Published:Updated:

கீச் கீச் விக்னேஷ்!

கீச் கீச் விக்னேஷ்!
பிரீமியம் ஸ்டோரி
கீச் கீச் விக்னேஷ்!

விஷ்ணுபுரம் சரவணன், ஓவியம்: ஸ்யாம்

கீச் கீச் விக்னேஷ்!

விஷ்ணுபுரம் சரவணன், ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
கீச் கீச் விக்னேஷ்!
பிரீமியம் ஸ்டோரி
கீச் கீச் விக்னேஷ்!
கீச் கீச் விக்னேஷ்!

விக்னேஷுக்கு அழகான, இரண்டு கொம்புகள் முளைத்திருந்தன. அவை, அறிவியல் பாடப் புத்தகத்தில் இருக்கும் மானின் கொம்புகளைப் போல வளைந்து, நெளிந்து இருந்தன. பள்ளியில் நுழைந்த விக்னேஷை எல்லோரும் அதிசயமாகப் பார்த்தார்கள். காலை பிரேயரில் திருக்குறள் கூறும்போது எல்லோரும் கொம்புகளையே பார்க்க, தப்பும் தவறுமாக சொன்னான். தலைக்கு மேல் நீண்டிருந்த கொம்பின் நிழல் தரையில் தெரிய, கண்களை இறுக மூடிக்கொண்டான். ஒரு காக்கா பறந்துவந்து ஒரு கொம்பின் மீது உட்கார்ந்து தலையைக் கொத்த...

“அம்மா...’’ என்று அலறியபடியே எழுந்தான் விக்னேஷ்.

சுரேஷும் இவனைப் போல ஐந்தாம் வகுப்புதான். முந்தாநாள் ‘ஸ்போர்ட்ஸ் டே’ என்பதால், நேற்று பள்ளிக்கு விடுமுறை. அதனால் குளித்து சாப்பிட்டதும், சுரேஷைத் தேடிச் சென்றான். சுரேஷ், செமையாக ஓடுவான். நேற்றுகூட 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலில்  வந்தான். அவனை உற்சாகப்படுத்த ‘கமான், கமான்’ எனக் கத்தி, விக்னேஷுக்குத் தொண்டை வலியே வந்துவிட்டது. காலையில் இருந்து ‘கீச் கீச்’ குரல்தான் வந்தது.

பூவரசு இலையில் பீப்பி செய்யலாம் என்று சுரேஷ்தான் முதலில் சொன்னான். விக்னேஷுக்கு ஆசைதான். ஆனால், இரண்டு பேருக்கும் மரம் ஏறத் தெரியாது. “மரம் எல்லாம் ஏற வேணாம்டா. காளியண்ணன் சைக்கிள் கடைக்குப் பக்கத்தில் பூவரசம் மரம் இருக்கு. அவரோட சைக்கிள் கேரியரில் ஏறியே பறிச்சுடலாம்” என்றான் சுரேஷ்.

இருவரும் கிளம்பி, காளியண்ணன் கடைக்கு வர,  பூட்டுதான் இவர்களை வரவேற்றது. “என்னடா இப்படி ஆயிடுச்சு’’ என்றான் விக்னேஷ்.

அதற்கு சுரேஷ், “பரவாயில்லை விடு, ஆத்துப் பாலத்துக்கிட்ட ஒரு மரம் இருக்கு. அங்கே கிட்டயே  இலை இருக்கும்” எனச் சொல்ல, மீண்டும் நடந்தார்கள்.

ஆனால், சுரேஷ் சொன்னதுபோல மரத்தின் இலைகள், கைக்கு எட்டும் அருகில் இல்லை. “நானே மரத்துல ஏறுறேன்” என்ற சுரேஷை, விக்‌னேஷ் தூக்கிப் பிடிக்க, மரத்தில் ஏறினான். பெரிய கிளையில் உட்கார்ந்துகொண்டான்.

“டேய் விக்கி, இங்கே பூவரசப் பூ இருக்கு. பறிச்சுப் போடறேன். கேட்ச் பிடி. விட்டுட்டா, தரையில விழுந்து புழுதியாயிடும்.” என்றபடி பூவைப் பறித்து, வீசினான்.

விக்னேஷ் சரியாகப் பிடித்துக்கொண்டான். பிறகு, இலைகளோடு சின்னக் கிளையை ஒடித்து வீசிவிட்டு, கீழே இறங்கினான் சுரேஷ். இருவரும் படித்துறைக்கு வந்தார்கள். இலையை இரண்டாக கிழித்து பீப்பி செய்தார்கள்.

சுரேஷின் முதுகில் கடுமையாக அரித்தது. சட்டையைக் கழற்றினால், முதுகில் மொசுக்கட்டை ஒன்று ஊர்ந்தது. விக்னேஷ் இலையின் காம்பில் பிடித்து, தூர எறிந்தான்.

“டேய், ரொம்ப அரிக்குதுடா” என்று அழ ஆரம்பித்தான் சுரேஷ். விக்‌னேஷ், “ஆத்துல குளிச்சுடலாம். சட்டையையும் துவைச்சுடுவோம்’’ என்றதும், ‘தொப்’ என்று ஆற்றில் குதித்தான். விக்னேஷும் குதித்தான். ரொம்ப நேரம் குளித்ததும் அரிப்பது நின்றுபோனது. கரைக்கு வந்து, சட்டையை தேய்த்து துவைத்தார்கள்.

‘பாம்... பாம்’ என்ற ஓசையோடு ஐஸ்காரரின் சைக்கிள் வர, இருவரும் துள்ளிக் குதித்து ஓடினர். விக்‌னேஷ் ‘கீச் கீச்’ குரலில் ஐஸ் கேட்டான். ‘‘உனக்கு தொண்டை சரியில்லை. இந்த நேரத்துல ஐஸ் சாப்பிடக் கூடாது. இவனுக்கு மட்டும் தரேன்” என்று சுரேஷுக்கு கொடுத்துவிட்டு சென்றார்.

ஐஸ்காரர் சென்றதும், “எனக்கும் தாடா” என்றான் விக்னேஷ். “ஐய்யே, எச்சில் பண்ணிட்டேனே” என்றான் சுரேஷ். “அதுக்கு சூப்பர் ஐடியா இருக்கு” என்ற விக்னேஷ், ஐஸை வாங்கி வெயிலில் காட்டினான். ஐஸ் உருகி கீழே சொட்டியது. “இப்போ எச்சில் போயிடுச்சு இல்ல” என்று சப்பினான். பிறகு இருவரும் மாறி மாறிச் சாப்பிட்டார்கள்.

விக்னேஷ் குரல் இன்னும் கீச் கீச் என்றாகிவிட்டது. அம்மாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான் என்று பயந்தான்.

“துரை மாமா கடையில சுண்ணாம்பு இருக்கும்டா. தொண்டையில தடவினால் சரியாடும். எனக்கு அப்படித்தான் தடவினாங்க” என்றான் சுரேஷ்.

இருவரும் துரை கடைக்குச் செல்ல, கடை வாசலில் உட்கார்ந்தபடியே ரத்னம் தாத்தா, வெற்றிலைப் பாக்கு போட்டுக்கொண்டிருந்தார். அவரிடம் போன விக்னேஷ்   சுண்ணாம்பு கேட்டான்.

தாத்தா கொஞ்சமாக சுண்ணாம்பை எடுத்து, விக்னேஷ் தொண்டையில் தடவிவிட்டார். வெற்றிலையில் இருந்து காம்பை பிய்த்து, ஆளுக்கு ஒன்று தந்தார். ‘‘தாத்தா முழு வெத்தலையும் தாயேன்” என்றான் சுரேஷ்.

அவன் தலையில் செல்லமாக தட்டிய தாத்தா, “காம்பு மட்டும் சாப்பிடறது தொண்டைக்கு நல்லது. சின்னப் பசங்க வெத்திலைப் போட்டா, கொம்பு முளைச்சிடும்டா’’ என்று கைகளால் தலையில் வைத்துக் காட்டினார்.

கீச் கீச் விக்னேஷ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோயில் வாசலில் அமர்ந்து மீண்டும் பீப்பீ செய்யும்போது, ‘‘ஏண்டா, வெத்தலைப் பாக்கு போட்டா நிஜமாகவே கொம்பு முளைக்குமா?” எனக் கேட்டான் விக்னேஷ்.

“என் பாட்டியும் அப்படித்தான் சொல்வாங்க’’ என்றான் சுரேஷ்.

“இன்னிக்கு காலையில எங்க தாத்தாவோடு வெத்தலை பொட்டியில் இருந்து ரெண்டு வெத்தலையை எடுத்து  மென்னு துப்பினேன்” என்று பயந்துகொண்டே சொன்னான் விக்னேஷ்.

அன்றைக்கு இரவுதான் விக்னேஷூக்கு கொம்பு முளைக்கும் கனவு வந்தது. ‘‘அம்மா’’ என அலறியபடி எழுந்தான். அவனது ‘கீச் கீச்’ குரல் போய்விட்டது.

பக்கத்தில் படுத்திருந்த அம்மா சட்டென எழுந்து, ‘‘என்னடா ஆச்சு?’’ எனக் கேட்டார்.

விக்னேஷ் விஷயத்தைச் சொல்ல, “சின்னப் பசங்க வெத்திலைப் போடறது உடம்புக்கு நல்லதில்லே. அதனால் அப்படிச் சொல்வாங்க’’ என்று புன்னகையோடு சொன்னபடி, அவன் தலையை வருடினார்.

விக்னேஷ் நிம்மதியோடு கண்களை மூடிக்கொண்டான். காலையில் ஸ்கூல் பிரேயரில் சொல்லவேண்டிய திருக்குறளை, மனதுக்குள் சொல்ல ஆரம்பித்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism