Published:Updated:

“புத்தகங்களைத் தடை செய்வது சாத்தியமே இல்லை!” - தமிழ்மகன், வெய்யில், இளங்கோகிருஷ்ணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“புத்தகங்களைத் தடை செய்வது சாத்தியமே இல்லை!” - தமிழ்மகன், வெய்யில், இளங்கோகிருஷ்ணன்
“புத்தகங்களைத் தடை செய்வது சாத்தியமே இல்லை!” - தமிழ்மகன், வெய்யில், இளங்கோகிருஷ்ணன்

எஸ்.வி.ஆர் - நேர்காணல்

பிரீமியம் ஸ்டோரி
“புத்தகங்களைத் தடை செய்வது சாத்தியமே இல்லை!” - தமிழ்மகன், வெய்யில், இளங்கோகிருஷ்ணன்

ஸ்.வி.ஆர். என்று அழைக்கப்படும்  எஸ்.வி.ராஜதுரை, மார்க்ஸிய சிந்தனையாளர். தமிழின் கலை இலக்கிய விமர்சகர்களில் முக்கியமானவர். மார்க்ஸியம், அம்பேத்கரியம், பெரியாரியம் குறித்து, தமிழிலும் ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதியவர். கவிதைகள், சிறுகதைகள் என ஏராளமான இலக்கிய ஆக்கங்களை மொழியாக்கம் செய்தவர். தமிழ் வாசகப் பரப்பில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க புத்தகங்களையும் ஆளுமைகளையும்  அறிமுகம் செய்துவருபவர். மனித உரிமை இயக்கக் களச்செயல் பாட்டுக்காரர். அரசியல், பொருளாதாரம், சமூகவியல் தொடர்பான தனது எழுத்துகளால் தமிழுக்கு முக்கியப் பங்களிப்பைச் செய்தவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க பணியைச் செய்தவர்.

சமீபத்தில் த.மு.எ.க.ச அமைப்பு, இவரது முற்போக்கு கலைஇலக்கியப் பங்களிப்புக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. விருதுத் தொகையாக வழங்கப்பட்ட  ரூபாய் 1 லட்சத்தை  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு  வழங்கியுள்ளார். இன்றும் துடிப்புடன் இயங்கிவரும் எஸ்.வி.ராஜதுரையைச் சந்தித்தோம்.

உங்களது குடும்பம் மற்றும் எழுதத் தொடங்கிய பின்னணி குறித்துச் சொல்லுங்கள்...

நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் கிராமம், கோவை தாராபுரத்திற்கு அருகில் உள்ளது. முதல் தலைமுறையாக கல்வி கற்ற எனது தந்தை காளியப்பா, ஆசிரியராகப் பணியாற்றினார். அம்மா அங்கம்மா, அந்தக் காலத்தில் இ.எஸ்.எல்.சி என்று சொல்லப்படுகிற எட்டாம் வகுப்பு படித்தவர். தமிழில் அப்போது வெளியாகிக்கொண்டிருந்த எல்லா வார, மாத இதழ்களையும் வாசிக்கும் பழக்கம் கொண்டவர். எனது அப்பா காந்தியவாதி. கதர் மட்டுமே உடுத்துவார். எங்கள் வீட்டில்  நானும் எனது அம்மாவும் ராட்டையில் நூல் நூற்று சர்வோதய சங்கத்தில்  கொடுப்போம். அந்த  நூலில் நெய்த துணியிலிருந்துதான் அப்பா தமது ஆடைகள் அனைத்தையும் தைத்துக் கொள்வார்.  அந்தக் காலகட்டத்தில் (1953-1956)  தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி ஒன்றைத் தொடங்கினார் என் அப்பா. அது 45 மாணவர்களைக் கொண்டது. காந்தி பொதுநல மன்றம் என்பது அதன் பெயர். அந்த விடுதிக்கு நிரந்தரக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற முன்னெடுப்புகளின் அலைச்சலில், அப்பாவுக்கு இரு முறை நெஞ்சுவலி வந்தது. எனக்குப் பதினாறு வயதிருக்கும்போது, அப்பா இறந்துவிட்டார்.

அந்தக் காலத்தில் எங்கள் வீட்டிலும்கூட தலித் மாணவர்கள் சமையலறைக்குள் வர முடியாது. மற்ற அறைகளுக்குள் தாராளமாக வரலாம், போகலாம். அன்று அதைக்கூட எங்கள் உறவினர்களால் மட்டுமின்றி, அண்டை வீட்டார்களாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனது தந்தையையோ, தாயையோ, தலித் விடுதலைக்கான  உணர்வாளர்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது என்றாலும், கருணையுள்ளம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்தக் காலத்தில் இத்தகைய மனப்போக்கு கொண்டிருந்ததே கொஞ்சம் புரட்சிகரமான விஷயம்தான். எல்லா சாதிக்காரர்களையும் அண்ணன், மாமா என்றுதான் சொல்ல வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள் எனது பெற்றோர்.

‘சரஸ்வதி’ இதழின் ஆசிரியர் வ.விஜயபாஸ்கரனின் அப்பா (பா.து.வடிவேல் பிள்ளை) முக்கியமான சுதந்திரப் போராட்டத் தியாகி. ஐந்து முறைக்கும் மேலாக சிறை சென்றவர். மூன்று முறை அவரது வீடு ஜப்தி செய்யப்பட்டது. அப்படி வீட்டை ஜப்தி செய்யும்போது சில பொருட்களைப் பாதுகாப்புக்காக எங்களது வீட்டில் கொடுத்துவைப்பார்கள். அப்படி எங்களது குடும்பங்கள் நெருக்கமாகின.  வ.விஜயபாஸ்கரனின் இளைய சகோதரர் பூபேந்திரநாத். அவருக்கு அப்பா தமது செல்வாக்கைப் பயன்படுத்தி எங்களது பள்ளியில் 9, 10 ம் வகுப்புகளுக்கு ஆசிரியர் வேலை வாங்கித் தந்தார். பூபேந்திரநாத், எங்களுக்கு ஆங்கில ஆசிரியராக இருந்தார். அரை மணி நேரம் மட்டும்தான் வகுப்புப் பாடம். மீதி நேரம் ஆங்கில இலக்கியத்தின் பல வாசல்களை, உலகங்களைத் திறந்துவைத்தார். அந்த வகுப்புகள் எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு. அப்போது காமராஜர் ஆட்சிக்காலம். நூலக இயக்கம் வெகுவாக வளர்ந்தது. நடமாடும் நூலகமெல்லாம் இருந்தது. கடமை உணர்ச்சியுள்ள ஆசிரியர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். நிறையப் படித்தோம். ஆனாலும் தாமதமாகத்தான் எழுத்துலகிற்குள் வந்தேன்.

“புத்தகங்களைத் தடை செய்வது சாத்தியமே இல்லை!” - தமிழ்மகன், வெய்யில், இளங்கோகிருஷ்ணன்

“உங்களது வாசிப்பில், ஆளுமையுருவாக்கத்தில் இடதுசாரி இயக்கத்தின் பங்கு முக்கியமானது அல்லவா?”

எனது 25 ஆவது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தேன். இயக்கத்தில் இருந்தபோது அதன் கட்டுப்பாடுகளை நாங்கள் தீவிரமாகப் பின்பற்றினோம். எங்களுக்கு முறையான வகுப்புகள் நடக்கும். நிறைய வாசிப்போம். ஏராளமான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டுமென்பதால் கம்யூனிஸ எதிர்ப்பு நூல்களைத்தான் முதலில் வாசிக்கத் தருவார்கள். விஞ்ஞானம், செவ்வியல் இலக்கியங்கள் என ஏராளமாக வாசிக்கச் சொல்வார்கள். கருத்தியல்ரீதியிலான விவாதங்கள் கடுமையாக நடக்கும்.

எனக்கு முக்கியமான காலகட்டத்தில் முக்கியமான ஒரு செய்தியைச் சொன்னவர், ஆர்.கே.கண்ணன். ‘புதுநெறி காட்டிய பாரதி’ என்ற புத்தகத்தை எழுதியவர். பாரதி குறித்து எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது அது. அவர்தான்  சொன்னார் “வாழ்வில் மூன்று சார்லஸ்களை மறக்காதே!” என்று. ஒருவர் சார்லஸ் டார்வின், மற்றொருவர் சார்லஸ் டிக்கன்ஸ், இன்னொருவர் சார்லஸ் மார்க்ஸ். ‘நான் ‘சார்லஸ் மார்க்ஸா!?’ என்று தலையைச் சொறிய... சார்லஸ் என்பதை ஜெர்மன் மொழியில் கார்ல் என்று சொல்வார்கள் என்றார். “இந்த மூன்று ‘C’ க்களை மறக்காதே,  விஞ்ஞானம், கலைஇலக்கியம், மார்க்ஸியம் இது மூன்றும் முக்கியம். இதில் எது ஒன்றையும் விட்டுவிடக்கூடாது” என்றார். அது எனக்கு பல திறப்புகளைத் தந்தது.

“இப்போது என்ன எழுதிக்கொண்டிருக் கிறீர்கள்?”

கடந்த மூன்று ஆண்டுகளில்  எழுதிய மொத்தக் கட்டுரைகளும் நான்கு தொகுப்புகளாக வருகின்றன. அவற்றைத்தான் சரிசெய்து கொண்டிருக்கிறேன். சூழல் கருதி அதில் நாடாளுமன்ற இடதுசாரி களைக் கடுமையாக விமர்சித்து நான் எழுதிய அரசியல் கட்டுரைகள் சிலவற்றை இந்தத் தொகுப்புக்குள் சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

“ஏன் அப்படி..?”

தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மதவாத பாசிஸ சக்திகள் இங்கே தீவிரமாக வேலைசெய்துவருகின்றன. ஆகவே பிரச்னையின் முதன்மை கருதி, தமிழகத்தில் இவர்கள் பெரிய சக்தியாக வளராமல் தடுக்கவும், அகில இந்திய அளவில் அவர்களின் செயல்பாடுகளை முறியடிக்கவும் அவர்களுக்கு எதிரான கருத்தியலுக்கு எனது எழுத்தும் பேச்சும் முழுமையாகப் பயன்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இடதுசாரி மேடைகளையோ, பெரியாரிய, தலித் மேடைகளையோ, பாசிசத்திற்கு எதிரான பிரசாரக் களமாக முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறேன்... அதுதான் காரணம். கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது எனக்கு ஆழமான விமர்சனங்கள் உள்ளன. அவற்றை இப்போது முதன்மைப்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்படித் தனித்தனியே பிரிந்துகிடந்தால், எதுவும் செய்ய முடியாது. பாசிஸ்ட்கள் ஒன்றாக இணைந்து நிற்கின்றனர். பாசிஸ எதிர்ப்பு என்னும் ஒரே ஒரு பொதுத்திட்டத்தின் அடிப்படையில், ஏன் அனைத்து கம்யூனிஸ்ட் இயக்கங்களும் ஒன்றிணையக் கூடாது!?

“இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?”

உலகின் பிற பகுதிகளைப் போலவே இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் இயக்கம் மிகவும் பலவீனப்பட்டுள்ளது. கியூபாவில் அமெரிக்கன் எம்பசி திறக்கப்பட்டுவிட்டது. அமெரிக்கன் எம்பசி திறப்பதும் சி.ஐ.ஏ. திறப்பதும் வேறுவேறா என்ன?  பிடல்காஸ்ட்ரோ மறைந்துவிட்டால், பின் கியூபாவின் நிலை என்னவாகும்? இந்திய நாடாளுமன்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால், நாடாளுமன்ற அரசியலை ஒதுக்குகிற, அல்லது அதற்கு முக்கியத்துவம் கொடுக்காத கட்சிகள் தனித்தனிக்  குழுக்களாகப்  பிளவுண்டுள்ளனர். இவற்றில் சில அதிதீவிரக் குறுங்குழுவாதம் பேசும் கட்சிகளாக உள்ளன. மார்க்ஸின் மூலநூல்கள், கட்சியைச் சேர்ந்தவர்களால் சரிவரப் படிக்கப்படவில்லை.

சோவியத், சீன மார்க்ஸியத்துக்கு அப்பால், மார்க்ஸியச் சிந்தனை வளர்ச்சியும் பல்வேறு பரிமாணங்களையும் பெற்றுள்ளதை இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை. மேலும், இந்தியாவிலுள்ள சாதியப் பிரச்னையைப் பற்றிய போதுமான விவாதங்கள், ஆய்வுகள் (குறிப்பாகக் கள ஆய்வுகள்) மேற்கொள்ளப்படவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாவற்றிலுமே தலைமைப் பொறுப்புக்குத் தலித்துகள் கொண்டுவரப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளாகத்தான் அம்பேத்கர், பெரியார், புலே ஆகிய சாதி ஒழிப்புப் போராளிகள் மீது கம்யூனிஸ்ட் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றன. எனினும், இந்த உலகத்தைப் புரிந்துகொள்ள முன்னைக் காட்டிலும் நமக்கு மார்க்ஸியம் அவசியம் என்று நினைக்கிறேன். மார்க்ஸியத் தத்துவம் இன்றும் உயிர்ப்போடு இருந்து வருகிறது.

அது மட்டுமல்லாமல், இதுவரை சோவியத் யூனியனால் கொண்டுவரப்பட்ட மார்க்ஸ், எங்கெல்ஸ் தொகுப்பு நூல்களில் (50 பாகங்கள்) இடம் பெறாத, இன்னும் ஆங்கிலத்திலும்கூட முழுமையாக மொழியாக்கம் செய்யப்படாத நூற்றுக்கணக்கான பக்கங்களைக்கொண்ட மார்க்ஸ், எங்கெல்ஸின் எழுத்துகள் இப்போதுதான் உலகெங்கும் உள்ள மார்க்ஸிய அறிஞர்களால் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே வெளிவந்துள்ள ஆங்கில மொழியாக்கங்களில் உள்ள குறைபாடுகளும் தவறுகளும் கண்டறியப்பட்டு வருகின்றன. மார்க்ஸ் (எங்கெல்ஸும்தான்) தமது கருத்துகளை தொடர்ந்து மறுஆய்வுக்குட்படுத்தி வந்தார் என்பதையும் இந்தியாவிலுள்ள சாதிப் பிரச்னைகள் பற்றி கவனம் செலுத்தத் தொடங்கினார் என்பதையும், சூழலியல் பற்றி மூலதனம் மூன்று பாகங்களில் எழுதியவற்றைக்கூட மாற்றவும் செழுமைப்படுத்தவும் செய்தார் என்பதையும் இன்னும் பல செய்திகளையும் தெரிந்து  கொள்கிறோம். இவற்றின் வெளிச்சத்திலும், சோசலிஸம் கட்டுவதற்காக ரஷ்யா, சீனா, கியூபா ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் இருந்த எதிர்மறையான, கசப்பான அனுபவங்களிலிருந்தும்  கற்றுக்கொண்டு, ஜனநாயகபூர்வமான சோஷலிஸம், உழைக்கும் மக்கள் தமது விடுதலையைத் தாமாகவே உருவாக்கிக் கொள்ளும்  சோஷலிஸம் உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன். இவை எல்லாம் சாத்தியப்பட பலநூறு வருடங்கள்கூட ஆகலாம். ஆனால், எல்லா பயணங்களும் - அவை ஆயிரம் மைல் தூரப் பயணங்களாக இருந்தாலும்  - முதல் அடியிலிருந்துதானே துவங்குகிறது?

“புத்தகங்களைத் தடை செய்வது சாத்தியமே இல்லை!” - தமிழ்மகன், வெய்யில், இளங்கோகிருஷ்ணன்

“நீங்கள் எழுதியதில் திருத்தி எழுத வேண்டும் என்று எண்ணுகிற புத்தகம் ஏதேனும் உண்டா?”

எனது புத்தகங்களோ, கட்டுரைகளோ மறுபிரசுரம் செய்யப்படும்போது, அவற்றில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்வது வழக்கம். சில கட்டுரைகள் காலவழக் கொழிந்தவை என்றால், அவற்றை நீக்கிவிடுவேன்.

‘அந்நியமாதல் குறித்த மார்க்ஸியக் கோட்பாடு’ என்ற புத்தகத்தை 1979- ல் நான் எழுதினேன். அதை மட்டும் மீண்டும் திருத்தி எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். மார்க்ஸிய சுற்றுச்சூழல் குறித்துப் பேசுகிற புதிய அமைப்புகள், இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். இயற்கைக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு, மனிதர்களுக்கும் உழைப்பிற்கும் உள்ள உறவு, மனிதர்களுக்கும் சமுதாயத்திற்கும் உள்ள உறவு, மனிதர்களுக்கும் அவர்களுடையை படைப்பிற்கும் (இதில், கலைப் படைப்பு நிறுவனங்கள், அரசு ஆகியனவும் அடங்கும்) உள்ள உறவு, மனிதர்களுக்கும் மேற்சொன்னவற்றுக்கும் இருக்க வேண்டிய  அன்னியோன்யமான உறவை, எவ்வாறு முதலாளியம் அந்நியமாக்கப்பட்ட உறவுகளாக மாற்றுகிறது என்பது குறித்த புத்தகம் அது.
         
மார்க்ஸின் மூலப்படைப்புகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். தொடர்ந்து வாசித்தும் வருகிறேன். இன்று எனது வாசிப்புத்தளம் விரிவடைந்திருக்கிறது. இந்த வெளிச்சத்தில் அதை மீண்டும் அணுகி புதிதாக எழுத எண்ணுகிறேன். கண்பார்வை ஓரளவு தெரியும் இந்தக் காலகட்டத்திலேயே இந்த வேலையைச்  செய்து முடித்துவிடவேண்டும். அதைச் செய்துவிட்டால், எனக்கு முழுமையான மனநிறைவு கிடைக்கும்.

“மார்க்ஸியம் சுற்றுச்சூழல் சார்ந்து பெரிய அக்கறை காட்டவில்லை என்று முன்வைக்கப்படும் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

இதற்கான பதிலை ஓரளவுக்கு நான் இன்னொரு கேள்வி தொடர்பாகச் சொல்லியிருக்கிறேன்.  சூழலியல் சார்ந்த அக்கறையும் நேசமும் ஆரம்பம் முதலே மார்க்ஸுக்கும் எங்கல்ஸுக்கும் இருந்திருப்பதை அவர்களது எழுத்தில் பார்க்க முடிகிறது. ‘டூரிங்கிற்கு மறுப்பு’, ‘இயற்கையின் இயங்கியல்’, ‘மூலதனம்’, ‘கிரண்ட்ரிஸ்’ என பல இடங்களில் அவர்களின் சூழலியல் கவனத்தைப் பார்க்கலாம். இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் மண்ணரிப்பு  குறித்து மார்க்ஸ் மிக விரிவாகவே எழுதியிருக்கிறார். மனிதக் கழிவுகள் வீணாக லண்டனின் தேம்ஸ் நதியில் கலக்கிறதே இது உரமாக அல்லவா கிராமங்களுக்கு போக வேண்டும் என்று சொல்கிறார். முதலாளியத்தால் ஏற்பட்டுள்ள விளைவுகளிலொன்று நகரத்துக்கும் கிராமத்துக்குமேற்பட்ட முரண்பாடு. கிராமங்களின் இயற்கைப் பரப்புகளிலிருந்து  தனக்கு வேண்டியதை எல்லாம் எடுத்துக் கொள்லும் நகரம், அந்த இயற்கை பரப்பு தனது வளத்தை இழக்காமலிருப்பதற்காக எதனையும் திருப்பித் தருவதில்லை என்கிறார். அவர் வாழ்ந்த காலகட்டத்திலிருந்த ஏராளமான வேதியியல், வேளாணியல் விஞ்ஞானிகளின் எழுத்துகளிலிருந்து அவர் இயற்கைக்கு ஏற்படுத்தப்படும் கேடுகளை அறிந்து வைத்துள்ளதுடன், அந்த அறிவை அரசியல் பொருளாதாரம் பற்றிய தமது அறிவுடன், முதலாளித்துவம் பற்றிய தமது பகுப்பாய்வு விமர்சனத்துடன் இணைத்துப் பார்த்திருக்கிறார். இயற்கையின் விதிகளை மனிதன் புரிந்துகொண்டு அதை வசப்படுத்த வேண்டும் என்கிறார். வசப்படுத்துதல் என்பது  எஜமானனாவதோ, ஆணையிடுவதோ அல்ல. அதன் விதிகளைப் புரிந்துகொண்டு அதை  நமக்காகப் பயன்படுத்திக்கொள்வது. ‘மூலதனம்’ மூன்றாவது பாகத்தில், “நமக்கு கிடைத்த இந்த இயற்கையை நாம் மேலும் செழுமையாக்கி நமது அடுத்த தலைமுறைக்குக் ஒப்படைக்க வேண்டும்!” என்கிறார்.  முன்பிருந்த சோசலிஸ அரசுகளில் சூழலியலுக்குப் போதுமான  முக்கியத்தும் தரப்படவில்லை என்பதில் ஓரளவு உண்மை உண்டு. ஆனால், இதற்கு மார்க்ஸையோ, மார்க்ஸியத்தையோ பொறுப்பாக்க முடியாது.
“நீங்கள் மதிக்கும் உங்களுக்குப் பிடித்த கம்யூனிஸத் தலைவர்கள்...”

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இருந்த பல்வேறு கட்டங்களைச் சேர்ந்தவர்களைப் பற்றிப் பேசுவோம். சுந்தரய்யா, ராஜேஸ்வர ராவ், கொண்டபள்ளி சீத்தாராமையா இவர்கள் தங்கள் மொத்தக் குடும்பத்தையுமே கட்சிப் பணிக்காகக் கொண்டுவந்தவர்கள்; பெரிய தியாகிகள். குடும்பச் சொத்துகள் அனைத்தையும் விற்று கட்சிக்குக் கொடுத்தவர்கள். தீண்டாமை எதிர்ப்பு, பெண் விடுதலை போன்றவற்றைத் தங்கள் வாழ்விலும் கடைப்பிடித்தவர்கள். நக்சலைட் இயக்கத்தில் எனக்கு நேரடியாகத் தெரிந்தவர்களில் திறந்த மனதோடு பேசக்கூடியவர்களாக, மற்றவர்களின் கருத்துகளைப் பொறுமையுடன் கேட்பவர்களாக இருந்தவர்கள் வினோத் மிஸ்ரா, நாகபூஷன் பட்நாய்க், சந்தோஷ் ரானா, தற்போது திஹார் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் கோபாட் காந்தி எனப் பலரைச் சொல்லலாம்.

தமிழ்நாட்டில் என்றால்,  காலஞ்சென்ற தோழர் கே.பாலதண்டாயுதம், பா.மாணிக்கம். இவர்கள் எளிமையும் தன்னடக்கமும் கொண்டவர்கள். சீனிவாச ராவை நான் பார்த்தது இல்லை. கீழத்தஞ்சைக்குப் போனால், இவரைப்பற்றிப் பேசாதவர்களைப் பார்க்க முடியாது. ஜீவாவைப் பார்த்திருக்கிறேன். பேசியது இல்லை. எளிமையான மனிதர், சிறந்த பேச்சாளர். அப்புறம் உரிமையோடு நான் சண்டை பிடிப்பதைச் சகித்துக்கொள்கிற ஆர்.நல்லகண்ணு. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் இயக்கத்திலிருந்த தர்மபுரி பாலன் - சாதி எதிர்ப்பில் முக்கியப் பங்களிப்பு செய்தவர். தலித் - வன்னியர் இணக்கத்திற்கு ஆதாரமாக இருந்தவர். அவரது தலைமையிலிருந்த இயக்கம் மறைந்த பிறகுதான், தர்மபுரி பகுதிகளில் மீண்டும் சாதி வலுப்பெற்றது. அந்த இயக்கம் இருந்த வரை அது சாத்தியமாகவில்லை. அப்போது கட்சியில் செயல்பட்டவர்களிலும் சரி... கொல்லப் பட்டவர்களும் சரி.. தலித், வன்னியர் இரு சமூகத்தாரும் சரிசமமாக இருப்பார்கள். அரசுக்கு அந்த ‘மாஸ் மூவ்மென்ட்டை’ ஏற்க முடியவில்லை. கட்சியை ஒழித்துக்கட்டியது. கட்சியில் முக்கியமானவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள், அச்சுறுத்தப்பட்டார்கள், சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

“கருத்துச் சுதந்திரம் குறித்த உங்களது கருத்து என்ன?”

கருத்துச் சுதந்திரம் என்பது அவசியமான ஒன்று. என்னளவில் அதற்கு வரையறை தேவையில்லை.  யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதட்டும், பேசட்டும். ஏன், உளறிவிட்டும் போகட்டுமே. உளறுவதற்கும் சேர்த்தே சுதந்திரம் இருக்க வேண்டும். ஒரு நாகரிக சமுதாயம், உனது மதத்தில் கலாசாரத்தில் இந்த மாதிரியான பிரச்னை இருக்கிறது என்று இன்னொரு சமுதாயத்தை விமர்சிக்கலாம். பதிலுக்கு அந்த சமூகம் இவர்களையும் விமர்சிக்கும். கருத்தியல் ரீதியிலானதாக வன்முறைக்குத் தூண்டாத எந்த ஒரு கருத்தும் பிரச்னை இல்லைதான்.

“புத்தகங்களைத் தடை செய்வது சாத்தியமே இல்லை!” - தமிழ்மகன், வெய்யில், இளங்கோகிருஷ்ணன்

“புத்தகங்கள் தடைசெய்யப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

புத்தகத்தைத் தடைசெய்வது இன்றைய காலகட்டத்தில் முட்டாள்தனமானது. மிகெய்ல் புல்காகோவ் என்ற பிரபலமான ரஷ்ய எழுத்தாளரின் புகழ்பெற்ற வாசகம் ஒன்று உண்டு. ‘Manuscript can not to be burned!’ (கையெழுத்துப் பிரதிகளை ஒருபோதும் எரிக்க முடியாது). தடைசெய்யப்பட்ட பல புத்தகங்கள் இணையத்தில் மின் புத்தகங்களாகக் கிடைக்கின்றன. சத்தமே இல்லாமல் தமிழகத்தில் எழுதுகிற ஒருவர், அமெரிக்காவில் இருப்பவருக்கு வாசிக்கக் கொடுத்துவிடலாம். இன்றைய கணினி யுகத்தில் புத்தகங்களைத் தடைசெய்வது சாத்தியமே இல்லாதது.

“சமூக அக்கறையுள்ள தமிழக இளைஞர்களைக் கவனிக்கிறீர்களா?”

தமிழ் தேசியம், இடதுசிந்தனை, கூடங்குளம் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு, சாதிய ஒடுக்குமுறைக்கான எதிர்ப்பு என்று அன்றாடம் புதிய புதிய பேனர்களில் இளைஞர்கள் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சரியான திசையறியாது தவிக்கிறார்கள்.

“தொடர்ந்து நடந்துவரும் ஆணவப் படுகொலைகள், பெண்கள் மீதான தாக்குதல் போன்றவற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

இந்த ஆணவக் கொலைகள் என்பனவற்றுக்குப் பலியாகின்றவர்கள் கிட்டத்தட்ட எல்லோருமே தலித்கள்தாம். ஒரு தலித் பெண்ணை, ஆதிக்க ‘மேல்’ சாதியைச் சேர்ந்த ஆணொருவர் திருமணம் செய்துகொள்வது பெரும் பிரச்னையாக்கப் படுவதில்லை. ஆனால், ஒரு தலித் ஆண், ஆதிக்க, ‘மேல்’ சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்போது, அது வன்முறையிலும் கொலையிலும் முடிவடைகிறது. ஏனெனில், நமது சாதிய சமுதாயத்தில் சாதிய விழுமியங்களை, சாதிசார்ந்த சடங்குகளை, சம்பிரதாயங்களைப் பேணிப் பாதுகாத்து வருபவளாகவும் சாதித் தூய்மையைக் காப்பாற்றுபவளுமாக இருப்பவள் பெண். அதேவேளை அவள் ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டியவளாகவும் இருக்கிறாள். ஆணின் சொத்துக்கான வாரிசைப் பெற்றுத் தர வேண்டிய கடமையும் அவளுக்கு இருக்கின்றது. ஆக, அத்தகைய பெண், தலித் ஆணைத் திருமணம் செய்து கொள்ளும்போது, அந்தப் பெண்ணைச் சேர்ந்த ஆதிக்க ‘மேல்’சாதி ஆண்கள், தங்கள் சாதித் தூய்மைக்கு மட்டுமல்லாது, தங்களது ஆண்மைக்கும், சாதி கெளரவத்துக்கும் (ஆணவத்துக்கும்) விடப்பட்ட சவாலாகக் கருதுகிறார்கள்.

காதல் திருமணம் செய்து கொள்பவர்களைப் பாதுகாப்பதற்கென்றே சில சமூக அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பெண்களின் சுயாதீனம், தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை போன்றவற்றைத் தொடக்கப் பள்ளிகளிலிருந்தே கற்றுக் கொடுக்கும் ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.

கட்டுப்பாடற்ற மதுபான வினியோகம், ஒருபுறம் அரசியல்வாதிகளுக்கும் மறுபுறம் கூலிப்படைகளுக்கும் உள்ள நெருக்கமான பிணைப்பு, பெண்களை இழிவு செய்யும் திரைப்படங்கள், பாலினச் சமத்துவம் பற்றிய உணர்வு சமுதாயத்தின் எந்த மட்டத்திலும் இல்லாமை ஆகியன பெண்கள் மீது நடைபெறும் தாக்குதல்களுக்கான சில காரணிகள். எனினும் பெண்களின் பாதுகாப்பற்ற நிலை, அதற்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைப் பெண்கள் அமைப்புகளிடமிருந்து கேட்டறிந்துகொள்வதுதான் சிறந்தது.
   
“சிற்றிதழ்களோடு உங்களுக்கு எப்படித் தொடர்பு ஏற்பட்டது?”


கோவையில் ஒரு கடையில் ‘கசடதபற’ இதழைப் பார்த்துவிட்டு, அதை நடத்துபவர்களைத் தேடி சென்னைக்குச் சென்றேன். எஸ்.ராமகிருஷ்ணன் (பின்னாளில் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன்)  ஞானக்கூத்தன், சா.கந்தசாமி போன்றவர்கள் அதில் இருந்தார்கள். சார்த்தரின் எழுத்துகள், குந்தர் கிராஸ் கவிதைகள், போர்ஹெவின் சிறுகதை  என்று பல புதிய விஷயங்களைப் பேசிக்கொண்டிருப்பார்கள். அவற்றை வெளியிடுவார்கள். தனிப்பட்ட முறையிலும் மிகுந்த அன்பானவர்கள்தான். பல கஷ்டங்களுக்கு மத்தியில்தான் பத்திரிகையை நடத்தி வந்தனர். திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு சிறு அறையில்தான் அத்தனை வேலைகளும் நடக்கும். எனது அரசியல், தத்துவக் கண்ணோட்டம் முற்றிலும் வேறு. ஆனாலும் என்னை ஆக்கபூர்வமாகவே எதிர்கொண்டார்கள். என்னிடம் சீனா, ரஷ்யா, இரு நாடுகளுக்கும் இருக்கும் ஒற்றுமை முரண்கள் குறித்து விடிய விடிய விவாதிப்பார்கள்.

அப்பொழுது ‘கசடதபற’ இதழொன்றில் ஞானக்கூத்தன் அலெக்ஸாண்டர் சோல்ஸெனிட்ஸினைக் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு நான் ஒரு மறுப்புக் கட்டுரை எழுதியிருந்தேன். அது ராமகிருஷ்ணனுக்குப் பிடித்திருந்தது. பிரசுரிக்கக் கேட்டார். “நான்  நக்சலைட் இயக்கத்தில் இருக்கிறேன். மனோ என்கிற பெயரில் போலீஸ் ரெக்கார்டெல்லாம்கூட இருக்கிறது. உங்களுக்கு பிரச்னை ஆகும்!” என்றேன். அப்போதுதான் எஸ்.வி.ராஜதுரை என்ற புனைபெயரை அவர் உருவாக்கினார்.

எனது ஆசான்களில் ஒருவர் கோவை ஞானி. அவருடன் ஒரு நாள் இருக்கையில் “யார் அந்த எஸ்.வி.ஆர்.? நமக்குத் தெரியாமல் ஒரு மார்க்ஸியவாதி?” என்று என்னிடமே கேட்டார். நான் சொல்லவில்லை.

சா.கந்தசாமி, தி.க.சி-யிடம் சொல்லியிருக்கிறார். அவர் ஊர் முழுக்கப் பரப்பிவிட்டார். அந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கிற உண்மை முகம் அறியப்படாமலேயே எனது எழுத்துகள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அது நடக்கவில்லை. பிறகு மருத்துவமனை, போலீஸ், அரசு அலுவலகங்கள், பல்கலைக் கழகம் ஆகியவற்றின் ரிக்கார்டுகளில் இந்த இரண்டு பெயர்களும் பதிவாகிவிட்டன.

“ஏராளமான மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறீர்கள். தமிழ்ச் சூழலில் மொழிபெயர்ப்பின் நிலை  எப்படி இருக்கிறது?”

நான் ஆங்கில மோகி அல்ல. ஆனால், இன்றைய இளைய படிப்பாளிகளில் பலருக்கு ஆங்கிலம் தெரியாமல் இருப்பது ஒரு குறை என்றுதான் சொல்வேன். ஆங்கிலம் இன்றியமையாதது. உலக இலக்கியங்களை முழுமையாக நாம் வாசிப்பதற்கு வேறு வழியே இல்லை. ஜெர்மன், பிரெஞ்சு, ரஷிய மொழிகளிலிருந்தும் நேரடியாக மொழியாக்கம் செய்யக்கூடியவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான விஷயங்கள் ஆங்கிலம் வழியாகவே வந்து சேர்கின்றன. இன்னும் நிறைய மொழிபெயர்ப்புகள் வரவேண்டும். அதேசமயம் மொழிபெயர்ப்பு செய்பவர்களை மட்டையடி அடித்து விமர்சிப்பது தவறு. நான் அப்படி விமர்சிப்பது இல்லை. அதேவேளை மொழியாக்கம் செய்பவர்கள் தங்களுக்குள்ள வரம்புகளையும் அறிந்து, பொறுப்புடன் செயல்பட வேண்டும். தங்களுக்குத் தெரியாத  விஷயங்களை மற்றவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ளும் மனப் பக்குவமும் இருக்க வேண்டும். மொழியாக்கப் பணியில் எனக்கு வழிகாட்டிகளாக பேராசிரியர் ஆல்பர்ட், க்ரியா ராமகிருஷ்ணன், வ.கீதா, வெ.ராம் எனப் பலர் இருந்திருக்கின்றனர். பன்மடங்கு அறிவாற்றல் கொண்டவர்கள்.

மேலும், ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளனுக்கு நமது சமுதாயத்தில் என்ன கட்டமைப்பு செய்துகொடுத்திருக்கிறோம்? அரசாங்கம் இதையெல்லாம் செய்யும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. அரசாங்கத்தால் நல்ல ஆங்கிலம்-தமிழ் அகராதியைக்கூட  உருவாக்க முடியவில்லை. ‘க்ரியா’ வின் முயற்சியால் அருமையான தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி கிடைத்திருக்கிறது. தமிழ் மொழியின், பண்பாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஆங்கிலம் - தமிழ், பிரெஞ்சு - தமிழ், ஜெர்மன் - தமிழ், ஸ்பானியம் - தமிழ், ரஷியன்- தமிழ், ஹிந்தி - தமிழ், சமஸ்கிருதம் - தமிழ் அகராதிகள் உருவாக்க வேண்டும். இது பெரிய வேலை. எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள், அறிஞர்கள் என பலரையும் இணைத்து இதைச் சாத்தியப்படுத்த வேண்டும். தமிழால் எல்லாம் முடியும்தான். ஆனால்  வெளி உலக அறிவை நமக்குக் காட்டும் சாளரம் போன்ற ஆங்கிலத்தை ஊன்றுகோலாக வைத்துக்கொள்வதில் ஒன்றும் தவறில்லை.

மார்க்ஸியத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுகிற கட்சிகளிலும் இயக்கங்களிலும் தமிழாக்கச் செயல்பாடுகள் நிறைவானவையாக இல்லை. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த சில இளைஞர்கள் முன்வந்திருக்கிறார்கள். ஆனால், செவ்வியல் மார்க்ஸியத்தில் அவர்களது வாசிப்பு போதுமானதாக இல்லை.

“ஒரு நல்ல மொழிபெயர்ப்பிற்கான அடிப்படை அம்சங்களாக எவற்றைச் சொல்வீர்கள்?”

குறிப்பிட்ட இரண்டு மொழிகளிலும் புலமைபெற்றவராக இருக்க வேண்டும். அந்த நாட்டின் அரசியலை, கலாசாரத்தை, வரலாற்றை உள்வாங்கிக்கொண்டவராக இருக்க வேண்டும். மொழியாக்கம் செய்யப்படும் நூலை எழுதியவரின் பிற நூல்களையும் படித்தறிந்தவராக இருக்க வேண்டும். இந்தத் தகுதிகள் முழுமையாக என்னிடம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. இருப்பினும் சில மோசமான உதாரணங்களுடன் ஒப்பிடும்போது, எனக்குக் கிடைக்கும் தண்டனை குறைவாகத்தான் இருக்கும். 

 ஒரு விஷயத்தைச் கவனத்தில் கொள்ள வேண்டும். எவ்வளவு கெட்டிக்காரனாலும் முழுநிறைவான மொழிபெயர்ப்பைச் செய்ய முடியாது. ஒரே நூலுக்குப் புதிய புதிய மொழிபெயர்ப்புகள் வந்துகொண்டே இருக்க வேண்டும். ஹோமரின் ‘ஒடிஸி’, கெதேவின் ‘ஃபாஸ்ட்’, தாந்தேவின் ‘நரகம்’ போன்றவற்றுக்கு மூன்று நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய புதிய ஆங்கில மொழியாக்கங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களுக்கும்கூட புதிய ஆங்கில மொழியாக்கங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

 “தமிழில் விமர்சனத்துறை என்னவாயிற்று?”

அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்றே நான் முயற்சி செய்தேன். தமிழில் இப்போது வெளியாகும் எல்லா நாவல்களையும், புத்தகங்களையும் என்னால் வாசிக்க முடிவது இல்லை. ஆனாலும் வாசிக்க முடிந்தவற்றைக் குறித்து எழுதியிருக்கிறேன்.  இதில் நான் இளம் எழுத்தாளர்களுக்கு, தலித் எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை வழங்குகிறேன். அண்மையில் தமிழ்மகன், விநாயக முருகன், லக்ஷ்மி சரவணக்குமார் ஆகியோர் எழுதிய நாவல்களுக்கு முன்னுரை அல்லது  மதிப்புரை  எழுதினேன்.  அழகியல் அளவுகோல்கள் கொண்டு பார்த்தால், அவை பிரமாதமான நாவல்கள் அல்ல.ஆனால், அவை தம் கதைப் பின்னலுக்கு எடுத்துக்கொண்ட விஷயங்கள் முக்கியமானவை. எனவே அவர்களை ஊக்குவிக்க எழுதினேன். நான் எழுதும் மதிப்புரைகள் கிட்டத்தட்ட எல்லாமே, மதிப்புரை செய்யப்படும் நூலிலுள்ள விஷயங்களோடு, அதோடு தொடர்புடையதாக நான் கருதும் பிற நூல்கள், கலைப்படைப்புகள் ஆகியன சொல்லும் செய்திகளையும் இணைத்துக் கொண்டிருக்கும். பல புதிய விஷயங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வழிமுறைகளில் மதிப்புரை எழுதும் முறையும் ஒன்று எனக் கருதுகிறேன்.

“புத்தகங்களைத் தடை செய்வது சாத்தியமே இல்லை!” - தமிழ்மகன், வெய்யில், இளங்கோகிருஷ்ணன்

“உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள்...”

அயல்மொழி எழுத்தாளர்களை மட்டும் குறிப்பிடுகிறேன். எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல் மிக நீளமானது. மலையாள எழுத்தாளர்களில் வைக்கம் முகமது பஷீர்; கன்னட எழுத்தாளர்களில் கிரீஷ் கர்னாட். வங்காள எழுத்தாளர்களில் ரபீந்திரநாத் தாகூர் (அவரது சிறுகதைகளும் நாவல்களும்). மேலை இலக்கியவாதிகளில் பால்ஸக், டிக்கன்ஸ்,  காஃப்கா, தோல்ஸ்தாய், தோஸ்தோவ்ஸ்கி, தாம்ஸ் மான், எடுவடோ காலியானோ, மரியா வார்கோஸ் ஜோஸா, கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்,  கார்லோஸ் ஃப்யெண்டெஸ், சினுவா அச்செபெ. ஆண்ட்ரியா ஹிராட்டா இப்படிப் பலர். அண்மைக்காலத்தில், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களில் போர்ச்சுகீசிய எழுத்தாளர் ஹொஸெ ஸரமாகோ எனக்கு மிகவும் பிடித்தமானவர். நாவல், குறுநாவல், நினைவுக்குறிப்புகள் என ஆங்கில மொழியாக்கத்தில் இதுவரை வெளிவந்துள்ள அவருடைய ஆக்கங்களை முழுவதுமாக வாசித்திருக்கிறேன். அவரது கற்பனை வளமும் நடையும் மிகவும் பிடித்தமானவை. அவருடைய நாவல்களில் முற்றுப்புள்ளி, கமா எதுவுமே இருக்காது. உரையாடல் பகுதிகளில் நாம் கூர்மையாக அவதானித்தால்தான், எந்தப் பாத்திரம், வேறு எந்தப் பாத்திரத்தோடு பேசுகிறது என அறிய முடியும். ஜனநாயக அரசியலும் ஜனநாயக விழுமியங்களும் எவ்வளவு ஊனப்பட்டிருக்கின்றன என்பதை ‘பார்வை இழத்தல்’, ‘பார்த்தல்’ என்று இரண்டு நாவல்களில் உருவகமாக எழுதியிருக்கிறார். பலதளங்களில் நம்மால் அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடிய நாவல்கள். உலகமயம் குறித்தும் கைவினைஞர்கள் அழிவதைப் பற்றியும் ‘குகை’ (Cave) என்று ஒரு நாவல் எழுதியுள்ளார். அந்நியமாதல் பற்றி மார்க்ஸ் கூறிய கருத்துகளைப் புரிந்துகொள்ள விரும்புகிறவர்கள், இந்த நாவலைப் படிக்கலாம்.

“அவசியம் வாசிக்க வேண்டியவை என்று வாசகர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள்?”


 நான் பரிந்துரைக்க விரும்புவது ஏராளம். அம்பேத்கரின் ‘புத்தமும் அவரது தம்மமும்’; பெரியாரின் ‘ பெண் ஏன் அடிமையானாள்?’; மார்க்ஸின் ‘மூலதனம்’ முதல் பாகம் மட்டுமாவது, எங்கல்ஸின் ‘டூரிங்கிற்கு மறுப்பு’ அவசியம் வாசியுங்கள். புனைவில், அண்மைக்காலத்தில் வெளிவந்தவற்றில் எலினா ஃபெர்ராண்டெ எனும் இத்தாலியப் பெண் எழுத்தாளரின் நான்கு தொடர் நாவல்களை – அல்லது குறைந்தபட்சம் அவற்றில் முதல் நாவலான ‘மை பிரில்லியன்ட் ஃப்ரெண்ட்’ படியுங்கள். இத்தாலியின் நேப்பிள்ஸ் நகர ஏழைப் பகுதியை மையமாக வைத்து எழுதப்பட்ட தொடர் நாவல்கள் அவை. எலினா ஃபெர்ராண்டெ என்ற இந்தப் பெயருக்குப் பின்னிருந்து எழுதுகிறவர் யார் என்று இன்று வரைக்கும் உலகத்துக்குத் தெரியாது. “எழுத்தும் வாசகரும்தான் முக்கியம். எழுதுகிறவர் அல்ல!” என்கிறார் எலினா.

மிக அண்மையில், இந்தோனீஷிய எழுத்தாளர்களின் – ஆண்ட்ரியா ஹிராட்டா, ஏக்கா குரியவான், ப்ரமூதியா ஆனந்த தூர்- ஆக்கங்களைப் படித்தேன். 1965-ல் இந்தோனேஷியாவில் சிஐஏ-வின் உதவியுடன் இராணுவப் புரட்சி ஏற்பட்டுப் பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகளும் அவர்களது ஆதரவாளர்களும் கொல்லப்பட்டனர். இன்னும் பல்லாயிரக் கணக்கானோர் விசாரணையின்றிச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிலொருவர்தான் ப்ரமூதியா ஆனந்ததூர். 14 ஆண்டுச் சிறைவாசத்தின் போது அவர் எழுதத் தொடங்கிய நான்கு நாவல்களைப் (தொடர் நாவல்கள்) பற்றிய விரிவான கட்டுரையை ‘புதுவிசை’க்கு அனுப்பியுள்ளேன். ஆப்பிரிக்க, இலத்தின் அமெரிக்க எழுத்தாளர்கள் தமிழ் வாசகர்களுக்கு ஓரளவு அறிமுகமாகியுள்ள நிலையில், நமக்கு நெருக்கமாக உள்ள ஆசிய நாட்டு எழுத்தாளர்களையும் மத்தியக் கிழக்கு எழுத்தாளர்களையும் நாம் ஏன் மறந்துவிட வேண்டும்?

“எழுத்தைத் தவிர உங்களது ஆர்வங்களைச் சொல்லுங்களேன்...”


எல்லா வகையான இசையையும்  கேட்பேன். ஆனால் அவ்வப்போது சிலவகை இசையைக் கெட்டியாகப்பிடித்துக்கொள்வேன். கொஞ்ச நாள் செவ்வியல் இசை; அப்புறம் கொஞ்ச நாள்  ஃப்ளூஸ்; பிறகு வாரக்கணக்கில் நஸ்ரத் ஃபடே அலிகானின் கவாலிப் பாடல்கள்; பிறகு தென்அமெரிக்க இசை; அப்புறம் ஆப்பிரிக்க, குறிப்பாக சென்கால், மாலி நாட்டு இசை; பிறகு மீண்டும் பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் என்று. இசையை ரசிக்க எனக்கு மொழி தேவை இல்லை. பாடல் வரிகள் புரியுமானால், இரட்டை மகிழ்ச்சி. இப்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளைக்கொண்டு, உலகின் எந்த மூலையைச் சேர்ந்த இசையானாலும் அதைக் கண்டுபிடித்துக் கேட்டு, ரசிக்க முடிகிறது. தமிழ், மலையாள, இந்தி திரைப்படப் பாடல்களிலிருந்து, இந்திய மேற்கத்திய செவ்வியல் இசை வரை எதுவுமே எனக்கு விதிவிலக்கல்ல. மேற்கத்திய செவ்வியல் இசையைப் பொறுத்தவரை பீத்தோவனுக்கு அடுத்தபடியாகத்தான் மற்றவர்கள். சமகால மேற்கத்திய இசையமைப்பாளர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர், பிலிப் கிளாஸ் (Philip Glass).  சிம்ஃபொனி ஆர்க்கெஸ்ட்ரா என்றால், ஏராளமான இசைக்கருவிகளைக் கொண்டு இசையமைப்பார்கள் அல்லவா? ஆனால், பிலிப் கிளாஸ் மிகக்குறைந்த கருவிகளையே பயன்படுத்துவார். ஜப்பானிய ஓவியம்போல மிகக் குறைந்தபட்சக் கூறுகளைக்கொண்டது (minimalistic) அவரது இசை. பலருக்கு அந்த இசை சலிப்புத் தட்டும். ஆனால், எனக்குப் பிடித்தமானது.

ஆட்டக் கலையையும் மிகவும் ரசிப்பேன். நான் பிறந்த மாவட்டத்தின் சிக்காட்டம் (பறையாட்டம் போன்றது) அருந்ததியர்கள் ஆடுவார்கள். அதைப் பார்க்கும்போது நமது உடலும் தானாகவே அசையும். நான் நாட்டார் கலைகளைவிட செவ்வியல் கலைகளையே அதிகம் விரும்புபவன். ஆனால், பரதநாட்டியம் எனக்குப் பிடிக்காது. மேற்கத்திய நடன வகைகளில் பாலே எனக்குப் பிடித்தமானது. நம் கால பாலே நடனக் கலைஞர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் கியூபா நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் அகோஸ்டா. அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதிய ‘Pig’s Feet’  என்னும் நாவலும் மிக சுவாரசியமானது. கியூபாவின் 400 ஆண்டு கால வரலாற்றை ‘மாய யதார்த்த’ பாணியில் நாவலாக வடித்துள்ளார். இன்றைய கியூபாவின் அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் சிலவற்றை மட்டுமல்லாது, கறுப்பின மக்கள் மீது காட்டப்படும் இனவாதக் காழ்ப்பு உணர்ச்சிகள் அந்த சோசலிஸ நாட்டிலும் நிலவுவதைப் பற்றியும்கூட அவர் எழுதுகிறார். ஆனால், அவர் தாய் நாட்டை நேசிப்பவர். காஸ்ட்ரோவின் நண்பர்.  அமெரிக்க, கறுப்பின, மேற்கத்திய நடன, இசை வகைகளைக் கூட்டிணைவாக்கிப் புதிய நடன வகைகளை உருவாக்கி வருகிறவர். கியூபாவின் தேசியப் பறவையான ‘டோகரோரோ’வின் பெயரில் அவர் அண்மையில் உருவாக்கியிருக்கும் பாலே நாட்டிய நாடகத்தின் ஒரு பகுதியை‘யூ ட்யூபில்’ காணலாம்.

அதே சமயம் நான் கேட்பது, வாசிப்பது, காண்பது எல்லாவற்றைக் குறித்தும் எழுதிவிடுவது இல்லை. சமூகத்தில் உடனடி விளைவுகளை எது ஏற்படுத்தும், எவை முக்கியம் என்கிற முன்னுரிமையின் அடிப்படையிலேயே நான் எழுதுகிறேன்.  எனது தனிப்பட்ட ரசனைகளை என்னுட
னேயே வைத்துக்கொள்வேன் அல்லது நெருக்கமான நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

“புத்தகங்களைத் தடை செய்வது சாத்தியமே இல்லை!” - தமிழ்மகன், வெய்யில், இளங்கோகிருஷ்ணன்

“இத்தனை ஆண்டுகால எழுத்துப்பணிக்கு நீங்கள் பெற்றிருக்கும் சிறந்த அங்கீகாரம் என்று எதைக் கருதுகிறீர்கள் ?”

அங்கீகாரம் என்று எதையும் சொல்ல மாட்டேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் எனக்குக் கிடைத்த மிக மகிழ்ச்சியான அனுபவங்கள் இரண்டை மட்டும் கூற விரும்புகிறேன். ஒன்று, மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படும் நல்வாய்ப்புப் பெற்ற மூவரை திருச்சி மத்திய சிறையில் சந்தித்தபோது அவர்கள் மூவரும் என்னை ‘அப்பா’ என்று அழைத்து என் காலில் விழுந்து வணங்கினர். அவர்களது கருணை மனு தொடர்பான பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தவர்களில் நானும் ஒருவன். அந்தக் கைதிகளில் ஒருவர் நல்ல கவிஞராகவும் (வே.ராதாகிருஷ்ணன்) பரிணமித்துள்ளார்.

இரண்டாவது, சென்னை, அண்ணா சாலையில் ஒரு காயிலாங்கடையில் வேலை பார்க்கும் ஒருவர் எனது எல்லா புத்தகங்களையும் வாசித்திருக்கிறார். ஏழாவதோ, எட்டாவதோ படித்தவர். ஒரு இஸ்லாமியர். ‘யூசுப்’ அவரது பெயர். ‘சார்த்தர்: விடுதலையின் பாதை’ புத்தகத்தை வாசித்துவிட்டு என்னிடம்  வந்து பேசினார். கிராம்சியைப் பற்றிய புத்தகத்தை வாங்கிக் கொடுக்க முடியுமா என்று கேட்டார். நான் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

“இதுவரையான உங்களது எழுத்தில், செயல்பாடுகளில் நிறைவாக உணர்கிறீர்களா?”


முதலில் நான் ஒரு வாசகன். இயன்றவரை நான் நிறைவாக வாசித்திருப்பதாக உணர்கிறேன். மனிதஉரிமைச் செயல்பாட்டாளனாக, ஒரு களப்பணியாளனாக, மொழியாக்கம் செய்பவனாக, எழுதுபவனாக என்னால் முடிகிற விஷயங்களைச் செய்திருப்பதாகவே நினைக்கிறேன்.

“எழுத்தில் உங்களை எப்படி அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்கள்?”


நான் என்னை எழுத்தாளன் என்றே சொல்லிக்கொள்ள மாட்டேன். நல்ல கருத்துகள், சமுதாய மாற்றத்துக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் தேவையான கருத்துகள்  என்று நான் கருதுவனவற்றை முன்வைக்கும் ஒரு பிரசாரகன் நான். எழுத்தாளன் என்ற தகுதிக்கு நான் உரிமை கொண்டாடுவதே இல்லை.

“இத்தனை ஆண்டுகாலமாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். அரசியல், கலை விமர்சனம், மொழிபெயர்ப்பு என விரிவான தீவிரமான இடதுசிந்தனை இயக்கம் உங்களுடையது.  நீங்கள் உங்களை எந்த விஷயத்திலாவது முரணானவற்றோடு சமரசம் செய்துகொண்டதாக உணர்ந்திருக்கிறீர்களா?”

வாழ்க்கைப் போராட்டத்தில், சில சமரசங்களைச் செய்யாமல் இருக்க முடியவில்லை. ஆனால், எனது அடிப்படை லட்சியங்களில் சமரசம் செய்துகொண்டது இல்லை. சாதி, மத  மறுப்புத் திருமணம்தான் செய்தேன். எனது குடும்பத்தில் நடக்கும் எந்தச் சடங்குகளிலும் நான் பங்கேற்பது இல்லை. இதனால் பல பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறேன். என் மரணத்தில்கூட எந்த மதச் சடங்குகளும் செய்யக் கூடாது என்று எனது மனைவியிடமும், (வளர்ப்பு) மகனிடமும் உறுதியாகச் சொல்லியிருக்கிறேன். கடைசி வரைக்கும் கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்தேன் என்பதற்கு அடையாளமாக எனது உடலின் மீது சிவப்புத் துணியைப் போத்துங்கள். எனது சாம்பலை நான் வாழ்ந்த மலைகளின் மீது தூவிவிடுங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு