமிழ்நாட்டிற்கு இல்லை எனும் வசை தன்னால் கழியும் பொருட்டு’ பாரதி தோன்றினான். தமிழ்க் கவிதை மரபின் மிகப் பெரிய வரலாற்று வெடிப்பு அது. சொல் புதிது, சுவை புதிது, பொருள் புதிது என சோதிமிகு நவகவிதை பிறந்த தருணம் அது. ஜமீன்தார்களுக்கு எழுதிக்கொண்டிருந்த சீட்டுக் கவிகளுக்கு நடுவே ஒரு யுகசந்தியாய் பாரதி வருகிறான். தமிழ்க் கவிதை தனது ஆயிரம் ஆண்டுகால சடவை முறித்தெழுந்தது. சங்கக் கவிதை மரபு, சித்தர் மரபு, பக்தி இலக்கிய மரபு, வடமொழி இலக்கிய மரபு, ஐரோப்பிய இலக்கிய மரபு என மாபெரும் நதிகள் இணைந்த ஒரு பெரும் கடலாக பாரதியின் கவிதை இயக்கம் நிகழ்ந்தது. ஆம் கடைசியில் பாரதியின் வழியே தமிழில் நவீனத்துவம் உண்மையாகவே பிறந்துவிட்டது. கவிதையின் ஆயிரமாண்டு துருப்பிடித்த கதவுகளை பாரதி எட்டி உதைத்துத் திறந்தான். பாரதியின் கவிதைகளும் உரைநடையும் அதுவரையிலான தமிழின் புழங்குமுறையை மாற்றியமைத்தன. பாரதியின் கவிதை இயக்கம் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை எனப் பல கவிஞர்களுக்கு உத்வேகம் அளித்தது. 

ஆனால், பாரதின் கவித்துவ உத்வேகத்தின் நெருப்பை முழுமையாகக் கையில் ஏந்திச் சென்ற கவி பாரதிதாசனே. தேசிய இயக்கமும் பக்தி மரபும் பாரதியை ஆட்கொண்டதென்றால், இன மொழி உரிமைப் போராட்டமும் பகுத்தறிவுவாதமும் பாரதிதாசனை ஆட்கொண்டன. தமிழகத்தின் இரு பெரும் இயக்கங்களின் குறியீடாக பாரதியும் பாரதிதாசனும் இன்று இருக்கிறார்கள். பொதுவுடமை சார்ந்த கவிதையின் கிளை ஒன்று ஜீவாவின் வழியே வளர்ந்தது.

புதுக்கவிதையும் புதுப்பார்வையும்

பாரதி உருவாக்கிய வசன கவிதை முயற்சிகளுக்குப் பிறகு, செய்யுள் தளையிலிருந்து விடுபட்ட கவிதைகளை எழுதிப்பார்க்கும் முயற்சிகள் தமிழில் பிறந்தன. ந.பிச்சமூர்த்தியும் கு.ப.ராஜகோபாலனும்

எமக்குத் தொழில் கவிதை - கவிதை பற்றிய பார்வைகள் - மனுஷ்ய புத்திரன்

சுதந்திரமான வடிவிலான கவிதைகளை முதலில் எழுதினார்கள். ‘மணிக்கொடி’ இதழில் ந.பிச்சமுர்த்தி ‘காட்டு வாத்து’ என்ற இலக்கணம் கடந்த கவிதையை 1934-ல் எழுதுகிறார். பிறகு மயன் என்ற பெயரில் க.நா.சு வும் வல்லிக்கண்ணனும் இந்த இயக்கத்தில் இணைந்துகொண்டார்கள். இலக்கணம் கடந்த கவிதை முயற்சிகள் பண்டிதர்களால் எள்ளி நகையாடப்பட்டன. புதுக்கவிதை தன்னை நிலை நிறுத்திக்கொள்ள ஒரு கருத்தியல் கோட்பாட்டுத்தளம் தேவையாக இருந்தது. 1950-களின் இறுதியில் சி.சு.செல்லப்பா வெளியிடத் தொடங்கிய ‘எழுத்து’ இதழ் இந்தக் களத்தை உருவாக்கியது. எழுத்து நவீனக் கவிஞர்களின் பெரும் பரம்பரை ஒன்றை உருவாக்கியது. நகுலன், பசுவய்யா, தி.சு.வேணுகோபாலன், சி. மணி, பிரமிள், எஸ்.வைத்தீஸ்வரன் எனப் பல கவிஞர்கள் ஓர் அலையென உருவாகி வந்தார்கள். ‘எழுத்து’ இதழ் புதுக்கவிதையின் அழகியலைப் பேசும் பல விவாதங்களை உருவாக்கியது. நவீனக் கவிதையின் முதல் காலகட்டத்தில் பண்டிதர்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பின என்றால், 60-களில் இடதுசாரிகளிடமிருந்து அது கண்டனங்களைச் சந்தித்தது. நவீனக் கவிதைகள் வெளிப்படுத்தும் மன உலகை இடதுசாரி விமர்சகர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவை தனிமையையும் மனச்சிதைவையும் பாலியல் பிறழ்வுகளையும் பேசுகின்றன என்று தட்டையாகப் புரிந்துகொண்டார்கள். நவீன யுகம் உருவாக்கும் இருத்தலியல் நெருக்கடிகள்தான், நவீனக் கவிதையின் உள்ளடக்கமாகவும் மொழியாகவும் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளாதது மட்டுமல்ல, கவிதை சமூக மாற்றத்திற்கான நெம்புகோல் என்பதைக் கடந்து, அவர்களால் வர இயலவில்லை. அன்றாட வாழ்வின் பாடுகளும் மனிதர்களின் கூசச்செய்யும் அந்தரங்கங்களும் பேசப்பட வேண்டிய காலத்தில், சமூகம் சார்ந்த லட்சியவாத அணுகுமுறை மானுட எதார்த்தத்தைப் புறம் தள்ளியது என்றுதான் சொல்ல வேண்டும்.

பசுவய்யாவின் கவிதைகளில் தத்துவம் சார்ந்த கேள்விகளும், நகுலனின் கவிதைகளில் பிரக்ஞை தாண்டிய பிம்பங்களும், பிரமிளின் கவிதைகளில் மனஎழுச்சி மிக்க உக்கிரமான படிமங்களும், சி.மணியின் கவிதைகளில் நவீன வாழ்வின் குரூர அங்கதமும் தீவிரமாக வெளிப்பட்டன. அறுபதுகளில் எழுதிய புதுக்கவிஞர்களிடம் மரபின் மீதான ஒரு எதிர்ப்பு உணர்ச்சி இருந்தபோதும் அவர்களிடம் ஓர் ஆன்மிகத் தளமும் இணைந்தே இயங்கியது. 70-களில் எழுதவந்த கவிஞர்களிடம் உடைந்த மனோரதங்களின் சொற்கள் இன்னும் உக்கிரமடைந்தன. அந்நியமாதல், கோட்பாடுகளின் தோல்வி, நகர்மயமாதலின் சிதைவுகள், பண்பாட்டு வாழ்க்கை சார்ந்த குழப்பங்கள் கவிதைகளில் தீவிரமாக வெளிப்பட்டன. கவிதை இப்போது ஒரு தனிமனிதனின் கோபமாகவும் எள்ளலாகவும் தீனக்குரலாகவும் மாறியது. 1970-களில் வெளிவந்த ‘கசடதபற’ இதழ் நவீனக் கவிதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. அதன் வழியே உருவாகி வந்த கவிஞர்களில் முதன்மையானவர் ஞானக்கூத்தன். அவர் தமிழ்ச் சமூகத்தின் நவீன அபத்தங்களைக் கடுமையாகத் தாக்கினார். அவர் திராவிட இயக்க அரசியலைப் பகடிசெய்தபோதும் அவர் அதைப் பிற்போக்கான ஒரு தளத்திலிருந்து செய்யவில்லை. அவர் அசலான ஒரு நவீனத்துவராக இருந்தார். தமிழ்க்கவிதையில் மரபிற்கும் நவீனத்துவத்திற்கும் இடையே நடந்த  உரையாடலின் கடைசிக்கண்ணி ஞானக்கூத்தனே. நாரணோ ஜெயராம் முதலான பலரும் தமிழ்க் கவிதையில் தீவிரமாகச் செயல்பட்ட காலம் இது.

வானம்பாடிகள்

‘எழுத்து’, ‘கசடதபற’ போன்ற இதழ்களின் வழியே இயங்கிய கவிஞர்களில் பெரும்பாலானோர் பிராமணர்களாக இருந்தது ஆச்சரியம் அல்ல.  ஆங்கிலப் படிப்பிற்கும்  நவீனத் தொழில் மற்றும் வாழ்க்கைமுறைக்கும் உடனடியாக முகம் கொடுத்தவர்கள் என்ற முறையில், அவர்கள் முதல் தலைமுறை நவீனத்துவர்களாக உருக்கொண்டது இயற்கையானதே. மணிக்கொடி இயக்கம் தேசிய இயக்கத்தை உள்வாங்கிக்கொண்டதுபோல, 60-களுக்குப் பிந்தைய தமிழ் சிற்றிதழ் இயக்கம் தமிழகத்தின் திராவிட அரசியலையோ, இடதுசாரி அரசியலையோ உள்வாங்கிக்கொள்ளவில்லை. அவற்றின் மீது நவீனக் கவிஞர்களுக்கு மனதின் அடியாழத்தில் ஓர் ஒவ்வாமை இருந்தது. தங்களுடைய செவ்வியல் மரபுசார் கனவுகள் முறிந்த நிலையில், தாங்கள் வாழும் காலத்தின் பல்வேறு முரண்களைக் கவிதைகளுக்குள் கையாள இயலாமல் விலகிச் சென்றார்கள், அல்லது ஐரோப்பியக் கவிதைகளில் இருந்து பெற்ற ஆன்மிக இருண்மைக்குள் புதைந்துகொண்டார்கள். வாழ்வின் மெல்லிய நுட்பமான தருணங்களைக் கண்டடைவதே கவிதை என்று வரையறுத்துக்கொண்டார்கள் அல்லது தங்களுக்கு ஒவ்வாத சமூக எதார்த்தத்தைக் கேலி செய்தார்கள். காரணம் தெரியாமல் குரைக்கும் நாய்களைப் பற்றிய ஞானக்கூத்தனின் கவிதையும் இசங்களைப் பற்றிய பசுவய்யாவின் எள்ளல் கவிதையும் இதைத்தான் வெளிப்படுத்துகின்றன. ஆனால், ‘குரைக்கும் நாய்களுக்கு’ சமூக மாற்றத்திற்கான திட்டவட்டமான நோக்கங்கள் இருந்தன. ஆனால் அன்றைய தமிழ்ச் சமூகம் பற்றிய அசலான சித்திரங்கள் இந்தக் கவிஞர்களிடம் இருந்துதான் கிடைக்கின்றன என்பது ஒரு நகைமுரண்.

எழுத்து மரபு சார்ந்த கவிஞர்கள் உருவாக்கிய கவிதை அழகியலுக்கு எதிராக, 70-களில் வானம்பாடி இதழ்களின் வழியாக வேறொரு கவிதை மரபு உருவாக்கப்பட்டது. இதை ஓர் இலக்கிய மரபு என்று சொல்வதா அல்லது பிராமணர் அல்லாத கவிஞர்களின் இயக்கம் என்று சொல்வதா என்று குழப்பமாக இருந்தது. இடதுசாரி இயக்கங்களோ, திராவிட இயக்கங்களோ, நவீனக் கவிதை வடிவத்தின்பால் பெரிய அக்கறையும் ஆர்வமும் காட்டாத சூழலில், இந்த இயக்கங்களினால் உந்துதல் பெற்ற அமைப்பு சாராத பல கவிஞர்களுக்கு வானம்பாடி ஒரு நிழலாக இருந்தது. வானம்பாடியில் எழுதியவர்கள் எல்லாம் வசந்தத்தின் வருகையைப் பாடிய புரட்சிகரக் கவிஞர்கள் அல்ல. ஞானி, ஜன.சுந்தரம், புவியரசு, சிற்பி, அக்கினிபுத்திரன், முல்லை ஆதவன், இளம்முருகு, மு.மேத்தா, கங்கைகொண்டான், தேனரசன், பாலா, நா.காமராசன் எனப் பலரும் அதன் முகமாக இயங்கினார்கள். வானம்பாடி இதழில் மீரா, அப்துல் ரகுமான், இன்குலாப், கல்யாண்ஜி, கலாப்ரியா, தமிழவன், பிரமிள், விக்கிரமாதித்யன்  எனப் பலரும் எழுதியிருப்பினும் அவர்கள் வானம்பாடிக் கவிஞர்கள் அல்ல. வானம்பாடியில் எழுதிய கவிஞர்களுக்கு பொதுவான அரசியல் சித்தாந்தத் தளமோ அல்லது அழகியல் கோட்பாட்டுத் தளமோ இருந்தன என்று சொல்ல இயலாது. பொதுவாக இலக்கற்ற ஒரு கோபமும் அரசியல் தத்துவ வறட்சியும் வானம்பாடிகளின் கவிதைகளை வெகுவாகப் பலவீனப்படுத்தின. எனினும் தமிழ்க்கவிதை மொழியை ஜனநாயகப்படுத்தியதிலும் நெகிழ்வுள்ளதாக மாற்றியதிலும் வானம்பாடிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்தக் காலகட்டத்தின் வேறுபட்ட மூன்று  தனிக்குரல்கள் அபி, அப்துல் ரகுமான், மீரா ஆகியோருடையது. அபியின் கவிதைகள் சிக்கலான படிமங்களின் வழி நகர்ந்தது என்றால், தத்துவ விசாரங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் அப்துல் ரகுமான். மரபிற்கும் புதுக்கவிதைக்கும் நடுவில் நின்றார் மீரா. இன்றும்கூட வானம்பாடிக் கவிதை மரபின் நீட்சி கவியரங்கக் கவிதைகளிலும் பத்திரிகைகளில் இடம் நிரப்பிகளாக இடம்பெறும் துணுக்குக் கவிதைகளிலும் காண முடிகிறது.
மாலன், பாலகுமாரன், பிரபஞ்சன், நாஞ்சில் நாடன் போன்ற உரைநடையாளர்களும் சில நல்ல கவிதைகளை எழுதிப் பார்த்திருக்கிறார்கள்.

எட்டுப் பெரும் கவிகள்

நவீன இரண்டாம் தலைமுறைக் கவிஞர்களில் எட்டுப் பெரும் கவிஞர்கள் என விக்கிரமாதித்யன்,

எமக்குத் தொழில் கவிதை - கவிதை பற்றிய பார்வைகள் - மனுஷ்ய புத்திரன்

கலாப்ரியா, தேவதேவன், ஆத்மாநாம், தேவதச்சன், பிரம்மராஜன், சுகுமாரன், கல்யாண்ஜி ஆகியோரையே குறிப்பிடுவேன். விக்கிரமாதித்யன், பாணர் மரபில் வந்த ஒரு அசலான நவீனத் தமிழ்க் கவிஞர். கலாப்ரியா, அகவயப்பட்ட நவீனக் கவிதையை முற்றிலும் புறவயப்படுத்தி பெரும் புரட்சியை நிகழ்த்தினார். தேவதேவன், மன எழுச்சியின் அகவயப்பட்ட ஆன்மிகச் சித்திரங்களைத் தொடர்ந்து எழுப்பினார். தேவதச்சன், புற உலக எதார்த்தத்திலிருந்து ஒவ்வொரு சின்ன ஓசையையும் சின்ன தூசையும் பிரித்தெடுத்து அதற்குத் தனிப்பட்ட இருப்பை உருவாக்குகிறார். பிரம்மராஜனின் கவிதைகள் முற்றிலும் மாறுபட்ட ஒரு கவிதைத் தளத்தைப் படைக்கின்றன.
ஆத்மாநாமின் கவிதைகளில் இருந்து தமிழில் ஒரு மிகப்பெரிய காலகட்டம் துவங்குகிறது. அந்தப் பெயரும் அவரது சொற்களும் நவீனக் கவிஞர்களின் மேல் கால் நூற்றாண்டிற்கும் மேலாகப் பெரும் செல்வாக்கு செலுத்திவந்திருக்கின்றன. ஆத்மாநாம், நவீன வாழ்வின் இருத்தலியல் நெருக்கடிகளின் ஒரு மையப்படிமமாகவே மாறிவிட்டார். சுகுமாரன், காற்றில் சுழலும் கத்தியைப் போன்ற அழுத்தமான படிமங்களை உருவாக்கினார் என்றால், மணலில் நிதானமாக இறங்கிச் செல்லும் தண்ணீரைப் போன்ற உணர்வுகளை வெகுநுட்பமாக கல்யாண்ஜி படைத்தார்.

வண்ணநிலவனின் கவிதைகள் வறண்ட மனநிலையின் அவநம்பிக்கைக் குரலாக வெளிப்பட்டன. இந்தக் காலகட்டத்தின் தொடர்ச்சியாக வந்த சமயவேல், எம்.யுவன் ஆகியோர் நுட்பமும் செறிவும் கூடிய கவிதைகளை எழுதினர். பூமா. ஈஸ்வரமூர்த்தி மற்றும் அப்பாஸின்  கவிதைகள் ரொமாண்டிஸக் கவிதை மரபின் தொடர்ச்சியாக வெளிப்பட்டன. ராஜசுந்தரராஜன், ஆனந்த்,
ந.ஜெயபாஸ்கரன், பாதசாரி போன்றோர் அவர்களது  சில கவிதைகளுக்காக இன்றும் நினைக்கப்படுகின்றனர்.
தமிழில் இடதுசாரி இயக்கப் பின்புலத்தில் வந்த கவிஞர்களில் இன்குலாப் தனிப்பெரும் கவிஞராகத் திகழ்கிறார். அரசியலும் கவித்துவமும் நேர்விகிதத்தில் கூடிய கவிஞர் அவர். அதே சமயம், ஒரு கரிசல் விவசாயியின் துயரக் குரலை படிகம் போன்ற மொழியில் கொண்டுவந்தவர் சுயம்புலிங்கம். பழமலய்  கவிதைகளில் வெளிப்பட்ட உரைநடைத் தன்மைகொண்ட வாழ்க்கைச் சித்திரங்கள் பெரும் கவனம் பெற்றன. தணிகைச்செல்வன், வெண்மணி போன்றவர்கள் அரசியல் கோபங்களை அழுத்தமாக எழுதினார்கள்.

கோட்பாடுகளின் யுகம்

90-களில் எழுத  வந்தவர்களில் ரமேஷ் பிரேதன், யூமா.வாசுகி முதலானவர்கள் தீவிரமான கவிதைச் செயல்பாட்டை நிகழ்த்தினர். இந்தக் காலகட்டத்தில் இரண்டு பெரும் கோட்பாட்டியக்கங்கள் தமிழ்க் கவிதையில் பெரும் செல்வாக்கு  செலுத்தின. அவை தலித்தியம் மற்றும் பெண்ணியம். தலித்தியம் புனைகதைகளில் ஒரு புதிய திசையைத் திறந்தபோதும் கவிதைகளிலும் அதன் அழுத்தமான சில தடங்கள் பதிந்தன. என்.டி.ராஜ்குமார் அவர்களில் முதன்மையான கவிஞர். அவர் நாட்டார் மரபுகளையும் தொன்மங்களையும் வெகுசிறப்பாகத் தன்னுடைய கவிதைகளில் கையாண்டார். ம.மதிவண்ணன், ராஜ முருகு பாண்டியன், விழி.பா இதயவேந்தன் எனப் பலரும் தலித் கவிதைப்போக்கு ஒன்றைப் படைத்தனர்.
பெண்கள் எழுதிய கவிதைகள் கடந்த இருபதாண்டுகளில் தமிழில் எழுந்த மிக வலுவான கவிதைப்போக்கு. குட்டி ரேவதி, மாலதி மைத்ரி, சல்மா, சுகிர்தராணி, பெருந்தேவி, உமா மகேஸ்வரி. சே.பிருந்தா, அ.வெண்ணிலா, இளம்பிறை, லீனா மணிமேகலை, தேன்மொழி தாஸ், ரெங்கநாயகி, ரிஷி, கிருஷாங்கினி, கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கப்பாண்டியன்  எனப் பலரும் உருவாக்கிய இயக்கம் இது. இன்று மிகவும் கவனம் பெறத்தக்கவகையில் நிறைய பெண் கவிகள் எழுதிவருகின்றனர். மனுஷி, பாலைவன லாந்தர், கனிமொழி.ஜி, சம்யுக்தா மாயா, சசிகலா பாபு, சக்தி ஜோதி எனப் பலருடைய கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. இந்தத் தருணத்தில் சுகந்தி சுப்பிரமணியத்தை வருத்தத்தோடு நினைக்காமல் இருக்க முடியுமா?

நமது காலத்தின் கவிதை

இரண்டாயிரத்திற்குப் பிந்தையை கவிஞர்களில் தனித்த ஆளுமை உடைய பல கவிஞர்கள் உருவாகியிருக்கின்றனர். அதில் முக்கியமானவர் போகன் சங்கர். வாழ்வில் நாம் தொடத் தயங்குகிற தருணங்களை அவரது கவிதைகள் தொட்டுத் திறக்கின்றன. மற்றொரு செறிவான  கவிஞர் முகுந்த் நாகராஜன். குழந்தைமையின் களங்கமற்ற தருணங்களைப் பற்றிப் பேசுகிறவை அவரது கவிதைகள். இசையின் கவிதைகள் உணர்ச்சிக் கொந்தளிப்புகளின் பெரும் நாடகங்களை உருவாக்குகின்றன. மொழியை வெகு தீவிரமாகப் பயன்படுத்தும் கவிஞர்களென கதிர்பாரதி, கணேசகுமாரன், நரன், வெய்யில் முதலானோரைக் குறிப்பிடலாம். நம் காலகட்டத்தின் அமைதியின்மைகளையும் தத்தளிப்பு
களையும் எழுதி வரும் கவிஞர்கள் என க.மோகனரங்கன், ஸ்ரீநேசன், கண்டராதித்தன், மகுடேசுவரன், பிரான்சிஸ் கிருபா, யவனிகா ஸ்ரீராம், லக்ஷ்மி மணிவண்ணன், ஸ்ரீ சங்கர், பாலை நிலவன், சாம்ராஜ், அழகிய சிங்கர், கரிகாலன், இளங்கோ கிருஷ்ணன், வே.பாபு, சபரிநாதன், ராணிதிலக், பழனிவேள், செல்மா பிரியதர்ஸன், லிபி ஆரண்யா, ஹரி கிருஷ்ணன், தேவேந்திர பூபதி, ஸ்ரீபதி பத்மநாபா, இளஞ்சேரல், யாழி,
ஜி.பிராங்க்ளின் குமார் எனப் பலரும் நவீனக் கவிதைச் சூழலில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இளமையில் இறந்துவிட்ட குவளைக் கண்ணன், குமரகுருபரன் போன்றவர்கள் குறைவாக எழுதியபோதும் தங்கள் அழுத்தமான தடங்களைப் பதித்திருக்கிறார்கள்.

நவீனக் கவிதை இயக்கத்தைப் பாதித்ததில் தமிழில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.  ‘மீட்சி’ போன்ற இதழில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள், மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் கவிதைகளின் தமிழ் மொழியாக்கங்கள், இந்திரன் மேற்கொண்ட ஆப்பிரிக்க, இந்தியக் கவிதை மொழிபெயர்ப்புகள், ழாக் ப்ரெவெரின் கவிதைகள் தமிழுக்கு வந்தது எனப் பல நிகழ்வுகளால் தமிழ்க் கவிதைகளில் வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருக்கிறது. நவீனக் கவிதையை வெகுவாகப் பாதித்த மற்றொரு நூல் ‘பைபிள்’.

நவீனத் தமிழ்க் கவிதை வரலாற்றை ஈழக் கவிதைகள் அல்லது  புலம் பெயர்ந்தவர்கள் கவிதைகள் இன்றிப் பேச இயலாது. போரின் பேரவலங்களும் மீண்டெழுதலுக்கான போராட்டமும் கொண்ட ஈழக் கவிஞர்களில் வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன், சு.வில்வரத்தினம், சோலைக்கிளி, திருமாவளவன். கி.பி.அரவிந்தன் எனப் பல முதல்நிலைக் கவிஞர்கள்

எமக்குத் தொழில் கவிதை - கவிதை பற்றிய பார்வைகள் - மனுஷ்ய புத்திரன்

ஈழத் தமிழ்க் கவிதை மரபிற்குப் பெரும் பங்காற்றியிருக்கின்றனர். மிகத் தீவிரமான பெண் கவிதை மரபும் ஈழத்திற்கு உண்டு. அனார், ஆழியாள், ஊர்வசி, ஒளவை, செல்வி, சிவரமணி, றஞ்சனி, தானியா, ஸர்மிளா ஸெய்யித், தமிழ்நதி, மாதுமை என   ஏராளமானோர் எழுதுகின்றனர். சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து நிகழும் நவீனக் கவிதைப்போக்குகளையும் இணைத்துப் பார்த்தால், தமிழ்க் கவிதையின் பரப்பு பிரமாண்டமானதாகிவிடுகிறது.

தமிழ்க் கவிதை வரலாற்றில் திரையிசைப் பாடல்களை நாம் தனிமைப்படுத்த இயலாது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், வைரமுத்து, ந.முத்துக்குமார், யுகபாரதி, தாமரை முதலானோர் தமிழ்க் கவிதையை வளப்படுத்தியவர்கள் என்ற வரிசையிலேயே வைத்துப் பார்க்கப்பட வேண்டும். அறிவுமதி போன்ற ஹைக்கூ வடிவங்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கும் இதில் பங்கு உண்டு.

இருபத்தோராம் நூற்றாண்டில் நவீனக் கவிதை அடைந்த முக்கிய மாற்றம் என்பது இந்தப் பூமியில் இருக்கும் எதை வேண்டுமானாலும் கவிதை ஆக்கலாம் என்பதும், எப்படி வேண்டுமானாலும் கவிதையை உருவாக்கலாம் என்பதும்தான். கவிதையின் எல்லைகள் உடைந்து, கட்டற்றுப் பெருகும் காலம் இது. இரண்டாயிரம் வருடத் தமிழ்க் கவிதை வரலாற்றில் இன்றைய கவிஞனுக்குக் கிடைத்திருக்கும் இந்தச் சுதந்திரம் முன்னெப்போதும் அறிந்திராதது.

தமிழ்க்கவிதை குறித்த நிறைய விடுபடுதல்கள் உள்ள  இந்தச் சிறிய வரலாற்றுக் குறிப்பில் என் பெயரும் எங்கேயோ மறைந்துகிடக்கக் கூடும். அதை நானே எப்படி சொல்லிக்கொள்வது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு