பிரீமியம் ஸ்டோரி
பெண் காது - நரன்

ங்க அடைக்கலராஜ்னு...” குரல் கேட்டு நிமிர்ந்தேன்.


“நீங்க?”

“நான் பூரணி, காலையில போன்ல பேசியிருந்தேன். நீங்க ஆபீஸுக்கு வரச் சொல்லியிருந்தீங்க... பேப்பர்ல…”

“ஆமாமா...’’

எழ முயன்றேன். மெல்லிய பதற்றம் உடலில் தொற்றிக்கொண்டது. எதிரில் இருந்த மர நாற்காலிகளில் ஒன்றைக் கண்களால்  காட்டி, “உட்காருங்க” என்றேன். இயல்பாக இருப்பதுபோல புன்னகைக்க முயன்றேன்.

அமர்ந்தபடியே “பேப்பர்ல விளம்பரம் வந்திருந்தது” என்றாள். ஆமோதிப்பது போல தலையை ஆட்டிக்கொண்டே “ஆமா... நான்தான் கொடுத்தேன். ஒரு நிமிஷம்... இதை எடுத்துவெச்சுட்டு வந்திடுறேன்’’ என்றபடி ஃபைலைக் கட்டத் தொடங்கினேன். ஓரிரு  நிமிடங்கள் அறையில் அமைதி.

மர டேபிளில் தாள்கள் பறக்க மாட்டாமல் கரகரவெனப் புரள, அதன் மடியில் இருக்கும் நீள மரத் துண்டையும் அதில்  `அடைக்கலராஜ், இணை மேலாளர்’ என வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருந்த என் பெயரையும் காரணமற்று சில கணங்கள் வெறித்தவள், மேசையில் இருந்த கோப்புகள், முதுகுப் பக்கம் வார்னிஷ் பளபளப்பை முற்றிலும் மறந்த இரண்டு அழுக்கு மர பீரோக்கள், கொண்டிவைத்த மர ஜன்னல், மேலே சோம்பேறித்தனமாகச் சுழலும் ஒரு பழைய ஃபேன்... என ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஒரு ஸோகால்டு கவர்ன்மென்ட் ஆபீஸ்... இல்லையா?’’ என்றேன். மெலிதாக அதிர்ந்தவள், பதில் சொல்லாமல் முறுவலித்தாள்.

இப்போதுதான் அவளை நன்கு கவனித்தேன். 30 வயது இருக்கும். தொடக்கப் பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியையாக வேலைபார்ப்பது போன்ற முகச்சாயல். கொஞ்சம் நம்பிக்கையான முகம்தான். டயட்டால் இளைக்காமல் கஷ்ட ஜீவனத்தால் இளைத்த மாதிரியான உடல்வாகு. வெளிர் நீலத்தில் புடவை. அதில் சின்னச்சின்ன வெள்ளை நிறப் பூக்கள் சிதறிக்கிடந்தன. சிறிய விலையுள்ள புடவையாகத்தான் இருக்கும். ஆனால், அதை மிகவும் நேர்த்தியாகக் கட்டியிருந்தாள்.  தோளில், எந்த வேலைப்பாடும் இல்லாத பிரௌன் நிற ஹேண்ட் பேக்.

“கீழே கேன்டீன் இருக்கு... அங்க போயிடலாமா?’’ என்றேன்.

`சரி’ எனத் தலையசைத்தாள்.

காரை பெயர்ந்து இப்போதோ, அப்போதோ என்று நிற்கும் அந்தக் கட்டடத்தின் மாடிப்படிகளில் இறங்கி கேன்டீனுக்குள் நுழைந்தோம்.

“என்ன சாப்பிடறீங்க?’’

கொஞ்சம் தயக்கத்துடன், “காபி” என்றாள்.

எழுந்துசென்று இரண்டு காபியைக்  கைப்பற்றிவந்தேன். நான்தான் கேட்டேன்...

``பேரு என்ன சொன்னீங்க... `பூரணி’னுதானே?’’

``ஆமா.’’

“உங்களுக்கும் இது ரெண்டாவது திருமணமா?”

“ஆமா.”

``டைவர்ஸா?’’

“இல்ல ஆக்ஸிடென்ட். குடிச்சிட்டு வண்டி ஓட்டி... அப்ப கல்யாணமாகி அஞ்சு மாசம்தான் ஆகியிருந்தது.”

``குழந்தை ஏதும்?’’

அவள் தலையை இடவலமாக  `இல்லை’ என்பதுபோல ஆட்டினாள். பிறகு காபியை ஒரு மிடறு அருந்தினாள்.

``பெரியவங்க யாரும் வரலையா?’’

“அம்மா மட்டும்தான். என்கூடத்தான் இருக்காங்க. அதிகமா நடமாட்டம் இல்லை. ரொம்ப வயசாகிடிச்சு. தவிர, நாம பேசி ஓ.கே-ன்னாதான் அம்மாகிட்ட சொல்லணும்.  அடையார்ல ஒரு ஆடிட்டர் ஆபீஸ்ல அக்கௌன்டன்ட் வேலை பார்க்குறேன்.”

கொஞ்ச நேரம் அமைதி.

“உங்களுக்கு என்ன டைவர்ஸா?” - பூரணி கேட்டாள்.

“ஆமா. ஆறு மாசம் ஆகுது. மூணு வயசுல ஆண் குழந்தை இருக்கு. அவங்ககிட்ட இருக்கணும்னு உத்தரவாகியிருக்கு. நானும் மறுப்பு சொல்லலை.”

மீண்டும் அமைதி.

பெண் காது - நரன்

“வேறு எதுவும்… உங்களுக்கு ப்ராப்ளம்...இல்ல... ஏன் கேக்குறேன்னா பேப்பர் விளம்பரத்துல `நன்றாகக் காது கேட்கும் திறனுடைய பெண்தான் வேண்டும்’னு   போட்டிருந்தது. வேற எதுவும் எதிர்பார்ப்போ, நிபந்தனைகளோ அதில் இல்லை. அதான்…” - பூரணி தயக்கத்துடன் கேட்டவள், “ஏன்... அவங்களுக்குச் சரியா காது கேட்காதா?” என்றாள்.

“இல்லை... அப்படி இல்ல. நல்லாத்தான் கேட்கும். ஆனா எனக்குத்தான்...” 

இப்போது காபி அருந்துவதை நிறுத்திவிட்டு, குழப்பமாக என்னைப் பார்த்தாள்.

``காது எவ்வளவு முக்கியம்னு எனக்கு கல்யாணத்துக்குப் பின்னாடிதான் தெரியும்.’’

இப்போது பெரிய மிடறாய்ப் பருகி காலி தம்ளரை டேபிளில் வைத்தாள். ஆனால், பார்வையை மட்டும் என்னிடம் இருந்து விலக்கவில்லை.

``சின்ன வயசுல கொஞ்ச வருஷம் தென்காசியில இருந்தோம்... அம்மையோட அம்மா வீட்ல. பனைமரக் கட்டையால குறுக்குக் கட்டை உத்திரம் போட்ட பழைய வீடு அது. அங்கதான் அன்னபாக்கியம் பாட்டி இருந்தா. தினமும் இரவு கதை போடத் தொடங்கும்போதெல்லாம் சொல்வா... `அடைக்கலம்... மனுஷன் தூங்கும்போது அவன் காதுதான்டே கடைசியாத் தூங்கும். காதும் வாயும் அக்கா தங்கச்சிக. எப்பவுமே ஒருத்தரைவிட்டு ஒருத்தர் பிரியவே மாட்டாக. காது கேட்டுக்கிட்டு இருந்தாதான் வாயி `ம்...’ கொட்டும். காது உறங்கிட்டா, வாயும் உறங்கிடும். அதனால நீ `ம்...’ கொட்டுற வரைக்கும்தான்டே, நான் கதை போடுவேன் சரியா?’னு கேட்பா.

கொஞ்சம் வளர்ந்த பிறகு நானே  பார்த்திருக்கேன். எங்க தங்கமணி சித்திக்குக் காது கேட்காது; வாயும் பேச வராது.’’

பூரணி தலையை மிகக் கொஞ்சமாக மேலும் கீழும் அசைத்தபடியே இருந்தாள். இடை இடையே `ம்…’ கொட்டிக்கொண்டே இருந்தாள்.

நான் சொன்னேன். `` `ம்…’ கொட்டுவது எவ்வளவு முக்கியம் தெரியுமா? மரியம் இது ஒன்றையும் செய்ய மாட்டாள். பல நேரங்களில் பேசிக்கொண்டிருக்கும்போது என் முகத்தைக்கூடப் பார்க்க மாட்டாள். வேறு எதையோ தேடிக்கொண்டிருப்பாள். இல்லை என்றால் எந்்தச் சலனமும் இல்லாமல் என்னைக் கடந்து வேறு அறைக்குச் சென்று தாழிட்டுக்கொள்வாள். ஆரம்பத்தில் என்னால் இதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. என்னை உதாசீனப்படுத்துவதாகவே நினைத்தேன். பலமுறை பேச்சைப் பாதியில் நிறுத்தி, கோபமாகக் கத்தியபடியே அடிக்கவும் பாய்ந்திருக்கிறேன்.

அலுவலகச் சம்பவங்களையோ, பிரச்னைகளையோ, அபூர்வ நகைச்சுவையோ சொல்லிக்கொண்டிருப்பேன். முகத்தில் எந்த பாவமும் இருக்காது. ஒரு கருங்கல்லைப்போல முகத்தை வைத்திருப்பாள். ஒரு `ம்…’கூடக் கிடையாது, தலையசைப்பு கிடையாது. `கேட்குதா... இல்லையா?’ என்று நான் கத்துவேன். கொஞ்ச நேரம் அல்லது கொஞ்ச தூரம் தள்ளிப்போய்ச் சொல்வாள். `இதுக்கு நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க?’ நிச்சயமாக அந்தப் பதிலில் வெறுப்போ, உதாசீனமோ இருக்காது. அது ஒரு மாதிரி நேர்கோட்டில் இருக்கும்... ஏற்றம் - இறக்கம் இல்லாமல். உப்பு - உறைப்பு இல்லாத சப்பென்ற உணவுப் பொருளைச் சாப்பிடுவதுபோல வைத்துக்கொள்ளுங்களேன்.

ஒருமுறை அருளானந்தன் மாமா ஊரில் இருந்து வந்திருந்தார். என் அம்மாவின்  அண்ணன். குழந்தை இல்லை அவருக்கு. என் மேல் நிறைய பாசம். ஒரு மாதம் முன்புதான் அல்போன்ஸ் அத்தை  இறந்துபோயிருந்தாள். மனதும் பொருளாதாரமும் நொடித்துப் போயிருந்தார். துஷ்டிக்குப் போனபோது, நான்தான் அவரை `எங்கள் வீட்டில் வந்து கொஞ்ச நாள் இருங்க’ என்று சொன்னேன். ஒருநாள் காலையில் அழுக்கு உடையுடன், கைப்பிடி அறுந்த பழைய துணிக்கடை பேக்கோடு வந்திருந்தார். மரியம்தான் போய் கதவைத் திறந்தாள். பார்த்ததும் அழத் தொடங்கிவிட்டார். அவள் முகத்தில்  வழக்கம்போல்  எந்தச் சலனமும்  இல்லை. மனிதர் நெடுநேரம் பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். மரியத்திடம் இருந்து  மறுமொழியோ, ஆறுதலோ, ஏன், ஒரு `ம்’கூட இல்லை. ஆனால், நல்லவேளை அவரை  அமரச்செய்து காபி கலந்து கொடுத்திருக்கிறாள். கையில் பால் கவரோடும் தினசரியோடும் வீட்டுக்குள்  நுழைந்தவனிடம், `சும்மாதான் ஒரு எட்டு பார்த்திட்டுப் போகலாம்னு வந்தேன்’ எனப் பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தார். நான் அவரிடம் நிறைய நேரம் பேச முற்பட்டேன். ஆனால், அவர் மனம் உரையாடலில் இணையவே இல்லை. இயல்பில் முருங்கை மரத்தைப்போல எளிதில் உடையக்கூடிய மனிதர் அவர். வேலை இருபபதாகச் சொல்லி அன்றே கிளம்பிவிட்டார்.

எங்களுக்குக் குழந்தை பிறந்தபோதுகூட இப்படித்தான். முழு நேரமும் குழந்தையுடனேதான் இருப்பாள். ஆனால், ஒருநாளில்  நான்கு ஐந்து வார்த்தைகளுக்கு மேல் குழந்தையிடம்கூடச் செலவழிக்க மாட்டாள். வெளியே விடாமல் வார்த்தைகளைச் சேகரித்து வைத்துக்கொண்டு அப்படி என்னதான் செய்யப்போகிறாளோ?

தொடக்கத்தில் எல்லாம் நான் மரியத்தின் கேட்கும்திறனைப் பரிசோதிக்க சில்வர் தம்ளர்களையோ, கண்ணாடிக் குவளையையோ வேண்டும் என்றே தவறவிடுவேன்.

அவள் உள்ளறையில் இருந்து சமையல் அறைக்கு ஓடிவருவாள். பின்னர் கை தவறி விழுந்ததாகச் சொல்லி மன்னிப்புக் கேட்பேன். அவள் உடைந்த கண்ணாடிச் சில்லுகளைப் பொறுக்கி, குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு நகர்ந்துவிடுவாள். நான் பலமுறை மரியம் அப்பாவிடம் இதைக் குறையாகச் சொன்னேன். அவர், `அவள் சுபாவமே அப்படித்தான். எங்களுக்கு எல்லாம் பழகிவிட்டது. நீங்கள் பொறுத்துக்கங்க...’ என்பதையே பலமுறை எனக்குப் பதிலாகச் சொன்னார்.

பெண் காது - நரன்

நான் அதற்கு மேல் அவரிடம், இது பற்றி கடுமையாகப் பேச விரும்பவில்லை. ஏனெனில், அவர் நான் படித்த  பள்ளியின் தலைமை ஆசிரியர். மரியம் அம்மா தெரசாம்மாளும் ஒரு பள்ளியில் ஆசிரியராகப்  பணிசெய்து ஓய்வுபெற்றவர். `ஒரே பிள்ளையாக வளர்ந்ததுதான் காரணமாக இருக்கும்’ என மரியத்தின் அம்மா எப்போதும் குறைபட்டுக்கொண்டார், `கர்த்தர்தான் வழிவிடணும்’ எனக் கூறியபடியே தேவமாதா புகைப்படத்தை நிமிர்ந்து பார்த்தபடி ஜெபமாலை உருட்டப் போய்விடுவார்.
நானும் பலபொழுது யூகித்திருக்கிறேன். அவள் தன் பால்யம் முழுக்கத் தனிமைப் படுத்தப்பட்டதுதான் காரணமாக இருக்கலாம்.

ஒரு கட்டத்தில் வேறு வழியில்லாமல் அறையை மூடிக்கொண்டு என்னிடமே உரையாடிக்கொண்டிருந்தேன். சத்தம் அறைக்கு வெளியே மரியத்துக்கும் கேட்டிருக்க வேண்டும். பிரிவதற்குக் காரணமாக அவள் அதைத்தான் சொன்னாள்.

என் வாயில் இருந்து வெளியேறும் வார்த்தைகளை, நாய் பந்தைக் கவ்வி, தன் எஜமானனின் கைகளியேலே மீண்டும் திணிப்பதைப்போல என் காதுகள் அவற்றை மீண்டும் என்னிடமே சேர்த்துக்கொண்டிருந்தன. என் மண்டைக்குள், முழுக்க சத்தங்களும் உரையாடல்களும் நிரம்பியிருந்தன. அவை அங்கே இருந்து வெளியேற முடியாமல் திணறின. கேட்பதற்கு வேறு காதுகள் இல்லாததால், ஒரு கட்டத்தில் வாயும் பேசுவதை நிறுத்திக்கொண்டது.’’

``ஏன்... ஆபீஸ்லயோ வெளி இடத்திலோ உங்களுக்கு நண்பர்கள் என யாரும் இல்லையா?’’ - பூரணி கேட்டாள்.

“நான் பேசும் விஷயங்களைக் கேட்பதற்கு ஒரு பெண் காதுதான் எனக்குத் தேவையாக இருந்தது. `ம்’ கொட்டுவதற்கும் ஒரு பெண்ணின் குரல்தான் வேண்டும் என்பதில் என் மனசு தீர்மானமாக இருந்தது.  கிட்டத்தட்ட எல்லோருமே அப்படித்தான்எதிர்பார்க்கிறார்கள் ல்லையா?

சிறு வயதில் இருந்தே சம்பவங்கள், சுவாரஸ்யங்கள், துக்கம், மகிழ்ச்சி, அழுகை, உரையாடல் என வாயின் எண்ணற்ற சொல் வெளிப்பாடுகளை அம்மா, அக்கா, மனைவி, காதலி, தோழி, மகள்... என ஏதாவது ஒரு பெண்ணின் காதுகளுக்குக் கடத்துவதில்தானே விருப்பமாக இருக்கிறோம். நிச்சயம் வெளியேறும் எனத் தெரிந்தும் பெண் காதுகளிடம் தானே ரகசியங்களையும் பரிமாறிக் கொள்கிறோம்.

அதனால்தானோ என்னவோ... பெண்ணின் காதுக்கு மட்டும் அவ்வளவு அணிகலன்களைப் பூட்டி அழகு பார்க்கிறார்கள். தோடு0, தொங்கட்டான், திருகு, முதுமையில் சமணர்களைப்போல தொங்கு காது வளர்த்து தண்டட்டி, பாம்படம், காது உச்சியில் கோபுரம் என அணியும் பூடி. வேறு எந்த நுண்உறுப்புக்கும் இவ்வளவு அணிகலன்கள் இல்லையே. வறுமையின் உச்சத்தில் இருக்கும்போதுகூட பெண் காதிடம்தானே கழற்றித் தரச்சொல்லிக் கேட்கிறோம்... இல்லையா?’’ என்றேன்.

பூரணி ஆமோதிக்கும்படியாகத் தலையை ஆட்டினாள்.

``நான் இதுவரை ஆறேழு முறை நாளிதழ்களில் இதேபோல விளம்பரம் கொடுத்திருக்கிறேன். இதுவரை  உங்களையும் வேறு ஒரு பெண்ணையும் தவிர, யாருமே என்னைத் தொடர்புகொள்ளவே இல்லை.’’

“அப்படியா… யாரது அந்த வேறு ஒரு பெண்?” எனக் கேட்டாள்.

“அந்தப் பெண் ஒருமுறை என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டாள். இயல்பாகவே கொஞ்சம் துக்கமான குரல் அவளுக்கு. அவளின் கணவர் அவளைப் பிரிந்து சென்றுவிட்டாராம். அந்தப் பெண்ணுக்கு ஒரு விநோதமான பிரச்னை இருந்தது. அவளுக்கு நுகர்வுத்திறன் துளிகூட இல்லை. எந்தப் பொருளின் மீதும் அவளுக்கு வாசனை தெரியாது.”

“அப்படி எல்லாம் நோய் இருக்கிறதா என்ன?”

``ஆமாம். எனக்கே முதலில் கேட்பதற்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. பலமுறை அவள் சமையல் செய்யும்பொழுது சோற்றையும் குழம்பையும் அடிப்பிடிக்க விட்டிருக்கிறாள். ஒருமுறை காஸ் சிலிண்டர் கசிந்ததைக்கூட உணர முடியாமல் படுத்துறங் கியிருக்கிறாள்.

அப்போது அவளுடன் அவளின் ஐந்து மாதக் கைக்குழந்தையும் இருந்திருக்கிறது. இந்த விஷயத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, அவளது கணவன் இரு வீட்டாரிடமும் பேசிப் பிரிந்து சென்றுவிட்டானாம்.

அவள் சொன்னாள்... `சிறுவயதில் எல்லா  பெண் பிள்ளைகளுக்கும்  இருப்பதுபோல விதவிதமான பூக்களை நுகர எனக்கு விருப்பமே இருந்தது இல்லை. இப்போது வரை நான் நுகர விரும்பும் ஒரே வாசம். மூத்திரத்தின் வாசம்தான். படுக்கையில் குடி தண்ணீரைக் கொட்டியபோது அடிக்காத அம்மா, மூத்திரம் பெய்தபோது ஏன் அப்படி அடித்தாள்? அன்று முழுக்க படுக்கையை அலசும்போதெல்லாம் ஏன் அப்படி திட்டித் தீர்த்தாள்? அதுவும் நீர்தானே. எல்லோரும் முகம் சுளிப்பதுபோல் மூத்திர வாடையில் அப்படி என்னதான் இருக்கிறது?

ஆனால், அதே அம்மா இறக்கும் முன்னர் படுத்தபடுக்கையாக இருந்த ஏழு மாதங்களும் நான்தான் மலம் அள்ளிப் போட்டேன். ஒருவேளை எனக்கு நுகர்வுத்திறன் இருந்திருந்தால் அதை முழு ஈடுபாட்டுடன் செய்திருக்க மாட்டேனோ என்னவோ. ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் முகம் சுளித்திருக்க வாய்ப்பு இருக்கிறது’ என்றாள்.

என்னைப்போலவே எவ்வளவு பால்யத்தின் முழு நினைவுகளோடு இருக்கிறாள் என நான் நினைத்துக் கொண்டேன். கிட்டத்தட்ட அவள்தான் என நான் தீர்மானித்துவிட்டேன்.

அப்போதுதான் அவள் என்னைப் பற்றி விசாரித்தாள். உங்களைப்போல விளம்பரத்தில் இருந்த அந்த வரியைச் சுட்டிக்காட்டி விளக்கம் கேட்டாள். நான் பேசத் தொடங்கினேன். அவள் எதிர் முனையில் `ம்’ கொட்டிக்கொண்டிருந்தாள். நான் விரும்புவதும் அதுதானே.

கொஞ்ச நேரத்திலேயே நான் விரிவாகப் பேச ஆயத்தமாகும்போது அவளின் `ம்’ சத்தத்தில் ஒரு மெலிவுதெரிந்தது. அடுத்த ஓரிரு வார்த்தைக்குப் பிறகு அந்த `ம்’ இல்லை. தொலைபேசி துண்டிக்கப்பட்டிருந்தது.’’

``உண்மைதான் காதுகளும் சத்தங்களும் எவ்வளவு முக்கியமானவை. என் அப்பாகூட தன் இறுதிக் காலத்தில் சத்தங்கள் இல்லாததால்தான் உள்ளொடுங்கிப்போய் இறந்துபோனார். விருதுநகரில் பஞ்சாலை ஒன்றில் ஃபோர்மேனாக வேலைபார்த்தார் அவர். சிறுமியாக இருந்தபோது பள்ளி  விடுமுறை நாட்களில்  நான்தான் அப்பாவுக்கு தூக்குவாளியில் சோறு கொண்டுபோவேன். காக்கி

பெண் காது - நரன்

நிறக் கால்சட்டையும் காக்கி நிற மேல் சட்டையும் உடுத்தியிருப்பார். அப்போது எனது அப்பாவின் உடல் முழுக்க, ஆங்காங்கே  பனி பொழிந்ததுபோல வெண்பஞ்சுகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.

அவ்வளவு அகலமான சத்தங்களை நான் இதற்கு முன்னர் கேட்டவள் இல்லை. முன்னும் பின்னும் வேகமாக  அசைந்தபடி இயங்கும் அந்த இயந்திரங்களைப் பார்த்துக்கொண்டே நின்றால், அவ்வளவுதான்... தலைசுற்றல் வரும் எனக்கு. அங்கே யாரும் ஊமையோ, கேட்கும் திறன் அற்றவர்களோ கிடையாது. இருப்பினும் உள்ளே இயந்திரங்களின் முன்பு வேலை செய்யும் அநேகர் சைகையால்தான் பேசிக்கொள்கிறார்கள்.

அப்பா வேலையில் இருந்து நின்ற பின்னரும், எங்கள் பூர்வீக வீட்டில்தான் இருந்தோம். நாங்கள் இருந்த இடத்தில் இருந்து ஒரு பர்லாங் தூரத்தில்தான் ஆலை இருந்தது. இரவு எல்லாம் அப்பா கயிற்றுக்  கட்டிலில் படுத்திருப்பார். இரவில் அவரின் காது சினைப்பாம்பு இரை தேடித் திரிவதுபோல ஆலையின் இயந்திரச் சத்தங்களைத் தேடி அடைந்துவிடும். கூர்ந்து கவனித்தோமானால் அவரின் தலை அந்த இயந்திரத்தைப்போல முன்னும் பின்னும் ஆடியபடியே இருக்கும். தலையிலும் தாடையிலும் மட்டும் வெண் பஞ்சுகள் சொரிந்துகிடந்தன. நிரம்ப வயதாகிவிட்டது அவருக்கு. வேலையைவிட்ட பின்னர் நெடு நாட்கள் வரை அவர் பழக்கதோஷத்தால் சைகையிலேயேதான் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு வாய் இருப்பதே மறந்துபோனதுபோல.

ஒரு கட்டத்தில் பூர்வீக வீட்டை விற்றுவிட்டு, வேறு பகுதிக்கு இடம் மாறினோம். சத்தங்கள் ஒடுங்கிய நிசப்தமான பகுதி அது. அன்று முதல் அவரால் உறங்க முடியவில்லை. அவரது காது தூரத்துப் பஞ்சாலையின் இயந்திரச் சத்தங்களைத் தேடித் தேடி தோற்றுப்போனது. காதுகள் தூங்க மறுத்தன. தவிர, காதுகள் சத்தங்களை கண்களுக்கும் உடலுக்கும் பழக்கிவிட்டிருக்கக்கூடும் என நினைக்கிறேன். இரைச்சல் இல்லாமல் ஒட்டுமொத்த உடலும் இளைப்பாற முடியாமல் அலைக்கழிந்தன. ஓரிரு மாதங்களிலேயே இறந்தும்போனார். அப்பா இறந்தபோது அம்மா ஒடுங்கிப்போய் அப்பாவையே பார்த்தபடி இருந்தாள். சத்தமே இல்லை. கண்ணீர் மட்டும் நீர்க்கயிறு போல் வந்துகொண்டே இருந்தது. கொஞ்ச காலம் சித்தக்கலக்கம் உள்ளவளைப்போல இருந்தாள். அப்பா இல்லாத உலகத்தில் அவளுக்கு எல்லாமே இருண்டுபோயிருந்திருக்கும். இப்போதுகூட அவள்தான் வற்புறுத்தினாள்.’’

 ஒரு காபி தம்ளர் தரையில் விழுந்து,  சத்தத்தை எழுப்பியது.

பூரணியிடம் நான் பேசிக்கொண்டே இருந்திருக்கிறேன். எவ்வளவு நேரம் கழிந்தது எனத் தெரியவில்லை.

நான் இப்போதுதான் டேபிளை உற்றுக் கவனித்தேன். அங்கே இருவர் முன்னும் ஆறேழு காபி தம்ளர்கள். வேகமாக மணிக்கட்டை உயர்த்தி நேரத்தைப் பார்த்தேன். நாலு மணி நேரத்துக்கு மேல் கடந்துவிட்டிருந்தது. நான் அதைப் பூரணியிடம் சொன்னேன். அவள்
``ஆமாம்’’ என்றாள்.

``கடைசியா என்ன சொன்னேன்?’’ பூரணியிடம் கேட்டேன்.
“நாலு வருஷத்துக்கு முன்னாடி நள்ளிரவில் உங்க அப்பா இறந்துபோன விஷயத்தைக் கேள்விப்பட்டு, அழுகையோடு மரியத்தை எழுப்பிச் சொன்னபோது, அவர் வழக்கம்போல் முகத்தைக் கருங்கல்போல வைத்திருந்துவிட்டு பின்னர் மீண்டும் படுத்துக்கொண்டார் எனச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்’’ என்றாள்.

``ஆமாமாம். ஆனா, இப்பதான் நாலு வருஷத்துக்கு முந்தின விஷயத்தையே இன்னும் சொல்றேனா? இன்னும் மண்டையில் நிறைய சத்தங்களும் விஷயங்களும் இருக்கு... சொல்லணும்’’ என்றேன்.

பூரணி தலையை ஆட்டியபடியே `ம்’ கொட்டினாள். கவனித்தேன். அந்த `ம்’-ல் எந்தத் தொய்வும் மெலிவும் இல்லை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு