Published:Updated:

இன்னொரு நந்தினி - சிறுகதை

இன்னொரு நந்தினி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
இன்னொரு நந்தினி - சிறுகதை

ஆத்மார்த்தி, ஓவியங்கள்: ஸ்யாம்

இன்னொரு நந்தினி - சிறுகதை

ஆத்மார்த்தி, ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
இன்னொரு நந்தினி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
இன்னொரு நந்தினி - சிறுகதை
இன்னொரு நந்தினி - சிறுகதை

பெருமழைக் காலத்தின் ஆரம்பக் கணங்களை, பெரிய கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்ப்பது வரம். செல்லில் நந்தினியின் மெசேஜ். `பார்க்கணும்டா!' - ஒரே ஒரு வார்த்தை.வரவேற்பறைக்கு வந்து காபி மெஷினில் இருந்து ஒரு குவளையை நிரப்பிக்கொண்டு, மழையைப் பார்க்க மறுபடி வந்தேன்.

இன்னும் மழை ஆரம்பிக்கவில்லை. மழைக்கு முந்தைய காற்றும் லேசாகத் தெறிக்கும் தூறலும் மட்டுப்பட்டாற்போல் தோன்றியது. அடுத்த விநாடி மீதான அறியாமைதான் எத்தனை அழகு! நகரத்தின் முக்கியமான சாலையில் அவ்வளவாகப் பரபரப்பு இல்லை. இன்று ஏதோ லோக்கல் விடுமுறை. இல்லாவிட்டால், சாலையை இந்நேரம் விழுங்கியிருக்கும் பள்ளிக்கூடக் கூட்டம்.

காது அருகே, ``இன்னிக்கு மழை வரக் கூடாது'' என்றான் அருண்.

திரும்பி முறைத்து, ``ஏன் பிசாசு, மழையை வெறுக்கிறே?''

``முறைக்காதேக்கா... நான் மழையை வெறுக்கலை. எக்ஸ்க்யூஸ் கேக்குறேன். ஒன் மந்த் காதல் தோல்விக்கு அப்பால இன்னிக்குதான் மறுபடியும் ஒரு பூ பூத்திருக்கு. மனசு ஈரமா இருக்கணும்னா, இன்னிக்கு மழை பெய்யக் கூடாதுதானே! நான் பாவம்.''

``போன மாசம் இதே மாதிரி மீட்டிங்குக்குக் கிளம்புனியே அருண். ஏரோப்ளேன்லகூட மீட் பண்ணதா சொன்னியே..?''

என் கேள்வியை அவன் காதில் வாங்காததைப்போல் நடித்தான். சடாரெனத் திரும்பி, முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு ``அவளுக்கு அத்தை பையன் இருக்கானாம். மின்னசோட்டா போற வழியில பேச்சுத்துணைக்கு என்னை அணுகியிருக்கா. `எங்கு இருந்தாலும் ஒழிக'னு துப்பி அனுப்பிச்சுட்டேன்.''

கொஞ்சம் சத்தமாகச் சிரித்துவிட்டு, ``ஆல் தி பெஸ்ட்'' என்றேன்.

``வர்றேன்க்கா'' என்றவாறே காணாமல் போனான்.

அன்றைய வேலையை முடித்துவிட்டு, ஸ்கூட்டியில் நந்தனம் சிக்னல் தாண்டி, சேமியர்ஸ் என்ற வெள்ளைக்காரத்தனமான கட்டடத்தின் உள்ளே வண்டியை நிறுத்தி, ஹெல்மெட்டை லாக்கிட்டு உள்ளே சென்று படியேறினேன். மேலோட்டமாகப் பார்த்தால், சென்னையின் அராஜகங்களில் ஒன்றாகவே தெரியும்... அந்த டீ ஷாப்பில் இரண்டு பேர் ஆளுக்கொரு கேக், காபி சாப்பிட்டால், ஆயிரம் ரூபாய்க்கு அருகில் பில் வரும். வேறு இடத்துக்குப் போகலாம் என்றால், அதற்கு நந்தினி ஒப்புக்கொள்ள மாட்டாள்.

``நோ பப்பு... பிரைவசிங்கிறது எவ்ளோ பெரிய விஷயம் தெரியும்ல? அதுக்கும் சேர்த்துத்தான் இந்த விலை. விடு பப்பு!'' என்பாள்.

நந்தினியோடு அடிக்கடி வந்து, எனக்கும் அந்த இடம் பிடித்துப்போனது. ஒரு சுவர் முழுவதும் பழங்கால கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் அலங்கரித்துக்கொண்டிருக்கும். அழகுக்காக எதையாவது பெயர்த்துத் தருபவர்களுக்கு மத்தியில், அத்தனை புகைப்படங்களும் 120 வருடங்களுக்கு முந்தைய ரத்தமும் சதையுமாக வாழ்ந்து, இல்லாமல்போன மனிதர்களின் புகைப்படங்கள்.

முதல்முறையாக அங்கே போய் வந்த அன்று இரவு, எனக்கு நெடுநேரம் உறக்கமே இல்லை.

``நாம் இன்னும் நூறு வருஷங்கள் கழிச்சு என்னவாக இருப்போம் நந்து?'' என்று போனில் கேட்டேன்.

``ஃபன்னி...'' என்றவள், சற்று நேரம் கழித்து ``ஆமாம்ல... நம்ம சந்ததியில் யாராச்சும் நம்மளை நினைச்சுப்பார்ப்பாங்களா? நீயும் நானும் முன்னோரை எவ்ளோ நினைக்கிறோம்? அவ்ளோதான். எதைப் பார்க்கிறோமோ, எதில் இருக்கிறோமோ, அது மட்டும்தான் நிஜம். எவ்வளவு இருக்கோம். அவ்வளவும் இல்லாமப்போயிருவோம்'' என்றாள்.

ப்போதோ படித்த நகுலனின் கவிதை ஞாபகம் வந்து கனத்தது. டீ ஷாப்பின் டிஸ்ப்ளே பகுதி, பழங்காலப் பொருட்களின் கூடுகையாக அட்டகாசமாக இருந்தது. இன்னும் நந்தினி வரவில்லை. அவள் வரும் வரை பழங்கால ரேடியோ தொடங்கி போன் வரைக்கும் பார்த்துக் கொண்டிருக்கலாம். தூரத்தில் இருந்தே சிக்கனமாகக் கையசைத்தவாறு மிதந்து வந்தாள் நந்தினி. `எப்படி இவளால் இவ்வளவு அழகாக இருக்க முடிகிறது?' பதின்ம வயதின் அழகுகள் இன்னும் அவளிடம் பாக்கியிருந்தன.

பணம், தன்னைத்தானே பெற்றுக்கொண்டு தேவையான பலவற்றைத் தரவல்லது. நந்தினி சொல்வாள்... `பணம், பணமா இருந்தா பத்தாது.எனக்கு, பணம் ஒரு நாய்க்குட்டி மாதிரி வேணும். அப்படி இல்லாட்டி, லைஃப் அலுத்துடும்.'

முன் நெற்றியில் வந்துவிழுந்த கற்றை முடியை ஒதுக்கியபடியே, ``ரொம்ப நேரமா காத்திருக்கியா பப்பு?'' என்றாள்.

``இல்லடா. பத்து நிமிஷம்தான்'' என்றேன்.

நந்தினியை முதன்முதலில் ஒரு பார்லரில் சந்தித்தேன். பிரபு, என்னை ரொம்ப இம்சித்ததாலும், சொந்தக் காரர்களின் கல்யாணத்துக்கு மதுரைக்குச் செல்லவேண்டி இருந்ததாலும் பியூட்டி பார்லர் போனேன். எதிர் நாற்காலியில் இருந்தவள்தான் நந்தினி. முதலில் `அவள்தான் பியூட்டீஷியனோ!' எனக் குழம்பினேன். `இன்னும் என்ன பாக்கி என்று இங்கே வந்திருக்கிறாள் எனத் தெரியவில்லையே!' என நினைக்கும் அளவுக்கு மேக்கப்புடன் இருந்தாள்...பெப்பர்மின்ட் வாசனையோடு.

எனக்கு ஃபேஷியல் நடந்தபோது, எனக்கு எதிர்த்தாற்போல் அவள் அமர்ந்துகொண்டாள். அவளது பாதங்களைச் சீரமைக்கும் வேலையை ஒருத்தி செய்தாள். முதலில் எனக்கு ஆத்திரமாக வந்தது. `எல்லாம் பணத்திமிர்!' என எனக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால், இன்னொருத்தியின் கால்களை எந்த அசூசையும் இல்லாமல் தன் கரங்களால் கழுவித் தேய்த்து, அலம்பி, நகம் வெட்டிவிட்டு எல்லாம் செய்துகொண்டிருந்த அந்த பார்லர் பெண் மீது எனக்கு பெரும் மரியாதை வந்தது.

முடித்துவிட்டு வாசலுக்கு வந்தேன்.ரிசப்ஷனில் பில் செட்டில் செய்துவிட்டுக் கிளம்பியபோது, பெப்பர்மின்ட்டாள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். இருவரும் வெளியே வரும்போது அவள் தன் கையை நீட்டி ``நந்தினி'' என்றாள்.

எதிர்பாராததால் ஒரு கணம் திணறி ``நான் பவித்ரா'' என்று கை கொடுத்தேன்.

``உங்களைக் கவனிச்சுக்கிட்டே இருந்தேன். இதுக்கு முன்னாடி பார்லர் வந்தது இல்லையா நீங்க? நான் பெடிக்யூர் செய்துகிட்டப்போ உங்க முகத்துல சின்னதா ஆத்திரத்தைப் பார்த்தேன்.''

எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. நான் ஏன் மறைக்க வேண்டும்? `ஆமாம்' என்பதுபோல் தலையாட்டினேன். ``ஸீ... பணம் இடம்மாறுது இல்லையா? இதை ஒரு வேலையா யோசிங்க, ஒரு தொழிலா புரிஞ்சுக்கங்க. கோபம் வராது'' என்றவள், டக் டக்கென நடந்து காரில் ஏறிக் காணாமல்போனாள்.

அவளை மறந்துபோனேன். ஒரு வாரம் கழித்து என் நம்பருக்கு போன் வந்தது. ``உங்க நம்பரை பார்லர்ல வாங்கினேன். ஏனோ எனக்கு உங்களைப் பிடிச்சுபோச்சு. நாம ஃப்ரெண்ட்ஸா இருக்கணுமே'' என்றாள்.

வசியப் பறவையைப்போல கதவுகளைத் திறந்து அல்ல, உடைத்துக்கொண்டு என் உலகத்துக்குள் நுழைந்தாள். ஒரே ஒரு நந்தினி. அவளும் `பப்பு... பப்பு...' என உருகத்தான் செய்கிறாள். அவளது செல்வந்தத்தின் மத்தியில் ஒரே ஒரு சாதாரணம் நானாகத்தான் இருப்பேன். அவளுக்கு அதில் எந்தக் குறையும் இல்லை. ஆச்சு, அறிமுகமாகி ஐந்து வருடங்கள்.

நந்தினி பதற்றத்தில் இருக்கிறாள் என்பது, அவளது முகத்தில் தெரிந்தது. அவளாகப் பேசட்டும் என நான் காத்திருந்தேன். அவள் தவித்தாள். பேரரைக் கூப்பிட்டு எதை எதையோ ஆர்டர் செய்தாள். அவளது துடிக்கும் உதடுகளின் மத்தியில் லேசான புன்னகை பொருத்தமற்ற மேலாடையைப்போல் துருத்திக்கொண்டிருந்தது. `செந்தமிழ்த் தேன்மொழியாள்...' பாடலில் வரும் அல்லவா... `பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்...' அந்த ப்ளா... ப்ளா அழகி நந்தினிதான்.

``என்னப்பா..?'' என்றேன்.

அதற்காகவே காத்திருந்தாற்போல் என் முகத்தின் அருகே வந்து ``ஒரு முக்கியமான விஷயம்'' என்றாள்.

நான் என்னவோ சொல்லப்போகிறாள் எனப் பார்த்தால், ``ஐ யம் இன் லவ் பப்பூ!'' என்றாள்.

எனக்குப் புரியவில்லை. ``மீன்ஸ் வாட்?'' என்றேன்.

``டோன்ட் யூ நோ... ஸ்டுப்பிட். நான் ஒருத்தனைக் காதலிக்கிறேன்'' என்றாள்.

நான் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன். ``ஏதாச்சும் சொல்லுடா... திட்டவாவது செய். ஒண்ணும் பேசாம உம்னு இருக்கே. அழுத்துது பப்பு'' என்றாள். உச்சபட்சப் பதற்றத்தில் லேசாக நடுங்கும் தன் கரங்களைச் சமாளித்தபடி ``சொல்லேன் பப்பு... ஏதாச்சும் சொல்டா'' என மறுபடியும் கெஞ்சினாள்.

``இரு... இரு...'' என்று தண்ணீரை எனக்குள் சரித்துக்கொண்டு ``நீ சொன்னதுமே நான் ரியாக்ட் பண்ண முடியுமா நந்தினி? உள்வாங்கிக்க வேண்டாமா? எனக்குக் கொஞ்சம் டயம் ஆவாதா? நீ பதற்றமா சொல்றதைப் பார்த்தா, நீ லவ்னு அர்த்தப்படுத்துறது சங்கீத்தை இல்லைனு புரியுது'' என்றாள்.

சங்கீத் அவளது கணவன்; கோடீஸ்வரன். அவள் முகம், உர்ரென விளக்குகள் அணைக்கப்பட்ட கொண்டாட்டக்கூடம் மாதிரி ஆனது. இருளை இன்னும் வேகமாக வரவழைத்துக்கொண்ட அவளது விழிகளின் ஓரத்தில் லேசாகத் துளிர்த்தது. நான் ஏதும் பேசாமல், அவளது வலது கரத்தைப் பற்றிக்கொண்டேன். அப்படியே இறுக்கமாகப் பற்றியபடி இருந்தேன். இரண்டு முழு நிமிடங்களுக்குப் பிறகு ``நந்தினி... சொல்லு... யார் உன் ஹீரோ?''

மூக்கை உறிஞ்சியபடி, ``உனக்குத் தெரியும்ல பப்பு... சங்கீத், என்னை ஒரு அதிர்ஷ்ட பொம்மை மாதிரி வெச்சிருக்கான். அவனுக்கு நான் சிம்பல் ஆஃப் லக். அவன், பணத்தைத் துரத்திட்டே இருக்கான். என்னைத் திரும்பிப் பார்க்கிற நேரம் எல்லாம் என்னை மிஸ்பண்றதா எங்கிட்ட ஸாரி கேட்டுட்டே இருக்கான். கல்யாணம் ஆகி முதல் ரெண்டு வருஷம் தித்திச்சது. ரிஸ்வா பொறந்தா.இப்போ அவ மட்டும்தான் எனக்கு சந்தோஷம். எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத மாதிரி  ஒரு கொடுமை. எதுக்கு இவ்ளோ பணம்? நான் சிரிச்சாலும் அழுதாலும் கேட்க ஆள் இல்லை.இந்த நிமிஷம் சங்கீத் எந்த நாட்டுல இருக்கான்னு அவனுக்கு மட்டும்தான் தெரியும்'' என்று லேசாகக் கண்கலங்கினாள்.

அவளே மறுபடியும் ``நீ என் மனசாட்சி மாதிரி. நான் உடம்பு பற்றி மீன் பண்ணலை.அதுக்கு நிறைய வழிகள் இருக்கு. எனக்கு மனசுங்கிற ஒண்ணு படுத்துது. நான், காதலிக்கப்படணும்; கொண்டாடப்படணும். எனக்கான ஒரு மனசு வெளியே துடிக்கணும். ஆயிரம்தான் நீ இருந்தாலும், நட்பைத் தாண்டிய காதலை என் மனசு தேடிட்டே இருக்கு. இது பாவம்னா, நான் நூறு சதவிகிதம் இந்தப் பாவத்தைச் செய்ய விரும் புறேன். ஐ நீட் எ சின்'' என்றாள்.

இன்னொரு நந்தினி - சிறுகதை

நான் அதிர்ந்தேன். நந்தினியின் கண்களையே பார்த்தேன்.

``பப்பு, இப்ப அவனை வரச்சொல்லியிருக்கேன். எதிர்பாராத நேரத்துல நம்ம வாழ்க்கையை கிராஸ் பண்ற ஒரு நறுமணம் மாதிரி அவன் வந்தான். அவனை என்ன செய்து தக்கவெச்சுக்கிறதுனு எனக்கே தெரியலை. நான் எத்தனையோ விதமான ஆண்களைப் பார்த்திருக்கேன். பட், இவன் வேற ஒருத்தன்; ஏலியன்; மகா திமிர் பிடிச்சவன்; ரொம்ப நல்லவன்; முன்னாள் பொறுக்கி. என்னை ரொம்ப விரும்புறான். என் வாழ்க்கையில எனக்குத் தேவைப்படுற வெளிச்சத்தை இவனால ஏற்படுத்த முடியும்னு நம்புறேன். எனக்காக அவன்கிட்ட பேசு'' என்றவள், என் பதிலுக்குக் காத்திராமல் போனை எடுத்து ``பாரி... வர்றியா? ம்... ம்...'' என்று வைத்தாள்.

சற்று நேரத்தில் ``ஹாய்!'' என்றவாறே வந்து அமர்ந்தான்.

``பாரி. பாரி... இது பப்பூ அலைஸ் பவித்ரா. மை ஹார்ட் பீட்'' என்றாள் நந்தினி.

``THEN WHO AM I? அப்படின்னா நான் கிளம்புறேன். இவங்கதான் உன் ஹார்ட் பீட்டா?'' என்று பொய்க்கோபம் காட்டி எழப்போனவனை 1,001 ஸாரிகள் சொல்லி அமரவைத்தாள் நந்தினி.

பாரி,  நந்தினியைவிட நான்கைந்து வயதாவது குறைவானவனாக இருப்பான் எனத் தோன்றியது.சிக்கனமான மீசை-தாடி, எப்போதும் எதையாவது கவனித்துக்கொண்டே இருக்கும் சிறு பூனையின் கண்கள், கூராய் இறங்கும் மூக்கு, ஒல்லியான தேகம் என, தனித்தனியாகவும் மொத்தமாகவும் இன்றைய இளைஞனின் ஒரு பிரதி மாதிரி இருந்தான். நந்தினி இப்படிக் கிறங்கிப்போக அவனிடம் என்ன இருக்கிறது என, சத்தியமாகப் புரியவே இல்லை.

நான் அங்கே இல்லாததுபோலவே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும், அடிக்கடி சிரித்துக் கொண்டும், விரல்களைப் பற்றிக்கொண்டும் எனக்கு ஏனோ ஆத்திரமாக வந்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டு ``எக்ஸ்க்யூஸ் மீ நந்தினி... நான் வேணா கிளம்பவா?'' என்றேன்.

அதன் பிறகு `ஸாரி' சொல்லிவிட்டு, பாரியும் அவளும் எப்படிச் சந்தித்தார்கள், எங்கே தீப்பற்றிக்கொண்டது என்பன எல்லாம் பேசினோம். நேரம் போனதே தெரியவில்லை.பாரியின் குரல் அலாதியாக இருந்ததை, அடிக்கடி கவனித்தேன். அப்படி ஓர் ஆண்மையான குரலை, சமீபத்தில் எங்கேயும் கேட்டதே இல்லை.அவன் விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசியது, இன்னும் ஸ்டைலாகத்தான் இருந்தது. பையன் கிராதகன்தான். நந்தினி இவனிடம் விழுந்ததில் ஆச்சர்யம் இல்லை.

அவன் பேசியதில் இருந்து ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது. நேராக என் கண்களைப் பார்த்துச் சொன்னான், ``பவித்ரா... நந்தினி குழந்தை மாதிரி. அவளோட மென்டல் ஏஜ் பதினாலுக்குள்ளதான் இருக்கும்னு நம்புறேன்.அவளுக்கு என்ன தேவைனு அவளுக்கே தெரியலை. ஆரம்பத்துல நான் கடுமையா மறுத்தேன். அவ தனக்குள்ளே சுருங்கினா.அவளுக்குத் தேவை பிரத்யேகமா சில வார்த்தைகள். அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிட்டிருக்கிற ஒரு ஜீவன். அது நான்தான்னு நம்புறா. அவளோட உலகம் ரொம்பச் சின்னது.இருக்கிறதை உடைச்சு இன்னொண்ணை ஏற்படுத்த முடியாது. இதுக்கு மேல எங்கேயும் எங்க ரெண்டு பேராலயும் போக முடியாது. அதுல நான் ஷ்யூரா இருக்கேன். நந்தினி சந்தோஷமா இருக்கணும் அவ்வளவுதான். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இந்த ரிலேஷன்ஷிப்புக்கு என்ன பேரு? இது நல்லதா... கெட்டதானு எல்லாம் நான் யோசிக்கலை. தட்ஸ் ஆல்.''

நான் கேட்காமலேயே என் வினாக்களுக்கு ஆல்மோஸ்ட் விடை தெரிந்தாற்போல உணர்ந்தேன். இவன், ஆபத்தானவன் அல்ல... புதியவன்; நல்லவன். அன்றைக்கு அவன் புறப்பட்டுப்போன பிற்பாடும் நிறைய நேரம் நந்தினியும் நானும் பேசிக்கொண்டே இருந்தோம். பிரபு, நான்கு முறை கூப்பிட்ட பிறகே வீட்டுக்குக் கிளம்பினேன்.

இரவு பன்னிரண்டு மணிக்கு `குட்நைட்' என்று மெசேஜ் போட்டேன் நந்தினிக்கு. அவள் உடனே கால் செய்தாள்; எடுத்தேன்.

``ஒரு கவிதை சொல்றேன்யா. என் ஆளு, எனக்கு அனுப்பினான்.  உனக்கு சூடா சொல்றேன்'' என்றவள் வாசித்தாள்.

``என்னது பெரும்பசித் தேடல்.
உன்னது சிறுதுளிக் காதல்
எப்போதும் போதுவதில்லை.
இன்னும் இன்னும்
இன்னும் இன்னும்
காஆஆஆஆஆஆதல்
வேண்டுமடி.
மை லக்கி ச்சார்ம்... மை டியர் சோல்...


மை டியர் இடியட்... மை லவ்... மை ஒன்லி பாரி...'' என, போனில் கசிந்துருகினாள்.

``ஏய்... நைட்டு காஜி பண்ணாதே. தூங்கு ஒழுங்கா'' என்று சிரித்துக்கொண்டே அதட்டிவிட்டுத் தூங்கினேன். `இது தப்பா இருந்தா இருந்துட்டுப்போகட்டும். நந்தினி சந்தோஷமா இருக்கா, அது போதும்!' என்று என் கனவில் பாரி சிரித்துக்கொண்டே சொன்னான்.

ப்ரிவியேஷன் ட்ரெய்னிங் என லண்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டேன். `ஆறு மாசமா!' என்று பொய்யாக மூர்ச்சையாவதுபோல் நடித்தாலும் `உனக்குத்தான் பாரி இருக்கான்ல' எனச் சொன்னதும், வெட்கப்பட்டுச் சிரித்தாள் நந்தினி.

சென்னை விமானநிலையத்தில் என்னை வழி அனுப்ப, பாரியையும் அழைத்து வந்திருந்தாள். `அவனை என்ன சொல்லி பிரபுவுக்கு அறிமுகம் செய்துவைப்பது?' எனக் குழம்பினேன். நந்தினி வெகு இயல்பாக `என் கஸின்' என்றாள். பாரியிடம் `நந்தினியைப் பார்த்துக்கோங்க நல்லா!' என்றபோது, நான்தான் லேசாகக் கலங்கினேன்.

அடுத்த மூன்று மாதங்கள் `பாரி, இன்னிக்கு என்ன பண்ணான் தெரியுமா; என்ன சொன்னான் தெரியுமா; என்ன செஞ்சான் தெரியுமா?' என்று வீடியோ கான்ஃப்ரன்ஸில் விழி விரிய அடிக்கடி எதையாவது சொல்லிக்கொண்டே இருந்தாள் நந்தினி. வெகு இயல்பாக அவள் போனை வாங்கி, `என்ன பவித்ரா, எப்படி இருக்கீங்க?' என்று விசாரித்தான் பாரி. நெடுநேரம் அவன் குரல் எனக்குள் மறுபடி மறுபடி ஒலித்தவாறு இருந்தது. ஒருநாள் `பாரியுடன் எங்கேயாவது கண்மறைவுத் தூரத்துக்குச் சென்றுவிடட்டுமா?' எனக் கேட்டு அழுதாள்.

`உன் குழந்தை ரிஸ்வாவை யோசிச்சுப்பார் நந்தினி' என்று அதட்டினேன். ரொம்ப குழம்பியிருந்தாள்.

`இங்கே பார்... உனக்கு என்ன தேவைனு உன் மனசை நாலு தரம் கேளு. எதையும் இழக்காம எதை அடைஞ்சாலும் அதுதான் புத்திசாலித்தனம். சில விஷயங்களை மாற்றி அமைக்க முடியாதுன்னு சொல்றதைவிட, மாற்றி அமைக்கக் கூடாதுன்னு சொல்றதுதான் உண்மை. டோன்ட் பீ சில்லி!' என்று போனை வைத்தேன்.

அதன் பிறகு பதினைந்து நாட்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஒரே ஒருமுறை மறந்துபோய் நந்தினியின் நம்பரை டயல் ஸ்க்ரீனில் தொட்டதும் கால் சென்றது. சிறிது நேரத்தில் சுவிட்ச் ஆஃப் எனக் கேட்டது. `அவளாகவே வரட்டும்!' என என் வேலையில் மூழ்கினேன்.

ஒரு வெள்ளிக்கிழமையில் நீளமான ஒரு மெயில் நந்தினியிடம் இருந்து வந்தது. என் பழைய கேள்விகளின் நியாயம் தற்போது புரிவதாகவும், பாரியுடனான பந்தத்தில் அடிக்கடி சண்டை வருவதாகவும், பிரிந்துவிடலாமா என எண்ணுவதாகவும் மெயில் சொன்னது. அதற்கு நான் வாட்ஸ்அப்பில் `எது செய்தாலும் யோசித்து செய்' என்று மட்டும் அனுப்பினேன்.

னது புராஜெக்ட் பெரிய சக்சஸ் ஆகி, அதிக சம்பளத்துடன் என்னை இந்தியா அனுப்பியது என் கம்பெனி. பிரபுவிடம் ``இனிமே நாம மிடில் க்ளாஸ் இல்லைல?'' என்றேன்.

``இடம் பார்த்து அடிச்சுட்டே'' என்று வாழ்த்திய பிரபு, ``ஏன்டா கஞ்சத்தனம் வேணாம்டா. நமக்கு இருக்கிற ஒரே ஒரு பொண்ணுக்குத் தேவையானதைச் செய்வோம்.போதாது?'' என்றார்.

பிரபுவே ஞாபகப்படுத்தினார்... ``இன்னம் போய் நந்தினியைப் பார்க்கலியா?''

``அவ ஊர்ல இல்லை. அடுத்த வாரம்தான் வர்றா'' என்றேன்.

அடுத்தடுத்த வேலை, கழுத்தை நெரித்தது.இந்தியா திரும்பி, இரண்டு மாதங்கள் நந்தினியைப் பார்க்க முடியவில்லை. நந்தினியுடன் போனில் பேசுகையில் புரமோஷன் குறித்து சொன்னபோதுகூட அசுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டாள். இரண்டொரு தரம் அவள் அழைக்கும்போது என்னால் பேச முடியவில்லை. நான் அவளை அழைத்தபோது `அப்புறம் கூப்பிடுறேன்' என மெசேஜ் வந்தது.

விட்டாயிற்று. லேசான இடைவெளி ஏற்பட்டிருப்பது நிஜம்தான்.

விடாமல் இரண்டு மூன்று முறை அழைத்தேன்.எடுத்தவள், ``ஹாய் மை ஸ்வீட் ஹார்ட். எப்படி இருக்கே?'' என்றாள்.

``ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து. நாளைக்குப் பார்க்கலாமா?'' எனக் கேட்டேன்.

``ஷ்யூர்... சேமியர்ஸ்ல பார்க்கலாம்'' என்றாள்.

மறுநாள் சனிக்கிழமை. அதே சேமியர்ஸில் மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்துவிட்டுக் கிட்டத்தட்ட `எழுந்து போய்விடலாம்' என நினைத்தபோது, ``ஹல்லோ பப்பு..!'' என்றவாறே வந்தாள் நந்தினி. உடன் எதிர்பாராத சர்ப்ரைஸாக அவள் கணவன் சங்கீத். பரஸ்பரம் அறிமுகமானோம். என்ன பேசுவது என்றே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தேன். கால் மணி நேரம் கழித்து, ஒரு போன் காலைப் பேசுவதற்காக விலகி நடந்தான் சங்கீத்.

``என்ன பப்பு, என் ஆளை சைட் அடிக்கிறியா?'' என்றாள் நந்தினி.

``உளறாதே!'' என்று கோபித்தேன்.

``கூல்... கூல்...'' என்றாள்.

``பாரி எப்படி இருக்கான்?'' என்றேன்.

என் கேள்வி, காதில் விழாதவளைப்போல் இருந்தவளிடம் மறுபடி ஒரு தடவை கேட்ட பிறகு `` `எங்கே இருக்கான்?’னு கேளு பப்பு. நான் அவனைப் பார்க்கிறதோ, பேசுறதோ இல்லை பப்பு. கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்னு தோணுது. ஒருநாள் ரெண்டு பேருக்கும் சரியான சண்டை. நான் என்ன சொன்னாலும் என்னைப் புரிஞ்சுக்கவே மாட்றான். `இனிமே என்னைப் பார்க்கவோ, என்கூடப் பேசவோ முயற்சி பண்ணாதே'னு கோபமா சொல்லிட்டு, கட் பண்ணிட்டேன். அதுக்கு அப்புறம் அவன் நம்பர் மாத்திட்டான்னு நினைக்கிறேன். மனசு கேட்காம எத்தனை தடவை அவன் நம்பருக்கு கால் பண்ணேன் தெரியுமா? `.நாட் இன் யூஸ்'னு வந்தது. விட்டுட்டேன்.''

எனக்குள் எத்தனையோ கேள்விகள் முண்டியடித்தன. ஆர்ப்பரித்த மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ``என்னய்யா இது? உன் வாழ்க்கையோட ஒளினு எல்லாம் உருகினே... இப்ப இவ்ளோ ஈஸியா சொல்றே?'' என்றேன்.

இன்னொரு நந்தினி - சிறுகதை

நான் இதுபற்றி தொடர்ந்து பேசுவதை, அவள் விரும்பவில்லை எனத் தெரிந்தது.

``தெருவில் பார்த்தவனுக்குத் தலையில் இடம் கொடுத்தது தப்புன்னு உணர்றேன்.''

``அவனைத் தெருத்தெருவா தேடணும்னு சொல்றியா?''

``ரப்பிஷ்... எனக்கும் சங்கீத்துக்கும் இப்ப எந்த கேப்பும் இல்லை. ஹி லவ்ஸ் மீ லைக் எ குயின்.நான் பண்ண முட்டாள்தனம் பாரி. ஐ பெக் யூ பப்பு. ப்ளீஸ்... இனிமே அவனை ஞாபகப்படுத்தாதே'' என்றாள்.
எனக்குள் என்னவோ விட்டுப்போனதுபோல் இருந்தது. என்ன சொல்வது, எதைக் கேட்பது என்றெல்லாம் தெரியாமல், அவளுக்கு டாடா காண்பித்துவிட்டு, வீடு வந்து சேர்ந்தேன்.
அன்றைய இரவு பிரபுவிடம் நெடுநேரம் புலம்பியபடியே இருந்தேன்.

அவர் என்னிடம், `` `பாரி'ங்கிற ஒருத்தன் வந்தது தப்பான வழியில் பவித்ரா. அவனோட அடுத்த நியாயங்கள் எல்லாமும் அடிபட்டுருதுல்ல? நந்தினி முதல்ல பண்ணதுதான் தப்பு. இப்ப பண்றது ரொம்ப சரின்னுதானே அர்த்தம்? நீ ஏன் மாற்றி யோசிக்கணும். விடு... உனக்கு என்ன?'' என்றார்.

`அதுதானே... எனக்கு என்ன?' என்று போக முடியவில்லை. `பாவம் பாரி' எனத் தோன்றியது.நந்தினி செய்தவற்றைவிடவும் அவற்றை நிகழ்த்திய வழிகளின் மீது எனக்குப் பெரும் அதிருப்தி இருந்தது.

டுத்த வெக்கேஷனுக்கு பெங்களூரு சென்றோம், பிரபுவின் அக்கா வீட்டுக்கு.இடையில் ஒருநாள் மதியம் `ஃப்ரோஸென்’ படத்துக்குப் போயே தீரவேண்டும்' என, என் மகள் அனத்தினாள். சரி என நானும் அவளுமாக ஒரு மாலுக்குள் நுழைந்தோம். அந்த மகா ஸ்தலத்தின் அர்த்தமற்றக் கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே திரிந்தோம். எதிரே பஞ்சடைந்த கண்களும் கலைந்த தலையுமாக... மை காட்! பாரி கெந்திக் கெந்தி நடந்து வந்துகொண்டிருந்தான். என்னைப் பார்த்துவிட்டான்.

``பவித்ரா... நல்லா இருக்கீங்களா..?'' என்று சிரித்தான். அவனது முன் பற்கள் உடைந்து இருந்தன.

``என்ன பாரி... எங்கே போனீங்க... என்ன ஆச்சு?'' என்றேன்.

சோகையாகச் சிரித்தவன். ``நந்தினி நல்லா இருக்காங்களா?'' என்றான்.

தலை அசைத்தேன். `` `உங்களை கான்டாக்ட் பண்ணவே முடியலை'ன்னாளே. நீங்க நம்பர் மாத்திட்டீங்களா?'' என்றேன்.

அவன் அதற்கும் சிரித்துவிட்டு, ``நீங்கதான் அப்ராட் போனதுல நம்பர் மாத்திட்டீங்க. நான் அதே நம்பர்லதான் இருக்கேன்'' என்றான்.

அவனது கண் ஓரத்தில் நீர் துளிர்த்தது.சமாளித்துக்கொண்டு மறுபடி சிரித்தான்.

``நந்தினி எதுக்கு என்னைத் தேடினா? ஏன் என்னை அவ்வளவு கொண்டாடினா? இதுக்கு எல்லாம் எப்படி அர்த்தமே இல்லையோ, என்னைவிட்டு விலகினதுக்கும் காரணமே இல்லைங்க. மலை உச்சிக்கு ஏறுறதுக்கும் இறங்குறதுக்கும் வெவ்வேற பாதைகள் இருக்கிற மாதிரிதான் வந்தா...போயிட்டா. ஹூம்... அவளுக்குத் தேவை சின்னதா ஒரு காதல்னுகூட சொல்லக் கூடாது. சின்னதா ஒரு பாவ ரகசியம். அவ கட்டுப்பாட்டுக்குள்ளே ஒரு அனுபவம். தட்ஸ் ஆல். `ஒரே ஒரு தடவை பார்த்துப் பேசினா எல்லாம் சரியாகிடும்'னு நம்புனேன். அதுல கொஞ்சம் அவளை நிர்பந்திச்சுட்டேன்.அன்னிக்கு சாயந்திரமே எனக்கு ஒரு ஆக்ஸிடென்ட் நடக்குது. இருபது நாள் ICU-வில் இருந்து எழுந்தேன். விழும்போது இருந்தவனா எழுந்திருக்கும்போது இல்லைங்க.

நல்லா தெரியுது அது ஆக்ஸிடென்ட் இல்லை.இன்சிடென்ட்னு. ஆனா, எங்கே போயி முறையிடுறது? முதல் நாளே நோ சொல்லியிருக்கணும். அதோட நம்ம உரிமைகள் முடிஞ்சுபோயிடுது.பணக்காரங்களுக்கு அவங்க முகத்தைப் பார்த்துக்கிறதுக்கு மிடில் கிளாஸ் கண்ணாடி தேவைப்படுது. அவங்க விளையாட்டுக்கு நாலு பக்கமும் மிடில் கிளாஸ் ஆட்டக்காரங்க தேவைப்படுறாங்க பவித்ரா. சரிக்குச் சரியா ஆடினாத்தான் நாம ஜெயிக்க முடியும். நான் தோத்துட்டேன். சரி... பவித்ரா, என்னைப் பார்த்ததாக்கூட நந்தினிகிட்ட சொல்லாதீங்க. உங்களுக்குத்தான் கஷ்டம்'' என்ற பாரி, கெந்திக் கெந்திச் சென்று மறைந்தான்.

டிக்கெட்களை பன்ச் செய்துவிட்டு, உள்ளே நுழைந்து ஒதுக்கப்பட்ட ஸீட்களில் அமர்ந்தோம்.படத்தில் மனம் லயிக்கவில்லை.

`இன்னும் இன்னும் இன்னும் காஆஆஆஆஆஆஆஆதல் வேண்டுமடி' என்ற பாரியின் கவிதை, எனக்குள் சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது!