Published:Updated:

அடுத்த கட்ட போராட்டம் - தெய்வீகன்

அடுத்த கட்ட போராட்டம் - தெய்வீகன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்த கட்ட போராட்டம் - தெய்வீகன்

அடுத்த கட்ட போராட்டம் - தெய்வீகன்

அடுத்த கட்ட போராட்டம் - தெய்வீகன்

அடுத்த கட்ட போராட்டம் - தெய்வீகன்

Published:Updated:
அடுத்த கட்ட போராட்டம் - தெய்வீகன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்த கட்ட போராட்டம் - தெய்வீகன்
அடுத்த கட்ட போராட்டம் - தெய்வீகன்

நவாலியை இரண்டாகப் பிரிக்கும் பெருவீதிக்கு மறுபுறத்தில் மேற்கே, வயற்கரையோரத்தில் இளங்கீரனின் வீடு. சந்தையைத் தாண்டிச் செல்லும் வீதியிலிருந்து பனங்கூடல்களின் ஊடாக சிறிது தூரம் சென்றால், தனித்து யாருக்காகவோ காத்திருப்பதைப்போல இருக்கிறது.

வீட்டுக்குச் செல்வதற்கான ஒரே மார்க்கம் மணற்தரை ஒழுங்கையே. சைக்கிளில் சென்றால், எழும்பி நின்று மிதித்தால்தான் வேகமாகப் போகலாம். அநேகமானவர்கள் ஒழுங்கையின் வாசலிலேயே இறங்கி உருட்டிக்கொண்டு நடந்து சென்றுவிடுவார்கள். காலமாற்றங்களில் சிக்காத ஒழுங்கை அது. இளங்கீரனின் தகப்பன், மூச்சுவாங்க சைக்கிள் மிதித்து வீட்டுக்கு வருபவர்களிடம், ‘இங்க வாறதுதான் சிரமம். வந்துட்டா, ஆசிரமம்’ என்று படுமொக்கையான ஜோக் ஒன்றைத் தவறாமல் சொல்லி, தானே சிரித்துக்கொண்டு வரவேற்பார். மூச்சிரைக்க வருகிறவர்களுக்கு பதிலுக்குச் சிரிக்கும் சக்தி இருப்பதில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வீட்டு விறாந்தையின் முன்னாலிருந்த நீண்ட கற்குந்தின் மீது, கால் நீட்டிப் படுத்திருந்தான் கீரன். ஒட்டடை விழுந்த முகட்டின் மீது அவனுடைய வெறித்த பார்வை படிந்துகிடந்தது. கற்றையான தாடி, கொஞ்சம் கூடுதலாக வளர்ந்த முடி, ஓரளவுக்குச் சிவலையான அவனது முகத்தில் இருளாகத் துயரம் படிந்துகிடந்தது.

வயல்வெளிப் பக்கமாக வீசிய வேகமான காற்றினால், அயல்காணியிலிருந்த பனை ஓலைகள் இரைச்சலை எழுப்பிக்கொண்டிருந்தன. கடற்கரையில் படுத்திருப்பதுபோன்ற உணர்வைத் தரும் அந்தப் பேரிரைச்சல், அங்கிருப்பவர்களுக்குப் பழகிப்போன ஒன்று. பனையோலைகள் வடிகட்டிய பெருங்காற்று மெல்லிய வேகத்தில் கிளைவிட்ட வேலியோர மரங்களையும், இளங்கீரன் வீட்டுக்குள் சடைத்து நின்ற மாமரத்தையும் லேசாக வருடிக்கொண்டிருந்தது. காற்றுக்கும் மரத்துக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை கீரன் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஒரு தீராத உறவென அவனுக்குப்பட்டது. மதியம் கடந்த மத்திம வெயில் அடக்கமாக எரித்தாலும், உள்ளூர வெக்கை ஏறியது.

பூசா தடுப்பு முகாமிலிருந்து இளங்கீரனை அழைத்துவந்த அன்புமணி, அவனின் அமைதியைக் குழப்பாமல் அருகிலிருந்த கதிரையிலிருந்து, கைபேசியில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தான்.

இளங்கீரனும் அன்புமணியும் நவாலி மரியதாஸ் மாஸ்ரரிடம் ரியூசனுக்குப் போன நாட்களிலிருந்து, ஒரு ஜோதியில் கலந்த இரு சுவாலைகள். உயர்தரம் படித்துவிட்டு வவுனியா போய்விட்டான் அன்புமணி. இளங்கீரன் இடையிலேயே இயக்கத்துக்குப் போனான்.

அன்றோடு அறுந்த இளங்கீரனின் ஊர்வாழ்வு, இன்றுதான் மீண்டும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. 

புனர்வாழ்விலிருந்து விடுதலையாவான், சுதந்திரதினம் அன்று விடுதலையாவான், நீதிமன்றத்தாலாவது வெளியில் வருவான் என்று எத்தனையோ தடவைகள் எதிர்பார்க்கப்பட்ட விடுதலை நடக்கவே இல்லை. இன்று உண்மையிலேயே இவன் விடுதலையாகி வந்துவிட்டான். ஆனாலும் அந்தச் செய்தி ஊர் மக்களுக்குப் பெரிதாக எட்டியிருக்கவில்லை. வரும்போது அன்புமணிதான் தனக்குத் தெரிந்தவர்கள் எல்லோருக்கும் கைபேசியில் அழைத்து தகவல் சொன்னான். செய்தி அறிந்தவர்கள் எல்லோரையும்விட அதனைச் சொன்ன அன்புமணிதான் கூடுதலாகச் சந்தோஷப்பட்டான்.

வீட்டுக்கு வந்து இறங்கியுடன் வந்த தொலைபேசி அழைப்பு கீரனுக்கு அதிர்ச்சியாகியது. அன்புமணியுடன் பேசிய சுவேதாவின் அம்மா சொன்ன கதை, கீரனுடைய மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பின் ஆர்வத்தையும் ஒரு நொடியில் சிதைத்தது. அவன் சந்தித்த வெடிகுண்டுகள் எல்லாவற்றையும்விட இந்தக் குண்டே அவனுக்குப் பெரும் சிதைவை உண்டாக்கியது.

சுவேதா தன்னுடைய வாழ்க்கையில் பங்காளியாக வரும் வரை இடம்பெற்ற சம்பவங்கள் எல்லாம் அவனுடைய மனதில் வரிசையிட்டன.

வள் சொன்னதை எல்லாம் அவன் முதலில் விரும்பவில்லை. அவளுடைய நெருக்கத்தையும்தான். ஆனால், அவள் பொழிந்த தீராத அன்பின் தீவிரம், அவனைத் துணிச்சலாக்கி, பொறுப்பாளரிடம் `துண்டு’ கொடுத்து விருப்பத்தைத் தெரிவிக்கவைத்தது.

சுவேதாவின் வீட்டில் ‘இயக்கப்பெடியனையே கலியாணம் கட்டப்போறாள்’ என்று மூலைக்கு மூலை எத்தனையோ தொணதொணப்புக்கள். சுவேதாவும் தகப்பனும்தான் அந்தக் காதலை கல்யாணம் வரை இழுத்து வந்தார்கள். கல்யாணத்துக்கு, ஜெயம் அண்ணாவின் பெடியள் இருபது முப்பது பேர் நேரடியாக வந்து நின்று வேலை செய்தார்கள். ஜெயம், ஆறடிக்கும் மேலே, நெடுத்து உயர்ந்திருந்த மிடுக்கான தளபதி. அவர்தான் அவனுடைய பொறுப்பாளர். அவரோடு, சீருடைப்பெடியள் நிறைந்திருந்த திருமண மண்டபத்தில், சுவேதாவின் மொத்தச் சொந்தங்களும் கூடி, வியந்துகிடக்க, சிம்பிளாகவும் பம்பலாகவும் நடந்து முடிந்தது திருவிழா. 

இயக்கத் திருமணங்களுக்கு சனங்கள் மெள்ள மெள்ளப் பழகிக்கொண்டிருந்த காலம். வீட்டுக்கு வெளியே வீதியில், லைனுக்கு நின்ற பச்சையும் கறுப்பும் கலந்த ராணுவத்தன்மையுள்ள, இயக்க வாகனங்களைக் கண்டு அன்று முழுவதும் வீதியில் இறங்கி நின்று பார்த்தவர்களும், மதிலுக்கு மேலால் எட்டிப்பார்த்த தலைகளும் ஏராளம். போருக்கு மட்டுமல்ல, திருமணத்துக்கும் சீருடையும் துப்பாக்கியும் தேவைபோல என்று அந்த நாட்களில் எண்ணியவர்கள் உண்டு. 

இதையெல்லாம் பெருமையாகச் சட்டென நினைத்த மாமியாரின் தோரணையை எண்ணிப் பார்த்தான்.
எல்லாம் மனசுக்குள் திசைதெரியாமல் பறந்துகொண்டிருந்தன.

போர் முடிந்த கடைசி நாள் வட்டுவாகல் பாலத்தில் ராணுவத்திடம் லைனில் நின்று போகும்போதும், இளங்கீரனின் கைகளை இறுக்கிப்பிடித்திருந்தாள் சுவேதா. அந்தக் கணங்களை அடர்த்தியாக்கிக்கொண்டிருந்த அச்சத்தையும் துயரத்தையும் தாண்டி, அவளது பதற்றம் ரகசியமான காதலைப் பதற்றத்துடன் சொல்லிக்கொண்டிருந்தது. 

‘உன்னைக் கூப்பிட்டாங்கள் எண்டு சொன்னா, என்னை விட்டிட்டுப் போயிராத. நானும் கூட வருவன்... என்ன? கேக்குதா?, என்று ஆயிரம் தடவைகள் தழுதழுக்கச் சொன்ன அவளது குரல் இன்னமும் அவனுடைய காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

தன்னை வேறாகப் பிரித்தெடுத்து பஸ்ஸில் ஏனைய போராளிகளோடு ஏற்றி அனுப்பும்போது, அவள் கைகாட்டிக் கொண்டிருந்த கடைசிப் பிரிவு உயிரைப் பிழிந்து, மனதை உத்தரித்தது. அவனுக்கு எல்லாமே இருளாகத்தான் தெரிந்தன. அதற்குப் பிறகு, தடுப்புக்காவல் விசாரணையின்போது அனுபவித்த எந்தச் சித்ரவதையும் அவ்வளவுக்கு மனசில் வலித்தது இல்லை. சுவேதாவின் அந்தக் கண்களுக்காக ஏங்கிய வருடங்கள் முழுசாக ஆறு. அத்தனையும் நீறுபூத்த நெருப்பே.

ஆனால், இப்போது?

புயலடித்துக்கொண்டிருக்கும் இந்த மனதை என்னசெய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தான். 

ஏதோ ஒரு புள்ளியில் யோசனையை நிறுத்தி, எழுந்து கைகளை ஊன்றிக்கொண்டு படலையைப் பார்த்தான். இயல்பிலேயே தனது உணர்வுகளை எளிதாக வெளிக்காட்டிக்கொள்ளாத சுபாவம்கொண்டவனுக்கு, இப்போது நடந்திருக்கும் பிரளயத்துக்கு எப்படித் தீர்வை நாடுவது என்று தெரியவில்லை. தலைமுழுவதும் சின்னதாக ஒரு விறைப்பு வந்துவந்து போவதை உணர்ந்தான். தலையிலிருந்த `ஷெல்’ சிதறல் தந்துகொண்டிருக்கும் வலியைவிட இப்போது உண்டாகியிருக்கும் வலி உச்சம்.

“மச்சான்... நீ போன நாளில இருந்து சுவேதா சரியா கஷ்டப்பட்டுக்கொண்டி ருந்தவள். எனக்கு நல்லாத் தெரியும். ஏனெண்டால், உன்னோட நிண்ட பெடியன் பகீரதனின் மனிஷி, ஆணைக்குழுவுக்கு முன்னால சாட்சியம் சொல்லப் போகும்போது, அங்க இவளும் போய் உன்னை வெளியில எடுக்க உதவி செய்யச் சொல்லி அதிகாரியளுக்கு முன்னால ஒப்பாரி வெச்சவளாம். கண்ட ஆக்கள் சொன்னவ” என்றான் அன்புமணி.

அன்புமணி சொல்லி முடித்த கையோடு ஒரு பெருமூச்சைவிட்டான். அவனை ஒருமுறை தலையைச் சரித்து ஊன்றிப் பார்த்தவன், “அப்பிடியெண்டால், கோர்ட்டில என்னைப் பிணையெடுக்க ஏணடா வரயில்லை? என்னை நாலு தரம் கொண்டு வந்தாங்களேயடா. வெறும் இருபதினாயிரம் ரூபா. அதைக் கட்டி என்னை வெளியில எடுக்க ஏலாமல் போட்டுதா? அவளுக்கு போட்ட நகையே இரண்டு லட்சத்துக்கு மேல தேறும். காசில்லாமத்தான் வரயில்லை எண்டு சொல்லுறியா. சரி, பிணைதான் எடுக்க வேண்டாம். பார்க்கவாவது வந்திருக்கலாமே. ஒரு வருஷமா ஒரு தொடர்பும் இல்லையே” என்றான். 

மீண்டும் படலையை நோக்கிய வெறித்த பார்வையைத் திருப்பினான். ‘கேற்’ பக்கமாக நின்ற தென்னையில் குருத்தடிச்சுப் போயிருந்தது.

‘`மச்சான், அவளிண்ட பக்கம் என்ன பிரச்னையள் எண்டு சொல்ல ஏலாதடா. இடைப்பட்ட காலத்தில என்ன நடந்தது எண்டு எனக்கும் தெரியேலை. என்னை இந்தோனேஷியாவில இருந்து திருப்பி அனுப்பின பிறகு,

அடுத்த கட்ட போராட்டம் - தெய்வீகன்

இஞ்ச வந்தவுடன எனக்கு ‘மில்’ வெச்சிருக்கிற சாந்தன் அண்ணை ஒரு விஷயம் சொன்னார். சுவிஸ்ல இருந்து சுவேதாண்ட மாமன்காரன் ஒருத்தன் வந்து போனப் பிறகுதான், இந்தப் பெடியனும் சுவேதா வீட்டுக்கு வரத்தொடங்கினவனாம். இவன் முந்தி கொழும்பில படிச்சுக்கொண்டிருந்துபோட்டு, கட்டாருக்குப் போய் கொஞ்ச காலம் வேலை செய்தவனாம். சுவேதாவிண்ட அம்மாண்ட பக்கத்தால ஏதோ மருமகன் முறையாம். வந்த புதிசில ஒரு ஹீரோ ஹொண்டாவில உதுவளிய ஓடித்திரிவான். சுவாதாண்ட அம்மாவைத்தான் அடிக்கடி வெளியில கூட்டிக்கொண்டு போறவன். கோயில், சந்தை எண்டுதான் பார்த்த ஆக்களிட்ட தன்ரை மருமகன் பெடியன் எண்டு அவவும் சொன்னதாகக் கேள்வி’’ என்றான் அன்புமணி.

‘`எங்கட கலியாணத்துக்கு அவங்கட அம்மா அப்பவே எதிர்ப்புத்தான். இது ஒண்டும் எனக்குப் பெரிய அதிர்ச்சி இல்ல. ஆனால், சுவேதா இப்படி மனம்மாற ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கு. அதைத்தான் என்னால புரிய முடியாமலிருக்கு.’’

இளங்கீரனின் பேச்சு வெறும் சத்தமாக மட்டுமே வெளியில் வந்து விழுந்தது. அதில் எந்த உணர்ச்சிகளையும் காணவில்லை.

`‘இனி... இதில நீ மனசைப் போட்டுக் குழப்பாதை. அவளிண்ட அம்மா போன்ல கதைக்கும்போது நீயும் கேட்டுக்கொண்டுதானே இருந்தனீ. ஒண்டு மட்டும் தெரியுது. சுவேதாவுக்கு இதை உன்னோட நேரில சொல்லவோ, சும்மாவேனும் கதைக்கவோ தைரியம் இல்லை. அவ்வளவுக்குக் குற்ற உணர்ச்சியோடதான் அவனோட இருக்கிறாள். அப்பிடியே விடடா. இப்ப இருக்கிற நிலைமையில, நீதான் உனக்கு முக்கியம். உனக்குக் கிடைச்ச வாழ்க்கைதான் உனக்கு முக்கியம். நீ உன்னைக் காப்பாற்றி வெளியில உயிரோட கொண்டுவந்ததே பெரிய விஷயம். இதை இன்னொரு வாழ்க்கையா எடுத்துக்கொள். சண்டை முடிஞ்சாப் பிறகு இஞ்ச இருக்கிற சனம் உயிரோட இருக்க வேணுமெண்டால் எத்தினயோ விதத்தில தங்கட வாழ்க்கையை மாத்தித்தான் ஆகவேணும். அந்தக் கட்டாயத்தோடதான் இஞ்ச எல்லாரும் சீவியத்த ஓட்டுதுகள். எத்தினை சனம் நடைபிணமாத் திரியுதுகள் எண்டு இனித்தான் நீ காணுவாய். அதில ஒரு சம்பவம்தான் இதுவும் எண்டு விட்டுத்துலையடா’’ சொல்லிமுடித்துவிட்டு, அவனது மனதைத் தேற்றுவதற்காக ‘அடுத்து என்ன செய்வது?’ என்று யோசித்துக்கொண்டு அவனைப் பார்த்தான் அன்புமணி.

இரண்டு கைகளையும் கற்குந்தின் மீது நேராக முண்டுகொடுத்து தோளைத் தூக்கிக்கொண்டு அவற்றுக்கிடையில் தலையைப் புதைத்தவாறு நிலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் இளங்கீரன். வெயில் ஏறிக்கொண்டிருந்தது. அந்த வெக்கை உடம்பிலும் சூட்டை ஏற்றியது. தான் சொன்னதைக் கேட்டானா, கேட்கவில்லையா என்றுகூடத் தெரியாமல், இளங்கீரனைப் பார்த்துக்கொண்டிருந்தான் அன்புமணி.
 

அடுத்த கட்ட போராட்டம் - தெய்வீகன்

மாத்தளனில் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தபோது, பனையோடு வந்து விழுந்த செல் வெடித்து சிதறி, சிரசோடு சீவிச்சென்ற அம்மாவினதும் தங்கையினதும் இறப்புச் செய்தி கிடைத்தபோதே பாதி இறந்திருந்தான். அந்த நாளிலிருந்து நடைபிணமாக தனது ‘டீமோடு’ திரிந்த இளங்கீரன், எல்லாவற்றிலும் வெறுப்பை உமிழ்ந்தபடிதான் தனது இயக்க வாழ்வின் இறுதி நாட்களை ஓட்டினான். பிறகு, சரணடைந்து ஜெயிலுக்குப் போனபோது வாழ்க்கையே முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தான். தன்னைத் திருமணம் செய்த குற்றத்துக்காக சுவேதாவின் வாழ்க்கையும் அழிந்துவிட்டதே என்ற கவலையுடன் தினமும் செத்துக்கொண்டிருந்தான். 

ஆனால், அவ்வப்போது ‘லிஸ்ட்’ பிரித்து சிறைமாற்றியதும் பிணை அனுமதிகள் வந்துபோனதும், அவனுக்கு வாழ்க்கையில் ஓரளவுக்குத் தெம்பைத் தந்தன. எப்படியாவது சிறையிலிருந்து வெளியே போய் பார்வையற்ற தகப்பனைத் தன்னோடு வைத்துப் பார்க்க வேண்டும். சுவேதாவுடன் மறுவாழ்வைத் தொடங்கவேண்டும் என்றெல்லாம்  நினைத்திருந்தான். அதெல்லாம் வெறும் கனவுதான் என்று அடித்துச் சொல்வதுபோல, இரண்டு வருஷத்துக்கு முன்பு தந்தை தவறினார். மனதை இறுகப் பற்றிக்கொண்டு, மரணத்தோடு சமரசம் செய்து சிறை மீண்டான். இப்போது வெறிச்சோடிக் கிடக்கும் வீட்டுக்கு வந்தால், எங்களுக்கு கிடைத்த தலைவர் மாதிரி, இவர் எனக்கு கிடைச்ச மகன்’ என்று கலியாணம் முடிந்த நாள் முதல் ஊருக்கே சொல்லிக்கொண்டு திரிந்த சுவேதாவின் அம்மா, நா கூசாமல் ‘அவள இனி மறந்திடுங்கோ’ என்று தொலைபேசியில் அன்புமணி ஊடாகத் தகவல் கூறியிருக்கிறாள்.

‘`இதற்குப் பிறகும் எப்படி நீ சாகாமல் வாழப்போறாய் பாப்பம்’’ என்று வாழ்க்கை தனக்கு முன்னால் வந்து நின்று சவால் விடுவதைப்போல உணர்ந்தான் இளங்கீரன். மொத்தத்திற்கு எல்லாமே மரத்துப்போய், மருந்துக்கும் தெம்பில்லாத அநாதை ஜந்து போலவே அவன் உணர்ந்தான்.

`எத்தனை சாவுகள், எத்தனை காயங்கள், எத்தனை பிணங்கள் என்று ரத்தக்குளமாகக் கிடந்த கடைசிப் போர்வெளியில், மரணம் ஏன் எனக்கு மட்டும் வாய்க்கவில்லை? ஆயுதத்தோடு நின்றேனே, மரணம் மலிவாகவேனும் கிடைத்திருக்கலாமே. அதற்கும்கூட நான் தகுதியில்லாதவனா? மனைவி மட்டுமல்ல மரணமும்கூட தனக்குத் துரோகம் செய்துவிட்டது’ என்று நினைக்கும்போது அவனுக்குள் வெறுப்புச் சுவாலைகள் கற்றையாகப் பற்றி எரிந்தன. இதயச்சோணைகளை அருவெறுப்பின் கூரிய நகங்கள் கீறி விளையாடின. 

ஆனால், இன்னொரு பக்கத்தில் யோசிக்கும்போது இவற்றை எல்லாம் அதிகம் மனதில் போட்டுக் குழம்பத்தான் வேண்டுமா என்றும், ஒரு நியாயமான குரல் ஆழ்மனதில் அசரீரியாகக் கேட்டது. ஒருவேளை, இந்தக் கோதாரி விழுந்த நம்பிக்கையைத்தான், தான் புனர்வாழ்வில் பெற்றுக்கொண்டேனோ என்றும் சிந்தித்தான்.

`‘டேய்... என்ன யோச்சுக்கொண்டிருக் கிறாய். எழும்பு. துவாய், சோப்பெல்லாம் கொண்டுவந்தனான். குளிச்சிட்டு வெளிக்கிடு. எங்கட வீட்டுக்குப் போவம். நளாயினி உனக்காகச் சமைச்சிருக்கிறாள்’’ என்று அன்புமணி சொல்லி வாய் மூடவும், வாசலில் இரண்டு ஹீரோ ஹொண்டா மோட்டார் சைக்கிள்கள் வந்து நின்றன. 

அன்புமணிக்கு ‘திக்’ என்றிருந்தது. 

சிறையினால் விடுதலை செய்தவர்களை மீண்டும் கைது செய்வது, முகாமுக்கு வந்து கையெழுத்துப் போடச்சொல்வது, சில பேரைக் கடத்துவது, சிலவேளை போட்டுத்தள்ளுவது என்று நொட்டிக்கொண்டே இருக்கும் சம்பவங்கள் நடப்பதை அறிந்திருக்கிறான். நிம்மதியாக ஓர் இரவுகூட நித்திரைகொள்ள முடியாத இந்தச் சித்திரவதை வாழ்வை ஜீரணிக்க முடியாமல், பலர் லட்சக்கணக்கில் காசைக் கட்டி படகில் ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்று பறந்துவிட்டார்கள். அன்புமணி கடைசியாகப் போன கப்பலில் இப்படிப் பலர் வந்திருந்ததால், அவர்களின் பல கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறான். அப்படித்தான் இப்பவும் ‘விசாரணைக்கு வா’ என்று கூப்பிட வந்திருக்கிறார்களோ என்று எட்டிப்பார்க்க, கதிரையை விட்டு எழுந்த அன்புமணி, இளங்கீரனுக்கு முன்பாக இரண்டடி வைத்து விறாந்தையில் நின்றுகொண்டே படல் பக்கமாகப் பார்த்தான். 

படலையைத் திறந்துகொண்டு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். அவருக்குப் பின்னால், சுவோதாவின் தாயும் இன்னும் ஒரு பெரியவரும் வந்தனர். வந்தவர்களில் சுவேதாவின் தாயைத் தவிர இளங்கீரனுக்கு எவரையும் தெரியாது. மூன்று பேரையும் பார்த்துக்கொண்டு இருவரும் எழுந்து நின்றார்கள். மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த நடுத்தர வயது மதிக்கத்தக்க இளைஞன், மோட்டார் சைக்கிள்களுக்கு அருகில் வீட்டுக்கு வெளியிலேயே நின்றுகொண்டார். 

விறாந்தைக்கு அருகில் வந்தவர்களை, ஒருவித சந்தேகத்துடனும் இனம்புரியாத ஒரு வெறுமையுடனும் ‘`வாங்கோ’’ என்றான் இளங்கீரன்.

‘`வணக்கம் தம்பி. என்ர பெயர் விஸ்வலிங்கம். சுவேதாவிண்ட அம்மாவுக்கு ஒண்டுவிட்ட சகோதரன். இவர் என்னுடைய தம்பி சேனாதி’’ என்று கையைச் சுட்டிக் காண்பித்தபடி உள்ளே வந்தார்கள். 

இருவரையும் பார்த்தால் சகோதரர்கள் என்று சொல்வதற்கு எந்த அறிகுறியும் இல்லை. சுவேதாவின் அம்மாவின் சகோதரம் என்று தன்னை அறிமுகப்படுத்தியவரில், உள்நாட்டுக் களை மருந்துக்கும் கிடையாது. கண்ணாடிக்கு மேலால் கண்ணை எறிந்து நோட்டம்விடும் கள்ளப்பார்வை இயல்பாகவே அவரது முகத்தில் ஒட்டியிருந்தது. ஜீன்ஸ் - சேர்ட் அணிந்து ஒருவித மிடுக்குடன், ‘இப்படியான இடத்துக்கெல்லாம் நான் வாறதே இல்லை’ என்ற மாதிரியான ஓர் அருவெறுப்பு, உடல்மொழியில் தெரிந்தது.

அவரது சகோதரமாக அறிமுகப்படுத்தப்பட்டவர், மன்னர்களுக்குப் பக்கத்தில் சாமரம் வீசுபவன்போல அசையாமல் நின்றுகொண்டிருந்தார். அவர் தனது ஒற்றைக் கன்னத்துக்குள்ளால் ஒரு வற்புறுத்திய சிரிப்பை வாய்க்குள்ளேயே ஒளித்துவைத்துச் சிரித்துவிட்டு நிறுத்திவிட்டார்.

சுவேதாவின் அம்மா இளங்கீரனை நேரடியாகப் பார்ப்பதைக் கஷ்டப்பட்டுத் தவிர்த்துக்கொண்டார்.
‘`இருங்கோவன்’’ என்று பக்கத்தில் இருந்த நீண்ட வாங்கொன்றை இழுத்துப்போட்டு விட்டு, அருகிலிருந்த துணியால் தட்டிவிட்டான் அன்புமணி. 

‘பப்ளிக் டொய்லெட்’டில் இருப்பதற்கு அரியண்டப்படுவதுபோல மூவரும் நெளிந்துகொண்டே வரிசையாக அந்த வாங்கில் அமர்ந்துகொண்டனர். அவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள் என்று அன்புமணிக்கு தெரியாவிட்டாலும், தனது தோழனின் வாழ்க்கையில் இடம்பெற்றிருக்கும் சோகத்துக்கு இவர்களும் காரணமாக இருக்கலாம் என்று உள்ளுக்குள் வந்த எரிச்சலுக்கு, வரிசையில் இருந்த மூவரையும் ‘நீதிக்குரங்குகள்’போல உள்ளுக்குள் நினைத்துக்கொண்டான்.

நின்றுகொண்டிருந்த இளங்கீரனை `‘இருங்கோ தம்பி’’ என்று கண்ணாடிப் பெரியவர் சொல்ல, நுனிக்குந்தில் மீண்டும் அமர்ந்துகொண்டு, மூவருக்கும் பொதுவான ஒரு பார்வையைப் படரவிட்டான் இளங்கீரன். இரண்டொரு மணித்தியாலத்துக்கு முன்தான், அன்புமணிக்கு சுவேதாவின் அம்மா போன் பண்ணியிருந்தார். இப்போது இவர்கள் வந்திருக்கிறார்கள் என்று சம்பவங்களைத் தொடர்புபடுத்திய குழப்பம் இளங்கீரனின் கண்களில் தெரிந்தது.

`‘நீங்கள் வெளியில வந்திட்டீங்களாம் எண்டு கேள்விப்பட்டுத்தான் வந்தனாங்கள்’’ என்று ‘கள்ள’ மௌனத்தை உடைத்துக் கொண்டு கண்ணாடிப் பெரியவர் பேச்சைத் தொடங்கினார்.

`‘ஏனெண்டால், இதில எங்கட பிள்ளையிண்ட வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்குது. சுவேதாவிண்ட அம்மா போன் பண்ணி உங்கட ஃப்ரெண்டுக்குச் சொல்லியிருந்தவ. நீங்களும் கேள்விப்பட்டிருப்பியள் எண்டு நினைக்கிறன். இப்ப என்னெண்டா... தம்பி சண்டை முடிஞ்சு நீங்கள் பிடிபட்டு ஜெயிலுக்குப் போட்டியள். எத்தினையோ நினைப்புகளோட என்ர தங்கச்சி தன்ர மகளை உங்களுக்குக் கட்டிக்குடுத்துப் போட்டு, ஆறு வருஷமா வாழாவெட்டியா அவளை வீட்டில வெச்சிருந்து கஷ்டத்துக்கு மேல கஷ்டத்தை அனுபவிச்சதுதான் மிச்சம். கலியாணம் எண்டது நீங்கள் போன போராட்டம் மாதிரி இல்லை தம்பி. எங்கையாவது போய் முட்டி நிக்கும்தானே எண்டு குருட்டுத்தனமாக எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுபோட்டுப் போய்க் கொண்டிருக்க ஏலாது. அதுக்கு ஒரு பக்குவம் வேணும்.’’

பெரிசு ஏதோ ஒரு குண்டைப் போடுவதற்கு வாயாலேயே ஹெலிக்கொப்டர் ஓட்டுது என்று அன்புமணிக்கு ஓரளவுக்குப் புரிந்தது. 

ஒரே குழப்பத்துடன் இருப்பதுபோன்று பெரியவர் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்தான் இளங்கீரன். 

‘`நீங்கள் போன ஆறு வருஷத்தில உங்களால சுவேதா மாத்திரம் இல்லை. எல்லாரும் நல்லா கஷ்டப்பட்டுப்போனம். வருவியள், வருவியள் எண்டு பார்த்திருந்த நம்பிக்கை எல்லாம் போய், கடைசியில நாங்கள் ஒரு முடிவுக்கு வந்திட்டம். அவளுக்கு இன்னொரு சம்பந்தம் பாத்துப் பழகவிட்டனாங்கள். முதலில அவளுக்கு விருப்பமில்லை. அழுது குழறி எங்கள பெரிய கஷ்டப்படுத்திப்போட்டா.’’

அதைக் கூறும்போது திடீரென்று மூவரையும் மறைப்பதாக உணர்ந்த தனது கண்ணீர்த் திரையை, அதிலிருக்கும் ஒருவருக்கும் அது தெரியக் கூடாது என்பதற்காக, முகத்தைத் துடைப்பதுபோல இரண்டு கைளாலும் கண்களை அழுத்தமாக ஒற்றி எடுத்துக்கொண்டான் இளங்கீரன். நெஞ்சுக்குள் எரிவதுபோல பட்டது. தான் திடீரென்று உடைந்துபோனதை உணர்ந்த இளங்கீரனுக்கு, தன் மீது கோபம் கோபமாக வந்தது. அதேவேளை, அந்தத் தருணத்தில்தான் சுவேதாவின் மீதான தனது மொத்தக் காதலையும் உணர்வதுபோலவும் இருந்தது. முன்னால் இருந்து கதைக்கிறவர்களைப் பார்க்காமல் தவிர்க்க எண்ணினான். அவர்களைப் பார்க்க அவனுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. 

அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல், வெறும் சுவருக்கு முன்னால் நின்று மனப்பாடம் செய்த கதையை ஒப்புவிப்பதுபோல பெரியவர் தொடர்ந்துகொண்டுபோனார். 

`‘சுவேதா... இப்ப ஓரளவுக்கு நிலைமையைப் புரிஞ்சு, அவரோட குடும்பம் நடத்த வெளிக்கிட்டுட்டா. அவர் எங்கட ஒரு சொந்தக்காரப் பெடியன்தான். கொழும்பில படிச்சவர். சுவிஸ்ல இருந்து வந்துபோகும்போது தங்கச்சியிண்ட கஷ்டத்தைப் பார்த்து, நான்தான் இதை ஒழுங்குபண்ணி வச்சனான். இதில நீங்கள் இனி குறுக்க நிக்கப்படாது எண்டு சொல்லத்தான் வந்தனாங்கள். இஞ்ச எல்லாம் மாறிப்போச்சுது. பாத்திருப்பியள்’’ என்று சொல்லிக்கொண்டுபோக...

‘`இளங்கீரன் ஒருக்கா சுவேதாவோட கதைக்கவேணும் எண்டு...’’ என்று அன்புமணி குறுக்காகப் புகுந்து பேச்சைத் தொடங்கவும்...

`‘இல்லை தம்பி. முடிஞ்சுபோனதை இனி திருப்பித் திருப்பி இழுக்காதேங்கோ. இது முதலே சரிவராது எண்டு எங்களுக்குத் தெரியும். கலியாணம் நடக்கும்போதே எங்கட சாதிக்குள்ள பெடியனைப் பார் எண்டு நான் திரும்பத் திரும்ப இவளுக்குச் சொன்னனன். இவவிண்ட புருஷன்காரன்தான், இயக்கப்பெடியன் நல்ல பெடியன் எண்டு ஏதேதோ எல்லாம் சொல்லி, ஆட்டுக்க மாட்டை விட்ட மாதிரி கட்டிக்குடுத்து இறங்கிப்போனவயள். அப்ப ஏதோ பயத்தில வேற வழியில்லாம எல்லாத்துக்கும் மண்டைய ஆட்ட வேண்டியதாகப் போச்சு. அட்லீஸ்ட் இப்படியாவது, இது முடிவுக்கு வந்தது நல்லது. இனி அவளுக்குப் பிள்ளைக்குட்டி எண்டு வரேக்க, எங்கட சாதி சனத்துக்குள்ளேயே எல்லாம் வாறதுதான் எதிர்காலத்துக்கும் நல்லது. புதுசா ஒண்டும் வேண்டாம் தம்பி. இது சரிவராது.’’

அவர் பேசிக்கொண்டு போனதைவிட அதைப் பேசாமல் கேட்டுக்கொண்டே இருந்த இளங்கீரனைப் பார்க்கத்தான் அன்புமணிக்கு எரிச்சலாகக்கிடந்தது.

`‘சாதி மாறிக் கலியாணம் செய்ததால உங்கட கௌரவம் குறைஞ்சுபோச்சுது எண்டு சொல்லிறதுக்குத்தானே இப்ப வந்தனீங்கள். சரி நீங்கள் வெளிக்கிடுங்கோ’’ என்றான் ஆத்திரத்தை அடக்க முடியாத அன்புமணி.

பெரியவர் எழுந்தார்.

‘`தம்பி... ஏதோ தெரியாமல் நடந்த கலியாணம். இதால எல்லாரும் நல்லா கஷ்டப்பட்டுப்போனம். வீடு தேடிவந்து மரியாதையா சொல்லிக்கிடக்கு. மேற்கொண்டு பிரச்னையளை வளர்க்காதேங்கோ. அவருக்கு வயசிருக்கு. எத்தினையோ இயக்கப் பொம்பிளப் பிள்ளையள் இப்ப கலியாணம் கட்டாமல் இருக்கினம். அதுகளில ஒண்டைப் பார்த்து விரும்பிக் கட்டிக்குடுக்கலாம். ஒரு ஃப்ரெண்டா நீர் அதைச் செய்யப்பாரும். இல்லாட்டி, இந்தோனேஷியா பக்கம் இப்ப பிரச்னை இல்லாம படகுகள் போகுது. அங்கினேக்க போய் இனியாவது வாழ்க்கையில உருப்படுகிற வழியப் பாக்கவேணும். காசு உதவி வேணுமெண்டா சொல்லுங்கோ. எங்களுக்கும் ஒரு கடமை இருக்கிறபடியால், அதை நாங்கள் கட்டாயம் செய்துதாறம். சோலியள வளர்க்காதேங்கோ’’ என்று இரண்டு கைகளையும் ஆட்டி ஆட்டி அழுத்தமாகப் பேசினார் சுவிஸ் பெரியவர்.

அந்தக் கணத்தில், தன்னைத் தடுப்பு முகாமில் கதிரையோடு கட்டிவைத்து விசாரித்தபோது இழுத்துவிட்ட ஒவ்வொரு சிகரெட் புகை இடைவெளியின்போதும் மார்பில் தணலைச் சுண்டிவிட்ட சித்திரவதை அதிகாரி எவ்வளவோ நல்லவனாகத் தெரிந்தான்.   

சுவேதாவின் அம்மாவும் அவரோடு வந்த அந்தச் சாமரம் வீசும் ஆசாமியும் எந்தக் கதை பேச்சும் இல்லாமல் பெரியவர் பேசுவதையும் நிலத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு நின்றார்கள். குறிப்பாக, சுவேதாவின் அம்மா மறந்தும்கூட இளங்கீரனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. 

`‘அப்ப நாங்கள் வெளிக்கிடுறம்’’ என்று, கீழே குனிந்துகொண்டு யோசித்துக் கொண்டிருந்த இளங்கீரனிடம் விடைபெற்றார் பெரியவர். அவர் எழுந்து நின்று பேசும்போதே எழும்பாத இளங்கீரன், விடைபெறும்போது நிமிர்ந்தும் பார்க்கவில்லை. 

எவ்வளவு பெரிய போராட்டம் ஒன்றை இவ்வளவு சிறிய மனிதர்களுக்காகச் செய்திருக்கிறோம் என்று ஒரு கணம் யோசித்துக்கொண்டு, கிணற்றடியை நோக்கிப்போனான் இளங்கீரன். இதைத்தான் அடுத்த கட்டப்போராட்டம் என்கிறார்களோ என்றும் நினைத்துக்கொண்டான். ஏனென்று தெரியாமலே அவனுக்குச் சிரிப்பு வந்தது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism