
முதலாளி அழைத்துவிட்டார் இரண்டு, நான்கு முறை
அண்டங்காக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. கூடவே
நான்கைந்து மைனாக்கள் முன்னே சென்று
துரத்திக்கொண்டிருந்தன. முதலாளி திரும்ப அழைக்கிறார்
மைனாக்கள் அண்டங்காக்கையைத் துரத்த முயல்கின்றன,
தோற்கின்றன, நான் முதலாளியின் அழைப்பை ஏற்கவில்லை
ஓரிரு குச்சிகள் போதும், கூடுகட்ட, முதலாளி திரும்பவும்,
நான் மைனாக்களைப் பார்க்கிறேன்.
அவை அண்டங்காக்கையைப் பார்த்துச் சத்தமிடுகின்றன. முதலாளி மீண்டும்
அழைப்பதை ஏற்கவில்லை. இன்று புதிய வியாபாரக் கூட்டம்.
மைனாக்கள் கூட்டமாகத் திரும்பவும் பார்க்கின்றன
அண்டங்காக்கை தனியாகத் திரும்பவும் பார்க்கிறது
இன்று நான் செல்லவில்லை எனில் முதலாளி என்னை
வேலையிலிருந்து தூக்கிவிடுவார். பரவாயில்லை...
மைனாக்களின் கூடு கலையக்கூடாது.
அண்டங்காக்கைக்கு என்று ஒரு கூடு தேவை.
முதலாளி திரும்பத் திரும்ப அழைக்கிறார். மைனாக்கள்
தம் கழுத்தைத் திருப்பி என்னைப் பார்க்கின்றன.
அண்டங்காக்கையும் வெகுநேரமாக என்னையே பார்த்துக்கொண்டு
இருப்பதைச் சொல்லவே தேவையில்லை. ஒரு வேலை
இல்லாமல் போகப்போகிறது. சுள்ளிகளை
இன்று முழுவதும் சந்தோஷமாகப் பொறுக்க வேண்டும்
அண்டங்காக்கைக்கோ மைனாக்களுக்கோ எவற்றிற்கோ
தேவை எனில் எடுத்துச் செல்லட்டும். முதலாளி
திரும்பத் திரும்ப அழைக்கிறார். எடுத்துப் பேசுகிறேன்.
“ஐயா, இன்று முழுவதும் சுள்ளிகளைப் பொறுக்கவேண்டும்
வர இயலாது. மன்னிக்கவும்”
முதலாளி வைத்துவிட்டார்.
முதல் சுள்ளி கண்ணில் பட்டுவிட்டது.