Published:Updated:

ஜி.நாகராஜன் - விளிம்புநிலை மனிதர்களின் அக உலகை விவரித்தவர்! கதை சொல்லிகளின் கதை பாகம் 23

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜி.நாகராஜன் - விளிம்புநிலை மனிதர்களின் அக உலகை விவரித்தவர்!  கதை சொல்லிகளின் கதை பாகம் 23
ஜி.நாகராஜன் - விளிம்புநிலை மனிதர்களின் அக உலகை விவரித்தவர்! கதை சொல்லிகளின் கதை பாகம் 23

வருங்கால எழுத்தாளர்களுக்கெல்லாம் ஓர் எச்சரிக்கையாகத் தன் வாழ்வை அமைத்துக்கொண்ட, ஜி.நாகராஜன், தமிழின் முன்னுதாரணமில்லாத மகத்தான படைப்பாளி.

பாகம்1- வ.வே.சு.ஐயர் பாகம்-2- ஆ.மாதவய்யா பாகம்-3- பாரதியார்
பாகம்-4-புதுமைப்பித்தன் பாகம்-5- மௌனி பாகம்-6 - கு.பா.ரா
பாகம்-7- ந.பிச்சமூர்த்தி பாகம்- 8 - பி.எஸ்.ராமையா பாகம்- 9 - தொ.மு.சி. ரகுநாதன்
பாகம் -10- அறிஞர்.அண்ணா பாகம்-11- சி.சு.செல்லப்பா    பாகம்-12- ந. சிதம்பர சுப்ரமணியன்
பாகம் - 13 - எஸ்.வி.வி பாகம்-14-  தி.ஜ.ரங்கராஜன் பாகம்- 15.1  கல்கி
பாகம்-15.2 கல்கி பாகம்- 16- ராஜாஜி பாகம்-17 -அநுத்தமா
பாகம்18.1-கு.அழகிரிசாமி பாகம் 18.2- கு.அழகிரிசாமி பாகம் 19- கிருஷ்ணன் நம்பி
பாகம்-20- ல.சா.ரா பாகம்-21 - விந்தன் பாகம்-22-  மா.அரங்கநாதன்

கம்பீரமான தன் உடலையும் உள்ளத்தையும் குடியாலும் கஞ்சாப்புகையாலும் மெள்ள மெள்ள தானே சிதைத்துக்கொண்டு, வருங்கால எழுத்தாளர்களுக்கெல்லாம் ஓர் எச்சரிக்கையாக தன் வாழ்வை அமைத்துக்கொண்ட ஜி.நாகராஜன், தமிழின் முன்னுதாரணமில்லாத மகத்தான படைப்பாளி. அவர் எழுதியது கொஞ்சமே என்றாலும், அந்த எழுத்துகளில் தன் மேதமையையும் கலைநுட்பத்தையும் மொழி வளமையையும் அற்புதமாக வெளிப்படுத்தியவர். யாரும் அதுவரை எழுதியிராத பாலியல் தொழிலாளிகள், சமூகத்தின் பார்வையில் குற்றச்செயல் புரிந்து பிழைப்பவர்கள் போன்ற விளிம்புநிலை மனிதர்களின் அக உலகைத் தமிழ்க் கதைப்பரப்பில் விரித்த ஒப்பற்றப் படைப்பாளி.

1929-ம் ஆண்டு செப்டம்பர்  முதல் தேதி மதுரையில் தன் பெற்றோரின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவதாகப் பிறந்த இவர், தன் இளவயதிலேயே (ஒன்பதாவது பிரசவத்தின்போது) தாயை இழந்தார். தந்தை கணேச அய்யர், பழநியில் வக்கீல் தொழில் பார்த்துவந்தார். மதுரைக் கல்லூரியில் படித்தபோது கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சர்.சி.வி.ராமனிடமிருந்து தங்கப்பதக்கம் பெற்றார். ஆங்கிலத்திலும் கணிதத்திலும் அசாத்தியமான புலமை பெற்றிருந்த இவர், அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளிலும் தனிப்பயிற்சி நிறுவனங்களிலும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

அவருடைய மாணவராக இளம் பிராயத்திலிருந்து ஜி.நாகராஜனுடன் நட்பாயிருந்து, இறக்கும் நாளிலும் உடன் இருந்த எழுத்தாளர் சி.மோகன், அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை (சாகித்ய அகாடமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை நூலில்) தீட்டியுள்ளார். சி.மோகனின் புத்தகமே ஆழமான ஒரு கலைப்படைப்பாகத் திகழ்கிறது. அதில் ஜி.நாகராஜனைப் பற்றி அவர் தீட்டும் ஒரு தீற்றல்...

`ஜி.நாகராஜன் முகத்தோற்றத்தில்கூட அவர் தன் சாதி அடையாளத்தைக் களைந்துவிட்டிருந்தது. பேச்சு, உடை, சிந்தனை, உணர்வு, நடத்தை, செயல், உணவு, வாழ்க்கைமுறை என எல்லாவற்றிலும் பிரக்ஞைபூர்வமாக சாதியத்தன்மைகளைக் கடந்துவிடப் பிரயத்தனப்படுவதும், அவ்வாறாகக் கடந்துவிட்ட ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வதும் சாத்தியம்தான். ஆனால், அவர்களுடைய தேர்வாக இல்லாத, பிறப்பால் அமைந்த முகத்தோற்றத்தில் அதை களைந்துவிடுவது அபூர்வமென்றே நினைக்கிறேன். ஆனால், அப்படியான ஓர் அபூர்வமாகத் தன்னை ஆக்கிக்கொண்டவர் ஜி.என். ஸ்டாலின் மீசையும் ராணுவ முடிவெட்டும் வஸ்தாதுகளின் உடற்கட்டும் மட்டுமல்ல, முகத்தில் உருவேற்றிக்கொண்ட முரட்டுத்தனமும் சேர்ந்து சாதியத்தின் எந்தவிதச் சாயலும் இல்லாமல், அதை அறவே துடைத்துவிட்ட மனிதர் அவர்.'

1952-56 காலகட்டத்தில் அவர் திருநெல்வேலியில் பேராசிரியர் நா.வானமாமலை நடத்திய தனிப்பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அப்போது கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏ.நல்லசிவன், ப.மாணிக்கம், நல்லகண்ணு, நெல்லை எஸ்.வேலாயுதம் போன்றோருடனும் ரகுநாதன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, டி.செல்வராஜ் போன்ற அன்றைய இடதுசாரி எழுத்தாளர்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு ஏழை எளிய உழைப்பாளி மக்களை அணி திரட்டி பல போராட்டங்களிலும் பங்குபெற்றுள்ளார். திருநெல்வேலி நகரத்தின் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இளமையின் மிடுக்குடன் ஜி.நாகராஜன் செயல்பட்ட காலம் இது. எழுத்தார்வம் வேர் பிடித்ததும் இங்குதான்’ என சி.மோகன் குறிப்பிடுகிறார்.

அதே காலத்தில் நெல்லையின் பாலியல் தொழிலாளிகளுடனான உறவும் தொடங்கியிருக்கிறது. `குறத்தி முடுக்கு' என்கிற புகழ்பெற்ற அவரது குறுநாவலுக்கான களம் அங்குதான் உருவாகிறது. குடிப்பழக்கமும் புகைப்பழக்கமும் என, சமூகம் ஒழுக்கக்கேடு எனச் சொல்லும் எல்லா பழக்கங்களும் அவரிடம் வந்து சேருகின்றன. கட்சிக்குள் கேள்விகள் எழுகின்றன. இதை அடுத்து அவர் கட்சிப்பேரவையைக் கூட்டி தன்னை பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கோரி தன்னுடைய ராஜினாமாவை முன்வைக்கிறார். ஆனால், கட்சி அவருடைய ராஜினாமாவை ஏற்க மறுக்கிறது. தன்னுடைய வாழ்க்கைமுறையை கட்சிக்கு பங்கம் வராதபடி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே கட்சியின் வேண்டுகோள் என, பேரவை கேட்டுக்கொள்கிறது. வாழ்க்கை அவரிடம் வைத்த அந்தக் கடைசிக் கோரிக்கையை நிராகரித்து, தன் உள்மனம் செலுத்தும் திசைகளில் பயணிக்கத் தொடங்குகிறார். நெல்லை வாழ்க்கையைவிட்டு மீண்டும் மதுரைக்கே வருகிறார்.

கட்சியைவிட்டு வெளியேறினாலும் குறிப்பிட்ட ஒரு காலம் வரை மார்க்ஸியப் பிடிப்புடன் வாழ்ந்தார். அவருடைய முதல் கதையான `அணுயுகம்’ 8-06-1957 தேதியுடைய `ஜனசக்தி' வார மலரில் வெளியானது. அவருடைய ஆரம்பகாலப் படைப்புகள் எல்லாமே கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய `ஜனசக்தி', `சாந்தி', `சரஸ்வதி' போன்ற இதழ்களில்தான் வெளியாகின. பிறகு சிலகாலம் அரவிந்தர் மீதும் காந்தி மீதும்கூட நம்பிக்கைகொண்டிருந்தார்.

பிறகு, தத்துவங்களின் மீது நம்பிக்கை இழந்தவரானார். ஜே.கிருஷ்ணமூர்த்தியை வாசிக்குமாறு அறிவுறுத்திய சுந்தர ராமசாமிக்கு, 1968-ம் ஆண்டில் அவர் எழுதிய கடிதத்தில் `ஜே.கே-யைப் படிக்கச் சொல்லி எழுதியிருந்தீர்கள். ஜே.கே-யின் புத்தகங்கள் பல, இங்கு நூல் நிலையத்தில் உள்ளன. இருந்தாலும் Philosophy-யிடத்து எனக்கிருக்கும் அவநம்பிக்கை காரணமாக நான் இதுவரை எந்த பிலாசஃபி புத்தகத்தையும் படித்ததில்லை. அரவிந்தர், ஜே.கே போன்ற இந்துமத Philosophers வேறு வகையானவர் என்று நீங்கள் கூறலாம். உண்மைதான். Intellect-க்கு survival value-தான் உண்டு. அதைக்கொண்டு நுண்பொருளான உண்மையை (Reality) அறிய முடியாது என்ற Hindu Philosophers-ன் கருத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த உண்மையை அறிய அவர்கள் வலியுறுத்தும் transcendental experience ஒன்று இருக்கலாம் என்று நான் ஏற்றுக்கொண்டாலும் அந்த அனுபவத்துக்கு இட்டுச்செல்லும் வழிமுறைகளைப் பின்பற்ற எனக்குக் கொஞ்சம்கூட கட்டுப்பாடு இல்லை. ஒருகாலத்தில் அந்த வழிமுறைகளைப் பின்பற்ற வீடு, வாசலைவிட்டு, மலை காடு என்று போக வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது அதெல்லாம் ஒருவகை Psychic training என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்' என்று எழுதுகிறார்.

அவருடைய `கண்டதும் கேட்டதும்' என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை அவரே தொடங்கிய பதிப்பகமான `பித்தன் பட்டறை’ மூலம் 1971-ம் ஆண்டில் அவரே வெளியிட்டார். அந்தத் தொகுப்புக்கு முன்னுரைபோல சின்னஞ்சிறிய குறிப்பை முதல் பக்கத்தில் எழுதியிருப்பார்:

``ஒரு காட்டுல ஒரு சிங்கமாம். அதுக்கு மேலே சொன்னா அசிங்கமாம்” என்கிறான் கண்ணன்.

``ஒரு ஊர்ல ஒரு நரி. அதோட கதை சரி” என்கிறாள் ஆனந்தி.

(கண்ணன், ஆனந்தி இருவரும் ஜி.நாகராஜனின் குழந்தைகள். `ஆனந்தி' அவரது முதல் மனைவியின் பெயர். அவர் அகாலத்தில் இறந்த பிறகு, இரண்டாவதாக பள்ளி ஆசிரியரான நாகலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார்.)

அந்தத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய எழுத்தாளர் சுந்தர ராமசாமி ``கதைகளைச் சொல்லிச் சொல்லிக் கொல்ல வந்தவர் அல்ல இவர். விளக்கங்களும் உரைகளும் விரவிவரும் உபந்நியாசம் இலக்கியக் கலை ஆகாது என்பது இவருக்குத் தெரியும். பின்கட்டின் சாளரம் ஒன்றைத் திறந்துவிட்டு கம்மென வாயை மூடிக்கொண்டு நம்முடன் நின்றபடி உள்ளே எட்டிப்பார்க்கிறார். இந்தத் தருணத்தில் சாளரத்தைத் திறந்ததுதான், தான் செய்த ஒரே காரியம் என்கிற பாவத்துடன்…” என்று ஜி.நாகராஜனின் எழுத்துமுறை பற்றிக் குறிப்பிடுகிறார்.

பள்ளிக்கூடத்தில் பச்சக்குதிரை விளையாடும்போது சோமுவின் கை ஒடிந்துபோகிறது. பச்சக்குதிரையாகக் குனிந்துகொண்டிருந்த ராஜுவின் மனதில் உருவாகும் குற்ற உணர்ச்சி அவனை மனக்குழப்பத்தில் தள்ளுகிறது. கனவும் நினைவுமாகத் தனக்குள் அமிழ்ந்துபோகிறான். `பச்சக்குதிரை' கதை இப்படித் தொடங்குகிறது.

ராஜுவுக்கு துக்கம் பீறிட்டு வந்தது. சாகலாம்போலிருந்தது.

`பெரிய சண்டியரு! இவர் எதைக் கேட்டாலும் கொடுத்துடணும். இல்லாட்டி மாட்டவைப்பாராம், மாட்ட!’ - ராஜுவுக்கு கோபமெல்லாம் செல்லத்துரை மீது.

‘எருமைமாடு மாதிரி இருந்துக்கிட்டு இவன் எதுக்கு நாலாம் க்ளாஸிலேயே இருக்கணும்? அன்னிக்கு  மாணிக்கம் வாத்தியார்கூட, ‘டே தடியா! அய்யாகிட்டச் சொல்லி ஏதாச்சும் கடைலே கிடைலே வைக்கச் சொல்லு’ என்கலே இந்த மாணிக்கம் வாத்தியான்! அவன் ஒரு மண்டைக்கனம், மாணிக்கம், கீணிக்கம், சாணிக்கம், பூணிக்கம்…’

மாணிக்கம் வாத்தியார் திருகிய காதை, ராஜு லேசாகத் தொட்டுக்கொண்டான். இட்லியைத் தொட்ட மாதிரி இருந்தது.

……………..

ராஜு மீண்டும் காதைத் தொட்டுக்கொண்டான். துக்கம் நெஞ்சை அடைத்தது. `அம்மா பார்த்தா `ஓ’ன்னு அலறிடுவா. ஊர்லே இல்லை, நல்லவேளை. அப்பா வரதுக்குள்ளே தூங்கிடணும். போடா, ராஜு போ, உனக்குத் தூக்கம் வேறயா கெட்டிருக்கு. காலையிலேயே போலீஸ்காரன் வரும்போதல்ல தெரியும்.’

இந்த வீட்டிலே ராஜு என்கிற செட்டிமார் பையன் ஒருத்தன் இருக்கானா? அய்யய்யோ, போலீஸ்காரன் வந்துட்டானே! மூஞ்சியைப் பாரு, குரங்கு மாதிரி. ஆமாம் இந்த வீடுதான். என்ன விஷயம் என்று கேட்டுக்கொண்டு வாசலில் நிற்கிறார் அப்பா. ராஜு கதவு அருகே ஒளிந்துகொண்டு நிற்கிறான். ``அந்தப் பையனே டேஷனுக்கு கூட்டிப் போகணும். யாரோ ஒரு பையன் கையை ஒடிச்சுட்டான்'' என்கிறான் போலீஸ்காரன்.

``எங்க வீட்டு ராஜுவா? அவன் அப்படியெல்லாம் கையை ஒடிக்க மாட்டானே! பாவம், ரொம்ப சாது'' என்கிறார் அப்பா. 

போலீஸ்காரன் விட்டால்தானே! ``ஒடிக்க மாட்டானா? அவுங்க மாணிக்கம் வாத்தியாரே பார்த்தாராம். இவன்தான் ஒடிச்சானாம். பச்சக்குதிரை விளையாடுறப்போ, குனிஞ்சிருந்த உங்க ராஜுதான் அந்த சோமுவை காலை வாரிவிட்டுக் கையை ஒடிச்சிருக்கான். செல்லத்துரைங்கிற பையன்கூடச் சொன்னான்.''

பாவம் அந்தச் சோமு! அவன் கையொடிஞ்சுப்போச்சு. ``கையொடிஞ்சிருச்சே! வீட்டுல கொன்னுப்புடுவாங்களே''ன்னு கத்தினான். ``சோமு, சோமு எம்மேலே கோவப்படாதே. நான் ஒண்ணும் உன்னை காலை வாரிவிடலே. நீ கையை வெச்சு முதுகிலே அழுத்தினபோது லேசாகக் குனிஞ்சேன் சோமு.'' சோமுவை பியூன் ஹென்றி தூக்கினபோதுதான் எப்படி அலறினான் அவன்! அய்யோ பாவம், ``நான் வேணும்னு ஒண்ணும் செய்யலை சோமு. என்னை மட்டும் சும்மாவிட்டாங்களா? இங்கே யாரு. இங்கே பார். தலையிலே மங்கு மங்குன்னு குட்டினார். என் கன்னத்தைப் பாரு. பளீர் பளீர்னு அடிச்சிருக்கார். எல்லோரும் என் மேலே விழுந்து என்னை கீழே தள்ளி மிதிச்சாங்க சோமு. என்னை போலீஸ்லவேறே பிடிச்சித் தரப்போறாங்களாம் சோமு.''

ஒருவன் `அய்யோ அப்பா’ என்று கத்திக்கொண்டு ஓட்டமெடுத்தான். ராஜு மட்டும் சரசரவென தண்ணீருக்குள் நடந்தான். வேலுச்சாமியை எட்டிப் பிடித்தான். இருவரும் தண்ணீரில் மல்லுக்கட்டினர். அவன் இவனை இழுத்தான். இவன் அவனை இழுத்தான். ராஜுவுக்கு மூச்சு முட்டியது.

பாவம் ராஜு செத்துவிட்டான். ராஜுவின் வீட்டு முன்பு கூட்டம். மாணிக்கம் வாத்தியார்கூட வந்திருந்தார். ``நல்ல பையன், ரொம்ப சாது’ என்று அனுதாபப்பட்டார். `அந்த வேலுச்சாமிக்காகத்தான் ராஜு செத்துப்போனானாம்'' என்றார் யாரோ ஒருவர். எல்லாரும் ஆமோதிக்கும் பாவனையில் தலையை அசைத்துவிட்டு ராஜுவின் சாவுக்காக வருந்தினர். அந்தக் கூட்டத்திலே நின்றுகொண்டிருந்த ராஜுவும் வருத்தத்தோடு தலையை அசைத்தான்.

இதுபோன்ற கதை எழுதிய ஜி.நாகராஜனின் படைப்பு மனம், பிறகு புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கைக்குள் புகுந்து அங்கேயே நிலைபெற்றுவிடுகிறது.

தன்னுடைய `கண்டதும் கேட்டதும்’ தொகுப்புக்கு அவரே சுயவிமர்சனமாக ஒரு கட்டுரையை `வைகை’ இதழில் எழுதுகிறார். `இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ள என் கதைகளில் முழுமையாக சிறுகதை இலக்கணத்தைப் பெற்றிருக்கும் ஒரே கதை `யாரோ முட்டாள் சொன்ன கதை'. மற்றவை எல்லாம் வெறும் முயற்சிகளே. ஆங்கிலத்தில் சொல்வதென்றால், அவற்றை sketches, vignettes என்று கூறலாம். இந்த முயற்சிகளிலும் என்னுடைய ஆற்றலையும் பல்வேறு குறைபாடுகளையும் காணலாம் என்பது வேறு விஷயம்.”

அவர் குறிப்பிட்ட யாரோ முட்டாள் சொன்ன கதையில் `லூஸ் மணி' என்றழைக்கப்படும் மணியும் பாக்கியமும் தம்பதியர். அந்த ஊரில் இருக்கும் ரெளடி, பரமன். பரமனுக்கும் பாக்கியத்துக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது. இதை கணவன் அறிகிறான். அதன் பின்பான அவனுடைய செயல்கள் எவ்வாறு நிகழ்கின்றன எனும் விளைவுகளே இந்த நெடுங்கதை. பரமனுக்கு அவர்களுடனான தொடர்பு ஏற்பட்டது முதல் பரமனின் மரணம் நிகழும் வரை தெளிவாக நீள்கிறது. இதில் சம்பவங்கள் நேர்க்கோட்டில் இல்லாமல் முன்பின்னாக அமைந்திருப்பது சிறிதும் பிசகில்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும், கதையின் வழியே எழும்பும் பாக்கியத்தின் குரல், ``உடல் போகப்பொருளாகவே இருப்பினும், அது உடலின் சம்மதத்தினால் மட்டுமே நிகழும். சமூகம் திணிக்கும் அறம் உடலுக்குப் பொருந்தாது'' என கர்ஜிக்கிறது.

``பாக்கியம், நான் சொல்றதைக் கேளு. அவன் சாவாசத்தை விட்டிரு.''

``அவன்ட்டு சொல்லாதே.”

``சரி, பரமன்... அவரு பரம அயோக்கியன். அவரோட சங்காத்தம் வெச்சிக்காதே.”

``பரமனோட நான் சங்காத்தம் வெச்சிக்கில்லையே.”

``அந்த வூட்டுக்குப் போறயில்ல? அவர் காட்ற வீட்டுக்கும் போறேல்ல?”

``ஆமா, ஆனா பரமன் அங்கே வர மாட்டார்.”

``அது அவர் நடத்துற வீடுதானே?”

``அது எனக்குத் தெரியாது.”

``எனக்கு துரோகம் பண்ணலாமா?”

``எம் பிரியப்படி நான் இருப்பேன்.”

``அது தப்பில்லை.”

``நீ என்ன சம்பாரிக்கிறே?”

``தொண்ணூறு. வீட்லேருந்து வாடகை வருது. நம்ம மூணு பேருக்கும் போதாதா?”

``போதாது. என் ஒருத்திக்குப் போதாது. என்னை... புதுக்குடி சமீந்தார் மவன் கட்டிக்கிறேன்னான்.”

``கட்டிக்கலியே.”

``அதுக்கு நான் என்ன செய்றது? அவன் என் கால் அடியிலேயே கிடந்தான்.”

``இருந்தாலும் ஒன்னைக் கட்டிக்கிலையே!”

``ஆமாம். நீதான் கட்டிக்கிட்டே, வெருவாக்கலங்கெட்டவன்.”

``கட்டின புருஷனை இப்படிப் பேசலாமா?”

``அய்யோ காளியாத்தா என்னை இப்படிச் சோதிச்சிருச்சே! நான் பணத்துலே புரளணும்.”

``இந்தக் குடிப்பளக்கத்தை நிறுத்திரு. எல்லாம் சரியாப்போகும்.”

``போடா கபோதிப்பயலே, பணம்தான்டா எல்லாம்.”

கதையின் இறுதிப் பகுதியில் பரமனைக் கொலைசெய்துவிட்டு மணி ஓடுகிறான். போலீஸும் ஊரும் சேர்ந்து அவனைத் துரத்துகிறார்கள். ஓடிக்கொண்டே அவன் மனதில் எழும் பால்ய காலத்துச் சித்திரங்கள், பயங்கள், துக்கங்கள் என அந்தப் பகுதி காவியமாய் விரிகின்றன. ஓடி ஒரு தென்னைமரத்தின் மீதேறிக் கவ்விப் பிடித்துக்கொள்கிறான்.

காற்று வீசி அடித்தது. மரம் ஊஞ்சலாடியது. அவன் கால்களும் கைகளும் மரத்தைக் கவ்விக்கொண்டன. `எவ்வளவு பசுமையான உலகம்! தொலைவிலே காணுகிற நீலம்தான் எவ்வளவு அழகு! உலகமே பசுமையும் நீலமும்தானா? உலகமே அவனை அசைத்தாட்டும் காற்றுத்தானா? உலகமே தொலைவிலே தெரியும் அமைதி நிறைந்த குடிசைகள்தானா? காற்று ஓங்கி வீசியது. `மரமே கதி’ என அவன் உடலும் உள்ளமும் மரத்தைப் பற்றிக்கொண்டன. மேலே தென்னோலைகள், வயது முதிர்ந்த கிழவன் ஓர் இளவட்டத்தின் தர்க்கங்களுக்குப் பதில் சொல்வதுபோல காற்றுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தன. மரத்தின் கழுத்தில் முத்து முத்தாய் செவ்விளநீர்க் காய்கள்!

`யாரும் ஏறாத மரம் ஏறிட்டேன். மேலே இன்னும் எவ்வளவு இருக்கும்... ஏளு மொளம் இருக்குமா?’ காற்று விர்ரென்று வீசியது. தாராளமாகக் காற்றோடு இரண்டடி பறந்தான். மரத்துக்கு நேருவது எங்களுக்கும் நேரட்டும் என்று அவன் கைகளும் கால்களும் மரத்தைப் பற்றிக்கொண்டன . ``தம்பீ... கீளே இறங்குடா” என்று ஒரு குரல் அலறியது. அவனும் இறங்க ஆரம்பித்தான். மரத்தின் கழுத்தில் முத்து முத்தாக இருந்த செவ்விளநீர்க் காய்களை மீண்டும் பார்த்தான். ``அய்யோ செவ்விளநீர்க் காய்களே!” என்று கதை முடிகிறது.

சமூக ஒழுங்குக்குள் வாழ ஆசைப்படும் எளிய அப்பாவி மனதின் பிரதிநிதியாக லூஸு மணியும் அறங்கள் அறுத்துத் தடைகள் தாண்டியவளாக பாக்கியமும் இந்தக் கதையில் வாழ்கிறார்கள். அழகும் எளிமையும்மிக்க, துரோகங்கள், குற்ற மனம் இல்லாத வாழ்வுக்கான மணியின் ஏக்கமாகக் கடைசிக் காட்சிகள் விரிகின்றன.

`துக்க விசாரணை' என்ற கதை, இறந்துபோன ரோகிணி என்கிற பாலியல் தோழியின் அக்காவிடம் துக்கம் கேட்கப் போவது பற்றியது. இந்த ஒரு பத்தியிலேயே கதையை நம்மால் உணர முடிகிற அளவுக்கு அந்தக் கதை சொற்சிக்கனத்துடன் செல்கிறது.

``இடையே ஊதி அணைத்துவிட்ட மெழுகுவத்திபோல ரோகிணி இறந்துவிட்டாள். ஒருபோதும் குரலை உயர்த்திப் பேச மாட்டாள். ஒருமுறை யாரோ ஒருவனோடு இருந்தாள். நான் வந்ததை அறிந்ததும் வந்து சமாதானம் கூறிச் சென்றாள். ``இது என் தலையெழுத்துங்க'' என்று சொல்லிச் சிரித்துவிட்டுச் சென்றாள். நான் காத்திருப்பேன் என எதிர்பார்த்தாள். இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் நான் அவள் இடத்துக்குச் சென்றேன். 

அப்போது, ``அக்கா கடனையெல்லாம் தீர்த்திட்டு கன்னியாஸ்திரி ஆகிவிடுவேன்'' என்றாள். ``இல்லாட்டி தற்கொலை பண்ணிப்பேன்'' என்று பிறகு சேர்த்துக்கொண்டாள்.

``தற்கொலையில் அர்த்தமில்லை'' என்றேன்.

``பின்னே எதில்?'' என்று கேட்டுக்கொண்டே என் கன்னங்களில் முத்தினாள். அந்தப் பத்துப் பதினைந்தைக் கொடுப்பதைத் தவிர நான் ரோகிணிக்கு எதுவும் செய்தது கிடையாது. ஆனால், அவளுக்குத் தெரியுமோ என்னமோ, அவளைப் பற்றிப் பல தடவை நான் நினைத்ததுண்டு.

``நினைப்பு என்ன அவ்வளவு பெருசா? பின் இல்லையா? இறந்துபோனவர்களைப் பற்றியோ உயிரோடு இருப்பவர்களைப் பற்றியோ அவ்வப்போது நினைத்துக்கொள்வது பெருசில்லையா?''

சிறுகதைகள் தவிர நிமிஷக் கதைகள் என்கிற வடிவத்திலும் சில கதைகளை அவர் எழுதிப்பார்த்திருக்கிறார். அதில் ஒரு கதை…

``அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்து கதை எழுதவேண்டும் என எழுத்தாளன் விரும்பினான். ஆகவே, அவன் அவளிடம் சென்றான்.

``பெண்ணே, நீ இவ்வளவு கெட்டநிலைக்கு வரக் காரணம் என்ன?'' என்று எழுத்தாளன் கேட்டான்.

`என்ன… கெட்டநிலையா? அப்படி ஒண்ணும் எனக்கு சீக்குக்கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாமே இருந்தா, அதுவே ஆண்டவன் புண்ணியம்'' என்றாள் விபச்சாரி.

``இல்லே, உனக்கு சமுதாயம் எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்துவிட்டது!'' என்றான் எழுத்தாளன்.

``கொடுமை என்ன கொடுமை! பசிக்கொடுமை எல்லோருக்கும்தானிருக்கு. இந்த போலீஸ்காரங்க தொந்தரவு இல்லாட்டி ஒண்ணுமில்லை'' என்றாள் விபச்சாரி.

``கண்ட கண்டவங்ககிட்டெல்லாம் போகிறது உனக்கு கஷ்டமா இல்லை?''

``யாரும் கண்ட கண்டவங்ககிட்டெல்லாம் போகல. எனக்குன்னு ஒரு புருஷன் இருக்கார்.''

``மற்ற பெண்கள் எல்லாம் கட்டின புருஷனோடு மட்டும்தான் இருக்கிறார்கள். வேறு ஆண்பிள்ளைகளோடு சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை தெரியுமா?''

``அப்படியா?''

``பின்னே?''

``சரி, உங்களுக்கு பெஞ்சாதி இருக்குங்களா?''

``ஊம்... இருக்கு.''

``நீங்க மட்டும் எங்கிட்ட வந்திருக்கீங்களே ஒங்களுக்கு வெக்கமாயில்லை? சரி, அது கிடக்கட்டும்; நேரமாவுதுங்க.''

கொடுமையிலும் கொடுமை, கொடுமையை `கொடுமை' எனப் புரிந்துகொள்ளாததுதான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி வாசகர்களின் கண்ணீரைப் பிதுக்கியெடுத்து நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.

மதுரையில் சில காலம் காந்தி மியூசியத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறார். அங்கேயே தங்கிக்கொள்ள இடமும் அளிக்கிறார்கள். ஆனாலும் இவரது தன்போக்கான வாழ்முறை அந்த வேலையையும் விட்டுத் துரத்துகிறது.

`பேராசிரியர் ஜி.நாகராஜன், எங்கள் கல்லூரியில் பாடம் எடுக்கிறார்' என்று தனிப்பயிற்சிக் கல்லூரிகள் சினிமா தியேட்டர்களில் விளம்பர சிலைடு போடும் அளவுக்குப் பிரசித்திபெற்ற கணித, ஆங்கில ஆசிரியராக இருந்த அவர், திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாகவும் ஆகிவிட்ட அவர், தன் அறிவுத்திறத்தால் எவரையும் வீழ்த்திவிடும் வல்லமை பெற்றிருந்த அவர் குடிப்பழக்கத்திலிருந்து `குடி நோயாளி’ என்கிற நிலைக்கு வீழ்ந்து, தெரிந்தவர்களிடமெல்லாம் கையேந்திக் காசு வாங்கிக் குடிப்பவராகவும் வீடற்றவராகத் தெருக்களில் படுத்துறங்குபவராகவும் மாறிப்போனார். கடைசி ஏழு ஆண்டுகள் இப்படியான ஒரு வாழ்முறைக்குள் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் அல்லது வெளியேற விரும்பாமல் சிதைந்துகொண்டிருந்தார்.

நான் அவருடைய `ஆண்மை' கதையை முதன்முறையாக வாசித்தபோது அந்தப் பெண் ராஜத்துக்காக கண் கலங்கினேன். அந்தக் கதையின் மையமான இடம் இதுதான் என்று சொல்வேன்:

``ஆமாம், என்னைப் பார்த்தா காசு பணத்துக்கு வரவ மாதிரியா தெரியுது?” என்று கேட்டுக்கொண்டே வந்து கதவுகளை அடைத்தாள் ராஜம்.

``என்ன திடீர்னு இந்த யோசனை?”

``பின்னே, என் பின்னாலே ஏன் வந்தீங்க?”

``நீ யாரா இருந்தாலும் வந்திருப்பேன்.”

``வருவீங்க, வருவீங்க, முதுகுக்கு டின்னைக் கட்டிட்டு வருவீங்க. என்ன... ஒரு மாதிரியா இருக்கீங்க?”

``ஒண்ணுமில்லே'' என்று சொல்லிக்கொண்டே  எழுந்து நின்று அவளை லேசாக அணைத்து, அவளது கையை உயர்த்தி கையிடுக்கில் முத்தமிட்டேன். அவள் கைகளைச் சோர்வுறக் கீழே போட்டுவிட்டு, இயந்திரம்போல் ஓர் அடி எடுத்து வைத்துக் கட்டிலில் அமர்ந்தாள்.

``மெய்யாச் சொல்லுங்க, என்னைப் பார்த்தா காசுக்கு வரவ மாதிரி தெரியுதா?”

``அத்தான் உன் முகத்திலே எளுதி ஒட்டியிருக்கே, இங்கே பார். ஒருத்தனோடவோ இல்லை பலரோடவோ பெண்ணினத்தின் மகத்தான தொழில் தாசித்தொழில்” என்று நான் தத்துவம் பேசினேன்.

``அப்ப, இனிமே அப்பாவையும் தம்பியையும் பஸ் ஸ்டாப்புக்கு வர வேண்டாண்டிற வேண்டியதுதான்.”

``எனக்குக்கூட அவரைப் பார்த்தா என்னவோ மாதிரி இருந்திச்சு. என்னவோ மகளை மருமகன் வீட்டுக்கு அனுப்பிவைக்கிற மாதிரி பஸ் ஸ்டாப்புக்கு வந்திட்டார்.”

அவள் சிறிது நேரம் அமைதியானாள். பிறகு திடீரென விக்கி அழுதாள். ``அய்யோ... கடவுளே..!'' என்றிழுத்து விசும்பினாள்.

``ச்சு, ச்சு, பைத்தியம் அழாதே. எல்லாம் சரியாயிடும்” என்று தேற்றினேன்.

``என்னெத்த சரியாப்போகுதுங்க. எல்லாம் இனிமே அப்படித்தான். போனது போனதுதான்.”

தன்னைப் பற்றி அவள் தனக்குள் வரைந்திருந்த சித்திரம் கலைந்து எல்லாம் வெட்டவெளிச்சமாகிவிட்டதை அவள் உணரும் ஒரு தருணத்தை, அவள் உடைந்து நொறுங்கும் அந்தத் தருணத்தை ஜி.நாகராஜன் படம் பிடித்திருக்கும்விதம் வாசக மனதில் ஆழமான அதிர்வுகளை உண்டாக்குகிறது.

இப்படியான வாழ்வைப் படம்பிடிப்பதை 50-களின் இலக்கிய உலகம் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை.

``நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால், `இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?' என்று வேண்டுமானால் கேளுங்கள். `இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?' என்று கேட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால், முழுமையும்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்” என்று ஜி.நாகராஜன் ஒரு பதிலைச் சொல்லவேண்டியிருந்தது.

இதே தொனியில் புதுமைப்பித்தனும் `கவந்தனும் காமனும்' கதையில் பேசியிருப்பார்.

சதத் ஹசன் மாண்ட்டோ எழுதிய தேசப் பிரிவினைக் காலத்துக் கதைகளும் ஜி.நாகராஜனின் கதைகளும் ஒரே அலைவரிசையில் இயங்குவதை நாம் மீண்டும் மீண்டும் காண முடியும்.

1981-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி காலை அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் சி.மோகனும் சிவராமகிருஷ்ணன் என்கிற நண்பரும். ``இடையில் டாய்லெட் போக வேண்டும்'' என்றார். எழுந்து நடக்க வெகுவாகச் சிரமப்பட்டார். டாய்லெட்டில் அவரால் உட்காரக்கூட முடியவில்லை. தாள முடியாத அவஸ்தை. கழிவிரக்கவசப்பட்டவராக, ``கடவுளே, என்னை சீக்கிரம் அழைத்துக்கொள்'' என்று வாய்விட்டுக் கதறி அழுதார். 

திரும்ப வந்து படுக்கையில் படுத்துக்கொண்டதும் குளிர் அவரை மிகவும் உலுக்கியது. ``குளிருது, ரொம்பக் குளிருது” என்றவர் ``சிதையில் போய் படுத்துக்கொண்டால்தான் இந்தக் குளிர் அடங்கும்” என்றார்.

இப்படி அவரது வாழ்வின் கடைசி நிமிடத்தை சி.மோகன் பதிவுசெய்கிறார். அன்று இரவு உடன் யாருமே இல்லாத தனிமையில் அநாதையாக அந்த அரசு மருத்துவமனையில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார் ஜி.நாகராஜன்.

சி.மோகனும் சிவராமகிருஷ்ணனும்  இரவு போய்விட்டு, காலையில் வருவதாகச் சொல்லிப் பிரிந்தபோது ஜி.நாகராஜன் ஷெல்லியின் ஒரு கவிதை வரியைச் சொல்லி விடை கொடுத்திருக்கிறார்

`வாழ்வின் முட்கள் மீது நானே விழுந்தேன்!

குருதி கொட்டிக்கொண்டிருக்கிறேன்.'

தன்னுடைய பொன்மொழிகளாகச் சிலவற்றை அவரே விட்டுச் சென்றிருக்கிறார். அதில் ஒன்று:

`மனிதைப் பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்றுதான் சொல்வேன்.'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு