
அந்த நாளை மறக்கவே முடியாது. சரியாக நான்கு வருடங்கள் ஆகின்றன. அப்போது நான் சின்னப் பெண். இப்போதும் சின்னவள்தான். ஆனால், என்னை `அக்கா’ என கூப்பிட இப்போது ஒரு தம்பி இருக்கிறான்.
அந்த நாளில் நடந்தது பாதி எனக்கே நினைவில் இருக்கிறது. மீதி, அப்பாவும் அம்மாவும் சொன்னது. அப்போது வெளியான ஒரு அனிமேஷன் படத்தைப் பார்க்க வேண்டும் என அழுதேனாம். அதனால், அப்பாவின் படத்துக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தோம். தம்பி அப்போது அம்மாவின் வயிற்றில் இருந்தான்.
திடீரென மழை பிடித்துக் கொண்டு, அரை மணி நேரத்துக்கு கொட்டியது. ஒரு கடை வாசலில் ஒதுங்கி இருந்தோம். ‘‘நீங்க ரெண்டு பேரும் ஆட்டோவில் போயிடுங்க’’ என அப்பா சொன்னார்.
‘‘வேண்டாம். மழை நின்றதும் சேர்ந்தே போகலாம்’’ என அம்மா மறுத்துவிட்டார்.
மழை நின்றதும் கிளம்பினோம். தேங்கும் தண்ணீராலும் மோசமான சாலையாலும் வாகன நெரிசல் ஏற்பட்டு, அடி அடியாக நகர்ந்தோம். ஒரு கட்டத்தில் நீண்ட நேரம் நிற்கும் நிலை. இனி, ஆட்டோவும் பிடிக்க முடியாது... பின்னால் போகவும் முடியாது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மீண்டும் மழைத் தூறல் ஆரம்பித்தது. எங்கள் வண்டிக்குப் பக்கத்தில் ஒரு சிவப்பு நிற கார் நின்றிருந்தது. காருக்குள் இருந்த ஒரு அத்தை, எங்களை உள்ளே வரும்படி அழைத்தார். முதலில், அம்மா மறுத்தார். அந்த அத்தை வற்புறுத்தவே, நானும் அம்மாவும் காருக்குள் சென்றோம். ரொம்ப நன்றி அத்தை’’ என்றேன் நான்.
நான் எல்லோரையும் அப்படித்தான் அழைப்பேன். அங்கிள், ஆன்ட்டி என அழைப்பதை தவிர்க்கும்படியும், மாமா, அத்தை, அக்கா, அண்ணா என்று அழைப்பதே அழகு என்றும் அப்பா சொல்வார்.
காரை ஓட்டி வந்தது அந்த அத்தைதான். மாமா பின்னிருக்கையில் இருந்தார். அம்மா முன்னாலும் நான் பின்னாலும் அமர்ந்தோம். அன்றுபோல மோசமான வாகன நெரிசலைப் பார்த்தது இல்லை. காருக்குள் அம்மாவும் அத்தையும் நன்றாகப் பேசினார்கள். மாமா சிரிக்க சிரிக்க பேசினார். அவருடைய மீசை பெரிதாக இருந்தது. நிஜமான மீசையா எனக் கேட்டு தொட்டுப் பார்த்தேன்.
அன்றைக்கு மாமாவுக்குப் பிறந்தநாளாம். காருக்குள் ஒரு கேக் பெட்டி இருந்தது. ‘‘வீட்டுக்குச் சென்றாலும் நாங்கள் இருவர்தான் இருப்போம். அதனால், இங்கயே வெட்டிவிடலாம்’’ என்றார் மாமா.
அங்கேயே ‘ஹேப்பி பர்த்டே’ பாட்டு பாடி, பிறந்தநாளை கொண்டாடினோம். வண்டிகள் நகர ஆரம்பித்தாலும், மழை விட்டபாடில்லை. திடீரென அம்மா ‘‘வயிறு வலிக்குது. குழந்தை வெளியே வர இரண்டு வாரங்கள் இருக்கே’’ என்றார். ஆனால், வலி அதிகமானது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக சொல்லிவிட்டு காரை வேகமாக செலுத்தினார் அத்தை.
அப்பாவின் வண்டி பஞ்சராகி மருத்துவமனைக்கு வர ஒரு மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது. அன்று இரவே தம்பி பிறந்தான். தம்பி அத்தனை அழகாக இருந்தான். அம்மாவின் ஆடைகள் மற்றும் பொருட்களை கொண்டுவர அப்பா சென்றுவிட, மாமாவும் அத்தையும்தான் என்னைப் பார்த்துக்கொண்டார்கள். அவர்களுக்கு நன்றி சொன்னோம்.
சில மாதங்களில் அப்பாவுக்கு வேறு ஊருக்கு வேலை மாற்றலானது. இதோ, இன்று தம்பியை பள்ளியில் சேர்க்க செல்கிறோம்.
பள்ளியின் வாசலில் அந்தச் சிவப்பு நிற காரைப் பார்த்ததும் “அம்மா, இது அந்த மாமாவின் காரா இருக்கும்’’ என்றேன்.

“சிவப்பு கார் எல்லாமே அவங்க காரா?” என்றார் அம்மா.
ஆனால், உள்ளே இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த மாமாதான் பள்ளியின் முதல்வர். அவருக்கு எங்களை நினைவில் இல்லை. அந்தச் சம்பவத்தை சொன்னவுடன் முகம் மலர்ந்தது.
“அடடா, உன் தம்பி என்னமாக வளர்ந்துவிட்டான். நீயும்தான்’’ என்று என் தலையை வருடினார்.
‘‘உங்கள் எண்ணுக்கு தொடர்புகொள்ள பலமுறை முயன்றோம்’’ என்றார் அப்பா.
‘‘ஓ அதுவா? அந்த செல்போன் தொலைந்துவிட்டது. நிறைய பேரின் எண்களும் போய்விட்டது’’ என்றார்.
நான் கையை நீட்டி, “பிறந்தநாள் வாழ்த்துகள் மாமா” என்றேன்.
“அட, உனக்கு எப்படித் தெரியும்?'' என வியந்தார் மாமா.
“தம்பிக்கும் இன்னைக்குத்தான் பிறந்தநாள்’’ என நினைவூட்டினேன்.
சிரித்தவர், ‘‘ஸ்கூல் அட்மிஷன் முடிந்ததும் நீங்க என் வீட்டுக்கு வந்துட்டு போகணும். உன் அத்தை சந்தோஷப்படுவார். சரி, தம்பி பேர் என்ன?’’ எனக் கேட்டார்.
“உங்க பெயர்தான் மாமா. நான்தான் இந்தப் பெயரை சொன்னேன். உதவி செய்தவரை மறக்க கூடாது இல்லியா?” என்றேன்.
‘‘அது மட்டுமா? உங்களை மாதிரியே என்னையும் மீசை வளர்க்க சொன்னாள். இதோ பாருங்க’’ என மீசையை முறுக்கினார் அப்பா.
எல்லோரும் சிரித்தோம்.